திருச் சோற்றுத்துறை





திருச் சோற்றுத்துறை

         சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தூரத்திலும், திருக்கண்டியூரில் இருந்து 4 கி.மீ. தூரத்திலும் இத்திருத்தலம் உள்ளது.

     திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது.

     திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.


இறைவர்               : ஓதனவனேசர், தொலையாச்செல்வர்,
                                                      சோற்றுத்துறைநாதர்.

இறைவியார்           : அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.

தல மரம்               : பன்னீர் மரம்

தீர்த்தம்                : காவிரி.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - செப்ப நெஞ்சே.

                                                2. அப்பர் -1. பொய்விரா மேனி,
                                                                  2. காலை யெழுந்து,
                                                                  3. கொல்லை யேற்றினர்,
                                                                 4. மூத்தவனாய் உலகுக்கு

                                                3. சுந்தரர்  -  அழல்நீர் ஒழுகி.

     கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், ச மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர். முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன.

     வெளிப் பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்கு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும்.

         இரண்டாவது நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்துள்ள பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை உள்ளது. இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்பு தரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் அருட்காட்சி தருகிறார். தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருத்தும் இறைவன் கருவறை பகுதிக்குச் செல்ல வழி உள்ளது.

         இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. சோறு என்பது வீடுபேற்றையும் குறிக்கும்.

     இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் சப்தஸ்நான தலங்களில் ஒன்றாகும். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது.

     பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம். இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என்று அழைக்கப்படும். அவ்வகையில் இத்தலத்திலும் அம்பாள் அன்னபூரணியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளதால் திருச்சோற்றுத்துறை ஒரு திருமணத் தலமாக கருதப்படுகிறது.

         திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்தஸ்தானத் தலங்களில் இத்தலம் மூன்றாவது தலமாகும்.

     ஒரு முறை திருச்சோற்றுத்துறை இருந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற் சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், "இப்படி மக்களை பசியில் தவிக்க விடுவது நியாயமா" என்று முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் "அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு"' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும், நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். இவ்வாறு இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும் அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------
சப்த ஸ்தானங்களின் விவரம்----

திருவையாறு சப்தஸ்தானம்   
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்

கும்பகோணம் சப்தஸ்தானம்  
திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி

சக்கரப்பள்ளி சப்தஸ்தானம்
(சப்தமங்கைத் தலங்கள்)   
திருச்சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை

மயிலாடுதுறை சப்தஸ்தானம்
        
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில், கூறைநாடு, சித்தர்காடு, மூவலூர், சோழம்பேட்டை,  துலாக்கட்டம், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்
        
கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர்(தஞ்சாவூர்), கடகடப்பை, மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்), பூமாலை(தஞ்சாவூர்)

நாகப்பட்டினம் சப்தஸ்தானம்
        
பொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்), பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர்

திருநல்லூர் சப்தஸ்தானம்
        
திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர் (கும்பகோணம்), மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை
  
திருநீலக்குடி சப்தஸ்தானம்
        
திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
        
கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை,  ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை)

----------------------------------------------------------------------------------------------------------

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கொண்டு இயல்பின் வேற்றுத் துறையுள் விரவாதவர் புகழும் சோற்றுத்துறையுள் சுக வளமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 353
வினவி எடுத்த திருப்பதிகம்
         மேவு திருக்கடைக் காப்புத்தன்னில்
அனைய நினைவுஅரி யோன்செயலை,
         அடியாரைக் கேட்டு மகிழ்ந்ததன்மை
புனைவுறு பாடலில் போற்றிசெய்து
         போந்து, புகலிக் கவுணியனார்
துனைபுனல் பொன்னித் திரைவலங்கொள்
         சோற்றுத் துறைதொழச் சென்றுஅடைவார்.

         பொழிப்புரை : திருக்கண்டியூர் என்னும் திருத்தலத்தில் `வினவினேன்' எனத் தொடங்கிய திருப்பதிகத்தில் பொருந்திய திருக்கடைக்காப்பினில் நினைத்தற்கரிய சிவபெருமானின் அருட்செயலின் திறங்களை, அடியாரைக் கேட்டு மகிழ்ந்த இயல்பைக் கூறிய பாடலால் துதித்து, மேற்சென்று, சீகாழியில் தோன்றிய கவுணியர் குலத் தேன்றலார் விரைவாய்ச் செல்லும் நீரையுடைய காவிரியின் அலைகள் வலம் கொண்டு செல்கின்ற திருச்சோற்றுத்துறையினைச் சென்று அணைவாராகி,

         திருக்கண்டியூர் பதிகத் திருக்கடைக்காப்பில் `கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை அருத்தனைத்திறம் அடியார்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை' என வருவது கொண்டு ஆசிரியர் இவ்வாறு அருளிச் செய்வாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 354
"அப்பர்சோற் றுத்துறை சென்றுஅடை வோம்"என்று
ஒப்புஇல் வண்தமிழ் மாலை ஒருமையால்
செப்பி யேசென்று சேர்ந்தனர் சேர்வுஇலார்,
முப்புரம் செற்ற முன்னவர் கோயில்முன்.

         பொழிப்புரை : `அப்பரின் திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்' என்று முடியும் கருத்து உடையதாய், ஒப்பு இகந்த வளமை மிகுந்த தமிழ் மாலையை உள்ளத்தில் கொண்ட ஒருமைப்பாட்டுடன் பாடிச் சென்று, பகைவரின் முப்புரங்களையும் எரித்த முதல்வரின் கோயில் முன்பு பிள்ளையார் சென்றனர்.

         இப்பதியை அணுகவரும் நிலையில் அருளிய பதிகம் `செப்ப நெஞ்சே (தி.1 ப.28) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும். பாடல்தொறும் திருச்சோற்றுத்துறை சென்றடைவோம் எனும் குறிப்புடையதாய் அமைந்துள்ளது. முதற்பாடலில் `அப்பர் சோற்றுத்துறை சென்றடைவோம்' என வருவதை ஆசிரியர் எடுத்து மொழிந்துள்ளார்.


பெ. பு. பாடல் எண் : 355
தொல்லை நீள்திருச் சோற்றுத் துறைஉறை
செல்வர் கோயில் வலங்கொண்டு, தேவர்கள்
அல்லல் தீர்க்க நஞ்சு உண்ட பிரான்அடி
எல்லைஇல்அன்பு கூர, இறைஞ்சினார்.

         பொழிப்புரை : நீண்ட பழமையுடைய திருச்சோற்றுத்துறையுள் எழுந்தருளிய அருட்செல்வரான சிவபெருமானின் கோயிலை வலம் வந்து, வணங்கித் தேவர்களின் துன்பங்களைத் தீர்க்கும் பொருட்டு நஞ்சினை உண்ட பெருமானின் திருவடிகளை அளவற்ற அன்பு பெருக வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 356
இறைஞ்சி, ஏத்தி, எழுந்துநின்று, இன்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி, நிலாவிஅங்கு
உறைந்து வந்து, அடியார்உடன் எய்தினார்
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில்.

         பொழிப்புரை : வணங்கிப் போற்றி எழுந்து நின்று இனிய பண்ணிசை நிறைந்த செந்தமிழ்ப் பதிகம் பாடி, அப்பதியில் தங்கியவர், அடியவருடன் கூடிச் சிறந்த சீர்மை மிகுந்த திருவேதிகுடியில் வந்து சேர்ந்தார்.

