அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஓலை இட்ட
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
பொதுமாதர் மயக்கம் அற
அருள்.
தான
தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஓலை
யிட்டகு ழைச்சிகள் சித்திர
ரூப மொத்தநி றத்திகள் விற்கணை
யோடி ணைத்தவி ழிச்சிகள் சர்க்கரை
...... யமுதோடே
ஊறி யொத்தமொ ழிச்சிகள் புட்குர
லோடு வைத்துமி ழற்றுமி டற்றிகள்
ஓசை பெற்றது டிக்கொளி டைச்சிகள்
......மணம்வீசும்
மாலை
யிட்டக ழுத்திகள் முத்தணி
வார ழுத்துத னத்திகள் குத்திர
மால்வி ளைத்தும னத்தைய ழித்திடு ...... மடமாதர்
மார்ப
சைத்தும ருட்டியி ருட்டறை
வாவெ னப்பொருள் பற்றிமு யக்கிடு
மாத ருக்குவ ருத்தமி ருப்பது ...... தணியாதோ
வேலை
வற்றிட நற்கணை தொட்டலை
மீத டைத்துத னிப்படை விட்டுற
வீற ரக்கன்மு டித்தலை பத்தையு ...... மலைபோலே
மீத
றுத்திநி லத்தில டித்துமெய்
வேத லக்ஷுமி யைச்சிறை விட்டருள்
வீர அச்சுத னுக்குந லற்புத ...... மருகோனே
நீலி
நிட்களி நிர்க்குணி நித்தில
வாரி முத்துந கைக்கொடி சித்திர
நீல ரத்தின மிக்கஅ றக்கிளி ...... புதல்வோனே
நீற
திட்டுநி னைப்பவர் புத்தியில்
நேச மெத்தஅ ளித்தருள் சற்குரு
நீல முற்றதி ருத்தணி வெற்புறை ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஓலை
இட்ட குழைச்சிகள், சித்திர
ரூபம் ஒத்த நிறத்திகள், வில் கணை-
யோடு இணைத்த விழிச்சிகள், சர்க்கரை ...அமுதோடே
ஊறி
ஒத்த மொழிச்சிகள், புட்குர-
லோடு வைத்து மிழற்று மிடற்றிகள்,
ஓசை பெற்ற துடிக் கொள் இடைச்சிகள், ......மணம்வீசும்
மாலை
இட்ட கழுத்திகள், முத்து அணி
வார் அழுத்து தனத்திகள், குத்திர
மால் விளைத்து, மனத்தை அழித்திடு
......மடமாதர்,
மார்பு
அசைத்து மருட்டி, "இருட்டு அறை
வா" எனப் பொருள் பற்றி முயக்கிடு
மாதருக்கு வருத்தம் இருப்பது ...... தணியாதோ?
வேலை
வற்றிட நல்கணை தொட்டு, அலை
மீது அடைத்து, தனிப்படை விட்டு உற,
வீறு அரக்கன் முடித்தலை பத்தையும்
.....மலைபோலே
மீது
அறுத்தி நிலத்தில் அடித்து, மெய்
வேத லட்சுமியைச் சிறை விட்டு அருள்
வீர அச்சுதனுக்கு நல் அற்புத ...... மருகோனே!
நீலி, நிட்களி, நிர்க்குணி, நித்தில
வாரி முத்து நகைக் கொடி, சித்திர
நீல ரத்தின மிக்க அறக்கிளி ...... புதல்வோனே!
நீறு
அது இட்டு நினைப்பவர் புத்தியில்
நேசம் மெத்த அளித்தருள் சற்குரு!
நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை
......பெருமாளே.
