அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அவாமருவு (சுவாமிமலை)
சுவாமிநாதா! மூவாசையால்
வருந்தாமல்,
திருவடியில் வர அருள்
தனாதன
தனாதன தனாதன தனாதன
தனாதனன தானந் ...... தனதானா
அவாமரு
வினாவசு தைகாணும டவாரெனு
மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே
அராநுக
ரவாதையு றுதேரைக திநாடும
றிவாகியுள மால்கொண் ...... டதனாலே
சிவாயவெ
னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென் ...... றருள்வாயே
திரோதம
லமாறும டியார்கள ருமாதவர்
தியானமுறு பாதந் ...... தருவாயே
உவாவினி
யகானுவி னிலாவும யில்வாகன
முலாசமுட னேறுங் ...... கழலோனே
உலாவுத
யபாநுச தகோடியு ருவானவொ
ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே
துவாதச
புயாசல ஷடாநந வராசிவ
சுதாஎயினர் மானன் ...... புடையோனே
சுராதிப
திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அவா
மருவு இனா வசுதை காணும் மடவார் எனும்
அவார், கனலில் வாழ்வு என்று ...... உணராதே,
அரா
நுகர வாதை உறு தேரை கதி நாடும்
அறிவாகி, உள மால் கொண்டு, ...... அதனாலே
சிவாய
எனும் நாமம் ஒருகாலும் நினையாத,
தி-
மிர ஆகரனை வாஎன்று......அருள்வாயே.
திரோத
மலமாறும் அடியார்கள், அருமாதவர்
தியானம் உறு பாதம் ...... தருவாயே.
உவா
இனிய கானுவில் நிலாவும் மயில்வாகனம்
உலாசமுடன் ஏறும் ...... கழலோனே!
உலா
உதய பாநு சதகோடி உரு ஆன ஒளி,
வாகும் அயில் வேல்அம் ...... கையிலோனே!
துவாதச
புயாசல! ஷடாநந வரா! சிவ
சுதா! எயினர் மான்அன்பு ...... உடையோனே!
சுர
அதிபதி மால் அயனும் மாலொடு சலாம்இடு
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
பதவுரை
உவா இனிய கானுவில் நிலாவு --- இளமை
யுடையதும், இன்பத்தை
விளைவிக்கும் கானத்தில் ஒளிசெய்து கொண்டு உலாவுகின்றதுமாகிய,
மயில் வாகனம் உலாசமுடன் ஏறும் கழலோனே ----
மயில் வாகனத்தின் மீது மனமகிழ்ச்சியுடன் ஊர்ந்து வருகின்ற, வீரக்கழலை அணிந்த
திருவடியை உடையவரே!
உலா சதகோடி உதய பானு --- நாள்தோறும்
உலவுகின்ற நூறுகோடி உதயசூரியர்களினது,
உரு ஆகு --- ஒளிகள் ஒருங்கு கூடினால் ஒத்த,
ஒளி வாகு அயில் வேல் அம் கையிலோனே ---
ஒளியையும், அழகையும் உடைய, கூரிய வேற்படையை அழகிய கரத்தில்
உடையவரே!
துவாதச புய அசல --- மலைபோன்ற பன்னிரண்டு
புயங்களையுடையவரே!
ஷட் ஆனன ---- ஆறு திருமுகங்களையுடையவரே!
வரா --- சிறந்தவரே!
சிவ சுத --- சிவகுமாரரே!
எயினர் மான் அன்பு உடையோனே --- வேடர்
குலத்தில் வளர்ந்த மான்போன்ற பார்வையுடைய வள்ளி நாயகியாரிடத்தில் அன்புடையவரே!
சுர அதிபதி --- தேவர் கோமானாகிய
இந்திரனும்,
மால் --- திருமாலும்,
அயனும் --- பிரமதேவரும்,
மாலொடு சலாம் இடு --- அன்புடன் வணக்கம்
செய்கின்ற,
சுவாமிமலை வாழும் பெருமாளே --- சுவாமிமலையில்
வாழ்கின்ற பெருமையின் மிக்கவரே!
