திருப் புள்ளமங்கை




திருப் புள்ளமங்கை
(பசுபதி கோயில்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         தஞ்சையிலிருந்து பசுபதிகோயிலுக்குப் பேருந்து வசதியுண்டு. திருவையாறு - கும்பகோணம் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கின்றது.

     கும்பகோணம் - தஞ்சாவூர் இருப்புப் பாதையில் பசுபதிகோயில் புகைவண்டி நிலையம் உள்ளது.


இறைவர்              : பிரமபுரீசுவரர், ஆலந்துறைநாதர்,                                                                       பசுபதீசுவரர், பசுபதிநாதர்.

இறைவியார்           : அல்லியங்கோதை, சௌந்தரநாயகி.

தல மரம்               : ஆலமரம்.

தீர்த்தம்               : எதிரில் உள்ள திருக்குளம்.

 தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பாலுந்துறு திரளாயின. 

          ஊர்ப்பெயர் பண்டை நாளில் 'புள்ள மங்கை' என்றும், கோயில் பெயர் 'ஆலந்துறை' என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி 'பசுபதி கோயில்' என்று வழங்குகின்றது. 'புள்ளமங்கை' என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் இருக்கின்றன.

          குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறை தலம் ஆதலின் 'ஆலந்துறை' என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டுமென்பர்.

          அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி.

          பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.

          திருச்சக்கரப்பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இத்தலமும் ஒன்று.

          அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது.

          விமானத்தின் கீழ் சிவபுராணம், 108 நாட்டிய கரணங்கள், இராமாயண காட்சிகள் ஆகியன சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.

          இக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு நடுவில் நந்தி உள்ளார்.

          இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித்தர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் தனிச் சிறப்பு. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.)

          இக்கோயில் கல்வெட்டுக்களில் "ஆலந்துறை மகாதேவர் கோயில்" என்று குறிக்கப்படுகிறது.

          முதலாம் பராந்தகன் காலத்தில் (கி. பி. 907 - 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்றுள்ளன.

          (சம்பந்தர் இப்பாட்டில் 'பொந்தின்னிடைத் தேன்ஊறிய' என்று பாடியிருப்பதற்கேற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.)

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நன்கு உடைய உள்ளம் மங்கைமார் மேல் உறுத்தாதவர் புகழும் புள்ளமங்கை வாழ் பரம போகமே" என்று போற்றி உள்ளார்.

      
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 363
தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் இடைஅகன்று,
அலைபுனல் பணைகளின் அருகுபோய், அருமறைப்
புலன்உறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.

         பொழிப்புரை : அரிய மறையின் உட்பொருளான ஞானத்தைத் தம் அறிவில் நிரம்பப் பெற்ற பிள்ளையார், சிவபெருமானின் திருச்சக்கரப்பள்ளியினின்றும் நீங்கி, அலையும் நீர் பரந்த வயல்களின் அருகாகச் சென்று, `திருப்புள்ளமங்கை\' என்ற திருப்பதியில் விளங்கும் `திருவாலந்துறை' எனப் பெயர் பெறும் கோயிலை அடைந்தார்.

         திருப்புள்ளமங்கை ஊர்ப்பெயர். ஆலந்துறை கோயில் பெயர்.


பெ. பு. பாடல் எண் : 364
மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்னடித் தலம்உறப் புரிவொடும் தொழுதுஎழுந்து,
இன்னிசைத் தமிழ்புனைந்து, இறைவர் சேலூருடன்
பன்னு பாலைத்துறைப் பதி பணிந்து ஏகினார்.

         பொழிப்புரை : நிலைபெற்ற அக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் மான் கன்றை ஏந்திய கையையுடைய இறைவரின், பொன்னார் திருவடிகளை அன்புடன் தொழுது, எழுந்து, இனிய இசையையுடைய தமிழ்ப் பதிகத்தைப் பாடி, இறைவர் வீற்றிருக்கின்ற திருச்சேலூரை வணங்கிப் புகழ்ந்து, சொல்லப் பெறும் `திருப்பாலைத் துறை' என்ற பதியையும் வணங்கினார்.

         திருப்புள்ளமங்கையில் அருளியது, `பாலுந்துறு திரளாயின' (தி.1 ப.16) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

     திருச்சேலூரிலும், திருப்பாலைத்துறையிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.


1.   016   திருப்புள்ளமங்கை               பண் – நட்டபாடை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பால்உந்துஉறு திரள்ஆயின பரமன்,பிர மன்தான்
போலும்திறல் அவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்திறல் அறச்சாடிய கடவுள்இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார்தமை அடையாவினை தானே.

