திருத்தணிகை - 0266. கச்சு அணி இளமுலை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கச்சணி இளமுலை (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
உமது திருவடியில் இப்பொழுதே சேர அருள்.


தத்தன தனதன தத்தன தனதன
     தத்தன தனதன ...... தனதான


கச்சணி இளமுலை முத்தணி பலவகை
     கைச்சரி சொலிவர ...... மயல்கூறிக்

கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
     கட்செவி நிகரல்குல் ...... மடமாதர்

இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி
     யெச்சமி லொருபொரு ...... ளறியேனுக்

கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை
     யிப்பொழு தணுகவு ...... னருள்தாராய்

கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை
     நச்சியெ திருடிய ...... குறையால்வீழ்

குற்கிர வினியொடு நற்றிற வகையறி
     கொற்றவு வணமிசை ...... வருகேசன்

அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்
     அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே

அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை
     அப்பனெ யழகிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கச்சு அணி இளமுலை, முத்து அணி பலவகை,
     கைச் சரி சொலி வர, ...... மயல்கூறிக்

கைப்பொருள் கவர் தரு மைப்பயில் விழியினர்,
     கட்செவி நிகர் அல்குல் ...... மடமாதர்,

இச்சையின் உருகிய கச்சையன், றிவிலி,
     எச்சம் இல் ஒரு பொருள் ...... அறியேனுக்கு,

இப்புவி மிசை கமழ் பொற்பத மலர்இணை
     இப்பொழுது அணுக உன் ...... அருள்தாராய்.

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை
     நச்சியெ திருடிய ...... குறையால், வீழ்

குற்கிர வினியொடு நல்திற வகை அறி
     கொற்ற உவணம் மிசை ...... வரு கேசன்,

அச் சுதை நிறைகடல், நச்சுஅரவு அணைதுயில்
     அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே!

அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை
     அப்பனெ! அழகிய ...... பெருமாளே.
பதவுரை

       கொச்சையர் மனையில் --- யாதவர்களுடைய வீடுகளில்,

     இடைச்சியர் தயிர்தனை நச்சியெ --- கோபிகைகளின் தயிரை விரும்பி,

     திருடிய குறையால் --- களவு செய்த குறையினால்,

     வீழ் குற்கிர வினியொடு --- விழுந்து கிடந்த உரலொடு சென்று.

     நல் திறவகை அறி --- மருத மரங்களாக நின்றவர்கள் சாபத்தையறிந்து போக்கிய,

     கொற்ற உவண மிசை வரு கேசன் --- வீரமுள்ள கருடன் மீது வருகின்ற கேசவனும்,

     அச் சுதை நிறைகடல் --- அந்த பால் நிறைந்த கடலில்,

     நச்சு அரவணை துயில் --- நஞ்சையுடைய ஆதிசேடன் மீது துயில்கின்ற,

     அச்சுதன் மகிழ் --- அச்சுதனுமாகிய நாரயணர் மகிழ்கின்ற,

     திருமருகோனே --- சிறந்த மருகரே!
  
    அப்பு அணி சடை அரன் மெச்சிய --- கங்கை நீரைத் தரித்த சடை முடியுடைய சிவபெருமான் மெச்சிய,

    தணிமலை அப்பனெ --- திருத்தணியில் எழுந்தருளியிருக்கும் அப்பனே!

     அழகிய பெருமாளே --- அழகிய பெருமை மிகுந்தவரே!