பதவுரை
வேலை வற்றிட --- கடல் வற்றும்படி,
நல்கணை தொட்டு --- சிறந்த கணையைச் செலுத்தி,
அலை மீது அடைத்து --- கடலின்மீது அணை கட்டி,
தனி படைவிட்டு உற --- ஒப்பற்ற
ஆயுதத்தைப் பொருந்தும்படி யேவி,
வீறு அரக்கன் முடி தலை பத்தையும் ---
கர்வங்கொண்டிருந்த இராவணனுடைய முடியுடைய பத்துத் தலைகளையும்,
மலை போலே மீது அறுத்து நிலத்தில் அடித்து ---
மலைபோல் மேலே அறுத்து நிலத்தில் விழ அடித்துத் தள்ளி,
மெய் வேத லட்சுமியை சிறைவிட்டு அருள் ---
சத்திய வடிவாய வேதலட்சுமியாம் சீதையைச் சிறையினின்றும் விடுவித்தருளிய,
வீர அச்சுதனுக்கு --- வீரம்பொருந்திய அச்சுத
ராமபிரானுக்கு,
நல் அற்புத மருகோனே --- நல்ல அற்புதமுடைய
திருமருகரே!
நீலி --- நீல நிறமுடையவர்,
நிட்களி --- மாசு இல்லாதவர்,
நிர்க்குணி --- குணங்களைக் கடந்தவர்,
நித்தில வாரி முத்து நகை கொடி ---
முத்துக்களுள் கடல் முத்தைப் போன்ற பற்களையுடைய கொடி போன்றவர்,
சித்திர நீல ரத்தினம் இட்ட அறக்கிளி --- அழகிய
சித்திர நீலரத்தினம் பதித்த அணிகலன்களைக் கொண்ட அறம் வளர்த்த நாயகியாகிய
பார்வதிதேவியாரது,
புதல்வோனே -- திருக்குமாரரே!
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் ---
திருநீற்றினைப் பூசி நினைக்கின்ற அடியார்களின் அறிவில்,
நேசம் மெத்த அளித்து அருள் --- அன்பை நிரம்ப
அளிக்கும்,
சற்குரு --- உண்மை குருநாதரே!
நீலம் உற்ற --- தினந்தோறும் நீலோற்பல
மலர் மலர்கின்ற,
திருத்தணி வெற்புறை --- திருத்தணி மலையின்
மீது எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
ஓலை இட்ட குழைச்சிகள் --- பொன் ஓலையான
குழைகளை அணிந்தவர்கள்,
சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் --- அழகிய
வடிவம் வாய்ந்த நிறத்தையுடையவர்கள்,
வில் கணையொடு இணைத்த விழிச்சிகள் --- வில்அம்பு
போன்ற கண்களையுடையவர்கள்,
சர்க்கரை அமுதோடு ஊறி ஒத்த மொழிச்சிகள் ---
சர்க்கரை அமுதம் இவற்றினுடன் ஊறிய சுவையுடன் கூடிய பேச்சினை உடையவர்கள்,
புள் குரலொடு வைத்து மிழற்று மிடற்றிகள் ---
பட்சியின் குரல் ஒலிக்கும் கண்டத்தினர்கள்,
ஓசை பெற்ற துடிகொள் இடைச்சிகள் --- ஒலி
செய்யும் உடுக்கை போன்ற இடையை உடையவர்கள்,
மணம் வீசு மாலை இட்ட கழுத்திகள் --- வாசனை
வீசுகின்ற பூமாலை அணிந்த கழுத்தை உடையவர்கள்,
முத்து அணிவார் அழுத்து தனத்திகள் ---
முத்துமணி பதித்த அணிகலன்களும் கச்சும் அழுத்துகின்ற தனங்களை உடையவர்கள்,
குத்திர மால் விளைத்து --- வஞ்சனையையும்
மயக்கத்தையும் செய்து,
மனத்தை அழித்திடு மடமாதர் --- ஆடவரது மனத்தை
அழிக்கின்றவர்கள் ஆகிய பொது மகளிர்கள்,
மார்பை அசைத்து --- தமது மார்பினை அசைத்து,
மருட்டி --- மயக்கத்தை உண்டுபண்ணி,
இருட்டு அறை வா என --- இருட்டறைக்குள் வா
என்று அழைத்துப்போய்,
பொருள் பற்றி முயக்கிடும் --- பொருள்களைக்
கவர்ந்து தழுவுகின்ற,
மாதருக்கு வருத்தம் இருப்பது தணியாதோ ---
மாதர் பொருட்டு அடியேன் வேதனைப்படுவது தவிராதோ?
