அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
வாதமொடு சூலை
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
அடியேன் விலைமாதர்
வசப்பட்டு,
வெகுநோயில் அகப்பட்டு,
வீண் பழிக்கு ஆளாகும்
முன் ஆண்டு அருள்.
தானதன
தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
வாதமொடு
சூலை கண்ட மாலைகுலை வு சந்து
மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம்
வாயுவுட
னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும்
பாதகவி
யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
பாயலைவி டாது மங்க ...... இவையால்நின்
பாதமல
ரான தின்க ணேயமற வேம றந்து
பாவமது பான முண்டு ...... வெறிமூடி
ஏதமுறு
பாச பந்த மானவலை யோடு ழன்று
ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான்
ஈடழித
லான தின்பின் மூடனென வோது முன்புன்
ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய்
சூதமகிழ்
பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத்
தோரணநன்
மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வாதமொடு,
சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து
மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,
வாயு
உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்
மாதர்தரு பூஷணங்கள்...... என ஆகும்
பாதக
வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,
பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்
பாதமலர்
ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,
பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,
ஏதம்
உறு பாச பந்தமான வலையோடு உழன்று,
ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்
ஈடு
அழிதல் ஆனதின் பின், மூடன் என ஓதும்
முன்பு, உன்
ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்
சூதம்,மகிழ்ம, பாலை, கொன்றை, தாதுவளர் சோலை துன்றி
சூழ, மதில் தாவி மஞ்சின் ...... அளவாகத்
தோரண
நல் மாடம் எங்கும் நீடுகொடியே தழைந்த
சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.
பதவுரை
சூதம் --- மாமரம்,
மகிழ் --- மகிழமரம்,
பாலை --- பாலை மரம்,
கொன்றை --- கொன்றே மரமும்,
தாது வளர் சோலை துன்றி --- தாது மாதுளை
முதலிய மரங்கள் வளம் பெற வளர்ந்துள்ள சோலைகள் நெருங்கி,
சூழும் மதில் தாவி --- சூழ்ந்திருக்கின்ற
திருமதில்கள் விண்ணுலகத்தைத் தாவி,
மஞ்சின் அளவு ஆக --- மேகமண்டலம் வரை ஓங்கி
விளங்க,
தோரண நன் மாடம் எங்கும் --- மகர தோரணங்கள்
இலகும் அழகிய உப்பரிகைகளின் மீது எவ்விடத்தும்,
நீடு கொடியே தழைந்த --- உயர்ந்த கொடிகள்
(நல்விழாப் பொழிவை விளக்கி) பறந்துகொண்டு மங்கலமாகவுள்ள
சுவாமிமலை வாழ வந்த பெருமாளே --- சுவாமிமலை என்னும்
திருத்தலம் சிறக்குமாறு எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
வாதமொடு --- அண்டவாதம் பட்சவாதம் முதலிய
வாத ரோகங்கள்,
சூலை கண்டமாலை குலைநோவு --- சூலைநோய், கண்டமாலை, குலையெரிச்சல்,
சந்து மாவலி வியாதி --- அடிவயிறும் தொடையும்
