பழநி - 0115. இத் தாரணிக்குள்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இத் தாரணிக்குள் (பழநி)

பொய் வாழ்வில் அன்பு வைத்து அழியாமல், திருவடியில் அன்பு வைத்து உய்ய

தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
         தானத் தனந்ததன தானத் தனந்ததன
   தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
         தானத் தனந்ததன தானத் தனந்ததன
   தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
          தானத் தனந்ததன தானத் தனந்ததன ...... தனதனதான


இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
         கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
    தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
         ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
    யிச்சீர் பயிற்றவய தெட்டோ டுமெட்டுவர
         வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ......  ளுடனுறவாகி

இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
         வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
    திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
         தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
     மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
         மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச்

சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
         னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
    பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
         ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
     தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
         னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ......  எடுமெனவோடிச்

சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
         யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
    இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
         நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
    சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
         பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும்

தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
         தாதத் தனந்ததன தானத் தனந்ததன
    செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
         தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
     தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
         தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித்

திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
         வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
    சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
         மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
    சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
          நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பா

மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
         னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
    முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
         ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
     மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
          மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய ...... மருமகனாகி

வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
         ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
    யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி
         யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய
    வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
         வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி ......  வருபெருமாளே.


பதம் பிரித்தல்


இத்தா ரணிக்குள் மநு வித்தாய் முளைத்து, ழுது
         கேவிக் கிடந்து, மடி மீதில் தவழ்ந்து, அடிகள்
    தத்தா தனத்ததன இட்டே, தெருத்தலையில்
         ஓடித் திரிந்து, நவ கோடிப் ப்ரபந்தகலை
    இச்சீர் பயிற்ற, வயது எட்டோடும் எட்டு வர,
         வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்கள் ......  உடன் உறவாகி,

இக்கு ஆர் சரத்து மதனுக்கே இளைத்து, வெகு
         வாகக் கலம்ப வகை பாடிப் புகழ்ந்து, பல
    திக்கோடு திக்குவரை மட்டு ஓடி, மிக்கபொருள்
         தேடி, சுகந்த அணை மீதில் துயின்று, சுகம்
     இட்டு ஆதரத்து உருகி, வட்டார் முலைக்குள் இடை
         மூழ்கிக் கிடந்து, மயல் ஆகித் துளைந்து, சில ...... பிணிஅதுமூடிச்

சத்து ஆன புத்தி அது கெட்டே கிடக்க, நமன்
         ஓடித் தொடர்ந்து, கயிறு ஆடிக் கொளும்பொழுது,
    பெற்றோர்கள் சுற்றி அழ, உற்றார்கள் மெத்த அழ,
         ஊருக்கு அடங்கல் இலர், காலற்கு அடங்க உயிர்
     தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்
         ஓலைப் பழம்படியினால் இற்று இறந்தது என, ......  எடும் என ஒடிச்

சட்டா நவப்பறைகள் கொட்டா, வரிச்சுடலை
         ஏகி, சடம் பெரிது வேக, புடம் சமைய
    இட்டே, அனற்குள் எரி பட்டார் எனத்தழுவி,
         நீரில் படிந்துவிடு பாசத்து அகன்று, னது
    சற்போதகப் பதுமம் உற்றே, தமிழ்க்கவிதை
         பேசிப் பணிந்து உருகு நேசத்தை இன்று தர, ...... இனிவரவேணும்.

தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
         தாதத் தனந்ததன தானத் தனந்ததன
    செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
         தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
     தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
         தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிண என ......  ஒருமயில் ஏறித்

திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழப்பொருது,
         வேலைத் தொளைந்து, வரை ஏழைப் பிளந்து, வரு
    சித்தா! பரத்து அமரர் கத்தா! குறத்திமுலை
         மீதில் புணர்ந்து, சுக லீலைக் கதம்பம் அணி
    சுத்தா! உமைக்கும் ஒரு முத்தாய் முளைத்த குரு
          நாதக் குழந்தை என ஓடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பா!