பொழிப்புரை
சமுத்திரம் வற்றும்படி கணையை
விடுத்தவரும், அலை மிகுந்த அக்கடலை
அணை கட்டினவரும், ஒப்பற்ற பாணத்தை ஏவி, அகங்காரம் உள்ள இராவணனுடைய முடியுடன்
கூடிய பத்துத் தலைகளையும் மலைபோல் அறுத்து, நிலத்தில் தள்ளியவரும், சத்தி வடிவினராகிய வேதலட்சுமியாம்
சீதாதேவியைச் சிறையிலிருந்து மீட்டவருமாகிய வீரராகவனுடைய உயர்ந்த அற்புதம்
பொருந்திய திருமகரே!
நீலநிறமுடையவரும், மாசில்லாதவரும், குணங்கள் இல்லாதவரும், முத்துக்கள் கடல் முத்துப் போன்ற
பற்களையுடைய கொடி போன்றவரும் அழகிய நீலரத்தினம் அணிந்த தரும நாயகியாரும் ஆகிய
உமாதேவியாரது திருப்புதல்வரே!
திருநீறு தரித்து தியானம் புரிகின்ற
அடியார்களது அறிவினில் மிகுந்த அன்பை வழங்கி அருள்புரிகின்ற சற்குரு நாதரே!
நீலோற்பல மலர் மலர்கின்ற திருத்தணி மலையில்
எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
பொன்னோலை காதில் அணிந்தவரும், அழகிய வடிவை உடைய நிறத்தவரும், விற்கணை போன்ற கண்களை உடையவரும், சர்க்கரை அமுதுடன் ஊறிய சொற்களை உடையவரும், பறவையின் குரல் ஒலிக்கும் கண்டத்தினரும், ஒலி செய்யும் உடுக்கை போன்ற இடையை உடையவரும், நறுமணம் வீசும் மலர் மாலை அணிந்த
கழுத்தினரும், முத்து மாலையும் இரவிக்கையும்
அழுத்திய தனபாரங்களை உடையவரும்,
வஞ்சனையும்
மயக்கத்தையும் செய்து மனத்தை அழிக்கின்றவருமாகிய பொது மாதர், தமது மார்பினை அசைத்து மயக்கி இருட்டு
அறைக்குள் அழைத்துச் சென்று பொருளைப் பறித்துத் தழுவுவர். அம்மாதர் பொருட்டு
அடியேன் வேதனைப்படுவது தவிராதோ?
விரிவுரை
ஓலை
இட்ட குழைச்சிகள் ---
நாகரிகம்
முதிராத பழங்காலத்தில் பெண்கள் அசோகங்கொழுந்து மாங்கொழுந்து முதலிய கொழுந்துகளைக்
கிள்ளி காதில் செருகிக் கொள்வார்கள். குழை யென்றால் தழையென்று பொருள். பின்னர்
தங்கத்தாலும், மணிகளாலும் காதணிகள்
செய்யத் தலைப்பட்டார்கள். அந்தக் காதணிக்குக் குழையென்றே பேர் அமைந்தது.
அன்றியும்
பனையோலையைச் சுற்றி காதில் அணிந்தார்கள் பின்னர் தங்கத்தால் ஓலைபோல் செய்து
அணிந்தார்கள் அதனால் காதணியை ஓலையென்றே கூறினார்கள்.
சித்திர
ரூபமொத்த நிறத்திகள் ---
சித்திரம்-அழகு.
அழகிய வடிவமும் நல்ல நிறமும் உடையவர்கள்.