         திருச்சோற்றுத் துறை சென்று அடைவோம் எனப் பாடியருளிய திருப்பதிகமே கிடைத்துள்ளது. திருச்சோற்றுத்துறை இறைவர் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது.


1.028  திருச்சோற்றுத்துறை           பண் – தக்கராகம்
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
செப்ப, நெஞ்சே, நெறிகொள் சிற்றின்பம்
துப்பண் என்னாது அருளே துணையாக
ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்று
அப்பர் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :நெஞ்சே, முறையான சிற்றின்பத்தைத் தன் முனைப்போடு `யான் துய்ப்பேன்` என்னாது,`அருளே துணையாக நுகர்வேன்` என்று கூற, இறைவர் அதனை ஏற்பர். அத்தகைய பெருமானார், ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய் விளங்கும், திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.


பாடல் எண் : 2
பாலும் நெய்யும் தயிரும் பயின்றுஆடித்
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்,
மாலும் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :பாலையும் நெய்யையும் தயிரையும் விரும்பியாடிப் புலித்தோலும் முப்புரிநூலும் பொருந்திய மலை போன்று விரிந்த மார்பினராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய, மயக்கும் சோலைகளால் சூழப்பெற்ற, இளமயில்கள் ஆரவாரிக்கும் திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.


பாடல் எண் : 3
செய்யர், செய்ய சடையர், விடைஊர்வர்,
கைகொள் வேலர், கழலர், கரிகாடர்,
தைய லாளொர் பாகம் ஆய எம்
ஐயர் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :சிவந்த திருமேனியரும், செம்மை நிறமுடைய சடைமுடியினரும், விடையூர்ந்து வருபவரும், கையில் பற்றிய சூலத்தினரும், வீரக்கழல் அணிந்தவரும், இடுகாட்டில் விளங்குபவரும், உமையம்மையைத் தன்மேனியில் ஒரு கூறாகக் கொண்டவருமான எம் தலைவராய சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.


பாடல் எண் : 4
பிணிகொள் ஆக்கை ஒழியப் பிறப்புளீர்,
துணிகொள் போர்ஆர் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :நோய்கட்கு இடமான இவ்வுடலுடன் பிறத்தல் ஒழியுமாறு இப்பிறப்பைப் பயன்படுத்த எண்ணும் அறிவுடையவர்களே, துணித்தலைச் செய்வதும், போர் செய்தற்கு உரியதுமான விளங்கும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவரும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமான, சிவபெருமான் மேவிய நீண்ட பொழில்கள் சூழ்ந்த அழகிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோமாக.


பாடல் எண் : 5
பிறையும் அரவும் புனலும் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :இளம் பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்து, நான்மறைகளை ஓதிக் கொண்டு, சுடுகாட்டைத் தமது இடமாகக் கொண்டு உறையும், வீடு பேறாகிய செல்வத்தை உடைய இறைவரின் காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.


பாடல் எண் : 6
துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்காடு அரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றுஆடும்
அடிகள் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :உடுக்கைகள் பலவற்றோடு முழவங்கள் ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை அரங்காகக் கொண்டு, பொருத்தமான தாளச்சதிகளோடு பாடல்கள் பாடி ஆடும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.

  
பாடல் எண் : 7
சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடி ஆடிப் பரவு வார்உள்ளத்து
ஆடி சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :காலன் அழியுமாறு அவனைக் காலால் உதைத்துத் தலைமாலைகளை அணிந்து, பொருத்தம் உடையவராய் வருபவரும், பாடி ஆடிப் பரவுவார் உள்ளங்களில் மகிழ்வோடு நடனம் புரிபவருமான சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.


பாடல் எண் : 8
பெண்ஓர் பாகம் உடையார், பிறைச்சென்னிக்
கண்ஓர் பாகம் கலந்த நுதலினார்,
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :ஒருபாகமாக உமையம்மையை உடையவரும், பிறையணிந்த சென்னியரும், தமது திருமேனியில் ஒருபாகமாக விளங்கும் நெற்றி விழியை உடையவரும், இராவணன் பின்விளையும் தீமையை எண்ணாது கயிலை மலையைப் பெயர்க்க, அவனது முனைப்பை அடக்கக் கால்விரலை ஊன்றிய தலைமைத் தன்மை உடையவருமாகிய சிவபிரானது திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.


பாடல் எண் : 9
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே
அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன்
விழவுஆர் மறுகில் விதியால் மிக்க,எம்
எழில்ஆர் சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :தம் செருக்கடங்கித் தம்மைத் தொழுத திருமால் பிரமன் ஆகிய இருவர்க்கும், அழலுருவாய் ஓங்கி நின்று அருள்களைச் செய்தவன், விரும்பி உறையும் விழாக்கள் நிகழும் வீதிகளில் வேதவிதியோடு வாழும் மக்களை உடைய சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.


பாடல் எண் : 10
கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஓத்தை உணராது எழுநெஞ்சே,
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென்று அடைவோமே.

         பொழிப்புரை :நெஞ்சே! குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண் குண்டர்கள் ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது, சிவாகம நெறி நின்று, நினைப்பவர் கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும் முதல்வனாகிய சிவபிரானது சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம்.


பாடல் எண் : 11
அந்தண் சோற்றுத் துறைஎம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்,
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.

         பொழிப்புரை :அடியவர்களாக உள்ளவர்களே! அழகு தண்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும்.
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 212
எழும்பணியும் இளம்பிறையும்
         அணிந்தவரை, எம்மருங்கும்
தொழும்பணி மேல்கொண்டுஅருளி,
         திருச்சோற்றுத் துறைமுதலாத்
தழும்புஉறுகேண் மையில்நண்ணி,
         தானங்கள் பலபாடி,
செழும்பழனத்து இறைகோயில்
         திருத்தொண்டு செய்துஇருந்தார்.

         பொழிப்புரை : எழுகின்ற படத்தையுடைய பாம்புகளையும் இளம் பிறையையும் அணிந்த சிவபெருமானை, எங்கும் எல்லாப் பதிகளிலும் வணங்கும் பணியைத் தலைமேற் கொண்டு, திருச்சோற்றுத்துறை முதலான பதிகளை அடைந்து, அவ்வவ்விடத்தும் உள்ள கோயில்கள் பலவற்றையும் பாடி வணங்கிச், செழுமையான திருப்பழனத்தை அடைந்து, அங்கு இறைவரின் திருக்கோயிலில் செயத்தக்க திருத்தொண்டுகளைச் செய்து வந்தார்.

         திருச்சோற்றுத்துறையில் அருளிய பதிகங்கள்:

         1.  `பொய் விரா` (தி.4 ப.41) - திருநேரிசை.
2.    `காலை எழுந்து` (தி.4 ப.85) - திருவிருத்தம்.
3.    `கொல்லை ஏற்றினர்` (தி.5 ப.33) – திருக்குறுந்தொகை.
4.    `மூத்தவனாய்` (தி.6 ப.44) - திருத்தாண்டகம் .

          இனி, `தானங்கள் பலபாடி` என்பதால் குறிக்கத்தகும் பதிகள் திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருச்சக்கரப்பள்ளி, திருவாலந்துறை ஆகலாம்.

1. திருக்கண்டியூர், `வானவர் தானவர்` (தி.4 ப.93) - திருவிருத்தம்.
2. திருவேதிகுடி `கையது காலெரி` (தி.4 ப.90) - திருவிருத்தம்.

ஏனைய இருபதிகளுக்குத் திருப்பதிகங்கள் கிடைத்தில.


