திரு நின்றியூர்




                                             திரு நின்றியூர்

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

       வைத்தீசுவரன்கோயில் - மயிலாடுதுறை சாலையில் திருநின்றியூர் இருக்கிறது.

     பிரதான சாலையிலிருந்து கோவில் செல்ல பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம்.

     மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.


இறைவர்              : மகாலட்சுமீசர், இலக்குமிபுரீசுவரர்

இறைவியார்           : லோகநாயகி.

தல மரம்                : விளாமரம்.

தீர்த்தம்               : இலட்சுமி தீர்த்தம்.


தேவாரப் பாடல்கள்:    1. சம்பந்தர் - சூலம்படை

2.    அப்பர்   - கொடுங்கண் வெண்டலை

3.    சுந்தரர்  - 1. அற்றவ னாரடியார்,
                                               2. திருவும் வண்மையும்


         தனது தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயான ரேணுகாவைக் கொன்றார் பரசுராமர். பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி தாயை உயிர்ப்பித்தார். தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றார். ஜமதக்னி முனிவரும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக காட்சி தருகிறார். ஜமதக்னி முனிவருக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற் பெயருடன் சிறிய பாண வடிவில் காட்சி தருகிறார். அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது. மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே தான் இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்திரன், அகத்தியர், பரசுராமர், ஐராவதம், பசு, சோழ மன்னன் ஆகிய பலரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறுகள் யாவும் பெற்றுள்ளனர்.

         சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்கும் வழக்கும் உடையவன் அவ்வாறு தனது படைகளுடன் செல்லும் போது இத்தலம் இருக்கும் காட்டு வழியே தான் தினமும் செல்வான். இரவு நேரத்தில் தீப்பந்தங்களுடன் இவ்வழியே செல்லும் போது தீப்பந்தங்கள் தானாகவே அணைந்து, இத்தல எல்லையைத் தாண்டியவுடன் தானாகவே எரிய ஆரம்பிக்கும். இவ்வாறு பல நாட்கள் தொடர்ந்து நடைபெற, மன்னன் காட்டில் மாடுகளை மேய்ந்து கொண்டிருந்த ஒரு இடையனிடம் இத்தலத்தில் ஏதேனும் விசேஷம் உண்டா எனக் கேட்டான். இடையன் பசுக்கள் இங்கு ஓரிடத்தில் தானாகவே பாலை கறப்பதைக் கண்டதாகக் கூறினான். மன்னன் அவ்விடத்தில் நிலத்தைத் கோடாரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது. மன்னன் மேலும் அவ்விடத்தை ஆராய ஒரு சிவலிங்கம் இருப்பதையும், அதன் பாணத்தின் மேல் பகுதியில் கோடாரி பட்டு இரத்தம் வருவதையும் கண்டு மிவும் வருத்தம் அடைய, அப்போது அசரீரி மூலம் இறைவன் தான் இருக்குமிடத்தை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்ததாகக் கூறி, இவ்விடத்தில் ஆலயம் எழுப்ப மன்னனுக்கு ஆணையிட்டார். மன்னனும் சிவலிங்கம் இருந்த அதே இடத்தில் கோவிலைக் கட்டினான் என்று தல வரலாறு கூறுகிறது. இன்றும் சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு குழி போல இருப்பதைப் பார்க்கலாம். இத்தலத்தில் மூலவர் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் எழுந்தருளியுள்ளார். தீப்பந்தம் திரி நின்ற ஊர் ஆனதால் இத்தலம் திரிநின்றஊர் என்று பெயர் பெற்று தற்போது மருவி திருநின்றியூர் என்று வழங்குகிறது.

         மூவர் பெருமக்களின் பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில் திருநின்றியூர் இலக்குமிபுரீசுவரர் ஆலயமும் ஒன்று. இவ்வாலயம் 3 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தியும், கொடிமரத்து விநாயகரும் இருப்பதைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. அடுத்து பரசுராமர் வழிபட்ட லிங்கமும், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்து நவக்கிரக சந்நிதியும், பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியிலும் உள்ளன. பிரகார வலம் முடித்து, துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டு, துவாரபாலகர்களைத் தொழுது, உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதியும், வலதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன.

         தேவாரம் பாடப்பட்ட காலத்தில் இத்தலமும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. திருக் கோச்செங்கண் சோழர் பெரிய புராணத்தில் இடம் பெற்ற அடியார்களுள் ஒருவர். நாயனாருடைய வரலாற்றை அறிந்திராத அர்ச்சகர் ஒருவர், கோச்செங்கண் சோழருக்கு ஏற்பட்ட பிரமகத்தி தோஷம் நீங்க, இத் திருத்தலத்துப் பெருமானை வழிபட்டதாக அபத்தமாகக் கூறினார்.
அவருடைய கூற்று முற்றிலும் தவறானது என்று அடியேன் திருத்திச் சொன்னேன். அவர் எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படித் தான் பல திருத்தலங்களிலும் உண்மை வரலாற்றைத் திரித்துக் கூறும் பாவச் செயல் நடந்தேறி வருகின்றது.

     வழிபடச் செல்லுகின்ற அடியவர்களும், விஷயம் தெரிந்தவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதில்லை. அர்ச்சகர் சொல்வது தான் கோயில் வரலாறு என்று நம்புகின்றனர். திருமுறையால் வழிபடுகின்ற சிவனடியார்களின் நிலையே இப்படி என்றால், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லுவது?

     நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கொடை முடியா நன்றியூர் என்று அறிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற நின்றியூர் மேவு நிலைமையனே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 286
போற்றிய காதல் பெருகப் புள்ளிருக் குந்திரு வேளூர்
நால் தடம் தோள் உடை மூன்று நயனப்பிரான் கோயில் நண்ணி
ஏற்றஅன்பு எய்த வணங்கி, இருவர்புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொல் பதிகம் அணிந்தார்.

         பொழிப்புரை : உள்ளத்து எழும் விருப்பம் மேன்மேலும் மிக, `திருப்புள்ளிருக்கு வேளூரில்' நான்கு பெருந்தோள்களையுடைய முக்கண்ணுடைய பெருமான் வீற்றிருக்கும் கோயிலை அடைந்து, உரிய பேரன்பு பொருந்த வணங்கி, பறவையரசர்களான சம்பாதி சடாயு என்பவர்கள் வணங்கிச் செய்த வழிபாட்டின் பெருமையைப் பாராட்டிப் போற்றி, அழகான சொற்களால் அமைந்த திருப்பதிகத்தை இறைவர்க்கு அணிவித்தார்.


பெரிய புராணப் பாடல் எண் : 287
நீடு திருநின்றி யூரின் நிமலர்தம் நீள்கழல் ஏத்தி,
கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு, வண்தமிழ் கூறி,
நாடுசீர் நீடூர் வணங்கி, நம்பர்திருப் புன்கூர் நண்ணி,
ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.

         பொழிப்புரை : திரு என்றும் நிலைபெற்றிருக்கும் திருநின்றியூரில் இறைவரின் பெருமைமிக்க திருவடிகளைப் போற்றி மிக்க பத்திமையுடன் வணங்கிக் கும்பிட்டு, வளமையான திருப்பதிகத்தைப் பாடி அருளி, நாளும் சிறப்புடைய திருநீடூரை வணங்கி, இறைவரின் திருப்புன்கூரை அடைந்து, அருட்கூத்து இயற்றும் திருவடிகளை வணங்கி, அருந்தமிழ்ப் பதிகம் பாடி ஆங்கே விருப்பத்துடன் வதிந்தருளினார்.

         குறிப்புரை : திருநின்றியூரில் பாடிய பதிகம், `சூலம்படை' (தி.1 ப.18) என்று தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

         திருநீடூரில் சுந்தரர் பதிகம் ஒன்றே உள்ளது.

         திருப்புன்கூரில் அருளிய பதிகம், `முந்தி நின்ற' (தி.1 ப.27) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


1. 018   திருநின்றியூர்                பண் – நட்டபாடை
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சூலம்படை, சுண்ணப்பொடி சாந்தம்சுடு நீறு,
பால்அம்மதி பவளச்சடை முடிமேலது, பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.

         பொழிப்புரை :முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி, மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும், சாந்தமும், திருநீறே. பால் போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் சடை முடியின் மேலது.


பாடல் எண் : 2
அச்சம்இலர், பாவம்இலர், கேடும்இலர் அடியார்,
நிச்சம்உறு நோயும்இலர் தாமும்,நின்றி யூரில்
நச்சம்மிடறு உடையார்,நறுங் கொன்றைநயந்து ஆளும்
பச்சம்உடை அடிகள்திருப் பாதம்பணி வாரே.

         பொழிப்புரை :நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.


பாடல் எண் : 3
பறையின்ஒலி சங்கின்ஒலி பாங்குஆரவும், ஆர
அறையும்ஒலி எங்கும்அவை அறிவார்,அவர் தன்மை
நிறையும்புனல் சடைமேல்உடை அடிகள்,நின்றி யூரில்
உறையும்இறை அல்லது,எனது உள்ளம் உணராதே.

         பொழிப்புரை :பறையடிக்கும் ஒலி, சங்கு முழங்கும் முழக்கம், பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாததத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது.


பாடல் எண் : 4
பூண்டவ்வரை மார்பில்புரி நூலன், விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்ஒரு பால்அம்மதி, அதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றிஅது தன்னில்
ஆண்டகழல் தொழல் அல்லது அறியார்அவர் அறிவே.

         பொழிப்புரை :அணிகலன்களைப் பூண்ட மலைபோன்ற மார்பில் முப்புரிநூலை அணிந்து, விரிந்த கொன்றை மலர் மாலையையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும் சூடி, வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி, நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத்தொழுதல் அல்லது, அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.


பாடல் எண் : 5
குழலின்இசை வண்டின்இசை கண்டுகுயில் கூவும்
நிழலின்எழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வலன் அங்கையது ஏந்திஅனல் ஆடும்
கழலின்ஒலி ஆடும்புரி கடவுள்,களை கண்ணே.

         பொழிப்புரை :குழலிசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும், நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை வலத்திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக் களைகண் ஆவான்.


பாடல் எண் : 6
மூரல்முறு வல்,வெண்நகை உடையாள்ஒரு பாகம்
சாரல்மதி அதனோடுஉடன் சலவம்சடை வைத்த
வீரன்,மலி ஆழகார்பொழில் மிடையும், திரு நின்றி
யூரன்கழல் அல்லாதுஎனது உள்ளம் உண ராதே.