வில்
கணையோடு இணைத்த விழிச்சிகள் ---
வில்லிலிருந்து
புறப்படும் கணைபோன்ற கூர்மையான கண்கள் படைத்தவர்கள்.
சர்க்கரை
அமுதோடே ஊறி ஒத்த மொழிச்சிகள் ---
அம்மகளிர்
சர்க்கரையிலும் அமிர்தத்திலும் ஊற வைத்து எடுத்தது போன்ற மிக இனிய மொழிகள்
பேசுவார்கள். அம்மொழியின் இனிமையால் அவர்களை நாடிச் செல்லும் இளைஞர்கள் அபடியே
மயங்கித் தியங்கி விடுவார்கள்.
புட்குரல்
ஓசைபெற்ற துடிக்கொள் இடைச்சிகள் ---
காம
மயக்கத்தால் கழுத்தில் பறவையின் ஒலி எழும்.
“ஓர்மிடற்றில் எழும் புள்
குகூகுகூ வென” --- (ஓலமிட்ட)
திருப்புகழ்.
மாதர்
இடை துடி (உடுக்கை) போல் சிறுத்து இருக்கும்.
மாதருக்கு
வருத்தமிருப்பது தணியாதோ ---
மாதருக்கு
என்ற சொல்லிற் ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை உருபு ;பொருட்டு’ என்ற பொருளில் வந்துள்ளது.
மாதர் பொருட்டு வருத்தம் அடைவது அடியேனை விட்டு விலகாதோ? விலகுதல் வேண்டும் என்று சுவாமிகள்
முருகனிடம் முறையிடுகின்றனர்.
வேலை
வற்றிட நற்கணை தொட்டு ---
இராமர்
கடலில் அணைகட்டும் பொருட்டு வருணனை வழி வேண்டினார். அவன் அவர் குறிப்பின் வழி
வராதொழிந்ததால் கடலின்மீது பிரமாத்திரம் விட்டார். அதனால் கடல் கொந்தளித்துக்
கொதித்துக் கலங்கியது. வருணன் வந்து வணங்கி மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான்.
அலைமீது
அடைத்து
---
கடல்
மீது அணை கட்டி யருளினார். மற்றவர்கள் செய்ய முடியாத செயற்கருஞ் செயலைச் செய்தார்.
பிறவிப் பெருங்கடலை அடைத்தார் என்று உணர்க.
வீறு
அரக்கன் முடித்தலை பத்தையும் மலைபோலே ---
இராவணன்
இராஜச குணம். இது தச இந்திரியங்களை யுடையது. மெய் வாய் கண் நாசி செவி வாக்கு பாணி
பாதம் பாயு உபத்தம் என்ற பத்து இந்திரியங்களையும் அவற்றையுடைய இராஜச குணத்தையும்
இராமர் அழித்தார்.
மெய்
வேதலட்சுமி
---
சீதா
பிராட்டியார் அளவற்ற கற்புடையவர். “சிறையிருந்தவளின் ஏற்றஞ்சொல்லுவது இராமாயணம்”
என்று வைணவப் பூர்வாச்சாரியர்கள் கூறுவார்கள். “அளவில் கற்புடை ஜானகி” என்கின்றான்
கும்பகர்ணன்.
“ஜனகன் அன்பு உற்றுப் பெற்ற மடப்பெண்
தனி பெருங் கற்புச் சக்ர நடத்துந் தகை” --- (கனகதம்பத்தை) திருப்புகழ்.
நீலி ---
சிவபெருமான்
நெருப்பான மேனியர். அந்த நெருப்புச் சுடர்விட்டு எரியும்போது அதன் நுனியில் நீல
நிறம் விளங்கும். அந்த நீலமே உமாதேவியார்.
நிட்களி ---
நிட்களம்-அழுக்கில்லாதவர், அல்லது உருவம் அற்றவர் என்று பொருள்.
நிர்க்குணி ---
இறைவி
அருட் குணங்களை யுடையவர். சத்துவ,
ராஜச, தாமசம் என்ற முக்குணங்கள் இல்லாதவர்.