அவா மருவு இனா --- ஆசையுண்டாகில்
துன்பத்தை விளைவிக்கின்ற,
வசுதை --- மண்ணாசையும்,
காணும் மடவார்கள் அவார் ---
விரும்பிப்பார்க்கின்ற பெண்கள் என்கின்ற மாதராசையும், (பொன்னாசையும்)
கனலில் வாழ்வு என்று உணராதே --- நெருப்பின்
மீது நடாத்தும் துன்ப வாழ்வு என்று அறியாமல்,
அரா நுகர வாதை உறு தேரை கதி நாடும் அறிவு ஆகி
--- பாம்பு விழுங்குகின்றபோது துன்பப்படுகின்ற தேரையின் நிலையில் இருந்துகொண்டு
இன்பத்தை விரும்பும் அறிவுடையவனாகி,
உளம் மால் கொண்டு ---- உள்ளம் மயக்கத்தை யடைந்து,
அதனாலே --- அதனாலே,
சிவாயம் எனு நாமம் ஒரு காலும் நினையாத ---
சிவாய என்ற திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத,
திமிர ஆகரனை வா என்று அருள்வாயே --- அஞ்ஞான
இருளுக்கு உறைவிடமான அடியேனைத் திருவடியில் வந்து இன்புற “வருக” என்று அழைத்து
அருள்புரிவீர்,
திரோத மலமாறும் அடியார்கள் --- திரோதம்
என்ற மலம் நீக்கமுற்ற மெய்யடியார்களாலும்,
அரு மாதவர்கள் - அரிய பெரிய தவத்தைச்
செய்யும் முனிவர்களாலும்,
தியானம் உறு பாதம் தருவாயே --- தியானஞ்
செய்யப்படுகின்ற தேவரீருடைய திருவடிகளை அடியேனுக்குத் தந்தருளுவீர்.
பொழிப்புரை
இளமை உடையதும் கானகத்தில் ஒளி செய்து
கொண்டு உலாவுவதும் ஆகிய மயில் பறவையின் மீது மகிழ்ச்சியுடன் ஆரோகணித்து வருகின்ற
வீரக்கழலை அணிந்த திருவடியை உடையவரே!
நாள்தோறும் உலாவுகின்ற நூறுகோடி உதய
சூரியர்களினது ஒளிகள் திரண்டு உருவெடுத்தது போன்ற கூரிய வேற்படையைத்
திருக்கரத்தில் ஏந்தியிருப்பவரே!
மலை போன்ற பன்னிருபுயங்களை உடையவரே!
ஆறுமுகரே!
சிறந்தவரே!
சிவ குமாரரே!
வேடரிடம் வளர்ந்த வள்ளியம்மையாரிடத்தில்
அன்பு உடையவரே!
இந்திரனும், நாராயணரும், நான்முகனும் அன்புடன் வணங்குகின்ற
சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
ஆசை உண்டாகில் துன்பத்தை விளைவிக்கின்ற
மண், பெண், பொன் என்ற மூன்றும் பற்றி, அதனால் வரும்
வாழ்வு நெருப்பு மயமானது என்று உணராமல், பாம்பின்
வாய்த் தேரை துன்புறுவது போல் துன்புற்று, அந்த நிலையில் இன்பத்தை நாடும் அறிவுடன்
உள்ள மயக்கத்தைக் கொண்டு, அதனால் “சிவாய” என்ற
சிறந்த மந்திரத்தை ஒரு முறையாவது நினையாத அஞ்ஞானம் நிறைந்த அடியேனை “வருக” என்று
அழைத்து அருள்புரிவீர். அவ்வாறு அழைத்து, திரோதமல
நீக்கமுடைய அடியார்களும், அரியபெரிய
தவசீலர்களும் தியானம் செய்கின்ற தேவரீருடைய திருவடியைத் தந்தருள்வீர்.
