அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பொருவிக் கந்தொடு
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
இந்தப் பெண்ணுக்கு உன்
குரா மலர் மாலையைத் தந்து அருள்
தனனத்
தந்ததனத் தனனத் தந்ததனத்
தனனத் தந்ததனத் ...... தனதான
பொருவிக்
கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
புதுமைப் புண்டரிகக் ...... கணையாலே
புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
பொழியத் தென்றல்துரக் ...... குதலாலே
தெருவிற்
பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
திரியத் திங்களுதிப் ...... பதனாலே
செயலற்
றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்
தெரிவைக் குன்குரவைத் ...... தரவேணும்
அருவிக்
குன்றடையப் பரவிச் செந்தினைவித்
தருமைக் குன்றவருக் ...... கெளியோனே
அசுரர்க்
கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
தயில்கைக் கொண்டதிறற் ...... குமரேசா
தருவைக்
கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
தழுவிக் கொண்டபுயத் ...... திருமார்பா
தரளச்
சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
தணிகைச் செங்கழநிப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பொருவி
கந்தொடு அடர், செரு இக்கன் தொடும் இப்
புதுமைப் புண்டரிகக் ...... கணையாலே,
புளகக் கொங்கை இடத்து, இளக கொங்கை அனல்
பொழிய, தென்றல் துரக் ...... குதலாலே,
தெருவில்
பெண்கள் மிகக் கறுவிச் சண்டையிடத்
திரிய, திங்கள் உதிப் ...... பதனாலே,
செயல் அற்று, இங்கு அணையில் துயில் அற்று, அஞ்சி அயர்த்
தெரிவைக்கு உன் குரவைத் ...... தரவேணும்.
அருவிக்
குன்று அடையப் பரவிச் செந்தினை வித்து
அருமைக் குன்றவருக்கு ...... எளியோனே!
அசுரர்க்கு
அங்கு அயல் பட்ட, அமரர்க்கு அண்டம் அளித்து,
அயில் கைக் கொண்ட திறல் ...... குமரேசா!
தரு
வைக்கும் பதியில் திருவைச் சென்று அணுகித்
தழுவிக் கொண்ட புயத் ...... திருமார்பா!
தரளச்
சங்கு வயல் திரளில் தங்கு, திருத்
தணிகைச் செங்கழநிப் ...... பெருமாளே.
பதவுரை
அருவி குன்று அடைய பரவி --- நீரருவி
வீழும் வள்ளிமலை முழுவதும் உலாவிப் புகழ்ந்து,
செம் தினை வித்த --- செவ்விய தினையை
விதைத்திருந்த,
அருமை குன்றவர்க்கு --- அருமையான
வேடர்களுக்கு,
எளியோனே --- எளியவராய் வந்து அருள்
புரிந்தவரே!
அசுரர்க்கு அங்கு அயல்பட்ட ---
அசுரர்கட்கு அங்கு வேறுபட்ட,
அமரர்க்கு அண்டம் அளித்து --- தேவர்கட்கு
அவர்கள் உலகத்தைத் தந்தருளிய,
அயில் கைகொண்ட --- வேலாயுதத்தைத்
திருக்கரத்தில் ஏந்தியருளும்,
திறல் குமரேசா --- பேராற்றல் படைத்த குமாரக்
கடவுளே!
தரு வைக்கும் பதியில் --- கற்பக மரம்
வைத்துள்ள அமராவதி நகரில்,
திருவை சென்று அணுகி --- தேவயானையிடம் போய்ச்
சேர்ந்து,
தழுவிக் கொண்ட புயத் திருமார்பா ---
தழுவிக்கொண்ட தோள்களை உடைய திருமார்பினரே!
தரளம் சங்கு வயல் திரளில் தங்கும் ---
முத்தும், சங்கும், வயல்களில் கூட்டமாகத் தங்குகின்ற,
திருத்தணிகை --- திருத்தணிகையில் வாழ்பவரே!
செங்கழுநி --- செங்கழுநீர் மலர்
மாலையைப் புனைபவரே!
