அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முறுகு காள
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
மாதர் மயலை
விட்டொழித்து,
அடியேனைத் தொண்டருடன் கூட்டி அருள்.
தனன
தான தனன தந்த,
தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த ...... தனதான
முறுகு
காள விடம யின்ற
இருகண் வேலி னுளம யங்கி
முளரி வேரி முகைய டர்ந்த ...... முலைமீதே
முழுகு
காதல் தனைம றந்து
பரம ஞான வொளிசி றந்து
முகமொ ராறு மிகவி ரும்பி ...... அயராதே
அறுகு
தாளி நறைய விழ்ந்த
குவளை வாச மலர்க ரந்தை
அடைய வாரி மிசைபொ ழிந்து ...... னடிபேணி
அவச
மாகி யுருகு தொண்ட
ருடன தாகி விளையு மன்பி
னடிமை யாகு முறைமை யொன்றை ...... அருள்வாயே
தறுகண்
வீரர் தலைய ரிந்து
பொருத சூர னுடல்பி ளந்து
தமர வேலை சுவற வென்ற ...... வடிவேலா
தரள
மூர லுமைம டந்தை
முலையி லார அமுத முண்டு
தரணி யேழும் வலம்வ ருந்திண் ......
மயில்வீரா
மறுவி
லாத தினைவி ளைந்த
புனம்வி டாம லிதணி ருந்து
வலிய காவல் புனைய ணங்கின் ...... மணவாளா
மருவு
ஞாழ லணிசெ ருந்தி
யடவி சூத வனநெ ருங்கி
வளர்சு வாமி மலைய மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
முறுகு
காள விடம் அயின்ற
இருகண் வேலின் உளம் மயங்கி,
முளரி வேரி முகை அடர்ந்த ...... முலைமீதே,
முழுகு
காதல் தனை மறந்து,
பரம ஞான ஒளி சிறந்து,
முகம் ஒர்ஆறும் மிக விரும்பி, ...... அயராதே
அறுகு
தாளி நறை அவிழ்ந்த
குவளை வாச மலர் கரந்தை
அடைய வாரி மிசை பொழிந்து, ...... உன்அடிபேணி,
அவசம்
ஆகி உருகு தொண்டர்
உடன் அதாகி விளையும் அன்பின்
அடிமை ஆகும் முறைமை ஒன்றை ...... அருள்வாயே.
தறுகண்
வீரர் தலை அரிந்து,
பொருத சூரன் உடல் பிளந்து,
தமர வேலை சுவற வென்ற ...... வடிவேலா!
தரள
மூரல் உமை மடந்தை
முலையில் ஆர அமுதம் உண்டு
தரணி ஏழும் வலம் வரும், திண் ...... மயில்வீரா!
மறு
இலாத தினை விளைந்த
புனம் விடாமல், இதண் இருந்து
வலிய காவல் புனை அணங்கின் ...... மணவாளா!
மருவு
ஞாழல் அணி செருந்தி
அடவி சூத வனம் நெருங்கி
வளர் சுவாமி மலை அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
தறுகண் வீரர் தலை அரிந்து --- அஞ்சாமையுடைய
வீரர்களுடைய தலைகளை அரிந்து,
பொருத சூரன் உடல் பிளந்து --- போர் செய்த
சூரபன்மனுடைய உடம்பைப் பிளந்து,
தமர வேலை சுவற வென்ற வடிவேலா --- ஒலிக்கின்ற
கடலை வற்றும்படி வென்ற கூரிய வேலாயுதரே!
தரள மூரல் உமை மடந்தை முலையில் --- முத்துப்
போன்ற பற்களையுடைய உமையம்மையாரின் திருமுலையில்
ஆர அமுதம் உண்டு --- நிரம்ப ஞானப் பாலைப்
பருகி,
தரணி ஏழும் வலம் வரும் --- உலகங்கள்
ஏழினையும் வலமாக வந்த,
திண் மயில் வீரா --- வலிமையுடைய மயில்
வாகனரே!