      கச்சு அணி இளமுலை --- இரவிக்கையணிந்த இளமையான தனங்களும்,  

     முத்து அணி --- முத்தாபரணங்களும்,

      பலவகை கை சரி சொலிவர--- பலவகையான கைவளையல்களும் நன்கு ஒலி செய்ய,

     மயல்கூறி --- மயக்கத்தைத் தரும் இனிய மொழிகளைக் கூறி,

     கை பொருள் கவர்தரு --- கையில் உள்ள பொருள்களைக் கவர்கின்ற,

     மை பயில் விழியினர் --- மை நிறைந்த கண்ணினர்,

     கண்செவி நிகர் அல்குல் --- பாம்பின் படத்தை ஒத்த அல்குலையுடைய,

     மடமாதர் --- மடமைக் குணமுடைய பெண்களின்மீது,

     இச்சையின் உருகிய கச்சையன் --- ஆசையினால் உடலும் உள்ளமும் உருகிய தழும்பினன்,

     அறிவிலி --- அறிவில்லாதவன்,

     எச்சம் இல் ஒரு பொருள் அடியேனுக்கு --- குறைவில்லாத நிறைவான ஒரு பொருளையறியாதவனுமாகிய அடியேனுக்கு,

     இப்புவி மிசை --- இந்தப் பூதலத்தின்கண்,

     கமழ் பொன் பதமலர் இணை --- தேவரீருடைய அழகிய மணங்கமழ்கின்ற திருவடிகளை,

     இப்பொழுது அணுகவும் அருள்தாராய் --- இப்பொழுதே நான் அணுகும்படியாக உமது திருவருளைத் தந்தருளுவீராக.


பொழிப்புரை

         யாதவர்களின் வீட்டில் கோபிகைகளின் தயிரை விரும்பித் திருடிய குறைபாட்டினால் உரலில் கட்டுண்டு சென்று, நல்லதொரு செயலைச் செய்த கேசவன், அந்தப் பால் நிறைந்த கடலில் நஞ்சையுடைய அரவணையில் அறிதுயில் கொள்கின்ற நாரயணர் மகிழ்கின்ற திருமருகரே!

     கங்கா நதியைத் தரித்த சடை முடியினராகிய சிவமூர்த்தி மெச்சிய திருத்தணிகை மலையில் எழுந்தருளியுள்ள அப்பனே!

     அழகிய பெருமிதம் உடையவரே!

         இரவிக்கையணிந்த இள முலையும், முத்தாரங்களும், பலவகையான கைவளைகளும் ஒலிசெய்ய, மயக்கத்தை விளைவிக்கும்படியான இனிய மொழிகளைக் கூறி, கைப் பொருள்களைப் பறிக்கின்ற, மையெழுதிய கண்ணினர், பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய மடமாதர்கள் ஆசையினால் உடலும் உள்ளமும் உருகிய தழும்பினனும், அறிவில்லாதவனும், குறைவில்லாத நிறைவான ஒப்பற்ற பொருளை அறியாதவனுமாகிய அடியேனுக்கு இவ்வுலகில் தேவரீரது மணம் நாறும் அழகிய திருவடிகளை இப்பொழுதே சேரும்படியாக உமது திருவருளைத் தந்தருளுவீராக.

விரிவுரை

கச்சணி......மடமாதர் ---

இந்த நான்கு வரிகளிலும் விலை மகளிர் தம்பால் அணுகும் ஆடவரை மயக்கி இன்னுரை கூறி பொருள் பறிக்கும் செயல்களைக் கூறுகின்றார்.

அறிவிலி ---

அறிய வேண்டியதை அறிவது அறிவு.

எச்சமில் ஒரு பொருள் அறியேனுக்கு ---

எச்சம்-குறைவு. குறைவில்லாத நிறைவான பொருள் இறை. அந்த இறையை அறியாதவன்.

இப்புவி மிசை கமழ் பொற்பத மலரிணை
இப்பொழுது அணுகவும் ---

பெருமாளே! இந்தவுலகிலேயே உமது ஞான வாசனை வீசுகின்ற அழகிய இரு திருவடிகளை இப்பொழுதே பெறுமாறு அருள் செய்யும்.

பின்றையே நின்றதும் குற்றம்” என்பது நாலடியார். இன்றைக்கு இருந்தார் நாளை இருக்க மாட்டார்; நேற்று இருந்தார் இன்று இல்லை.