விரிவுரை
அவாமருவு
இனா வசுதை..............என்று உணராதே ---
அவாமருவு
இனா என்பது பிரித்துப் பொருள் கொள்ளப்பட்டது. இன்னா என்பது இனா என, னகரமெய் மறைந்து வந்தது;
இன்னா-துன்பம்; ஆசையினால் துன்பம் விளைகின்றது. அவ்வாசை
மூன்று பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. வசுதை-மண்; மடவார்-பெண்; இனம் பற்றிப் பொன்னையுங் கூட்டிப்
பொருளுரைக் கப்பட்டது.
“அவாமருவின் ஆவசுதை”
என்று பிரித்துப் பொருள் கொள்வாரு முளர்.
“அவாமருவின் ஆவசுதை
காணு மடவார்” என்று பிரிக்குங்கால் ஆவ என்பதற்கு இரக்கக் குறிப்பு என்றும், சுதை என்பதற்கு அமிர்தம் என்றும்
பொருள்படும். கனலில் வாழ்வு என்பது நெருப்பிடை வாழ்வு என்று பொருள்படும். துன்ப
வாழ்வு என்பது குறிப்பு.
அ-அந்த
சுதை காணு மடவார்-(அமுதமன்ன மடவார் எனும் அவர்) அவா-மருவு-இன்னா(ஆசை பற்றிய இன்னாத
பொருள் கனலில்) வாழ்வு- தீயொடு வாழ்வு என்று (நான்) உணராது எனவும் பொருள்படும்.
அவர்
என்பது அவார் என நீட்டல் விகாரமாயிற்று, “அவ்வார்
கனல் இல்வாழ்வு” என்று பிரித்துக் கொள்வது பொருந்தாது.
அரா
நுகர வாதை உறு தேரை ---
பாம்பின்
வாயிலுள்ள தேரையின் மகிழ்ச்சிபோல் இயமன் பாசக் கயிற்றில் அகப்பட இருக்கும்
உயிர்கள் சிறு இன்பங்களைக் கண்டு மயங்கி அறிவிழந்து கேடுறுகின்றன.
செடிகொள்நோய்
யாக்கைஅம் பாம்பின்வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை
கடிகொள்பூந்
தேன்சுவைத்து இன்புற லாம்என்று கருதினாயே,
முடிகளால்
வானவர் முன்பணிந்து அன்பராய் ஏத்துமுக்கண்
அடிகள்
ஆரூர்தொழுது உய்யலாம், மையல்கொண்டு அஞ்சல்
நெஞ்சே.
---
திருஞானசம்பந்தர்
ஓம்பினேன்
கூட்டை வாளா உள்ளத்துஓர் கொடுமை வைத்தே
காம்புஇலா
மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த்
தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பி,
நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே. ---
அப்பர்.
பாம்பு
அழல் வாயினால் பற்ற, மண்டுகம்
தேம்பிடும்
துயர் உறும் சீவன், தேயும் நாள்
ஓம்பிட
வல்லரே, அற்ற மற்றைபார்
போம்
பொழுது அருந்துணை புரிந்த புண்ணியம் ---
சிவதருமோத்தரம்.
அடுகரி
தொடர வீழ, ஐந்தலை நாகம் காண
இடிகிணற்று
அறுகின் வேரைப் பற்றி நான்றிட, அவ் வேரைக்
கடுகஓர்
எலியும் வந்து கறித்திட, அதில் நின்றோனுக்கு
இடை
துளி தேன்நக்கு இன்பம் போலும்இப் பிறவி இன்பம்.
