திரு வேதிகுடி




திரு வேதிகுடி

        சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         திருக்கண்டியூர் என்ற பாடல் பெற்ற திருத்தலத்தில் இருந்து வீரசிங்கன்பேட்டை வழியாக தென்கிழக்கே 4 கி.மீ. தொலைவில் திருவேதிக்குடி உள்ளது.

     திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற திருத்தலமும் அருகில் இருக்கிறது.

     திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.


இறைவர்                  : வேதபுரீசுவரர், வாழைமடுநாதர்.

இறைவியார்               : மங்கையர்க்கரசி.

தல மரம்                    : வில்வம்

தீர்த்தம்                    : வேததீர்த்தம்

தேவாரப் பாடல்கள்         : 1. சம்பந்தர் -நீறுவரி ஆடரவொடு
                                            2. அப்பர் -  கையது காலெரி நாகம்.


     பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை மகாவிஷ்ணு மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை நோக்கி இத்தலத்தில் தவமிருந்தன. சிவனும் வேதங்களை புனிதப்படுத்தினார். வேதங்களின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் சிவபெருமான் வேதபுரீசுவரராக எழுந்தருளினார். ஊருக்கும் திருவேதக்குடி என்ற பெயர் ஏற்பட்டு பின்பு வேதிக்குடி என மருவியது. வேதங்களை மீட்டுக் கொடுத்த சிவபெருமானை இத்தலத்தில் பிரம்மாவும் பூஜித்துள்ளார்.

         சப்தத் தானத் தலம்: திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் நான்காவதாக போற்றப்படுகிறது.

----------------------------------------------------------------------------------------------------------

சப்தத் தானங்கள் எனக் கொண்டாடப் படுபவை

திருவையாறு சப்தஸ்தானம்   
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்

கும்பகோணம் சப்தஸ்தானம்  
திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி

சக்கரப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்)  

திருச்சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை

மயிலாடுதுறை சப்தஸ்தானம்
        
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில், கூறைநாடு, சித்தர்காடு, மூவலூர், சோழம்பேட்டை,  துலாக்கட்டம், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்
        
கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர்(தஞ்சாவூர்), கடகடப்பை, மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்), பூமாலை(தஞ்சாவூர்)

நாகப்பட்டினம் சப்தஸ்தானம்
        
பொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்), பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர்

திருநல்லூர் சப்தஸ்தானம்
        
திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர் (கும்பகோணம்), மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை

திருநீலக்குடி சப்தஸ்தானம்
        
திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
        
கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை,  ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை)

----------------------------------------------------------------------------------------------------------

     கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காணப்படுகிறது. ஆலயத்திற்கு வெளியே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. இராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும். அங்கு நடராஜர் சபை இருக்கிறது. உள் பிராகாரம் வலம் வரும்போது செவிசாய்ந்த விநாயகர், 108 சிவலிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம். அம்பாள் மங்கையர்க்கரசி சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதியை ஒட்டினாற்போல் வசந்த மண்டபம் இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீசுவரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் வேதபுரீசுவரர் காட்சி தருகிறார். கோவிலில் சப்தஸ்தானத் தல லிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. சூரியன் ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது.

         பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. இத்தலத்துப் பிள்ளையார் வேதம் கேட்கச் சாய்ந்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். இவருக்கு வேதப்பிள்ளையார் என்று பெயர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீசுவர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீசுவரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீசுவரரைக் கணலாம்.

         இத்தலத்தின் தீர்த்தம் வேத தீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் உள்ளது. தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் வாழைமடுநாதர் என்ற பெயரும் இத்தல இறைவனுக்கு உண்டு.

         திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய வண்ணப்பக் கலிவெண்பாவில், "ஆற்றல் இலாத் தீது இக்குடி என்று செப்பப்படார் மருவும் வேதிக்குடி இன்ப வெள்ளமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 9-30 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 355
தொல்லை நீள்திருச் சோற்றுத் துறைஉறை
செல்வர் கோயில் வலங்கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்கநஞ்சு உண்ட பிரான்அடி
எல்லைஇல்அன்பு கூர இறைஞ்சினார்.

