திருக் கண்டியூர்
வீரட்டம்
சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.
தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில்
உள்ளது. தஞ்சையிலிருந்து 9-கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3-கி. மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து
வசதிகள் உள்ளன.
இறைவர்
: பிரமசிரக் கண்டீசுவரர், வீரட்டேசுவரர்,
பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்.
இறைவியார்
: மங்கள நாயகி.
தல
மரம் : வில்வம்.
தீர்த்தம் : நந்திதீர்த்தம், தட்சதீர்த்தம், பிரமதீர்த்தம்,
குடமுருட்டி ஆறு முதலியன.
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - வினவினேன்அறி 2. அப்பர் - வானவர்
தானவர்.
பிரமன் சிரத்தைத்
(ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் -
கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை
சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது
வரலாறு.
சாதாதாப முனிவர்
பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற் போயிற்று.
அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார்
என்பது வரலாறு.
அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாக இத்திருத்தலம்
விளங்குகிறது.
---------------------------------------------------------------------------------------------------------
சப்த தானங்கள் என்று
கொண்டாடப்படுபவை
திருவையாறு
சப்தஸ்தானம்
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்
கும்பகோணம்
சப்தஸ்தானம்
திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி
சக்கரப்பள்ளி
சப்தஸ்தானம்
(சப்தமங்கைத் தலங்கள்)
திருச்சக்கரப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை
மயிலாடுதுறை
சப்தஸ்தானம்
மயிலாடுதுறை
ஐயாறப்பர் கோயில், கூறைநாடு, சித்தர்காடு, மூவலூர், சோழம்பேட்டை, துலாக்கட்டம், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்
கரந்தட்டாங்குடி
சப்தஸ்தானம்
கரந்தட்டாங்குடி, வெண்ணாற்றங்கரை, திட்டை, கூடலூர்(தஞ்சாவூர்), கடகடப்பை, மாரியம்மன்கோயில்(தஞ்சாவூர்), பூமாலை(தஞ்சாவூர்)
நாகப்பட்டினம்
சப்தஸ்தானம்
பொய்கைநல்லூர்(நாகப்பட்டினம்), பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர்
திருநல்லூர்
சப்தஸ்தானம்
திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர் (கும்பகோணம்), மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை
திருநீலக்குடி
சப்தஸ்தானம்
திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி
திருக்கஞ்சனூர்
சப்தஸ்தானம்
கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை)
----------------------------------------------------------------------------------------------------------
"சாதாதாப"
முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால்
இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.
பிரமகத்தி தோஷம்
நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.
சூரியன்
வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில்
5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி
சுவாமிமீது படுகிறது.
சப்தஸ்தானத்
திருவிழாவில் (ஏழூர்த் திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லுவார். சிலாத
முனிவருக்கு, சாதாதாப முனிவர்
தமையனாராதலின், இளைப்பாறிச்
செல்லும்போது மூத்தமாமனார் என்ற வகையில் கட்டிச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று
(தயிர்சாதம், புளியோதரை) -
கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்து வருகின்றது.
நவக்கிரக சந்நிதியில்
சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.
மூலவர் சுயம்பு
மூர்த்தி; பாணம் சற்று உயரமாக
உள்ளது.
பூ, ஜபமாலை
ஏந்தி, இருகைகளாலும் இறைவனை
பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது. இத் திருத்தலத்தில்
பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.
பிரமனின் சிரம்
கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரமன்
சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.
கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய
மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "காந்த அருவத் தண்டி
ஊர் போற்றும் தகை காசிக்கண் செய்து கண்டியூர் வாழும் களைகண்ணே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெ.
பு. பாடல் எண் : 351
அங்குஅப்
பதிநின்று எழுந்துஅருளி,
அணிதிரு ஆலம்
பொழில்வணங்கி,
பொங்கு
புனல்பொன்னிப் பூந்துருத்திப்
பொய்யிலி யாரைப் பணிந்துபோற்றி,
எங்கும்
நிகழ்திருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள எப்பதி
யும்தொழுது,
செங்கயல்
பாய்வயல் ஓடைசூழ்ந்த
திருக்கண்டி
யூர்தொழச் சென்றுஅணைந்தார்.
