அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பாதி மதிநதி
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
மரண பயத்தைத்
தீர்த்து,
திருவடியை வழிபட அருள்.
தான
தனதன தான தனதன
தான தனதன ...... தனதான
பாதி
மதிநதி போது மணிசடை
நாத ரருளிய ...... குமரேசா
பாகு
கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு ...... மருகோனே
கால
னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி
யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு
மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு ...... மிளையோனே
சூத
மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர
னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பாதி
மதிநதி போதும் அணிசடை
நாதர் அருளிய ...... குமரேசா!
பாகு
கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா!
காதும்
ஒருவிழி காகம்உறஅருள்
மாயன் அரி திரு ...... மருகோனே!
காலன்
எனை அணுகாமல் உனது இரு
காலில் வழிபட ...... அருள்வாயே.
ஆதி
அயனொடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகை உறு ...... சிறைமீளா
ஆடும்
மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வர வரும் ...... இளையோனே!
சூதம்
மிகவளர் சோலை மருவு,
சுவாமி மலைதனில் ...... உறைவோனே!
சூரன்
உடல் அற, வாரி சுவறிட,
வேலை விட வல ...... பெருமாளே.
பதவுரை
பாதி மதி --- பிறைச்சந்திரனையும்,
நதி --- கங்கா நதியையும்,
போதும் --- கொன்றை முதலிய மலர்களையும்,
அணி சடை --- தரித்துக் கொண்டுள்ள சடைமுடியை உடைய
நாதர் அருளிய குமர --- தனிப்பெருந் தலைவராகிய
சிவபெருமான் பெற்றருளிய குமாரக் கடவுளே!
ஈசா --- முழுதற் கடவுளே!
பாகு கனிமொழி மாது --- கற்கண்டின்
பாகையும் பழச் சுவையையும் ஒத்த திருமொழியை உடைய பெண்ணமுதமாகிய
குறமகள் பாதம் வருடிய மணவாளா --- வள்ளியம்மையாருடைய
திருவடியைப் பிடித்து வணங்கிய கணவரே!
காதும் ஒரு விழி காகம் உற அருள் --- கொல்லுதற்குத்
துணிந்தும் (அடைக்கலம் புகுந்ததனால்) ஒரு விழியைக் காக வடிவுற்ற காகாசுரனுக்குத்
தந்து அருள்புரிந்த,
மாயன் அரி திரு மருகோனே --- மாயா விநோதரும், பாவங்களைப்
போக்குபவருமாகிய நாராயண மூர்த்தியினுடைய திருமருகரே!
ஆதி அயன் ஒடு --- படைத்தல் தொழிலுக்கு
முதல்வராகிய நான்முகக் கடவுளுடன்
தேவர் சுரர் உலகு ஆளும் வகை --- ஏனைய
தேவர்களும் தேவலோகத்தைப் பண்டுபோல் அரசு செலுத்தி ஆளுமாறு
உறுசிறை மீளா --- சூரபன்மனால் உற்ற சிறையை
மீட்டு,
ஆடு மயிலினில் ஏறி --- (ஓங்கார வடிவுடன்)
ஆடுகின்ற மயில் வாகனத்தில் எழுந்தருளி
அமரர்கள் சூழ வர வரும் இளையோனே --- தேவ
கூட்டங்கள் சூழ்ந்துவர பவனி வந்த என்றும் அகலாத இளமை உடையவரே,
சூதம் மிக வளர் சோலை மருவு --- மாமரங்கள்
மிகவும் வளம்பெற்று வளர்கின்ற சோலைகள் சூழ்ந்துள்ள
சுவாமி மலைதனில் உறைவோனே --- சுவாமிமலை என்னும்
திருத்தலத்தில் வாழ்கின்றவரே,
சூரன் உடல் அற --- சூரபன்மனுடைய வச்சிர யாக்கை
பிளவுப்பட்டு அழியவும்
வாரி சுவறிட --- கடல் வற்றிப்போகவும்
வேலை விட வல பெருமாளே --- வேற்படையை
விட்டருளிய பேராற்றலுடைய பெருமையின் மிக்கவரே,
காலன் எனை அணுகாமல் --- இயமன் அடியேனைப்
பற்றும் பொருட்டு வந்து நெருங்கா வகை
உனது இருகாலில் வழிபட அருள்வாயே --- தேவரீருடைய
திருவடிக் கமலங்கள் இரண்டினையும் வழிபட்டு உய்யுமாறு திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
பிறைச் சந்திரனையும், கங்கா நதியையும், மலர்களையும் (கருணையுடன்)
சூடிக்கொண்டுள்ள சடைமுடியையுடையவரும் எப்பொருட்கும் இறைவரும் ஆகிய சிவபெருமான்
பெற்றருளிய திருக்குமாரரே!