ஒருபொழுது வாழ்வது அறியார், கருதுப
கோடியும் அல்ல பல.                      --- திருக்குறள்.

அடுத்த கணம் வாழ்வது உறுதியில்லை. மனிதன் மனக் கோட்டை கட்டி யுழல்கின்றான்.

வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
     மலக்கூடு என்று,அறிஞர் எலாம் வருந்தக் கேட்டும்,
அருகு அணைத்துக் கொளப் பெண்பேய் எங்கே? மேட்டுக்கு
     அடைத்திட வெண் சோறு எங்கே? ஆடை எங்கே?
இருகணுக்கும் வியப்பு எங்கே? வசதியான
     இடம் எங்கே? என்று திரிந்து இளைத்தேன், அல்லால்,       
ஒருகணத்தும் உனைநி னைத்தது உண்டோ? என்னை
     உடையானே! எவ்வகை நான் உய்யுமாறே”

என்கின்றார் அருட்பிரகாச வள்ளலார்.

என்பையும் உருக்கும் இந்த அன்புப் பாடல் எத்தனை உருக்கத்தை விளைவிக்கிறது. ஆதலால் இந்த உடம்பிலிருந்து உயிர் எந்த விநாடியிலும் பிரிந்துவிடும். அப்படி அழியுமுன் இப்பொழுதே வந்து எம்பெருமானே! உமது திருவடிகளைத் தந்து உபசரிக்க வேண்டும்.

கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர் ---

திருமால் துவாபர யுக முடிவில் தேவகி வயிற்றில் திருவவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதை மகனாக வளர்ந்தார். முற்பிறப்பில் தாருக வனத்து முனிவர்களாகவும், தண்டக வனத்தில் முனிவர்களாகவும், இருந்து தவஞ் செய்தவர்கள் கோபிகைகள். ஆதலால் அவர்கள் உள்ளங்கவர் கள்வனாக கண்ணபிரான் சென்று, அவர்கள் உள்ளத்தையும் தயிரையும் ஒருங்கே களவு செய்தருளினார்.

இரட்டைப் புலவர்கள் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஒரு பனமுடிப்பை பிள்ளையார் பின்புறத்தில் வைத்து நீராடச் சென்றார்கள். விநாயகர் புலவர்களிடம் விளையாடக் கருதி அப் பண முடிப்பை மறைத்தருளினார்.

இரட்டையர்கள் வந்து பார்த்தார்கள். பணமுடிப்பு இல்லை. வறிய புலவர்கட்கு உள்ளம் எப்படியிருக்கும்? உடனே பெருமானைப் பார்த்துப் பாடுகின்றார்கள்.

தம்பியோ பெண்திருடி, தாயாருடன் பிறந்த
வம்பனோ நெய்திருடி மாயனாம்,-அம்புவியில்
மூத்த பிள்ளையாரே முடிச்சு அவிழ்த்துக் கொண்டீரோ?
கோத்திரத்தில் உள்ள குணம்.

உள்ளமாகிய பாலில் தீய நினைவுகளாகிய நீர் வற்ற ஞானமாகிய நெருப்பை மூட்டிக் காய்ச்சி, பக்குவமாகிய இளஞ்சூட்டில் ஐந்தெழுத்தாகிய உறை விட்டு, உறுதியாக உறியில் வைத்து, அசையாமல் நிருவிகற்ப சமாதியில் நிலைத்து நின்று, அன்பு என்ற மமதையிட்டு அறிவு என்ற கயிற்றைக் கொண்டு கடைந்தால், இறையருளாகிய வெண்ணெய் வெளிப்படும்.