மத்தா மதக்களிறு பின் தான் உதித்த குகன்,
         ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டதொரு
    முட்டாள் அரக்கர் தலை இற்றே விழ, கணைகளே
         தொட்ட கொண்டல் உரு ஆகிச் சுமந்து, திக
     மட்டு ஆர் மலர்க்கமலம் உற்ற ஆசனத் திருவை
          மார்பில் புணர்ந்த, ரகுராமற்கும் அன்புடைய ...... மருமகனாகி,

வற்றா மதுக்கருணை உற்றே மறைக் கலைகள்
         ஓதித் தெரிந்து, தமிழ் சோதித்து, அலங்கல்அணி
    அத்தா! பரத்தை அறிவித்து, வி சுற்றும் ஒளி
         ஆகிப் ப்ரபந்தம் அணி வேல்தொட்டு அமைந்த புய
    வர்க்கா! மருப்புழுகு முட்டா திருப்பழநி
         வாழ்வுக்கு உகந்து, டியர் ஆவிக்குள் நின்றுஉலவி ...... வருபெருமாளே.

  
பதவுரை


         தித்தா திரித்திகுட...கிணங்கின் என --- என்ற தாளவரிசைகளுடன் (வாத்தியங்கள் முழங்க)

     ஒருமயில் ஏறி --- ஒப்பற்ற மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து,

     திண் தேர் ரதத்து அசுரர் --- வலிமையில் தேர்ந்த இரதத்தின் மீது வந்த ராக்கதர்கள்,

     பட்டு (ஏ-அசை) விழ பொருது --- இறந்து படுமாறு போர்செய்து,

     வேலை தொளைந்து --- சமுத்திரங்களைத் தொளைத்தும்,

     வரை ஏழை பிளந்து வரு --- குலகிரி ஏழையும் பிளந்து விசையுடன் வருகின்ற,

     சித்தா --- வல்லவரே!

         பரத்து அமரர் கத்தா --- தேவர்களுக்கெல்லாம்  மேலான தலைவரே!

         குறத்தி முலை மீதில் புணர்ந்து --- வேடர்குலக் கொழுந்தாக அவதரித்த வள்ளியம்மையாரது திருமுலைகளை அணைந்து,

     சுக லீலை கதம்பம் அணி --- இன்பத் திருவிளையாடல்களைச் செய்து பரிமளப் பொடிகளை அணிந்து கொள்ளும்,

     சுத்தா --- தூய்மை உடையவரே!

         உமைக்கும் ஒரு முத்தாய் முளைத்த --- அகிலாண்ட நாயகியாகிய உமாதேவியாருக்குப் பெறுதற்கரிய பெரும் பேறு என ஒரு முத்தைப்போல் அவதரித்த,

     குருநாதா --- குமர குருபர!

         குழந்தை என ஓடி கடப்ப மலர் அணி திருமார்பா --- சிறு குழந்தை போல் ஓடி, கடம்பமலர் மாலையைத் தரித்துக் கொண்டிருக்கின்ற, திருமார்பை உடையவரே!

         மத்த மதகளிறு பின் தான் உதித்த குகன் --- மதங்களை மிகவும் பொழிகின்ற யானைமுகமுடைய விநாயகமூர்த்திக்கு இளவலாகத் திருவவதாரம் புரிந்தவரும், ஆன்மாக்களின் இதய குகையில் வசிப்பவருமாகிய பெருமானே!

         ஏதத்து இலங்கையினில் --- குற்றம் பொருந்திய இலங்கயைில்,

     ஆதிக்கம் உண்டது ஒரு முட்டாள் அரக்கர் தலை --- தலைமை பூண்டு அரசு செலுத்திய மூடனாகிய இராவணன் முதலிய இராக்கதர்களுடைய தலைகளானது,

     இற்று(ஏ-அசை) விழ கணைகள் தொட்ட - அறுந்து கீழே விழுந்து உருளுமாறு அம்புகளை ஏவியவரும்,

