பழநி - 0113. ஆலகாலம் என





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆலகாலம் என (பழநி)

மாதர் ஆசையை விட்டு, பாதக மலங்களை நீக்கும் பாத கமலங்களைத் தொழுது உய்ய

தான தானன தத்தன தத்தன
     தான தானன தத்தன தத்தன
     தான தானன தத்தன தத்தன ...... தனதான


ஆல காலமெ னக்கொலை முற்றிய
     வேல தாமென மிக்கவி ழிக்கடை
     யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை

ஆர வாணைமெ யிட்டும றித்துவி
     கார மோகமெ ழுப்பிய தற்குற
     வான பேரைய கப்படு வித்ததி ...... விதமாகச்

சால மாலைய ளித்தவர் கைப்பொருள்
     மாள வேசிலு கிட்டும ருட்டியெ
     சாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர்

தாக போகமொ ழித்துஉனக்கடி
     யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
     தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட ...... அருள்வாயே

வால மாமதி மத்தமெ ருக்கறு
     காறு பூளைத ரித்தச டைத்திரு
     வால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனே

மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
     வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
     வாளி யேவிய மற்புய னச்சுதன் ...... மருகோனே

நாலு வேதந விற்றுமு றைப்பயில்
     வீணை நாதனு ரைத்தவ னத்திடை
     நாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனே

நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
     சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
     ஞான பூரண சத்தித ரித்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

ஆல காலம் எனக்கொலை முற்றிய
     வேல் அதுஆம் என மிக்க விழிக்கடை-
     யாலும் மோகம் விளைத்து, விதத்துடன் ...... இளைஞோரை

ஆர ஆணை மெய் இட்டு மறித்து,
     விகார மோகம் எழுப்பி, அதற்கு உறவு
     ஆன பேரை அகப்படுவித்து, தி ...... விதமாகச்

சால மாலை அளித்து, வர் கைப்பொருள்
     மாளவே, சிலுகிட்டு மருட்டியெ,
     சாதி பேதம் அறத் தழுவித் திரி ...... மடமாதர்

தாக போகம் ஒழித்து உனக்கு அடி-
     யான் என் வேள்வி முகத் தவம் உற்று, ரு
     தாளை நாளும் வழுத்தி நினைத்திட ...... அருள்வாயே.

வால மாமதி, மத்தம், எருக்கு, றுகு,
     ஆறு, பூளை தரித்த சடைத்திரு
     ஆலவாயன் அளித்து அருள் அற்புத ...... முருகோனே!

மாய மானொடு அரக்கரை வெற்றிகொள்,
     வாலி மார்பு தொளைத்திட, விற்கொடு
     வாளி ஏவிய மல்புயன் அச்சுதன் ...... மருகோனே!

நாலு வேதம் நவிற்று முறைப்பயில்
     வீணை நாதன் உரைத்த வனத்திடை
     நாடி ஓடி குறத்தி தனைக்கொடு ...... வருவோனே!

நாளி கேரம் வருக்கை பழுத்து உதிர்
     சோலை சூழ் பழநிப்பதியில் திரு
     ஞான பூரண சத்தி தரித்து அருள் ...... பெருமாளே.


பதவுரை

         வால மா மதி --- சிறந்த இளம் திங்களையும்,

     மத்தம் --- ஊமத்த மலரையும்,

     எருக்கு --- எருக்கம் பூவையும்,

     அறுகு --- அறுகம் புல்லையும்,

     ஆறு --- கங்கா நதியையும்,

     பூளை --- பூளைப் பூவையும்,

     தரித்த சடை --- சடைமுடி மீது தரித்த,

     திரு ஆலவாயன் --- மதுரையம்பதி நாதராம் சிவபிரான்,

     அளித்து அருள் அற்புத --- பெற்றருளிய அற்புதம் நிறைந்த,

     முருகோனே --- முருகக் கடவுளே!

