அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆனாத பிருதிவி
(சுவாமிமலை)
சுவாமி நாதா!
சிவத்துடன்
ஒன்றுபடும் வாழ்வினை அருள்
தானான
தனதனத் தான தனதன
தானான தனதனத் தான தனதன
தானான தனதனத் தான தனதன ...... தந்ததான
ஆனாத
பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய விருளுமற் றேகி பவமென
வாகாச பரமசிற் சோதி பரையைய ......
டைந்துளாமே
ஆறாறி
னதிகமக் க்ராய மநுதினம்
யோகீச ரெவருமெட் டாத பரதுரி
யாதீத மகளமெப் போது முதயம ......
நந்தமோகம்
வானாதி
சகலவிஸ்த் தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
மாலீச ரெனுமவற் கேது விபுலம ......
சங்கையால்நீள்
மாளாத
தனிசமுற் றாய தரியநி
ராதார முலைவில்சற் சோதி நிருபமு
மாறாத சுகவெளத் தாணு வுடனினி .....தென்றுசேர்வேன்
நானாவி
தகருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி....லங்கைசாய
நாலாறு
மணிமுடிப் பாவி தனையடு
சீராமன் மருகமைக் காவில் பரிமள
நாவீசு வயலியக் கீசர் குமரக ......
டம்பவேலா
கானாளு
மெயினர்தற் சாதி வளர்குற
மானொடு மகிழ்கருத் தாகி மருடரு
காதாடு முனதுகட் பாண மெனதுடை ...நெஞ்சுபாய்தல்
காணாது
மமதைவிட் டாவி யுயவருள்
பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறை ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
ஆனாத
பிருதிவிப் பாச நிகளமும்,
மாமாய இருளும் அற்று, ஏகி பவம்என
ஆகாச பரம சிற்சோதி பரையை ...... அடைந்து, உளாமே
ஆறுஆறின்
அதிகம் அக்ராயம் அநுதினம்
யோகீசர் எவரும் எட்டாத பரதுரி-
யாதீதம் அகளம் எப்போதும் உதயம் ......
அநந்தமோகம்
வான்ஆதி
சகல விஸ்த்தார விபவரம்
லோகாதி முடிவு மெய்ப்போத மலர்அயன்
மால் ஈசர் எனும்அவற்கு ஏது விபுலம்
...... அசங்கையால்நீள்
மாளாத
தன் நிசம் உற்றதாய் அரிய நி-
ராதாரம் உலைவு இல் சற்சோதி நிருபமும்
மாறாத சுக வெளத் தாணுவுடன் இனிது ...... என்றுசேர்வேன்
நானாவித
கருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடல்அடைத்து ஏறி நிலைமை....இலங்கை சாய
நால்ஆறு
மணிமுடிப் பாவிதனை அடு
சீராமன் மருக! மைக்காவில் பரிமள
நா வீசு வயலி அக்கீசர் குமர!க ......
டம்பவேலா!
கான்ஆளும்
எயினர் தற்சாதி வளர், குற
மானொடு மகிழ் கருத்தாகி மருள்தரு
காதாடும் உனதுகண் பாணம் எனதுடை ... நெஞ்சுபாய்தல்
காணாது
மமதை விட்டு, ஆவி உய அருள்
பாராய், என்உரை வெகுப் ப்ரீதி
இளையவ!
காவேரி வடகரைச் சாமி மலைஉறை ......
தம்பிரானே.
பதவுரை
நானாவித கருவி சேனை வகை வகை சூழ் போது ---
பலவிதமான போர்க் கருவிகளைத் தாங்கிய சேனைகள் விதம் விதமாகச் சூழ்ந்து வர,
பிரபல சூரர் கொடு --- புகழ் பெற்ற
சூரர்களுடன்,
நெடு நாவாய் செல் --- வளைந்துள்ள பெரிய
கப்பல்கள் செல்கின்ற,
கடல் அடைத்து ஏறி --- சமுத்திரத்தை அணைகட்டி
அக்கரை சென்று,
இலங்கை நிலைமை சாய --- இலங்கையின் உயர்ந்த
நிலைமை தொலையும்படி,
நாலாறு மணிமுடி பாவி தனை அடு --- பத்து மணி
முடிகளையுடைய பாவியாகிய இராவணனை வதைத்த,
சீராமன் மருக - சீராமருடைய திருமருகரே!
மைகாவில் பரிமள நா வீசு --- இருண்ட
சோலையில் நறுமணம் அயலில் வீசுகின்ற
வயலி அக்கீசர் குமர --- வயலூர் என்னும் தலத்தில்
எழுந்தருளியுள்ள அக்னீச்சுரருடைய திருக்குமாரரே!
கடம்ப - கடம்ப மலரை அணிந்தவரே!
வேலா - வேலாயுதரே!