     கொண்டல் உருவு ஆகி --- காருண்ட மேகம்போன்ற நீலநிறத்தை உடையவரும்,

     சுமந்து அதிகம் மட்டு ஆர் மலர் கமலம் --- மிகுந்த வாசனையைத் தாங்கிய தாமரை மலரை,

     உற்ற ஆசன திருவை --- பொருந்திய பீடமாகக் கொண்ட திருமகளை,

     மார்பில் புணர்ந்த --- திருமார்பில் இருக்க வைத்த,

     ரகுராமர்க்கும் அன்புடைய மருமகன் ஆகி --- ரகு குலத்தில் வந்த ஸ்ரீராமபிரானும் மிக்க அன்பு கொண்டு மெச்சத் தக்க மருகர் என்று புகழுமாறு விளங்கியும்,

     வற்றா மது கருணை உற்று --- குறையாததும் இனிமையுடையதுமாகிய, திருவருள் செய்து,

     மறை கலைகள் ஓதி --- வேதாகமங்களை உலகம் உய்யும் பொருட்டு திருவாய் மலர்ந்து, 

     தமிழ் சோதித்து தெரிந்து --- மதுரையில் உருத்திரசன்மராக வந்து இறையனார் அகப்பொருள் உரைகளில் சிறந்தது இது என்று ஆராய்ந்து தெரிவித்து,

     அலங்கள் அணி அத்தா --- (பா)மாலைகளைத் தரித்துக் கொண்டிருக்கின்ற குரு மூர்த்தியே!

         பரத்தை அறிவித்து --- பரம்பொருளைத் தெரிவித்து,

     ஆவி சுற்றும் ஒளி ஆகி --- உயிரைச் சூழ்ந்திருக்கின்ற அருட்பெருஞ் சோதியாக விளங்கி,

     ப்ரபந்தம் அணி வேல்தொட்டு அமைந்த புய வர்க்கா --- துதி நூல்களைத் தரித்துக் கொண்டிருக்கின்ற வேலாயுதத்தை ஏந்திய வரிசையாக புயாசலங்களை உடையவரே!

         மரு புழுகு முட்டா --- குறைவற்ற புனுகு வாசனையை உடைய,

     திருப்பழநி வாழ்வுக்கு உகந்து --- தெய்விகம் பொருந்திய பழநிமலையில் வாழ்வதற்கு விரும்பியதுடன்,

     அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே --- அடியார்களது உயிர்கள் தோறும் உயிர்க்குயிராய் நின்று உலவி வருகின்ற பெருமையின் மிக்கவரே!

         இத்தாரணிக்குள் --- இந்த மண்ணுலகத்தில்

     மநு வித்தாய் முளைத்து --- மனித வித்தாகத் தோன்றி,

     கேவி அழுது கிடந்து --- மூச்சுத் திணறும்படி விம்மி விம்மி அழுது செயலற்று,

     மடிமீதில் கிடந்து --- தாய்மடித் தலத்தின் மீது சக்தியற்றுக் கிடந்து,

     தவழ்ந்து --- பின் தவழல் உற்று,

     அடிகள் தத்தா தனத்தன இட்டே --- கால்களைத் தத்தி தத்தி என்று தளர் நடையிட்டு,

     தெருத் தலையில் ஓடி திரிந்து --- தெருக்களிலும் வீட்டு வாயிலிலுமாக ஓடி உலாவி,

     நவ கோடி பிரபந்த கலை --- புதுமையான கோடிக்கணக்கான நூல்களை,

     இ சீர்பயிற்ற --- இந்த சிறப்புப்படி கற்றுக்கொண்டு,

     வயது எட்டோடும் எட்டு வர --- பதினாறு வயதடைந்து,

     வால குணங்கள் பயில் --- இளமைப் பருவத்திற்குரிய சேஷ்டைக் குணங்களில் பயிற்சியுள்ள,

     கோல பெதும்பையர்கள் உடன் உறவு ஆகி --- அழகிய பெண்களுடன் நட்பு கொண்டு,

     இக்கு ஆர் சரத்து --- கரும்பு வில்லினையும் அரிய மலர்க்கணைகளையுமுடைய,

     மதனுக்கு (ஏ-அசை) இளைத்து --- மன்மதனுடைய செயலால் மெலிந்து,

     வெகுவாக கலம்ப வகை பாடி --- அநேகமான வகைவகையாக கலம்பகம் முதலிய நூல்களை, (தனவந்தர் மீது) பாடிக்கொண்டு,

