திருத்தணிகை - 0300. பொற்குடம் ஒத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பொற்குடம் ஒத்த (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
மாதர் மயல் அகல அருள்

தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தானா


பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்
     கைப்பொருள் புக்கிட ...... வேதான்

புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்
     பொட்டணி நெற்றிய ...... ரானோர்

அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்
     அற்பர மட்டைகள் ...... பால்சென்

றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
     அற்றிட வைத்தருள் ...... வாயே

கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
     டக்கைமு ழக்கொலி ...... யாலக்

கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்
     குத்தத ணிக்கும ...... ரேசா

சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு
     றத்தித னக்கிரி ...... மேலே

தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த
     லைக்குலை கொத்திய ...... வேளே.


பதம் பிரித்தல்


பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர்,
     கைப்பொருள் புக்கிட ...... வே தான்,

புள்குரல் விச்சை பிதற்று மொழிச்சியர்,
     பொட்டு அணி நெற்றியர் ...... ஆனோர்,

அற்ப இடைக் கலை சுற்றி நெகிழ்ப்பவர்,
     அற்பர் அ மட்டைகள் ...... பால் சென்று,

அக் கண் வலைக்குள் அகப்படு புத்தியை
     அற்றிட, வைத்து, ருள் ...... வாயே.

கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து
     இடக்கை முழக்கு ஒலி ...... ஆல,

கொக்கிறகு, க்கு, , மத்தம் அணிக்கு அருள்
     குத்த! தணிக் குமர ...... ஈசா!

சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி,
     குறத்தி தனக் கிரி ...... மேலே

தைக்கும்  மனத்த! சமர்த்த! அரக்கர்
     தலைக்குலை கொத்திய ...... வேளே.


பதவுரை
 
        
     கொக்கரை --- கொக்கரை என்ற வாத்தியமும்,

     சச்சரி --- சச்சரிஎன்ற வாத்தியமும்,

     மத்தளி --- மத்தளி என்ற வாத்தியமும்,

     ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல --- ஒத்து இடக்கை என்ற வாத்தியங்களும் முழங்குகின்ற ஓசை நிரம்ப,

     கொக்கு இறகு --- கொக்கின் இறகு,

     அக்கு --- எலும்பு,

     ஆர --- பாம்பு,

     மத்தம் --- ஊமத்தம் பூ,

     அணிக்கு அருள் குத்த --- அணிந்துள்ள சிவபெருமானுக்கு இரகசியப் பொருளை அருள் புரிந்தவரே!

     தணி குமரேசா --- திருத்தணிகையில் வாழும் குமாரக் கடவுளே!

     சர்க்கரை --- சர்க்கரை,

     பழம் ஒத்த --- மா பலா கதலி என்ற முப்பழத்தை நிகர்த்த,

     மொழிச்சி குறத்தி --- மொழியையுடைய குறமகளின்,

     தனகிரி மேலே --- தனமாகிய மலையின் மீது,

     தைக்கு மனத்த --- தைத்துள்ள மனத்தினரே!

     சமர்த்த --- சாமர்த்தியமுள்ளவரே!

     அரக்கர் தலை குலை கொத்திய --- அரக்கர்களுடைய தலைக் கூட்டத்தை வெட்டி அழித்த,

     வேளே --- உபகாரியே!

     பொன் குடம் ஒத்த --- பொன்னாலாகிய குடத்தைப் போன்ற,

     குயத்தை அசைப்பவர் --- தனத்தினை அசைப்பவர்கள்,

     கைப்பொருள் புக்கிடவே தான் --- கையில் பொருள் புகுந்த பின்னர்,

     புள் குரல் விச்சை பிதற்று மொழிச்சியர் --- பறவைகளின் குரல்களைக் காட்டி மாய வித்தைகளைக் குழறிப் பேசும் பேச்சுகளை உடையவர்கள்,

     பொட்டு அணி நெற்றியர் ஆனோர் --- பொட்டு அணிந்த நெற்றி உடையவர்கள்,

     அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் --- மெல்லிய இடையில் ஆடையைச் சுற்றி அது அவிழுமாறு செய்பவர்கள்,

     அற்பர் --- அற்பத்தனம் உள்ளவர்கள்,

     அ மட்டைகள் பால் சென்று --- அந்த அறிவில்லாதவர்களாகிய பொது மாதர்களிடம் போய்,

     அக் கண் வலைக்குள் அகப்படு புத்தியை --- அவர்களுடைய அந்தக் கண் வலைக்குள் அகப்படுகின்ற புத்தியை,

     அற்றிட --- என்னைவிட்டு நீங்குமாறு செய்து,

     வைத்து --- கருணை வைத்து,

     அருள்வாயே --- திருவருள் புரிவீராக.
    

பொழிப்புரை 

  கொக்கரை, சச்சரி, மத்தளி, ஒத்து,இடக்கை யென்ற வாத்தியங்கள் மிகுதியாக ஒலிக்க, கொக்கின் இறகு, எலும்பு, பாம்பு, ஊமத்தமலர், இவைகளை அணிகின்ற சிவபெருமானுக்கு இரகசியத்தை உபதேசித்தருளியவரே!