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
பொருவி கந்தொடு அடர் --- போர்
செய்வதற்கு உரிய மலர்க் கணைகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு வந்த,
செரு இக்கன் தொடும் --- போர் செய்து கரும்பு
வில்லோனாகிய மன்மதன் தொடுகின்ற,
இப்புதுமை புண்டரிக கணையாலே --- இந்தப் புதிய
தாமரைக் கணைகளாலும்,
புளக கொங்கை இடத்து --- புளகம் கொண்டுள்ள
கொங்கையிடத்தில்,
இளக கொங்கை --- நெகிழ்ச்சியுற்ற
பூந்தாதுக்கள்,
அனல் பொழிய --- நெருப்பைப் பொழிந்து வீசவும்,
தென்றல் துரக்குதலாலே --- தென்றல் காற்று
சோர்வடையச் செய்வதனாலும்,
தெருவில் பெண்கள் மிக கறுவி --- தெருக்களில்
பெண்கள் மிகவும் பகைகொண்டு,
சண்டையிட திரிய --- சண்டையிட வேண்டித்
திரியவும்,
திங்கள் உதிப்பதனாலே --- சந்திரன்
உதயமாவதாலும்,
செயல் அற்று --- செயல் அற்றுப்போய்,
இங்கு அணையில் துயில் அற்று --- இங்குப் படுக்கையில் தூக்கமும் அற்று,
அஞ்சி அயர் தெரிவை --- அச்சமும் சோர்வுங்
கொண்டுள்ள இப்பெண்ணுக்கு,
உன் குரவை தரவேணும் --- தேவரீரது குராமலர்
மாலையைத் தந்தருளுவீராக.
பொழிப்புரை
வள்ளிமலையில் உள்ள அருவிகள் முழுவதும்
சென்று புகழ்ந்து, அங்கு செந்தினையை
விதைத்த அரிய வேடர்கட்கு எளியராகின்றவரே!
அசுரர்களுக்கு மாறுபட்ட தேவர்களுக்கு அமராவதி
நகரையளித்து வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்திய பேராற்றல் படைத்த குமாரக்
கடவுளே!
கற்பகத் தரு வைத்த அமராவதி நகரிற் சென்று
தெய்வயானையைத் தழுவிக் கொண்ட தோள்களையுடைய திருமார்பினரே!
முத்துக்களும் சங்குகளும் கூட்டமாகத்
தங்குகின்ற உயர்ந்த திருத்தணி மலையில் எழுந்தருளியவரே! செங்கழுநீர் மலர் மாலை
தரித்த பெருமிதம் உடையவரே!
போர் செய்வதற்குரிய மலர்களைப் பற்றுக்
கோடாகக் கொண்டு வந்த போர் வல்ல கரும்பு வில்லோனாகிய மன்மதன் விடுகின்ற இந்தப்
புதிய தாமரைப் பூங்கணையாலும், புளகமுடைய தனத்தில்
நெகிழ்கின்ற பூந்தாதுக்கள் நெருப்பைப் பொழியவும், தென்றல் காற்று துன்புறுத்துவதாலும், வீதியில் பெண்கள் மிகவும் பகைத்துச்
சண்டையிட்டுத் திரியவும், சந்திரன்
உதிப்பதனாலும், இத்தலைவி செயல்
அற்றுப் போய், இங்கு படுக்கையில்
தூக்கமும் அற்று, அஞ்சியும் சோர்ந்து
உள்ளாள். ஆதலால் இப்பெண்ணுக்கு உமது குராமலர் மாலையைத் தந்தருளுவீராக.
விரிவுரை
பொருவிக்
கந்தொடடர் ---
பொரு
விகந்து ஒடு அடர் என்று பதப் பிரிவு செய்க.. வீ-மலர். இது வி எனக் குறுகி நின்றது.
மன்மதனுக்குப்
போர் செய்வதற்குப் பற்றுக் கோடாக இருப்பது பஞ்சமலர்ப் பாணங்கள்.
கந்து-பற்றுக்கோடு.
செவிக்கன்றொடு
---
செரு
இக்கண் தொடு. இக்கு-கரும்பு. இக்கன் கரும்பு வில்லையுடையவன்
மன்மதனுக்கு
கரும்பு வில்; சுரும்பு நாண்; மலர் பாணம்.
கரும்பு
வில்லை வைத்துக்கொண்டு அவன் இரும்பையும் உருக்குகின்றான்.
புதுமைப்
புண்டரிகக் கணையாலே ---
புதுமை
வாய்ந்த தாமரைக் கணை இது. காம நினைப்பூட்டும் முதற் கணை.