         மாய மானொடு --- மாரீசனாகிய மாயமானையும்,

     அரக்கரை வெற்றி கொள் --- அரக்கர்களையும் வென்றவரும்,

     வாலி மார்பு தொளைத்திட --- வாலியின் மார்பைத் துளைக்கும் வண்ணம்,

     வில்கொடு வாளி ஏவிய மல் புயன் --- வில்லைக் கொண்டு அம்பை விடுத்தவரும் மற்போருக்குரிய வலிய தோளை உடையவரும் ஆகிய,

     அச்சுதன் --- திருமாலின்,

     மருகோனே --- திருமருகரே!

         நாலு வேதம் நவிற்று முறை பயில் --- நான்கு வேதங்களையும் முறையுடன் பயின்று நவில்கின்ற,

     வீணை நாதன் --- விணை ஏந்திய நாரத முனிவர்,

     உரைத்த வனத்திடை --- கூறிய கானகத்தில்,

     நாடி ஓடி --- எங்கே என்று நாடி விரைந்து சென்று

     குறத்தி தனை கொடு வருவோனே --- வள்ளி பிராட்டியைக் கொண்டு வந்தவரே!

         நாளிகேரம் --- தென்னையும்,

     வருக்கை --- பலாவும்,

     பழுத்து உதிர் சோலை சூழ் --- நன்கு பழுத்த பழங்கள் உதிர்கின்ற சோலைகள் சூழ்ந்துள்ள,

     பழநிப் பதியில் --- பழநியம்பதியிலே,

     திரு ஞான பூரண சத்தி தரித்து அருள் --- சிறந்த ஞானத்தின் நிறைவாகிய வேலைத் தரித்து அருள் புரிகின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

         ஆலகாலம் என --- ஆலகால நஞ்சு எனவும்,

     கொலை முற்றிய வேல் அது என --- கொலைத் தொழில் முதிர்ந்த வேற்படை என்னவும்,

     மிக்க வழி கடையாலும் --- மிகுந்த கடைக்கண்ணாலும்,

     மோகம் விளைத்து --- மோகத்தை உண்டாக்கி,

     இதத்து உடன் --- இனிமையாக,

     இளைஞோரை --- இளைஞர்களை,

     ஆர ஆணை மெய் இட்டு --- நிரம்ப ஆணைகளை உண்மை போல் உரைத்து,

     மறித்து --- அவர்களை எங்கும் போகவிடாமல் தடுத்து,

     விகார மோகம் எழுப்பி --- மாறுபடுகின்ற ஆசையை அதிகப்படுத்தி,

     அதற்கு உறவு ஆன பேரை அகப்படுவித்து --- அதற்கு வசப்பட்டவர்களைக் கைவசம் செய்து,

     அதி விதமாக --- அநேக விதங்களாக,

     சால மாலை அளித்து --- மிகுந்த மயக்கந் தந்து,

     அவர் கைப்பொருள் மாளவே --- அவர்களுடைய கையிலுள்ள பணம் வற்றிப்போகுமாறு,

     சிலுகு இட்டு மருட்டி --- சிறு சண்டையிட்டு மருட்டியும்,

     சாதி பேதம் அற தழுவி திரி மடமாதர் --- சாதி வேற்றுமை யின்றித் தழுவித் திரிகின்ற பேதைமையுடைய பொது மாதர்களது,

     தாக போகம் ஒழித்து --- விடாயுள்ள அநுபவத்தை ஒழித்து,

     உனக்கு அடியான் என் --- தேவரீருக்கு அடியன் என்ன,

     வேள்வி முக தவம் உற்று --- ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற்கொண்டு,

     இருதாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே --- உமது இரு திருவடிகளைப் புகழ்ந்து நினைக்கும் வண்ணம் அருள்புரிவீர்.

பொழிப்புரை

இளமையான சிறந்த பிறைமதியையும் ஊமத்தை மலரையும் எருக்கம் பூவையும் அறுகம் புல்லையும் கங்கா நதியையும் பூளைப் பூவையும் சடையில் தரித்த மதுரை நாயகனாம் சொக்கநாதன் பெற்றருளிய அற்புதமான முருகக் கடவுளே!

         மாரீசனாகிய மாயமானையும், அரக்கர்களையும், வெற்றிகொண்டு, வாலியின் மார்பைத் துளைக்குமாறு வில்லில் கணையை ஏவிய மற்போருக்கு ஏற்ற புயங்களையுடைய திருமாலின் திருமருகரே!

