அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஆதாளிகள் புரி (பழநி)
பொதுமாதர் உறவால் வரும்
துன்பம் நீக்கி ஆட்கொள்ள
தானா
தனதன தானா தனதன
தானா தனதன ...... தனதான
ஆதா
ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு ...... மொழியாலே
ஆழ்சீ
ரிளநகை யாலே துடியிடை
யாலே மணமலி ...... குழலாலே
சூதா
ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை ...... யதனாலே
சோரா
மயல்தரு மானா ருறவிடர்
சூழா வகையருள் ...... புரிவாயே
போதா
ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா தெதிருற ...... மதியாதே
போரா
டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு ...... திறலோனே
வேதா
வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய ...... குமரேசா
வீரா
புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஆதாளிகள், புரி கோலாகல விழி-
யாலே, அமுது எனும் ...... மொழியாலே,
ஆழ்
சீர் இளநகையாலே, துடி இடை-
யாலே, மணம் மலி ...... குழலாலே,
சூதுஆர்
இளமுலையாலே, அழகிய
தோடு ஆர் இருகுழை ...... அதனாலே,
சோரா
மயல் தரு மானார் உறவு இடர்
சூழா வகை, அருள் ...... புரிவாயே.
போது
ஆருர் இருகழல் சூழாதது, தொழில்
பூணாது எதிர்உற ...... மதியாதே,
போர்
ஆடிய அதி சூரா! பொறுபொறு
போகாது என அடு ...... திறலோனே!
வேதா
உடன் நெடு மால் ஆனவன் அறி-
யாதார் அருளிய ...... குமரேசா!
வீரா
புரி வரு கோவே! பழநி உள்
வேலா! இமையவர் ...... பெருமாளே.
பதவுரை
போது ஆர் --- மலர்கள் நிறைந்த,
இரு கழல் சூழாது --- இரு திருவடிகளைச்
சிந்தியாமலும்,
அது தொழில் பூணாது --- அத்திருவடிக்குரிய
நற்பணியை மேற்கொள்ளாமலும்,
எதிர் உற மதியாதே --- திருமுன் வருவதற்குச்
சிந்தியாமலும்,
போராடிய --- போர் செய்கின்ற,
அதி சூரா --- அதிசூரபன்மனே!
பொறு பொறு --- சற்றுப்பொறு பொறு,
வேதா உடன் --- பிரமதேவனும்,
நெடுமாலானவன் --- நீண்ட திருமாலும்,
அறியாதார் அருளிய --- அறிதற்கு அரியராய்
நின்ற சிவபெருமான் பெற்றருளிய,
குமர ஈசா --- குமாரக் கடவுளே!
வீரா புரி வரு கோவே --- வீராபுரியில்
எழுந்தருளியுள்ள தலைவரே!
பழநி உள் வேலா --- பழநியம்பதியில்
உறையும் வேலாயுதரே!
இமையவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும்
பெருமையிற் சிறந்தவரே!
ஆதாளிகள் புரி --- வீம்பு வார்த்தைகள்
பேசும் பொது மாதர்கள் காட்டும்,
கோலாகல விழியாலே --- ஆடம்பரமுடைய கண்களாலும்,
அமுது எனும் மொழியோலே --- அமிர்தம் போன்ற
சொற்களாலும்,
ஆழ் சீர் இள நகையாலே --- ஆழமான அழகிய
இளஞ்சிரிப்பினாலும்,
துடி இடையாலே --- உடுக்கை போன்ற இடையாலும்,
மணமலி குழலாலே --- வாசனை நிறைந்த கூந்தலாலும்,
சூது ஆர் இள முலையாலே --- சூதாடு கருவி போன்ற
இள முலைகளாலும்,
அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே --- அழகான
தோடு அணிந்த இரண்டு செவிகளாலும்,
சோரா மயல்தரும் --- சோர்ந்து போகும்படி
மயக்கந் தருகின்ற,
மானார் உறவு --- மாதர்களுடைய உறவினால் வரும்,
இடர் சூழா வகை --- துன்பம் அடியேனைச் சூழ்ந்து
வருத்தா வண்ணம்,
அருள் புரிவாயே --- அருள் புரிவீர்.
பொழிப்புரை
மலர்கள் நிறைந்த உமது இரு சரண அரவிந்தங்களைச்
சிந்தியாமலும், அத் திருவடிக்கு உரிய
திருப்பணியை மேற்கொள்ளாமலும், எதிர் வருவதற்கு
யோசியாமலும் போர் புரிந்த வலிமை மிகுந்த சூரபன்மனே! பின் வாங்காமல், ‘சற்றுப் பொறு பொறு’ என்று கூறி அவனை
அழித்த ஆற்றல் உடையவரே!
பிரமதேவரும் நீண்ட திருமாலும் அடிமுடி அறியாதவராகி
நின்ற சிவபெருமான் பெற்றருளிய குமாரமூர்த்தியே!
