அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கலை மடவார்தம்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
உன்னையே நினைந்து உருகும்
இந்தப் பெண்ணுக்கு
உனது கடப்ப மலர் மாலையைத்
தந்து அருள்.
தனதன
தானம் தனதன தானம்
தனதன தானம் ...... தனதான
கலைமட
வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங் ...... கரைமேலே
கருகிய
காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ் ...... சிலையாலுங்
கொலைதரு
காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் ...... றழியாதே
குரவணி
நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந் ...... தருள்வாயே
சிலைமகள்
நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் ...... தொழும்வேலா
தினைவன
மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் ...... திருமார்பா
தலமகள்
மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் ...... கதிர்வேலா
தனியவர்
கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கலை
மடவார் தம் சிலை அதனாலும்,
கன வளையாலும், ...... கரைமேலே
கருகிய
காளம் பெருகிய தோயம்
கருது அலையாலும், ...... சிலையாலும்,
கொலை
தரு காமன் பல கணையாலும்
கொடி இடையாள் நின்று ...... அழியாதே,
குரவு
அணி நீடும் புயம் அணி நீபம்
குளிர்தொடை நீ தந்து ...... அருள்வாயே.
சிலைமகள்
நாயன், கலைமகள் நாயன்,
திருமகள் நாயன் ...... தொழும் வேலா!
தினைவன
மானும், கனவன மானும்,
செறிவுடன் மேவும் ...... திருமார்பா!
தலமகள்
மீது எண் புலவர் உலாவும்
தணிகையில் வாழ் செங் ...... கதிர்வேலா!
தனியவர்
கூரும் தனி கெட, நாளும்
தனி மயில் ஏறும் ...... பெருமாளே.
பதவுரை
சிலைமகள் நாயகன் --- மலையரசன் மகளாகிய
பார்வதியம்மையாரது கணவராகிய சிவபெருமானும்,
கலைமகள் நாயன் --- வாணி தேவியின் கணவராகிய
பிரமதேவரும்,
திருமகள் நாயன் --- இலக்குமியம்மையின்
கணவராகிய நாராயணரும்,
தொழும் வேலா --- வணங்கி வழிபடுகின்ற
வேலாயுதரே!
தினை வன மானும் --- தினைப் புனத்தில்
வாழ்ந்த மான் போன்ற வள்ளி நாயகியும்,
கன வன மானும் --- விண்ணுலகத்திலுள்ள மேன்மை
பொருந்திய கற்பக வனத்தில் வளர்ந்த மான் போன்ற தெய்வயானையும்,
செறிவுடன் மேவும் --- உளங்கலந்து சேர்ந்து
அணைகின்ற,
திருமார்பா --- திருமார்பினரே!
தலமகள் மீது --- நிலமகளாகிய பூமி மீது,
எண் புலவர் உலாவும் --- மதிக்கப்படுகின்ற
சிறந்த புலவர்கள் நிறைந்து உலாவுகின்ற,
தணிகையில் வாழ் --- திருத்தணிகை மலை மீது
வாழ்கின்ற,
செங்கதிர் வேலா --- சிவந்த ஒளி பொருந்திய
வேலாயுதரே!