     திருத்தணியில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!

     சர்க்கரையும், முப்பழத்தையும், ஒத்த இனிய மொழிகளையுடைய குறமகளாகிய வள்ளிபிராட்டியின் தனமாகிய மலையின்மீது அன்பு வைத்த மனத்தினரே!

     சமர்த்தரே!

     அரக்கர்களுடைய தலைக்கூட்டத்தை வெட்டியழித்த உபகாரியே!

     தங்கக் குடத்தை நிகர்த்த தனத்தை அசைப்பவர்களும், கைப்பொருள் கிடைத்தவுடன், பறவைகளின் குரல்களைக் காட்டி மாய வித்தைகளை குறைப் பேசுபவர்களும், பொட்டு அணிந்த நெற்றியையுடையவர்களும், மெல்லிய இடையில் சுற்றிய ஆடையை அவிழ்ப்பவர்களும், அற்பர்களும், அந்த அறிவிலிகளுமாகிய பொது மாதர்களிடத்தே சென்று அவர்களுடைய கண்வலைக்குள் அகப்படுகின்ற புத்தியை என்னை விட்டு நீங்கச் செய்து, அருள் புரிவீராக.

விரிவுரை

புட்குரல் விச்சை பிதற்று மொழிச்சியர் ---

பொது மாதர் தம்பால் வரும் ஆடவர் மயங்குமாறு பறவைகளின் ஒலிபோல் கூவியழைத்து உபசரிப்பார்கள்.

அற்ப இடைக் கலை சுற்றி ---

அற்பமான இடையில் ஆடையை உடுத்தி அதை மெல்ல அவிழ்ப்பார்கள்.

அற்பர மட்டைகள் ---

அற்பர் அ மட்டைகள் என்று பதச் சேதஞ் செய்க. அற்பர்கள்; அந்த மட்டைகள் என்று பொருள் செய்க. மட்டைகள்-அறிவில்லாதவர்கள்.

அக்கண் வலைக்குள் அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே ---

பொது மகளிர் நடு வீதியில் சென்று நின்று, அவ்வழி செல்கின்ற இளைஞர்களை, தங்கள் கூந்தலை அவிழ்த்துக் கோதி, அக்கூந்தலாகிய காட்டில் கண்ணாகிய வலைபோட்டுப் பிடித்துக் கொள்வார்கள். இளைஞர்கள் பறவைகள்.
    
திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழல் காட்டில்
 கண்ணி வைப்பார் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ       --- தாயுமானார்.

  முருகா! இவ்வாறு விலைமகளிர் கண்வலைப்படும் அடியேனுடைய புத்தியை, அவ்விதம் அவரோடு செல்லாது தடுத்து ஆட்கொண்டருளும் என்று வேண்டுகின்றார்.

கொக்கரை சச்சரி ---

கொக்கரை, சச்சரி என்பவைகள் ஒரு வகையான வாத்தியங்கள்.

மத்தளி ---

மத்தள வகையில் ஒன்று.

ஒத்து ---

ஒத்து என்பதும் ஒரு வகை வாத்தியம். நாதசுரத்துடன் சுருதியாக ஊதும் குழல்.

இடக்கை ---

இடக்கை என்பது ஒரு வாத்தியம்.

சிவபெருமானுக்கு முருகன் உபதேசிக்கும்போது இந்த வாத்தியங்கள் யாவும் ஒலித்தன.

  இன்றும் உபதேச மொழி பிறருடைய செவியில் புகாமல் இருக்கும் பொருட்டுச் சில வாத்தியங்களை ஒலிப்பது கண்கூடு.

கொக்கிற கக்கர மத்தமணி ---

கொக்கிரகு; அக்கு-எலும்பு. அர-பாம்பு மத்தம்-ஊமத்தம். இவைகளைச் சிவபெருமான் அணிந்தவர்.

அருள் குத்த ---

குப்தம் என்பது குத்த என வந்தது.

குப்தம்-இரகசியம். பிரணவப் பொருளாகிய இரகசியத்தை உபதேசித்தருளினார்.

சர்க்கரை முப்பழமொத்த மொழிச்சி ---

வள்ளி நாயகியாரது மொழியைப் பற்றிக் கூறும்போதெல்லாம் அருணகிரிநாத சுவாமிகள், அம்மொழியின் இனிமை கனியமுதிலும் மேற்பட்டது என்கின்றார்.

    பாகு கனிமொழி மாது குறமகள்     --- (பாதிமதிநதி) திருப்புகழ்


   தேனென்று பாகென்றுவமிக் கொணா மொழித் தெய்வவள்ளி
                                                                    --- கந்தர் அலங்காரம்

வள்ளியம்மை தமிழகத்தில் அவதரித்த தமிழணங்கு. அவர் பேசியது தமிழ். தமிழ் இனிய மொழி.

செந்தமிழ்த் தீஞ்சொல், கரும்பினும் இனிதாக இரும்பு நெஞ்சையும் உருக்கும் திறம் உடையது.
  
கருத்துரை
 

தணிகேசா! மாதர் தம் கண்வலைப் படாத வண்ணம் காத்தருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...