மறு இலாத தினை விளைந்த --- குற்றம்
இல்லாத தினைப்பயிர் விளைந்த
புனம் விடாமல் --- புனத்தை நீங்காது,
இதண் இருந்து --- பரண் மீது இருந்து,
வலிய காவல் புனை --- வலிமையாகக் காவல்
புரிந்த
அணங்கின் மணவாளா --- வள்ளி பிராட்டியின்
கணவனாரே!
மருவு ஞாழல் --- மருவிய புலிநகக் கொன்றை,
அணி செருந்தி அடவி --- அழகிய செருந்தி சோலையும்
சூத வனம் நெருங்கி வளர் --- மாஞ்சோலையும்
நெருங்கி வளர்கின்ற
சுவாமிமலை அமர்ந்த பெருமாளே --- சுவாமிமலையில்
எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!
முறுகு காளவிடம் அயின்ற --- முறுகிய
கருமையான விடத்தையுண்ட
இருகண் வேலின் உளம் மயங்கி --- வேல் போன்ற இருகண்களினால்
உள்ளம் மயங்கி,
முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே --- தாமரையின்
மணமுள்ள மொட்டைப் போன்ற நெருங்கிய தனங்களின் மீது
முழுகு காதல் தனை மறந்து --- முழுகுகின்ற
காதலை மறந்து,
பரம ஞான ஒளி சிறந்து --- பெரிய ஞான ஒளியானது
சிறந்து,
முகம் ஒரு ஆறும் மிக விரும்பி --- ஆறுமுகங்களையும்
மிகவும் விரும்பி,
அயராதே --- சோர்வு இன்றி,
அறுகு தாளி --- தாளி அறுகும்,
நறை அவிழ்ந்த குவளை --- மணம் வீசும் குவளை
மலரும்,
வாசமலர் --- வாசனை மிக்க மலரும்,
கரந்தை --- திருநீற்றுப் பச்சையும்,
அடைய வாரி --- இவைகளை நிறைய அள்ளி,
மிசை பொழிந்து --- திருவடியின் மீது சொரிந்து,
உன் அடிபேணி --- தேவரீரது திருவடியை விரும்பி,
அவசம் ஆகி --- தன்வசம் அழிந்து,
உருகு தொண்டர் உடன் அது ஆகி --- உள்ளம்
உருகுகின்ற, தொண்டர்களுடன் ஒன்று கலந்து,
விளையும் அன்பின் அடிமை ஆகும் முறைமை ஒன்றை
அருள்வாயே --- அதனால் விளைகின்ற அன்பினால் அடிமையாகின்ற நல்ல முறையுடன் கூடிய
பெரும் பேற்றை அருள் புரிவீர்.
பொழிப்புரை
அஞ்சாமையுடைய வீரர்களுடைய தலைகளை
யரிந்து போர் செய்த சூரபன்மனுடைய உடலைப் பிளந்து, ஒலிக்கின்ற கடல் வற்றுமாறு வென்ற கூரிய
வேலாயுதரே!
முத்தைப் போன்ற திருநகை யுடைய
உமாதேவியாரின் திருமுலைப் பாலை நிரம்ப உண்டு, உலகம் ஏழையும் வலம் வருகின்ற வலிமை
பொருந்திய மயில் வாகனரே!
குற்றமில்லாத தினைப்பயிர் விளைந்த
புனத்தில் எப்போதும் பரண் மீது இருந்து வலிமையான காவல் புரிந்த வள்ளி நாயகியாரது
மணவாளரே!
பொருந்திய புலிநகக் கொன்றையும், செருந்தி மலர்ச்செடிகளும் நிறைந்த
சோலைகளும், மாமரத் தோப்பும்
நெருங்கிவளர்கின்ற சுவாமிமலையில் அமர்ந்த பெருமிதம் உடையவரே!