         பொழிப்புரை : நீண்ட பழமையுடைய திருச்சோற்றுத்துறையுள் எழுந்தருளிய அருட்செல்வரான சிவபெருமானின் கோயிலை வலம் வந்து, வணங்கித் தேவர்களின் துன்பங்களைத் தீர்க்கும் பொருட்டு நஞ்சினை உண்ட பெருமானின் திருவடிகளை அளவற்ற அன்பு பெருக வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 356
இறைஞ்சி ஏத்தி எழுந்துநின்று இன்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவிஅங்கு
உறைந்து வந்துஅடி யார்உடன் எய்தினார்
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில்.

         பொழிப்புரை : வணங்கிப் போற்றி எழுந்து நின்று இனிய பண்ணிசை நிறைந்த செந்தமிழ்ப் பதிகம் பாடி, அப்பதியில் தங்கியவர், அடியவருடன் கூடிச் சிறந்த சீர்மை மிகுந்த திருவேதிகுடியில் வந்து சேர்ந்தார்.

         திருச்சோற்றுத்துறை இறைவர் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது.


பெ. பு. பாடல் எண் : 357
வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்துஎழுந்து
ஓதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.

         பொழிப்புரை : மறைகளை ஓதும் மறையவர் வாழும் திருவேதிகுடியில் முதல்வரின் கோயிலை அடைந்து, நன்மை பெருகும் திருவடி மலர்களை வணங்கி எழுந்து நின்று, தமிழால் மறைகளினும் சிறந்த இசையையுடைய திருப்பதிகத்தை அருளினார்.

         இவ்விடத்து அருளிய பதிகம், `நீறுவரி' (தி.3 ப.78) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 358
எழுது மாமறை ஆம்பதி கத்துஇசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்
தொழுது போந்துவந்து எய்தினார் சோலைசூழ்
பழுதுஇல் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.

         பொழிப்புரை : எழுகின்ற பெருமறையான இசையுடைய திருப்பதிகத்தை நிறைவாகப் பாடி, இறைவரை வணங்கி, மேற்சென்று அழகிய சோலைகளால் சூழப்பட்ட குற்றம் அற்ற சிறப்புடைய `திரு வெண்ணி' என்னும் திருப்பதியை அடைந்தார்.


3. 078    திருவேதிகுடி  திருவிராகம்      பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நீறுவரி ஆடுஅரவொடு ஆமைமன
         என்புநிரை பூண்பர்இடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல்
         ஆதியர் இருந்தஇடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை
         நாறஇணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவளம்
         ஆரும்வயல் வேதிகுடியே.

         பொழிப்புரை : திருநீற்றினையும் , வரிகளையுடைய ஆடும் பாம்பையும் , ஆமையோட்டையும் , அக்குமணியையும் , எலும்பு மாலையையும் சிவபெருமான் அணிந்துள்ளார் . அவர் இடப வாகனத்தில் ஏறுவார் . யாவரும் வணங்கத்தக்க முதல்வராகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பாளைகள் விரிந்த பாக்குமரங்கள் நிறைந்த சோலைகளிலும் , பழங்கள் கனிந்த வாழைத் தோட்டங்களிலும் நறுமணம் வீச , மடுக்களில் ஆணும், பெண்ணுமான வாளை மீன்கள் வேறு பிரியாமல் விளையாடும் , வயல்வளமிக்க திருவேதிகுடி ஆகும் .


பாடல் எண் : 2
சொல்பிரிவு இலாதமறை பாடிநடம்
         ஆடுவர்தொல் ஆனைஉரிவை
மல்புரி புயத்துஇனிது மேவுவர்எந்
         நாளும்வளர் வானவர்தொழத்
துற்புஅரிய நஞ்சுஅமுதம் ஆகமுன்
         அயின்றவர் இயன்றதொகுசீர்
வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர்
         என்பர்திரு வேதிகுடியே.