பொழிப்புரை : அவ்விடத்தே
அப்பதியினின்றும் (திருக்காட்டுப்பள்ளி ) புறப்பட்டுச் சென்று, அழகிய திருஆலம்பொழிலினை வணங்கிப்
பொங்கும் நீர் வளம் வாய்ந்த காவிரி நடுவிலுள்ள `திருப்பூந்துருத்தி' என்ற பதியுள் வீற்றிருக்கும் `பொய்யிலியப்பரைப் ` பணிந்து போற்றி, எங்கும் நிலவி வரும் திருத்தொண்டர்
கூட்டம் எதிர் வந்து அழைத்துச் செல்ல, அம்மருங்குள்ள
பலபதிகளையும் வணங்கிச் சென்று, செங்கயல்கள்
பாய்வதற்கு இடமான வயல்களும் ஓடைகளும் சூழ்ந்த `திருக்கண்டியூரை' வணங்குவதற்குச் சென்று சேர்ந்தார்.
திருவாலம்பொழிலிற்கும்
திருப்பூந்துருத்திக்கும் பதிகங்கள் கிடைத்தில. எப்பதியும் என்பன திங்களுர்
திருநெய்த்தானம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.
பெ.
பு. பாடல் எண் : 352
கண்டியூர்
வீரட்டர் கோயில் எய்தி,
கலந்துஅடி யாருடன்
காதல்பொங்கக்
கொண்ட
விருப்புடன் தாழ்ந்துஇறைஞ்சி,
குலவு மகிழ்ச்சியின்
கொள்கையினால்,
தொண்டர்
குழாத்தினை நோக்கிநின்று
தொடுத்த இசைத்தமிழ்
மாலைதன்னில்,
அண்டர்
பிரான்தன் அருளின்வண்ணம்
அடியார் பெருமையில்
கேட்டுஅருளி.
பொழிப்புரை : திருக்கண்டியூர்
வீரட்டனாரின் கோயிலை அடைந்து, சூழவந்த
அடியார்களுடன் அன்பு மேலிட, விருப்பத்துடன் கீழே
விழுந்து வணங்கி, பொருந்திய
மகிழ்ச்சியினால் திருத்தொண்டர் குழாத்தினைப் பார்த்து நின்று, தாம் பாடிய இசைத் தமிழ் மாலையான
திருப்பதிகத்தில், சிவபெருமானின்
திருவருள் வண்ணங்கள் பலவற்றையும் அடியவர் வாயிலாக வெளிப்படுத்தும் வகையால்
வினவியருளி,
திருக்கண்டியூரில்
அருளியது, `வினவினேன்
அறியாமையில்' (தி.3 ப.38) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
இப்பதிகம் முழுமையும் பெருமானின்
திருமேனியிற் காணும் அணிகலன்கள் பற்றியும், அவன்மேற் கொண்ட அருட்செயல்களில்
சிலவற்றைப் பற்றியும் அடியவர்களிடம் அவற்றிற்கான காரணங்களை வினவுவதாக
அமைந்துள்ளது. இவ்வாறான பதிகத்தை வினாவுரைப் பதிகம் என்பர்.
பெ.
பு. பாடல் எண் : 353
வினவி
எடுத்த திருப்பதிகம்
மேவு திருக்கடைக்
காப்புத்தன்னில்
அனைய
நினைவுஅரி யோன்செயலை
அடியாரைக் கேட்டு
மகிழ்ந்ததன்மை
புனைவுறு
பாடலில் போற்றிசெய்து,
போந்து புகலிக்
கவுணியனார்
துனைபுனல்
பொன்னித் திரைவலங்கொள்
சோற்றுத் துறைதொழச்
சென்றுஅடைவார்.
பொழிப்புரை : அங்ஙனம் `வினவினேன்' எனத் தொடங்கிய திருப்பதிகத்தில்
பொருந்திய திருக்கடைக்காப்பினில் நினைத்தற்கரிய சிவபெருமானின் அருட்செயலின்
திறங்களை, அடியாரைக் கேட்டு
மகிழ்ந்த இயல்பைக் கூறிய பாடலால் துதித்து, மேற்சென்று, சீகாழியில் தோன்றிய கவுணியர் குலத்
தேன்றலார் விரைவாய்ச் செல்லும் நீரையுடைய காவிரியின் அலைகள் வலம் கொண்டு செல்கின்ற
திருச்சோற்றுத்துறையினைச் சென்று அணைவாராகி,
திருக்கண்டியூர்
பதிகத் திருக்கடைக்காப்பில் `கருத்தனைப்பொழில்
சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை அருத்தனைத்திறம் அடியார்பால் மிகக் கேட்டு உகந்த
வினாவுரை' என வருவது கொண்டு
ஆசிரியர் இவ்வாறு அருளிச் செய்வாராயினர்.
