பழநி - 0114. ஆறுமுகம் ஆறுமுகம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஆறுமுகம் ஆறுமுகம் (பழநி)

அடியார்க்கு அடியாரைப் பணிந்து,  
முருகனைத் துதிக்கும் ஏழைகள் துன்பம் நீங்க

தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தந்ததான


ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்

ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
     ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்

ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
     யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
     நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே

நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
     நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
     தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்

சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
     தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்


ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்று, பூதி

ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும், டி
     யார்கள் பதமே துணையது ...... என்று,நாளும்

ஏறுமயில் வாகன! குகா! சரவணா! எனது
     ஈச! என மானம் உனதெ ...... என்று மோதும்

ஏழைகள் வியாகுலம் இது ஏது என வினாவில் உனை
     ஏவர் புகழ்வார், மறையும் ...... என்சொலாதோ?

நீறு படு மாழை பொரு மேனியவ! வேல! அணி
     நீலமயில் வாக! உமை ...... தந்தவேளே!

நீசர்கள் தமோடு எனது தீவினை எலாம் மடிய
     நீடு தனி வேல் விடும் ...... மடங்கல்வேலா!

சீறிவரு மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக
     தேவர் துணைவா! சிகரி ...... அண்டகூடம்

சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே! பிரம
     தேவர் வரதா! முருக! ...... தம்பிரானே.
 

பதவுரை

         மாழை பொரு --- பொன்னைப் போன்ற நிறத்துடன்,

     நீறுபடு மேனியவ --- திருநீறு படிந்துள்ள திருமேனியை உடையவரே!

         வேல --- வேலாயுதரே!

         அணி --- அழகியதும்,

     நீல --- நீல நிறத்துடன் கூடியதுமாகிய,

     மயில்வாக --- மயிலை வாகனமாக வுடையவரே!

         உமை தந்த வேளே --- உமையம்மையார் பெற்றருளிய குமார மூர்த்தியே!

         நீசர்கள் (தம்)மோடு --- கொடிய அசுரர்களுடன்,

     எனது தீவினை எ(ல்)லாம் மடிய --- அடியனேது கொடுவினை அனைத்தும் அழிந்துபோக,

     நீடு தனி வேல்விடு --- நெடியதும், நிகரற்றதுமாகிய வேற்படையை விடுத்தருளிய,

     மடங்கல் வேலா --- ஊழித் தீயை போன்ற உக்கிரமான வேற்படையை உடையவரே!

         சீறி வரும் மாறு அவுணன் --- கோபித்து வருகின்றவனும் பகைமையை உடையவனுமாகிய கஜமுகன் என்னும் அசுரனது,

     ஆவி உ(ண்)ணும் --- உயிரைப் போக்கிய,

     ஆனைமுக தேவர் துணைவா --- யானை முகத்தையுடைய விநாயகப் பெருமானுக்கு அருந்துணைவரே!

         சிகரி அண்டகூடம் சேரும் --- கோபுரமானது வானுலகம் வரை ஓங்கியுள்ள,

     அழகு ஆர் பழநி வாழ் குமரனே --- பெருவனப்பு நிறைந்த பழநி மலையில் உறைகின்ற குமாரக் கடவுளே!

         பிரமதேவர் வரதா --- அயன் முதலிய அமரர்கட்கு வரத்தைக் கொடுப்பவரே!

         முருக --- தெய்வத் தன்மையுடையவரே!

         தம்பிரானே --- தலைவரே!

         ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்  என்று --- ஆறுமுகம் என்ற உமது திருப்பெயரை ஆறு முறை கூறி,

     பூதி --- திருநீற்றை,

     ஆகம் அணி மாதவர்கள் --- உடம்பில் தரித்துக் கொள்ளும் பெருந் தவமுடையவர்களது,

     பாத மலர் சூடும் --- திருவடிகளைத் தன் தலையிற் சூட்டிக்கொள்கின்ற,

     அடியார்கள் பதமே துணை அது என்று --- தொண்டர் களினுடைய திருவடித் தாமரைகளையே பற்றுக் கோடாகக் கொண்டு,

     நாளும் --- நாள்தோறும்,

     ஏறு மயில் வாகன --- ஆண்மயிலை வாகனமாகக் கொண்டவரே!

     குகா --- ஆன்மாக்களின் இதய தாமரையில் உறைபவரே!