         பொழிப்புரை :புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது.


பாடல் எண் : 7
பற்றிஒரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும்
பெற்றிஅது வாகித்திரி தேவர்பெரு மானார்,
சுற்றிஒரு வேங்கைஅத ளோடும்பிறை சூடும்
நெற்றிஒரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.

         பொழிப்புரை :பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும் இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறை மதியைச் சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளியுள்ளார்.


பாடல் எண் : 8
*********
பாடல் எண் : 9
நல்லம்மலர் மேலானொடு ஞாலம்அது உண்டான்
அல்லர்என ஆவர்என நின்றும்அறிவு அரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரின்நிலை யார்,எம்
செல்வர்அடி அல்லாதுஎன சிந்தைஉண ராதே.

         பொழிப்புரை :நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனோடு உலகைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டிய திருமாலும், சிவபிரானே முழுமுதற் பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக்கொண்டு தேடிக் காணுதற்கரியவராய் நின்றவரும் நெல்வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எம் செல்வருமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லது என் சிந்தை வேறொன்றையும் உணராது.


பாடல் எண் : 10
நெறியில்வரு பேராவகை நினையாநினைவு ஒன்றை
அறிவில்சமண் ஆதர்உரை கேட்டும்அய ராதே,
நெறிஇல்அவர் குறிகள்நினை யாதே, நின்றி யூரில்
மறிஏந்திய கையான்அடி வாழ்த்தும்அது வாழ்த்தே.

         பொழிப்புரை :சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற்பொருளை அறியும் அறிவற்ற சமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும், தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச்சமயிகளின் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்தியகையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்.


பாடல் எண் : 11
குன்றம்அது எடுத்தான்உடல் தோளும்நெரி வாக
நின்றுஅங்குஒரு விரலால்உற வைத்தான்,நின்றி யூரை
நன்றுஆர்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறைவு இன்றிநிறை புகழே.

         பொழிப்புரை :கயிலைமலையை எடுத்த இராவணனின் உடல் தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்.
                                             திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 189
ஆண்டஅரசு எழுந்தருள, கோலக் காவை
         அவரோடும் சென்றுஇறைஞ்சி ,அன்பு கொண்டு
மீண்டுஅருளி னார்அவரும், விடைகொண்டு இப்பால்
         வேதநா யகர்விரும்பும் பதிகள் ஆன
நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர்
         நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூரும்
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
         கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய பெருமைமிக்க திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்செல்பவராய்.

         குறிப்புரை : திருக்கோலக்காவில் அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

         அடுத்து இருக்கும் திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.

         திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன.
         1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை;
         2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை.

         இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன.

         திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம்.

         திருநனிபள்ளியில் அருளிய பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.

         இனி, இப்பாடற்கண் நனிபள்ளி முதலா நண்ணி என வருதலின் வேறு பிற பதிகளும் தொழுது சென்றமை விளங்குகின்றது. அப்பதிகளும் பாடியருளிய பதிகங்களும்:

1.    திருக்குரக்குக்கா: `மரக்கொக்காம்` (தி.5 ப.75) – திருக்குறுந்தொகை.

2.     புள்ளிருக்கு வேளூர்:
(அ). `வெள்ளெருக்கு` (தி.5 ப.79) - திருக்குறுந்தொகை;
(ஆ). `ஆண்டானை` (தி.6 ப.54) - திருத்தாண்டகம்.

3.    திருவெண்காடு:
(அ). `பண்காட்டி` (தி.5 ப.49) - திருக்குறுந்தொகை
(ஆ). `தூண்டுசுடர்` (தி.6 ப.35) - திருத்தாண்டகம்.

4.    திருச்சாய்க்காடு:
(அ) `தோடுலாமலர்` (தி.4 ப.65) - திருநேரிசை.
(ஆ). `வானத்து இளமதியும்` (தி.6 ப.82) - திருத்தாண்டகம்.

5.     திருவலம்புரம்:
(அ). `தெண்டிரை` (தி.4 ப.55) - திருநேரிசை
(ஆ). `மண்ணளந்த` (தி.6 ப.58) - திருத்தாண்டகம்.


5. 023    திருநின்றியூர்                 திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கொடுங்கண் வெண்தலை கொண்டு, குறைவிலைப்
படுங்கண் ஒன்றுஇல ராய்ப்பலி தேர்ந்துஉண்பர்,
நெடுங்கண் மங்கையர் ஆட்டுஅயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுஉதைத் திட்ட கருத்தரே.

         பொழிப்புரை : நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் புரிகின்ற நின்றியூரில் , கடிய கையுடைய கூற்றுவனை உதைத் திட்டவரும் அன்பர்களின் கருத்தில் உறைபவரும் ஆகிய இறைவர் , கொடிய கண்களை உடைய வெள்ளிய கபாலம் கொண்டு , குறை கொண்டு விலை கூவுதற்குப்படும் பொருள் ஏதுமிலராகிய இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்புடையவர் ஆவர் .


பாடல் எண் : 2
வீதி வேல்நெடும் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொளல் பாலது, நின்றியூர்
வேதம் ஓதி விளங்குவெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்தஎம் கள்வரே.