நித்தில
வாரி முத்து நகைக் கொடி ---
நித்திலம்-முத்து, முத்து அநேக இடங்களில் பி்றக்கின்றது.
அவற்றுள் கடலில் பிறக்கும் முத்து உயர்ந்தது. அம் முத்தைப் போன்ற நகையுடைய, கொடி போன்றவர்.
அறக்கிளி:-
அம்பிகை
காஞ்சீபுரத்தில் முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்தாள்.
“இச்சைப்படி தன் பேரறம்
எண்ணான்கும் வளர்க்கும்
பச்சைக்கொடி” --- வில்லிபாரதம்.
எக்குலம்
குடிலோடு உலகு யாவையும்
இல் பதிந்து, இரு நாழி நெலால் அறம்
எப்பொதும் பகிர்வாள் குமரா என ...... உருகேனோ? --- பச்சைஒண்
(திருப்புகழ்)
மாறுஇ
லாத இப் பூசனை என்றும்
மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண்டு அருளி
ஈறு
இலாத இப் பதியினுள் எல்லா
அறமும் யான்செய அருள்செய வேண்டும்
வேறு
செய்வினை திருவடிப் பிழைத்தல்
ஒழிய இங்குஉளார் வேண்டின செயினும்
பேறு
மாதவப் பயன்கொடுத்து அருளப்
பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு
ஒழிப்பாள். --- பெரியபுராணம்.
அன்னையாரும், ஐயனை நோக்கி, `மாறு ஏதும் இல்லாத இப்பூசனை என்றும்
இங்கு விளங்கிட எம்பிரான் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டருளி, முடிவிலாத இப்பதியினுள் இருந்து எல்லா
அறங்களையும் யான் செய்திட, திருவருள் செய்திடல்
வேண்டும்; இத்திருப்பதியிலுள்ளார்
திருவடிக்குப் பிழைசெயும் ஒன்றினை ஒழிய, வேறு
பிற தீங்குகள் செய்யினும், அச் செயல்கட்குரிய
பேறாக மாபெருந் தவத்தின் பயனைக் கொடுத்தருளவும் வேண்டும்` எனப் பிறப்பறுக்கும் பெருஞ்
செல்வியராகிய பெருமாட்டியார் கேட்டருளினார்.
விடையின்
மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே
இடைய
றாஅறம் வளர்க்கும் வித்து ஆக
இகபரத்து இரு நாழிநெல் அளித்துக்
கடையர்
ஆகியும் உயர்ந்தவர் ஆயும்
காஞ்சி வாழ்பவர் தாம்செய்தீ வினையும்
தடைப
டாதுமெய்ந் நெறி அடைவதற்கு ஆம்
தவங்கள் ஆகவும் உவந்துஅருள் செய்தார். ----
பெரியபுராணம்.
ஆனேற்றின் மீது எழுந்தருளி வரும் மேலாய
பெருமானை மலைமகளார் இவ்வாறு வேண்டுதலும், அப்பெருமாட்டியார்
விரும்பியவாறு பூசனையை ஏற்றிடப் பொருந்தி அவ்விடத்தில் வீற்றிருந்தருளி, அம்மையாருக்கு இடையறாது அறத்தை
வளர்த்திடும் வித்தாக, இம்மை மறுமை ஆகிய
இரண்டிற்கும் ஏதுவாக இருநாழி நெல்லைக் கொடுத்தருளி, கடையவராயினும் உயர்ந்தவராயினும்
காஞ்சியில் வாழ்பவர்கள் தாங்கள் செய்கின்ற தீயவினைகளும், தடையின்றி மெய்ந்நெறியை அடைதற்காய
தவங்களாகப் பயன் கொள்ளுமாறும் உவந்து அருள் புரிந்தார்.
எண்
அரும்பெரு வரங்கள்முன் பெற்றுஅங்கு
எம்பிராட்டி தம் பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின்
மேல் வழி பாடுசெய்து அருளி
மனை அறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும்
மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணியத்
திருக் காமக்கோட் டத்துப்
பொலிய முப்பதோடு இரண்டுஅறம் புரக்கும். --- பெரியபுராணம்.
இவ்வாறு எண்ணற்ற பெரு வரங்களைப் பெற்று, அங்கு எம்பெருமாட்டியார் தம் பெருமான்
மகிழ்ந்து அருளிட, இம்மண்ணின் மேல் அவரை
அங்கு வழிபாடு செய்தருளி, இல்லறம் இனிது பெருக, கருணையினால் உலகில் தோற்றும் உயிர்கள்
யாவும் பெருக உற்ற காதலினால், நீடி
நிலைத்திருக்கும் தம் வாழ்க்கையைப் புண்ணியம் நிறைந்த திருக்காமக்கோட்டம் என்னும்
கோயிலில் மேற்கொண்டருளிப் பொலிந்திட, அங்கிருந்து
தம் முப்பத்திரண்டு அறங்களையும் நிகழ்த்தி ஆண்டருளுவாளாயினள்.
காஞ்சி காமாட்சி
அம்மையார் இறைவர் வழங்கிய இருநாழி நெல் கொண்டு வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள்:
1. துன்புற்றோர்க்கு
உணவும் உறையுளும் வழங்கும் சாலை.
2. கற்பவர்க்குணவு
3. அறுசமயத்தார்க்கு
உண்டி
4. பசுவிற்கு வாயுறை
5. சிறைச் சோறு
6. ஐயம்
7. தின் பண்டம் நல்கல்
8. பற்றுக்கோடற்றவருக்குச்
சோறு
9. மகப்பேறு அற்றோர்
சிவபுண்ணியப் பேற்றிற்கு ஆளாதல்
10. மகவு வளர்த்தல்
11. மகவுக்குப் பால்
வார்த்தல்
12. பற்றுக்கோடற்றார்க்கு
இறுதிக் கடன் செய்தல்
13. பற்றுக்கோடற்றார்க்கு
ஆடை வழங்குதல்
14. சுண்ணம் வழங்குதல்
15. நோய்க்கு மருந்து.
16. வண்ணார்க்கு உதவல்
17. நாவிதர் உதவி
18. கண்ணாடி வழங்கல்
19. காதோலை நல்கல்
20. கண்மருந்து கொடுத்தல்
21. தலைக்கெண்ணெய்
வழங்கல்
22. பெண் போகம்
நுகர்தற்காம் சூழலை வழங்கல்
23. பிறர்துயர் காத்தல்
24. தண்ணீர்ப்பந்தல்
அமைத்தல்
25. மடம் அமைத்தல்
26. குளம் தோண்டல்
27. சோலைகளை உண்டாக்கல்
28. ஆவுராய்ஞ்சு தறி
அமைத்தல்
29. விலங்கிற் குணவு
தருதல்
30. ஏறு விடுத்தல்.
31. விலை கொடுத்து உயிர்
காத்தல்
32.
மகட் கொடை.
நீறு
அது இட்டு நினைப்பவர் ---
இறைவனைத்
திருநீறு பூசி நிட்டையில் இருந்து பெரியோர்கள் தியானிப்பார்கள். பூசும் நீறுபோல
உள்ளம் மாசில்லாத புனிதர்கள்.
மாசி
லாத மணிதிகழ் மேனிமேல்
பூசு
நீறுபோல உள்ளும் புனிதர்கள்
தேசி
னால்எத் திசையும் விளக்கினார்
பேச
ஒண்ணாப் பெருமை பிறங்கினார். --- பெரியபுராணம்.
கருத்துரை
திருத்தணி
முருகேசா! திருமால் மருகா! பார்வதி குமாரா! பொது மகளிரது மயக்கம் அற அருள் புரிக.
No comments:
Post a Comment