     சரவணா --- சரவண தடாகத்தில் தோன்றியவரே!

     எனது ஈசா --- என்னுடைய தலைவரே!

     என மானம் உனது என்று --- “அடியேனுடைய மானம் உம்முடையதே” என்று சொல்லி,

     மோதும் --- மோதிக்கொள்கின்ற,

     ஏழைகள் வியாகுலம் இது ஏது என வினா இல் --- ஏழைகளைக் கண்டு “உமக்கு இது என்ன கவலை” என்று நீர் கேட்டு அருளவில்லையானால்,

     உனை ஏவர் புகழ்வார்? --- தேவரீரை அருட்கடல் என்றும், சர்வக்ஞர் என்றும் யார்தான் புகழ்வார்கள்?

     மறையும் என் சொலாதோ --- உம்மைப் பலவாறாகத் துதிக்கும் வேதந்தான் என்ன சொல்ல மாட்டாது?
  
பொழிப்புரை


         திருநீறு பூசிய பொன்போன்ற திருமேனியரே!

         வேலாயுதரே!

         அழகிய நீலமயில் வாகனரே!

         உமாதேவியின் திருப்புதல்வரே!

         கொடிய அசுரர்களுடன் அடியேனுடைய தீவினைகள் முழுதும் அழிந்து போக, நிகர் அற்ற நெடிய வேற்படையை விட்டருளிய, ஊழித்தீயைப் போல் உக்ரமுடைய வேற்படையை உடையவரே!

         பகைகொண்டு சினத்துடன் வந்த கஜமுகாசுரனது ஆவியைப் போக்கிய கரிமுகக் கடவுளாம் கணபதியின் சகோதரரே!

         கோபுரங்கள் அண்ட கூடம் வரை ஓங்கி அழகு செய்யும் பழநி மலையின்மேல் உறைகின்ற குமாரக் கடவுளே!

         பிரமாதி தேவர்களுக்கு வரத்தைக் கொடுக்கும் வரதராஜரே!

         முருகப் பெருமானே!

         எப்பொருட்குந் தலைவரே!

         ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறு முறை ஓதி திருநீற்றை அன்புடன் உடம்பில் அணிந்து கொள்ளும் மாதவர்களுடைய அடியார்களது பாதமலரே உற்ற துணை என்று நம்பி, “ஏறுமயில் வாகன! குகா! சரவணா! ஈசா! என்னுடைய மானம் உம்முடையதே” என்று உம்மிடம் நாள்தோறும் மோதிக் கொள்கின்ற ஏழைகளுடைய துன்பத்தைக் கண்டு, ‘உமக்கு யாது துன்பம்?’ என்று வினவாது இருந்தால், அடியார்க்கு எளியன் என்றும் அருளாகரன் என்றும் யார் தாம் புகழ்வார்கள்? (உம்மையே பரம் என்று முழங்கிக் கூறும்) வேதந்தான் என்ன சொல்லும்? (உலகோர் உம்மை நிந்திக்காமலிருக்கும் பொருட்டும் வேதம் உம்மை வேறுவகையாகக் கூறாதிருக்கும் பொருட்டுமாவது அடியேனைக் காத்தருள்வீர்)

விரிவுரை

ஆறுமுகம் ஆறுமுகம்.........என்று பூதி ---

திருநீற்றைக் தரிக்கும்போது ஆறுமுகம் என்று அன்புடன் ஆறுமுறை கூறுதல் வேண்டும். அவ்வாறு தரிக்கில் உட்புக்குற்ற பிணிகள் முதலியனவும் பேய்களின் கலக்கமும் நீங்குவதுமின்றி, உயிருக்குற்ற பிறவிநோயும் விரையில் நீங்கும். ஆதலால், ஆறுமுகம் என்று திருநீறணியும் திருத் தவர்கள் இம்மை நலன்களும் மறுமை நலன்களும் எளிதிற் பெறுவர்.

பூதி ஆகம் அணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணை ---

மேற்கூறிய படி திருநீறு அணிகின்ற பெருந்தவர்களின் அடியார்களுடைய திருவடியே எந்நாளும் பற்றுக் கோடாகக் கொண்டு இருத்தல் வேண்டும். இது முத்தி வீட்டில் எளிதில் புகுத்தும் இனிய வழியாம்.

