திருத்தணிகை - 0270. கவடுற்ற சித்தர்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கவடுற்ற சித்தர் (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
உனது திருவடிப் பெருமையை அறியாது
மக்கள் உழலுகின்றார்களே?


தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
     தனனத்த தத்தனத் ...... தனதான


கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
     கடவுட்ப்ர திஷ்டைபற் ...... பலவாகக்

கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
     கருவிற்பு கப்பகுத் ...... துழல்வானேன்

சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
     கசரப்ப ளிக்கெனப் ...... பொருள்தேடி

சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநின்
     சரணப்ர சித்திசற் ...... றுணராரோ

குவடெட்டு மட்டுநெட் டுவரிக்க ணத்தினைக்
     குமுறக்க லக்கிவிக் ...... ரமசூரன்

குடலைப்பு யத்திலிட் டுடலைத்த றித்துருத்
     துதிரத்தி னிற்குளித் ...... தெழும்வேலா

சுவடுற்ற அற்புதக் கவலைப்பு னத்தினிற்
     றுவலைச்சி மிழ்த்துநிற் ...... பவள்நாணத்

தொழுதெத்து முத்தபொற் புரிசைச்செ ருத்தணிச்
     சுருதித்த மிழ்க்கவிப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கவடு உற்ற சித்தர், சட்சமய ப்ரமத்தர், நல்
     கடவுள் ப்ரதிஷ்டை பல் ...... பலவாகக்

கருதிப் பெயர்க் குறித்து உருவர்க்கம், ட்டு, டர்க்
     கருவில் புகப் பகுத்து ...... உழல்வானேன்?

சவடிக்கு இலச்சினைக்கு, ருகைச் சரிக்கு, மிக்க
     சரப்பளிக்கு எனப் ...... பொருள்தேடி,

சகலத்தும் ஒற்றை பட்டு, யல் பட்டுநிற்கும், நின்
     சரண ப்ரசித்தி சற்று ...... உணராரோ?

குவடு எட்டும் அட்டு, நெட்டு உவரிக் கணத்தினைக்
     குமுறக் கலக்கி, விக் ...... ரமசூரன்

குடலைப் புயத்தில் இட்டு, டலைத் தறித்து உருத்து,
     உதிரத்தினில் குளித்து ...... எழும்வேலா!

சுவடு உற்ற அற்புதக் கவலைப் புனத்தினில்
     துவலைச் சிமிழ்த்து நிற்- ...... பவள் நாணத்

தொழுது எத்து முத்த! பொன் புரிசைச் செருத்தணிச்
     சுருதித் தமிழ்க் கவிப் ...... பெருமாளே.

  
பதவுரை


       குவடு எட்டும் அட்டு --- மலைகள் எட்டையும் வருத்தி,

     நெட்டி உவரி கணத்தினை --- நீண்ட கடலின் கூட்டத்தை,

     குமுற கலக்கி --- ஒலியெழக் கலக்கி,

     விக்ரம சூரன் --- ஆற்றல் வாய்ந்த சூரபன்மனுடைய,

     குடலை புயத்தில் இட்டு --- குடலைத் தனது புயத்தில் அணிந்து,

     உடலைத் தறித்து --- அவனுடைய உடலைத் துண்டஞ் செய்து,

     உருத்து --- கோபித்து,

     உதிரத்தினில் குளித்து எழும் வேலா --- அவனுடைய உதிரத்தில் குளித்து எழுந்த வேலாயுதத்தை உடையவரே!

சுவடு உற்ற --- வள்ளி நாயகியின் பாதச்  சுவடுகளையுடைய,

அற்புத கவலை புனத்தினில் --- அற்புதமான செந்தினைக் கொல்லையில்,

துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண --- உதிரி மலர்களை மாலையாகக் கட்டி நின்ற வள்ளியம்மை நாணும்படி,

தொழுது எத்து --- தொழுது புகழ்ந்த,

முத்த --- அநாதி மல முத்தரே!

