அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மகர கேதனத்தன்
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
என் பிறவி
வேரை அறுத்து,
உனது திருவடியைத் தந்து அருள்.
தனன
தான தத்த தனன தான தத்த
தனன தான தத்த ...... தனதான
மகர
கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு ...... நெறிசேர்வார்
மலைய
வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண் ...... மடமாதர்
இகழ
வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து ...... விடுமாறு
இடைவி
டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்ப ...... தொருநாளே
அகில
மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து ...... மயில்வீரா
அசுரர்
சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு ...... மிளையோனே
மிகநி
லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி ...... லுறைவோனே
விரைய
ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மகர
கேதனத்தன் உரு இலான் எடுத்து
மதுர நாணி இட்டு, ...... நெறிசேர்வார்
மலையவே
வளைத்த சிலையின் ஊடு ஒளித்த
வலிய சாயகக் கண் ...... மடமாதர்
இகழ,
வாசம்உற்ற தலை எலாம் வெளுத்து,
இளமை போய் ஒளித்து ...... விடுமாறு,
இடை
விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து,
உன் இனிய தாள் அளிப்பது ...... ஒருநாளே.
அகிலம்
ஏழும் எட்டு வரையின் மீது முட்ட,
அதிரவே நடத்து ...... மயில்வீரா!
அசுரர்
சேனை கெட்டு முறிய, வானவர்க்கு
அடைய வாழ்வு அளிக்கும் ...... இளையோனே!
மிக
நிலா எறித்த அமுத வேணி நிற்க
விழை சுவாமி வெற்பில் ...... உறைவோனே!
விரைய
ஞான வித்தை அருள்செய் தாதை கற்க
வினவ, ஓதுவித்த ...... பெருமாளே.
பதவுரை
அகிலம் ஏழும் --- உலகங்கள் ஏழின் மீதும்,
எட்டு வரையின் மீதும் --- எட்டு மலைகளின்
மீதும்,
முட்ட --- முட்டும்படியாகவும்
அதிரவே --- அதிருமாறும்
நடத்தும் மயில் வீரா --- நடத்துகின்ற மயிலை
வாகனமாகவுடைய வீரரே!
அசுரர் சேனை கெட்டு முறிய --- அசுரர்களுடைய
சேனைகள் அழிந்து ஒழியச் செய்து
வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே ---
தேவர்கட்கு முழுவாழ்வைத் தந்த இளம் பூரணரே!
மிக நிலா எறித்த அமுதுவேணி நிற்க விழை
--- மிகவும் சந்திரவொளி வீசுகின்ற, அமுதச் சடையார்
நின்று கேட்க விரும்புகின்ற
சுவாமி வெற்பில் உறைவோனே --- சுவாமி மலையில் உறைகின்றவரே!
விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க
--- விரைவில் ஞானப் பொருளை அடியார்க்கு அருள்புரிகின்ற தந்தையார் கற்குமாறு,
வினவ
--- பிரணவப் பொருள் யாது என்று கேட்க
ஓதுவித்த பெருமாளே --- உபதேசித்த பெருமையிற்
சிறந்தவரே!
மகர கேதனத்தன் --- மகர மீனைக் கொடியாக உடையவனும்,
உருவு இலான் --- வடிவம் இல்லாதவனுமான மன்மதன்
எடுத்து --- கையிலெடுத்து,
மதுர நாணி இட்டு --- இனிமையான கரும்பு
வில்லில் சுரும்பு நாண் ஏற்றி,
நெறி சேர்வார் மலைய --- நல்ல நெறியில்
இருப்பவர்களும் மயங்குமாறு
வளைத்த சிலையின் ஊடு --- வளைத்த வில்லின்
உள்ளே,
ஒளித்த --- ஒளித்த
வலிய சாயக --- ஒளித்த வலிமையான அம்பு போன்ற,
கண் மட மாதர் இகழ --- கண்களையுடைய அழகிய
மாதர்கள் இகழும்படி,
வாசம் உற்ற தலை எலாம் வெளுத்து --- மணம்
பொருந்தியிருந்த தலை முழுவதும் வெளுத்து,
இளமை
போய் ஒளித்து விடுமாறு --- இளமைப் பருவமானது கழிந்து ஒளித்துக் கொள்ளவும்,
இடைவிடாது எடுத்த பிறவி வேர் அறுத்து ---
அடியேன் இடைவிடாமல் எடுத்து வந்த பிறவிப் பிணியின் வேரை அறுத்து,
உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே ---
தேவரீருடைய இனிய திருவடியைத் தந்தருள்கின்ற ஒரு நாள் அடியேனுக்கு உண்டாகுமோ?
பொழிப்புரை
உலகங்கள் ஏழும், மலைகள் எட்டும் முட்டுமாறும் அவைகள்
அதிருமாறும் செலுத்திய மயிலை வாகனமாக உடையவரே!
அசுரர்களுடைய சேனைகள் அழியுமாறுச்
செய்து, தேவர்கட்கு
முழுவாழ்வு தந்த இளம் பூரணரே!
மிகுதியாக நிலாவொளி வீசும் அமுதச்
சடையார் நின்று கேட்கும், விரும்புகின்ற
சுவாமிமலையில் உறைபவரே!
விரைவில் ஞான வித்தையைத் தந்தை கேட்க
உபதேசித்தருளிய பெருமிதம் உடையவரே!