         பொழிப்புரை : சிவபெருமான் இசையும் , சொல்லின் மெய்ப்பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப்பாடி நடனம் ஆடுவார் . முதிர்ந்த யானையின் தோலை உரித்து மல்யுத்தம் புரிய வல்ல தோளில் இனிதாக அணிவார் . நாள்தோறும் தேவர்கள் வணங்க , உண்ணுதற்கரிய நஞ்சை அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர் . பலவாற்றானும் புகழ்மிக்க மலையரையன் மகளாகிய உமாதேவியாரை ஒருபாகமாகக் கொண்டருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி என்பதாம் .

பாடல் எண் : 3
போழும்மதி பூண்அரவு கொன்றைமலர்
         துன்றுசடை வென்றிபுகமேல்
வாழும்நதி தாழும்அரு ளாளர்இருள்
         ஆர்மிடறர் மாதர்இமையோர்
சூழும்இர வாளர்திரு மார்பில்விரி
         நூலர்வரி தோலர்உடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி
         என்பர்திரு வேதிகுடியே.

         பொழிப்புரை : சிவபெருமான் வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச்சந்திரனை அணிந்தவர் . பாம்பு , கொன்றைமலர் இவற்றைச் சடையிலணிந்து , அதில் தங்கிய கங்காநதியைப் பகீரதன் முயற்சிக்கு வெற்றி உண்டாக உலகிற் பாயச்செய்த அருளாளர் . விடம் உண்டதால் கருநிறம் வாய்ந்த கண்டத்தையுடையவர் . தேவலோகத்திலுள்ள மகளிரும் , ஆடவரும் தங்கள் குறைகளைக் கூறி அவை தீர அருளை வேண்டுபவர் . அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர் . புலித் தோலாடை அணிந்தவர் . அதன் மேல் யானைத்தோலைப் போர்த்தவர் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி ஆகும் .


பாடல் எண் : 4
காடர்,கரி காலர், கனல் கையர்,அனல்
         மெய்யர்உடல், செய்யர்,செவியில்
தோடர்,தெரி கீளர்,சரி கோவணவர்,
         ஆஅணவர் தொல்லைநகர்தான்,
பாடல்உடை யார்கள்அடி யார்கள்,மல
         ரோடுபுனல் கொண்டுபணிவார்,
வேடம்ஒளி யானபொடி பூசிஇசை
         மேவுதிரு வேதிகுடியே.

         பொழிப்புரை : சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பவர் . யானையின் தோலை உரித்து அதற்குக் காலனாக ஆனவர் . நெருப்பைக் கையில் ஏந்தியவர் . நெருப்புப் போன்ற சிவந்த மேனி உடையவர் . தூய உடம்பினர் . காதில் தோட்டை அணிந்தவர் . கிழிந்த ஆடை அணிந்தவர் . சரிந்த கோவணத்தை அணிந்தவர் . பசுவேறி வரும் கோலத்தை யுடையவர் . அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமையான நகரானது , தோத்திரம் பாடும் அடியார்கள் புனிதநீரால் அபிடேகம் செய்து , மலரால் அர்ச்சித்து வணங்கி , சிவவேடத்தை நினைப்பூட்டும் திருவெண்ணீற்றினைப் பூசிக் கீர்த்தியுடன் விளங்குகின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
சொக்கர்,துணை மிக்கஎயில் உக்குஅற
         முனிந்து,தொழு மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கம்உற வைத்தஅர
         னார்இனிது தங்குநகர்தான்,
கொக்குஅரவம் உற்றபொழில் வெற்றிநிழல்
         பற்றிவரி வண்டுஇசைகுலாம்
மிக்குஅமரர் மெச்சிஇனிது அச்சம்இடர்
         போகநல்கு வேதிகுடியே.