     புகழ்ந்து --- அம் மனிதர்களைப் புகழ்ந்து,

     பல திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி --- பல திசைகளிலும் திசை முடிவு வரை சென்று,

     மிக்க பொருள் தேடி --- நிரம்பவும் செல்வத்தை ஈட்டிக் கொணர்ந்து,

     சுகந்த அணை மீதில் துயின்று --- நல்ல வாசனை கமழும் மலர்ப்படுக்கையில் மேல் தூங்கி,

     சுகம் இட்ட ஆதரத்து உருகி --- சுகத்தைக் கொடுக்கும் மகளிரது அன்பினால் உருகி

     வட்டு ஆர் முலைக்குள் இடை மூழ்கி --- (போகமாதர்களது) இன்பத்தை நல்கும் வடிவமுடைய அருமையான தனங்களிடத்தில் தோய்ந்து இருந்து,

     கிடந்து --- செயலற்றுக் கிடந்து,

     மயலாகி --- மையல் மிகுந்து,

     துளைந்து --- அந்த அசுத்த போகங்களை அநுபவித்து,

     சில பிணி அது மூடி --- அதனால் சிற்சில நோய்கள் வந்து வருத்தஞ் செய்ய,

     சத்து ஆன புத்தி அது கெட்டு (ஏ-அசை) கிடக்க --- உண்மையை யறிவிக்கும் அறிவானது மயங்கி, யொழிந்து சடம்போல் கிடக்குந் தறுவாயில்,

     நமன் ஒடி தொடர்ந்து --- கூற்றுவான் ஓடிவந்து அடியேனைத் தொடர்ந்து,

     கயிறு ஆடிக்கொளும் பொழுது --- பாசக்யிற்றால் கட்டி உயிரைக் கொண்டுபோகும் போது,

     பெற்றார்கள் சுற்றி அழ --- தாய்தந்தையர் அடியேனைச் சூழ்ந்திருந்து வாய்விட்டு அலறவும்,

     உற்றார்கள் மெத்த அழ --- சுற்றத்தார்கள் மிகவும் புலம்பி அழவும்,

     ஊருக்கு அடங்கல் இலர் --- (அங்கு வந்தாரிற் சிலர்) இவர் ஊராருக்கு ஒருநாளும் அடங்கியதில்லை.

     காலற்கு அடங்க --- இயமனுக்கு இன்று அடங்குமாறு,

     உயிர் தக்காது --- இனி உயிர் நிலை பெறாது,

     இவர்க்கும் அயன் விதிப்படி இட்டான் --- இவருக்கு இவ்வாறு பிரமதேவர் இன்றோடு அழியும்படி விதித்திருக்கின்றார்.

     ஓலைப்பழம் படியினால் இற்று இறந்தது என - வழக்கம் போல, “இயமன் ஓலைவர இன்று இறந்து விட்டார்” என்று கூறவும்,

     எடும் என --- “சிலர் நாழிகையாயிற்று சுடலைக்கு எடுங்கள்” என்று கூறவும்,

     ஓடி சட்டா நவ பறைகள் கொட்ட --- (பெரிய மனிதன் இறந்தானென்று) ஓடி ஓடி திட்டப்பட்ட புதிய பறை வாத்தியங்களை வாசிக்கவும்,

     வரி சுடலை ஏகி --- நீண்ட ஈமதேயத்திற்குச் சென்று,

     சடம் பெரிது வேக புடம் சமைய இட்டு --- பெரிய உடலானது வெந்து நீறாகுவதற்கு வரட்டி முதலியவற்றை அடுக்கி,

     அனற்குள் எரிப்பட்டார் என தழுவி --- தீ வைத்துக் கொளுத்தி அந்நெருப்பில் “எரிந்து போனார்” என்று ஒருவரையொருவர் கட்டியழுது,