தனிப்பெருந் தலைவரே!
கற்கண்டின் பாகினையும் கனிரசத்தையு
மொத்த இனிய மொழியையுடைய வள்ளி நாயகியாரது திருவடியைப் பிடித்து வணங்கிய கணவரே!
கொல்லுவதற்கு என்று கணைவிட்டும், அடைக்கலம் புகுந்ததனால், ஒரு கண்ணைக் கொடுத்துக் காகத்திற்கு
அருள் புரிந்தவரும், மாயவல்லபரும், பாவநாசகருமாகிய நாராயணமூர்த்தியினுடைய
மருகரே!
படைப்புத் தொழிலுக்கு முதல்வராகிய
நான்முகக் கடவுளுடன் ஏனைய தேவர்களும், தங்கள்
தங்கள் உலகங்களைப் பண்டுபோல் அரசுசெலுத்தி ஆளும்படி அவர்கட்குற்ற சிறையை நீக்கி
மீட்டு, (தாள ஒத்துக்கிசைய)
ஆடுகின்ற மயிற்பரியின் மீது எழுந்தருளி, தேவர்
குழாங்கள் சூழ்ந்துவர பவனி வந்த என்றுமகலா இளமை யுடையவரே!
மாமரங்கள் வளம்பெற மிகவும் வளர்ந்துள்ள
குளிர்ந்த சோலைகள் பல சூழ்ந்து விளங்கும் சுவாமி மலையின் மீது உறைகின்றவரே!
சூரபத்மனுடைய வச்சிரயாக்கை
பிளவுபட்டழியவும் கடல் வற்றவும் வேற்படையை விட்டருளிய வல்லபத்தையுடைய பெருமித
மிக்கவரே!
கூற்றுவன் அடியேனிடம் அணுகாவகை உமது
திருவடித் தாமரைகள் இரண்டையும் வழிபட்டு உய்யுமாறு அருள்புரிவீர்.
விரிவுரை
பாதி
மதி
---
தக்கன்
கொடுத்த சாபத்தால் தேய்ந்து ஒளி மழுங்கிய சந்திரன் உள்ளம் நடுங்கி, வேறு புகலிடமின்றி சிவபெருமானிடம் சரண்
புகுந்தான். பரமகருணாமூர்த்தியாகிய பரமேசுவரர் அவனுடைய குருதார கமனம் முதலிய
குற்றங்களை நினையாதவராய் கருணைகொண்டு குறை மதியை தமது தலையிற் சூடிக்கொண்டு
காத்தருளினார்.
“பித்தா பிறைசூடி
பெருமானே யருளாளா”
“தூவெண் மதிசூடி”
என்ற
தமிழ் வேதங்களின் அருமைப்பாட்டை உன்னுக.
“எம்பெருமானே! அறியாமையும்
பசுந்தன்மையும் களங்கமும், கோணல் தன்மையும் உடைய
சந்திரனை முடியில் சூடிக் கொண்டிருக்கின்றீர். அக் குற்றங்கள் அடியேனிடத்தில்
ஒன்றுகூட இல்லை. இருந்தால் சந்திரனை போல அடியேனும் உமது சென்னிக்கு ஒர் அணிகலன்
ஆவேன்” என்று சங்கரர் அழகாகக் கூறியிருப்பது மகிழ்ச்சியை விளைவிக்கின்றது.
நாதர்
அருளிய குமரேசா ---
நாதர்
- தலைவர். உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய ஒரு பெருங்கடவுள் சிவபெருமான் ஒருவரே. ஆகலான், அவரே தனிப் பெருந்தலைவர். சிவமூர்த்தி.
குற்றம் பொருந்திய சந்திரனைக் குணமுள்ளவன் போலக் கொண்டும், அடங்காது உலகினை யழிப்பேனென வந்த கங்கா
நதியைச் சடையில் அடக்கியும் அருளிய திறங்களை உன்னுங்கால், அவரது அளப்பற்ற அருட்குணத்தையும்
வரம்பற்ற ஆற்றலையும் உணர்த்துகின்றன. அத்தகைய பெருந்தகையாரது புதல்வராதலால்
முருகப்பெருமானும் அத்தகைய ரென்பது போதரும்.