தனியவர் --- உலகை நீங்கியுள்ள
அடியவர்களின்,
கூரும் தனிகெட --- மிகுந்த தனிமையானது
நீங்கும்படி அருளி,
நாளும் தனி மயில் ஏறும் --- நாள்தோறும்
ஒப்பற்ற மயில் மீது எழுந்தருளுகின்ற,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
கலை மடவார்தம் --- மேகலை முதலிய அணிகலன்
அணிந்த பெண்களின்,
சிலை அதனாலும் --- வசைப் பேச்சின் ஒலியாலும்,
கன வளையாலும் --- திரண்ட சங்க நாதத்தாலும்,
கரை மேலே --- கரைமேல் இருந்து கூவுகின்ற,
கருகிய காளம் --- (மன்மதனது எக்காளமாகிய) கருமையான
குயிலின் ஓசையாலும்,
பெருகிய தோயம் --- கடல் ஓசையாலும்,
கருது அலையாலும் --- சிந்தனை அலைகளாலும்,
சிலை ஆலும் --- வில்லினிடத்தே அசைகின்ற,
கொலை தரு காமன் பல கணையாலும் --- கொலை
செய்யவல்ல மன்மதனுடைய பல பாணங்களாலும்,
கொடி இடையாள் --- கொடிபோன்ற மெல்லிய இடையுடைய
இவள்,
நின்று அழியாதே --- கவலைப்பட்டு நின்று அழிவு
படாமல்,
குரவு அணி --- குராமலரைத் தரித்துள்ள,
நீடு புயம் அணி --- நீண்டபுயத்தில்
அணிந்துள்ள,
நீப குளிர்தொடை --- குளிர்ந்த கடப்ப மலர்
மாலையை,
நீ தந்து அருள்வாயே --- தேவரீர் தந்து அருள் புரிவீராக.
பொழிப்புரை
மலையரையன் மகளாகிய உமாதேவியின் நாயகராகிய
சிவமூர்த்தியும், கலைவாணியின்
நாயகராகிய பிரமதேவரும், இலக்குமிதேவியின்
நாயகராகிய திருமாலும் வணங்கி வழிபடுகின்ற வேலாயுதரே!
தினைப்புனத்தில் வாழ்ந்த மான்போன்ற
வள்ளிநாயகியும், தேவலோகத்தில் கற்பகச்
சோலையில் வளர்ந்த மான் போன்ற தெய்வநாயகியும், உளம் கலந்து தழுவுகின்ற
திருமார்பையுடையவரே!
பூதலத்தின் மீது மதிக்கப்படுகின்ற புலவர்கள்
உலாவுகின்ற திருத்தணிகை மலைமீது எழுந்தருளியுள்ள சிவந்த ஒளி பெற்ற வேலாயுதரே!
தனிமையை அடைந்த தவசீலர்களின் தனிமை நீங்க, நாடோறும் ஒப்பற்ற மயிலின் மீது ஏறி
உலாவுகின்ற பெருமிதம் உடையவரே!
மேகலாபரணம் அணிந்த மாதர்களின் வசைமொழியாலும், கனத்த சங்கின் ஓசையாலும், கரையிலிருந்து கூவுகின்ற குயிலின்
ஓசையாலும், கடல் ஒலியாலும், சிந்தனை அலையாலும், வில்லின் மீது அசைகின்ற கொலை புரியவல்ல மன்மதனுடைய
பல பாணங்களாலும், கொடி போன்ற மெல்லிய
இடையுடைய இவள் துன்புற்று நின்று அழியாத வண்ணம், குராமலர் அணிந்த நீண்ட புயத்தில்
தரித்துள்ள குளிர்ந்த கடப்ப மலர் மாலையைத் தேவரீர் தந்து அருள் புரிவீராக.
விரிவுரை
இத்திருப்புகழ்
நாயகீ நாயக பாவத்தில் பாடப் பெற்றது.
முருகனாகிய
தலைவனை விரும்பிய, பக்குவப்பட்ட
ஆன்மாவாகிய தலைவிக்கு எந்த எந்த வகையால் துன்பம் விளைகின்றது என்று சுவாமிகள்
விரித்துரைக்கின்றார்.
கலை
மடவார் தம் சிலை அதனாலும் ---
கலை-மேகலை
(மணிமேகலை) இது சிறந்த பெண்மணிகள் ஆடைக்குமேல் இடையில் கட்டுகின்ற பொன்மணிக் கோவை.
மூன்று ஐந்து ஏழு என்ற வரிசையில் வரிசையாகக் கட்டிக் கொள்வார்கள். மணிமேகலை என்பது
ஒரு ஆபரணம். இந்த அணியை அணிந்த பெண்கள் முருகனாகிய தலைவனை விரும்பி ஏங்கி
உண்ணாமலும், உறங்காமலும், பித்துப் பிடித்திருக்கின்ற தலைவியைப்
பார்த்து, ஏளனமாகப் பேசி ஏசுவார்கள்.