சந்திக்கும் கீழ் சந்துகளில் வரும் பெரிய துன்பத்தைத் தரும் (கட்டிகளின்) நோய்கள்,
குன்மமொடு --- குன்மம்,
காசம் ---
சுவாசகாசம்,
வாயுவுடனே --- வாயு ரோகங்களுடன்,
பரந்த தாமரைகள் --- தோலின் மேல் படரும் படர்
தாமரை முதலிய படை நோய்கள்,
பீனசம் --- மூக்கு நோய்கள்,
பின் மாதர் தருபூஷணங்கள் என ஆகும் ---
பின்னும் உள்ள நோய்களும், (விலை) மாதர்கள்
தருகின்ற ஆபரணங்களாகும். (இந்நோய்களுடன்)
பாதக வியாதி --- பாவ மிகுதியால் வரும்
தொழுநோய்,
புண்கள் ஆனது உடனே தொடர்ந்து --- புண்கள்
முதலிய தொந்தரையுடன் அடியேனைப் பற்றிவர,
பாயலை விடாது மங்க --- பாயல் மீது இடைவிடாது
மங்கிக் கிடக்க,
இவையால் --- இத்தகைய துன்பங்களால்,
நின் பாத மலர் ஆனதின்கண் --- தேவரீருடைய
திருவடித் தாமரையின் மீது
நேயம் அறவே மறந்து --- அன்பு செலுத்தும் பக்திநெறியை
அடியோடு மறந்து,
பாவமது பானம் உண்டு --- தீவினைகளாகிய கள்ளைக்
குடித்து,
வெறி மூடி --- அறிவு மயங்கப்பட்டு,
ஏதம் உறு --- குற்றம் பொருந்திய,
பாசபந்தம் ஆன வலையோடு உழன்று --- உலகப்பற்று
உயிர்ப்பற்று முதலிய ஆசை வலையிற் சிக்கிச் சுழன்று,
ஈனமிகு சாதியின் கண் அதிலே --- இழிவுடைய
விலைமகளிர் கூட்டத்திலே
யான் ஈடு அழிதலானதின் பின் --- அடியேன்
கலந்து, பெருமை குலைந்த பிறகு,
மூடன் என ஓது முன்பு --- உலக மக்கள் அடியேனை
அறிவில்லாதவன் என்று இழித்துரையாடா முன்னர்,
ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய் ---- தேவரீர்
தண்ணருள் சுரந்து வந்து அடியேனை ஆண்டருள்வீர்.
பொழிப்புரை
மா, மகிழ், பாலை, கொன்றை, தாது, மாதுளை முதலிய பூமரங்கள் வளம் பெற
வளர்ந்துள்ள சோலைகள் நெருங்கி, சூழ்ந்திருக்கின்ற
திருமதில்கள் விண்ணுலகம் வரை தாவி மேக மண்டலத்தை அளாவி விளங்க, தோரணங்களால் அலங்கரித்துள்ள மாட
மாளிகைகளிலெல்லாம் நீண்ட கொடிகள் விளங்கி மங்கலமாக விளங்கும் சுவாமிமலை என்னும் திருத்தலம்
சிறப்புறுமாறு எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!
வாதம், சூலை, கண்டமாலை, குலைநோவு, கீல்களில் வந்து பெருந்துன்பத்தைச்
செய்யும் நோய், குன்மம், சுவாசகாசம், வாயு, படர்தாமரை முதலிய படைகள், பீனசம், பின்னுமுள்ள நோய்களும் விலைமகளிர்
தருகின்ற ஆபரணங்களாலும்; இந்நோய்களுடன், கன்ம மிகுதியால் வரும் தொழுநோய்
தொடர்ந்து புண்களுற்று பாயும் படுக்கையுமாகி இடைவிடாமல் கிடந்து வலிகுன்றி இருந்து,
இவைகளால் தேவரீருடைய பாத கமலங்களின்மீது
அன்பு செய்தலை அறவே கைவிட்டு, பாவமாகிய கள்ளைக்
குடித்து, அறிவு மயங்கி, குற்றம் பொருந்திய பந்தபாசமான வலையிற்
கட்டுண்டு உழன்று, ஈன மிகுந்த பொருட்
பெண்டிர் வசமாகி அவர்க்கு உறவாகி,
அடியேன்
பெருமை குன்றியதன் பிறகு, உலகினர் `மூடன்‘ என்று என்னை இகழு முன், தேவரீர் தண்ணருள் சுரந்து வந்து அடியேனை
ஆண்டருள்வீர்.
விரிவுரை
வாதமொடு.............என
ஆகும்
---
அரிதில்
தேடிய பொருளை நல்வழியிற் செலவழிக்காமல், பொருட்
பெண்டிருக்கு அளவின்றித் தந்து,
அவர்
விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக அவர்கள் இவர்களுக்கு வாதம்
சூலை முதலிய திருவாபரணங்களைப் பூட்டியனுப்புவர்.