பொன் புரிசை --- அழகிய மதில் சூழ்ந்த,

செருத்தணி --- திருத்தணியில் எழுந்தருளியிருக்கும்,

     சுருதி தமிழ் கவி --- தமிழ் வேதமாகிய தேவாரத்தைத் தந்தருளிய,

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

      கவடு உற்ற சித்தர் --- மறைத்து வைக்கும் தன்மையுள்ள சித்தர்களும்,

     சட்சமய ப்ரமத்தர் --- ஆறு சமயங்களை மேற்கொண்டு வாதிடும் வெறியர்களும்,

     நல் கடவுள் ப்ரதிஷ்டை --- இறைவனுடைய திருவுருவங்களைத் தாபிப்பது,

     பற்பலவாக கருதி --- பலப்பல வகையாகச் சிந்தித்து,

     பெயர் குறித்து --- உருவத்துக்கு ஏற்றப் பெயர்களைச் சூட்டி,

     உரு வர்க்கம் இட்டு --- உருவ அமைப்புகளை ஏற்படுத்தி,

     இடர் கருவில் புக புகந்து உழல்வான் ஏன் --- துன்பமயமான கருவிலே புகுவதற்கு ஏதுவான பிரிவினை உணர்ச்சியுடன் ஏன் உழல்கின்றார்கள்?

     சவடிக்கு --- பொன் சரடில் கோத்த கழுத்தணிக்கும்,

     இலச்சினைக்கு --- முத்திரை மோதிரத்துக்கும்,

     இருகை சரிக்கு --- இரண்டு கைகளிலும் அணியப்படுகின்ற வளையல்களுக்கும்,

     மிக்க சரப்பளிக்கும் --- மேலான வைரத்தாலான கண்டாபரணத்துக்கும்,

     என பொருள் தேடி --- என்று பெண்களுக்குத் தரும் பொருட்டு பணத்தைத் தேடிய மாக்கள்,

     சகலத்தும் ஒற்றை பட்டு --- எல்லாவற்றிலும் ஒன்றுபட்டு கலந்தும்,

     அயல் பட்டு நிற்கும் --- அவைகளில் கலவாது வேறுபட்டு நிற்கும்,

     நின் சரண ப்ரசித்தி சற்று உணராரோ --- உமது திருவடியின் கீர்த்தியைச் சிறிதேனும் உணரமாட்டார்களோ?


பொழிப்புரை

         எட்டு மலைகளையும் வருத்தி நீண்ட கடல்களை ஒலி செயக் கலக்கி, ஆற்றல் நிறைந்த சூரபன்மனுடைய குடலைப் புயத்தில் மாலையாகத் தரித்து, அவனது உடலைப் பிளந்து, சினமுற்று அவனுடைய உதிரத்தில் குளித்து எழுந்த வேலாயுதத்தை யுடையவரே!

     வள்ளியம்மையின் திருவடிச் சுவடுகள் பதிந்த அற்புதமான செந்தினைக் கொல்லையில், உதிரிப் பூக்களை மாலையாகத் தொடுத்து நின்ற வள்ளிபிராட்டியார் நாணும்படி, அவரைத் தொழுது புகழ்ந்து கூறிய அநாதி மலமுத்தரே!

     அழகிய மதில் சூழ்ந்த திருத்தணிகை மலையின் மீது எழுந்தருளியுள்ள தமிழ் வேதத்தைத் தந்தருளிய பெருமையின் மிகுந்தவரே!

         உண்மையை மறைத்து வைக்கின்ற சித்தர்களும், ஆறு சமயங்களை மேற்கொண்டு வாதம் செய்யும் வெறியர்களும், சிறந்த கடவுளின் உருவத்தை நிறுத்துவது என்று பலபல வகையாக யோசித்து நியமித்து, அம்மூர்த்திகட்குப் பேர் குறிப்பிட்டு உருவ அமைப்பு ஏற்படுத்தி, துன்பத்திற்கு ஏதுவான கருவில் புகுவதற்குரிய பிரிவினை உணர்ச்சிகளால் ஏன் உழல்கின்றார்கள்?

     சவடி என்ற அணிகலத்துக்கும், முத்திரை மோதிரத்துக்கும், இருகரங்களில் அணிகின்ற வளையல்களுக்கும், மேலான சரப்பளி என்ற ஆபரணத்துக்கும் என்று பணத்தைப் பாடுபட்டுத் தேடி அலைகின்ற மாக்கள், எல்லாவற்றிலும் ஒன்றுபட்டும், வேறுபட்டும் நிற்கும் உமது திருவடிப் புகழைச் சிறிதும் அறிய மாட்டார்களோ?


