சுவாமி மலை - 0202. ஆனனம் உகந்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆனனம் உகந்து (சுவாமிமலை)

சுவாமிநாதா!
மாதர் மயல் அ, திருவடி தீட்சை தந்து, ஞானோபதேசம் அருள்வாய்.

தானதன தந்த தானன
தானதன தந்த தானன
     தானதன தந்த தானன ...... தனதான


ஆனனமு கந்து தோளொடு
தோளிணைக லந்து பாலன
     ஆரமுது கண்டு தேனென ...... இதழூறல்

ஆதரவி னுண்டு வேல்விழி
பூசலிட நன்று காணென
     ஆனையுர மெங்கு மோதிட ...... அபிராம

மானனைய மங்கை மார்மடு
நாபியில்வி ழுந்து கீடமில்
     மாயுமனு வின்ப வாசைய ...... தறவேயுன்

வாரிஜப தங்கள் நாயடி
யேன்முடிபு னைந்து போதக
     வாசகம்வ ழங்கி யாள்வது ...... மொருநாளே

ஈனவதி பஞ்ச பாதக
தானவர்ப்ர சண்ட சேனைகள்
     ஈடழிய வென்று வானவர் ...... குலசேனை

ஏவல்கொளு மிந்த்ர லோகவ
சீகரவ லங்க்ரு தாகர
     ராசதம றிந்த கோமள ...... வடிவோனே

சோனைசொரி குன்ற வேடுவர்
பேதைபயில் கின்ற ஆறிரு
     தோளுடைய கந்த னேவய ...... லியில்வாழ்வே

சூளிகையு யர்ந்த கோபுர
மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
     சுவாமிமலை நின்று லாவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

ஆனனம் உகந்து, தோளொடு
தோள் இணை கலந்து, பால்அன
     ஆர்அமுது கண்டு தேன்என ...... இதழ்ஊறல்

ஆதரவின் உண்டு, வேல்விழி
பூசல்இட, நன்று காண் என
     ஆனை உரம் எங்கும் மோதிட ...... அபிராம

மான்அனைய மங்கை மார், மடு
நாபியில் விழுந்து, கீடமில்
     மாயும் மனு இன்ப ஆசைஅது ...... அறவே,உன்

வாரிஜ பதங்கள் நாய்அடி-
யேன் முடி புனைந்து, போதக
     வாசகம் வழங்கி ஆள்வதும் ...... ஒருநாளே.

ஈன அதி பஞ்ச பாதக
தானவர் ப்ரசண்ட சேனைகள்
     ஈடு அழிய வென்று, வானவர் ...... குலசேனை

ஏவல் கொளும், ந்த்ர லோக வ-
சீகர! அலங்க்ருத ஆகர!
     ராசதம் அறிந்த கோமள ...... வடிவோனே!

சோனை சொரி குன்ற வேடுவர்
பேதை பயில்கின்ற ஆறுஇரு
     தோள்உடைய கந்தனே! வய ...... லியில் வாழ்வே!

சூளிகை, உயர்ந்த கோபுரம்,
மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு
     சுவாமிமலை நின்று உலாவிய ...... பெருமாளே.

பதவுரை

      ஈன அதி பஞ்ச பாதக தானவர் --- இழிவான ஐந்து பாதகங்களையும் அதிகம் புரிகின்ற அசுரர்களுடைய,

     ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று --- மிக்க வேகமுள்ள சேனைகளின் வலிமை அழியும்படி வென்று,

     வானவர் குலசேனை ஏவல்கொளும் --- தேவர்களின் சிறந்த சேனையை ஆட்கொண்டு,

     இந்த்ர லோக வசீகர --- இந்திர லோகத்தாரின் மனத்தைக் கவர்ந்தவரே!

      அலங்க்ருத ஆகர --- அலங்காரத்துக்கு இருப்பிடமானவரே!

      ராசதம் அறிந்த கோமள வடிவோனே --- ராஜத குணங்களின் தன்மையை உணர்ந்த அழகிய வடிவினரே!

       சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற --- மழை பொழிகின்ற மலையில் வாழ்கின்ற வேடர் குல வள்ளி நாயகி அணைத்து விளையாடுகின்ற,

     ஆறு இரு தோள் உடைய கந்தனே --- பன்னிரு புயங்களை உடைய கந்தவேளே!

      வயலியில் வாழ்வே --- வயலூரில் வாழ்கின்றவரே!

      சூளிகை --- நிலா முற்றங்களும்,

     உயர்ந்த கோபுரம் --- உயர்ந்த கோபுரங்களும்,

     மாளிகை --- மாளிகைகளும்,

     பொன் இஞ்சி சூழ்தரும் --- அழகிய மதில்களும் சூழ்ந்து விளங்கும்,

     சுவாமிமலை நின்று உலாவிய --- சுவாமி மலையில் எழுந்தருளி உலாவும், பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!