         நான்கு வேதங்களையும் முறையுடன் பயின்று கூறுகின்ற யாழ் முனிவராகிய நாரதர் கூறிய வள்ளிமலைக் கானகத்தில் விரும்பி விரைந்து சென்று வள்ளியம்மையாரைக் கொண்டு வந்தவரே!

         தென்னை, பலா முதலிய மரங்கள் பழுத்து உதிர்கின்ற சோலைகள் சூழ்ந்த பழநியம்பதியில் உயர்ந்த ஞானத்தின் பூரணமாகிய வடிவேலை ஏந்தி நிற்கின்ற பெருமிதம் உடையவரே!

         ஆலகால விடம் எனவும், கொலைத் தொழிலில் முதிர்ந்த வேலாயுதம் என்னவும், மிகுந்த கடைக் கண்ணால் மோகத்தை உண்டாக்கி, இனிமையாக இளைஞர்களை நிரம்பவும் ஆணைகள் உண்மைபோல் இட்டு, அவர்களைப் போகவிடாமல் தடுத்து, வேற்றுமையான ஆசையை அதிகரிக்கச் செய்து, அதற்கு உட்பட்டவரைத் தமது கைவசம் செய்து, பல விதமாக நிரம்பவும் மயக்கத்தைத் தந்து அவர்களுடைய கைப்பொருள் வற்றுமாறு சிணுங்கி மருளச் செய்து, குல வேற்றுமை இல்லாமல் எவரையும் தழுவித் திரிகின்ற அறிவில்லாத விலை மகளிரது விடாயுடன் கூடிய அநுபோகத்தை ஒழித்து, தேவரீருக்கு அடியவன் என்ன, ஆராதனையுடன் கூடிய தவவொழுக்கத்தை அடைந்து, இருபாதார விந்தங்களைப் புகழ்ந்து நினைந்து உய்ய அருள்புரிவீர்.

விரிவுரை

ஆலகாலமென.....விழிக்கடையாலும் மோகம் விளைத்து ---

பொது மகளிருடைய கடைக்கண்கள் மிகவும் கூர்மையானவை; கொல்லும் தன்மை உடையவை. அதனால் அக் கண்களை நஞ்சு என்றும் வேல் என்றும் கூறுவர்.

    படையம படையென அந்திக் குங்கட் கடையாலே”
                                                                   --- (பரிமளகளப) திருப்புகழ்

குழலாலும் நடை உடையாலும் மோகம் விளைவிப்பர். அதனால் கடைக் கண்ணாலும் விளைவிப்பர் என்று கூறுகின்றார். (எச்ச உம்மை)

இளைஞோரை ஆர ஆணை மெய் இட்டு ---

தெருவில் போகும் இளைஞர்களை, ‘நீர் போகக் கூடாது, என்மேல் ஆணை; சுவாமி மீது ஆணை’ என்று கூறி, அவர்களைத் தடுத்து நிறுத்தி சாகசம் புரிவர். அவர்களுடைய பொருள்களையும் தந்திரமாகப் பறிப்பர். இன்னார் இனியர் என்று பாராமல் எவரேயாயினும், காசு தந்தவரைக் கூடி மகிழ்வர்.

வேள்வி முகத் தவம் உற்று ---

வேள்வி-ஆராதனை, இறைவனை ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தில் நின்று வழிபடுதல் வேண்டும்.

நாலுவேத நவிற்று முறைப்பயில் வீணை நாதன் ---

வீணை நாதன்-நாரத முனிவர். இவர் தேவரிஷி. கீதையில் கிருஷ்ணர் “நான் ரிஷிகளில் நாரதராக இருக்கின்றேன்” என்கின்றார். வேதாகமங்களிலும் இசை நூலிலும் மிக வல்லவர் நாரதமுனிவர்.

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயில் ...... உடையோனே....           --- (ஏவினைநேர்) திருப்புகழ்.

வேல்-ஞானம். பரிபூரண ஞானமே வேல்.


கருத்துரை


பழநி வேல் முருகா! உனது திருவடியை நினைக்க அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...