4. 041    திருச்சோற்றுத்துறை                  திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொய்விரா மேனி தன்னைப் பொருள்எனக் காலம் போக்கி,
மெய்விரா மனத்தன் அல்லேன், வேதியா, வேத நாவா,
ஐவரால் அலைக்கப் பட்ட ஆக்கைகொண்டு அயர்த்துப் போனேன்
செய்வரால் உகளும் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.

         பொழிப்புரை :வயல்களிலே வரால் மீன்கள் துள்ளித் திரியும் திருச்சோற்றுத்துறைப் பெருமானே ! வேதங்களால் பரம் பொருளாக உணரப்பட்டவரே ! வேதங்களை ஓதும் நாவினரே ! பொய்ப்பொருள்களே கலந்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பை நிலையான பொருளாகக் கருதி இதனைப் பேணுவதிலேயே காலத்தை வீணாக்கி மெய்ப் பொருளிலே பொருந்தும் சார்பு அற்றேனாய் ஐம்பொறிகளால் வருத்தப்பட்ட இவ்வுடம்பைக் கொண்டு மயங்கிக் காலத்தைக் கழித்துவிட்டேன் .


பாடல் எண் : 2
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா
எட்ட ஆம் கைகள் வீசி எல்லிநின்று ஆடு வானை
அட்ட கா மலர்கள் கொண்டே, ஆன்அஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறைய னாரே.

         பொழிப்புரை : மலபந்தம் உடையோராய் உடற் கட்டினைப் பேணுவதில் நீங்கள் காலத்தைக் கழித்தல் கூடாது . தம் எண் கைகளையும் வீசியவராய் இரவில் ஆடுபவராய் உள்ளார் சோற்றுத் துறையரனார் . சோலைகளிலிருந்து கிட்டும் எட்டுப்பூக்களையும் நீங்கள் அர்ப்பணித்துப் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகிக்க அவ்வபிடேகத்தை ஏற்று சிட்டராய் உள்ள அப்பெருமான் உங்களுக்கு அருள்கள் செய்வார் .

  
பாடல் எண் : 3
கல்லினால் புரமூன்று எய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்,
பல்லில்வெண் தலைகை ஏந்திப் பல்இலம் திரியும் செல்வர்
சொல்லும்நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத் துறைய னாரே.

         பொழிப்புரை : மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் அழித்த பெருமானை அன்போடு தனித்திருந்து இரவும் பகலும் உள்ளத்தில் தியானியுங்கள் . பல்லில்லாத வெள்ளிய மண்டையோட்டை உண்கலமாக ஏந்திப் பல வீடுகளிலும் பிச்சைக்காகத் திரியும் செல்வராய் , வேதமாயும் வேதத்தின் விழுப்பொருளாயும் உள்ள அவர் உங்களால் தியானிக்கத்தக்க திருச்சோற்றுத்துறையனாரே .


பாடல் எண் : 4
கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண்ஓர் பாகம்
இறையராய் இனியர் ஆகி, தனியராய், பனிவெண் திங்கள்
பிறையராய், செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்து, என் உள்ளச் சோர்வுகண்டு அருளி னாரே.

         பொழிப்புரை : நீலகண்டராய் , நெற்றிக்கண்ணராய்ப் பார்வதிபாகத் தலைவராய் , இனியராய் , ஒப்பற்றவராய் இருப்பாராய் , குளிர்ந்த வெண் பிறையைச் சூடியவராய் , பெருஞ்செயல்களையே செய்பவராய் உள்ள , என்றும் அழிதல் இல்லாத திருச்சோற்றுத்துறை இறைவர் அடியேனுடைய உள்ளத்திலே புகுந்து அதனுடைய தளர்ச்சியைக் கண்டு , அது நீங்க அருள் செய்தவராவார் .


பாடல் எண் : 5
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்குஎனக் காலம் போனேன்,
எந்தையே ஏக மூர்த்தி என்று நின்று ஏத்த மாட்டேன்,
பந்தமாய் வீடும் ஆகிப் பரம்பரம் ஆகி நின்று,
சிந்தையுள் தேறல் போலும் திருச்சோற்றுத் துறைய னாரே.

         பொழிப்புரை : பல ஓட்டைகளை உடைய இவ்வுடலைப் பேணத் தக்க பொருளாகக் கருதி விரைவாகக் காலத்தை , ` பற்றினையும் வீட்டின்பத்தையும் தருபவராய் மேலாருள் மேலாராய் நின்று உள்ளத்தில் தேன் போன்று இனிக்கும் திருச்சோற்றுத் துறைப் பெருமானே ! எம் தலைவரே ! தனிப் பெருந் தெய்வமே ` என்று துதியாதேனாய் , விரைந்தகலக் காலங் கழித்தேன் .


பாடல் எண் : 6
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின், பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திறமே,
ஆர்த்துவந்து இழிவது ஒத்த அலைபுனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார், திருச்சோற்றுத் துறைய னாரே.

         பொழிப்புரை : பார்வதிபாகராய் , அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பாசுபத வேடத்தினராய் ஆரவாரித்துக் கொண்டு வானிலிருந்து இறங்கிய அலையோடு கூடிய நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்று உலகவருக்கு நீராடுதற்குரிய தீர்த்தமாகப் பெருகவிட்ட திருச்சோற்றுத் துறையனார் செய்திகளை , இனி மீண்டும் பிறவி எடுக்காத பேறு பெறுவதற்காகப் பலகாலும் அடைவுகேடாகக் கூறுங்கள் .
( அடைவு கெட - வாயில் வந்தவந்த படி .)


பாடல் எண் : 7
கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போன,
எந்தைஎம் பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது, அந்தோ,
முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதி மூர்த்தி,
செந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத் துறைய னாரே.

         பொழிப்புரை : விரைந்து ஊரும் பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய பார்வதியின் பாகரான , எங்கள் தந்தையாராய் , எங்கள் தலைவராய் உள்ள சிவந்த மகரந்தங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் திருச்சோற்றுத்துறைவனாரே ஆதிமூர்த்தியாவர் . அவரைத் துதிக்காமல் கொத்துக்களாக மலர்ந்த பூக்களைக் கூந்தலில் அணிந்த மகளிரைப் புகழ்ந்தவாறே எம் காலங்கள் வீணாகி விட்டனவே !


பாடல் எண் : 8
அங்கதி ரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டா,
வெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்து கொண்மின்,
அங் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதி மூர்த்தி
செங் கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறைய னாரே.

         பொழிப்புரை : அழகிய கிரணங்களை உடைய பிறையைக் கங்கை பாம்பு முதலியவற்றுடன் சடையில் வைத்த முதற்கடவுள் சூரியனால் வணங்கப்படுகின்ற திருச்சோற்றுத்துறையனாரே ஆதலின் அழகிய கிரணங்களை உடைய சூரியனைத் தலைமைக் கடவுளாகக் கருதாமல் அந்தச் சூரிய மண்டலத்தின் வழியாக அர்ச்சிராதி மார்க்கமாய் வீட்டுலகத்தை அடைவதற்கு உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள் .


பாடல் எண் : 9
ஓதியே கழிக்கின் றீர்கள், உலகத்தீர், ஒருவன் தன்னை
நீதியால் நினைய மாட்டீர், நின்மலன் என்று சொல்லீர்,
சாதியா நான்மு கனும் சக்கரத் தானும் காணாச்
சோதியாய்ச் சுடர் அதுஆனார் திருச்சோற்றுத் துறைய னாரே.