3. 038 திருக்கண்டியூர் வீரட்டம் பண் -
கொல்லி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வினவினேன்அறி
யாமையில், உரை
செய்ம்மின்நீர்அருள்
வேண்டுவீர்,
கனைவில்ஆர்புனல்
காவிரிக்கரை
மேயகண்டியூர்
வீரட்டன்,
தனமுனேதனக்கு
இன்மையோ, தமர்
ஆயினார்அண்டம்
ஆளத்தான்
வனனில்வாழ்க்கைகொண்டு
ஆடிப்பாடி,இவ்
வையமாப்பலி
தேர்ந்ததே.
பொழிப்புரை :இறையருளை வேண்டிப்
பணிசெய்யும் அன்பர்காள் ! அறியாமை காரணமாக வினவுகின்றேன் . உரைசெய்வீர்களாக !
ஆரவாரத்தோடு மிகுந்தநீர் செல்லும் காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில்
வீற்றிருந்தருளும் வீரட்ட நாதன் ,
தனக்கு
நெருக்கமான திருமாலும் , பிரமனும் அண்டங்களை
ஆளத்தான் சுடுகாட்டில் வாழ்ந்து ஆடியும் , பாடியும் பிச்சையேற்றுத் திரிவது ஏன் ? தனக்கு முன்னோர் தேடிவைத்த பொருள்
இல்லாத காரணத்தினாலா ?
பாடல்
எண் : 2
உள்ளவாறுஎனக்கு
உரைசெய்மின், உயர்வு
ஆயமாதவம் பேணுவீர்,
கள்அவிழ்பொழில்
சூழுங்கண்டியூர்
வீரட்டத்துஉறை
காதலான்,
பிள்ளைவான்பிறை
செஞ்சடைம்மிசை
வைத்ததும், பெரு நீர்ஒலி
வெள்ளம்
தாங்கியது என்கொலோ,மிகு
மங்கையாள் உடன்ஆகவே.
பொழிப்புரை :உயர்ந்த பெரிய
தவநெறியில் நிற்பவர்களே !. எனக்கு உள்ளவாறு உரைசெய்வீர்களாக ! தேன்கமழும் சோலைகள்
சூழ்ந்த திருக்கண்டியூரில் தனக்கு ஒப்பாரும் , மிக்காருமில்லாத , உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சிவந்த சடையின்மீது வைத்ததும் , பெருநீர்ப் பெருக்காகிய கங்கையைச்
சடையில் தாங்கியதும் என் கொல் ?.
பாடல்
எண் : 3
அடியர்ஆயினீர், சொல்லுமின்,அறி
கின்றிலேன், அரன் செய்கையை,
படியெலாந்தொழுது
ஏத்துகண்டியூர்
வீரட்டத்துஉறை
பான்மையான்,
முடிவுமாய், முத லாய், இவ்வையம்
முழுதுமாய்அழகு
ஆயதோர்,
பொடியதுஆர்திரு
மார்பினில் புரி
நூலும்பூண்டுஎழு
பொற்புஅதே.
பொழிப்புரை :என் சிற்றறிவினால்
சிவபெருமானின் செய்கையை அறிய இயலவில்லை . எப்பொழுதும் சிவபெருமானின் திருவடிகளை
இடையறாது சிந்தித்துக் கொண்டிருக்கும் அடியவர்களே ! நீங்கள் எனக்குச் சொல்வீர்களாக
! உலகமெல்லாம் தொழுது போற்றுகின்ற திருக்கண்டியூரில் வீரட்டானத்தில்
வீற்றிருந்தருளும் சிவபெருமான் இவ்வுலகிற்கு அந்தமாயும் , ஆதியாயும் இருப்பவன் . இவ்வுலகம்
முழுவதும் நிறைந்து விளங்குபவன் . அப்பெருமான் தன் அழகிய மார்பில்
திருநீற்றுப்பூச்சும் , முப்புரிநூலும்
பூண்டு தோன்றுவது ஏன் ?