"அடியார்க்கும் அடியேன்" என்று திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமி இருந்த அடியார்களைப் பார்த்ததும், "இவருக்கு நான் அடியேனாகப் பண்ணும் நாள் எந்த நாள்" என்று இறைவனை வேண்டியது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

ஆண்டவனருள் பெறுவதற்கு அவனருள் பெற்ற அடியார் பக்தியே சாலச்சிறந்த வழி என்பதை, அப்பூதி அடிகள், பெருமிழலைக் குறும்பர், கலிசைச் சேவகனார், பத்திர கிரியார் முதலியோர்களின் சரிதங்களை உணர்ந்தோர்கள் அறிவார்கள்.

அடியார்களுக்கு உரிய சாதனங்களில் திருநீறு தலைசிறந்த ஒன்றாம். நவநாகரீகம் தாண்டவமிடும் இக்காலத்தில் “திருநீறணிவது அவசியமா? அணிவதனால் வரும் பயன் யாது?” என்றெல்லாம் வினவுகின்றனர். அதற்கு விடை நாம் கூறவேண்டியதில்லை; அதன் பேரே விடை தருகிறது. “திருநீறு” திரு-தெய்வத்தன்மை, நீறு-வினைகளை நீறாக்குவது என்பதாம். எனவே, வினைகளை எரித்து நீறாக்கித் தெய்வத் தன்மையைக் கொடுக்கவல்லதனால் அதற்குத் திருநீறு என்னும் அழகிய திருநாமம் அமைந்துள்ளது. மேலான ஐஸ்வரியத்தைத் தருந் தகைமையுடையதால் “விபூதி” எனப்பெயர் பெற்றது. இம்மையில் பெருந்திருவைக் கொடுத்து மறுமையில் முத்தியையும் கொடுக்கும் இத்திருநீறு.

முத்தி தருவது நீறு, முனிவர் அணிவது நீறு,
சத்தியம் ஆவது நீறு, தக்கோர் புகழ்வது நீறு,
பத்தி தருவது நீறு, பரவ இனியது நீறு,
சித்தி தருவது நீறு, திரு ஆலவாயான் திருநீறே.   --- தேவாரம்

எல்லா நிலையினரும் அவசியமாகத் திருநீறு தரித்தல் வேண்டும். திருநீற்றின் பெருமையை விளக்குவதற்காகவே ஓர் உபநிடதம் எழுந்துள்ளது. அது “பஸ்மஜாபாலம்” என்பதாம். அதில் அடியிற் கண்டவாறு ஒரு விஷயங் குறிக்கப்பட்டுள்ளது.

யதிர் பஸ்மதாரணம் த்யக்த்வா ஏகதா உபோஷ்ய
த்வாதச ஸஹஸ்ர ப்ரணவம் ஜப்த்வா கத்தோ பவதி !!

பொருள்:- சந்யாசியும் ஒருவேளை பருமதாரணம் (விபூதி தரிக்க) செய்து கொள்ளத் தவறுவானேல் உபவாசமிருந்து பிரணவஜபம் பன்னீராயிரத்தால் அப்பாவம் நீங்கி பரிசுத்தனாகக் கடவன்.

சிவபெருமான் எக்காலமும் நீங்காது நின்று நிருத்தம் புரியும் நடனசாலை எது என்றால், முப்போதும் திருநீறு அணிந்து நித்தியமான, பஞ்சாட்சர ஜெபம்புரியும் அன்பர்களுடைய திருவுள்ளமேயாம்.

போதுவார் நீறு அணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை
ஓதுவார் உள்ளம் என உரைப்பாம்-நீதியார்
பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கை
அம்மான் நின்(று) ஆடும் அரங்கு.

யாது பாதகம் புரிந்தவர் ஆயினும், இகழும்
பாதகங்களில் பஞ்சமா பாதகர் எனினும்,
பூதி போற்றிடில், செல்வராய் உலகெலாம் போற்றத்
தீது தீர்ந்தனர், பவித்திரர் ஆகியே திகழ்வார்.      --- உபதேசகாண்டம்

ஆதலால் சைவப்பெருமக்களாகப் பிறக்கும் பெருந்தவம் புரிந்த யாவரும் திருநீற்றை அன்புடன் தரித்து, அதனை ஒரு பையில் உடன் வைத்திருந்து, தமது மக்களையும் தரிக்கச் செய்து, எல்லா நலன்களையும் பெறுவார்களாக.