         பொழிப்புரை : சிவபெருமான் மிக்க அழகுடையவன் . கோபத்தால் சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது , அங்கிருந்த மூவர் தன்னை வணங்கிப் போற்ற அவர்கள் மகிழும்படியாகத் தன் பக்கத்திலே இருக்கும்படி அருள்புரிந்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது , மாமரச் சோலைகளில் மகளிர் விளையாடும் ஆரவாரமும் , மகளிரின் மேனி ஒளியானது மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும் ஒலியும் , தேவர்கள் போற்றும் ஒலியும் கொண்டு , தன்னையடைந்து வழிபடுபவர்களின் அச்சமும் , துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி
         அணிந்துகரு மான்உரிவைபோர்த்து,
ஐயம்இடும் என்றுமட மங்கையொடு
         அகம்திரியும் அண்ணல்இடமாம்,
வையம்விலை மாறிடினும் ஏறுபுகழ்
         மிக்குஇழிவு இலாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குஉரைசெ
         யாதஅவர் வேதிகுடியே.

         பொழிப்புரை : சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர் . கரிய யானையின் தோலைப் போர்த்தவர் . ` பிச்சையிடுங்கள் ` என்று இளமைவாய்ந்த உமாதேவி யாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர் , நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும் , மிகுந்த புகழும் , குறையாத பண்பாடும் உடையவர்களும் , இனிய புலவர்கட்குக் கொடையளிக்கும்போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 7
உன்னிஇரு போதும்அடி பேணும்அடி
         யார்தம்இடர் ஒல்கஅருளித்
துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல்
         இருந்ததுணை வன்தன்இடமாம்
கன்னியரொடு ஆடவர்கள் மாமணம்
         விரும்பிஅரு மங்கலமிக
மின்இயலும் நுண்இடைநன் மங்கையர்
         இயற்றுபதி வேதிகுடியே.

         பொழிப்புரை : காலை , மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான் . தன்னை யடைந்த சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன் . அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 8
உரக்கரநெ ருப்புஎழநெ ருக்கிவரை
         பற்றிய ஒருத்தன்முடிதோள்
அரக்கனை அடர்த்து,அவன் இசைக்குஇனிது
         நல்கிஅருல் அங்கணன்இடம்,
முருக்குஇதழ் மடக்கொடி மடந்தையரும்
         ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக்கமழ விண்இசை
         உலாவுதிரு வேதிகுடியே.

         பொழிப்புரை : கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற அரக்கனான இராவணனின் தலைகளையும் , தோள்களையும் , நெஞ்சிலும் , கரத்திலும் நெருப்புப்போல் வருத்துமாறு மலையின்கீழ் அடர்த்து , பின் அவன் சாமகானம் இசைக்க அவனுக்கு ஒளி பொருந்திய வெற்றிவாளையும் , நீண்ட வாழ்நாளையும் அருளிய பெருங்கருணையாளனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , கல்யாண முருங்கைப்பூப் போன்ற உதடுகளையுடைய , இளங்கொடி போன்ற பெண்களும் , ஆடவர்களும் , நறுமணம் கமழும் கலவையைக் கூந்தலில் தடவ , அதன் மணமானது விண்ணுலகிலும் பரவ விளங்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி
         அங்கையனும் நேடஎரியாய்த்
தேவும்இவர் அல்லர்இனி யாவர்என
         நின்றுதிகழ் கின்றவர்இடம்,
பாவலர்கள் ஓசைஇயல் கேள்வியது
         அறாதகொடை யாளர்பயில்வாம்
மேவுஅரிய செல்வநெடு மாடம்வளர்
         வீதிநிகழ் வேதிகுடியே.

         பொழிப்புரை : தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனுடன் , சக்கராயுதத்தை ஏந்திய அழகிய கையையுடைய திருமாலும் தேட , தீப்பிழம்பாகி , இப்பெருமானை அன்றி வேறு கடவுள் இல்லை என ஏத்தப்பெறும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , புலவர்கள் ஓசையினிமையுடைய இயற்றமிழ் நூற்பொருளை உரைக்க , கேள்விச் செல்வத்தினை நீங்காத கொடை வள்ளல்கள் செவிமடுக்குமாறு , செல்வம் மிகுந்த நெடிய மாடமாளிகைகளும் , வீதிகளும் திகழ்கின்ற திருவேதிகுடி என்பதாகும் .