பாடல்
எண் : 4
பழையதொண்டர்கள், பகருமின்,பல
ஆயவேதியன் பான்மையை,
கழைஉலாம்புனல்
மல்குகாவிரி
மன்னுகண்டியூர்
வீரட்டன்,
குழையொர்காதினில்
பெய்துஉகந்துஒரு
குன்றின்மங்கை
வெருவுறப்
புழைநெடுங்கைநல்
மாவுரித்து,அது
போர்த்துஉகந்த
பொலிவதே.
பொழிப்புரை :சிவனடியார்
திருக்கூட்டமரபில் வழிவழியாய் வருகின்ற பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குப்
பலவாகிய தன்மைகளையுடைய இறைவனின் தன்மையைக் கூறுங்கள் . மலையிலிருந்து பெருகும்
காவிரியால் வளம்மிகுந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , தன் காதில் ஒரு குழையணிந்து மகிழ்ந்து , மலைமகளான உமாதேவி அஞ்சுமாறு துளையுடைய
நீண்ட தும்பிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தது ஏன் ?
பாடல்
எண் : 5
விரவிலாதுஉமைக்
கேட்கின்றேன்,அடி
விரும்பி ஆட்செய்வீர்
விளம்புமின்,
கரைஎலாம்
திரை மண்டுகாவிரிக்
கண்டியூர்உறை
வீரட்டன்,
முரவமொந்தை
முழாவொலிக்க
முழங்குபேயொடும்
கூடிப்போய்ப்
பரவுவானவர்க்
காகவார்கடல்
நஞ்சம்உண்ட பரிசதே.
பொழிப்புரை :அடியார் நடுவுள்
கலந்திருக்கப் பெறாமையால் இவற்றை வினவுகின்றேன் . இறைவனின் திருவடிகட்கு
விரும்பிப் பணிசெய்யும் அடியவர்களே ! விளம்புவீராக . அலைகள் மோதுகின்ற காவிரியின்
கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , முரவு , மொந்தை , முழவு முதலான வாத்தியங்கள் முழங்க , பேய்க்கணங்களும் , பூதகணங்களும் சூழ்ந்து நிற்க , தன்னை வழிபட்ட தேவர்கள் பொருட்டுப்
பெரிய பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட தன்மைதான் என்கொல் ?.
பாடல்
எண் : 6
இயலுமாறுஎனக்கு
இயம்புமின்,இறை
வன்னுமாய்நிறை
செய்கையை,
கயல்நெடுங்கண்ணி
னார்கள்தாம்பொலி
கண்டியூர்உறை
வீரட்டன்,
புயல்பொழிந்துஇழி
வானுளோர்களுக்
காகஅன்றுஅயன்
பொய்ச்சிரம்
அயல்நகவ்வது
அரிந்துமற்றுஅதில்
ஊண்உகந்த அருத்தியே.
பொழிப்புரை :மெய்யடியார்களே !
இறைவன் உலகினுக்கும் , உயிருக்கும் தலைவனாய்
இருப்பதோடு , உலகப்பொருள்களிலும் , அனைத்து உயிர்களிடத்தும் அவையேயாய்க்
கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக ! கயல்
போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும்
வீரட்டநாதன் உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்கட்காகப் பிரமனுடைய
ஐந்தாவது சிரத்தை அயலார் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து, அதில் பிச்சையேற் றுண்ணும் விருப்பம்
என்கொல் ?.
பாடல்
எண் : 7
திருந்துதொண்டர்கள்
செப்புமின், மிகச்
செல்வன்தன்னது
திறம்எலாம்,
கருந்தடங்கண்ணி
னார்கல்தாந்தொழு
கண்டியூர்உறை
வீரட்டன்,
இருந்துநால்வரொடு
ஆல்நிழல்அறம்
உரைத்ததும்,மிகு வெம்மையார்
வருந்த,வன்சிலை யால்
அம்மாமதில்
மூன்றுமாட்டிய
வண்ணமே.
பொழிப்புரை :தெளிந்த சிவஞானம்
பெற்று இறைவனுக்குத் தொண்டு செய்யும் அன்பர்களே ! மெய்ச் செல்வனாக விளங்கும்
சிவபெருமானின் தன்மைகளை எனக்கு உரைப்பீர்களாக ! கருநிற அழகிய கண்களையுடைய மகளிர்
வழிபடும் திருக்கண்டியூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , அன்று ஆலமரநிழலில் நால்வர்க்கு அறம் உரைத்ததும்
, தேவர்களைத்
துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு மேருமலையை வில்லாக
வளைத்ததும் என்கொல் ?.