அம்மாதர்களின் வசைமொழியால் மேலும் அத்தலைவி வேதனையுறுவாள்.
“தெருவினில் நடவா மடவார்
திரண்டொறுக்கும் வசையாலே” --- திருப்புகழ்
சிலை-ஒலி; வசையொலி
கன
வளையாலும்
---
கனம்-பருமை; வளை-சங்கு. பருத்த சங்கின் ஓசை
தலைவிக்கு மிகுந்த தாபத்தையுண்டாக்கும்.
கரை
மேலே கருகிய காளம் ---
காளம்-‘எக்காளம்’.
எக்காளம் என்பது ஒரு வாத்தியம். மன்மதனுக்கு எக்காளம் குயில். அது கரிய
நிறமுடையது. கடற்கரையில் இருந்து குயில் கூவுவதனால் தலைவி மேலும் வருத்தம்
அடைவாள்.
“மெள்ள வரு சோலைக் குயிலாலே
மெய் உருகு மானைத் தழுவாயே” --- (துள்ளுமதவேள்) திருப்புகழ்
பெருகிய
தோயம்
---
தோயம்-தண்ணீர்; பெருத்த நீர்-கடல். கடலோசை மகளிர்க்கு
மிகுந்த விருப்பத்தையுண்டாக்கி வருத்தும்.
“தொல்லை நெடு நீலக்கடலாலே” --- (துள்ளுமதவேள்) திருப்புகழ்
கருது
அலையாலும்:-
கருது
அலை. சிந்தனையில் பலப்பல எண்ணங்கள் அலைபோல் எழுந்து வருத்தும்.
சிலையாலும்
கொலைதருகாமன் பலகணையாலும் ---
கரும்பு
வில்லின் மீது அசைகின்றவன் மன்மதன் பிரிவுத் துன்பத்தை யதிகப்படுத்தி
கொலைபுரிகின்றவன், அவனுடைய பலகணைகளால்
தலைவி துன்புறுவாள்.
“துள்ளுமத வேள்கைக் கணையாலே” --- திருப்புகழ்
கொடியிடையாள்
நின்று அழியாதே ---
கொடிபோன்ற
மெல்லிய இடையுடைய தலைவி முருகனை நினைந்து நினைந்து துன்புற்று அழியாத வண்ணம்
காத்தருள்க என்று வேண்டுகின்றார்.
குரவு
அணி
---
குராமலர்
முருகனுக்கு உகந்த மலர். திருவிடைக்கழி என்ற திருதலத்தில் முருகவேள் குராமரத்தின்
கீழ் வீற்றிருக்கின்றார்.
"குராப்புனை
தண்டையந்தாள் தொழல் வேண்டும்". --- கந்தரலங்காரம்.
நீபம்
குளிர் தொடை நீ தந்தருள்வாயே ---
நீபம்-கடம்பு; விரக தாபம் உற்ற ஒரு தலைவிக்கு நாயகன்
அணிந்த மலர்மாலை மகிழ்ச்சியைத் தரும். “முருகா! நின் மீது காதல் கொண்ட
இவ்வனிதைக்கு நினது மார்பில் தரித்துள்ள கடப்பமலர் மாலை தந்து அருள் புரிவாய்.”
“குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து
குறை தீர வந்து குறுகாயோ” --- (விரல்மாரா) திருப்புகழ்
“மால் கொண்ட பேதைக்கு உன் மணம்நாறும்
மார் தங்கு தாரைத்தந் தருள்வாயே”
--- (நீலங்கொள்) திருப்புகழ்
சிலைமகள்
நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும்வேலா ---
திருத்தணிகையில்
அயன் அரி அரன் என்ற மும்மூர்த்திகளும் முருகவேளை வழிபட்டார்கள்.
