தண்தாமரையின்
உடன் பிறந்தும்
தண்தேன் நுகரா மண்டூகம்,
வண்டோ
கானத்து இடை இருந்து
வந்தே கமல மது உண்ணும்;
பண்டே
பழகி இருந்தாலும்
அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே
களித்தங்கு உறவாடித்
தம்மில் கலப்பார் கற்றாரே. 8.
தவளையானது, குளிர்ந்த தாமரையினுடன் நீரில் தோன்றியும், அந்தத் தாமரையில்
உள்ள குளிர்ந்த தேனை உண்ணாது. வண்டு இனமோ, வெகு தொலைவில் உள்ள காட்டிலே
இருந்தாலும்,
அந்தக்
குளத்தில் வந்து சேர்ந்து, தாமரை மலரில் உள்ள தேனை உண்டு, சுவை அறிந்து மகிழும்.
அதுபோல, அறிவில்லாத அற்பர்கள் முந்தியே
பழகி இருந்தாலும் நல்ல குணம் பொருந்தியவரை அறிய மாட்டார்கள். கல்வி அறிவில் சிறந்தவர்களோ, நெடுநாள் பழக்கம்
இல்லாவிட்டாலும், நல்லவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, மகிழ்ந்து, அங்கேயே உறவாடி, அவருடன் நட்புக்
கொண்டு,
அவரோடு
என்றும் கலந்து மகிழ்ந்து இருப்பர்.
"நல்லோரை" என்னும் சொல்லைத் தீவகமாக
வைத்து,
இருபாலும்
கூட்டிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
No comments:
Post a Comment