வீராபுரியில் எழுந்தருளியுள்ள தலைவரே!
பழநியில் மேவும் வேலாயுதக் கடவுளே!
தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!
வீம்பு வார்த்தைகள் பேசும் பொது
மாதர்கள் காட்டும் ஆடம்பரம் உடைய கண்களாலும் அமுதம் போன்ற சொற்களாலும், ஆழ்ந்த அழகிய புன்சிரிப்பாலும், உடுக்கை போன்ற இடையினாலும், வாசனை நிறைந்த கூந்தலாலும், சூதாடு கருவிபோன்ற இளந்தனங்களாலும், அழகிய தோடு அணிந்த இரண்டு செவிகளாலும், அறிவு சோர்ந்து போகும்படி மயக்குகின்ற
பொதுமாதருடைய உறவினால் வருகின்ற துன்பம் அடியேனுக்கு எய்தா வண்ணம் அருள்புரிவீர்.
விரிவுரை
ஆதாளிகள் ---
ஆதாளி-வீம்புப்
பேச்சு. பயனில்லாத வெறும் வார்த்தைகளைப் பேசி அரிய நேரத்தை அவமே கழிப்பது பேதமைத்
தனம். பயனில்லாத சொற்களைச் சொல்லுபவன் மனிதர்களில் பதர் போன்றவன்.
பயனில்
சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட்
பதடி எனல். ---
திருக்குறள்
அருணகிரிநாத
சுவாமிகள் இந்த ஆதாளி என்ற சொல்லைப் பல இடங்களில் எடுத்து ஆளுகின்றார்.
“அகதியை மறவனை ஆதாளி வாயனை” --- (அவகுண) திருப்புகழ்
“ஆதாளியை ஒன்று அறியேனை
அறத்
தீதாளியை ஆண்டது செப்பும் அதோ” ---
கந்தரநுபூதி
கோலாகல
விழி
---
கோலாகலம்-ஆடம்பரம்.
பொதுமகளிர் ஆடவர்களாகிய பட்சிகளைப் பிடிக்கின்ற வலைபோல் கண்களைப்
பயன்படுத்துவார்கள். கண்களை மையெழுதி மிக்க ஆடம்பரமாக அழகு செய்வார்கள்.
அமுது
எனும் மொழியாலே ---
அமுதம்
போல் குளிர்ச்சியாகப் பேசி, ஆடவரிடம் இருந்து
மிகுந்த பொருளைப் பறிப்பவர். ஆகவே அவர்களின் வஞ்சனைச் செயலுக்கு விழியும் மொழியும்
துணை புரிகின்றன.
ஆழ்
சீர் இள நகையாலே ---
அம்மகளிர்
ஆடவரைக் கண்டு அழகாகப் புன்முறுவல் செய்வார்கள். அதில் ஆழமான கருத்துக்கள் பல
உண்டு.
துடி
இடையாலே
---
துடி-உடுக்கை.
உடுக்கைபோல் நடுவில் சுருங்கிய இடை பெண்களுக்கு மிகுந்த அழகைத் தரும்.
மணம்
மலி குழலாலே ---
குழலில்
வாசனை நிறைந்த மலர்களை முடிப்பதனால், கூந்தல்
கம கம என்ற நல்ல வாசனையுடன் ஆடவருடைய உள்ளத்தை ஈர்க்கும் திறனுடன் திகழும்.
இரு
குழை
---
குழை
என்ற சொல்லுக்கு காது என்ற ஒரு பொருளும் உண்டு.
“அவனி பெருந் தோட்டம்
பொற்குழை” --- திருப்புகழ்
சோரா
மயல் தரு மானார் ---
உடம்பு
தளர்ச்சியடையுமாறு செய்வதுடன் உணர்வும் தளர்ச்சியுறுமாறு மையலைத் தருபவர். அறிவு
சோர்ந்தவர் எந்தத் தீவினையையும் செய்யப் பின்வாங்க மாட்டார். கள்மயக்கம்
உண்டார்க்கே தீங்கு பயப்பது; காம மயக்கங்
கண்டார்க்குந் தீமை பயப்பது.
போதார்
இருகழல் சூழாது ---
அடியார்கள்
மிக்க அன்புடன் முருகப் பெருமானை அர்ச்சிக்கின்றார்கள். அப்படி அர்ச்சித்த மலர்கள்
முருகப் பெருமானுடைய திருவடிகளில் நிறைந்திருக்கின்றன.
“அப்படி பத்தி பழுத்த
மனத்தினர்
அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன்” --- பூதவேதாள வகுப்பு
பிறவிப்
பெருங்கடலுக்கு தோணியாகிய முருகன் பாதார விந்தத்தை நினைந்து நினைந்து
உருகவேண்டும். சூரபன்மன் ஆணவத்தால் முருகனை நினையாது நிமிர்ந்து நின்றான்.