பாடல்
எண் : 8
நாவிரித்துஅரன்
தொல்புகழ்பல
பேணுவீர்இறை
நல்குமின்,
காவிரித்தடம்
புனல்செய்கண்டியூர்
வீரட்டத்துஉறை
கண்ணுதல்
கோவிரிப்பயன்
ஆன்அஞ்சுஆடிய
கொள்கையுங்கொடி
வரைபெற
மாவரைத்தலத்
தால்அரக்கனை
வலியைவாட்டிய
மாண்பதே.
பொழிப்புரை :நாவால் சிவபெருமானது
பழம்புகழ் போற்றும் அடியவர்களே! எனக்கு விடை கூறுவீர்களாக. காவிரியால் நீர் வளம் மிக்க
திருக்கண்டியூர் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக்கண்ணுடைய
சிவபெருமான், பசுவிலிருந்து
பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய பஞ்சகவ்வியங்களால்
திருமுழுக்காட்டப்படும் தன்மையும்,
கொடி
போன்ற பார்வதி அமைதி பெற, பெரிய கயிலைமலையில்
தன் காற்பெருவிரலை ஊன்றி மலையின் கீழ் இராவணன் நெரியுமாறு செய்து அவன் வலிமையை
அழித்த மாண்பும் என்கொல் ?.
பாடல்
எண் : 9
பெருமையேசர
ணாகவாழ்வுறு
மாந்தர்காள்,இறை பேசுமின்,
கருமைஆர்பொழில்
சூழுந்தண்வயல்
கண்டியூருறை வீரட்டன்,
ஒருமையால்உயர்
மாலும்,மற்றை
மலரவன்உணர்ந்து
ஏத்தவே,
அருமையால்அவ
ருக்குஉயர்ந்துஎரி
ஆகிநின்ற அத் தன்மையே.
பொழிப்புரை :சிவபெருமானுடைய
பெருமையைப் புகழ்ந்து கூறி, அவனைச் சரண்புகுந்து
அவனருளால் வாழும் மாந்தர்காள்! விடை கூறுவீர்களாக ! மரங்களின் அடர்த்தியால் வெயில்
நுழையாது இருண்டு விளங்கும் சோலைகள் சூழ்ந்த, குளிர்ச்சியான வயல்களையுடைய
திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளுகின்ற வீரட்டநாதன் , திருமாலும் , பிரமனும் சிவபெருமானின்
முழுமுதல்தன்மையை உணர்ந்து போற்றும்படி, அவர்கள்
காண்பதற்கு அரியவனாய் உயர்ந்து நெருப்புமலையாய் நின்ற தன்மை என் கொல் ?.
பாடல்
எண் : 10
நமர்எழுபிறப்பு
அறுக்குமாந்தர்காள்,
நவிலுமின்,உமைக் கேட்கின்றேன்,
கமர்அழிவயல்
சூழுந்தண்புனல்
கண்டியூர்உறை
வீரட்டன்,
தமர்அழிந்துஎழு
சாக்கியச்சமண்
ஆதர்ஓதும் அதுகொளாது
அமரர்ஆனவர்
ஏத்த அந்தகன்
தன்னைச் சூலத்தில்
ஆய்ந்ததே.
பொழிப்புரை :தம்மைச் சார்ந்து
விளங்கும் சுற்றத்தவர்களின் ஏழு பிறப்புக்களையும் அறுக்கும் மெய்யடியார்களே !
உங்களை வினவுகின்றேன். விடை கூறுவீர்களாக. பூமியில் வெடிப்பு ஏற்பட்டு வறட்சி
உண்டாகாதவாறு குளிர்ந்த நீர் பாயும் வயல்கள் சூழ்ந்த திருக்கண்டியூரில்
வீற்றிருந்தருளும் வீரட்டநாதன்,
தமது
சமயத்தவர் பயனெய்தாது அழியும்படி இறைவனைச்சாரும் வழிகளை எடுத்துரைக்காத புத்தர் , சமணர்கள் உரைக்கும் உலகியல் அறங்களான
கொல்லாமை, பரதுக்க துக்கம்
இவற்றை மறுத்து , தேவர்கள் ஏத்த
அந்தகாசுரனைச் சூலத்தால் குத்திக் கொன்றது ஏன்?