மகர மீனைக் கொடியில் வைத்தவனும், உருவம் இல்லாதவனும் ஆகிய மன்மதன் இனிய
கரும்பை வில்லாக எடுத்து அதில் சுரும்பை நாணாக ஏற்றி, நல்ல நெறியில் நிற்பவரும் மயங்குமாறு
வளைத்து, அவ் வில்லினுள்
ஒளித்து விடும் மலர்க்கணை போன்ற கண்களையுடைய அழகிய மாதர்கள் இகழும்படி, வாசனை பொருந்தியிருந்த தலை முழுவதும்
வெளுத்து, இளமை போய் ஒழித்து
ஒழியுமாறு இடைவிடாது அடியேன் எடுத்த பிறவி நோயின் வேரை அறுத்து, தேவரீருடைய இனியதிருவடியைத் தந்தருளும்
நாள் ஒன்று எனக்குக் கிடைக்குமோ?
விரிவுரை
மகர
கேதனத்தன்
---
கேதனம்
- கொடி. மன்மதன் மீனக்கொடி உடையவன். மீன் சதா ஓய்வு ஒழிச்சல் இன்றி நீரில்
உலாவுவது போல் மன்மதனும் சதா திரிந்து மலர்க்கணை சொரிந்து மக்களை மயக்குவான்.
உரு
இலான்
---
சிவபெருமான்
நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிந்து அனங்கன் ஆயினான்.
மதுர
நாணி யிட்டு
---
மன்மதனுடைய
வில் கரும்பு: நாண் சுரும்பு: கணை அரும்பு. இந்த மூன்றையும் கொண்டு உலகில் வாழும்
எல்லா உயிர்களையும் மயக்குகின்றான். இரும்பையும் உருக்குகின்றான். இது இறும்பூது
அன்று. தில்லையில் நடம்புரியும் அம்பலவாணருடைய அருள் அவனிடம் இருந்து ஆட்சி
புரிகின்றது என்று குமரகுருபரர் கூறுகின்றார்.
கரும்பும்
சுரும்பும் அரும்பும் பொரும்படைக் காமர் வில்வேள்
இரும்பும்
கரைந்து உருகச் செய்யும் மால் இறும்பூது இது அன்றே,
விரும்பும்
பெரும்புலியூர் எம்பிரான் அருள்மேவில்,
ஒரு
துரும்பும்
படைத்து அழிக்கும் அகிலாண்டத் தொகுதியையே.
அருள்
பெறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்,
தெருள்
இது எனவே செப்பிய சிவமே. --- திருவருட்பா.
நெறி
சேர்வார் மலைய
---
நல்ல
நெறியில் நின்று உய்யவேண்டும் என்று தவம்புரிவோரும் மயங்குமாறு அவன் தன்
விற்றொழில் காட்டுவான்.
கண்ட
மடமாதர் இகழ
---
மன்மதனுடைய
மலர்க்கணையை ஒத்த அழகிய கண்களையுடைய மாதர்கள் கிழவர்களை இகழ்வார்கள்.
“மகளிர் நகையாடி
தொண்டு
கிழவன் இவன் ஆர் என” --- (தொந்திசரிய) திருப்புகழ்
வாசம்
உற்ற தலையெலாம் வெளுத்து ---
ஒரு
காலத்தில் மலர் சூடியும் நறுமணத் தைலம் பூசியும் வாசனையுடன் இருந்த தலைமுழுவதும்
கொக்குபோல் நரைத்து அழகு குன்றி நிற்கும்.
இளமை
போய் ஒளித்து
---
இளமைப்
பருவமானது சென்ற இடந்தெரியாமல் ஒளித்துக்கொள்ளும்.
சென்றது
காலம், சிதைந்தது இளமை நலம்,
நின்றதுசாவு
என்று நினைந்து உருகி, --- மன்றில்
நடிக்கின்ற
பால்வண்ணர் நாமம் எண்ணா மாந்தர்
படிக்கின்ற
நூல்எல்லாம் பாழ்.
என்கின்றார்
அதிவீரராம பாண்டியர்.
இடைவிடாத
பிறவி வேரறுத்து ---
இறப்பதும்
பிறப்பதும் ஆக பிறவி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. புனரபி ஜனனம் புனரபி
மரணம் என்று வடமொழிநூல் கூறுகின்றது. எண்ணில்லாத காலமாய் எண்ணில்லாத பிறவி
வந்துகொண்டே இருக்கின்றது; ஆதலால் அப்பிறவியின்
வேரை அறுத்து முருகன் அருள் புரிகின்றான்.
அப்
பரமன் ஒருவனே பிறவாதவன்; இறவாதவன். அவன்தான்
பிறவிப் பிணியகற்ற வல்லான். 'பவரோக வயித்தியநாதன்‘
முருகன் திருவடி பிறவியை அகற்றும்.
“பிறவிப் பெருங்கடல்
நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்” --- திருக்குறள்
இனிய
தாள் அளிப்பது ஒருநாளே ---
இனிமையான
திருவடியைத் தருகின்ற நாள் ஒன்று எனக்குக் கிடைக்குமோ என்று இறைவனிடம்
வேண்டுகின்றார்.
கருத்துரை
இளம்பூரணரே!
சுவாமிமலை மேவும் சிவகுருவே! பிறவித் துன்பம் அகல திருவடியைத் தந்தருளுவீர்.
No comments:
Post a Comment