பாடல் 9 - வானரம் மழைதனில்




வானரம் மழைதனில் நனைய, தூக்கணம்
தான் ஒரு நெறி சொல, தாண்டிப் பிய்த்திடும்;
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே!      9.

     மரத்தில் இருந்த குரங்கு ஒன்று மழையில் நனை, அதனைக் கண்டு, அம்மரத்திலே கூடு கட்டிக்கொண்டு மழையில் நனையாமல் இருந்த வான் குருவியானது, குரங்கின் மீது வைத்த இரக்கம் பற்றி, "இந்த மழையில் நனையாது இருக்க ஒரு கூடு கட்டிக்கொள்ளலாமே" என்று தனக்குத் தெரிந்த உபாயத்தைக் கூற, அதனைக் கேட்ட அறிவில்லாத அந்தக் குரங்கு, கோபம் கொண்டு, தான் இருந்த இடத்தில் இருந்து பாய்ந்து, அந்த வான் குருவியானது அழகாகக் கட்டி வைத்திருந்த கூட்டினைப் பிய்த்து எறிந்தது.

     அதுபோல, தாம் கொண்ட நல்ல அறிவையும், அதற்கு ஏதுவாகத் தாம் கற்ற கல்வி அறிவையும், பெரியோர்களால் உயர்ந்தவை என்று சொல்லப்பட்ட சாத்திரங்களையும், இழி தன்மை உடைய மக்களுக்கு அறிவு உடையோர் உரைத்தால், துன்பமே உண்டாகும்.

No comments:

பொருளை அருளாக மாற்றும் வழி

“பொருளை அருளாக மாற்றும் வழி” -----      “அருளுடைமை” என்னும் அதிகாரத்துள் ஏழாம் திருக்குறளில்,  "பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்...