திருத்தணிகை - 0268. கரிக்குழல் விரித்தும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரிக்குழல் விரித்தும் (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
மாதர் உறவைத் தவிர்த்து, உனக்கு அடிமை ஆகி,
உனது திருத்தலத்தில் வாழும்படி அருள்.

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ...... தனதான


கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
     கரிக்குவ டிணைக்குந் ...... தனபாரக்

கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்
     கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத்

தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்
     தவிர்த்துன துசித்தங் ...... களிகூரத்

தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்
     தலத்தினி லிருக்கும் ...... படிபாராய்

புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்
     பொடிப்பணி யெனப்பன் ...... குருநாதா

புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்
     புகழ்ச்சிய முதத்திண் ...... புலவோனே

திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்
     தெறிப்புற விடுக்குங் ...... கதிர்வேலா

சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்
     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கரிக்குழல் விரித்தும், புறக்கயல் விழித்தும்,
     கரிக்குவடு இணைக்கும் ...... தனபார,

கரத்து இடு வளைச் சங்கிலிச் சரம் ஒலித்தும்,
     கலைத் துகில் மினுக்யும் ...... பணிவாரைத்

தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம்
     தவிர்த்து, னது சித்தம் ...... களிகூர,

தவக்கடல் குளித்து, ங்கு உனக்கு அடிமை உற்று,ன்
     தலத்தினில் இருக்கும் ...... படி பாராய்.

புரத்தையும் எரித்து, ம் கயத்தையும்உரித்து, ண்
     பொடிப்பணி என் அப்பன் ...... குருநாதா!

புயப் பணி கடப்பம் தொடை "சி"கரம் உற்று, ன்
     புகழ்ச்சி அமுதத் திண் ...... புலவோனே!

திரள் பரி கரிக்கும் பொடிப்பட, அவுணர்க்கும்
     தெறிப்பு உற விடுக்கும் ...... கதிர்வேலா!

சிறப்பொடு குறப்பெண் களிக்கும் விசயத் தென்
     திருத்தணி இருக்கும் ...... பெருமாளே.
 

பதவுரை


      புரத்தையும் எரித்து --- திரிபுரத்தையும் எரி செய்தும்,

     அம் கயத்தையும் உரித்து --- அழகிய யானையின் தோலை உரித்து உடுத்தும்,

     ஒண்பொடி பணி --- ஒளிவீசும் திருநீற்றை ஆபரணமாக அணிந்த,

     என் அப்பன் குருநாதா --- எனது அப்பனாகிய சிவபெருமானுடைய குருநாதரே!

      புய பணி --- திருத்தோளில் ஆபரணமாக,

     கடப்பம் தொடை --- கடப்பமலர் மாலை யணிந்தவரே!

      சிகரமுற்று = சி என்னும் மகாமந்திரத்தின் உட்பொருளாய் விளங்கி,

     இன் புகழ்ச்சி அமுத --- இனிய புகழமுதைக் கொண்ட,

     திண் புலவோனே --- திண்ணிய புலவர் பெருமானே!

      திரள் பரி --- கூட்டமான குதிரைகளும்,

     கரிக்கும் --- யானைகளும்,

     பொடிபட --- தூள்படவும்,

     அவுணர்க்கும் தெறிப்பு உற --- அசுரர்கள் சிதறியழியவும்,

     விடுக்கும் கதிர் வேலா --- செலுத்திய ஒளி படைத்த வேலாயுதரே!

         சிறப்பொடு குறப்பெண் களிக்கும் --- சிறப்புடனே வள்ளியம்மையுடன் மகிழ்கின்றவரும்,

     விஜய தென் --- வெற்றியும் அழகும் கொண்டவரும் ஆகிய,

     திருத்தணி இருக்கும் --- திருத்தணியில் வாழ்கின்ற,

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

         கரிகுழல் விரித்தும் --- கரிய கூந்தலை விரித்தும்,

     புற கயல்விழித்தும் --- வெளியில் தோன்றும் கயல் மீன் போன்ற கண்களை விழித்தும்,

     கரி குவடு இணைக்கும் தனபார --- யானை போன்றும் மலை போன்றும் உள்ள பருத்த தனங்களை உடையவராய்,

     கரத்திடு வளை --- கையில் வளையல்களும்,

     சங்கிலி சரம் ஒலித்தும் --- பொன் சங்கிலிமாலைகளும் ஒலிசெயச் செய்தும்,

     கலை துகில் மினுக்கும் --- மேகலையுடன் கூடிய புடவையைப் பளபளப்புடன் உடுத்தும்,

     பணிவாரை தரித்து --- தம்மைப் பணிந்து ஒழுகும் ஆடவரை ஏற்று,

     உளம் அழிக்கும் --- அவர்களது உள்ளத்தை அழிக்கின்ற,

     கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து --- வஞ்சகர்களாகிய பொது மாதரின் நட்பை அகற்றி,

     உனது சித்தம் களி கூர --- தேவரீருடைய திருவுள்ளம் மிகவும் மகிழ்ச்சியடையும்படி,

     தவ கடல் குளித்து --- அடியேன் தவக்கடலில் முழுகி,

     இங்கு உனக்கு அடிமை உற்று --- இப்பொழுதே தேவரீருக்கு அடிமை பூண்டு,

     உன் தலத்தினில் இருக்கும்படி பாராய் --- உமது தலமாகிய தணிகையம்பதியில் உறைகின்ற வாய்ப்பினை அடியேன் பெறுமாறு கண் பார்த்து அருள் புரிவீராக.


பொழிப்புரை


     திரிபுரத்தை எரித்தும், அழகிய யானையை உரித்தும், ஒளி படைத்த திருநீற்றைத் தரித்தும் விளங்கும் என் அப்பனாகிய சிவபெருமானுடைய குருநாதரே!

     தோள்களில் கடப்ப மலர் மாலையை அணியாக அணிந்த “சி“ என்னும் மகாமந்திரத்தின் உட்பொருளாய் உற்று, இனிய புகழமுதைப் படைத்த திண்ணிய புலவர் பெருமானே!

     திரண்ட குதிரைகள் யானைகள் அவுணர்கள் அழிய ஒளிமிக்க வேலாயுதத்தை விடுத்தவரே!

     சிறப்போடு வள்ளியம்மை மகிழும் வெற்றியும் அழகும் படைத்த திருத்தணியில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே!

         கரிய கூந்தலை விரித்தும் மீன்போன்ற கண்களை விழித்தும், யானையும் மலையும் போன்ற தனபாரங்களை உடையவராய், கரத்தில் வளையல்களும், பொற் சங்கிலிகளும் ஒலி செயச் செய்தும், மேகலையுடன் கூடிய புடவையைப் பளபளப்புடன் உடுத்தும், தம்மை வணங்கும் ஆடவரைச் சேர்த்துக் கொண்டு அவர்களின் உள்ளத்தை அழிக்கின்ற வஞ்சகர்களாகிய விலைமாதர்களின் உறவை நீக்கி, தேவரீ்ரது திருவுள்ளம் மகிழுமாறு, தவக்கடலில் முழுகி, உமது அடிமையாகி உமது திருத்தலத்தில் வசிக்கும் வாய்ப்பை அடியேனுக்கு உருள் புரிவீராக.

விரிவுரை


கரிக்குழல் விரித்தும் ---

ஆடவர்களின் மனதை ஈர்க்கும் பொருட்டு பொருட்பெண்டிர், அழகிய கரிய குழலை நன்கு வாரி முடிக்காமல் விரித்து நிற்பார்கள், அது முத்தி நெறி செல்வார்க்குத் தடை என்ற குறிப்பை உணர்த்தும்,

புறக்கயல் விழித்தும் ---

நீரின் மேல் உலாவும் கயல் மீனைப் போன்ற கண்களை உருட்டி விழித்து நிற்பர். அது மேலும் ஆடவரை மயக்கும், அக்கண் யமபாசம் போன்றது. ஆடவரைக் கட்டுண்ணச் செய்யும்.

கரிக்குவடு இணைக்கும் தனபார ---

கரி-யானை, குவடு-மலை, யானையின் மத்தகம் போலவும், மலைச்சிகரம் போலவும் பருத்துள்ள தனங்களால் தனம் பரிப்பர்.


கரத்திடு வளைச்சங்கிலிச் சரமொலித்தும் ---

கரங்களில் உள்ள வளைகளை அசைத்தும், கழுத்தில் உள்ள பொற் சங்கிலிகளை அசைத்தும் ஒலியுண்டாகச் செய்வர். அதுவும் விருப்பத்தை மேலிடச் செய்யும்,

கலைத்துகில் மினுக்கியும் ---

கலை-மேகலை, இது ஆடைக்குமேல் அணியும் பொன்னாபரணம் சிறுசிறு மணிகளின் கோவை, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற தகுதிக்கேற்ப அணிவார்கள்.

பணிவாரைத் தரித்து உளம் அழிக்குங் கவட்டர் ---

ஆசை வயப்பட்டவர்கள் அம்மகளிரை வணங்கி அவருடைய நட்பை விரும்புவார்கள். அவர்களை வசப்படுத்தி தெளிந்தவுள்ளத்தையழிக்கும் வஞ்சகர்கள் அம்மகளி்ர்.

இணக்கந் தவிர்த்து ---

பொதுமகளிரது உறவை நீக்குதல் வேண்டும். அதுவே நீங்காது அறிவின் ஆற்றலால் நீக்கவேண்டும்.

தவக்கடல் குளித்து ---

தவம் என்பது இறைவனை நினைத்து சிந்தையை ஒருமைப் படுத்தி அசைவறநிற்கும் நிலை. இத்தவ நெறியில் முழுகி நிற்போர் இறைவனுடைய அருட்கடலில் முழுகுவார்கள்.
  
உனக்கு அடிமை உற்று ---

மனதிற்கு அடிமைப்பட்டிருக்கும் நாம் இறைவனுக்கு அடிமைப்பட வேண்டும்,

உன் தலத்தினில் இருக்கும்படி பாராய் ---

இறைவன் அடியவர் பொருட்டு எழுந்தருளியிருக்கும் திருத்தலத்தில் வசிப்பது மிகவும் உத்தமோத்தமம். க்ஷேத்ரவாசம் என்பார்கள். அங்கு ஆண்டவனுடைய அருள் விலாசம் குடி கொண்டிருக்கும்.

புரத்தையும் எரித்து ---

புரத்தையும் என்ற சொல்லில் வந்த உம்மை இறந்தகாலந் தழுவிய எச்சவும்மை. அதுமதனனை எரித்ததையும் குறித்து நிற்கின்றது.

கயத்தையும் முறித்து ---

இதில் வந்த உம்மையும் மேற் கூறியவாறு இறந்தது தழீஇயது. இது புலியை உரித்ததையுங் குறித்து நின்றது.

ஒண்பொடிப் பணி என் அப்பன் ---

ஒண்-ஒளி. ஞானவொளி வீசுவது திருநீறு. இறைவன் திருநீற்றையணிவது தன்னை நினைக்கின்ற ஆன்மாக்களின் வினைகள் பொடிபடும் பொருட்டு எனவுணர்க,

நினைவொடு பணிபவர் வினைதுகள் படஎதிர்
நினைந்து திருநீறு அணிந்தது ஒருபால்”      --- கொலுவகுப்பு

திருநீறு வினைகளை விலக்குவதன்றி பிறவினைகள் பொருந்தாவண்ணம் கவசமாக நின்று அரண்புரியும்.

     கங்காளன் பூசங் கவசத் திருநீற்றை
    மங்காமல் பூசி மகிழ்விரே ஆமாகில்
    தங்கா வினைகளும் சாரும் சிவகதி
    சிங்கார மான திருவடி சேர்வரே”   ---திருமந்திரம்                                              


சிகரமுற்று ---

சி என்ற ஒரு தனி எழுத்து மகா மந்திரமாகும். அது ஏக பஞ்சாட்சரம் எனப்படும். நாயோட்டு மந்திரம் என்றுங் கூறுவர்.

நமசிவய -- தூல பஞ்சாட்சம்.

சிவயநம -- சூட்சும பஞ்சாட்சரம்.

சிவயசிவ -- காரண பஞ்சாட்சரம்.

சிவ -- மகா பஞ்சாட்சரம்.

சி -- மகாமநு

ந -- திரோதம்

ம -- ஆணவம்

சி -- சிவம்

வ -- திருவருள்

ய -- ஆன்மா

திரோத சக்தியால் ஆணவமலத்தை அகற்றி, திருவருள் துணை கொண்டு ஆன்மா சிவத்தைச் சேர்ந்து பவத்தை அகற்றும்.

இவ்வைந்தெழுத்தே வேத இருதயமாகி விளங்குவது.

வேத நான்கினும் மெய்ப் பொருளாவது
 நாதன் நாமம் நமச் சிவாயவே”      --- திருஞானசம்பந்தர்.
                                                                                                       
விஜயத் தென் திருத்தணி :-

தென்-அழகு. திருத்தணி தன்னை அடுத்து வந்த ஆன்மாக்களின் பாவத்தை அழித்து வெற்றிக் கொள்வது. விசேடமான ஜயம் விஜயம். ஆதலால் உத்தமமான திருத்தலம் திருத்தணிகை பணிவார் வினைகளைத் தணித்து சிவஞானத்தை அருள்வது தணிகாசலம்.

கருத்துரை

திருத்தணிகேசா! தவநெறியுற்று உன் தல வாசம் புரிய அருள்செய்.










12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...