திருத்தணிகை - 0263. எனை அடைந்த குட்டம்.




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எனை அடைந்த (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
அடியேன் அவமே அழியாமல் காத்து,
மயிலின் மீது வந்து முத்தி தரவேணும்.


தனன தந்த தத்த தனன தந்த தத்த
     தனன தந்த தத்த ...... தனதான


எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
     மெரிவ ழங்கு வெப்பு ...... வலிபேசா

இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
     டிரும லென்று ரைக்கு ...... மிவையோடே

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
     மதிம யங்கி விட்டு ...... மடியாதே

மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்

நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
     நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா

நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
     நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே

தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
     செயல றிந்த ணைக்கு ...... மணிமார்பா

திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
     சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


எனை அடைந்த குட்டம், வினை மிகுந்த பித்தம்,
     எரி வழங்கு வெப்பு, ...... வலிபேசா,

இகலி நின்று அலைக்கும் முயலகன், குலைப்பொடு,
     இருமல் என்று உரைக்கும் ...... இவையோடே,

மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து, சுத்த
     மதி மயங்கி விட்டு ...... மடியாதே,

மருவி இன்று எனக்கு, மரகதம் சிறக்கும்
     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்.

நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க
     நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா!

நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர
     நெடிய குன்றில் நிற்கும் ...... முருகோனே!

தினை விளங்கல் உற்ற புன இளம் குறத்தி
     செயல் அறிந்து அணைக்கும் ...... மணிமார்பா!

திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த
     சிறை திறந்து விட்ட ...... பெருமாளே.

பதவுரை


      நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க --- தேவரீரை வணங்குகின்ற அடியார்கள் எல்லோரும் சுகத்துடன் வாழ,

     நெறியில் நின்ற --- அருள் தரும் வழியில் நிற்கும்,

     வெற்றி முனை வேலா --- வெற்றி பெறும் கூரிய வேலாயுதரே!

      நிலைபெறும் --- அழியாது நிலைத்து விளங்கும்,

     திருத்தணியில் --- திருத்தணியிலும்,

     விலங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் --- அழகுடன் விளங்கும் நெடிய குன்றிலும் எழுந்தருளியிருக்கும்,

     முருகோனே --- முருகக் கடவுளே!

      தினை விளங்கல் உற்ற --- தினைப்பயிர் செழித்திருக்கின்ற,

     புன இளம் குறத்தி --- மனைக் கொல்லையில் வசித்த இளம்பருவமுள்ள வள்ளி நாயகியை,

     செயல் அறிந்து அணைக்கும் --- அவருடைய அன்புச் செயலை அறிந்து தழுவிய,

     அணி மார்பா --- அழகிய திருமார்பை யுடையவரே!

     திசைமுகன் திகைக்க --- பிரமதேவர் திகைக்குமாறு,

      அசுரர் அன்று படைத்த --- அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்த,

     சிறை திறந்து விட்ட --- சிறையைத் திறந்துவிட்ட,
  
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      எனை அடைந்த குட்டம் --- அடியேனுக்கு வந்த குட்ட நோய்,

     வினை மிகுந்த பித்தம் --- வினைக்கு ஈடாக மிகுந்து வரும் பித்தம்,

     எரி வழங்கு வெப்பு --- கொதிப்பைத் தருகின்ற வெப்பு நோய்,

     வலி பேசா --- வலி சொல்ல முடியா வண்ணம்,

     இகலி நின்று அலைக்கும் முயலகன் --- மாறுபட்டு துயர் தந்து வருத்தும் முயலகன் என்ற இழுப்பு நோய்,

     குலைப்பொடு --- நடுக்க நோயுடன்,

   இருமல் என்று உரைக்கும் இவையோடே --- இருமல் என்று சொல்லப்படும் இந்நோய்களுடனே ஊடாடி,

     மனைகள் --- வீடுகள்,

     பெண்டிர் --- பெண்கள்,

     மக்கள் தமை நினைந்து --- மக்கள் என்ற இவர்களை நினைந்து,

    சுத்த மதிமயங்கிவிட்டு மடியாதே --- நல்ல அறிவு மயக்கமுற்று அடியேன் இறந்து போகாவண்ணம்,

     மருவி இன்று எனக்கு --- நீர் இன்று தோன்றி அடியேனுக்கு,

     மரகதம் சிறக்கு மயிலில் வந்து --- மரகத ஒளிவீசும் பச்சை மயிலின்மீது எழுந்தருளி,

     முத்தி தரவேணும் --- முத்தி நலனைத் தந்தருள வேண்டும்.


பொழிப்புரை

         தேவரீரை வணங்குகின்ற அன்பர்கள் அனைவரும் சுகத்துடன் இருக்கும்படி அதற்கு உரிய வழியில் நிற்கின்ற வெற்றி பெறும் கூரிய வேலாயுதரே!

     அழியாத திருத்தணிகையிலும், அழகு விளங்குகின்ற நெடிய குன்றிலும் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே!

     தினைப்பயிர் செழிக்கின்ற புனத்தில் வாழ்ந்த இளங்குமரியான வள்ளியம்மையை அவருடைய அன்புச் செயலை அறிந்து, தழுவிய திருமார்பினரே!