முதிய கரிய விடத்தையுண்டதும், வேல் போன்றதும் ஆகிய இரு கண்களினால்
உள்ளம் மயங்கி, மணமுள்ள தாமரையின்
மொட்டு போன்ற நெருங்கிய தனங்களின்மீது முழுகிய காதலை மறந்து,
பெரிய ஞானவொளி சிறந்து, ஆறுமுகங்களை மிகவும் விரும்பி, சோர்வுபடாமல் அதற்கு, நறுமணங் கமழும் குவளை, மற்ற வாசனையுடைய மலர்கள், திருநீற்றுப் பச்சை முதலிய இவைகளை
நிரம்பவும் அள்ளித் திருவடியின் மீது சொரிந்து, உமது திருவடியை விரும்பி, தன் வசம் அழிந்து, உள்ளம் உருகுகின்ற திருத்தொண்டருடன்
கூடி அதனால் விளைகின்ற அன்பினால் அடிமையாகும் முறையுடன் கூடிய நல்ல பேற்றினைத்
தருவீராக.
விரிவுரை
முறுகுகாள
விடம் அயின்ற இருகண் ---
முறுகுதல்-முதிர்ச்சி
பெறுதல்.
விடம்
கொல்லும் தன்மையது. முதிர்ந்த கருமையான நஞ்சைப்போல் மாதரின் கண்களும்
விரும்பியோரைக் கொல்லும் இயல்புடையது. அதனால் விடத்தை உண்ட கண் என்று கூறினார்.
இரு
கண் வேலின் உளம் மயங்கி ---
வேல்
போன்ற கூரிய கண்களின் பார்வையால் உள்ளம் மயங்குவர் ஆடவர்.
முளரி
வேரி முகை
---
முளரி-தாமரை.
வேரி-வாசனை. முகை-அரும்பு.
முழுகு
காதல் தனை மறந்து ---
பிறவியைத்
தரும்-அறிவை மயக்கும் பெண் காதலை அறவே மறந்து உய்வுபெற வேண்டும்.
முகம்
ஒராறு மிக விரும்பி ---
ஆசையற்ற
இடத்தில் சிறந்த ஞான ஒளிதலைப்படும்.
அயராதே
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாசமலர் கரந்தை அடையவாரி மிசைபொழிந்து ---
உலகிலுள்ள
சீறு முகங்களையும், மாறு முகங்களையும்
தூங்கி விழுகின்ற வேறு முகங்களையும் விரும்பாமல் ஆறு முகங்களை விரும்புதல்
வேண்டும்.
இறைவனை
மலர் கொண்டு அர்ச்சிப்பதில் தளர்வு அடைதல் கூடாது என்று அறிவிக்கும் பொருட்டு "அயராதே"
என்ற சொல்லை இங்கே அமைத்தனர்.
அருகம்புல்லையும், நறுமணமுள்ள குவளை மலரையும், வேறுபல மலர்களையும், கரந்தை முதலிய பச்சிலைகளையும், நிறைய எடுத்து, கை நிரம்ப அள்ளி அள்ளி இறைவன்
திருவடியில் அர்ச்சிக்க வேண்டும்.
அடிபேணி
அவசமாகி
---
இறைவனுடைய
பாதமலரை விரும்பி அர்ச்சிக்கின்ற போது முறுகிய அன்பினால் தன் வசம் அழிந்துவிடும்.
தன் வசம் அழிந்தபோது அப்படியே உலகம் மறைந்து விடும். அந்தப் பரவசமான நிலையில்
நிற்பார்கள் அடியார்கள்.
தாயுமான
சுவாமிகள் இந்த அனுபவத்தை அப்படியே கூறுகின்றார். அவருடைய அனுபவத் திருவாக்கை ஈண்டு
காண்க.
“என்பெலாம் நெக்குடைய, ரோமஞ் சிலிர்ப்ப, உடல்
இளக, மனது அழலின் மெழுகாய்
இடையறாது உருக, வரு மழைபோல் இரங்கியே
இருவிழிகள் நீர் இறைப்ப,
அன்பினால்
மூர்ச்சித்த அன்பருக்கு, அங்ஙனே
அமிர்த சஞ்சீவிபோல் வந்து ஆனந்த மழை பொழிவை” ---
தாயுமானார்.
தொண்டர்
உடனதாகி விளையும் அன்பின் அடிமை ஆகும் முறைமை வன்றை அருள்வாயே ---
அருணகிரிநாத
சுவாமிகள் இத்திருப்புகழில் தொண்டரொடு கூடும் சிறந்த நலனை வரமாகக் கேட்கின்றார்.