         ஆனனம் உகந்து --- மாதர்களின் முகத்தைக் கண்டு மகிழ்ந்து,

     தோளொடு தோள் இணை கலந்து --- தோளோடு தோள்கள் சேரத் தழுவி,

     பால் அன --- பால் போன்றதும்,

     ஆர் அமுது --- அரிய அமுதம்,

     கண்டு --- கற்கண்டு,

     தேன் என --- தேன் என்னும்படி,

     இதழ் ஊறல் ---  வாய் அதரத்தின் ஊறலை 

     ஆதரவின் உண்டு --- அன்புடன் பருகி,

     வேல்விழி பூசல் இட --- வேல்போன்ற கண்கள் போர் புரிய,

     நன்று காண் என --- நன்றாகப் பார் எனும்படி

     ஆனை உரம் எங்கும் மோதிட --- யானையின் மத்தகம் போன்ற தனங்கள் மார்பில் எங்கும் மோதும்படி,

     அபிராம மான் அனைய --- அழகிய மான் போன்ற

     மங்கைமார் மடு நாபியில் விழுந்து  --- மாதர்களின் மடுவைப் போன்ற உந்திக்குழியில் விழுந்து,

     கீடமில் மாயும் --- புழுவைப் போல் இறந்து படும்

     மனு இன்ப ஆசை அது அறவே --- மனித இன்ப ஆசையானது அற்று ஒழிய,

     உன் வாரிஜ பதங்கள் --- தேவரீருடைய தாமரைத் தாள்களை,

     நாய் அடியேன் முடி புனைந்து --- அடிநாயேனுடைய தலையில் சூட்டியருளி,

     போதக வாசகம் வழங்கி ---- ஞானோபதேஞ் செய்து;

     ஆள்வது ஒரு நாளே --- அடியேனை ஆட்கொள்ளும் நாள் ஒன்று உண்டாகுமோ?

பொழிப்புரை

         இழிந்த ஐம்பெரும் பாதகங்களை மிகுதியாகச் செய்யும் அசுரர்களுடைய மிக்க வேகமுள்ள சேனைகளின் வலிமை கெடுமாறு வெற்றி பெற்று, தேவர்களுடைய சிறந்த சேனைகளை ஆட்கொண்டு இந்திரலோகத்தாரது உள்ளங்கவர்ந்தவரே!

         அழகுக்கு உறைவிடம் ஆனவரே!

         இராஜத குணங்களை உணர்ந்த அழகிய வடிவினரே!

         மழை பொழிகின்ற மலையில் வாழும் வேடர்குல வனிதையாகிய வள்ளிப் பிராட்டியார் தழுவி விளையாடும் பன்னிரு புயங்களையுடைய கந்தக் கடவுளே!

         வயலூரில் வாழ்பவரே!

         நிலா முற்றங்களும், உயர்ந்த கோபுரங்களும், மாளிகைகளும் அழகிய மதில்களும் சூழ்ந்த சுவாமிமலையில் எழுந்தருளியுலாவும் பெருமிதம் உடையவரே!

         மாதர்களின் முகத்தைக் கண்டு மகிழ்ந்து, தோள்களோடு தோள்கள் சேரத் தழுவி, பால் அமுதம், கற்கண்டு, தேன் என்னும் படியான அதர ஊறலை அன்புடன் பருகி, வேல்போன்ற கண்கள் போர் புரிய, நன்கு பார் என்னும் படியாக, யானையின் மத்தகம் போன்ற தனங்கள் மார்பெங்கும் மோதும்படி, அழகிய மான்போன்ற மங்கையரது நாபியாகிய மடுவில் விழுந்து புழுவைப்போல் மாள்கின்ற மனித இன்பமாகிய ஆசையானது, அறவே நீங்குமாறு தேவரீருடைய தாமரைத் தாள்களை நாயினேனுடைய முடிமிசை வைத்தருளி ஞானோபதேசம் புரிந்து, ஆண்டருளும் நாள் ஒன்று உளதாகுமோ?

விரிவுரை

ஆனன முகந்து:-

ஆனனம் முகந்து-மாதருடைய முகத்தை அப்படியே முகந்து கொள்வது போல் காண்பர் என்றும் பொருள்படும்.

பாலன ஆரமுது கண்டு தேனென இதழூறல்:

பெண்களின் இதழூறலை காமுகர் பால் என்றும் அரிய அமுதம் என்றும், கற்கண்டு என்றும், தேன் என்றும் கூறி மகிழ்வர்.

பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.                          --- திருக்குறள்.

ஆனை :-

ஆனையின் மத்தகம் போன்ற தனத்தைக் குறிக்கும். உவமை ஆகுபெயர்.

கீடமில் பாயும்:-

கீடம்-புழு. புழுவைப்போல் ஒரு பயனும் இன்றி அவமே அழிவர். மானுடப் பிறப்பெடுத்தோர் பிறவிப் பயனைப் பெறுதல் வேண்டும்.

உன் வாரிஜ பதங்கள் நாயடியேன் முடி புனைந்து:-

முருகா! உனது திருவடித் தாமரையை அடியேன் சென்னிமிசைச் சூட்டியருள்” என்று அருணகிரியார் இப்பாடலில் விண்ணப்பம் புரிகின்றார்.

இந்த விண்ணப்பத்தை முருகன் நிறைவேற்றி வைத்தார். அருணகிரிநாதர் முடியில் அடிமலர் சூட்டியருளினார்.

எனது தலையில் பதங்கள் அருள்வோனே”   ---  (களபமுலை) திருப்புகழ்

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லும் அதோ!
வீடுஞ் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே.             ---  கந்தர் அநுபூதி

கருத்துரை

சுவாமிமலை மேவும் இறைவா! திருவடி சூட்டியருள்வாய்.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...