திருத்தணிகை - 0264. ஏது புத்தி ஐயா




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஏது புத்தி (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
நீயே எனது தந்தை.
மகனாகிய என்னை ஆதரித்து அருள் புரிவாய்.


தான தத்தன தான தத்தன
     தான தத்தன தான தத்தன
          தான தத்தன தான தத்தன ...... தந்ததான


ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோவெ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதெ ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோவெ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


ஏது புத்தி,ஐயா, எனக்கு? னி
     யாரை நத்திடுவேன்? அவத்தினி-
          லே இறத்தல் கொலோ? எனக்கு நி ...... தந்தை தாய்

என்றே இருக்கவும், நானும் இப்படியே
     தவித்திடவோ? சகத்தவர்
          ஏசலில் படவோ? நகைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்து, டை ஆதரித்து, னை
     தாளில் வைக்க நியே மறுத்திடில்,
          பார் நகைக்கும் ஐயா, தகப்பன் முன் ......மைந்தன்ஓடிப்

பால் மொழிக் குரல் ஓலம் இட்டிடில்
     யார் எடுப்பது எனா வெறுத்து ,
          பார் விடுப்பர்களோ? எனக்கு இது ...... சிந்தியாதோ?

ஓதம் உற்று எழு பால் கொதித்தது
     போல, எட்டிகை நீச முட்டரை
          ஓட வெட்டிய பாநு சத்தி கை ...... எங்கள்கோவே!

ஓத மொய்ச்சடை ஆட உற்று, மர்
     மான் மழுக்கரம் ஆட, பொற்கழல்
          ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்தவாழ்வே!

மா தினைப்புன மீது இருக்கும், மை
     வாள்விழிக் குறமாதினை, திரு
          மார்பு அணைத்த மயூர! அற்புத! ...... கந்தவேளே!

மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழ-
     லார் வியப்பு உற, நீடு மெய்த்தவர்
          வாழ் திருத்தணி மாமலைப் பதி ...... தம்பிரானே.


பதவுரை


       ஓதம் உற்று எழு --- தண்ணீர் கலந்து எழுகின்ற,

     பால் கொதித்தது போல --- பாலைக் காய்ச்சியவுடன் அது சீறி விரைந்து கொதித்தது போல,

     எண் திகை --- எட்டுத் திசைகளிலிருந்து போர் செய்ய வந்த,

     நீச முட்டரை --- இழிந்த அசுரர்களை,

     ஓட --- இறந்து இயமபுரத்திற்குப் போக,

     வெட்டிய --- கொன்ற,

     பானு சத்தி கை --- சூரியப்ரகாசம் பொருந்திய வேலாயுதத்தைக் கரத்தில் தாங்கிய,

     எங்கள் கோவே --- எங்களுடைய தலைவரே!

       ஓதம் மொய் -- கங்கை பொருந்தி வாழ்கின்ற,

     சடை ஆட --- சடாபாரம் அசைந்து ஆடவும்,

     உற்று அமர் --- பொருந்தி இருக்கின்ற,

     மான் மழு கரம் ஆட --- மான் கரமும் மழுக்கரமும் அசைந்து ஆடவும்,

     பொன் கழல் ஓசை பெற்றிடவே -- பொன்னாலகிய வீரக்கழல் இனிது ஒலிக்கவும்,

     நடித்தவர் --- ஆனந்தத் தாண்டவம் புரிபவராகிய சிவபெருமான்,
    
     தந்த வாழ்வே --- பெரு வாழ்வே!

       மா தினை புன மீது இருக்கும் --- பெருமை தங்கிய தினைப் புனத்தின்கண் உறைந்த,

     மை வாள் விழி --- மையைத் தீட்டிய வாள் போன்ற கண்களையுடைய,

     குற மாதினை --- வள்ளியம்மையாரை,

     திருமார்பு அணைத்த --- திருமார்பில் தழுவுகின்ற,

     மயூர --- மயில்வாகனத்தை உடையவரே!