         பொழிப்புரை : `அவன் அருளாலே அவனைக் காணவேண்டும்` என்பதனைச் செயற்படுத்தாமல் தம்முயற்சியால் எம் பெருமானைக் காணலாம் என்று முயன்ற பிரமனும் , திருமாலும் காணமுடியாத ஞான ஒளியினையுடையராய்த் தீத்தம்பமான திருச்சோற்றுத் துறையனார் ஆகிய ஒப்பற்ற பெருமானை நெறிமுறைப்படி தியானம் செய்ய மாட்டீராய் , அவரைத் தூயவர் என்று போற்றாதீராய் உலகமக்களாகிய நீங்கள் பயனற்ற நூல்களைப் பயின்றே காலத்தைக் கழிக்காதீர்கள் .


பாடல் எண் : 10
மற்றுநீர் மனம்வை யாதே, மறுமையைக் கழிக்க வேண்டில்,
பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்,
கற்றுவந்த அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்கச்
செற்றுஉகந்து அருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே.

         பொழிப்புரை :மறுமையில் பிறப்பு ஏற்படாத வகையில் மறுமை என்பதனையே அடியோடு நீங்கள் போக்க விரும்பினால், மற்றைப் பொருள்களிடத்தில் மனத்தை நிலையாக வைக்காமல் , பல நூல்களையும் கற்ற செருக்கோடு அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை ஒறுத்துப் பின் அவனுக்கு அருள்கள் செய்த திருச்சோற்றுத் துறையனை , அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டுப் பெற்ற முத்தி உபாயங்களால் பலகாலும் அடைவுகெடத் துதித்துப் பேசுங்கள் .

                                             திருச்சிற்றம்பலம்


4. 085    திருச்சோற்றுத்துறை             திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து,
மேலை அமரர் விரும்பும் இடம்,விரை யால்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத் துறைஉறை வார்சடைமேல்
மாலை மதியம் அன்றோஎம் பிரானுக்கு அழகியதே.

         பொழிப்புரை : காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம் , நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளை உடைய திருச்சோற்றுத்துறையாம் . அங்கு உகந்தருளியிருக்கும் சிவ பெருமானுடைய நீண்ட சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன்அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது .


பாடல் எண் : 2
வண்டுஅணை கொன்றையும்,
         வன்னியும் மத்தமும் வாளரவும்
கொண்டுஅணைந்து ஏறு
         முடிஉடை யான்குரை சேர்கழற்கே
தொண்டுஅணைந்து அடிய
         சோற்றுத் துறைஉறை வார்சடைமேல்
வெண்தலை மாலைஅன்றோ எம்பிரானுக்கு அழகியதே.

         பொழிப்புரை : தொண்டர்கள், வண்டுகள் தங்கும் கொன்றை, வன்னி , ஊமத்தை , ஒளிபொருந்திய பாம்பு இவைகள் வந்து பொருந்தித் தங்கும் சடையையுடைய பெருமான் திருவடிக்கண் தொண்டர்கள் வந்து பொருந்தி , பேரின்பக் கடலாடித் திளைக்கும் திருச்சோற்றுத்துறை எம்பெருமானுடைய சடையின்மேல் காட்சி வழங்கும் வெள்ளிய தலைமாலை அல்லவோ அவருக்கு அழகான அணிகலனாக வாய்த்திருக்கிறது.


பாடல் எண் : 3
அளக்கு நெறியினன், அன்பர்கள்
         தம்மனத்து ஆய்ந்துகொள்வான்
விளக்கும் அடியவர் மேல்வினை
         தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்கும் குழைஅணி சோற்றுத்
         துறைஉறை வார்சடைமேல்
திளைக்கு மதியம் அன்றோஎம்
         பிரானுக்கு அழகியதே.

         பொழிப்புரை : எல்லோருடைய உள்ளப் பண்பையும் அளந்தறியும் முறைமை உடையவராய் , அடியவர்களுடைய மனத்தை உள்ளவாறு ஆராய்ந்து அறிந்து அவர்களை அடிமை கொள்பவராய் , தம்முடைய திருவடிப் பெருமையை உலகம் அறியச் செயற்படும் அடியவர் களுடைய பழைய வினைகளையும் புதியவினைகளையும் தீர்த்தருளும் , தேவர்தலைவராய் , ஒளிவீசும் காதணியை அணிந்திருக்கும் திருச்சோற்றுத்துறை எம் பெருமானுடைய சடை மேல் இருந்து மகிழ்ச்சியில் திளைக்கின்ற பிறைச்சந்திரன் அல்லவோ அப் பெருமானுக்கு அழகிய அணிகலனாக வாய்த்துள்ளது .


பாடல் எண் : 4
ஆய்ந்தகை வாள்அர வத்தொடு,
         மால்விடை ஏறியெங்கும்
பேர்ந்தகை மான்இடம் ஆடுவர்
         பின்னு சடை இடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய
         சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூலம் மழுஎம்
         பிரானுக்கு அழகியதே.

         பொழிப்புரை : கையிலே ஒளிபொருந்திய பாம்பினை ஆராய்ந்து எடுத்துக்கொண்டு , திருமாலாகிய காளையின்மீது இவர்ந்து , எல்லா விடத்தும் மானை ஏந்திய கையினை வீசிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவராய் , ஒன்றோடொன்று பிணைந்த சடைகளிடையே அடியார்கள் தம் கைகளால் அர்ப்பணித்த பூக்கள் தங்கும் சடைமுடியை உடைய சிவ பெருமான் கையில் ஏந்திய சூலம் மழு என்ற படைக் கருவிகள் அவருக்கு அழகிய அணிகலன்கள் ஆக அமைந்துள்ளன .


பாடல் எண் : 5
கூற்றைக் கடந்ததும் கோள்அரவு
         ஆர்த்ததும் கோள்உழுவை
நீற்றில் றுதைந்து திரியும்
         பரிசுஅதும் நாம்அறியோம்
ஆற்றில் கிடந்துஅங்கு அலைப்ப
         அலைப்புண்டு அசைந்ததுஒக்கும்
சோற்றுத் துறைஉறை வார்,சடை
         மேலதுஒர் தூமதியே.

         பொழிப்புரை : திருச்சோற்றுத்துறையில் உகந்தருளும் பெருமானார் கூற்றுவனை அழித்த செயலும் கொடிய புலித்தோல் ஆடையின் மேல் பாம்பினை இறுகக்கட்டித் திருநீற்றை முழுமையாக அணிந்து , சோற்றுத்துறைப் பெருமானது நீண்ட சடைமேல் விளங்கும் ஒப்பற்ற சந்திரன் அங்குள்ள கங்கையாற்றின் கரையிலே கிடந்து அவ்வாற்றின் அலை அலைக்கும்தோறும் தானலைந்தவாறிருக்கும் அழகையே நாம் அறிவோம் .


பாடல் எண் : 6
வல்ஆடி நின்று வலிபேசு வார்கோளர் வல்அசுரர்
கொல்ஆடி நின்று குமைக்கிலும், வானவர் வந்துஇறைஞ்சச்
சொல்ஆடி நின்று பயில்கின்ற சோற்றுத் துறைஉறைவார்
வில்ஆடி நின்ற நிலைஎம் பிரானுக்கு அழகியதே.

         பொழிப்புரை : தங்கள் வலிமையை மிகுத்துக் காட்டிக்கொண்டு நின்று கொல்லப் போவதாகப் பயமுறுத்தும் கொலைஞர்களாய அசுரர்கள் அங்ஙனம் துன்புறுத்தி வருத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது தேவர் வந்து வணங்க, அவர்களோடு உரையாடிப் பயில்கின்ற சோற்றுத்துறைப் பெருமான் தமது கைவில்லைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை அவர்க்கு அழகிதாகும் .


