சுவாமி மலை - 0230. மருவே செறித்த




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மருவே செறித்த (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
மாதர் மயலில் திளைத்த பிழையைப் பொறுத்து,  
உனது திருவடியில் எனக்குப் பெருவாழ்வை அருள்.

தனனா தனத்த தனனா தனத்த
     தனனா தனத்த ...... தனதான


மருவே செறித்த குழலார் மயக்கி
     மதனா கமத்தின் ...... விரகாலே

மயலே யெழுப்பி யிதழே யருத்த
     மலைபோல் முலைக்கு ...... ளுறவாகிப்

பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
     பிரியாது பட்ச ...... மறவாதே

பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
     பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே

குருவா யரற்கு முபதேசம் வைத்த
     குகனே குறத்தி ...... மணவாளா

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
     குடகா விரிக்கு ...... வடபாலார்

திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்
     சிறுவா கரிக்கு ...... மிளையோனே

திருமால் தனக்கு மருகா வரக்கர்
     சிரமே துணித்த ...... பெருமாளே.



பதம் பிரித்தல்


மருவே செறித்த குழலார் மயக்கி,
     மதன ஆகமத்தின் ...... விரகாலே,

மயலே எழுப்பி, இதழே அருத்த,
     மலைபோல் முலைக்குள் ...... உறவுஆகிப்

பெருகாதல் உற்ற தமியேனை நித்தல்
     பிரியாது, பட்சம் ...... மறவாதே,

பிழையே பொறுத்து, உன் இருதாளில் உற்ற
     பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே.

குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த
     குகனே! குறத்தி ...... மணவாளா!

குளிர்கா மிகுத்த வளர்பூகம் எத்து
     குட காவிரிக்கு ...... வடபாலார்

திரு ஏரகத்தில் உறைவாய்! உமைக்கு ஓர்
     சிறுவா! கரிக்கும் ...... இளையோனே!

திருமால் தனக்கு மருகா! அரக்கர்
     சிரமே துணித்த ...... பெருமாளே.

பதவுரை

         குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே --- குருமூர்த்தியாய் சிவபெருமானுக்கும் உபதேசம் செய்த குருமூர்த்தியே!

         குறத்தி மணவாளா --- வள்ளி மணவாளரே!

         குளிர்கா மிகுந்த வளர்பூகம் எத்து --- குளிர்ந்த சோலைகளால் நிறைந்து வளர்ந்துள்ள பாக்கு மரங்கள் சேர்ந்துள்ள,

     குடகாவிரிக்கு வடபால் ஆர் திருவேரகத்தில் உறைவாய் --- மேல் திசையிலிருந்து வரும் காவிரி நதிக்கு வடப்பக்கத்து விளங்கும் திருவேரகம் என்னும் திருத்தலத்தில் உறைபவரே!

         உமைக்கு ஓர் சிறுவா --- உமாதேவியின் ஒப்பற்ற புதல்வரே!

         கரிக்கும் இளையோனே --- யானைமுகமுடைய விநாயகருக்குத் தம்பியே!

         திருமால் தனக்கு மருகா --- நாராயண மூர்த்தியின் திருமருகரே!

         அரக்கர் சிரமே துணித்த பெருமாளே --- அசுரர்களுடையத் தலைகளை வெட்டி எறிந்த பெருமையின் மிகுந்தவரே!

         மருவ செறித்த குழலார் --- மருக்கொழுந்து முதலிய நறுமணங்கள் நிரம்பிய கூந்தலையுடைய மாதர்கள்

     மயக்கி மதன ஆகமத்தின் விரகாலே --- அடியேனை மயங்க புரிந்து, காம சாத்திரத்தின் தந்திரத்தினால்,

     மயலே எழுப்பி --- மோகத்தை உண்டாக்கி

     இதழே அருத்த --- இதழமுதைப் பருக வைக்க,

     மலைநேர் முலைக்கு உள் உறவு ஆகி --- மலைப் போன்ற தனங்களில் விருப்புற்று

     பெருகாதல் உற்ற தமியேனை --- பெரிதும் ஆசைப் பூண்ட திக்கற்ற என்னை,

     நித்தல் பிரியாது --- தேவரீர் தினமும் பிரியாமலும்

     பட்சம் மறவாதே --- என் மாட்டு அன்பு மறவாமலும்,

     பிழையே பொறுத்து --- அடியேனுடையக் குற்றங்களை மன்னித்து,

     உன் இருதாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே --- உமது இரு திருவடிகளிலும் பொருந்தியுள்ள பெருவாழ்வான பேரின்பத்தைப் பற்றுமாறு அருள்புரிவீர்.

பொழிப்புரை

         சிவபெருமானுக்கும் குருமூர்த்தியாக விளங்கி உபதேசித்த குகப் பெருமானே!

         வள்ளி நாயகியின் கணவரே!

         குளிர்ந்த சோலைகளும் வளர்ந்த பாக்கு மரங்களும் சூழ்ந்த-மேற்றிசையிலிருந்து வரும் காவிரி நதிக்கு வடப் புறத்தில் விளங்கும் திருவேரகம் என்னும் சுவாமிமலை வாழ்பவரே!

         உமாதேவியின் ஒப்பற்ற குமாரரே! விநாயகருக்கு இளையவரே!

         திருமால் மருகரே!

         அரக்கர்களின் தலைகளைத் துணித்த பெருமிதம் உடையவரே!