     நீரிற் படிந்து விடு பாசத்து அகன்று --- தண்ணீரில் முழுகியவுடன் என்மேலுள்ள அன்பு நீங்கி விடுகின்ற மனிதர்களிடத்துள்ள பந்த பாசத்தினின்று நீ்ங்கி,

     உனது சத்போத புதுமம் உற்று --- (ஏ-அசை) தேவரீரது உண்மை ஞானத்திற்கு உறைவிடமான திருவடித் தாமரைகளையே பற்றுக்கோடாக அடைந்து,

     தமிழ்க் கவிதை பேசி --- தேவரீருடைய திருப்புகழைத் தமிழ்ப் பாடல்களால் பாடி,

     பணிந்து உருகு நேசத்தை --- வணங்கி (அழலிடை மெழுகுபோல்) உருகி வழிபடுகின்ற, மெய்யன்பை,

     இன்று தர --- இன்றைக்கே அடியேனுக்கு வழங்கும் பொருட்டு,

     இனி வர வேணும் --- இனித் தாமதியாமல் வந்து அருள் புரிய வேண்டும்.

பொழிப்புரை


     தித்தா திரித்திகுட கிணங்கின் என்ற தாள வரிசைகளுடன் வாத்தியங்கள் முழங்க, ஒப்பற்ற மயில் புரவியின் மீது ஆரோகணித்து, திண்மையில் மிகுந்து தேர் ஊர்ந்து வரும் அவுணர்கள் இறந்து விழுமாறு போர் செய்து, ஏழுகடல் களையும் ஏழுகுலகிரிகளையும் பிளந்து வருகின்ற சித்தரே!

         தேவர்களுக்குள் சிறந்தவராக விளங்கும் தலைவரே!

         வள்ளிநாயகியாரது தனங்களிற் கலந்து, இன்பத் திருவிளையாடல்களைச் செய்து, பரிமளப் பொடிகளை அணிந்து கொண்டிருக்கிற பரிசுத்தம் உடையவரே!

         உமாதேவியாருக்கு ஒப்பற்ற முத்தைப் போல் தோன்றிய குருபர!

         குழந்தை வடிவெடுத்து விளையாடிக் கடப்பமலர் மாலையைத் தரித்துக் கொண்டிருக்கின்ற திருமார்பை உடையவரே!

         மிகுந்த மதங்களையுடைய யானைமுகத்துடன் கூடிய விநாயகமூர்த்திக்குத் தம்பியாக வந்த குகமூர்த்தியே!

         குற்றமே பெரிது உடைய இலங்கையில் தலைமை பூண்டு ஆட்சி புரிந்த மூடனாகிய இராவணன் முதலிய அவுணர்களது தலைகள் அற்றுக்கீழே விழுந்து உருளுமாறு கணைகளை விடுத்தவரும், நீலமேக வண்ணரும், மிகுந்த நறு மணத்துடன் கூடிய தாமரையைப் பீடமாகக் கொண்ட இலக்குமி தேவியை திருமார்பில் தரித்த ஸ்ரீரகு குல திலகமாகிய இராமபிரானுக்கு அன்புடைய மருகராக விளங்கி, குறையாததும் தேன் போல் இனியதுமாகிய கருணையுடன் வேதாகமங்களை உலகிற்கு உரைத்தருளி, சங்கப்புலவர்கள் கூறிய பொருளதிகார உரைகளை ஆராய்ந்து உரைத்து, புகழ் மாலைகளை அணிந்து கொண்ட குருமூர்த்தியே!

         உண்மைப் பொருள் ஈதென்று உபதேசித்து உயிர்கள் தோறும் உயிர்க்குயிராய் உள்ளும் புறமும் சூழ்ந்து ஒளி வடிவாக விளங்கி, துதி நூல்களை மாலையாக அணிந்துள்ள வேலாயுதத்தைத் தாங்கிய புயாசலங்களை உடையவரே! 

         புனுகு மணம் குறையாமல் கமழுகின்ற திருபழநிமலையில் விருப்பத்துடன் உறைந்து அடியார்களுடைய ஆவிக்கு நீங்காதிருந்து உலவி வருகின்ற பெருமையிற் சிறந்வரே!