“எம் கை உனக்கு அல்லாது
எப்பணியும் செய்யற்க” --- திருவாசகம்
“பூக்கைக் கொண்டுஅரன்
பொன்அடி போற்றிலார்” --- அப்பர்
திருத்தொண்டு
செய்யாத கை கையாகாது. அதனை உலக்கை என ஆன்றோர் இகழ்வர்.
கை
இல்லாமலேயே பறவைகளும் விலங்குகளும் வயிற்றை நிரப்புகின்றன. நமக்கு இருக்கும்
நீளமான கைகள் கேவலம் வயிற்றை நிரப்புவதற்கு மட்டும் அமைந்தது அன்று. இனிய
திருத்தொண்டுகள் புரிதல் வேண்டும். அதுதான் கை படைத்ததன் நோக்கம்.
எதிர்
உற மதியாதே
---
அகிலாண்ட
கோடிப் பிரமாண்ட நாயகனான இளம்பூரணன் திருமுன் நாம் போருக்குப் போவது நம்
ஆற்றலுக்கு ஏற்றதன்று என்று சூரபன்மன் கருதினானில்லை.
செந்தழலைப்
பஞ்சு எதிர்த்தது போலும், சண்ட மாருதத்தைச்
சிறு துரும்பு எதிர்த்தது போலும் சூரபன்மன், வரம்பிலா ஆற்றலுடைய வடிவேற்பரமனை
எதிர்த்துப் போர் புரிந்தான்.
போராடிய
அதிசூரா பொறு பொறு போகாது என அடு திறலோனே ---
சூரபன்மன்
முருகவேள் திருமுன் நின்று போரிட்டு இரண்டாம் நாள் தோற்றுவிட்டுப் போனான். மீளவும்
ஏழாம் நாள் போருக்கு வந்தான். முருகப் பெருமான் “அடே சூரபன்மனே! ஓடாமலும்
ஒளியாமலும் புறங்காட்டாமலும் சிறிது தைரியத்துடன் நில். பொறு பொறு” என்று
கூறியருளினார்.
ஆணவமலம்
ஒருபோதும் அழியாது. வன்மை குன்றியடங்கும். சூரிய ஒளி முன் நட்சத்திரம் அடங்குதல்போல்
என அறிக. எனவே ஆணவமலமாகிய சூரபன்மன் வலிகுன்றி நின்று அருள் பெற்றான்.
“மாயையின் மகனும் அன்றோ
வரம்பு இலா
அருள் பெற்று உய்ந்தான்” --- கந்தபுராணம்
வேதாவுடன்
நெடுமால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா ---
மாலும்
அயனும் அடிமுடியைக் காணவேண்டி ஆராய்ச்சியால் முயன்றார்கள். ‘நான்’ என்ற முனைப்பு
ஏற்பட்டதனால் விலங்கும் பறவையுமாக ஆனார்கள். பல காலம் தேடித் தேடித் திகைத்து
மயங்கி ஏங்கி நின்றார்கள்.
தொழுவார்க்கே
அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழுவான
மனத்தாலே மால்ஆய மால்அயனும்
இழிவாகும்
கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள்
அஞ்செழுத்தும் துதித்துஉய்ந்தபடி விரிப்பார். --- பெரியபுராணம்
இறைவனை
அன்பினால் அகங்குழைந்து உருகி வழிபட்டால் எளிமையாகக் காணலாம்.
இக்கருத்தினை
அடியில்வரும் திருப்பாடலால் அறிக.
அன்னமாய்
விசும்பு பறந்துஅயன் தேட,
அங்ஙனமே பெரிய நீ சிறிய,
என்னைஆள்
விரும்பி, என்மனம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறவேன்,
முன்னம்
மால்அறியா ஒருவனாம் இருவா!
முக்கணா! நாற்பெருந் தடந்தோள்
கன்னலே!
தேனே! அமுதமே! கங்கை
கொண்டேசோ ளேச்சரத் தானே! --- திருவிசைப்பா
“திருமால் பிரமா அறியா
தவர்சீர் சிறுவா” --- (எருவாய்) திருப்புகழ்
வீரா
புரி
---
அருணகிரிநாதருடைய
அரிய நண்பராகிய கலிசைச் சேவகனார் என்ற முருகபக்தர், வீரை என்ற ஊரில் பழநியாண்டவர்
திருவுருவத்தை எழுந்தருளப் புரிந்து வழிபட்டார். அதனால் பழநியுடன் சேர்ந்து
வீராபுரியையும் சுவாமிகள் பாடுகின்றார்.
கருத்துரை
சூரனை
அடக்கிய தீரமூர்த்தியே! பழநிமேவும் பரமனே! மாதர் உறவால் வரும் துயர் களைந்து
ஆட்கொள்ளுவீர்.
No comments:
Post a Comment