         பொழிப்புரை : வேதங்களை ஓதுபவரும் , விளங்குகின்ற வெள்ளியதோடும் வெள்ளிய சங்கக்குழையும் உடைய காதினருமாகிய ( அர்த்தநாரீசுவரரும் ) எமது கள்வரே ! வீதியில் வேலனைய நீண்ட கண்களை உடைய பெண்களின் வெள்வளைகளைக் கொள்வது தேவரீர்க்கு நீதியோ ? உரைத்தருள்வீராக .


பாடல் எண் : 3
புற்றின் ஆர்அர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்,சுண்ணப் போர்வைகொண் டார்,சுடர்
நெற்றிக் கண்உடை யார்,அமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே.

         பொழிப்புரை : புற்றினைப் பொருந்திய அரவினைப் புலித் தோலின்மேல் சுற்றியவரும் , திருநீற்றைப் பூசிய மேனியினரும், சுடர் நெற்றிக்கண்ணை உடையாருமாகிய இறைவர் அமர்கின்ற நின்றியூரைப் பற்றிய அன்பர்களை , வினைகளும் அவற்றான் வரும் பாபங்களும் பற்றமாட்டா .


பாடல் எண் : 4
பறையின் ஓசையும், பாடலின் ஓசையும்,
மறையின் ஓசையும் மல்கி, அயல்எலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும்என் உள்ளமே.

         பொழிப்புரை : பறையின் ஓசையும் , தெய்வப்பாடல்களின் ஓசையும் , வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது .


பாடல் எண் : 5
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்,
இனையன் என்றுஎன்றும் ஏசுவது என்கொலோ,
நினையும் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈர்உரி போர்த்த பரமரே.

         பொழிப்புரை : நினைத்தற்குரிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில் . பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் உரியினைப் போர்த்த பரமரே ! சுனையிற் பூத்த நீல மலரும் தோற்றுச் சுளித்தற் கேதுவாய் நெடுங்கண்களை உடையளாகிய இவள் ! இத்தன்மை உடையவன் , என்று என்றும் ஏசுவதன் காரணம் என்னை ?


பாடல் எண் : 6
உரைப்பக் கேண்மின்,நும் உச்சி உளான்தனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொன் கற்றையர், ஆர்இவரோ, எனில்
திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.

         பொழிப்புரை : உரைப்பக் கேட்பீராக ; நும் சென்னியின்கண் உள்ள சிவபிரானை , வரிசையாகிய பொன்மதில் சூழ்ந்த திருநின்றியூரில் மாற்றுரைக்கத்தக்க பொன் போன்ற கற்றைச் சடையுடையராகிய இவரை ஆர் என்று வினவுவீராயின் , அலைத்துப் பாடித் திரிதரும் செல்வர் இவர் .


பாடல் எண் : 7
கன்றி ஊர்முகில் போலும் கருங்களிறு
இன்றி ஏறலன் ஆல்,இது என்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி ஏறுஉடை எங்கள் விகிர்தனே.

         பொழிப்புரை : திருநின்றியூரைப் பதியாகப் பொருந்தியவனும் , வெற்றிமிக்க ஆனேறு உடையவனுமாகிய எங்கள் விகிர்தன் , கறுத்து ஊர்ந்து வருகின்ற முகில்போன்ற கருங்களிறு இன்றி வேறு ஏறி ஊராதது என்னையோ ?


பாடல் எண் : 8
நிலையி லாவெள்ளை மாலையன், நீண்டதோர்
கொலைவிலால் எயில் எய்த கொடியவன்,
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்,
உரையி னால்தொழு வார்வினை ஓயுமே.

         பொழிப்புரை : நிலையில்லாத வெள்ளெலும்புகளை மாலையாக உடையவனும் , நீண்டதோர் கொல்லுந்தொழிலுடைய வில்லால் எயில் எய்த கொடியவனும் , நிலையினார் வயல்சூழ் திருநின்றியூர் இறைவனும் ஆகிய பெருமானை மொழியினாற் பாடித் தொழுவார் வினைகள் கெடும்.


பாடல் எண் : 9
அஞ்சி ஆகிலும், அன்புபட்டு ஆகிலும்
நெஞ்சம், வாழி, நினைநின்றி யூரைநீ,
இஞ்சி மாமதில் எய்துிமை யோர்தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

         பொழிப்புரை : நெஞ்சமே ! இஞ்சியாகிய மதிலையுடைய முப்புரங்களை எய்து , தேவர்கள் தொழ , தன்சடையில் வெள்ளிய பிறையைச் சூடிய கூத்தன் உறைகின்ற நின்றியூரை , நீ , அஞ்சியாயினும் , அன்பினைப் பொருந்தியாயினும் நினைத்து உய்வாயாக .


பாடல் எண் : 10
எளிய னாமொழி யாஇலங் கைக்குஇறை
களியி னால்,கயி லாயம் எடுத்தவன்
நெளிய ஊன்றவல் லான்அமர் நின்றியூர்
அளியி னால்தொழு வார்வினை அல்குமே.