“திருவெண்ணீறு அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே” என்ற தமிழ் மறையையும் ஓர்க.

திருநீறு வாங்கும் முறை குறித்தும், திருநீறு அணியும் முறை குறித்தும் "குமரேச சதகம்" என்னும் நூலில் கூறியுள்ளது காண்க...


திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும், இயல் சிவிகையில் இருந்தும், உயர்
     பலகையில் இருந்தும்,மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்,
     பருத்ததிண் ணையில் இருந்தும்,

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க, மேல்நின்று
     திருநீறு வாங்கி இடினும்,
செங்கை ஒன்றாலும்,விரல் மூன்றாலும் வாங்கினும்,
     திகழ்தம் பலத்தினோடும்,

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்,
     அசுத்தநில மான அதினும்,
அங்கே தரிக்கினும், தந்திடின் தள்ளினும்,
     அவர்க்கு நரகு என்பர் கண்டாய்,

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகிழ் சகநாதனே!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!


திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்று,திரு நீற்றைப்
     பரிந்து,கை யால்எடுத்தும்,
பாரினில் விழாதபடி அண்ணாந்து, செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக,

நித்தம் மூவிரல்களால் நெற்றியில் அழுந்தல்உற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு,
நீடுவினை அணுகாது, தேகபரி சுத்தமாம்,
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன், முகத்திலே
     தாண்டவம் செய்யுந்திரு,
சஞ்சலம் வராது,பர கதி உதவும், இவரையே
     சத்தியும் சிவனும் என்னலாம்,

மத்துஇனிய மேருஎன வைத்து அமுதினைக் கடையும்
     மால்மருகன் ஆனமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!


என மானம் உனது என்று மோதும் ஏழைகள் ---

நாள்தோறும் இறைவனுடைய திருநாமங்களைக் கூறி “என்னுடைய மானம் உம்முடையதே” என்று சொல்லி, அவனுடைய திருவடிக் கமலத்தில் மோதிக் கொள்ளும் நல்லன்பர்கள்.

வியாகுலம் ஏது என வினாவில் ---

இத்தகைய நல்லன்பர்களின் துன்பத்தை நாள்தோறும் கண்டிருந்தும் சர்வாந் தர்யாமியாகிய தேவரீர் “என்ன துன்பம்?” என்று கேட்காதிருத்தல் வினாவில்-வினா இல், வினாவுதல் இல்லாத.
   
ஏவர் புகழ்வார் ---

உம்மை “அருளாளன்” என்று எவர்தாம் புகழ்வார்கள்? உம்முடைய கருணைக்குப் பங்கம் ஏற்படுமல்லவா?

மறையும் என்சொலாதோ ---

நீரே மூவர் தேவாதிகள் தம்பிரான் என்று தெய்வசிகாமணி என்றும், எல்லாங்கடந்த இறைவன் என்றும், சமயாதீதன் என்றும் ஓலமிடுகின்ற அந்த வேதங்கள்தாம் உம்மை என்ன சொல்லா? இவற்றை நோக்கியாவது உம்மையே கதியென்று வந்து நாள்தோறும் முறையிடுகின்ற ஏழையாகிய அடியேனை ஆண்டருள்வீர்.”

எனது தீவினை எலாமடிய நீடுதனி வேல்விடு மடங்கல் வேலா? ---

மடம்-அறியாமை;

கல்-தோண்டி எடுத்து நீக்குகின்ற; வேல்-ஞானம்.

அடியேனுடைய தீவினைக் கூட்டங்களெல்லாம் அடியோடு நீங்குமாறு வேற்படையை விடுகின்ற பெருமானே!” என்றதனால் வினையாகிய மலையைத் துகளாக்கும் வண்மை அவ்வேற்படை ஒன்றுக்கே உளது என்பது விளங்குகின்றது.

வினை ஓடவிடும் கதிர் வேல் மறவேன்” - கந்தர் அநுபூதி

வேல் உண்டு வினை இல்லை”

மடங்கல் வேலா” என்பதற்கு சிங்கத்திற்கு நிகரான வேலாயுதரே! என்றும் பொருள் கூறலாம்.

சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக தேவர் :-

கணபதி கஜமுகனை வதைத்த வரலாறு

முன்னொரு காலத்தில் இந்திரன் அசுரர் குலத்தை அழித்தனன். அதனால் அசுரேந்திரன் வருந்தி, சுக்கிரருடன் ஆலோசித்து, அவர் பணித்தவாறு, தன் அசுரகுலம் ஓங்கும் பொருட்டு, வசிட்டர் மரபில் வந்தவரும் வேத வேதாந்த பராங்கதரும் ஞானபானுவுமாகிய மாகதர் என்னும் மாபெருந் தவமுனிவர் தவஞ்செய்யுமிடத்திற் சென்று, அவருடன் கூடி தகவுடையொரு மகனைப் பெறுகென, விபுதை என்னும் ஓர் அசுரகன்னியை அனுப்பினான். விபுதை மேருமலைச் சாரலில் மிக உக்கிரமான தவத்தைப் புரிந்து கொண்டிருக்கும் மாகத முனிவரைக் கண்டு அஞ்சி, “ஆ! கொடியது! வடவாக்கினியை அணைக்கும் மேகமுளதோ? இப் பெருந்தவரை நெருங்கவும் மயக்கவும் முடியாது; இவரைக் குறித்துத் தவஞ்செய்து எண்ணியதை முடிப்பேன்” என்று துணிவுகொண்டு சிவமூர்த்தியைக் குறித்து அம்முனிவருக்கெதிரே தவம்புரிந்து கொண்டிருந்தாள். அவள் தவத்தின் பயனாய், நெடுங்காலத்திற்குப் பின் அங்கே ஓர் ஆண்யானை பெண்யானையோடு புணர, அதனை மாகத முனிவர் கண்டு மணம் சலித்து, காம இச்சை கொண்டார். தவம் புரிந்திருந்த விபுதையை நோக்கி, அவளது விருப்பத்தையும் உணர்ந்து, அவளைப் பெண்யானையாகச் செய்து தான் ஆண்யானையாகிப் புணர்ந்து இன்புற்றார். அப்பொழுது தேவர்கள் துன்புறும் வண்ணம் கயமுகன் என்னும் அசுரன் தோன்றினான். அவ் விபுதையின் உரோமங்களினின்றும் பலகோடி அசுரர்கள் தோன்றினார்கள். மாகதர் முன்னையறிவு கொண்டு வருந்தி தவமேற்கொண்டார்.

கயமுகாசுரன் அவுண சேனைகளோடும் எல்லாத் தேசங்களிலும் சென்று, மனிதர் முதலிய உயிர்களை வாரியுண்டு, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து செருக்குற்று உலாவினான். அசுரேந்திரனால் அனுப்பப் பட்ட சுக்ரபகவான், கயமுகனை தவஞ்செய்து பல வரங்களைப் பெறுமாறு ஏவினார். கயமுகன் மேருவின் சாரலில் காமாதி யறுபகைவரைவென்று ஐந்தெழுத்தை ஓதி உறுதியான நிலையில் நின்று சிவபெருமானை வேண்டிப் பெருந்தவம் புரிவானாயினன். ஆயிரம் ஆண்டுகள் புற்களையும் இலைகளையும் நுகர்ந்தும், ஆயிரம் ஆண்டுகள் தண்ணீரைப் பருகியும் ஆயிரம் ஆண்டுகள் வாயுவை நுகர்ந்தும், இங்ஙனம் மூவாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்து, பிராணவாயுவை எழுப்பி, மூலாக்கினியை மூட்டி, விந்துத் தானத்திலுள்ள அமிர்தத்தைப் பருகுவானாயினன். அவன் தவநிலையைக் கண்டு “நம் பதங்கள் அழிந்தன” என்று அமரர் அலக்கணுற்றனர். கயமுகன் பின்னும் மிக உறுதியுடன் நாற்புறத்தும் தீயை மூட்டி, நடுவிலும் தீமூட்டி அத்தீயின் மத்தியில் நின்று பதினாயிரம் ஆண்டுகள் கடுந்தவஞ் செய்தான். அவன் தவத்தின் வலிமையால் அவனுடல் வைர மணிபோல் மிளிர்ந்தது. சிவபெருமான் அவன் தவத்திற்கு இரங்கி விடையின் மீது காட்சி தந்தருளினார். கயமுகன் வணங்கி நிற்ப, கண்ணுதற் கடவுள் “யாது வரம் வேண்டும்” என்று வினவினார். கயமுகன் “எந்தையே! எந்த ஆயுதத்தாலும் சாகாத்தன்மையும் மாலயனாதி வானவர்கட்குத் தலைவனாமாறும், எல்லாவுலகங்களிலும் என் ஆணைச்சக்கரம் செல்லுமாறு, ஒரு வேளை பிறர் சூழ்ச்சியால் அடியேன் இறக்கினும் பிரிதொரு பிறவியில்லாப் பேறும் தந்தருள வேண்டும்” என்று வேண்டினான். அரனார் அவ்வரத்தை வழங்கி மறைந்தருளினார்.