விரிவுரை

கவடுற்ற சித்தர் ---

சித்தர் - அஷ்டமாசித்திகளில் வல்லவர்கள். சித்து ஞானத்துக்குத் தடை.

இனி தங்கட்குத் தெரிந்த சில அரிய பெரிய மணி மந்திர ஒளஷதங்களைப் பிறர்க்குச் சொல்லிக் காட்ட மாட்டார்கள். அதனால் நம் பாரத நாட்டில் பலப்பல அரிய செயல்கள் அவம் ஆயின. உலகத்தில் எல்லோரும் இதனை அடையட்டுமே என்ற பரந்த நோக்கம் அந்த சித்தர்கள் பால் இலதாயிற்று.

ஞானிகளுக்குச் சித்து நெறி வந்து தொலைவில் கைகட்டி ஏவல் புரியும். ஆனால் ஞானிகள் அதனை மதித்து அதனுடன் விளையாடமாட்டார்கள்.

சென்னிமலைச் சித்தர்

சென்னிமலை என்ற முருகனுடைய சிறந்த மலையின் மீது ஒரு சித்தர் இருந்தார். படி வழியே தினம் மலைமீது ஏறி வழிபாடு செய்கின்ற ஓர் அடியார் அவர் தினம் பாதி மலையில் வழி ஓரமாக அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரை வணங்கி “சுவாமி! தினம் இந்த இடத்தில் உங்களைப் பார்க்கின்றேன். மலையை விட்டு நீர் இறங்கி வருவதாகவும் தெரியவில்லை. இங்கேயே இருக்கின்றீரே? உணவுக்கு என்ன செய்கின்றீர்?” என்று பரிவுடன் கேட்டார்.

சுவாமிகள், “அப்பா! எனக்கு என்ன குறை. நான் எதை வேண்டுமாயினும் சாப்பிடுவேன்” என்றார்.

அன்பர், “என்ன? எதை வேண்டுமானாலும் சாப்பிடுவீரோ? சுண்ணாம்பைச் சாப்பிடுவீரா?” என்றார்.

கொண்டு வா; சாப்பிடுகின்றேன்.”

அந்த அன்பர் மலையை விட்டிறங்கி அடிவாரம் போய் ஒரு பானை ஓட்டில் சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு போய் சுவாமிகள் திருமுன் வைத்தார். சுவாமிகள் புன்முறுவல் பூத்தார். “சரி இதனை நான் சாப்பிட வேணுமோ? நல்லது” என்றார். அங்கே செடிகொடிகள் அடர்ந்திருந்தன. சிறிது அந்த செடிகொடிகட்கு உள்ளே நுழைந்தார். ஒரு பச்சிலையைக் கொணர்ந்தார். அந்தச் சுண்ணாம்பில் பிழிந்தார். அது குபு குபு என்று பொங்கி அடங்கியது. அதனை சித்தர் உண்ண ஆரம்பித்தார். அன்பர், “ஐயோ! இது சுண்ணாம்பு ஆயிற்றே; உடலும் குடலும் வெந்து போகுமே!” என்றார். சித்தர், “இந்தாப்பா, நீயும் சிறிது சாப்பிடு” என்று தந்தார். அது வெண்ணெயாக மாறிவிட்டது. சுண்ணாம்பை வெண்ணையாக மாற்றும் ஆற்றல் படைத்த மூலிகை அவருக்குத் தெரிந்திருந்தது.

அதனை அவர் அனைவருக்கும் அறிவித்திருந்தால் எத்தனை ஏழைகட்குப் பயன்பட்டிருக்கும்? தங்கட்குத் தெரிந்ததைப் பிறருக்குக் காட்டக் கூடாது என்று மூடி மூடி வைத்ததனால் பல அதிசயச் செயல்கள் வீணாகி விட்டன.

ஆதலால் இராமலிங்க அடிகளாரும்,

அந்தோ ஈதுஅதிசயம் ஈதுஅதிசயம் என் புகல்வேன்,
அறிவறியா இச்சிறியேனை அறிவு அறியச் செய்வித்தே,
இந்துஓங்கு சடைமணி நின் அடியும் முடியும் காட்டி,
இது காட்டி, அது காட்டி, என் நிலையம் காட்டி,
சந்தோட சித்தர்கள் தன் தனிச்சூதும் காட்டி,
சாகாத நிலை காட்டி, சகச நிலை காட்டி,
வந்தோடு நிகர் மனம் போய்க் கரைந்த இடங் காட்டி,
மகிழ் வித்தாய், நின் அருளின் வண்மை எவர்க்கு உளது !