பாடல் எண் : 7
ஆயம் உடையது நாம்அறி யோம்,அர ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியும், எய்தும், துயக்குஅறுத்தான்,
தூயவெண் நீற்றினன் சோற்றுத் துறைஉறை வார்சடைமேல்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கைஎம் மானுக்கு அழகியதே.

         பொழிப்புரை : எம் பெருமான் முப்புரங்களை அழிக்க முற்பட்ட காலத்தில் அவருக்குச் சேனைத்திரள் இல்லையோ உண்டோ என்பதனை நாம் அறியோம் . முப்புர அசுரர்களைக் கோபித்து வலிய வில்லை வளைத்தும் அம்பு எய்தும் அவர்களை அழித்துத் தேவர்களுடைய சோர்வைப் போக்கிய திருநீறு அணிந்த மேனியராகிய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமுடியின்மேற் பரவும் வெண்ணிற அலைகளை உடைய கங்கை எம்பெருமானுக்கு அழகிதாகும் .


பாடல் எண் : 8
அண்டர் அமரர் கடைந்துஎழுந்து ஓடிய நஞ்சுஅதனை
உண்டும், அதனை ஒடுக்கவல் லான்,மிக்க உம்பர்கள்கோன்,
தொண்டு பயில்கின்ற சோற்றுத் துறைஉறை வார்சடைமேல்
இண்டை மதியம்அன் றோஎம் பிரானுக்கு அழகியதே.

         பொழிப்புரை : பகைவரான அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்து பரவிய விடத்தை உண்டு அதனைக் கழுத்திலே இருத்தவல்ல தேவர் தலைவராய், மேலான இந்திரனும் திருத் தொண்டில் ஈடுபட்டுப் பயில்கின்ற திருச்சோற்றுத்துறைப் பெருமா னுடைய முடிமாலை போல விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .



பாடல் எண் : 9
கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன் தான்அறியா
விடம்அணி கண்டம் உடையவன் தான்எனை ஆளுடையான்
சுடர்அணிந் தாடிய சோற்றுத் துறைஉறை வார்சடைமேல்
படம்அணி நாகம்அன் றோஎம் பிரானுக்கு அழகியதே.

         பொழிப்புரை : பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத்தினனாகிய திருமாலும் பிரமனும் அறியாத நீலகண்டராய் , எம்மை அடிமைகளாகக் கொள்பவராய்ச் சூரியன் ஒளி தம் திருமேனியில் பரவுமாறு கூத்து நிகழ்த்தும் திருச்சோற்றுத்துறை பெருமானுடைய சடைமீது இரத்தினமுள்ள படமுடையதாய்த் தங்கியிருக்கும் , பாம்பு அல்லவோ அவருக்கு அழகிதாகும் .


பாடல் எண் : 10
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடிநெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்துஅழித்த
துலங்கல் மழுவினன், சோற்றுத் துறைஉறை வார்சடைமேல்
இலங்கும் மதியம்அன் றோஎம் பிரானுக்கு அழகியதே.

         பொழிப்புரை : இராவணனுடைய இருபது தோள்களும் தலைகளும் நெரியுமாறும் அவன் மனம் கலங்குமாறும் கால்விரலை ஊன்றி அவன் மனமதர்ப்பை அழித்த , ஒளி வீசும் மழுவை ஏந்திய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமேல் விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .
                                             திருச்சிற்றம்பலம்       

5. 033   திருச்சோற்றுத்துறை    திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
தில்லைச் சிற்றம் பலத்து உறை செல்வனார்,
தொல்லை ஊழியர், சோற்றுத் துறையர்க்கே
வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! முல்லை நிலத்துக்குரிய விடையேற்றினை உடையவரும், கொள்ளும் அரவத்தினை உடையவரும், தில்லைத் திருநகரில் சிற்றம்பலத்தே உறையும் அருட்செல்வரும், பழைய ஊழிக்காலத்தவரும் ஆகிய சோற்றுத் துறையர்க்கு வல்லமை உடையையாய்ப் பணிசெய்வாயாக.

 
பாடல் எண் : 2
முத்தி ஆக ஒருதவம் செய்துஇலை,
அத்தி யால்அடி யார்க்குஒன்று அளித்துஇலை,
தொத்து நின்றுஅலர் சோற்றுத் துறையர்க்கே
பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! முத்திப் பேறெய்தற்பொருட்டு ஒரு தவமும் செய்திலை; அடியார்களுக்கு விருப்பத்தோடு ஒன்றையும் அளித்தாயில்லை; பூங்கொத்துகள் நின்று மலர்கின்ற சோற்றுத்துறையர்க்கு இனியாகிலும் பத்தியோடு பணி செய்வாயாக.


பாடல் எண் : 3
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போய்அறத்
தொட்டு நின்றும்அச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாப்பணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! உடலை ஒட்டி நின்ற மிகுந்த நோய்களையும், பிணித்து நிற்கும் வினைகளையும் கழிந்து அறும்படியாகச் சோற்றுத்துறையர் திருவடிகளைத் தொட்டு நின்று பட்டியாகப் பணிசெய்வாயாக.


பாடல் எண் : 4
ஆதியான், அண்ட வாணர்க்கு அருள்நல்கு
நீதி யான்என்றும், நின்மலனே என்றும்,
சோதி யான்என்றும், சோற்றுத் துறையர்க்கே
வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! முதல்வனும் தேவர்களுக்கு அருள்நல்கும் நீதியனும், நின்மலனும், சோதியனும் ஆகிய சோற்றுத்துறைப் பெருமானுக்கு வேறொன்றும் வாளா வாதித்துக் காலம் போக்காது, பணிசெய்வாயாக.


பாடல் எண் : 5
ஆட்டி னாய்,அடி யேன்வினை ஆயின,
ஓட்டி னாய்,ஒரு காதில் இலங்குவெண்
தோட்டி னாய்என்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! அடியவனை ஆட்டுவிப்பானே என்றும், வினைகளாயினவற்றை ஓட்டியவனே என்றும், திருச்செவியில் விளங்குகின்ற சங்கவெண் தோட்டினை யணிந்தவனே என்றும் சோற்றுத்துறையனார்க்கு நீள நினைந்து நீ பணிசெய்வாயாக.


பாடல் எண் : 6
பொங்கி நின்றுஎழுந்த கடல் நஞ்சினைப்
பங்கி உண்டதுஓர் தெய்வம்உண் டோசொலாய்,
தொங்கி நீஎன்றும் சோற்றுத் துறையர்க்குத்
தங்கி நீபணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! பொங்கி நின்று எழுந்த கடலினின்றும் விளைந்த ஆலகாலவிடத்தை விழுங்கி உண்ட ஒரு தெய்வம் இத்தெய்வத்தையன்றி வேறு உண்டோ சொல்வாயாக! அச்சோற்றுத்துறையர்க்கு மனம் தாழ்ந்து என்றும்தங்கி நீ பணி செய்வாயாக.


பாடல் எண் : 7
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்,
ஏணி போல்இழிந்து ஏறியும் ஏங்கியும்
தோணி ஆகிய சோற்றுத் துறையர்க்கே
பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! ஆணி போல நீ மிகவும் வலி உடையையாயினும், ஏணியைப் போல் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு, பிறர் இழிந்தும் ஏறியும் இறங்கியும் சாதனமாய் நின்று வாடுகின்றனை; பிறவிப் பெருங்கடலில் இருந்து கரை ஏற்றும் தோணியாகிய சோற்றுத்துறையர்க்கு அன்பு பூண்டவனாக நின்று பணி செய்வாயாக.