பாடல்
எண் : 11
கருத்தனை, பொழில்
சூழுங்கண்டியூர்
வீரட்டத்துஉறை கள்வனை,
அருத்தனை, திறம் அடியர்பால்மிகக்
கேட்டுஉகந்த வினாஉரை,
திருத்தமாம்திகழ்
காழிஞானசம்
பந்தன்செப்பிய
செந்தமிழ்
ஒருத்தர்ஆகிலும்
பலர்கள்ஆகிலும்
உரைசெய்வார்
உயர்ந்தார்களே.
பொழிப்புரை :அன்பர்தம் கருத்தாக
விளங்குபவனாய் , சோலைகள் சூழ்ந்த
திருக்கண்டியூர் வீரட்டானத்தில் பிறரால் காணப்பெறாது மறைந்திருந்து மனத்தைக்
கவரும் கள்வனாய் , சொல்லின் பொருளாக
இருக்கும் , அப்பெருமானின்
திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழும் முறையில் சீகாழியில்
அவதரித்த , இறைவனின் இயல்புகளை
நன்கு உணர்ந்த ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஒருவராகத்
தனித்தும் , பலராகச் சேர்ந்தும்
ஓதவல்லவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர் .
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண். 301
பொங்கு
புனல்ஆர் பொன்னியினில்
இரண்டு கரையும்
பொருவிடையார்
தங்கும்
இடங்கள் புக்குஇறைஞ்சித்,
தமிழ் மாலைகளும்
சாத்திப்போய்,
எங்கும்
நிறைந்த புகழாளர்
ஈறுஇல் தொண்டர்
எதிர்கொள்ளச்
செங்கண்
விடையார் திருவானைக்
காவின் மருங்கு
சென்றுஅணைந்தார்.
பொழிப்புரை : பழையாறை
வடதளியினின்றும் காவிரியாறு வரும் வழியே திருவானைக்கா வரையும் மேற்கு நோக்கிச்
சொன்றால் அதன் இருகரையிலும் பல சிவதலங்கள் உள்ளன அவையெல்லாம் ஈண்டுக் கருதத்
தக்கன.
அவையாவன - திருப்பட்டீச்சரம், ஆறை மேற்றளி, திருவலஞ்சுழி, திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, தென்குடி திட்டை, திருப்புள்ளமங்கை, திருச்சக்கரப்பள்ளி, திருவையாறு, திருநெய்த்தானம், திருஆலம்பொழில், திருப்பெரும்புலியூர், திருமழபாடி, திருப்பழுவூர், திருக்கானூர், திரு அன்பிலாலந்துறை, திருப்பாற்றுறை முதலியன.
4. 093 திருக்கண்டியூர் வீரட்டம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வானவர்
தானவர் வைகல் மலர்கொணர்ந்து இட்டுஇறைஞ்சித்
தானவர்
மால்பிர மன்அறி யாத தகைமையினான்
ஆனவன், ஆதிபு ராணன்
அன்றுஓடிய பன்றிஎய்த
கானவ
னைக்கண்டி யூர்அண்ட வாணர் தொழுகின்றதே.
பொழிப்புரை : தேவர்களும்
தேவகணத்தவரான வித்தியாதரர்களும் நாள்தோறும் மலர்களைக் கொணர்ந்து சமர்ப்பித்து
வணங்க வைகுந்தத்திலும் சத்தியலோகத்திலும் உள்ள திருமாலும் பிரமனும் உள்ளபடி அறிய
முடியாத தன்மையுடைய வியாபகப்பொருளாகி யவனாய் , காளைவாகனனாய் , மூலப் பழம்பொருளாய் , அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம்
வழங்கக் கருதிய அன்று காட்டில் ஓடிய பன்றியை அம்பு எய்த வேடனாய் உள்ள பெருமானுடைய
கண்டியூர்த் திருத்தலத்தை உலகில் உள்ள மக்கள் தொழுகின்றார்கள் . கண்டியூரைத்
தேவர்களும் தானவர்களும் மண்ணவர்களும் தொழுகின்றனர் என்றவாறு .
பாடல்
எண் : 2
வான
மதியமும் வாளரவும் புனலோடு சடைத்
தானம்
அதுஎன வைத்துஉழல் வான்,தழல் போல்உருவன்,
கான
மறி ஒன்று கையுடையான், கண்டியூர் இருந்த
ஊனம் இல்
வேதம் உடையனை நாம்அடி உள்குவதே.
