பழநி - 0111. அறமிலா நிலைகற்று





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அறமிலா நிலை  (பழநி)

பொதுமாதர் உறவு விட்டு, முத்தி இன்பம் பெற

தனதனா தனதத்த தனதனா தனதத்த
     தனதனா தனதத்த ...... தனதான


அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
     ளறிவுதா னறவைத்து ...... விலைபேசி

அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
     யதிகமா வுதவிக்கை ...... வளையாலே

உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
     ளுலையிலே மெழுகொத்த ...... மடவாரோ

டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
     ஒழியுமா றொருமுத்தி ...... தரவேணும்

மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
     மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா

மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
     மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா

பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
     பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி

பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
     பழநிமா மலையுற்ற ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


அறம் இலா நிலைகற்று, கொடியவேல் விழிவிட்டு,உள்
     அறிவு தான் அறவைத்து, ...... விலைபேசி,

அமளி மீதினில் வைத்து, பவளவாழ் அமுதத்தை
     அதிகமா உதவி, கை ...... வளையாலே,

உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்கொள்,
     அலையிலே மெழுகு ஒத்த ...... மடவாரோடு,

உருகியே வரு பெற்றி, மதன நாடக பித்து
     ஒழியுமாறு, ஒரு முத்தி ...... தரவேணும்.

மறவர் மாது, ஒரு ரத்ந விமல கோகநகத்தி,
     மயில் அனாள் புணர் செச்சை ...... மணிமார்பா!

மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வுற மிக்க
     மயிலில் ஏறிய உக்ர ...... வடிவேலா!

பறைகள் பேணிய ருத்ரி, கரியகார் அளகத்தி,
     பரமர்பால் உறைசத்தி, ...... எமது ஆயி,

பழைய பார்வதி, கொற்றி, பெரியநாயகி பெற்ற
     பழநி மாமலை உற்ற ...... பெருமாளே.


பதவுரை


      மறவர் மாது --- வேடர் குலத்தில் வந்தவரும்,

     ஒரு ரத்ன --- ஒப்பற்ற ரத்னம் போன்றவரும், விமல - பரிசுத்தமானவரும்,

     கோகனகத்தி மயில் ஆனாள் --- தாமரையில் வாழ்கின்ற இலட்சுமியாகிய மயில் போன்ற அழகிய வள்ளிபிராட்டி,

     புணர் செச்சை மணிமார்பா --- தழுவுகின்ற வெட்சி மலர் தரித்த அழகிய திருமார்பினரே!

      மருள் நிசாசரன் --- மயங்கி நின்ற தாரகாசுரன்,

     வெற்பில் உருகி வீழ்வு உற --- கிரவுஞ்ச மலையிலே உருகி வீழ்ந்து அழிய,

     மிக்க மயிலில் ஏறிய --- சிறந்த மயில் வாகனத்தின்மீது ஆரோகணித்த,

     உக்ர வடிவேலா --- வேகமுடைய கூரிய வேலையுடையவரே!

      பறைகள் பேணிய ருத்ரி --- போர்ப்பறைகளை விரும்புகின்ற உருத்திரியும்,

     கரிய கார் அளகத்தி --- கரிய மேகம்போன்ற கூந்தலை உடையவரும்,

     பரமர் பால் உறை சத்தி --- சிவபெருமானிடம் உறைகின்ற பராசக்தியும்,

     எமது ஆயி --- எங்கள் அன்னையும்,

     பழைய பார்வதி --- பழைமையான பார்வதி தேவியும்,

     கொற்றி --- துர்க்கா தேவியும்,

     பெரியநாயகி --- பெரிநாயகி என்ற பெயரையுடையவரும் ஆகிய உமையம்மையார்,

     பெற்ற --- தந்த,

     பழநி மாமலை உற்ற --- பழநி மாமலையில் வீற்றிருக்கும்,

     பெருமாளே --- பெருமிதம் உடையவரே!

      அறம் இலா நிலை கற்று --- அறவழியில்லாத நிலைமையைக் கற்று,

     கொடியவேல் விழி விட்டு --- கொடுமையான வேல் போன்ற கண்களைச் செலுத்தி,

     உன் அறிவுதான் அற வைத்து --- நினைக்கின்ற அறிவானதைக் கெட வைத்து,

     விலை பேசி --- இவ்வளவு பணம் என்று விலை கூறி,

     அமளி மீதினில் வைத்து --- படுக்கை மீது சேர்த்து,

     பவளவாய் அமுதத்தை --- பவளம் போன்ற இதழில் ஊறும் அமுதத்தை,

     அதிகமாக உதவி --- நிரம்பவும் தந்து,

     கை வளையாலே --- வளையல் அணிந்த கரங்களால்,

     உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்கொள் --- உறவு கூறி உடம்பை இறுகத் தழுவிக்கொண்டு,

     உலையிலே மெழுகு ஒத்த --- உலையில் இட்ட மெழுகென உருகுவதுபோல் பசப்பும்,

     மடவாரோடு --- பொது மகளிருடன்,

     உருகியே வரு பெற்றி --- உள்ளம் உருகி வருகின்ற நடையுடன் கூடிய,

     மதன நாடக பித்து ஒழியுமாறு --- காம நாடகம் என்ற மயக்கம் என்னை விட்டுத் தொலையுமாறு,

     ஒரு முத்தி தரவேணும் --- ஒப்பற்ற முத்தியின்பத்தைத் தந்தருள வேண்டும்.