கானாளும் எயினர் --- காட்டை ஆளுகின்ற
வேடர்களது
தன் சாதி வளர் --- குலத்தில் வளர்ந்த
குறமானோடு மகிழ் கருத்து ஆகி --- குறமானாகிய
வள்ளியுடன் மகிழ்வதற்கு எண்ணங்கொண்டு,
மருள்தரு காதாடும் --- மருட்சியைத்
தருகின்றதும் காதுவரை நீண்டிருப்பதுமாகிய
உனது கண் பாணம் --- உன்னுடைய கண்ணாகிய
பாணமானது,
எனதுடை நெஞ்சு பாய்தல் காணாது ---- என்னுடைய
நெஞ்சுக்குள் பாய்வதை நீ காணாமல் இருக்கின்றாய்!
மமதை விட்டு --- செருக்கினை விடுத்து,
ஆவி உய அருள் பாராய் --- என்னுடைய உயிர் உய்ய
அருளுவாயாக,
என உரை வெகு ப்ரீதி இளையவ --- என்ற உரைகளைக்
கூறி மிக்க அன்புகொண்ட இளையவரே!
காவேரி வடகரை சாமி மலை உறை தம்பிரானே ---
காவிரி நதியின் வடகரையில் உள்ள சுவாமிமலையில் வாழ்கின்ற தனிப் பெருந்தலைவரே!
ஆனாத பிருதிவி பாச நிகளமும் --- நீங்குதற்கரிய
மண்ணாசை யென்ற விலங்கும்,
மாமாய இருளும் அற்று --- பெரிய மயக்கத்தைச்
செய்யும் ஆணவ இருளும் ஒழிந்து,
ஏகி பவம் என --- ஒன்றுபட்ட தன்மையென்று
கூறும்படி,
ஆகாச பரம சித்சோதி பரையை அடைந்து உளாமே ---
ஆகாயம் போல் பரந்த பெரிய ஞானசோதியான பராசக்தியை அடைந்து நினைப்பு இன்றி,
ஆறாறின் அதிகம் --- முப்பத்தாறு
தத்துவங்கட்கும் அப்பாற்பட்டதாய்,
அக்ராய --- முதன்மையானதாய்,
அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத --- என்றும்
யோகீசர் எவரும் எட்டாததான,
பரதுரிய அதீத --- பெரிய துரிய நிலைக்கு
மேற்பட்டதான,
அகள --- உருவமில்லாததாய்,
எப்போதும் உதயம் --- எப்போதும் தோன்றி
நிற்பதாய்,
அநந்த மோகம் --- அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய்,
வானாதி சகல விஸ்தார விபவரம் --- வான் முதலான
சகல விரிவுள்ள வாழ்வுப் பொருளாய்,
லோகாதி முடிவும் --- உலகத்திற்கு முதலும்
முடிவுமாக விளங்குவதாய்,
மெய் போத --- உண்மை அறிவாய்,
மலர் அயன் மால் ஈசன் எனும் அவற்கு ஏது
விபுலம் --- தாமரையில் வாழும் பிரமன் திருமால் உருத்திரன் என்ற
மும்மூர்த்திகட்கும் மூலகாரணமாய் நிற்கும் பெருமை கொண்டதாய்,
அசங்கையால் நீள் --- ஐயம் இன்றி நீண்டு,
மாளாத தன் நிசம் உற்றதாய் --- இறத்தலின்றி
தானே மெய்யாம் தன்மையுற்றதாய்,
அரிய நிராதாரம் - அரிதாய், சார்பு ஒன்றும்
இல்லாததாய்,
உலைவு இல் சத்சோதி --- அழிவில்லாத உண்மை
சோதியாய்,
நிரூபமும் --- உருவமில்லாததாய்,
மாறாத --- மாறுதல் இல்லாததாய் விளங்கும்,
சுக வெ(ள்)ள தாணு உடன் --- இன்ப வெள்ளமான
சிவத்துடன்,
இனிது என்று சேர்வேன் --- அடியேன் இனிமையாக
என்று சேர்வேன்?
பொழிப்புரை
பலவகையான கத்தி, வில், தண்டு முதலிய ஆயுதங்களைத் தாங்கிய
சேனைகள் விதம் விதமாகச் சூழ்ந்துவர,
புகழ்பெற்ற
வீரர்களுடன் பெரிய கப்பல்கள் செல்கின்ற சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து அக்கரை
சென்று, இலங்கையின் உயர்
நிலையைத் தொலைத்து, பத்து மணி மகுடங்களையுடைய
பாவியாகிய, இராவணனை வதைத்த
ஸ்ரீராமருடைய திருமருகரே!
இருண்ட சோலையில் நறுமணம் வீசுகின்ற
வயலூரில் எழுந்தருளியுள்ள அக்கினீஸ்வரரின் திருக்குமாரரே!
கடப்பமலர் தரித்த வேலாயுதரே!
கானகத்தை ஆளும் வேடர் குலத்தில் வளர்ந்த
குறமகளாகிய வள்ளிப் பிராட்டியுடன் மகிழ்கின்ற எண்ணம் உடையவராய், ‘மயக்கத்தைத் தருவதும், காது வரை நீண்டதுமான உன் கண்ணாகிய கணை
என் மனத்தில் பாய்வதை நீ பார்க்க வில்லையா? செருக்கினை விடுத்து என் உயிர் உய்ய
அருளுவாய்‘ என்று அம் மாதரசியிடம் பேசிய அன்புடைய இளம் பூரணரே!