         இந்த மண்ணுலகத்தில் மனித வித்தாக முளைத்து, கேவி அழுது தாய் மடிமீதில் இருந்து, பின் பூமியில் தவழ்ந்து தத்தா தனத்த தன என்று தளர் நடையிட்டு, தலைவாசலிலும் தெருவிலும் ஓடி விளையாடி, புதிய கோடிக்கணக்கான நூல்களைப் படித்து, பதினாறாட்டைப் பிராயத்தை அடைந்து, இளம் பருவத்தின் குணங்களுடன் கூடிய அழகிய பெண்களுடன் உறவு கொண்டு, கரும்பு வில்லும் மலர்க் கணைகளையுடைய மன்மதனுடைய செயலால் மனம் மெலிந்து, அநேக விதமான கலம்பகம் முதலிய நூல்களை மனிதர்கள் மீது பாடி, பல திசைகளிலும் திசை இறுதி வரை சென்று, நரத் துதி செய்து பொருள் சம்பாதித்துச் சுகத்தைக் கொடுக்கும் மகளிரது அன்பினால் உருகி, வட்டமான அழகிய தனபாரங்களிடத்தில் கலந்து அநுபவித்து அவசம் உற்றுக் கிடந்து, மயக்கம் அடைந்து இருந்து, அதனால் சில நோய்களையும் அடைந்து உண்மையை உணர்த்தும் அறிவு கெட்டுக் கிடக்கும் சமயத்தில், இயமன் ஓடிவந்து தொடர்ந்து பாசக் கயிற்றால் கட்டிப் பற்றும்போது பெற்றோரும் உற்றார்களும் சுற்றியிருந்து மிகவும் கதறிப் புலம்பி அழவும், சிலர் “இவர் ஊருக்கு ஒரு நாளும் அடங்காதவர்; இயமனுக்குத் தான் அடங்கினார்; இனி உயிர் நிற்காது. பிரமன் இப்படி விதித்தான் போலும்; வழக்கப்படி இயமன் ஓலை வந்து இன்று இறந்தனர்” என்று சொல்லவும், சிலர் “நேரமாகிறது; எடுங்கள்” என்று சொல்லவும், “பெரிய மனிதன் இறந்தான்” என்று ஓடி ஓடி நீட்டமுடன் புதிய பறைகளை வாசிக்கவும், நீண்ட சுடலையிற் கொண்டு போய் பெரிய உடல் வேகுவதற்குத் தக்கபடி விறகு வறட்டி இவற்றை அடுக்கி, அதில் உடலை வைத்துக் கொளுத்தி “வெந்து சாம்பலாகி விட்டார் என்று எல்லாரும் கூடி அழுது, பின் தண்ணீரில் முழுகி அன்பைத் துறந்து மறந்து விடுகின்ற மனிதர்களிடம் உள்ள பந்த பாசத்தினின்று நீங்கி, தேவரீருடைய உண்மை ஞானமாகிய திருவடித் தாமரைகளே தஞ்சம் என்று அடைந்து, உமது புகழைத் தமிழ்க் கவிகளால் பாடித் துதித்து, வணங்கி, தீ வாய்ப்பட்ட மெழுகுபோல் உருகி வழிபடுகின்ற, மெய்யன்பை அடியேனுக்கு வழங்கும் பொருட்டு, இனித் தாமதியாமல் இன்றைக்கே வந்து அருள் புரிவீர்.

விரிவுரை

மனு வித்தாய் முளைத்து ---

தந்தையிடமிருந்து தாயின் கருப்பை ஆகிய நிலத்தில் முளைத்து, வளர்ந்து, பயிராகி, உலகமாகிய பெருநிலத்தில் நாற்று நடப்பட்டு, இம் மனிதப்பயிர் விளைகின்றது. பெண் மயலாகிய கோடையால் வெதும்பி காம க்ரோத முதலிய களைகளால் மெலிந்து முத்திக் கதிர் தோன்றாமுன் சாவியாகிறது.

எருவாய் கருவாய் தனிலே யுருவாய்
    இதுவே பயிராய்            விளைவாகி”     --- திருப்புகழ்

ஆவிசாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே     --- (பேரவா) திருப்புகழ்
 
பெதும்பை ---

பதினாறு வயதுப் பெண்.