கயமுகாசுரன் பெருங்களிப்புற்று, தருக்குற்று நின்றான். அசுரகுருவும் அசுரேந்திரனும் ஏனைய அசுரர்களும் வந்து அவனைச் சூழ்ந்து ஆர்த்தார்கள். அசுரதச்சனைக் கொண்டு மதங்கமாபுரம் என்ற ஒரு நகரை உண்டாக்கி அதில் அமர்ந்து அரசு செய்து வந்தான். அசுரேந்திரன் மகளாகிய விசித்திரகாந்தி என்பாளை மணந்து மேலும் பல கவின் மிகுங் காரிகைகளுடன் கலந்திருந்தான். எல்லாவுலகங்களிலும் கொடுங்கோல் செலுத்தி தேவர் முனிவர்கட்கு ஊறு செய்துவந்தான். அநேக நாட்களுக்குப் பின் அவன் கொடுமைக்கு ஆற்றாத அரியயனாதி அமரர்கள் ஆலமுண்ட அண்ணலை அடைந்து, அபயம் புகுந்து முறையிட்டனர். உமாபதி! “ஒரு மைந்தனைத் தந்து நுங்குறை நீக்குதும்” என்று அருள் செய்தார்.

சிவபெருமான் ஒரு சமயம் உமையம்மையாரோடு திருநந்தவனத்தில் உலாவி, முடிவில் ஒரு சித்திர மண்டபத்திற் சென்றார். அம்பிகை அங்குள்ள ஓவியங்களைக் கூர்ந்து கண்ணுற்றார். அரனாரது ஆணையால் அம்மண்டபத்தினடுவே ஒரு பிரணவ எழுத்தே இருவடிவு கொண்டு யானைகளாய்த் தோன்றி உமையம்மையார் காணக்கூடிற்று. அம்பிகை அரனாரை நோக்கி, “இது என்ன?” என்று வினாவ, பெருமான் “உமையே! எல்லாவற்றிற்கும் மூலகாரணமாயுள்ள ஓரெழுத்தை நீ இச்சித்துப் பார்த்தமையால் இது நேர்ந்தது. காட்சி மாத்திரத்தில் இதனைச் செய்தற்குரிய உன்னுடைய மாட்சிமையை யாமன்றி வேறு அறிய வல்லார் யாவர்? உனது திருவருட் செய்கை மறைகட்கும் எட்டாததாகும்” என்று கூறியருளினார். அந்த யானைகள் இரண்டும் முன்போற் பிரணவமாயின.

அப்பொழுது ஐந்து கரங்களையும், மூன்று கண்களையும், தொங்குகின்ற வாயினையும், சந்திரனைத் தரித்தசெஞ் சடையையும், யானை முகத்தையுமுடைய ஒரு புதல்வர் தோன்றியருளினார். அப்புதல்வர் அம்மையப்பரை வணங்கி நிற்க, அம்மையும் அப்பரும் அவரை எடுத்து அணைத்து ஆசி கூறி, “யாவரேயாயினும் எக்கருமத்தைத் தொடங்கும்போதும் உன்னை வணங்குவா ராயின் அக்கருமத்தை விக்கினமின்றி முடித்துத் தருதி; உன்னை வழிபடாதவர் கருமத்திற்கு விக்கினஞ் செய்குதி; மால் அயன் முதலிய வானவர்கட்கும் கணங்கட்கும் நாயகனாயிரு” என்று அருள் புரிந்தார். விநாயகர் திருக்கைலையின் வாயிலிற் பூதகணங்கள் சூழ வீற்றிருந்தருளினார்.