பொழிப்புரை : வானத்தில்
இயங்கவேண்டிய பிறை , ஒளி பொருந்திய பாம்பு
கங்கை இவற்றிற்குத் தன் தலையைத் தங்குமிடமாக வழங்கித் திரிபவனாய் , தீ நிறத்தினனாய் , காட்டில் வாழும் மான்குட்டியைக் கையில்
ஏந்தியவனாய்க் கண்டியூரில் இருக்கும் , குறைவு
ஒன்றும் இல்லாத வேதத்தை உடைய பெருமானை அவன் திருவடிக்கண் நாம் தியானிப்போமாக .
பாடல்
எண் : 3
பண்தங்கு
அறுத்தது ஓர் கையுடையான்,
படைத்தான் தலையை
உண்டுஅங்கு
அறுத்ததும் ஊரொடு நாடுஅவை தான்அறியும்
கண்டம்
கறுத்த மிடறு உடையான், கண்டி யூர்இருந்த
தொண்டர்
பிரானைக் கண்டீர் அண்ட வாணர் தொழுகின்றதே.
பொழிப்புரை : பிரமன் தலையைப் பண்டு
நீக்கிய கையை உடையவனாய் , விடத்தை உண்டு அதனைக்
கழுத்தில் இறுத்திய அதனால் நீலகண்டனாய் உயிரினங்களின் அச்சத்தைப் போக்கிய செய்தியை
ஊர்களும் நாடுகளும் அறியும் . அத்தகைய பெருமான் தொண்டர்கள் தலைவனாய்க் கண்டியூரில்
உகந்தருளியிருக்க அவனை அங்கே அண்டத்தில் வாழும் சான்றோர்கள் தொழுகின்றார்கள் .
பாடல்
எண் : 4
முடியில்
முற்றாதது ஒன்று இல்லை, எல்லாம்உடன் தான்உடையான்,
கொடியும் உற்றவ் விடை ஏறி, ஓர் கூற்று ஒரு பால் உடையான்
கடிய முற்றவ் வினை நோய் களைவான், கண்டியூர் இருந்தான்,
அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே.
பொழிப்புரை : அவன் செய்துமுடிக்க
நினைத்தால் வெற்றிகரமாக முடியாத செயல் ஒன்றுமில்லை . எல்லாப் பொருள்களையும் அப்
பெருமான் தன்பால் உடையான் . கொடியில் தன் உருவம் எழுதப்பட்ட வாகனமாக உடைய காளைமீது
இவர்ந்து பார்வதி பாகனாய் , அடியார்களுடைய
கொடியவினைகளை அடியோடு நீக்குபவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும்
அப்பெருமானுடைய திருவடிகளைத் தொண்டர்களே அடைந்தனர் . மேலுலகத்தேவர்கள் அடைய வில்லை
.
பாடல்
எண் : 5
பற்றியொர்
ஆனை உரித்த பிரான் பவளத் திரள்போல்
முற்றும்
அணிந்ததொர் நீறு உடையான், முன்னமே கொடுத்த
கல் தங்கு
உடையவன் தான் அறியான், கண்டியூர் இருந்த
குற்றம் இல்
வேதம் உடையானையாம் அண்டர் கூறுவதே.
பொழிப்புரை : ஓர் யானையைக்
கீழ்ப்படுத்தி அதன் தோலினை உரித்த தலைவனாய் , பவளத்திரள் போன்ற மேனி முழுதும் திருநீறு
அணிந்தவனாய் , கோவர்த்தன மலையைக்
குடையாக எடுத்த கண்ணனாக அவதரித்த திருமாலால் அறியப்படாதவனாய்க் கண்டியூரில்
உறைபவனாய் , முன்னமே உலகுக்கு
வழங்கிய குற்றமற்ற வேதங்களை உடையவனான அப்பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள் .
பாடல்
எண் : 6
போர்ப் பனை
யானை உரித்த பிரான், பொறி வாய்அரவம்
சேர்ப்பது,
வானத் திரைகடல் சூழ் உலகம் இதனைக்
காப்பது
காரணமாகக் கொண்டான், கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை
ஒள்வாள் மழுவனையாம் அண்டர் கூறுவதே.