பாடல் எண் : 10
வஞ்சஅமணர் தேரர்மதி கேடர்தம்
         மனத்துஅறிவி லாதவர்மொழி
தஞ்சம்என என்றும்உண ராதஅடி
         யார்கருது சைவன்இடமாம்
அஞ்சுபுலன் வென்றுஅறு வகைப்பொருள்
         தெரிந்து,எழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ்
         கின்றதிரு வேதிகுடியே.

         பொழிப்புரை : வஞ்சனையுடைய சமணர்களும் , புத்தர்களும் கெட்ட மதியுடையவர்கள் . இறைவனை உணரும் அறிவில்லாத அவர்கள் கூறும் மொழிகள் பற்றுக்கோடாகத் தக்கன என்று எந்நாளும் நினையாத அடியார்கள் தியானிக்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது ஐம்புலன்களை வென்று , அறுவகைச் சமய நூற் பொருள்களை ஆராய்ந்து , ஏழுவகைச் சுரங்களால் இசைப்பாடல்களைப் பாடி , கோபத்தை ஒழித்த அருளாளர்கள் மேவி விளங்குகின்ற திருவேதிகுடி ஆகும் .

  
பாடல் எண் : 11
கந்தமலி தண்பொழில்நல மாடமிடை
         காழிவளர் ஞானம்உணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு
         வேதிகுடி ஆதி கழலே,
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள்
         என்னநிகழ்வு எய்திஇமையோர்
அந்தஉலகு எய்திஅரசு ஆளும்அதுவே
         சரதம் ஆணைநமதே.

         பொழிப்புரை : நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளும் , அழகிய மாடங்களும் நெருங்கிய சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலை கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவ பெருமானின் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர் . மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர் . இது நமது ஆணை .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 212
எழும்பணியும் இளம்பிறையும் அணிந்தவரை, எம்மருங்கும்
தொழும்பணிமேற் கொண்டுஅருளி, திருச்சோற்றுத் துறைமுதலா,
தழும்புஉறுகேண் மையில்நண்ணித் தானங்கள் பலபாடி,
செழும்பழனத்து இறைகோயில் திருத்தொண்டு செய்துஇருந்தார்.

         பொழிப்புரை : எழுகின்ற படத்தையுடைய பாம்புகளையும் இளம் பிறையையும் அணிந்த சிவபெருமானை, எங்கும் எல்லாப் பதிகளிலும் வணங்கும் பணியைத் தலைமேற் கொண்டு, திருச்சோற்றுத்துறை முதலான பதிகளை அடைந்து, அவ்வவ்விடத்தும் உள்ள கோயில்கள் பலவற்றையும் பாடி வணங்கிச், செழுமையான திருப்பழனத்தை அடைந்து, அங்கு இறைவரின் திருக்கோயிலில் செயத்தக்க திருத்தொண்டுகளைச் செய்து வந்தார்.

         குறிப்புரை : திருச்சோற்றுத்துறையில் அருளிய பதிகங்கள்:

         1.`பொய் விரா` (தி.4 ப.41) - திருநேரிசை.
2.    `காலை எழுந்து` (தி.4 ப.85) - திருவிருத்தம்.
3.    `கொல்லை ஏற்றினர்` (தி.5 ப.33) – திருக்குறுந்தொகை.
4.    `மூத்தவனாய்` (தி.6 ப.44) - திருத்தாண்டகம் .

          இனி, `தானங்கள் பலபாடி` என்பதால் குறிக்கத்தகும் பதிகள் திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருச்சக்கரப்பள்ளி, திருவாலந்துறை ஆகலாம்.

1. திருக்கண்டியூர், `வானவர் தானவர்` (தி.4 ப.93) - திருவிருத்தம்.

2. திருவேதிகுடி `கையது காலெரி` (தி.4 ப.90) - திருவிருத்தம்.

ஏனைய இருபதிகளுக்குத் திருப்பதிகங்கள் இதுபொழுது கிடைத்தில.