      அற்புத --- அற்புதமான செயல்களைச் செய்பவரே!

      கந்த --- கந்தக் கடவுளே!

      வேளே --- எல்லோராலும் விரும்பப்படுகின்றவரே!

       பூ முடி குழலார் வியப்புற --- மலர்சூடுகின்ற பெண்கள் தங்கள் அழகினால் மோகமூட்டியும் அதனால் மயங்காததைக் கண்டு வியப்புற,

     நீடு --- தவத்தினால் நீடித்து,

     மாரன் வெற்றிகொள் --- மன்மதனை வெற்றிகொண்ட

     மெய் தவர் வாழ் --- உண்மைத் தவசீலர்கள் வாழ்கின்ற,

     திருத்தணி மா மலைப்பதி --- பெருமை பொருந்திய திருத்தணி மலையில் வாழ்கின்ற,

     தம்பிரானே --- தலைவரே!

      ஐயா --- ஐயனே!

     எனக்கு ஏது புத்தி --- அடியேனுக்கு என்ன புத்தி கூறுகின்றீர்?

     (தாங்கள் என்னையாட் கொள்ள வில்லையானால்)

     இனி யாரை நத்திடுவேன் --- இனி யாரைப் பற்றுக் கோடாகக் கொள்வேன்,

     அவத்தினிலே இறத்தல் கொலோ --- பிறவிப் பயனைப் பெறாமல் வீணே இறந்துவிடுவது தகுதியோ?

     நீ எனக்கு தந்தை தாய் என்றே இருக்கவும் --- நீரே அடியேனுக்குத் தந்தையும் தாயும் என்று இருக்கவும்,

     நானும் இப்படியே தவித்திடவோ --- அடியேனும் இப்படியே தவிக்கலாமோ?

     சகத்தவர் ஏசலில் படவோ --- பூவுலகத்தவர் கூறும் பழிச் சொல்லுக்கு உள்ளாகலாமா?

     நகைத்தவர் கண்கள் காண --- என்னைக் கண்டு முன்னே எள்ளிச் சிரித்தவர்களுடைய கண்கள் காணுமாறு,

     பாதம் வைத்து --- தேவரீருடைய திருவடியை அடியேன் சென்னிமீது வைத்தருளி,

     இடை ஆதரித்து --- நடுவில் அடியேனைக் காப்பாற்றி,

     என்னை தாளில் வைக்க --- அடியேனை உமது திருவடியில் வைப்பதற்கு,

     நீயே மறுத்திடில் --- தேவரீரே மறுத்து விட்டால்,

     பார் நகைக்கும் --- உலகம் சிரிக்கும்,

     ஐயா -- ஐயனே,

     தகப்பன் முன் --- பிதாவுக்கு முன்னே,

     மைந்தன் ஓடி --- மகன் ஓடி,

     பால் மொழி குரல் ஓலம் இட்டிடில் --- பால் மணம் மாறாத இனிய குரல் கொண்டு “ஓ” என்று ஓலமிட்டால்,

     யார் எடுப்பது எனா --- ”இக் குழந்தையை யார் எடுப்பது” என்று,

     வெறுத்து அழ --- வெறுப்புற்று அழுமாறு,

     பார் விடுப்பார்களோ --- உலகத்திலே உள்ளவர் விட்டு விடுவார்களோ? (விடமாட்டார்கள்).

     எனக்கு இது சிந்தியாதோ --- அடியேன் விஷயத்தில் இந்த நியாயத்தைத் தேவரீருடைய திருவுள்ளம் நினைத்தருளாதோ?


பொழிப்புரை


         தண்ணீரோடு கூடிய பாலை வற்றக் காய்ச்சும்போது அப்பால் எப்படிக் கொதித்து எழுமோ அப்படி எட்டுத் திசைகளிலுமிருந்து சீறி வந்த இராக்கதர்களை உயிர் எமபுரம் ஓட, வெட்டிக்கொன்ற சூரியப் பிரகாசமுடைய வேற்படையைக் கரத்தில் ஏந்தியவரே!