திருத்தணிகையில்
சிவபெருமான் முருகரைத் தியானித்து உபதேசம் பெற்றனர். அந்த “வீராட்டகாசர்” ஆலயம்
தணிகைக்கு அருகில் ஓடும் நந்தியாற்றுக்கு வடகரையில் உள்ளது. உபதேசித்த சாமிநாதர்
ஆலயம் நந்தியின் தென்கரையில் உள்ளது.
திருமால்
முருகரை வழபட்டுத் தாரகாசுரனால் கவரப்பட்ட சக்கராயுதத்தைப் பெற்றார். விஷ்ணு
தீர்த்தம் திருக்கோயிலுக்கு மேற்கே,
அர்ச்சகர்களின்
வீடுகளின் எதிரில் உளது.
பிரமதேவர்
முருகரை வழிபட்டு சிருட்டித் தொழிலின் வன்மையைப் பெற்றனர். மலைமீது ஏறப்போகும்
வழியில் பாதி தொலைவில், பிரமசுனையும்
பிரமேசர் ஆலயமும் உள்ளன. இவ்வண்ணம் மூவரும் வழிபட்டதை இப்பாடலில் அருணகிரிநாத
சுவாமிகள் குறிப்பிட்டனர் என அறிக.
கநவனமான் ---
கம்-விண்ணுலகம், ந-மேன்மை, விண்ணுலகில் உள்ளது மேன்மை தங்கிய
கற்பகச் சோலை.
கனம்-பொன்; பொன்னுலகத்தில் உள்ள கற்பகவனம் எனினும்
அமையும்.
எண்
புலவர் உலாவும் ---
எண்-மதிப்பு.
உலகம் மதிக்கத்தக்க சிறந்த புலவர்கள் உலாவுகின்ற பெருமையுடையது திருத்தணிகை.
புலவர்
என்ற சொல்லுக்குத் தேவர்கள் என்றும் பொருள். தேவர்கள் வந்து வேண்டிய வரங்களைப்
பெறும் பொருட்டு உலாவுகின்றனர் என்றும் பொருள்படும்.
தனியவர்
கூறும் தனிகெட
---
தனியவர்-தனிமையானவர், சுற்றம், உறவு, முதலிய சகல பற்றுக்களையுந் துறந்து
தனிமையில் நின்ற ஞானிகள்.
10 பேருக்காக ஒருவரை
விடவேண்டும்.
ஒரு
ஊருக்காக பதின்மரை விடவேண்டும்.
ஒரு
நாட்டுக்காக ஒரு ஊரை விட்டுவிட வேண்டும்.
ஒரு
தேசத்துக்காக ஒரு நாட்டை விட்டுவிட வேண்டும்.
எனவே, எல்லாவறையும், பற்று அறத் துறந்து தனியானவர்கள்.
அடல்வேண்டும்
ஐந்தன்புலத்தை, விடல்வேண்டும்
வேண்டிய
எல்லாம் ஒருங்கு. ---திருக்குறள்.
அவ்வாறு
எல்லாவற்றையும் விட்டுத் தனியானவர்களின் தனிமை கெட முருகன் அவரிடம் வந்து நின்று
தானும் அத் தபோதனருமாக அருள் புரிகின்றான்.
“குமரா! சரணம் சரணம் என்று அண்டர் குழாம் துதிக்கும்
அமராவதியில் பெருமாள் திருமுகம் ஆறும் கண்ட
தமர் ஆகி வைகும் தனியான ஞானத் தபோதனர்க்கு, இங்கு
எமராஜன் விட்ட கடையேடு வந்தினி என் செயுமே” --- கந்தர் அலங்காரம்.
தனிமயில் ---
தனி-ஒப்பற்றது.
எம்பிரான் ஏறு மயில் நிகரில்லாத பெருமையுடையது.
கருத்துரை
திருத்தணி
மேவுந் தேவதேவா! இந்த ஆன்மாவின் துயர் தீர நினது திருமாலையைத் தந்து அருள்
புரிவாய்.