4. 090   திருவேதிகுடி                      திருவிருத்தம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கையது கால்எரி நாகம், கனல்விடு சூலம்அது,
வெய்யது வேலைநஞ்சு உண்ட விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : கைகளில் விடத்தைக் கக்கும் பாம்பினையும் தீயைப் போல வெம்மையைச் செய்யும் சூலப்படையையும் ஏந்தியவனும் , கடலில் தோன்றிய கொடிய விடத்தை உண்டவனும் , விரிந்த சடையினை உடைய தலைவனுமாய் , வயல்களிலே நீலப்பூக்கள் மணம் கமழும் திருவேதிகுடியில் உகந்தருளியிருக்கும் ஐயனுமான , நுகர்ந்தும் நிறைவு தாராத ஆரா அமுதை அடைந்து அதில் முழுகுவோம் நாம் .


பாடல் எண் : 2
கைத்தலை மான்மறி ஏந்திய கையன், கனன்மழுவன்,
பொய்த்தலை ஏந்திநல் பூதி அணிந்து பலிதிரிவான்,
செய்த்தலை வாளைகள் பாய்ந்துஉக ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : கைகளில் மான்குட்டியையும் கொடிய மழுப் படையையும் ஏந்தி , மண்டையோட்டைத் தாங்கித் திருநீற்றை அணிந்து பொய்த் தலை கொண்டு பிச்சைக்காகத் திரிபவனும் , வயல்களிலே வாளை மீன்கள் தாவித் துள்ளும் திருவேதிகுடிப் பெருமானும் ஆகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் நாம் .


பாடல் எண் : 3
முன்பின் முதல்வன், முனிவன்,எம் மேலை வினைகழித்தான்,
அன்பின் நிலைஇல் அவுணர் புரம்பொடி யானசெய்யும்
செம்பொனை, நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி
அன்பனை, நம்மை உடையனை நாம்அடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : முன்னும் பின்னும் தானே உலக காரணனாய் , மனனசீலனாய் , நம் பழைய வினைகளைப் போக்குபவனாய் , அன்பு நிலையில் இல்லாத அசுரர்களின் மும்மதில்களையும் அழித்த செம்பொன் போல்பவனாய் , தாமரை மலர்மேல் உள்ள பிரமன் வழிபடுவதற்காக வந்து அடையும் திருவேதிகுடியில் விரும்பி உறைபவனாய் , நம்மை அடிமைகொள்ளும் பெருமானை நாம் அடைந்து அவன் அருளாரமுதக் கடலில் ஆடுவோம் .


பாடல் எண் : 4
பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்றுஅறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிட முன்உயர்த்தான்
கொத்துஅன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : பக்தர்களாய்த் தன்னை நாளும் மறவாத அடியார்களுக்குப் பொருந்திய பிறவிப் பிணியை அறுப்பவனாய் , பாசநீக்கம் உற்றவர்கள் இம்மண்ணுலகில் சிவப்பணி செய்து உயரச் செய்தவனாய் , கொத்தாகப் பூத்த கொன்றையின் மணம் பரவும் திருவேதி குடித் தலைவனாய் உள்ள ஆரா அமுதக் கடலை நாம் அடைந்து ஆடுவோம் .

  
பாடல் எண் : 5
ஆன்அணைந்து ஏறும் குறிகுணம் ஆர்அறி வார்,அவர்கை
மான்அணைந்து ஆடு மதியும் புனலும் சடைமுடியன்,
தேன்அணைந்து ஆடிய வண்டு பயில்திரு வேதிகுடி
ஆன்அணைந்து ஆடு மழுவனை நாம்அடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : தேனிலே பொருந்தி உண்டு பறக்கும் வண்டுகள் மிகுதியாகக் காணப்படும் திருவேதிகுடியில் பஞ்சகவ்வியத்தில் அபிடேகம் கொள்ளும் , மழு ஏந்திய பெருமான் , பிறையும் கங்கையும் சடைமுடியில் சூடி , கையில் மானை வைத்துக் கொண்டு கூத்து நிகழ்த்துபவன் விரும்பி காளையை ஏறி ஊரும் அப்பெருமானுடைய பெயர்களையோ , அடையாளங்களையோ , பண்புகளையோ ஒருவரும் முழுமையாக அறிதல் இயலாது . அவனை அடைந்து அருளாரமுதக் கடலில் ஆடுவோம் நாம் .