         பொழிப்புரை :பாலினின்று மிதந்து வரும் வெண்ணெய்த் திரள் போல்பவரும், காலனது வலிமை முழுவதையும் அழித்தவரும், வேதப்புலமையில் நான்முகன் போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் விளங்கும் ஆலந்துறைக் கோயிலில் உள்ள இறைவனை நினைந்து வழிபடுபவர்களை வினைகள் அடையா.


பாடல் எண் : 2
மலையான்மகள் கணவன்,மலி கடல்சூழ்தரு தண்மைப்
புலைஆயின களைவான்,இடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையான்மலி மறையோர்அவர் கருதித்தொழுது ஏத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே.

         பொழிப்புரை :இமவான் மகளாகிய பார்வதி தேவியின் கணவனும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த குளிர்ந்த இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறப்பைக் களைபவனும் ஆகிய சிவபெருமானது இடம், கலைகள் பலவற்றை அறிந்த அறிவால் நிறைந்த மறையவர்கள் மனத்தால் கருதிக் காயத்தால் தொழுது வாயால் ஏத்தி வழிபடுவதும், பொழில் சூழ்ந்ததும் அலைகளோடு கூடி நீர்பெருகி வரும் காவிரிக் கரையிலுள்ளதாகிய திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் விளங்கும் ஆலந்துறை என்னும் கோயில் இதுவேயாகும்.


பாடல் எண் : 3
கறைஆர்மிடறு உடையான்,கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறைஆர்தரு கங்கைப்புனல் உடையான்,புள மங்கைச்
சிறைஆர்தரு களிவண்டுஅறை பொழில்சூழ்திரு ஆலந்
துறையான்அவன் நறைஆர்கழல் தொழுமின்துதி செய்தே.

         பொழிப்புரை :விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது சுமையாக அமைந்த கங்கையாற்றை அணிந்தவனுமாய சிவபிரானுக்குரியது, சிறகுகளுடன் கூடிய மதுவுண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ளது ஆலந்துறை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.


பாடல் எண் : 4
தணிஆர்மதி அரவின்னொடு வைத்தான்,இடம் மொய்த்துஎம்
பணியாய் அவன், அடியார்தொழுது ஏத்தும்புள மங்கை
மணிஆர்தரு கனகம் அவை வயிரத்திர ளோடும்
அணிஆர்மணல் அணைகாவிரி ஆலந்துறை அதுவே.

         பொழிப்புரை :தண்ணிய பிறைமதியைப் பாம்போடு முடிமிசை வைத்துள்ள சிவபெருமானது இடம் , அடியவர்கள் எமது தொண்டுகளுக்குரியவன் எனத் தொழுது ஏத்துவதும் , மணிகளோடு கூடிய பொன்னை வயிரக்குவைகளோடும் , அழகிய மணலோடும் கொணர்ந்து சேர்க்கும் காவிரியின் தென்கரையிலுள்ளதுமான திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் அமைந்துள்ள ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.


பாடல் எண் : 5
மெய்த்தன்உறும் வினைதீர்வகை தொழுமின்,செழு மலரின்
கொத்தின்னொடு சந்துஆர்அகில் கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்இடை ஆந்தைபல பாடும்புள மங்கை
அத்தன்,நமை ஆள்வான்இடம் ஆலந்துறை அதுவே.

         பொழிப்புரை :உயிர் உடலை அடுத்தற்குக் காரணமான வினைகள் நீங்கும் வகையில் பெருமானை நீவிர் வணங்குவீர்களாக. செழுமையான மலர்க் கொத்துக்களை உடைய சந்தனம், அகில் முதலியவற்றைக் கொண்டுவரும் காவிரியாற்றின் கரைமேல் உள்ளதும் பொந்துகளில் ஆந்தைகள் பல தங்கிப் பாடுவதும் ஆகிய திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் அமைந்துள்ள ஆலந்துறைக் கோயிலை உறைவிடமாகக் கொண்ட தலைவனாகிய சிவபெருமான் நம்மை ஆள்வான்.


பாடல் எண் : 6
மன்ஆனவன் உலகிற்கு,ஒரு மழைஆனவன், பிழையில்
பொன்ஆனவன், முதல்ஆனவன், பொழில்சூழ்புள மங்கை
என்ஆனவன், இசைஆனவன், இளஞாயிறின் சோதி
அன்னான், அவன் உறையும்இடம் ஆலந்துறை அதுவே.