பொழிப்புரை


         வேடர் குலப் பெண்மணியும், ஒப்பற்ற மாணிக்க மணி போன்றவரும், பரிசுத்தமானவரும், தாமரை மாது என்ற மயில் போன்றவருமாகிய வள்ளி பிராட்டியார் தழுவுகின்ற வெட்சி மலர் மாலை புனைந்த அழகிய திருமார்பினரே!

         மயங்குகின்ற தாரகாசுரன் கிரவுஞ்ச மலையில் அழிந்து விழச் சிறந்த மயிலின் மீது ஏறிய வேகமும் கூர்மையும் உடைய வேலாயுதரே!

         போர்ப் பறைகளை விரும்பும் உருத்ரியும், கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவரும், சிவபெருமானிடம் உறைகின்ற பராசக்தியும், எங்கள் தாயும், பழைமையுடையவரும், பார்வதியும், துர்க்கையும் ஆகிய பெரியநாயகி பெற்றருளிய பழநி மாமலை மீது எழுந்தருளிய பெருமிதம் உடையவரே!

         அறவழி நில்லாத நிலைமையைக் கற்று, கொடுமையான வேல் போன்ற கண்களைச் செலுத்தி, நினைக்கின்ற அறிவை அழிய வைத்து, விலை பேசி, படுக்கையின் மீது சேர்த்து, பவளம் போன்ற இதழில் ஊறும் அமுதத்தை நிரம்பவும் தந்து, வளையல் தரித்த கரங்களால் உறவு கூறி உடம்பை இறுகத் தழுவிக் கொண்டு, உலையில் இட்ட மெழுகு போல் உருகுகின்றதாக நடிக்கும் விலைமாதர்களுடன் கூடி, உள்ளம் உருகி நிற்கும் காம நாடகமாகிய மயக்கமானது என்னை விட்டு நீங்குமாறு, ஒப்பற்ற முத்தியின்பத்தைத் தந்தருளுவீர்.

விரிவுரை

அறமிலா நிலைகற்று ---

ஒருவன் வருந்திக் கற்க வேண்டியது அறம் என்ற ஒன்றே ஆகும். அதனால்தான் வேதம் தொடங்கும் போது, “தர்மம் சர” என்கின்றது. ஒளவையார் “அறம் செய விரும்பு” என்கின்றார். “அறம் விசாரியா மூடர்” என்கின்றார் அருணகிரிநாதர். உலகமெல்லாம் அழிந்து ஒடுங்கியபோது அறம் ஒன்று மட்டும் அழியாது நின்றது. அது இடப வடிவமாகச் சென்று இறைவனை அடைந்தது. உலகங்களை எல்லாம் தாங்கும் இறைவனை இடபமாகிய அறம் தாங்கியது. இத்தகைய அறத்தை விடுத்து, மற நெறியை விலைமகளிர் கற்பர் என்று சுவாமிகள் இப்பாடலில் கூறுகின்றனர்.

கொடிய வேல்விழி விட்டு ---

கொலைக்கு உரியது என்பதால் கொடிய வேல் என்றனர். வேல் உடம்பை மட்டும் கொல்லும். மானார் விழி உயிரையும் உள்ளத்தையும் கொல்லும். வேல் விழியாலும், பால் மொழியாலும் ஆடவரை வதைப்பர்.

மதன நாடக பித்து ஒழிய ---

காம நாடகமாகிய அவலத்தின் மீது மனம் பற்றி அதனால் அறிவு குன்றி மக்கள் பித்தாகி உழல்வர். இன்பத்தை துன்பத்தை மயங்கி உணர்வர். விட்டில் பூச்சி விளக்கைச் சுகமென நினைந்து விழுவதுபோல் என உணர்க.

ஒரு முத்தி தர வேணும் ---

முத்தி-வீடுபேறு. முத்த-விடுபடுவது. சிப்பியிலிருந்து விடுபடுவதனால் முத்து இப்பேர் பெற்றது.

பந்தத்திலிருந்து ஆன்மா விடுபடுவது முத்தி எனப்படும். முத்தி-வடசொல். வீடு-தென் சொல். விடுபடு என்ற முதனிலை நீண்டு வீடு என வந்தது; முத்திக்கு நாயகன் முருகன்; ஆதலின் அப்பெருமானிடம் முத்தி நலத்தை வேண்டுகின்றனர்.

பறைகள் வேணிய ருத்ரி ---

உருத்ரி சங்கார காலத்தில் போர்ப் பறைகளை விரும்பி நிற்பள்; சகல உலகங்களையும் ஒடுக்கி நிற்பள்.
  
பழைய பார்வதி ---

பழம் பொருளாக நிற்பவர் ஆதலின் அம்பிகையைப் பழைய பார்வதி என்றனர்.

பெரிய நாயகி ---

பழநிமலையின் அடிவாரத்தின் மேற்கேயுள்ள நகரத்தில் உள்ள திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அம்பிகைக்குப் பெரிய நாயகி என்று பேர்.

கருத்துரை
 

பழநியப்பா! முத்தி நலம் அருள்புரிவாய்.








No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...