பாடல் எண் : 6
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம்ஒழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்,
திண்என் வினைகளைத் தீர்க்கும் பிரான்திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடும் தேவர்கள் பணிந்து தெளிந்து கொள்ளுமாறு , அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திரு வேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவ பெருமானை நாம் அடைந்து அருட் கடலில் ஆடுவோம் .


பாடல் எண் : 7
ஊர்ந்தவிடை உகந்து ஏறிய செல்வனை நாம்அறியோம்,
ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக மகிழ்ந்துஉடையான்,
சேர்ந்த புனல்சடைச் செல்வப்பிரான்திரு வேதிகுடிச்
சார்ந்த வயல்அணி தண்அமுதை அடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : உகந்து காளையை ஏறி ஊருஞ் செல்வனாகிய பெருமானை நாம் முழுமையாக அறியோம் . செவிக்கு இனியவான மடப்பம் பொருந்திய மொழிகளை உடைய பார்வதியை மகிழ்ந்து பாகமாக உடையவனாய் , சடையிற் கங்கையைச் சூடிய செல்வப் பிரானாய் வயல்கள் சூழ்ந்த திருவேதிகுடியைச் சார்ந்திருக்கும் பெருமானாகிய குளிர்ந்த அமுதை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம் .


பாடல் எண் : 8
எரியும் மழுவினன் எண்ணியும் மற்றுஒரு வன்தலையுள்
திரியும் பலியினன், தேயமும் நாடும்எல் லாம்உடையான்,
விரியும் பொழில்அணி சேறுதிகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க ளோடுஅடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : கொடிய மழுவை ஏந்தியவனாய் , பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை பெற விரும்பித் திரிபவனாய் , தேயங்களும் நாடுகளும் எல்லாம் உடையவனாய் , விரிந்த சோலைகளும் சேறு விளங்கும் வயல்களும் அழகு செய்யும் திருவேதிகுடியில் உறையும் பெருமானாகிய அரிய அமுதை அன்பர்களோடு அடைந்து அதில் திளைத்து ஆடுவோம்.

  
பாடல் எண் : 9
மைஅணி கண்டன், மறைவிரி நாவன், மதித்துஉகந்த
மெய்அணி நீற்றன், விழுமிய வெண்மழு வாட்படையான்,
செய்ய கமலம் மணங்கம ழும்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : நீலகண்டனாய் , வேதம் ஓதும் நாவினனாய் , பெருமையாகக் கருதி விரும்பிய திருநீற்றை மெய் முழுதும் அணிந்தவனாய் , மேம்பட்ட வெள்ளிய மழுப்படையினனாய் , சிறந்த தாமரைகள் மணம் வீசும் திருவேதிகுடித் தலைவனாய் உள்ள சிவ பெருமானாகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் .


பாடல் எண் : 10
வருத்தனை வாள்அரக் கன்முடி தோளொடு பத்துஇறுத்த
பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப் படைஉடைய
திருத்தனை, தேவர்பி ரான்திரு வேதி குடிஉடைய
அருத்தனை, ஆரா அமுதினை நாம்அடைந்து ஆடுதுமே.

         பொழிப்புரை : வாளை ஏந்திய அரக்கனுடைய தோள்களோடு தலைகள் பத்தினையும் நெரித்துத் துன்புறுத்தியவனாய் , பிறகு அவற்றைப் பொருத்தியவனாய் , தவறாத அருளுடையவனாய் , பூதப் படையை உடைய புனிதனாய் , தேவர்கள் தலைவனாய் , திருவேதி குடியில் உறையும் மெய்ப்பொருளான ஆரா அமுதினை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம் .

                                             திருச்சிற்றம்பலம்


12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...