பாகு
கனிமொழி மாது குறமகள் ---
வள்ளியம்மையார்
பாகும் கனிரசமும் நாணுமாறு இனிமையாகப் பேசுவர்; சிந்தைக்கும் செவிக்கும் இன்பம் பயக்க
மொழிக்கு மொழி தித்திப்பாக அம்மையார் பேசுவதால் அவருடைய சொல்லைக் கேட்க விரும்பி
முருகப் பெருமான் வாயூறி நின்றார்.
“தேனென்று பாகு என்று உவமிக்க
ஒணா மொழித் தெய்வ வள்ளி”
--- கந்தர்அலங்காரம்
கூன்ஏறு
மதிநுதல் தெய்வக் குறப்பெண்
குறிப்புஅறிந்து அருகுஅணைத்து,உன்
குற்றேவல்
செய்யக் கடைக்கண் பணிக்கஎனக்
குறையிரந்து அவள் தொண்டைவாய்த்
தேன்ஊறு
கிளவிக்கு வாய்ஊறி நின்றவன்
செங்கீரை ஆடி அருளே.
செத்துப்
பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடி அருளே” ---
குமரகுருபரர்
காதும்
ஒருவிழி காகம் உற அருள் மாயன் ---
காகத்திற்குக்
கண்ணளித்த வரலாறு.
ஸ்ரீரகுராமர்
சீதையுடனும், இலக்குவருடனும், கானகம் புகுந்து, சித்திரக்கூட மலையிலே, வடகிழக்குப் பாகத்திலே மந்தாகினி
நதிக்கு அருகில் உறைந்து வருவாராயினார். அங்கு பழங்களும் கிழங்குகளும் நீரும்
நிறைந்திருந்தன. சித்தர் பலர் அங்கு தவம் செய்து கொண்டிருந்தார்கள். பலவகை மலர்கள்
நிறைந்து நறுமணங் கமழ்ந்து கொண்டிருந்தது. குயில்கள் கூவ மயில்கள் ஆட வண்டுகள் பாட
அவ்விடம் மனத்திற்கு இனிமையைத் தந்து கண்ணுக்கு நல்விருந்து நல்கிக்
கொண்டிருந்தது.
ஒரு
நாள் இராமர் சற்று இளைப்புடன் சீதையின் மடியின் மீது தலைவைத்து இனிது கண்
துயின்றார். சீதை சித்திரப் பதுமை போல் அசைவற்று இருந்தார். அவ்வழிச் சென்ற இந்திர
குமாரனாகிய சயந்தன் சீதாதேவியைக் கண்டு காமுற்றான். காமத்தால் அவன் அறிவுக்கண்
கெட்டது. எப்படியாவது முயன்று அம்மையாரது திருமேனியைத் தீண்டிவிட வேண்டுமென
எண்ணினான். எண்ணியவன் காக உருவெடுத்தான். அம்மையாரது தனங்கள் புண்படுமாறு பல முறை
குத்தினான். தனங்கள் கிழிந்து உதிரம் பெருகி இராமர் முகத்தில் சிந்தியது. நன்றாகத்
தூங்கிக் கொண்டிருந்த இராமர் கண்விழித்தெழுந்தார். “சீதா! உன் தனங்கள் கிழிந்து
இரத்தம் வடிவதற்குக் காரணம் என்ன?”
என்று
வினாவினார். சீதை, “இராகவரே! அதோ அந்தக்
கிளையில் இருக்கும் காக்கை பலமுறை என்னைக் குத்தித் துன்புறுத்தியது” என்றார்.
இராமர், “ஏன் என்னை அப்பொழுதே
எழுப்பாமலிருந்தாய்?” என்றார். சீதை, “தாங்கள் அயர்ந்து உறங்கும் போது உங்கள்
உறக்கத்திற்குத் தடை செய்யக்கூடாதென்று பொறுத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.
இராமர்
உடனே திருக்கண் சிவந்து, தான் படுத்திருந்த
தருப்பைப் பாவிலிருந்து ஒரு புல்லை எடுத்து, அக்காகத்தை “காதும்” (கொல்லும்) என்று
விட்டார். “வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்றபடி அப்புல் அத்திரமாகி காகத்தை
விரட்டியது. காகவுருக்கொண்ட சயந்தன் பயந்து, எண்திசையும் ஓடி ஓடி ஒளிந்தான்.