“இரும்பு நேர்நெஞ்சக்
கள்வன் ஆனாலும், உனை
இடைவிட்டு
நின்றது உண்டோ?
என்றுநீ அன்றுநான் உன்னடிமை அல்லவோ?
யாதேனும் அறியா வெறும்
துரும்பனேன்
என்னினும் கைவிடுதல் நீதியோ?
தொண்டரொடு கூட்டுகண்டாய்”
என்று
தாயுமானவரும் விமலன் பால் வேண்டுகின்றார்.
கந்தரலங்காரத்திலும்
சுவாமிகள், “சூரில் கிரியில்
கதிர் வேல் எறிந்தவன் தொண்டர்குழாம் சாரில்,
கதி அன்றி வேறு இல்லை” என்று கூறுகின்றார்.
தொண்டரொடு
கூடுவதே முத்தியடைய எளிய வழி. இவ்வாறு வரம் கேட்ட அருணகிரிப் பெருந்தகையார்க்கு, கேட்டவரந் தரும் கிருபாநிதியாகிய
முருகன் இதனை வழங்கியருளினார். அப்படித் தந்தருளினார் என்பதைக் கந்தரலங்காரத்தில்
கூறுமாறு காண்க.
இடுதலைச்
சற்றும் கருதேனை, போதம் இலேனை, அன்பால்
கெடுதல்
இலாத் தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச்
சாத்தித்த வேலோன், பிறவி அற, இச் சிறை
விடுதலைப்பட்டது, விட்டது பாச வினை விலங்கே.
தமர
வேலை சுவற
---
தமரம்-ஒலி.
வேலை-கடல்.
ஒலி
மிகுந்த வேலை கெட, வேலை விட்டருளினார்.
வேலை நினைப்பது வேலையாகக் கொள்வோம். ஆயின், நமக்கும் பிறவியாகிய கடல் வற்றிப்போகும்.
தரள
மூரல் உமை
---
உமையம்மை-சித்து.
சித்து ஞானமாகும். ஞானத்தால் வருவது ஆனந்தம். ஆதலினால், அம்பிகை எப்போதும் ஆனந்தவண்ணமாகவே
காட்சி தருகின்றார்.
மறு இலாத
தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்த வலிய காவல்புனை அணங்கின் மணவாளா ---
எம்பிராட்டி
நீங்காதிருந்து வலிமையுடன் காவல் புரிவதாலும், இசைக்கேட்டு கிளிகள் தினைக் கதிரை உண்ணாது
நிற்பதாலும், இசையின் இனிமையாலும்
பயிர் குற்றமில்லாமல் வளர்கின்றது என்கின்றார்.
இசையால்
பயிர் மேலோங்கி வளர்கின்றது என்பதை இன்று விஞ்ஞானத்தாலும் காண்கின்றார்கள்.
சூத வன
நெருங்கி வளர் சுவாமிமலை:-
சூதம்-மாமரம்.
சுவாமி மலையின் அருகில் மாந்தோப்புகள் உள என்பதை இன்னும் ஒரு பாடலில்
கூறியுள்ளார்.
“சூத மிகவளர் சோலை
மருவு
சுவாமி
மலைதனில் உறைவோனே” --- (பாதிமதிநதி) திருப்புகழ்
சூரபன்மன்
மாமரமாக முளைத்தான். அதனைப் பெருமான் வேலினால் பிளந்து அழித்தார். அதனால்
மாமரங்கள், “இறைவனே! எங்கள்
வடிவத்தைச் சூரன் கொண்டான் என்று எங்களைத் தேவரீர் முனிதல் வேண்டாம். நாங்கள்
சிவபெருமானுடைய அடிமைகள். காஞ்சியில் மாவடியில் தேவாதிதேவன் திகழ்கின்றார். ஆதலால், நாங்கள் உன் அடிமைகள்” என்று கூறி இறைவனுடைய
ஆலயத்தைச் சூழ்ந்து விளங்குகின்றனவாம்.
கருத்துரை
சுவாமிமலை
மேவும் தேவனே! அடியேனைத் தொண்டருடன் கூட்டியருள் செய்க.
No comments:
Post a Comment