பாடல் எண் : 8
பெற்றம் ஏறில்என், பேய்படை ஆகில்என்,
புற்றில் ஆடுஅர வேஅது பூணில்என்
சுற்றி நீஎன்றும் சோற்றுத் துறையர்க்கே
பற்றி நீபணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! பெருமான் ஏற்றினை ஏறினாலென்ன, அவனுக்குப் பேய்கள் படைகளாகிலென்ன, புற்றினைப் பொருந்திய அரவை அவன் அணியாகப் பூண்டாலென்ன, நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே சுற்றியும் பற்றியும் பணிசெய்வாயாக.


பாடல் எண் : 9
அல்லி யான்,அரவு ஐந்தலை நாகஅணைப்
பள்ளி யான்அறி யாத பரிசுஎலாம்
சொல்லி, நீஎன்றும் சோற்றுத் துறையர்க்கே
புல்லி நீபணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! தாமரையின் அகவிதழில் வீற்றிருக்கும் பிரமனும், ஆதிசேடனாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் அறிய முயன்றும் அறிய இயலாத தன்மையெல்லாம் சொல்லி, சோற்றுத்துறையர்க்கே நீ என்றும் பொருந்திப் பணிசெய்வாயாக.

 
பாடல் எண் : 10
மிண்ட ரோடு விரவியும், வீறு இலாக்
குண்டர் தம்மைக் கழிந்துஉய்யப் போந்து, நீ
தொண்டு செய்துஎன்றும் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! அமண் முண்டர்களோடு கலந்தும், பெருமையில்லாத குண்டர்களோடு பொருந்தியும் நின்ற நிலைமையினின்று நீங்கி உய்யப் போந்து நீ, சோற்றுத்துறையர்க்கே தொண்டுசெய்து என்றும் உண்டு பணி செய்வாயாக.


பாடல் எண் : 11
வாழ்ந்த வன்வலி வாள்அரக் கன்தனை
ஆழ்ந்து போய்அல றவ்விரல் ஊன்றினான்,
சூழ்ந்த பாரிடம் சோற்றுத் துறையர்க்குத்
தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே.

         பொழிப்புரை : அறியாமையை உடைய நெஞ்சமே! ஆற்றலோடு வாழ்ந்தவனாகிய இராவணன் ஆழ்ந்துபோய் அலறுமாறு விரலால் ஊன்றினவனாகிய பூதப்படை சூழ்ந்த சோற்றுத்துறைப் பெருமானுக்கு மனமொழிமெய்களாற்றாழ்ந்து பணிசெய்வாயாக.

                                             திருச்சிற்றம்பலம்

6. 044    திருச்சோற்றுத்துறை    திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே,
         முறைமையால் எல்லாம் படைக்கின் றானே,
ஏத்தவனாய் ஏழ்உலகும் ஆயி னானே,
         இன்பனாய்த் துன்பம் களைகின் றானே,
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே,
         கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :காலத்தால் எல்லாருக்கும் முற்பட்டவனே ! முறையாக எல்லா உலகையும் படைக்கின்றவனே ! ஏழுலகும் தாங்கு கின்றவனே ! இன்பம் தருபவனாய்த் துன்பங்களைப் போக்கு கின்றவனே ! முன்னே காத்தமை போல எப்பொழுதும் எல்லோரையும் காக்கின்றவனே ! தீவினையை உடைய அடியேனுடைய தீவினையை நீக்கியவனே ! திருச்சோற்றுத்துறையிலுள்ள விளங்கும் ஒளியை உடைய சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .

 
பாடல் எண் : 2
தலையவனாய், உலகுக்குஓர் தன்மை யானே,
         தத்துவனாய், சார்ந்தார்க்கு இன்னமுது ஆனானே,
நிலையவனாய், நின்ஒப்பார் இல்லா தானே,
         நின்றுஉணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த
கொலையவனே, கொல்யானைத் தோல்மேல் இட்ட
         கூற்றுவனே, கொடிமதில்கள் மூன்றும் எய்த
சிலையவனே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :உலகத் தலைவனே ! தத்துவனே ! அடியார்க்கு அமுதே ! நிலைபேறுடையவனே ! ஒப்பற்றவனே ! அறிவில்லாத கூற்றுவனை வெகுண்டு உதைத்துத் தண்டித்தவனே ! யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திய கஜசம்கார மூர்த்தியே ! கொடிகள் உயர்த்தப்பட்ட மும்மதில்களையும் அழித்த வில்லை உடையவனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே! அடியேன் உன் அடைக்கலம்.


பாடல் எண் : 3
முற்றாத பால்மதியம் சூடி னானே,
         முளைத்துஎழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே,
உற்றார்என்று ஒருவரையும் இல்லா தானே,
         உலகுஓம்பும் ஒண்சுடரே, ஓதும் வேதம்
கற்றானே, எல்லாக் கலைஞா னமும்
         கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச்
செற்றானே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :வெள்ளிய பிறை மதி சூடியே ! முளைத்து வெளிப்பட்ட கற்பகத் தளிர் ஒப்பவனே ! தனக்கென வேண்டியவர் யாரும் இல்லாதானே ! உலகைப் பாதுகாக்கும் சுடரே ! எல்லாக் கலைஞானமும் ஒதாதுணர்ந்து வேதம் ஓதுபவனே ! ஒன்றும் கல்லாத அடியேனுடைய தீவினையும் அதனால் விளையும் நோயும் நீங்குமாறு அவற்றை அழித்தவனே ! திருச்சோற்றுத் துறையுள் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .


பாடல் எண் : 4
கண்ணவனாய் உலகுஎல்லாம் காக்கின் றானே,
         காலங்கள் ஊழிகண்டு இருக்கின் றானே,
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய் வானே,
         வேதனாய் வேதம் விரித்திட் டானே,
எண்ணவனாய் எண்ணார் புரங்கள் மூன்றும்
         இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க
திண்ணவனே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :பற்றுக் கோடாய் இருந்து உலகைக் காப்பவனே ! பல ஊழிகளையும் கண்ட , காலம் கடந்த பெருமானே ! தேவனாய்த் தேவர்களுக்கும் மற்றை உயிர்களுக்கும் அருள் செய்பவனே ! வேத வடிவினனாய் வேதக் கருத்தை விரித்து உரைத்தவனே ! எங்கள் உள்ளத்தில் இருப்பவனாய்ப் பகைவருடைய மும்மதிலும் இமை கொட்டும் நேரத்தில் தீக்கு இரையாகுமாறு அவற்றைக் கண்டு சிரித்த உறுதியுடையவனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! யான் உன் அடைக்கலம் .


பாடல் எண் : 5
நம்பனே, நான்மறைகள் ஆயி னானே,
         நடம்ஆட வல்லானே, ஞானக் கூத்தா,
கம்பனே, கச்சிமா நகர் உளானே,
         கடிமதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே, அளவுஇலாப் பெருமை யானே,
         அடியார்கட்கு ஆரமுதே, ஆன்ஏறு ஏறும்
செம்பொனே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :எல்லோராலும் விரும்பப்படுபவனே ! நால் வேத வடிவினனே ! கூத்தாடவல்ல ஞானத் கூத்தனே ! கச்சி ஏகம்பனே ! காவலை உடைய மும்மதில்களும் பொடியாகுமாறு செலுத்திய அம்பினை உடையவனே ! எல்லையற்ற பெருமை உடையவனே ! அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவனே ! காளையை இவரும் பொன்னார் மேனியனே ! திருச்சோற்றுத்துறை உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .


பாடல் எண் : 6
ஆர்ந்தவனே உலகுஎலாம் நீயே ஆகி
         அமைந்தவனே, அளவிலாப் பெருமை யானே,
கூர்ந்தவனே, குற்றாலம் மேய கூத்தா,
         கொடுமூ இலையதுஓர் சூலம் ஏந்திப்
பேர்ந்தவனே, பிரளயங்கள் எல்லாம் ஆய
         பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில்
சேர்ந்தவனே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :உலகமெல்லாம் நீயேயாகிப் பொருந்திக் குறையாது மின்றி நிரம்பியிருப்பவனே ! எல்லையற்ற பெருமை உடையவனே ! உயிர்களிடத்து அருள் மிகுந்தவனே ! குற்றாலத்தை விரும்பிய கூத்தனே ! முத்தலைச் சூலம் ஏந்தி ஊழிவெள்ளங்கள் எல்லாம் மறையுமாறு உலாவுபவனே ! உன்னைப் பெருமான் என்று நினைக்கும் உள்ளங்களில் சேர்ந்தவனே ! திருச்சோற்றுத்துறையில் உள்ள திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .


பாடல் எண் : 7
வானவனாய் வண்மை மனத்தி னானே,
         மாமணிசேர் வானோர் பெருமான் நீயே,
கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே,
         கடிய அரணங்கள் மூன்று அட்டானே,
தானவனாய்த் தண்கயிலை மேவி னானே,
         தன்ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும்
தேன்அவனே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :தேவனாய் வரம் கொடுக்கும் உள்ளத்தானே ! சிந்தாமணியை உடைய தேவர்கள் பெருமானே ! வேடனாய்ப் பன்றிப் பின் சென்றவனே! கொடிய மும்மதில்களை அழித்தவனே! குளிர்ந்த கயிலாயத்தை உறைவிடமாக விரும்பி உறைபவனே ! தன்னை ஒப்பார் பிறர் இல்லாத பார்வதிக்கு இனியனே ! திருச்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .


பாடல் எண் : 8
தன்னவனாய் உலகுஎல்லாம் தானே ஆகி,
         தத்துவனாய்ச் சார்ந்தார்க்குஇன் னமுது ஆனானே,
என்னவனாய் என்இதயம் மேவி னானே,
         ஈசனே, பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே, மலைமங்கை பாகம் ஆக
         வைத்தவனே, வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :சுதந்திரனாய் , எல்லா உலகங்களும் தானே ஆனவனாய் , மெய்ப்பொருளாய் , அடியார்க்கு அமுதமாய் என்னை அடிமை கொண்டவனாய் , என் உள்ளத்தில் விரும்பி உறைபவனாய் , எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் , பாச வினைகளைப் போக்கும் தலைவனாய்ப் பார்வதி பாகனாய்த் தேவர்கள் வணங்கும் காவிரியின் தென்கரையிலுள்ள திருத்சோற்றுத்துறையுள் திகழ் ஒளியாய் விளங்கும் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .


பாடல் எண் : 9
எறிந்தானே, எண்திசைக்குங் கண் ஆனானே,
         ஏழ்உலகம் எல்லாமுன் னாய்நின் றானே,
அறிந்தார்தாம் ஓர்இருவர் அறியா வண்ணம்
         ஆதியும் அந்தமும் ஆகி அங்கே
பிறிந்தானே, பிறர்ஒருவர் அறியா வண்ணம்
         பெம்மான்என்று எப்போதும் ஏத்து நெஞ்சில்
செறிந்தானே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :எட்டுத் திசைகளுக்கும் கண்ணாகி உலகங்களைக் காப்பவனாய் , முன் ஏழ் உலகங்களையும் படைக்கும் முதற் பொருளாய் நின்று , பின் அவற்றை அழித்தவனே ! பிரமனும் திருமாலும் அறியாவண்ணம் ஆதியும் முடிவும் ஆகி அவர்களிலிருந்து வேறு பட்டவனே ! தன்னைத் தலைவன் என்று துதிப்பவர்கள் மனத்தில் மற்றவர் அறியாதபடி பொருந்தியிருப்பவனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உன் அடைக்கலம் .


பாடல் எண் : 10
மைஅனைய கண்டத்தாய், மாலும் மற்றை
         வானவரும் அறியாத வண்ணச் சூலக்
கையவனே, கடிஇலங்கைக் கோனை அன்று
         கால்விரலால் கதிர்முடியும் தோளும் செற்ற
மெய்யவனே, அடியார்கள் வேண்டிற்று ஈயும்
         விண்ணவனே, விண்ணப்பம் கேட்டு நல்கும்
செய்யவனே, திருச்சோற்றுத் துறை உளானே,
         திகழ்ஒளியே, சிவனே, உன் அபயம் நானே.

         பொழிப்புரை :நீலகண்டனே ! திருமாலும் மற்றைத் தேவரும் அறியாத சூலபாணியே ! இராவணனுடைய ஒளி வீசும் தலைகளையும் தோள்களையும் கால் விரலால் நசுக்கிய மெய்ப்பொருளே ! அடியவர்கள் விரும்பியவற்றை அருளும் தேவனே ! உயிரினங்களின் வேண்டுகோள்களைக் கேட்டு அவர்களுக்கு அருளும் நடுநிலை யாளனே ! திருச்சோற்றுத்துறையில் உறையும் திகழ் ஒளியாம் சிவனே ! அடியேன் உனக்கு அடைக்கலம் !
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------
 
சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         நம்பியாரூரர், திருக்கலயநல்லூரைப் பணிந்து பாடிய பின், திருக்குடமூக்கு, திருவலஞ்சுழி, திருநல்லூர் முதலிய பல தலங்களையும் வணங்கிக்கொண்டு, திருச்சோற்றுத்துறை அடைந்து பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 70)

பெரிய புராணப் பாடல் எண் : 69
நல்லூர் இறைவர் கழல்போற்றி
         நவின்று, நடுவு நம்பர்பதி
எல்லாம் இறைஞ்சி ஏத்திப்போய்,
         இசையால் பரவும் தம்முடைய
சொல் ஊதியமா அணிந்தவர்தம்
         சோற்றுத் துறையின் மருங்குஎய்தி,
அல்ஊர் கண்டர் கோயிலின்உள்
         அடைந்து வலங்கொண்டு, அடிபணிவார்.

         பொழிப்புரை : திருநல்லூரில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் பணிந்து பாடி, இடையிலுள்ள இறைவருடைய திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, இசையோடு பாடிடும் தம் சொற்களைப் பயனாகக் கொண்டருளும் இறைவரின் திருச்சோற்றுத்துறைக்குச் சென்று, நஞ்சைக் கழுத்தில் கொண்ட பெருமான் கோயிலினை வலங்கொண்டு திருவடிகளைப் பணிவாராய்,


பெ. பு. பாடல் எண் : 70
"அழல்நீர் ஒழுகி அனைய" எனும்
         அஞ்சொல் பதிகம் எடுத்து அருளி,
கழல்நீடிய அன்பினில் போற்றும்
         காதல் கூரப் பரவியபின்,
கெழுநீர் மையினில் அருள்பெற்றுப்
         போந்து, பரவை யார்கேள்வர்,
முழுநீறு அணிவார் அமர்ந்தபதி
         பலவும் பணிந்து, முன்னுவார்.