காவிரிக்கு வடகரையில் உள்ள சுவாமிமலையில்
எழுந்தருளியுள்ள தனிப்பெருந் தலைவரே!
நீங்குதற்கு அரிய மண்ணாசையென்ற
விலங்கும், பெரிய மயக்கத்தைச்
செய்யும் ஆணவ இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட
தன்மையென்று கூறுமாறு ஆகாயம்போல் பரந்து பெரிய ஞானசோதியான பராசக்தியை அடைந்து, நினைவு இன்றி நிலைத்து நின்று, முப்பத்தாறு தத்துவங்கட்கு
அப்பாற்பட்டதாய், முற்பட்டதாய் என்றும்
யோகீசர் எவரும் எட்டாததான பெரிய துரியங் கடந்ததாய், உருவமில்லாததாய், எப்போதும் தோற்றம் அளிப்பதாய், அளவற்ற அன்பைத் தருவதாய், விண் முதலிய சகல வாழ்வுப் பொருளாய், உலகத்தின் முதலும் முடிவுமாய், உண்மை அறிவாய், அயன் அரி அரன் என்ற மூவர்க்கும்
மூலகாரணமாய், ஐயம் இன்றி நீண்டு
அழிவின்றி தானே மெய்யாந் தன்மையதாய், அரியதாய்
ஆதாரம் இன்றி நிற்பதாய், அழிவில்லாத சோதியாய், வடிவம் இன்றி மாறுதலின்றி நிற்பதாய்
விளங்கும் இன்ப வெள்ளமாம் சிவத்துடன் அடியேன் இனிது என்று சேர்வேன்.
விரிவுரை
ஆனாத
பிருதிவிப் பாச நிகளமும் ---
ஆனாத-நீங்குதல்
இல்லாத, பிருதிவி-மண், பாசம்-ஆசை, நிகளம்- சங்கிலி. ஆசையாகிய சங்கிலியால்
உயிர்கள் கட்டுண்டிருக்கின்றன.
“ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா
அநுபூதி பிறந்ததுவே”
--- கந்தர்அநுபூதி
மாமாய
இருளும்
---
பெரிய
மயக்கத்தைச் செய்யும் ஆணவ இருள். இந்த இரண்டும் ஒழிந்தால் சிவாநுபூதி யுண்டாகும்.
ஏகி
பவம் என
---
சீவனும்
சிவனும் இரண்டற்ற தன்மையடைந்து நிற்கும் நிலை.
ஆகாச
பரம சிற்சோதி பரையை அடைந்து ---
ஆகாயம்
போல் எங்கும் பரந்துள்ள பெரிய ஞான சோதியாய் விளங்கும் பராசக்தியை அடைதல்.
உளாமே ---
உள்ளுதல்-நினைத்தல்; நினைப்பு இன்றி நிற்றல்.
ஆறாறின
திகமக்ராய
---
ஆறாறு-முப்பத்தாறு
தத்துவங்கள்
ஆன்ம
தத்துவம் -24, வித்யா தத்துவம்-7, சிவ தத்துவம்-5 ஆக 36.
தத்துவாதீதமாய்
விளங்கும் நிலை. அக்ரம் முதன்மை.
துரியாதீதம் ---
துரியங்
கடந்த நிலையில் நிற்பது. துரியம் என்பது சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்றுக்கும்
அப்பாலுள்ளது.
விபுலம் ---
மேலான
ஞான மயமானது.
அசங்கை ---
சங்கை
யில்லாதது.
மாளாத
தனிச முற்றாயது ---
மாளாத
தன்நிசமுற்று ஆயது. அழிவில்லாது தானே மெய்ப் பொருளாய் நிற்பது.
சுகவௌ
தாணுவுடன் இனிது என்று சேர்வேன் ---
இன்ப
வெள்ளமாகிய சிவத்துடன் இனிது ஒன்று படுகின்றது என்று சுவாமிகள் இப்பாடலில்
இறைவனிடம் முறையிடுகின்றார். இப்பாடல் சிவாத்துவிதத்தின் பெருமையை அருமையாகக்
கூறுகின்றது. மிக உயர்ந்த அநுபவப் பொருளை, வாக்கிறந்த வளமையை விளக்கிக் கூறுகின்றது. தாணு-சிவம்.
மைக்
காவில் பரிமள நா வீசு வயலி யக்கீசர் குமர ---
மை
கா-இருண்ட சோலை, நா வீசு, நா-அயல், சோலையின் பரிமளம் வெகுதூரம் வரை
வீசுகிறது.
வயலூரில்
உள்ள சிவமூர்த்தியின் திருநாமம் அக்னீச்வரர். அருணகிரிநாதர் இத்திருப்புகழில் இதனை
நமக்குப் புலப்படுத்துகின்றார். வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள
திருத்தலம்.
கருத்துரை
சுவாமிமலைப் பெருமானே! சிவத்துடன் ஒன்றுபடும்
இன்பத்தை இனிது அருள்வாய்.
No comments:
Post a Comment