பின்னர் திருமால் முதலிய தேவர்கள் வந்து விநாயகரை வணங்கி “எம்பெருமானே! கயமுகனை வதைத்து எமக்கு அருள்பாலிக்க வேண்டும். அவன் இட்ட தகாத குற்றேவலைச் செய்து வருந்தினோம்” என்று முறையிட்டார்கள். விநாயகக் கடவுள் “அஞ்சமின்” என்று அருள் புரிந்து, கதிரவன் போற்பிரகாசிக்கும் அசலன் என்பவன் மீது ஏறி, பூதர்கள் சூழப்போர்க்களஞ் சென்றார். தேவர்கள் மலர்மழை சிந்தி ஆரவாரித்தார்கள். ஒற்றராலறிந்த கயமுகாசுரன் ஆர்த்து, அசுரசேனைகளுடன் போர்க்கு வந்தான். பூதசேனைகளால் அசுரசேனை அழிந்தது. கயமுகன் சினந்து, கணைமழை சிந்தி பூதங்களையழித்தான். விநாயகக்கடவுள் கயமுகனை எதிர்த்து போர்புரிந்து, அவன் வில்லையறுத்து, அவனது படைக்கலங்களை எல்லாம் அழித்து, அசுர சேனைகளையும் மாய்த்தனர். கயமுகன் மீண்டுஞ் செருச் செய வந்தபோது விநாயகர் அவன் எப்படையாலும் மாளாத வரம் பெற்றுள்ளதை நினைந்து தமது திருக்கோடியில் ஒன்றை முறித்து, அவன் மீது விடுத்தார். அது அவனுடம்பைப் பிளந்து, நன்னீர்க் கடலில் மூழ்கி, பெருமான் கரத்திலமர்ந்தது. அவ்வசுரர் தலைவன் மயங்கி வீழ்ந்தான். அவன் மார்பிற் பெருகிய உதிரவெள்ளம், நதிபோற் பெருகி, அருகிலுள்ள காட்டில் பரந்தமையால் அவ்விடம் திருச்செங்காடு என்று பெயர் பெற்று இன்றும் விளங்குகிறது.

சிவபெருமானது வரத்தால் சாகாவரம் பெற்ற கயமுகாசுரன், ஓர் பெருச்சாளி வடிவங்கொண்டு, கோபாக்கினி சிந்தி, விநாயகரைக் கொல்லவந்தான். ஐங்கரப் பெருமான் அருள்மழை சிந்தி “நமக்கு வாகனமாக இருப்பாயாக” என்று அதன்மீது ஆரோகணித்து அருளினார். அதுகண்ட தேவர்கள் பூமழை சிந்தி போற்றினார்கள். விநாயகக் கடவுள் உயிர் சிந்திய பூதர்களை எழுப்பி திருக்கைலையை அடைந்தார். பிரமாதி தேவர்கள் கணபதியை வணங்கி, “யாங்கள் இதுகாறும் கயமுகன் முன் நாள்தோறும் வருந்தி இட்ட தோப்புக்கரணத்தை இன்றுமுதல் உமது திருமுன் இடுகிறோம். இங்ஙனம் உமது சந்நிதியில் அன்புடன் செவிமறித்துத் தோப்புக்கரணம் போடுபவர்கட்கு இடர் நீக்கி எண்ணியவற்றை ஈந்தருள வேண்டும்” என்ற வரமிரந்தனர். ஆனைமுகப் பெருமான் அவ்வரம் நல்கி அருள் புரிந்தனர்.

பிரமதேவர் வரதா ---

பிரமாதி தேவர்களுக்கும் வரங்கொடுக்கும் வரதராஜர் முருகப்பெருமான் என்பதை “ஓம் பக்தாபீஷ்ட வரதாயநம”. “ஓம் ஆச்ரிதேஷ்டார்த்த வரதாய நம:” “கலியுகவரதன்” என்பவற்றால் உணர்க.

கருத்துரை

திருநீறு தரித்த வேலாயுதரே! கஜமுக அனுஜரே! பழநியாண்டவரே! வரதரே! ஆறுமுகமென்று நீறணியும் அடியார்க்கடியாரைப் பணிந்து உம்மைத் துதித்து முறையிடும் ஏழைகளது துன்பத்தை நீக்கியருளல் வேண்டும்.

1 comment:

  1. 🦚🦚🦚🙏🙏🙏மிக சிறந்த விளக்கம்

    ReplyDelete

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...