         எங்கள் தலைவரே!

         கங்கை வாழ்கின்ற சடாபாரம் ஆடவும், பொருந்தியுள்ள மான் மழுக்கரங்கள் ஆடவும், பொன்னாலாகிய வீரக்கழல் இனிது ஒலிக்கவும் அநவரத ஆனந்த தாண்டவம் புரியும் சிவபெருமான் பெற்றருளிய பெருவாழ்வே!

         பெருமை பொருந்திய தினைப் புனத்தில் வாழ்ந்த மையெழுதிய வாள்போன்ற திருக்கண்களையுடைய வள்ளிநாயகியாரைத் திருமார்பில் தழுவுகின்ற மயில் வாகனரே!

         அற்புதமான செயல்களையுடையவரே!

         கந்தப் பெருமானே!

         எல்லோராலும் விரும்பப்பட்டவரே!

         மலரை முடித்துள்ள மாதர்கள் தமது அழகால் மயங்காததைக் கண்டு வியப்புறுமாறு மன்மதனை வென்று நீண்ட தவஞ் செய்யும் மாதவர்கள் வாழும் திருத்தணிகை மலைமேல் எழுந்தருளியுள்ள தலைவரே!

         அடியேனுக்கு என்ன புத்தி கூறுகின்றீர்? ஐயனே! இனி அடியேன் உம்மை அன்றி யாரை அண்டி உய்வு பெறுவேன்? பயனின்றி வீணிலே இறந்து படுவது தக்கதோ? அடியேனுக்குத் தந்தையும் தாயும் நீரே என்று எண்ணியிருக்க, அடியேன் இப்படி அலைந்து கெடலாமோ? அடியேன் உலகத்தவரால் பழிக்கப்படலாமோ? என்னைக் கண்டு நகைத்தவர்கள் கண்கள் காணுமாறு உமது பாத தாமரையை என் சென்னிமீது வைத்தருளி என்னைக் காப்பாற்றி திருவடியில் சேர்க்க தேவரீரே மறுத்து விட்டால் உலகம் கண்டு (என்னையும் உன்னையும்) நகைக்காதோ? ஒரு குழந்தை பிதாவின் முன் சென்று பால் மணம் மாறாத இளங்குரல் கொண்டு அழுதால் யாராவது எடுக்கட்டும் என்று உலகில் அழவிட்டு விடுவார்களோ? ஒருபோதும் விடமாட்டார்கள். இந்த நியாயம் அடியேன் பொருட்டு தங்கள் திருவுள்ளத்தில் நினைப்புக்கு வராதோ?


விரிவுரை


இப்பாடல் அருமையிலும் அருமையானது.

ஒரு மகன் தன் அருமைத் தந்தையிடம் தன் குறைகளைக் கூறி முறையிட்டு வாதாடுகின்ற முறையில் அமைந்துள்ளது.

இப்பாடலை நினைக்குந் தோறும் நெஞ்சமாகிய கல் நெகிழ்ந்து உருகுகின்றது.

பாடக் கேட்டவர் ஊனும் உணர்வும் உள்ளமும் உயிரும் ஒருங்கே உருகுகின்றன.

அன்பர்கள் சற்று ஊன்றிப் படிப்பார்களாக.

இதன் அருமைப்பாடும், இதிலுள்ள அன்பு நெறியும் நன்கு விளங்கும்.

முருக பக்தர்கள் நாள்தோறும் இத் திருப்பாடலைச் சொல்லி முறையிடவேண்டும்.

ஏது புத்தி ---

பிள்ளைகள் பிதாவிடத்தில் போய் ‘எனக்கு என்ன புத்தி ஐயா’ என்று அன்பு கனியக் கேட்பது போல சுவாமிகள் தமது பரம பிதாவாகிய கந்தப் பெருமானை நோக்கி, “ஐயனே! அடியேனுக்கு என்ன புத்தி கூறுகின்றீர்?” என்று கேட்கின்றார். இந்த ஒரு சொற்றொடரே கல் மனதைக் கரையச் செய்கின்றது.

இனி யாரை நத்திடுவேன் ---

முருகா! இதுகாறும் உம்மையே கதியென்று எண்ணி, பிற தெய்வங்களைக் கனவிலும் நினையாதிருந்த அடியேனை நீர் கைநெகிழ விட்டுவிட்டால் இனி யாரை அண்டி உய்வு பெறுவேன்” என்கின்றார்.

அவத்தினிலே இறத்தல் கொலோ ---

பெறுதற்கரிய மனிதப் பிறப்பை எடுத்து ஒவ்வொருவரும் இப்பிறவியின் பயனைப் பெறுவதற்கு விரைந்து முயற்சிக்க வேண்டும். அப்பயனாவது இனிப்பிறவாமையேயாம். பிறவாப் பெற்றியைப் பெறாமல் வறிதே வாழ்நாளைக் கழித்து அவமே இறந்தொழிவது கூடாது என்று சுவாமிகள் இதனால் விளக்குகின்றனர்.

எனக்கு நீ தந்தை தாயென்றே இருக்கவும் ---

இறைவனைத் தாய் தந்தையாகப் பாவித்து அன்பு செய்வது சற்புத்ர மார்க்கம் எனப்படும்.

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
 சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்”   --- கந்தர்அநுபூதி.

சகத்தவர் ஏசலில் படவோ---

முருகா! உமது திருவடியே கதியென்று இருந்த அடியேனை நீர் ஆட்கொள்ளவில்லையானால், ‘அருணகிரி ஓயாமல் முருகா! முருகா! என்று பாடினான்; முடிவில் அருள் பெறாதொழிந்தான்’ என்று உலகத்தவர் ஏசுவார்களே? அந்தப் பழிச் சொல்லுக்கு அடியேன் இலக்காகலாமோ?” என்று சுவாமிகள் நம்மை உருக வைக்கின்றனர்.

நகைத்தவர் கண்கள் காண பாதம் வைத்து ---

அருணகிரிநாத சுவாமிகள் அடியார் குழாங்களோடும் விபூதி உருத்திராக்கச் சின்னங்களுடனும் அரகர முழக்கத்துடனும் திருப்புகழைப் பாடிக் கொண்டு தணிகை மலைக்குச் சென்றார். அங்கு சில கீழ்மக்கள் சுவாமிகளைக் கண்டு எள்ளி நகையாடினார்கள்.

அது கேட்ட சுவாமிகள் ‘சினத்தவர் முடிக்கும்’ என்ற திருப்புகழின் முதல் இரண்டடியைப் பாடி அவர்களை நீறாக்கி, பின் மனமிரங்கி, பின் இரண்டடியைப் பாடி உய்வித்தனர். அவர்கள் உடனே திருந்தி சுவாமிகள் திருவடியில் சரண்புகுந்து அடிமைகளாயினர். அவர்கள் முன்பு நகைத்தார்களாதலால் நகைத்த அவர்கள் கண்கள் காண திருவடியைச் சென்னி மீது வைத்து ஆதரிக்குமாறு வேண்டுகின்றனர்.

மறுத்திடில் பார் நகைக்கும் ஐயா ---

முருகா! உம்மை ஒழிய ஒருவரையும் நம்புகிலா நாயேனை நீர் ஆட்கொள்ள மறுத்துவிட்டால், ‘கருணைக் கடவுள் என்று வேதாகமங்கள் கந்தவேளைப் புகழ்வது அத்தனையும் பொய். அருணகிரி பலகாலும் தொழுது அழுது வழிபட்டும் ஆறுமுகன்
ஆட்கொள்ளவில்லை; ஆதலால் ஆறுமுகனை வழிபடுதல் வீண் செயல்’ என்று தேவரீரையும், “அருணகிரி இத்தனை காலம் வீணான முயற்சி செய்து முருகா முருகா என்று எய்த்து ஒழிந்தான்” என்று என்னையும் உன்னையும் உலகம் பழிக்கும் என்று சுவாமியை பேதிக்கின்றார்.

தகப்பன்முன் மைந்தனோடி.......சிந்தியாதோ ---

ஏறுமயில் வாகன, குகா,சரவணா,எனது
     ஈச,என மானம் உனது     என்றும் ஓதும்
ஏழைகள் வியாகுலம் இது ஏது, என வினாவில், உனை
    ஏவர் புகழ்வார் மறையும்   என்சொலாதோ      --- (ஆறுமுகம்) திருப்புகழ்.

ஒரு சிறு குழவி தந்தையின் முன்னர் ஓடி பவளவாய் துடிக்கக் கண்ணீர் வடிக்கக் கரமலராற் கண்மலரைப் பிசைந்து இளங்குரலால் அழுதால் எந்த வன்னெஞ்சுடைப் பிதா எடுத்து அணைத்து ஆதரிக்காமல் இருப்பான்? யாரும் உடனே எடுத்து கண்ணீரைத் துடைத்து இன்னுரை கூறி இனிது அணைத்து குழந்தையின் துன்பத்தை ஆற்றுவர்; அடியேனுக்குப் பரம தந்தையாக விளங்கும் உமது முன்னே வந்து என் குறைகளைக் கூறி இப்படி முறையிட்டு நிற்கும் என்னை ஆதரித்தற்கு மேற்கூறிய உலக வழக்கு உமது திருவுளத்தில் சற்று சிந்திக்கலாகாதோ? என்று கூறும் சமத்காரம் சிந்திக்குந்தோறும் சித்தத்தில் தித்திக்கின்றது.

பானு சக்தி ---

நூறு கோடி சூரியர்கள் ஒருங்கே உதித்தால் எத்துணை ஒளியை வீசுமோ அத்துணை ஒளியை வீசும் எந்தையார் திருக்கைவேல்.

உலாஉதயபானு சதகோடி உருவான
ஒளியாகும் அயில்வேல்அங் கையிலோனே”                --- (அவாமருவி) திருப்புகழ்.

சுடர்ப்பரிதி ஒளிப்ப,நிலவு ஒழுக்குமதி ஒளிப்ப,அலை
அடக்குதழல் ஒளிப்ப, ஒளிர், ஒளிப்பிரபை வீசும்        --- வேல்வகுப்பு.

மாரன் வெற்றிகொள் ---

திருத்தணிகை மலை உண்மைத் தவசிகள் பலர்க்கு உறைவிடமாக விளங்குகின்றது. அங்கு வாழும் மாதவர்கள் மதனனை வென்றவர்கள். ஊர்வசி திலோத்தமையைப் போன்ற மகளிர் தமது ஒப்பற்ற அழகைக் கண்டு அத்தவசிகள் சிறிதுங் கலங்காமையைக் கண்டு “அம்மா! இது போன்ற உறுதியுடையவர்களைக் கண்டதேயில்லை” என்று வியப்புறுகின்றனர். இத்தகைய மெய்த்தவத்தினர் பலர் வாழ, எம்பிரான் அம்மலையில் வாழ்கின்றனன்.
  
கருத்துரை

நிருதரை மாய்த்த நெடுவேல் அண்ணலே! நிருத்த மூர்த்தியின் திருக்குமாரரே! வள்ளி கணவரே! தணிகையாண்டவரே! தந்தையாகிய நீர் குழந்தையாகிய என்னை ஆதரித்து ஆட்கொள்வீர்.

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...