பொழிப்புரை : யானையை உரித்த தோலைப்
போர்க்கின்ற பிரானாய் , உடம்பில் புள்ளிகளைக்
கொண்ட பாம்பினை உடலில் சேர்த்து அணிந்தவனாய் , வானளாவிய அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட
இவ்வுலகத்தைக் காப்பதற்காகக் கூர்மையை உடைய மழுப்படையைக் கொண்ட கண்டியூர்ப்
பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள் .
பாடல்
எண் : 7
அட்டது
காலனை, ஆய்ந்தது வேதம்
ஆறு அங்கம், அன்று
சுட்டது
காமனைக் கண் அதனாலே, தொடர்ந்து எரிய,
கட்டு அவை
மூன்றும் எரித்த பிரான், கண்டியூர் இருந்த
குட்ட முன்
வேதப் படையனையாம் அண்டர் கூறுவதே.
பொழிப்புரை : கூற்றுவனை அழித்து , வேதங்கள் , ஆறு அங்கங்கள் என்ற இவற்றை ஆராய்ந்து , மன்மதனைக் கண்ணிலிருந்து தோன்றிய
தீயினால் சுட்டு , தொடர்ந்து எரிந்து
சாம்பலாகுமாறு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனாய்க் கண்டியூரில் உறையும்
கடல்போன்ற வேதங்களைத் தனக்குப் படையாக உடைய பெருமானையே தேவர்கள் போற்றுகின்றார்கள்
.
பாடல்
எண் : 8
அட்டும்
ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம்
இட்டுப்
பொதியும் சடைமுடியான், இண்டை மாலை அங்கைக்
கட்டும்
அரவு அது தான் உடையான், கண்டியூர் இருந்த
கொட்டும்
பறையுடைக் கூத்தனையாம் அண்டர் கூறுவதே.
பொழிப்புரை : உலகத்தை அழிக்கப்
பேரொலியோடு வந்த கங்கையையும் பிறையையும் மலர்களையும் வைத்து உள்ளடக்கிய சடைமுடியை
உடையவனாய், இண்டை மாலையையும் , கையில் அணிகலனாக அணியும் பாம்பையும்
உடையவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் , பறையை ஒத்த உடுக்கையை உடைய கூத்தப்
பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள் .
பாடல்
எண் : 9
மாய்ந்தன
தீவினை, மங்கின நோய்கள்
மறுகிவிழத்
தேய்ந்தன, பாவம் செறுக்ககில்லா, நம்மைச்
செற்ற அநங்கைக்
காய்ந்த
பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும்
ஆய்ந்த
பிரான் அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே.
பொழிப்புரை : மன்மதனை வெகுண்டு
அழித்த பிரான் , கண்டியூரை
உகந்தருளியிருக்கும் பிரான் , ஆறு அங்கங்களையும்
ஆராய்ந்தபிரான் ஆகிய சிவபெருமான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டுள்ளான் . அதனால்
தீவினைகள் மறைந்தன ; நோய்கள் செயலற்று
ஒளிகுறைந்தன ; கலங்கி விழுமாறு
பாவங்கள் தேய்ந்து விட்டன . தீவினை நோய்கள் பாவம் என்ற இவைகள் இனி நம்மை அழிக்க
வலிமை அற்றனவாகிவிட்டன .
பாடல்
எண் : 10
மண்டி
மலையை எடுத்து மத்து ஆக்கி,
அவ்
வாசுகியைத்
தண்டி
அமரர் கடைந்த கடல்விடம் கண்டுஅருளி,
உண்ட
பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சியோடி நண்ணக்
கண்ட
பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே.
பொழிப்புரை : தம் ஆற்றலால்
மிக்குச்சென்று மந்தரமலையைப் பெயர்த்துச் சென்று அதனை மத்தாகக்கொண்டு வாசுகி என்ற
பாம்பைக் கடைகயிறாகச் சுற்றித் தேவர்கள் கடைந்த கடலிலிருந்து புறப்பட்ட விடத்தைக்
கண்டு தேவர்கள் அஞ்சி ஒடிவந்து தன்னை அணுகுமாறு செய்த பிரானாய் , அவர்களிடம் அருள்செய்து விடத்தை உண்ட
பிரானாய்ப்பின் அது உள்ளே செல்லாதபடி கழுத்தில் அதனை ஒளிவீசுமாறு செய்த பெருமான்
கண்டியூரிலுள்ள தேவர் தலைவன் அல்லனோ?
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment