அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கடற்செகத் தடக்கி
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
மாதர் மயலில் அடியேன்
உழலாமல் காத்து அருள்.
தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கடற்செகத்
தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்
கடைக்கணிற் கொடுத்தழைத் ...... தியல்காமக்
கலைக்கதற்
றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்
கரைத்துடுத் தபட்டவிழ்த் ...... தணைமீதே
சடக்கெனப்
புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத்
தமிட்டிருட் குழற்பிணித் ...... துகிரேகை
சளப்படப்
புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்
தலத்தில்வைப் பவர்க்கிதப் ...... படுவேனோ
இடக்கடக்
குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்
தெழிற்றினைக் கிரிப்புறத் ...... துறைவேலா
இகற்செருக்
கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்
சிறைச்சியைப் பசித்திரைக் ...... கிசைகூவும்
பெடைத்திரட்
களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்
பிதற்றறப் படுத்துசற் ...... குருவாய்முன்
பிறப்பிலிக்
குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்
பெருக்குமெய்த் திருத்தணிப் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கடல்
செகத்து அடக்கி, மற்று அடுத்தவர்க்கு
இடுக்கணைக்
கடைக் கணில் கொடுத்து, அழைத்து, ...... இயல்காமக்
கலைக்
கதற்று உரைத்து, புள் குரற்கள் விட்டு, உளத்தினைக்
கரைத்து, உடுத்த பட்டு அவிழ்த்து, ...... அணைமீதே
சடக்கு
எனப் புக, தனத்து அணைத்து, இதழ்க் கொடுத்து, முத்
தம் இட்டு, இருள் குழல் பிணித்து, ...... உகிர் ரேகை
சளப்படப்
புதைத்து, அடித்து, இலைக் குணக் கடித் தடத்
தலத்தில் வைப்பவர்க்கு இதப் ...... படுவேனோ?
இடக்கு
அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து,
எழில் தினைக் கிரிப் புறத்து ...... உறைவேலா!
இகல்
செருக்கு அரக்கரைத் தகர்த்து, ஒலித் துரத்த, பச்சு
இறைச்சியைப் பசித்து, இரைக்கு..... இசைகூவும்
பெடைத்
திரட்கு அளித்த குக்குடக் கொடிக் கரத்த! பொய்ப்
பிதற்று அறப்படுத்து சற்- ...... குருவாய், முன்
பிறப்பிலிக்கு
உணர்த்து சித்த! உற்ற நெல் பெருக்குவைப்
பெருக்கு மெய்த் திருத்தணிப் ......
பெருமாளே.
பதவுரை
இடக்கு அடக்கு --- முரண்பாடுகளை
அடக்குகின்ற,
மெய்ப்பொருள் --- உண்மைப் பொருளைக் கொண்ட,
திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து ---
திருப்புகழுக்கு உயிரோட்டத்தைத் தந்து,
எழில் தினை கிரி புறத்து உறைவேலா --- அழகிய
தினைப்புனம் உள்ள மலைப்பாங்கில் உறைகின்ற வேலவரே!
இகல் செருக்கு --- மாறுபட்டு அகங்கரித்த,
அரக்கரை தகர்த்து --- அசுரர்களை அழித்து,
ஒலித்து --- கொக்கரித்து,
உரத்த பசு இறைச்சியை --- திண்ணிய பசிய
இறைச்சியை,
பசித்து இரைக்கு இசை கூவும் --- பசியுடன் இரை
வேண்டும் என்று குரலுடன் கூவுகின்ற,
பெடை திரட்டு அளித்த --- பெட்டைக் கோழிக்
கூட்டங்களுக்குக் கொடுத்த,
குக்குட கொடி கரத்த --- சேவலைக் கொடியாகத்
திருக்கரத்தில் பிடித்தவரே!
பொய் பிதற்று அற படுத்து --- பொய்யான
பிதற்றல் மொழிகளை அடியுடன் களைந்து,
சற்குருவாய் --- சற்குரு நாதராய்,
முன் --- முன்பு ஒரு நாள்,
பிறப்பு இலிக்கு உணர்த்து --- பிறப்பில்லாத
பெருமானாகிய சிவபிரானுக்கு உபதேசித்த,
சித்த --- சித்த நாதரே!
உற்ற நெல் பெருகுவை பெருக்கு ---
சேர்ந்துள்ள நெல்லின் பெருங்குவியல்களை மேலும் பெருக வைக்கும்,
மெய் திருத்தணி --- அழியாத திருத்தணி மலையில்
எழுந்தருளிய,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
கடல் செகத்து அடக்கி --- கடலும் உலகமும்
தன் அகலப் பரப்பினால் அடங்குமாறு செய்து,
மற்று அடுத்தவர்க்கு --- தம்மை நாடி வந்தவர்கட்கு,
இடுக்கணை --- துன்பத்தை,
கடை கணில் கொடுத்து --- தமது கடைக்கண்ணால்
கொடுத்து,
அழைத்து --- அவர்களை தம்பால் நெருங்குமாறு
கூப்பிட்டும்,
இயல் காம கலை கதற்று உரைத்து ---
இயல்பாகவுள்ள காம நூல்கள் முழங்கியதை எடுத்து உரைத்து,
புள் குரல்கள் விட்டு --- பறவைகளின்
குரல்களைக் காட்டி,
உளத்தினை கரைத்து --- உள்ளத்தை உருக்கி,
உடுத்த பட்டு அவிழ்த்து --- உடுத்துள்ள
பட்டுப் புடவையை அவிழ்த்து,
அணைமீது -- படுக்கையின் மேல்,
சசிக்கு என புக --- சட்டென்று வேகமாகச்
சேர்ந்து,
தனத்து அணைத்து --- மார்பு உறத்தழுவி,
இதழ் கொடுத்து --- இதழ் ஊறலை அளித்து,
முத்தம் இட்டு --- முத்தந் தந்து,
இருள் குழல் பிணித்து --- இருண்ட கரிய
கூந்தலைக் கட்டி முடிந்து,
உகிர் ரேகை --- நகக் குறியை,
சளப்பட புதைத்து அடித்து --- மூர்க்கத்துடன்
புதைய அழுத்தி,
இலை குரை கடிதடத்தலத்தில் வைப்பவர்க்கு ---
இலை போன்ற அல்குலில் சேர்ப்பவர் பால்,
இதப் படுவேனோ --- வசப்படுவேனோ?
பொழிப்புரை
மாறுபாடுகளை அடக்கும் உண்மைப் பொருளைக்
கொண்ட தேவரீரது திருப்புகழுக்கு உயிரோட்டத்தைத் தந்து அழகிய தினைப்புனத்துடன்
கூடிய வள்ளிமலைப் பாங்கில் உறைகின்ற வேலாயுதரே!
போரில் அகங்கரித்து வந்த அரக்கர்களை
அழித்து, கொக்கரித்து
கெட்டியான பசிய மாமிசத்தை, பசியுடன் கூவுகின்ற
பெண் கோழிகட்குத் தந்த சேவலைக் கொடியாகத் திருக்கரத்தில் ஏந்தியவரே!
பொய்மைப் பிதற்றுதலை அடியுடன் களைந்து, சற்குருநாதராய் விளங்கி, பிறப்பில்லாத சிவமூர்த்திக்கு
முற்காலத்தில் உபதேசித்த சித்தமூர்த்தியே!
சேர்ந்துள்ள நெற்குவியலை மேலும் பெருகச்
செய்யும் மேன்மையுடைய திருத்தணியில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
கடலினும் பூமியினும் பெரிதாக விளங்கி, தம்மை நாடி வந்தவர்க்குத் துன்பத்தைத்
தமது கடைக் கண்ணால் கொடுத்து, அவர்களை அழைத்து, இயல்பான காமநூல்களைக் கூறி, பறவைகளின் குரல்களை எழுப்பி, உள்ளத்தை உருக்கி, உடுத்த பட்டாடையை அவிழ்த்து, படுக்கையின் மேல், விரைந்து சேர்ந்து தனம் பொருந்தத் தழுவி, இதழூறலைத் தந்து, முத்தமிட்டு, கூந்தலைக் கட்டி, நகக்குறியை அழுத்தமாக அழுத்தி, இலைபோன்ற அல்குலில் சேருமாறு செய்யும்
பொதுமாதர் வசமாக அடியேன் ஆகலாமோ?
விரிவுரை
இத்திருப்புகழில்
முதற்பகுதியில், பொது மகளிரின்
இயல்புகளை அடிகளார் கூறி, அம்மயக்கத்தில்
ஆழ்ந்து அழிதல் கூடாது என்று உலகுக்கு உணர்த்தியருளினார்.
இடக்கடக்கு
மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு
உயிர்ப்பு
அளித்து
---
திருப்புகழ்
பொறிபுலன்களின் சேட்டைகளை அடக்கி அருள் புரியும். சத்திய வாசகமானது
இத்திருப்புகழ். இத்திருப்புகழுக்கு உயிரோட்டம் தந்தது முருகன் வள்ளி நாயகிக்கு
அருளிய கருணைத் திறம். திருப்புகழில் அதிகமான பகுதிகளில் வள்ளி மணவாளா! என்று
கூறுகிறார் அருணகிரிநாதர்.
எழில்தினைக்
கிரிப்புறத்து உறைவேலா ---
மூவர்க்கும்
தேவர்க்கும் முதல்வராம் முருகவேள். காமனை எரித்த கனற்கண்ணிலே ஞானஜோதியாய்
வெளிப்பட்ட விமலன் அப்பெருமானுடைய மெய்யடியார்கள் பார்க்கின்ற திசையிலே கூட
ஆசாபாசம் அண்டமாட்டா.
ஆகவே
முருகவேள் தினைப்புனஞ் சென்று வள்ளியை மணந்தது ஆசைபற்றியன்று; “தாழ்ந்த குலத்தில் பிறந்து, ஆசார ஈனராகக் கல்வி ஞானம் இன்றி
இருப்பினும், என்னை நினைவார்க்கு
எளிதில் வந்து அருள் புரிவேன்” என்பதை அதனால் உலகுக்கு உணர்த்தியருளினார்.
இகற்செருக்கு
அரக்கரைத் தகர்த்து ஒலித் துரத்தபச் சிறைச்சியைப் பசித்து இரைக்கு இசைகூவப்
பெடைத்திரட்கு அளித்த குக்குடக் கொடிக் கரத்த ---
இந்த
மூன்று வரிகளில் சேவல்கொடியின் சிறப்பை கூறுகின்றார்.
இகல்-மாறுபாடு.
மாறுபட்ட அரக்கர்களைச் சேவல் தன் காலாயுதத்தால் அழித்தது.
ஒலித்து ---
“கொக்கறு கோ” என்று
ஒலித்தது. அரக்கர்களின் உடற்றசையை,
பசியுடன்
கூவியழைக்கும் பெண் கோழிக்குழுவுக்கு உணவாகத் தந்து அக்குழுவினைக் காக்கும்.
இத்தகைய
வீரமும், கருணையும் உடைய சேவலை
எம்பெருமான் திருக்கரத்தில் ஏந்தியிருக்கின்றார்.
பிறப்பிலிக்
குணர்த்து சித்த ---
சிவபெருமான்
பிறப்பு இறப்பு இல்லாதவர். “அஜம் த்ருவம்” என்று வேதம் முழங்குகின்றது.
எல்லார்
பிறப்பும் இறப்பும் இயல் பாவலர்தம்
சொல்லால்
தெளிந்தேம், நம் சோணேசன்-இல்லில்
பிறந்த
கதையும் கேளேம், பேருலகில் வாழ்ந்து, உண்டு
இறந்த
கதையும் கேட்டி லேம். --- அருணகிரியந்தாதி
சிவபிரானைப்
பற்றிச் சொல்லவந்த பிற மத ஆசிரியரும், “பிறவா
யாக்கைப் பெரியோன்” என்கிறார். அதனால்
சிவமூர்த்திக்குத்
தாயுந் தந்தையும் இல்லை. அவர் தான் எல்லாருக்குந் தாயும் தந்தையுமாகி நின்று அருள்
புரிகின்றார்.
கருத்துரை
திருத்தணி
முருகா, மாதர் மயக்கற அருள்.