இராமபாணம் சென்ற இடமெல்லாம் தொடர்ந்து சென்றது. முடிவில் அவன் கூற்றுவனிடம் அபயம்
புகுந்தான். கூற்றுவன் இராமபாணத்தைக் கண்டு அஞ்சி விரட்டிவிட்டான். இந்திரனிடமும், நான்முகக் கடவுளிடமும் சென்று
முறையிட்டான். அவர்களும் அஞ்சி விரட்டினார்கள். முடிவில் சிவபிரானிடம் ஓடினான்.
சிவமூர்த்தி, “குற்றம் எங்கு
செய்தனையோ அவ்விடமே மன்னிப்புக் கேட்டுக்கொள். இராமர் காப்பாற்றுவார்” என்று கூற, காகம் ஓடிவந்து சித்திரக்
கூடத்திலிருந்த சீதாபதியினுடைய தாள்களில் வீழ்ந்து, “இராமா அபயம்; இரகுவீரா அபயம்; தாசரதே அபயம்; காத்தருள்வீர்” என்று அலறியது. உடனே
இராமர் தண்ணருள் செய்து, “காகமே, கலங்கற்க! தஞ்சம் என்றவரைக் காப்பது
எங்கள் குலநெறி. நின் உயிரைக் கொடுத்தேன். பிறன் மனைவியைத் தீய எண்ணத்துடன்
காண்பது பெருந்தவறு. நீ சீதையைத் தீய எண்ணத்தோடு பார்த்தனை. அங்ஙனம் பார்த்த
கண்களில் ஒன்று நமது கணைக்கு இலக்கு ஆகுக. இன்று முதல் நின் குலத்தோர்க்கு ஒரு
கண்ணாகவே இருக்க” என்று ஒரு கண்ணைக் கொடுத்து அருள்புரிந்தார்.
சித்திர
கூடத்து இருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட,
அத்திரமே
கொண்டு எறிய, அனைத்துலகுந் திரிந்து ஓடி,
"வித்தகனே!
இராமா! ஓ நின்அபயம்" என்று அழைப்ப
அத்திரமே
அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் --- பெரியாழ்வார்
மன்னிக்க
முடியாத குற்றத்தைப் புரிந்த காகத்தையுங் காத்த கருணை வள்ளலாகிய திருமாலினுடைய
மருகராதலால், அடியேன் புரிந்த
குற்றங்களையும் மன்னிக்க வேண்டும் என்பது குறிப்பு.
காலன்
எனை அணுகாமல்........அருள்வாயே ---
“சந்திரனைத் தக்க
சாபமும், காகத்தை இராமபாணமும்
விரட்டித் துன்புறுத்தியது போல் அடியேனைக் காலன் துன்புறுத்த வருகின்றான். அங்ஙனம்
அக்காலன் வந்து என்னையணுகா வண்ணம் உமது திருவடித் தொழும்பனாக ஆக்கிக் கொள்வீர்”
என்று சுவாமிகள் முறையிடுகின்றார். முருகனடியாரிடம் காலன் அணுகுவதில்லை என்பது
தோற்றம்.
வேலாயுதன், சங்கு சக்ராயுதன் விரிஞ்சன்
அறியாச்
சூலாயுதன்
தந்த கந்தச் சுவாமி, சுடர்க்குடுமிக்
கால்
ஆயுதக் கொடியோன் அருள் ஆய கவசம் உண்டு, என்
பால்
ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே.
--- கந்தர்
அலங்காரம்
ஆதி
அயனொடு.................சிறை மீளா ---
பிரமாதி
தேவர்களுக்குச் சூரபன்மன் இட்ட சிறையை எம்பெருமான் நீக்கிய அரும் பெரும் வரலாற்றை
அம் முதல்வன் புராணத்தால் கண்டு மகிழ்க.
அரியரி
பிரமாதியர் கால்விலங்கவிழ்க்கும் பெருமாளே”
--- (தெருவினில்) திருப்புகழ்
கருத்துரை
சிவபுதல்வரே!
வள்ளி மணவாளரே! திருமால் மருகரே! தேவர் சிறைமீட்டு மயில்மிசை வரும் இளம் பூரணரே!
சுவாமிமலையில் வாழ்பவரே! சூரனும் கடலும் அழிய வேல் விட்டவரே! இயமபயம் உண்டாகா வண்ணம்
உமது திருவடித் தொழும்பைத் தருவீர்.
No comments:
Post a Comment