கொண்டு
விண் படர் கருடன் வாய்க் கொடுவரி நாகம்,
விண்ட
நாகத்தின் வாயினில் வெருண்ட வன் தேரை,
மண்டு
தேரையின் வாய்தனில் அகப்படு தும்பி,
வண்டு
தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம். ---
விவேகசிந்தாமணி
சிவாய:-
இது
மந்திரங்களுக்குள் தலைசிறந்தது. இதனை ஒரு முறை நினைக்கினும் கோடி வினைகள் நீங்கும்.
“அரகர சிவாய என்று
தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும் அறியாமல்” --- (கருவினுரு) திருப்புகழ்
சிவாய
நம எனச் சித்தம் ஒருக்கி
அவாயம்
அறவே அடிமை அதுஆக்கிச்
சிவாய
சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம்
கெட நிற்க ஆனந்த மாமே. ---- திருமந்திரம்.
திமிராகரனை:-
திமிரம்-இருள்.
அறியாமையாகிய இருள்; ஆகரம்-உறைவிடம்.
ஆன்மாக்களாகிய நாம் திமிராகரர்;
இறைவன்
ஞானாகரன்.
திரோத
மலம்:-
திரோத
மலம்-மறைப்புச் சத்தி; ஆன்மாக்களுக்கு
அநாதியே செம்புக்குக் களிம்பு போலுள்ள ஆணவமலத்தை நீக்கும் பொருட்டு திரோதமலத்தை
இறைவன் தந்தருளினார். ஆணவமலம் அநாதி; மாயையும்
கன்மமும் இறைவன் அறு தொழிலிற் படத் தந்தது. இம்மூன்றுஞ் சடமாதலால், தொழிற்படுத்த திரோத சக்தியை அருளினார்.
தேரை யசைக்க சன்னமும் மூங்கிலுமிருந்தும் தொழிற்படுத்த மனிதனை யனுப்புவதைப்
போலென்றுணர்க.
முருகவேள்
திருவடி திரோதமல நீங்கிய அடியார்களாலும் அரிய பெரிய தவஞ்செய்த தவ முனிவராலும்
தியானித்து அறிவுவிழியால் காணத் தக்கது.
உவா:-
“உவா” என்பதற்கு
யானையென்றும் பொருளுரைக்கலாம்; முருகப்பெருமானுக்கு
யானை வாகனமும் உளதாதல் பற்றி.
கானு:-
கான்
என்பது உகரச் சாரியை பெற்றது.
“கானமயில் வீரன்”
“கானமயில் மேல்தரித்த
பெருமாளே” --- (சூலமென) திருப்புகழ்.
என்ற
வாக்குகளையும் உன்னுக.
உலாவுதய.............அயில்வேள்:-
வேற்படை
நூறுகோடி பால சூரியப்பிரகாசத்துடன் குளிர்ந்து விளங்குகின்றது. வேல் ஞானமாதலால்
ஒளி வடிவமாக மிளிர்கின்றது.
‘சுடர்ப்பரிதி ஒளிப்ப,நில ஒழுக்குமதி
ஒளிப்ப,அலை அடக்குதழல் ஒளிப்ப, ஒளிர்
ஒளிப் பிரபை வீசும்‘ --- வேல்வகுப்பு.
சுராதிபதி.............சலாமிடும்:-
முருகப்பெருமான்
முழுமுதற் கடவுளாதலால், மூவருந் தேவரும் மற்ற
யாவரும் வணங்கி வழிபடுகின்றார்கள்.
“அரிஅர பிரம
புரந்தராதியர் கும்பிடுந் தம்பிரானே” --- (கரியுரி) திருப்புகழ்
கருத்துரை
மயில் வாகனரே! வேலாயுதரே! பன்னிருபுயாசல
ஆறுமுக வள்ளலே! சிவசுத! வள்ளிமணாள! மூவர் வணங்கும் முழுமுதலே! சுவாமிமலைக் குமர!
மூவாசையால் வாடி வருந்தாமல் அடியேனை அழைத்துத் திருவடியைத் தந்தருள்வீர்.
No comments:
Post a Comment