         பொழிப்புரை : எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நெளியுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும் .
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:
         சுந்தரர், திருச்செம்பொன்பள்ளி முதலான பதிகளை வணங்கிக் கொண்டு செல்லும் பொழுது, திருநின்றியூர் இறைவரைத் தொழுது திருநாவுக்கரசர் பாடிய ஏழ் எழுநூறு (4900) திருப்பதிகங்களையும் சிறப்பித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 150)

பெரிய புராணப் பாடல் எண் : 149
நனிபள்ளி அமர்ந்தபிரான் கழல்வணங்கி, நல்தமிழின்
புனிதநறுந் தொடைபுனைந்து, திருச்செம்பொன் பள்ளிமுதல்
பனிமதிசேர் சடையார்தம் பதிபலவும் பணிந்துபோய்,
தனிவிடைமேல் வருவார்தம் திருநின்றி யூர்சார்ந்தார்.

         பொழிப்புரை : திருநனிபள்ளியில் அமர்ந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நல்ல தமிழினால் தூய்மையும், இனிமையும் விரவிய தமிழ்மாலை தொடுத்து அணிவித்துத் திருச்செம்பொன்பள்ளி முதலாக உள்ள குளிர்ந்த இளம்பிறையை அணிந்த சடையையுடைய பெருமானது திருப்பதிகள் பலவும் பணிந்து சென்று, ஒப்பற்ற ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் பெருமானது திருநின்றியூர் என்னும் திருப்பதியைச் சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 150
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்குஇறைஞ்சி,
ஒன்றியஅன்பு உள்உருகப் பாடுவார், உடையஅரசு
என்றும் உலகு இடர்நீங்கப் பாடியஏழ் எழுநூறும்
அன்றுசிறப் பித்து, அஞ்சொல் திருப்பதிகம் அருள்செய்தார்.

         பொழிப்புரை : திருநின்றியூரில் வீற்றிருந்தருளும் பெருமானாரை உட்புகுந்து அன்பினால் வணங்கி, இறைவனுடன் ஒன்றிய அன்பு உள்ளத்தை உருக்கத் தமிழ் மறையைப் பாடும் அவர், ஆளுடைய அரசர், என்றும் உலகம் இடர் நீங்கப் பாடியருளியன நாலாயிரத்துத் தொள்ளாயிரம் (4,900) பதிகங்களாகும் எனும் வரலாற்றை, அன்று தம்முடைய பதிகத்தில் வைத்துச் சிறப்பித்து அருள் நிறைந்த சொல்லுடைய திருப்பதிகம் பாடினார்.

         குறிப்புரை : திருநின்றியூரில் அருளிய பதிகம் `திருவும் வண்மையும்'(தி.7 ப.65) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் இரண்டாவது பாடலில், `இணை கொள் ஏழெழு நூறு இரும்பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்\' என அருளப் பெற்ற குறிப்பே சேக்கிழார் பெருமானால் ஈண்டுக் குறிக்கப்பட்டுள்ளது. 7 x 700 = 4,900 பதிகங்கள். `பதிகம் ஏழெழு நூறு பகரு மாகவியோகி\' (தி.11 திருநாவுக். பா.7) என நம்பியாண்டார் நம்பிகளும் இது குறித்துப் போற்றுவர்.

சுந்தரர் திருப்பதிகம்

7.  065    திருநின்றியூர்             பண் - தக்கேசி
                          திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
திருவும் வண்மையும் திண்திறல் அரசும்
         சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்க ணான்தனக்கு அளித்த
         வார்த்தை கேட்டுநுன் மலர்அடி அடைந்தேன்,
பெருகு பொன்னிவந்து உந்துபல் மணியைப்
         பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றித்
         திரட்டும் தென்திரு நின்றியூ ரானே

         பொழிப்புரை : பெருகி வருகின்ற காவிரியாற்றின் நீர் , கொணர்ந்து தள்ளிய பல மணிகளை , சிறுமகாரது பல குழுக்கள் , விளையாட்டிற் சென்று எடுத்து , தெருக்களிலும் , திண்ணைகளிலும் , முற்றங்களிலும் குவிக்கின்ற , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , நீ , சிலந்தி செய்த செய்கைத் தொண்டினைக் கண்டு , அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழ நாயனார்க்கு , செல்வத்தையும் , கொடைத் தன்மையையும் , திண்ணிய ஆற்றலை உடைய அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு , அடியேன் உனது மலர் போலும் திரு வடியைப் புகலிடமாக அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .


பாடல் எண் : 2
அணிகொள் ஆடை,அம் பூண்,அணி மாலை
         அமுது செய்துஅமு தம்பெறு சண்டி,
இணைகொள் ஏழ்எழு நூறுஇரும் பனுவல்
         ஈன்ற வன்திரு நாவினுக் கரையன்,
கணைகொள் கண்ணப்பன், என்றுஇவர் பெற்ற
         காதல் இன்அருள் ஆதரித்து அடைந்தேன்,
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும்
         செல்வத் தென்திரு நின்றியூ ரானே

         பொழிப்புரை : திணை வரையறையைக் கொண்ட செவ்விய தமிழைப் பசிய கிளிகள் ஆராய்ந்து சொல்லுகின்ற , செல்வத்தை யுடைய , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , உன்பால், பாலைக் கொணர்ந்து ஆட்டி , அழகினைக் கொண்ட ஆடை , அழகிய அணிகலம் , சூடுகின்ற மாலை , திருவமுது என்னும் இவற்றைப் பெற்ற சண்டேசுர நாயனாரும் , தனக்குத்தானே நிகராய் உள்ள பாடல்கள் நாலாயிரத்துத் தொள்ளாயிரத்தை அருளிச் செய்தவராகிய திருநாவுக் கரசரும் , அம்பைக் கையிலே கொண்ட கண்ணப்ப நாயனாரும் பெற்ற , அன்பின் பயனாகிய இனிய திருவருளை விரும்பி , அடியேன் உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .


பாடல் எண் : 3
மொய்த்த சீர்முந்நூற்று அறுபது வேலி
         மூன்று நூறுவே தியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி
         ஓங்கு நின்றியூர் என்றுஉனக்கு அளிப்பப்
பத்தி செய்தஅப் பரசுரா மற்குப்
         பாதம் காட்டிய நீதிகண்டு அடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்கும்
         செல்வத் தென்திரு நின்றியூ ரானே

         பொழிப்புரை : சித்தர் , தேவர் , அசுரர் , ஆகியோர் வணங்குகின்ற , செல்வத்தையுடைய , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , உன்னிடத்து அன்பு செய்த பரசுராமன் உனக்கு மிக்க புகழையுடைய முந்நூறு வேதியரோடு , முந்நூற்றறுபது வேலிப் பரப்புள்ள நிலத்தை , என்றும் விளங்கும் ` திருநின்றியூர் ` என்று பெயரிட்டு , ஏற்புடைய , பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க , அவனுக்கு உன் திருவடியை அளித்த முறைமையை அறிந்து , அடியேன் , உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .


பாடல் எண் : 4
இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
         எழுந்து, தன்முலைக் கலசங்கள் ஏந்திச்
சுரபி பால்சொரிந்து ஆட்டிநின் பாதம்
         தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
பரவி உள்கி,வன் பாசத்தை அறுத்து,
         பரம, வந்துநுன் பாதத்தை அடைந்தேன்,
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
         அளிக்கும் தென்திரு நின்றியூ ரானே

         பொழிப்புரை : மேலானவனே , நெற்பயிர்கள் முத்துக்களைப் பரப்பி , அம்முத்துக்களோடு ஒத்து மதிப்புடைய செம்பொன்போலும் நெற்களை அளிக்கின்ற திருநின்றியூரில் உள்ள இறைவனே , உன்னை , பசு ஒன்று , சூரியனது நீண்ட ஒளி தோன்றுவதற்கு முன்பே எழுந்து , தன் மடியாகிய கலசத்தை ஏந்திப் பால் சொரிந்து வழிபட்டு நின் திருவடியை அடைந்த செய்தியை உறுதிப்படக் கேட்டு , அடியேன் , உனது திருவடியை நினைத்துத் துதித்து , பற்றுக்களை எல்லாம் விடுத்து வந்து அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .


பாடல் எண் : 5
வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
         வான நாடுநீ ஆள்கஎன அருளிச்
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச்
         சகளி செய்துஇறைஞ்சு அகத்தியன் தனக்குச்
சிந்து மாமணி அணிதிருப் பொதியில்
         சேர்வு நல்கிய செல்வங்கண்டு அடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவும்
         செல்வத் தென்திரு நின்றியூ ரானே

         பொழிப்புரை : செவ்விய தண்ணிய சிறந்த தாமரை மலரின்கண் இருக்கும் திருமகள் வாழும் , செல்வத்தை யுடைய , அழகிய திருநின்றி யூரில் உள்ள இறைவனே , இந்திரன் ஒருவன் , உன்னிடத்து வந்து உன்னை வழிபட , அதற்கு மகிழ்ந்து , அவனுக்கு , ` நீ , விண்ணுலகை ஆள்க ` என்று சொல்லி வழங்கிய தலைமையையும் , ` காலை , நண் பகல் , மாலை ` என்னும் மூன்று சந்திகளிலும், இலிங்க உருவத்தை நிறுவி , கலையுருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு , அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற , அழகிய திருப்பொதியில் மலையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து , அடியேன் , உனது திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .


பாடல் எண் : 6
காது பொத்தரைக் கின்னரர் உழுவை
         கடிக்கும் பன்னகம் பிடிப்பரும் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்ப,
         கோல ஆல்நிழற் கீழ்அறம் பகர
வேதம் செய்தவர் எய்திய இன்பம்
         யானும் கேட்டுநின் இணையடி அடைந்தேன்,
நீதி வேதியர் நிறைபுக ழுலகில்
         நிலவு தென்திரு நின்றியூ ரானே

         பொழிப்புரை : நீதியையுடைய அந்தணர்கள் நிறைந்திருத்தலால் உளதாகிய புகழ் , உலகமுழுதும் விளங்குகின்ற , அழகிய திரு நின்றியூரில் உள்ள இறைவனே , கேள்வியால் துளைக்கப்பட்ட செவி யினையுடைய நால்வர் முனிவர்கள் , ` கின்னரர் , புலி , கடிக்கும் இயல்புடைய பாம்பு , பற்றுதற்கு அரிய சிங்கம் , குற்றம் அற்ற பெரிய தவத்தவர் குழாம் ` என்ற இவருடன் இருந்து கேட்ப , நீ , அழகிய ஆல் நிழலில் இருந்து , அறத்தின் உண்மைகளை எல்லாம் சொல்ல , அவற்றைக் கேட்டுப் பின்பு வேதங்களை இயற்றி அவர்கள் அடைந்த இன்பத்தினைக் கேட்டறிந்து , அடியேனும் , உனது திருவடியிணையை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .


பாடல் எண் : 7
கோடு நான்குஉடைக் குஞ்சரம் குலுங்க
         நலங்கொள் பாதம்நின்று ஏத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
         பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்,
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
         பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும்
         நிலவு தென்திரு நின்றியூ ரானே

         பொழிப்புரை : பெண் மயில்கள் போலவும் , இளைய பெண் மான்கள் போலவும் , இளைய கிளிகள் போலவும் , பிறை போலும் நெற்றியையுடைய மகளிர் , உயர்ந்த மாடங்களையுடைய மாளிகை தோறும் விளங்குகின்ற , அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே , நான்கு கொம்புகளையுடைய யானை , உன்முன் நின்று , தனது உடல் , அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே , முன்னை வடிவத்தையும், விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு அடியேன் , உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .


* * * * * *  8, 9, 10. * * * * * *
        
                                             திருச்சிற்றம்பலம்



         சுந்தரர் திருநனிபள்ளி, திருச்செம்பொன்பள்ளி முதலான திருத்தலங்களை வணங்கி, திருநின்றியூர் தொழுது பாடியருளிய, "திருவும் வண்மையும்" என்னும் மேல் திருப்பதிகத்திற்குப் பின்பு, அத் திருத்தலத்தில் அன்பர்களோடு அமர்ந்திருந்த நாள்களில் பாடியருளியதாக உள்ள திருப்பதிகம்.

சுந்தரர் திருப்பதிகம்

 7. 019   திருநின்றியூர்             பண் - நட்டராகம்                 திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அற்றவ னார்அடி யார்தமக்கு, ஆயிழை பங்கினராம்
பற்றவ னார்எம் பராபரர் என்று பலர்விரும்பும்
கொற்றவ னார், குறு காதவர் ஊர், நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்குஇடம் ஆவது நம்திரு நின்றியூரே.

         பொழிப்புரை : பிற பற்றுக்களின்றித் தம் அடியையே பற்றும் அரிய அடியவர்க்குத் தாமும் அவர்க்கு அருளுதலையன்றி வேறு செயலற்றவராய் இருப்பவரும் , பெண்ணொரு பாகத்தராகின்ற பற்றினை உடைய வரும் , ` எம் இறைவர் ` என்று பலராலும் விரும்பப் படுகின்ற தலைவரும் , பகைவருடைய ஊரினை , பெரிய , கொடிய அம்பினால் அழித்த வரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே .

  
பாடல் எண் : 2
வாசத்தி னார்மலர்க் கொன்றை உள்ளார்,வடிவு ஆர்ந்தநீறு
பூசத்தி னார்,புக லிந்நகர் போற்றும்எம் புண்ணியத்தார்,
நேசத்தி னால்என்னை ஆளுங்கொண்டார், நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்குஇடம் ஆவது நம் திரு நின்றியூரே.

         பொழிப்புரை : மணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவரும் , அழகிய திருநீற்றைப் பூசுதலுடையவரும் , சீகாழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற புண்ணிய வடிவினரும் , அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும் , நீண்ட பெரிய கடல் சூழ்ந்த உலகத்தை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றியூரே .


பாடல் எண் : 3
அங்கையின் மூஇலை வேலர், அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சம்உண்டார்,
மங்கையொர் பாகர் மகிழ்ந்தடம்,வளம் மல்குபுனல்
செங்கயல் பாயும் வயல்பொலியும் திரு நின்றியூரே.

         பொழிப்புரை : அகங் கையில் மூவிலை வேலை  ( சூலத்தை) உடையவரும் , தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க, அவர்கள் தம் மனக்கலக்கத்தை நீங்குமாறு அருள் சுரந்து , பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவர் , உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளியிருக்கின்ற இடம் , வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண் செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே .


பாடல் எண் : 4
ஆறுஉகந் தார்,அங்கம் நான்மறையார், எங்கும் ஆகிஅடல்
ஏறுஉகந் தார், இசை ஏழுஉகந் தார்,முடிக் கங்கைதன்னை
வேறுஉகந் தார், விரி நூல்உகந்தார், பரி சாந்தம்அதா
நீறுஉகந் தார்உறை யும், இடம் ஆம் திரு நின்றியூரே.

         பொழிப்புரை : வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்த வரும் , நான்கு வேதங்களையும் உடையவரும் , எவ்விடத்தும் நிறைந்து நின்று , வெல்லுதலை உடைய எருதை விரும்பி ஏறுபவரும் , ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும் , கங்காதேவியைச் சிறப்பாக விரும்பித் தலையில் மறைத்து வைத்திருப்பவரும் , அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும் , பூசிக்கொள்கின்ற சாந்தமாக திருநீற்றை விரும்புகின்ற வரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரே .


பாடல் எண் : 5
வஞ்சம் கொண் டார் மனம் சேரகில்லார்,நறு நெய்தயிர்பால்
அஞ்சும்கொண்டு ஆடிய வேட்கையினார், அதி கைப்பதியே
தஞ்சம்கொண்டார், தமக்கு என்றும் இருக்கை சரண்டைந்தார்
நெஞ்சம் கொண் டார்க்கு இடம் ஆவது, நம் திரு நின்றியூரே.

