திருத் தென்குடித்திட்டை




திருத் தென்குடித்திட்டை
(திட்டை)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     கும்பகோணம் - திருக்கருக்காவூர் நகரப் பேருந்து இவ்வூர் வழியாகச் செல்கிறது. தஞ்சை - மயிலாடுதுறை இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம்.


இறைவர்         : வசிஷ்டேசுவரர், பசுபதீசுவரர், பசுபதிநாதர்,
                               தேரூர்நாதர், தேனுபுரீசுவரர்சுயம்பூதேசுவரர்,  அனந்தேசுவரர்,                                நாகேசுவரர், இரதபுரீசுவரர்.

இறைவியார்      : உலகநாயகி, மங்களாம்பிகை, மங்களேசுவரி,
                                             சுகந்தகுந்தளாம்பிகை.

தல மரம்          : சண்பகம். (தற்போதில்லை.)

தீர்த்தம்           : சூல தீர்த்தம்.  (இதற்கு சக்கர தீர்த்தம்  என்றும் பெயர்)

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - முன்னைநான் மறையவை.


          காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் - திட்டில் - அமைந்துள்ள ஊராதலின் திட்டை எனப் பெயர் பெற்றது.

          உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதென்றும், இறைவன் சுயம்பாக வெளிப்பட்டு அருள்புரிந்தான் என்பதும் வரலாறு. இதனால் 'குடித்திட்டை' எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர்.

          சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி - தேரூர் என்றும்; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும்; ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் விளங்குகிறது.

          இக்கோயில் நல்ல கட்டமைந்த கற்கோயில்; எல்லாச் சந்நிதிகளும் மழமழப்பாக்கப்பட்ட கருங்கற்களால் ஆனவை.

          மூலவர் சுயம்புத் திருமேனி. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமி மீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், 1922-ல் இவ்விமானத்தைப் பழுதுபார்த்துக் கட்டும்போது அக்கல் அப்படியே வைத்துக் கட்டப்பட்டு உள்ளதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

          இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தக்ஷிண குடித்வீப மஹாத்மியம்" என்ற பெயரில் உள்ளது. திரு. வி. பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள "சுயம்பூதேஸ்வரர் புராணத்தை" - இத்தலபுராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

          (இத்திருக்கோயிலை 1926-ல் கற்கோயிலாகக் கட்டிய பலவான் குடிகிராமம் ரா. கு. ராம, இராமசாமி செட்டியாரின் உருவம் அவர் மனைவியுடன், கைகுவித்து வணங்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்து.)

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கோது இயலும் வன்குடித் திட்டை மருவார் மருவு திருத் தென்குடித்திட்டைச் சிவபதமே" என்று போற்றி உள்ளார்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

         திருஞானசம்பந்தப் பெருமான் திருக்கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கி, `இறைவனின் வண்ணம் அழல் வண்ணமே' என்னும் கருத்து முடிபு உடைய திருப்பதிகத்தை அருளிச் செய்து,  அங்கிருந்து பிறபதிகளையும் தொழுது போய் அவளிவணல்லூர் அடையும் வழியில் திருத்தென்குடித்திட்டையை வணங்கிப் பாடியதாகக் கருதப்படும் திருப்பதிகம்.

பெரிய புராணப் பாடல் எண் : 373
பதிக இன்னிசை பாடிப்போய், பிறபதி பலவும்
நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே, வணங்கி,
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்
அதிர்சிலம்பு அடியார் மகிழ் அவளிவ ணல்லூர்.

         பொழிப்புரை : இவ்வாறாய இன்னிசைப் பதிகங்களைப் பாடிச் செல்பவர் பிற பதிகளிலுள்ள கங்கையாற்றை அணிந்த சிவபெரு மானின் கோயில்களை அடைந்து வணங்கிப் பொன்னம்பலத்தில் கூத்தாடுகின்ற ஒலிக்கும் சிலம்பினையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற `திருஅவள்இவள்நல்லூரை\' இனிய முத்தமிழும் பொருந்திய திருவாக்கையுடைய பிள்ளையார் அணைந்தார்.

         `பிற பதிபலவும்' எனக் குறிக்கப்பட்டன தென்குடித்திட்டை முதலாயினவாகலாம். தென்குடித்திட்டையில் அருளிய பதிகம் `முன்னை நான்மறை' (தி.3 ப.35) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.


3. 035    தென்குடித்திட்டை                    பண் - கொல்லி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
முன்னைநான் மறைஅவை முறைமுறை குறையொடும்
தன்னதாள் தொழுதுஎழ நின்றவன் தன்இடம்,
மன்னுமா காவிரி வந்துஅடி வருட,நல்
செந்நெல்ஆர் வளவயல் தென்குடித் திட்டையே.

         பொழிப்புரை :நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற , உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும் .


பாடல் எண் : 2
மகரம்ஆ டும்கொடி மன்மத வேடனை
நிகரல்ஆ காநெருப்பு எழவிழித் தான்இடம்,
பகரவாள் நித்திலம் பன்மக ரத்தொடும்
சிகரமா ளிகைதொகும் தென்குடித் திட்டையே.

         பொழிப்புரை :மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , வாள் போல் மின்னும் முத்துக்களும் , பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று உயர்ந்து விளங்கும் மாளிகைகளையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .


பாடல் எண் : 3
கருவினால் அன்றியே கருஎலாம் ஆயவன்,
உருவினால் அன்றியே உருவுசெய் தான்இடம்,
பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

         பொழிப்புரை :இறைவன் கருவயப்பட்டுப் பிறவாமலே எல்லாப் பொருள்கட்கும் கருப்பொருளாக விளங்குபவன் . தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவமில்லாத இறைவன் பிற பொருள்களெலாம் உருவு கொள்ளும்படி தோற்றுவித்து அருள்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பருவகாலங்களிலும் , திருவிழாக்காலங்களிலும் பாடலும் , ஆடலும் செல்வத்தால் மிகச் சிறப்புற நடக்கும் புகழையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

 
பாடல் எண் : 4
உள்நிலாவு ஆவியாய் ஓங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தன்ஊர்,
எணணில்ஆர் எழில்மணிக் கனகமா ளிகைஇளம்
தெண்ணிலா விரிதரும் தென்குடித் திட்டையே.

         பொழிப்புரை :இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர் . அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல் , தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .


பாடல் எண் : 5
வருந்திவா னோர்கள்வந்து அடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுது அவர்க்கு அருள்செய்தான் அமரும்ஊர்,
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

         பொழிப்புரை :திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சின் வெப்பத்தால் துன்புற்ற தேவர்கள் தன்னைத் தஞ்சமென வந்தடைய அவர்களுக்கு இரங்கி நஞ்சைத் தான் அருந்தி அமுதத்தை அவர்கட்கு அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் , செருந்தி , மாதவி , செண்பகம் இவை மிகுதியாக வளரும் நீண்ட சோலைகளை உடைய தென்குடித்திட்டையாகும் .


பாடல் எண் : 6
ஊறினார் ஓசையுள் ஒன்றினார், ஒன்றிமால்
கூறினார் அமர்தரும் குமரவேள் தாதைஊர்,
ஆறினார் பொய்அகத்து, ஐயுணர்வு எய்திமெய்
தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே.

         பொழிப்புரை :இறைவர் எப்பொருள்களிலும் நிறைந்தவர் . எல்லா ஓசைகளிலும் ஒன்றியவர். திருமாலை ஒரு கூறாகக் கொண்டவர் . குமரக்கடவுளின் தந்தை . அப்பெருமானார் வீற்றிருந்தருளும் நகரானது ஆறு பகைகளாகிய காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் இவற்றைக் களைந்து , நிலையற்ற பொருள்கள்மேல் செல்லும் அவாவினை அடக்கி , மனத்தைப் பொறி வழிச் செல்ல விடாது ஒருமுகப்படுத்தி , சிவனே மெய்ப்பொருள் எனத் தெளிந்தவர்கள் வழிபடும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .


பாடல் எண் : 7
கான்அலைக் கும்அவன் கண்இடந்து அப்பநீள்
வான்அலைக் கும்தவத் தேவுவைத் தான்இடம்,
தான்அலைத் தெள்ளம்ஊர் தாமரைத் தண்துறை
தேன்அலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

         பொழிப்புரை :காட்டிலுள்ள உயிர்களை வருத்தும் வேடர் குலத்தவராகிய கண்ணப்ப நாயனார் கண் இடந்து அப்பியபோது , தேவர்களும் பொறாமையால் வருந்தும்படி , தவத்தையுடைய கண்ணப்பரைத் தெய்வமாகச் செய்தான் சிவபெருமான் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தெளிந்த நீர்நிலைகளில் மலர்ந்துள்ள தாமரைகளில் தண்டிலிருந்து தேன்பெருகிப் பாயும் வயல்வளமுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .


பாடல் எண் : 8
மாலொடும் பொருதிறல் வாள்அரக் கன்நேர்ந்து
ஓல்இடும் படிவிரல் ஒன்றுவைத் தான்இடம்,
காலொடும் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித்திட்டையே.

         பொழிப்புரை :திருமாலின் அவதாரமான இராமனோடும் போர் புரியும் வல்லமைபெற்ற அரக்கனான இராவணன் கயிலைமலையின் கீழ்ச் சிக்குண்டு ஓலமிட்டு அலறும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , கால்வாய் வழியாகச் செல்லும் நீரில் பொன்னிற மூக்குடைய கயல் , வரால் , சேல் போன்ற மீன்கள் வந்து பாயும் வயல்களையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .


பாடல் எண் : 9
நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணஒண் ணான் இடம்,
ஆரணம் கொண்டுபூ சுரர்கள்வந் துஅடிதொழச்
சீர்அணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

         பொழிப்புரை :திருமாலும் , பிரமனும் தேடியும் அடிமுடி காணவொண்ணாதவாறு விளங்கிய , உலகிற்கு நிமித்த காரணமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இப்பூவுலக தேவர்கள் என்று சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன் திருவடிகளை வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய புகழுடன் சிவ பெருமான் விளங்கும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .


பாடல் எண் : 10
குண்டிகைக் கைஉடைக் குண்டரும் புத்தரும்
பண்டுஉரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்,
வண்டுஇரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டல்ஆர்
தெண்திரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

         பொழிப்புரை :கமண்டலம் ஏந்திய கையுடைய சமணர்களும் , புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி நில்லாதீர் . வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த மேகங்கள் தவழ , தெளிந்த அலைகளையுடைய குளிர்ச்சியான ஆறுபாயும் திருத்தென்குடித்திட்டையைச் சார்ந்து இறைவனை வழிபடுங்கள் .


பாடல் எண் : 11
தேனல்ஆர் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானல்ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள்
ஞானம்ஆர் ஞானசம் பந்தன செந்தமிழ்
பால்நல்ஆர் மொழிவலார்க்கு இல்லையாம் பாவமே.

         பொழிப்புரை :தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி , கடற்கரையின்கண் அமைந்துள்ள நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த , சிவஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
                                             திருச்சிற்றம்பலம்

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...