இக்கு ஆர்.........பிணியது மூடி ---

பதினாறு வயதை அடைந்து, ஆவி ஈடேறும் வழி தேடாமல், மன்மத பாணத்தால் மயங்கி, பரத்தையர் நட்புகொண்டு தாம் கற்ற கல்வியை இறைவன் திருவருள் நெறியில் உபபோகிக்காது, இன்று இருந்து நாளை அழியும் மனிதர்களிடம் போய், கொடாதவனைப் “பாரியே காரியே” என்றும் வலியிலானை, “விஜயனே விறல் வீமனே” யென்றும் பலவகையாக கலம்பகம் மடல் பரணி கோவை தூது முதலிய பிரபந்தங்களைப் பாடி, அவர்கள் தரும் பொருள்களைக் கொணர்ந்து நல்வழியில் செலவழிக்காமல் பரத்தையர்க் கீந்து, மகளிர் போகமே சுவர்க்க வாழ்வு என்று மயங்கிக் கிடந்து பிணிவாய்ப்பட்டு மடிகின்றதை சுவாமிகள் இதில் கண்டிக்கின்றார்.

நீரில் படிந்துவிடு பாசம் ---

எத்துணை எத்துணைச் சிறந்த அன்பைச் செலுத்தினோரும் முடிவில் உயிர் நீத்தவுடன் உடம்பைக் கொண்டு போய் சுடலையில் தீ வைத்து நீரில் மூழ்கி அவ்வன்பைத் துறந்து மறந்து நீங்குவர். இத்தகையோர் மீதுள்ள பாசத்தினின்று கழன்று இமைப்பொழுதும் நீங்காதான் இரு தாளில் அன்பைச் செலுத்தி, செந்தமிழ் மலர்களை அவன் திருவடிமலர்களில் சூட்டி வழிபடுமாறு உபதேசிக்கின்றார்.

சுபலீலைக் கதம்பமணி சுத்தா ---

வள்ளிநாயகியாரிடம் இறைவன் ஏனையோர் போன்று வாழாமல், பேரின்ப நிலையை யருளிப் பெருவிளையாடல் செய்தானாதலால் “சுத்தா” என்று விளித்தனர்.

தமிழ் சோதித்து ---

முருகவேள் உருத்திர சன்மராக வந்து சங்கப் பலகை மேல் வீற்றிருந்து இறையனாரகப் பொருளுக்கு நாற்பத்தொன்பான் புலவர்களும் கூறிய உரைகளில் உயர்வு தாழ்வுகளை ஆராய்ந்து சங்கப்புலவர் கலகந் தீர்த்தருளினார்.

ஏழேழுபேர்கள் கூறவரு பொருளதிகாரம்
 ஈடுஆய ஊமர்போல வணிகரில்
 ஊடுஆடி ஆலவாயில் விதிசெய்த
 லீலாவிசார தீர வரதர               குருநாதா”         --- (சீரான) திருப்புகழ்

ஆவிக்குள் நின்று உலவிவரு பெருமாள் ---

ஆன்மாக்களுடைய இதய குகையில் உயிர்க்குயிராய் இருந்து அருள்பவன் அவனே. ஆதலால் வேத வேதாந்தங்களில் அப்பரமபதியை “குகன்” என்று வியந்துரைக்கப்பட்டிருக்கிறது.

கருத்துரை

நிருதர் குலகால! வள்ளி கணவ! உமா சுத! கஜமுக அநுஜ! திருமால் மருக! புலவர் கலகம் தீர்த்த புராதன! வேலாயுத! பழநிக் குமர! உலகில் பிறந்து வளர்ந்து, கலை பயின்று, பொருள் தேடி, பெண் மையலில் வீழ்ந்து, பிணி வாய்ப்பட்டு, முடிவில் இறந்துபட்டு எரிக்கு இரையாகாமல், பாசம் நீங்கி தேவரீரை வழிப்பட்டு உய்யும் அன்பைத் தந்து அருளத் தாமதியாமல் வந்து அருள்வீர்.

                 

                 


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...