         பொழிப்புரை : வஞ்சனையை உடையவரது மனத்திற் சேராத வரும் , ` நறுநெய் , தயிர் , பால் ` முதலிய ஆனஞ்சினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெருவிருப்புடையவரும் , திருவதிகைப் பதியினையே தமக்கு என்றும் இருக்கையாகும்படி அதனைத் தஞ்சமாகக் கொண்ட வரும் , தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றி யூரே .

  
பாடல் எண் : 6
ஆர்த்தவர் ஆடுஅர வம்,அரை மேல் புலி ஈர்உரிவை,
போர்த்தவர் ஆனையின் தோல்உடல், வெம்புலால் கையகலப்
பார்த்தவர், இன் உயிர் பார் படைத் தான் சிரம் அஞ்சில் ஒன்றைச்
சேர்த்தவருக்கு உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே.

         பொழிப்புரை : அரையில் புலியினது பசுந்தோலையும் , ஆடுகின்ற பாம்பையும் கட்டியவரும் , உடம்பில் யானையின் தோலைப் போர்த்தவரும் , அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு செய்து கொண்டவரும் , பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய பிரம தேவனது தலைகள் ஐந்தில் ஒன்றைத் தம் கையில் வைத்துக்கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் திருநின்றி யூரேயாகும் .


பாடல் எண் : 7
தலையிடை யார்பலி சென்றுஅகம் தோறும் திரிந்தசெல்வர்,
மலையுடை யாள்ஒரு பாகம்வைத்தார், கல் துதைந்த நன்னீர்
அலை உடை யார், சடை எட்டும் சுழல அருநடஞ்செய்
நிலைஉடை யார்உறை யும்இடம் ஆம்திரு நின்றியூரே.

         பொழிப்புரை : தலை ஓட்டிற் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மையை உடையசெல்வரும் , மலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒருபாகத்தில் வைத்த வரும் , மலையின்கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது அலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டுத் திசைகளிலும் சுழலுமாறு அரிய நடனத்தைச் செய்கின்ற நிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரேயாம் .

  
பாடல் எண் : 8
எட்டுகந் தார்திசை, ஏழுஉகந்தார் எழுத்து, ஆறும்அன்பர்
இட்டுஉகந் தார்மலர்ப் பூசைஇச் சிக்கும் இறைவர், முன்னாள்
பட்டுஉகும் பாரிடைக் காலனைக் காய்ந்து, பலிஇரந்துஊண்
சிட்டுஉகந் தார்க்குஇடம் ஆவது  நம்திரு நின்றியூரே.

         பொழிப்புரை : திசைகள் எட்டினையும் , ஏழ் எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும் , மனம் அடங்கப்பெற்ற அன்பர்கள் விரும்பியிடுதலால் நிறைந்த மலர்களையுடைய வழி பாட்டினையும் முன்னொருநாள் நிலத்தின்கண் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அங்ஙனம் ஆமாறு வெகுண்டமையோடு , பிச்சை யேற்று உண்ணுதலை உடைய ஒழுக்கத்தினையும் விரும்பு கின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றியூரே .


பாடல் எண் : 9
காலமும் ஞாயிறும் ஆகிநின்றார்,கழல் பேணவல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார், அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத் தால்வணங்க
நீலநஞ்சு உண்டவ ருக்குஇடம் ஆம்திரு நின்றியூரே.

         பொழிப்புரை : காலமும் , அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும் , தமது திருவடியையே அன்போடு பற்றவல்ல அடியவர்களது நோன்பினையும் , செயல்களையும் கண்டு அவர்களை விரும்பு கின்றவரும் , நீலநிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு , அவரது திருவடிகளை அவ்வடியவர்கள் துதி செய்யவும் ` திருமால் , பிரமன் , இந்திரன் ` முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும் , திருநின்றியூரே இடமாய் நிற்கும் .


பாடல் எண் : 10
வாயார் மனத்தால் நினைக்கும் அவருக்கு அருந்தவத்தில்
தூயார், சுடுபொடி ஆடிய மேனியர், வானில் என்றும்
மேயார், விடைஉகந்து ஏறிய வித்தகர், பேர்ந்தவர்க்குச்
சேயார், அடியார்க்கு அணியவர் ஊர்திரு நின்றியூரே.

         பொழிப்புரை : வாயார வாழ்த்தி , மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவர்க்கு உண்மைப் பொருளாகின்றவரும் , அரியதவக் கோலத்தை உடைய தூயவரும் , வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியிலே இருப்பவரும் , இடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டினை உடையவரும் , தம்மை அடையாதவருக்குச் சேய்மைக் கண்ணராகின்றவரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே .


பாடல் எண் : 11
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை அறாத் திரு நின்றியூரில்
சீரும் சிவகதி யாய்இருந் தானை, திருநாவல்ஆ
ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும் வல்லார் வினைபோய்ப்
பாரும் விசும்பும் தொழப் பரமன்அடி கூடுவரே.

         பொழிப்புரை : திரண்ட புகழையுடைய அடியார்களது தொண்டுகள் எந்நாளும் நீங்காதிருக்கின்ற திருநின்றியூரின்கண் சிறந்த வீடுபேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினனாகிய நம்பியாரூரன் பாடிய , பொருத்தமான இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர் , வினை நீங்கப் பெற்று , மண்ணுலகத்தவரும் , விண்ணுலகத்தவரும் வணங்கும்படி , சிவபெருமானது திருவடியை அடைவார்கள் .
        
                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...