திருடிய குறையால் வீழ் குற்கிர வினியொடு நல் திற வகை அறி ---

கண்ணபிரான் திருவிளையாடல்

1. கண்ணபிரான் நித்தம் நித்தம் வெண்ணெய்யும், பாலும், தயிரும் திருடியதால் யசோதை உரலிலே கட்டும்பொருட்டு தாம்புக் கயிற்றை எடுத்து வயிற்றிலே சுற்றினாள். அது ஒரு சாண் எட்டாதாயிற்று. வேறு ஒரு கயிற்றை முடிந்தாள். அதுவும் எட்டவில்லை. இவ்வாறு பல கயிறுகளை முடிந்தும் கட்ட
முடியாது திகைத்தாள். கண்ணபிரான் தாயாருடைய அன்பினைக் கருதி வயிற்றைச் சுருக்கிக் கொண்டார். கட்டிவிட்டாள். உரலில், கயிற்றினால் கட்டப்பட்ட வயிற்றை உடையவர் என்ற பொருளில் தாமோதரன் என்ற பேர் பெற்றார்.

கட்டுப்பட்ட கண்ணபிரான் ஒரு நல்ல கருமம் புரியத் திருவுள்ளம் பற்றினார்.

2. நந்தகோபனுடைய வாசலில் இரு மருத மரங்கள் இருந்தன. அவற்றின் இடையே சென்றார். உரல் அதில் நுழைய முடியவில்லை.

பெருமாள் திருவடியால் உதைத்தருளினார். அம் மரங்கள் வேருடன் சாய்ந்து வீழ்ந்தன. அம் மரங்களிலிருந்து இரு புண்ணிய உருவங்கள் வெளிப்பட்டன. தேவர்கள் பூ மழை பொழிந்தார்கள்.

குபேரனுடைய புதல்வர்கள் இருவர் நளகூபரன், மணிக்ரீவன் என்ற பெயருள்ளவர்கள். பேராற்றல் படைத்தவர்கள். மன்மதனைப் போன்ற வனப்புடையவர்கள். கயிலாய மலையின் சாரலில் சிறிது மதுவுண்டு மயங்கி மனைவியருடன் நிர்வாணமாக நீராடிக் கொண்டிருந்தார்கள். அங்கே நாரத முனிவர் வந்தார். அவரைக் கண்டு பெண்கள் நாணி ஆடையை உடுத்துக் கொண்டார்கள். மது மயக்கத்தால் கந்தருவர் இருவர்களும் ஆடையுடுக்காமல் நாரதரை எதிர்கொண்டு வணங்காமலும் இருந்தார்கள்.

நாரதர் சீற்றமுற்று, “மூடர்களே! நீவீர் முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் மருத மரங்களாயிருந்து கண்ணனுடைய கருணைக் கழலின் தொடர்பால் இச்சாபம் நீங்கப் பெறுவீர்கள்” என்று கூறினார். அந்தக் கந்தருவர்கள் நந்தகோபாலனுடைய வீட்டின் வாசலில் மருத மரங்களாய் முளைத்து முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் நின்றார்கள். ஐயனுடைய துய்ய சரணம் தீண்டியதால் வெய்ய சாபம் விலகப் பெற்றார்கள். கண்ணபிரானைத் தொழுதார்கள். துதி செய்தார்கள். இதனால் ஆடை உடுத்தாதவர் மரமாவார்.

அச்சுதை நிறைகடல் நச்சரவண துயில் ---

சுதை - பால்; பாற்கடலில் பாம்பணையில் பரமன் அறிதுயில் புரிகின்றார்.

அரன் மெச்சிய தணிமலை ---

சிவமூர்த்தி திருத்தணிகை மலையில் முருகவேளிடம் உபதேசம் பெற்று, மிகவும் மகிழ்ந்து நடனம் ஆடியருளினார்.

அரன் - பாவங்களைப் போக்குபவர். வினைகளைத் தணிப்பதனால் அம் மலை தணிமலை யெனப்பட்டது.

கருத்துரை

திருமால் மருகரே! திருத்தணி முருகரே! உமது திருவடி தந்தருளுவீர்.
                 


எந்நாளும் இன்பமே

இன்பமே எந்நாளும் -----      இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை. இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல, துன்பத்தைப் ...