என்று கூறியருளினார்.

சட்சமய ப்ரமத்தர் ---

புறப்புறச் சமயங்கள் 6, புறச் சமயங்கள் 6,  அகப்புறச் சமயங்கள் 6,
அகச் சமயங்கள் 6

இவ்வாறு அவ்வாறு அவ்வாறு ஆகச் சமயவாதம் அமைதியை நல்காது. ப்ரமித்து - மயங்கி.

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார், சாண்
                   வயிற்றின் பொருட்டதாக
     மண்தலமும் விண்தலமும் ஒன்றாகி மனதுஉழல
                   மால்ஆகி நிற்க அறிவார்,
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார், ஒன்றை
                   மெணமெண என்று அகம் வேறதாம்
       வித்தை அறிவார், எமைப் போலவே சந்தைபோல்
                   மெய்ந்நூல் விரிக்க அறிவார்,
சீறுபுலி போலஎ சீறி மூச்சைப் பிடித்து, விழி
                   செக்கச் சிவக்க அறிவார்,
          திரம் என்று தந்தம் மதத்தையே தாமதச்
                   செய்மை கொடும் உளற அறிவார்,
ஆறு சமயங்கள் தொறும் வேறுவேறு ஆகிவிளை
                   யாடும் உனை யாவர் அறிவார்?
          அண்டபகிர் அண்டமும் அடங்கஒரு நிறைவாகி
                   ஆனந்த மானபரமே.        --- தாயுமானார்.


நற் கடவுட் ப்ரதிஷ்டை பற்பலவாகக் கருதி ---

சிறந்த தெய்வத்தின் பல வகையான குணங்களின் சின்னமாக உருவ பேதங்களைச் சிலை செப்பு இவைகளில் வடித்து மந்திர யந்திர பூர்வமாக அவற்றைக் குண்டமண்டல பூஜைகளால் ஆவாகஞ் செய்து பிரதிஷ்டை செய்வார்கள்.

கருவிற் புகுப்பகுத்து உழல்வானேன் ---

மேலே கூறிய, சித்து மார்க்கமும், சமய வாதங்களும், ஆடம்பரமான ஆராதனைகள் முதலியனவும் பிறவியைத் தொலைக்க மாட்டா. அவைகள் மற்றும் பிறவியையே பயக்கும். அதனால் அடிகளார் இவைகளைக் கண்டிக்கின்றார். அமைந்துள்ள சமயத்தினர்கள் தத்தம் சமயமே மேலானதென்று, தர்க்கமிட்டுப் பேசி வாதஞ் செய்வார்கள். உண்மையை உணராது மயங்கி உழல்வார்கள்.

பரம்பொருள் ஒன்றுதான். சமயங்கள் தோறும் அப்பரம் பொருளே இருந்து அருள் புரியும்.

எந்தத் தபால் பெட்டியில் கடிதங்களைச் சேர்த்தாலும் அக்கடிதங்கள் அஞ்சல் நிலையத்தை யடைவதுபோல், எந்தக் கடவுளை வணங்கினாலும் சமயாதீதமான பரம்பொருளை அந்த அந்த வழிபாடுகள் சென்றணையும். இந்த நுட்பத்தை யறியாத சமயவாதிகள் சமயத்துக்குத் தக்கவாறு பேசித் துன்புறுவார்கள்.

       கலகலகலெனக் கண்டபேரொடு
       சிலுகிடு சமயப் பங்கவாதிகள்
       கதறிய வெகுசொல் பங்கமாகிய”  --- (அலகி) திருப்புகழ்

ஆராதன ராடம்பரத்து மாறாது சவாலம்பனத்தும்
        ஆவாகன மாமந்திரத்து
 ஆறார் தெச மாமண்டபத்தும் வேதாகம மோதுந்தலத்து
        மாமாறெரி தாமிந்தனத்து  மருளாதே”  --- திருப்புகழ்.

சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்.        ---  திருவாசகம்.

கருவினில் புகுவதற்கு காரணமான பிரிவினைக் கொள்கைகளைக் கொண்டு இம் மாந்தர் ஏன் இப்படி உழல்கின்றார்கள்’ என்று அருணகிரிநாத சுவாமிகள் பரிதாபப்படுகின்றார்.

சவடி ---

பெண்கள் கழுத்தில் அணியும் ஒருவகையான ஆபரணம்.

இலச்சினை ---

இலச்சினை-முத்திரை. தங்கள் பேர் முதலியன பொறித்து அடையாளத்தை அறிவிக்கும் மோதிரம்.

இருகைச் சரி ---

இரு கரங்களிலும் சரிந்திருக்கின்ற வளையல்கள்.

சரப்பளி ---

சரப்பளி என்பது வைரம் பதித்துச் செய்யும் கழுத்தணி.

சகலத்தும் ஒற்றைப்பட்டு அயல்பட்டு நிற்கும் ---

இறைவன் எல்லப் பொருள்களிலும் ஒன்றுபட்டிருக்கின்றான். அவைகளின் சுகதுக்கங்கட்கு வேறுபட்டிருக்கின்றான். ஒன்றாகி உடனாகி வேறாகி நிற்பவர் இறைவர்.

ஒரு நாடகத்தில் விளக்கு எரிகின்றது. நாடக பாத்திரங்களில் சந்திரமதி அழுகின்றாள். நாடகம் பார்க்கின்றவர்கள் அழுகின்றார்கள். விளக்கு அழுவதில்லை. சிரிப்பு நடிகன் நடிக்கின்ற போது எல்லோரும் சிரிக்கின்றார்கள். விளக்கு சிரிப்பதில்லை. விசுவாமித்திரர் வந்து ஆரவாரஞ் செய்யும்போது எல்லோரும் அஞ்சுகின்றார்கள். விளக்கு அஞ்சுவதில்லை. அந்த விளக்கு நாடகத்தை நடத்தி வைக்கின்றது. சுகதுக்கங்கட்குக் காரணமாக இருக்கின்றது. ஆனால் சுகதுக்கங்களை விளக்கு அடைவதில்லை. அதுபோல் சீவசாட்சியாய் இருந்து அகில உலகங்களையும் நடாத்தி, எல்லாவற்றிலும் கலந்தும், அவற்றிற் கலவாதும் விளங்குகின்றது பரம்பொருள். அத்தகைய பரம்பொருளே முருகன்.

நிற்சரண ப்ரசித்தி சற்றுணராரோ ---

முருகா! உனது திருவடியின் பெருமையை இந்த மக்கள் உணராது உழல்கின்றார்களே! என்ன பாவம்! அந்தோ!

குடலைப் புயத்திட்டு ---

சலத்து வரும் அரக்கர் உடல் கொழுத்து வளர் பருத்த குடர்
சிவத்த தொடை எனச் சிகையில் விருப்பமொடு சூடும்”     --- வேல் வகுப்பு

சுவடுற்ற அற்புதக் கவலைத் தினைப்புனம்---

வள்ளியம்மையாரது அடிச்சுவடு, அன்றி முருகவேளின் அடிச்சுவடு எனினும் அமையும் கவலை-செந்திணை.

தொழுது எத்து முத்து---

ஏத்து என்ற சொல் எத்து எனக் குறுகியது. இனி எத்து என்றே வைத்துக் கொண்டால் வள்ளிநாயகியைத் தந்திரத்தினால் எத்திக் கொண்டவர் எனப் பொருள்படும்.

முத்த - விடுபட்டவர். அநாதியே மலத்தினின்றும் விடுபட்டவர். அநாதி மலமுத்தர்.

செருத்தணி ---

சூராதியவுணருடைய போரின் வேகந் தணிந்தபடியால் இப்பெயர் பெற்றது.

சுருதித் தமிழ்க்கவி ---

திருஞானசம்பந்தரை அதிஷ்டித்து தமிழ் வேதமாகிய தேவாரத்தை வழங்கினார்.

கருத்துரை

திருத்தணிகேசா! வீணே அலைகின்ற மக்கள் உனது திருவடிப் புகழை அறிந்து உய்வு பெறுக.


12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...