         பொழிப்புரை : `அழல்நீர் ஒழுகி அனைய\' எனும் அழகிய சொற்களையுடைய பதிகத்தைப் பாடி எடுத்தருளி, பெருமானின் திருவடிகளிடத்துக் கொண்ட நீடிய அன்பினால் காதல் மீதூர வணங்கிய பின், பொருந்திய திருவருள் பெற்று மேற்சென்று, பரவை கேள்வராய நம்பிகள், முழுமையாக ஒளி நீறணிந்து விளங்கும் சிவபெருமான் அமர்ந்தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து செல்கின்றவர்,

         `அழல்நீர் ஒழுகி அனைய' எனத் தொடங்கும் திருப்பதிகம் கௌசிகப் பண்ணிலமைந்ததாகும் (தி.7 ப.94).

     பதி பலவும் என்பன - தண்டங்குறை, திருவேதிகுடி முதலியனவாகலாம் என்பார் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).


7. 094    திருச்சோற்றுத்துறை         பண் - கௌசிகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அழல்நீர் ஒழுகி அனைய சடையும்,
உழைஈர் உரியும் உடையான் இடமாம்,
கழைநீர் முத்தும், கனகக் குவையும்,
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே

         பொழிப்புரை : மூங்கில்களிடத்து உளவாகிய சிறந்த முத்துக்களும், பொற்குவியல்களும் சுழிகளில் சுழல்கின்ற நீரையுடைய காவிரி யாற்றையுடைய, ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே, நெருப்பு நீர்த் தன்மையுடையதாய் ஒழுகினாற்போலும் சடையையும், மானையும், யானை, புலி இவைகளை உரித்த தோலையும் உடையவனாகிய இறைவனது இடமாகும்.


பாடல் எண் : 2
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன், அமலன், இடமாம்,
இண்டை கொண்டு அன்பு இடைஅ றாத
தொண்டர் பரவும் சோற்றுத் துறையே

         பொழிப்புரை: அன்பு, இடையில் அற்றுப்போதல் இல்லாத அடியார்கள், இண்டை மாலை முதலியவைகளைக் கொண்டுவழி படுகின்ற, `திருச்சோற்றுத்துறை` என்னும் தலமே, உயிர்கள் செய்த பழைய, வலிமையான வினைகள் நீங்குமாறு நிற்கின்ற, உலகிற்கு முதல்வனும், தூயவனும் ஆகிய இறைவனது இடமாகும்.


பாடல் எண் : 3
கோல அரவும், கொக்கின் இறகும்,
மாலை மதியும், வைத்தான் இடமாம்,
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே

         பொழிப்புரை : சோலைகள், ஆடுகின்ற மயில்களையும், சுழலுதல் உடைய வண்டுகளையும் கொண்டு காட்டுகின்ற மிக்க நீரையுடைய, `திருச்சோற்றுத்துறை` என்னும் தலமே, அழகிய பாம்பையும், கொக்கின் இறகையும், மாலைக் காலத்தில் தோன்றுகின்ற பிறையையும் முடியில் வைத்துள்ளவனாகிய இறைவனது இடமாகும்.


பாடல் எண் : 4
பளிக்குத் தாரை பவள வெற்பில்
குளிக்கும் போல்நூல் கோமாற்கு இடமாம்
அளிக்கும் ஆர்த்தி அல்லால், மதுவம்
துளிக்கும் சோலைச் சோற்றுத் துறையே

         பொழிப்புரை : தேனை வண்டுகள் நிரம்ப உண்ணச்செய்து, மேலும் நிலத்திற் சிந்துகின்ற சோலைகளையுடைய, `திருச்சோற்றுத்துறை` என்னும் தலமே, பவளமலையின்மேல் பதிந்து ஓடுகின்ற பளிங்கு அருவிபோலும் முப்புரி நூலை அணிந்த தலைவனாகிய இறைவனுக்கு இடமாகும்.


பாடல் எண் : 5
உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு
வதையும் செய்த மைந்தன் இடமாம்
திதையும் தாதும் தேனும் ஞிமிறும்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே

         பொழிப்புரை : நிலைபெற்ற மகரந்தமும், தேனும், வண்டும் சோலைகளில் நெருங்கியிருக்கின்ற, காவிரி யாற்றையுடைய, `திருச்சோற்றுத்துறை` என்னுந் தலமே, கூற்றுவனுக்கு உதையையும், ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு அழிவையும் ஈந்த வலிமை உடையவனாகிய இறைவனுக்கு இடமாகும்.


பாடல் எண் : 6
ஓதக் கடல்நஞ் சினைஉண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனல்உண்டு எரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே

         பொழிப்புரை : குளிர்ந்த நீரை உண்டு , தீயை உமிழ்கின்ற மாஞ் சோலைகள் சூழ்ந்த , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , மிக்க நீரை யுடைய கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட , அருள்மிகுந்த பெரு மான் விரும்பும் ஊராகும் .


பாடல் எண் : 7
இறந்தார் என்பும் எருக்கும் சூடிப்
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றம் திரு என்று இன்ன
துறந்தார் சேரும் சோற்றுத் துறையே

         பொழிப்புரை : உயிர்போலச் சிறந்த மனைவி மக்களும் , ஏனைய சுற்றத்தாரும் , செல்வமும் என்று சொல்லப்பட்ட இன்னோரன்ன வற்றைத் துறந்த ஞானியர் சேர்கின்ற , ` திருச்சோற்றுத்துறை ` என்னும் தலமே , இறந்தவரது எலும்புகளையும் ` எருக்கம் பூவையும் அணிந்து கொண்டு , புறங்காட்டில் ஆடுகின்ற தூயவனாகிய இறைவனது இடம் .


பாடல் எண் : 8
காமன் பொடியாக் கண்ஒன்று இமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்புஆர் சோற்றுத் துறையே

         பொழிப்புரை : தேன் பொருந்திய, மெல்லிய கூந்தலையுடைய மகளிர், தம் இருக்கையில் இட்ட நறும்புகைகள், வானத்தில் சென்று நிறைகின்ற, `திருச்சோற்றுத் துறை` என்னும் தலமே மன்மதன் சாம்பராகுமாறு கண் ஒன்றைத் திறந்த, வேள்வியாகிய கடலையுடைய வராகிய இறைவர் விரும்பும் இடமாகும் .


பாடல் எண் : 9
இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே

         பொழிப்புரை : தன்னைத் தலையால் வணங்குகின்ற தவத்தினை உடையோர்க்கு, எஞ்ஞான்றும் அழியாத செல்வத்தைத் தரும், ` திருச்சோற்றுத்துறை` என்னுந் தலமே , இலையாலாயினும் அன்போடு துதிக்கின்ற அவர்கட்கு , நிலையாத இவ்வுலக வாழ்வை நீக்குபவராகிய இறைவனது இடமாகும் .


பாடல் எண் : 10
சுற்றுஆர் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்து
அற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொல்தான் இவை கற்றார் துன்பு இலரே

         பொழிப்புரை : பற்றற்றவராகிய அடியார்களது அடிக்கு நாய் போலும் நம்பியாரூரன், சுற்றிலும் நிறைந்த நீரையுடைய திருச் சோற்றுத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற, இளமையான சந்திரனைச் சூடிய முதல்வனது திருவடிக்கண் இப்பாடல்களைப் பாடினான்; இவைகளைக் கற்றவராவார், யாதொரு துன்பமும் இல்லாதவராவர் .
                                             திருச்சிற்றம்பலம்

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...