         மருக்கொழுந்து முதலிய வாசனை நிறைந்த கூந்தலையுடைய பொதுமாதர் அடியேனை மயக்கி, மன்மதனுடைய காம நூலில் கூறிய தந்திர வகைகளைப் புரிந்து ஆசையை மூட்டி இதழூறலைப் பருகச் செய்ய, அதனால் அவர்களுடைய மலைப் போன்ற தனங்களில் உறவு செய்து பெரிய ஆசையுற்ற அடியேனைத் தினமும் தேவரீர் பிரியாமலும் பட்சம் மறவாமலும் என் பிழைகளைப் பொறுத்து உமது இரு திருவடிகளின் பேரின்பப் பெருவாழ்வைப் பற்ற அருள்புரிவீர்.

விரிவுரை

மருவே செறித்த குழலார் மயக்கி ---

மரு என்பது ஒரு வாசனை இலை. இதனையும் வேறு பல நறுமலர்களையும் முடித்து குழலுக்கு மாதர் மணமூட்டுவர். மணம் செறிந்த கூந்தலினால் விலைமகளிர் ஆடவரை மயக்குவர்.

கூந்தல் காடு, கண் வலை; ஆடவர் பறவை. கூந்தலாகிய கானகத்தில் ஆடவராகியப் பறவைகள் சிக்கும்படி விலைமகளிர் கண்வலை வீசிப் பிடிப்பார்கள்.

திண்ணிய நெஞ்சப் பறவை சிக்கக் குழற்காட்டில்
கண்ணி வைப்பார் மாயங் கடக்குநாள் எந்நாளோ”  --- தாயுமானார்

மதன ஆகமத்தின் விரகாலே மயலே எழுப்பி ---

காம நூல்களில் கூறிய முறைப்படி அம்மாதர்கள் பல தந்திரங்கள் புரிந்து இளைஞர்களுக்கு மிகுந்த மோகத்தை ஊட்டுவார்கள்.

பெருகாதல் உற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்ச மறவாதே ---

மிகுந்த ஆசை வயப்பட்ட அடியேனை முருகா! நீ பிரியாமல் தினமும் என்மீது பட்சம் வைத்து மறவாமலும் ஆளவேண்டும்”.

பிழையே பொறுத்து ---

சிறியேன் செய்த பிழைகள் யாவையும் பொறுத்தருள வேணும். முருகன் பிழைப் பொறுக்கும் பேரருளாளன்.

புரிபிழை பொறுக்குஞ் சாமி”    --- (புவிக்குள்) திருப்புகழ்.

ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கி
தீது புரியாத தெய்வமே! - நீதி
தழைக்கின்ற போருர்த் தனிமுதலே! நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு.               --- சிதம்பர சுவாமிகள்.

நீறாகி நீறுமிழும் நெருப்புமாகி நினைவாகி
     நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளுமாகிக் குணமாகிக்
     குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அனாசாரம்
     பொறுத்தருளி, அவர் மேல் என்றும்
சீறாத பெருமானைத் திருமாற்பேற்றுஎம் செம்பவளக்
     குன்றினைச் சென்று அடைந்தேன் நானே. --- அப்பர்.

அத்தாஉன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
         அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
         எனைஆண்டு கொண்டுஇரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
         பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாய்அன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
         எம்பெருமான் திருக்கருணை இருந்த வாறே.   --- அப்பர்.

ஒறுத்தாய் நின்அருளில், அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய், வேலை விடம் அறியாமல் உண்டுகண்டம்
கறுத்தாய், தண்கழனிக் கழிப்பாலை மேயானே. --- சுந்தரர்.

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின், என் மணியே!
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய், வினையின் தொகுதி
ஒறுத்து, எனை ஆண்டுகொள், உத்தர கோச மங்கைக்கு அரசே!
பொறுப்பர் அன்றே பெரியோர், சிறுநாய்கள் தம் பொய்யினையே. --- திருவாசகம்.

இழித்தனன் என்னை யானே, எம்பிரான்! போற்றி போற்றி,
பழித்திலேன் உன்னை, என்னை ஆளுடைப் பாதம் போற்றி,
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி,
ஒழித்திடு இவ் வாழ்வு போற்றி, உம்பர் நாட்டு எம்பிரானே.                --- திருவாசகம்.


உழைஉரித்த மான்உரிதோல் ஆடை யானே!
         உமையவள்தம் பெருமானே! இமையோர் ஏறே!
கழைஇறுத்த கருங்கடல்நஞ்சு உண்ட கண்டா!
         கயிலாய மலையானே! "உன்பால் அன்பர்
பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன்
         கடன் அன்றே; பேரருள் உன் பாலது அன்றே"
அழை உறுத்து மாமயில்கள் ஆலும் சோலை
         ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே!      --- அப்பர்.


இருதாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே ---

கிரியா சக்தி, ஞான சக்தி என்ற இரு சக்திகளும் இறைவனுடைய இரு திருவடிகள். அவைகளில் பொருந்தும் பேரின்ப வாழ்வினைத் தருமாறு அடிகளார் வேண்டுகின்றார்.

காவிரிக்கு வடபாலார் திருவேரகம் ---

இப்பாடலிலும், காவேரிக்கு வடக்கேயுள்ளது திருவேரகம் என்று மிக விளக்கமாக அருணகிரியார் கூறியிருப்பதை அன்பர்கள் கவனிக்கவும். ஆகவே, திருவேரகம் நாஞ்சில் நாட்டில் உள்ளது என்றும், மலைநாட்டில் உள்ளது என்றும், கூறி மயங்கற்க. அருணகிரியார் முருகவேளின் அருள்பெற்ற ஞானமூர்த்தி. அவருடையத் திருவாக்கு பரம பிரமாணமாகும்.

கருத்துரை

திருவேரகத்துறைத் திருமுருகா! பேரின்பப் பெருவாழ்வு பெற அருள்.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...