அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
எனக்கென யாவும்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
அடியாருடன் கூடி உன்னை
வழிபட்டு உய்ய அருள்.
தனத்தன
தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
எனக்கென
யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் ...... தனிலோயா
எடுத்திடு
காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் ...... பவமாற
உனைப்பல
நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் ...... குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே
விளப்பென
மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் ...... புகல்வோனே
சினத்தொடு
சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் ...... முருகோனே
தினைப்புன
மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
எனக்கு
என யாவும் படைத்திட, நாளும்
இளைப்பொடு, காலம் ...... தனில் ஓயா
எடுத்திடு, காயம் தனைக் கொடு மாயும்
இலச்சை இலாது, என் ...... பவம் மாற,
உனைப்பல
நாளும் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தங்கு ...... உளி மேவி,
உணர்த்திய போதம் தனைப் பிரியாது, ஒண்
பொலச் சரண் நானும் ...... தொழுவேனோ?
வினைத்
திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
விழ, கொடு வேள் கொன் ...... றவன், நீயே
விளப்பு
என, மேல் என்று இடக்கு அயனாரும்
விருப்பு உற, வேதம் ...... புகல்வோனே!
சினத்தொடு
சூரன் தனைக் கொடு வேலின்
சிரத்தினை மாறும் ...... முருகோனே!
தினைப்புனம்
மேவும் குறக்கொடி யோடும்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
பதவுரை
வினை திறமோடு --- தொழிலில் திறமையுடன்,
அன்று எதிர்த்திடும் வீரன் விழ --- அந்நாளில்
அம்புகள் எய்த வீரனாகிய மன்மதன், வெந்து விழும்படி,
கொடுவேள் கொன்றவன் --- கொடிய மன்மதனை எரித்த
சிவபெருமான்,
நீயே விளப்பு என --- ”முருகா! நீ பிரணவப்
பொருளைக் கூறுவாய்” என்று கேட்க,
மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற ---
தான் மேலானவன் என்று முரண்பட்ட பிரமதேவனும் விரும்பி மகிழ,
வேதம் புகல்வோனே --- வேதப்பொருளை
உபதேசித்தவரே!
சினத்தொடு கொடுவேலின் --- கோபத்துடன்
உகரமான வேலைக்கொண்டு,
சூரன் தனை சிரத்தினை மாறும் --- சூரபன்மனுடைய
தலையினைத் தள்ளி ஒதுக்கிய,
முருகோனே --- முருகக் கடவுளே!
தினை புனமேவும் --- தினைப்புனத்தில்
வசித்த,
குற கொடியோடும் --- வள்ளியம்மையுடன்,
திருத்தணி மேவும் --- திருத்தணிகை மலை மீது
எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
எனக்கு என --- எனக்கு என்றே,
யாவும் படைத்திட --- எல்லாம் சேகரிக்க வேண்டி,
நாளும் இளைப்பொடு --- நாள் தோறும் இளைப்பு
உண்டாகும்படி உழைத்து,
காலந்தனில் ஓயா --- காலக்கணக்கில் ஓய்வு
இல்லாமல்,
எடுத்திடு காயம் தனை கொடு --- எடுத்துக்
கொள்கின்ற உடம்புகளைக் கொண்டு,
மாயும் --- பின்னர் இறந்து போம்,
இலச்சை இலாது --- வெட்கம் அழிய,
என் பாவம் மாற --- என் பிறப்பு அற,
உனை பலநாளும் --- தேவரீரைப் பலநாளும்,
திருப்புகழாலும் --- திருப்புகழ் ஓதி,
உரைத்திடுவார் தங்கு உளி மேவி --- புகழ்கின்ற
அடியார்கள் தங்குகின்ற இடத்துக்குச் சென்று,
உணைர்த்திய --- அந்த அடியார்கள் உணர்த்திய,
போதம் தனை பிரியாது --- ஞான வாசகங்களைக்
கடைப்பிடித்து அதினின்றும் விலகாமல்,
ஒண் பொல சரண் --- ஒளி வீசும் அழகிய திருவடியை,
நானும் தொழுவேனோ --- அடியேன் தொழும்
பாக்கியம் உண்டாகுமோ?
பொழிப்புரை
தொழிலில் திறமையுடன் அன்று எதிர்த்த
வீரனாகிய மன்மதன் வெந்து விழும்படி அக்கொடிய மதனனை எரித்த சிவபெருமான், “குழந்தாய், பிரணவப் பொருளை விளம்புவாய்” என்று கூற, தன்னைப் பெரியவனாகக் கருதி முரண்பட்ட
பிரமதேவனும் விரும்பி மகிழ, வேதப் பொருளை
உரைத்தவரே!
சினத்தோடு சூரனை வேல் கொண்டு தலையைத் துணித்த
முருகக் கடவுளே!
தினைப்புனத்தில் வாழும் குறமகளாகிய
வள்ளியம்மையுடன் திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!
எனக்கென்று எல்லாப் பொருள்களையும் தேடி
நாள்தோறும் இளைப்பு உண்டாகுமாறு நெடுங்காலமாக ஓய்வு இன்றி பிறப்பை எடுத்தும் உடனே
இறந்தும் இந்த வெட்கம் இல்லாத என் பிறப்பு அறுமாறு தேவரீரைப் பலநாளும் திருப்புகழ்
பாடிப் பரவுகின்ற அடியார்கள் உறைகின்ற இடம் போய் அங்கு அவர்கள் உணர்த்தும் ஞான
போதனைகளைக் கேட்டு, அந்நெறியினின்று
நழுவாது ஒளி வீசும் திருவடியை அடியேன் தொழும் பாக்கியம் உண்டாகுமோ?
விரிவுரை
எனக்கென
யாவும் படைத்திட ---
தனக்கென்று
பல பொருள்கள் இருக்க வேண்டும் என்று கருதி, அவைகளை அடையும் பொருட்டு சதா
பாடுபடுவது.
நாளும்
இளைப்பொடு
---
சதா
உழைத்து உழைத்து அதனால் உடம்பும் உள்ளமும் இளைத்து இடர்ப்படுவார்கள்.
காலந்தனில்
ஓயா எடுத்திடு காயம் தனைக்கொடு மாயும் இலைச்சை இலாது ---
எண்ணில்லாத
காலமாக ஆன்மாக்கள் இறப்பது பிறப்பதுமாகவே இருக்கின்றன. இவ்வாறு மாறிமாறிப் பிறந்து
இறந்து வருவது பெரிதும் வெட்கப்படக் கூடியது. ஒரு வீட்டுக்கு அடிக்கடி செல்ல
வெட்கப்படுவது போல் இந்தப் பூமியில் ஓயாது பிறப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?
உனைபல
நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங்குளி மேவி ---
முருகனை
சதா திருப்புகழ் பாடித் துதி செய்யும் அடியார்கள் இருக்கின்ற இடத்திற்குச் சென்று, அவர்களுடன் பழகினால் பிறவிப் பிணி
கெடும்; ஆதலால் அடியார் திருக்கூட்டமே
ஆவி ஈடேற்றத்துக்குச் சிறந்த, எளிய நெறியாகும்.
கருத்துரை
திருத்தணி
மேவுந் திருமுருகா! அடியாருடன் கூடி உனைத் தொழுது பிறவியற அருள் புரிவாய்.