         பொழிப்புரை :உலகிற்குத் தான் ஒருவனே மன்னனாய் விளங்குபவனும், மழையாய்ப் பயிர்களை விளைவிப்பவனும், குற்றமற்ற பொன்னானவனும், உயிர்களுக்கு வாழ்முதலாக உள்ளவனும், எனக்குத் தலைவனாய் இசை வடிவாக விளங்குபவனும், இள ஞாயிற்றின் ஒளியைப் போன்ற ஒளியினனுமாகிய சிவபெருமான் உறையும் இடம், திருப்புள்ளமங்கையில் விளங்கும் ஆலந்துறைக் கோயில் அதுவாகும்.


பாடல் எண் : 7
முடிஆர்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி,
பொடிஆடிய திருமேனியர், பொழில்சூழ்புள மங்கைக்
கடிஆர்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழுது ஏத்தும்
அடியார்தமக்கு இனியான், இடம் ஆலந்துறை அதுவே.

         பொழிப்புரை :தலைமேல் விளங்கும் சடைமிசைமுளை போன்ற இளம்பிறையைச் சூடி வெள்ளிய திருநீறு அணிந்த திருமேனியனாய், மணம் கமழும் மலர்களையும் நீரையும் கொண்டு தன் திருவடிகளை வணங்கி ஏத்தும் அடியார்களுக்கு இனியனாய் விளங்கும் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் பொழில் சூழ்ந்த திருப்புள்ளமங்கை என்ற தலத்தில் உள்ள ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.


பாடல் எண் : 8
இலங்கைமனன் முடிதோள்இற, எழில்ஆர்திரு விரலால்
விலங்கல் இடை அடர்த்தான்,இடம் வேதம்பயின்று ஏத்திப்
புலன்கள்தமை வென்றார்,புகழ் அவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையான்,இடம் ஆலந்துறை அதுவே.

         பொழிப்புரை :இலங்கை மன்னனாகிய இராவணனின் தலைகளும் தோள்களும் நெரிய, எழுச்சி பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை அகப்படுத்தி அவனை அடர்த்த சிவபெருமானது இடம், வேதங்களை முறையாகக் கற்றறிந்து ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடைய அந்தணர் வாழ்வதும் மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாயிருப்பதும் ஆகிய திருப்புள்ளமங்கைத் தலத்தில் விளங்கும் ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.


பாடல் எண் : 9
செறிஆர்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்
பொறிஆர்தரு புரிநூல்வரை மார்பன்,பிள மங்கை
வெறிஆர்தரு கமலத்துஅயன் மாலும் தனை நாடி
அறியாவகை நின்றான்,இடம் ஆலந்துறை அதுவே.

         பொழிப்புரை :வெண்மையான திருநீறு மூன்று பட்டைகளாய்ச் செறிய உத்தமஇலக்கணம் ஆகிய மூன்று வரிபொருந்திய, முப்புரிநூல் அணிந்த மலை போன்ற திண்ணிய மார்பினை உடையவனும் மணம் கமழும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் தன்னைத் தேடி அறியாவகை ஓங்கி நின்றவனுமாகிய சிவபெருமானுக்கு உரியஇடம், திருப்புள்ளமங்கைத் தலத்தில் உள்ள ஆலந்துறைக் கோயில் அதுவாகும்.


பாடல் எண் : 10
நீதிஅறி யாதார்அமண் கையரொடு மண்டைப்
போதியவர் ஓதும் உரை கொள்ளார்,புள மங்கை
ஆதிஅவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்,
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.

         பொழிப்புரை :நீதி அறியாத அமணராகிய கீழ் மக்களும் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திப்போதிமரத்தடியில் உறையும் புத்தமதத்தினரும் கூறும் உரைகளை மெய்ம்மை எனக்கொள்ளாமல், திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் எல்லாப் பொருள்கட்கும் ஆதியானவனாகிய இறைவனை, ஆலந்துறைக் கோயிலில் சென்று தொழுதால் பல்வேறு பிரிவினராகிய தேவர்கள் தொழும் தன்மையைப் பெறலாம்.


பாடல் எண் : 11
பொந்தின்இடைத் தேன்ஊறிய பொழில்சூழ்புள மங்கை,
அந்தண்புனல் வருகாவிரி ஆலந்துறை யானை,
கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவம் ஆமே.

         பொழிப்புரை :மரப்பொந்துகளில் தேனீக்கள் சேகரித்த தேன் மிகுதியான அளவில் கிடைக்கும் பொழில்கள் சூழ்ந்த, அழகிய தண்மையான நீரைக்கொணர்ந்துதரும் காவிரித்தென்கரையில் விளங்கும் திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ள ஆலந்துறைக் கோயிலில் உறையும் இறைவனை, மணம் நிறைந்து கமழும் காழிப்பதியில் தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப்பரவசமாய் ஆடத் தவம் கைகூடும்.
திருச்சிற்றம்பலம்

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...