வாதம்
--- இது
பல வகையானது. அண்டவாதம், பட்சவாதம், முடக்குவாதம் முதலியவைகளும், பெரியவர்கள் பேச்சைக் கேளாமல் பிடிவாதம்
முதலியவைகளும் அடங்கும்.
சூலை --- வயிற்றுநோய் முதலியவை.
கண்டமாலை
--- கழுத்தில்
வரும் ஒருவித கட்டி. இது ஒன்று குணமாகும்; பின் மற்றொன்று வரும். இப்படி
குணமாகியும் வந்துகொண்டும் இருக்கும். கழுத்தையும் திருப்ப முடியாமல் இருக்கும்.
குலை
நோவு ---
குடலில் எரிச்சல் உண்டாகும் ஒரு விதநோய்.
சந்து
மாவலி வியாதி --- அடிவயிறும் தொடையும் சந்திக்கும் இடங்களில் இரு பக்கத்திலும்
அல்லது ஒரு பக்கத்தில் வரும் கட்டி. இது பெரிய துன்பத்தைத் தரும். நடக்க முடியாது.
இதனை அறையாப்புக் கட்டி என்று சிலர் சொல்வார்கள். Bubo என்று ஆங்கிலத்தில் பெயர்.
பரந்த
தாமரை ---
உடம்பில் வயிறு முதுகு கைகள் முதலிய இடங்களில், பவுன் அகலத்திற்குப் பல பலஒன்றுடன்
ஒன்று இணைந்து வருவது. படர்தாமரை யென்றும் சொல்வார்கள்.
“அரிய பெண்கள் நட்பைப்
புணர்ந்து
பிணியுழன்று
சுற்றித் திரிந்த
தமையுமுன் க்ருபைச் சித்தமென்று பெறுவேனோ”
--- (கருவடைந்து) திருப்புகழ்
ஈர
அருள்
---
தீவினையாகிய
வெயிலால் வாடி, நரக வேதனையென்னும்
தழலால் வெந்து, பிறவித்
துன்பமென்னும் வெப்பத்தால் வெதும்பியுள்ள ஆன்மாக்களுக்கு ஆண்டவனே குளிர்ந்து ஈறிலா
இன்பத்தை விளைவிப்பதால் “ஈர அருள்” என்றார்.
சூதமகிழ்
பாலை..............சோலை துன்றி ---
முருகவேள்
எழுந்தருளியிருக்கும் திருத்தலமாதலால் பல பூமரங்கள் வளம் பெற வளர்ந்து நெருங்கி
இயற்கையழகு செய்து கொண்டிருக்கின்றன. மகுட தோரணம், முத்துத் தோரணம், மாந்தோரணம் முதலியவற்றை வீடுகள் தோறும்
கட்டி எம்பெருமானது விழாவின் சிறப்பைக் கொண்டாடுகின்றனர் என்பதும்
குறிக்கத்தக்கது.
நீடுகொடியே
தழைந்து
---
ஒவ்வொரு
வீட்டிலும் அறக்கொடியை உயர்த்தி வறியவர்க்கு வழங்குகின்றனர் என்பதும் உன்னி
உவக்கற்பாலது.
“மிகுகொடை வடிவினர்
பயில் வலிவலம்” “தருமமிகு சென்னை” என்ற திருவாக்குகளால் பெருமான் உறையும்
திருத்தலங்களில் தரும சொரூபிகள் வாழ்கின்றனர் என்பது தேற்றமாகின்றது. ஆதலால்
சுவாமிமலையில், வீடுகள் தோறும்
அறக்கொடி நாட்டி அளவற்ற தருமஞ் செய்கின்றனர் என்பது புலனாகின்றது.
கருத்துரை
சுவாமிமலையில்
எழுந்தருளிய எம்பெருமானே! அடியேன் பொருட்டு பெண்டிர் வலைப்பட்டு, பிணியால் வருந்தி உலகினர் பழிக்கு
ஆளாகுமுன் தேவரீர் தண்ணருள் புரிந்து ஆட்கொள்வீர்.
No comments:
Post a Comment