புளகக்
கொங்கையிடத்து ---
மகிழ்ச்சியினால்
தனம் புளகிக்கும்.
கொங்கை
யனல்பொழிய ---
கொங்கு-பூந்தாதுக்கள்.
காதல்
கொண்டார்க்குப் பூந்தாதுக்கள் அனல்போல் வெப்பத்தைச் செய்யும்.
தென்றல்
துரக்குதலாலே ---
இனிமையான
தென்றல் காற்று காமுகர்க்கு அனலாக இருக்கும். எல்லோர்க்கும் இனிக்கும் கற்கண்டு
காய்ச்சலுடையார்க்குக் கசக்கும். அதுபோல் காம நோயுடையார்க்கு, குளிர்ந்த சந்திரனும், குளிர்ந்த தென்றலும், பூமணமும் துன்பத்தை விளைவிக்கும்.
தெருவில்
பெண்கள் மிகக் கறுவிச் சண்டையிட ---
தலைவி
தன் தலைவனிடம் காதல் கொண்டு உண்ணாமலும் உறங்காமலும் இருப்பதைக்கண்ட மற்ற மகளிர்
தெருவில் கூடி பகைத்துப் பழிப்புரை கூறித் தூற்றுவர்.
செயலற்றறு
இங்கு அணையில் துயில் அற்ற அஞ்சி அயர்த் தெரிவைக்கு உன் குரவைத் தரவேணும்:-
இத்திருப்புகழ்
நாயகீ நாயக பாவத்தில்பாடியது. அகப்பொருள் துறையில் அமைந்தது.
முருகன்
விரும்பிய ஆன்மாவாகிய தலைவி முருகனை அடையப் பெறாது, செயல் அற்றும், துயில் அற்றும், அப்பரம நாயகனை அடைய முடியாதோ என்று
உள்ளம் அஞ்சியும், அயற்சியுற்றும் வேதனைப்படுகின்றாள்.
“முருகவேளே!
இத்தலைவிக்கு உமது திருமார்பில் விளங்கும் குராமலர் மாலையைத் தந்தருளுவீராக” என்று
பாங்கி கூறுகின்றாள்.
முருகப்
பெருமானுக்கு அன்பான மலர் குரா.
அருவிக்குன்
றடையப் பரவி ---
வள்ளி
மலையில் உள்ள அருவிகள் யாவும் வள்ளியம்மையாரால் புனிதமானவை. அதனால் முருகப்
பெருமான் அந்த அருவிகள் தோறும் சென்று ஆடிப் புகழ்ந்து போற்றினார்.
அசுரர்க்கு
அங்கு அயல்பட்ட அமரர்க்கு ---
அசுரர்கள் தீய குணங்களின் வடிவானவர்கள்.
அமரர்கள் நற்குணம் படைத்தவர்கள். எனவே தீய குணத்துடன் நற்குணம் மாறுபட்டது.
அண்டம்
அளித்து ---
ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அரசு புரிந்த
சூரபன்மன் தேவர்களைச் சிறையில் இட்டு நூற்றெட்டு யுகங்களாகத் துன்புறுத்தினான்.
முருகப் பெருமான் அசுரரை யழித்து அமரர்கட்குப் பண்டுபோல் அவர்களுடைய பொன்னுலகைக்
கொடுத்தருளினார்.
தரு
வைக்கும் பதி ---
தரு-கற்பக
மரம். இது நினைந்ததைத் தரும் மகிமையுடையது. இந்தக் கற்பக மரத்தைத் தன்னகத்தே கொண்ட
நகரம் அமராவதி.
கற்பக
நிழலில் வளர்ந்த தெய்வயானையம்மையை எம்பெருமான் திருமணஞ்செய்து கொண்டருளினார்.
தரளச்
சங்குவயல் ---
திருத்தணிகை மலையைச் சூழ்ந்துள்ள வயல்களில் சங்கும், சங்குகள் ஈனும் முத்தும்
குவிந்திருக்கின்றன. அத்துணை வளமைமிக்கது.
கருத்துரை
தணிகை நாயகா! இத் தலைவிக்கு உன் குரா மலர்
மாலையைக் கொடுத்தருள்வீர்.
No comments:
Post a Comment