     பிரம்மதேவர் திகைக்குமாறு, அசுரர்கள் அந்நாள் தேவர்களை அடைத்த சிறையைத் திறந்து விட்டருளிய பெருமிதம் உடையவரே!

         அடியேனுக்கு வந்த குட்டநோய், வினையினால் அதிகரித்து வந்த பித்தநோய், கொதிப்பைத் தருகின்ற சுரநோய், சொல்ல முடியாத வலியைத் தருகின்ற மாறுபட்டு வருத்தும் முயலகன் என்ற வலிப்பு நோய், நடுக நோய், இருமல் நோய் முதலிய நோய்களினால் ஊடாடி, வீடுகள், மனைவிகள், மக்கள் என்ற இவர்களை நினைத்து, நல்ல அறிவு நிலை மயங்கி வீணே அடியேன் இறந்துவிடாத வண்ணம் பச்சை மயிலின் மீது தேவரிர் எளியோன்முன் தோன்றி யருளி முத்தி நலத்தை தந்தருளுவீராக.

விரிவுரை

எனை அடைந்த குட்டம் ---

நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமையால் அப்பர் பெருமான் கொல்லாமை மறைந்துறையம் சமண சமயம் குறுகி அதன் காரணமாகக் கொடுஞ் சூலையை அடைந்ததுபோல், அருணகிரிநாதர் இளமையில் விலைமகளிர் மையலில் உழன்று அதன் பயனாய் தொழுநோய் உற்றனர். அதனை இப்பாடலில் கூறி முறையிடுகின்றார்.

வினைமிகுந்த பித்தம் ---

முன் செய்த வினையினால் அதிகரித்து வருகின்ற பித்த நோய், பித்தத்தால் வரும் வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு, மஞ்சட்காமாலை முதலிய பிணிகள்.

எரி வழங்கு வெப்பு ---

வெப்பு-சுரநோய்; இந்நோய் அனலைக் கக்குவது போன்ற வெப்பத்தை தந்து துன்புறுத்துவது.

இகலி நின்று அலைக்கு முயலகன் ---

ஒருவகையான இழுப்பு நோய்; முசல் வலிப்பு என்பார்கள். கொல்லி மழவன் புதல்விக்கு இந்நோய் வந்து வருத்தியது. அவன் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற சிவத்தலத்தில், எம்பெருமான் திருமுன் குழந்தையை வைத்து வேண்டிக் கொண்டான். அது சமயம் அங்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் திருவுள்ளம் இரங்கித் திருப்பதிகம் பாடியருளினார். முயலகன் என்ற நோய் நீங்கியது. அன்றியும் அத்தலத்திலுள்ள நடராசப் பெருமானுடைய திருவடியின் கீழேயுள்ள முயலகனும் மறைந்து விட்டது.

இகலி-மாறுபாடு; இகலி நின்றலைக்கு முயலகன்-மாறுபட்டு நின்று அல்லல்படுத்தும் முயலகன் வலிப்பு.

குலைப்பு ---

இது ஒரு வகையான நடுக்க நோய்.

இருமல் என்று உரைக்கும் இவையோடே ---

இருமல் முதலிய இத்தனை நோய்கள் வந்து சுற்றி நின்று வருத்தா நிற்ப.

மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து ---

வீடுகள், மனைவியர், மக்கள் இவர்களை நினைந்து நினைந்து அவர்கள் நலத்துக்காகவே வருந்துவர்.

சுத்த மதி மயங்கிவிட்டு மடியாதே ---

தூய்மையான அறிவு ஆசாபாசங்களால் மயக்கமுற்று அவமே அடியேன் மாளாவண்ணம் முத்தி தரவேணும்” என்று அடிகளார் வேண்டுகின்றார்.

முத்தி ---

முத்தி என்ற சொல்லுக்கு பந்தத்தினின்றும் விடுபடுவது என்பது பொருள். நத்தையிலிருந்து விடுபடுவது முத்து எனப் பேர் பெற்றது போல கட்டினின்றும் விடுபட்டவர் முத்தர்.

நினை வணங்கு பத்தர் அனைவருந் தழைக்க நெறியில் நின்ற வெற்றி 
முனை வேலா ---

முருகப் பெருமானே பரம் பொருள் என்று உறுதியாக எண்ணி வணங்குகின்ற அன்பர்கள் உய்வதற்கு உரிய நெறியில் நின்று அப்பரமபதி அருள் புரிவான்.

நிலைபெறும் திருத்தணியில் ---

எல்லாம் அழிய நேரினும் எம்பெருமான் விளங்கும் அழகிய திருத்தணிமலை அழியாது நிலைத்து நிற்கும்.

சிறை திறந்து விட்ட ---

பன்னெடுங் காலமாக அமரர்களையும் அமர மாதர்களையும் சூரபன்மன் சிறையில் அடைத்து வைத்திருந்தான். முருகவேள் கருணையினால் சூராதி அவுணரை அடக்கி, ஏங்கி ஏங்கி இளைத்து இருந்த இமையவரது சிறைவாசலைத் திறந்து விடுதலை தந்து உதவியருளினார்.

அரியரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே”
                                                                 --- (தெருவினில் நடவா) திருப்புகழ்.


கருத்துரை

திருத்தணிகேசா! அவமே அடியேன் அழியாவண்ணம் முத்தி தந்தருள்.

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...