திருப் புன்கூர்





திருப் புன்கூர்

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         வைத்தீசுவரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவு உள்ளது; அதனுள் - அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனம் செல்லும்.

இறைவர்          : சிவலோகநாதர்.

இறைவியார்      : சொக்கநாயகி, சௌந்தர நாயகி.

தல மரம்          : புங்க மரம்.

தீர்த்தம்           : கணபதி தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் - முந்தி நின்ற வினைகள்
                                         2. அப்பர்   - பிறவாதே தோன்றிய
                                         3. சுந்தரர்  - அந்தணாளன் உன்


          புங்கு + ஊர் = புங்கூர் - புன்கூர் என்றாயிற்று.

          இங்குள்ள தீர்த்தம் விநாயகருடைய துணையால் நந்தனார் வெட்டியதாகும்.

          இத்தலத்திற்குரிய பன்னிருவேலி பெற்ற வரலாறு : தன் நாட்டில் பஞ்சம் நிலவியதால் இராசேந்திரசோழன் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபடின் மழை உண்டாகும் என்றருள, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி, சந்நிதியில் பாடி மழை செய்விக்குமாறு வேண்டினான். சுந்தரரும் மழைபெய்வித்தால் சுவாமிக்குப் பன்னிருவேலி நிலம் அளிக்குமாறு மன்னனுக்கு கட்டளையிட்டுப் பாடினார், மழைபெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை மிகுதியைக் கண்ட மன்னன், அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து நிறுத்துமாறு பாடியருள வேண்ட, அவரும் மேலும் பன்னிருவேலி, நிலம் கேட்க, மன்னனும் தர, சுந்தரரும் பாடியருள மழையும் நின்றது.

          திருப்புன்கூருக்கு வந்து சிவலோக நாதரைத் தரிசிக்க முயன்ற திருநாளைப்போவார் (நந்தனார்), தன் குலநிலையை எண்ணி வெளியிலிருந்து பார்க்க, நந்தி மறைத்திருப்பது கண்டு வருந்தினார். இறைவன் இவருடைய உள்ளப் பக்தியைக் கண்டு மகிழ்ந்து நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு பணித்தார். இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக் காணலாம். நந்தி விலகத் தரிசித்த நாளைப்போவார் கோயிலின் மேற்புறமுள்ள ரிஷப தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணித் தனக்குத் துணை யாரும் இல்லாததால் இறைவனை வேண்ட, இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார். அவர் துணையால் அத்தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்தினார். அதுவே கணபதிதீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார்.

          திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த திருத்தலம்.

          ஏயர்கோன் கலிக்காமர், சுந்தரருடன் வந்து தரிசித்த தலம்.

          சுந்தரர்பால் கோபங்கொண்ட விறன்மிண்ட நாயனார் (இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து) வழிபட்ட சிறப்புடைய தலம்.

          திருநாளைப்போவாரின் (நந்தனார்) ஊரான ஆதனூர் இத்தலத்திற்குப் பக்கத்தில் 5 கி.மீ. -ல் உள்ளது.

          உள்சுற்றில் இடப்பால் நந்தனார் திருவுருவம் உள்ளது.

          இங்குள்ள நந்தி (திருநாளைப்போவாருக்காக வழிவிட்டு) சற்று விலகியுள்ளது.

          இங்குள்ள சோமாஸ்கந்தர் - பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு - தரிசிக்கத்தக்கது.

          சூரியன், அக்கினி வழிபட்ட இலிங்கங்கள் கோயிலுள் உள்ளன.

          நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது; இப்பெருமான் பாதத்தில் தேவர் ஒருவர் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து இசை எழுப்புகின்றதைத் தரிசித்து இன்புறலாம்.

          சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள இரு துவாரபாலகர்களுள் தென்புறமுள்ள வடிவம் சற்றுத் தலையைச் சாய்த்து நந்தியை விலகியிருக்குமாறு கட்டளையிடுவது போலக் காட்சித் தருவது கண்டு மகிழத்தக்கது.

          மூலவர் சுயம்பு மூர்த்தி - மண்புற்று; இதன் மீது சார்த்தப்பட்டிருக்கும் குவளைக்குத்தான் நாடொறும் அபிஷேகம் நடைபெறுகின்றது.

          தேரடியில் நின்று தரிசித்த நந்தனாருக்கு, அத்தேரடியைப் புதுப்பித்துக் கோயில் கட்டப்பட்டுள்ளது.

          கல்வெட்டில் இவ்விறைவன், 'சிவலோகமுடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார்.

          இத்தலத்திற்கு பக்கத்தில் ஏயர்கோனின் அவதாரத் தலமாகிய 'பெருமங்கலம் ' உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஒன்றிக் கருப்புன்கூர் உள்ளக் கயவர் நயவாத் திருப்புன்கூர் மேவும் சிவனே" என்று போற்றி உள்ளார்.
  
திருநாளைப் போவார் நாயனார் வரலாறு

         சோழநாட்டின் ஒரு பகுதி மேற்கா நாடு. அந்நாட்டில் ஆதனூர் என்னும் ஒரு திருப்பதி. அத் திருப்பதியில் ஆதிதிராவிடர் மரபில் தோன்றியவர் நந்தனார் என்பவர்.  நந்தனார்க்கு மானிய நிலங்கள் இருந்தன. அவைகளின் விளைவு அவர்தம் வாழ்வுக்குப் பயன்பட்டு வந்தது.  சிவாலயங்களில் உள்ள பேரிகைக்குத் தோலும் வாரும், வீணைக்கும் யாழுக்கும் நரம்பும், சிவாரச்சனைக்குக் கோரோசனையும் அவரால் கொடுக்கப்பட்டு வந்தன. அவரது சிந்தை சிவன் கழலிலேயே சேர்ந்து நிற்கும். திருக்கோயில்களின் வாயில் புறத்தே நின்று ஆண்டவனைத் தொழுவது அப் பெரியாரது வழக்கம்.  தொழுகையில் அவருடைய நெஞ்சம் கசிந்து கசிந்து உருகும்,  கண்களில் நீர் சொரியும். அன்பால் அவர் மெய்ம்மறந்து ஆடுவார், பாடுவார்.

         திருப்புன்கூர்ச் சிவலோகநாதனைக் கண்டு பணிசெய்தல் வேண்டும் என்னும் வேட்கை நந்தானார்பால் எழுந்தது.  அவ் வேட்கையைத் தணிக்கை செய்ய அவர் திருப்புன்கூர் சென்றார்.  சென்று திருக்கோயில் வாயிலிலேயே நின்று, சிவபெருமானை நேரே கண்டு தொழ விரும்பினார். அன்பர்கள் விரும்புவதையே அருள் புரியும் சிவபெருமான், தம்முன் உள்ள இடபதேவரை விலகும்படி செய்து நந்தனாருக்குக் காட்சி தந்தருளினார்.  அடியவர் பெருமான் அன்புடன் பணிந்து ஆனந்தம் உற்றார்.  பின்னை அவ்விடத்தில், ஒரு பள்ளத்தைக் கண்டு, அதைப் பெரிய திருக்குளமாக வெட்டித் திருப்பணி செய்து தமது ஊருக்குத் திரும்பினார்.  அவர் வேறு பல திருத்தலங்களுக்கும் சென்று தமது வழித் தொண்டு செய்வார்.

         ஒருநாள் நந்தனாரது சிந்தை சிதம்பர தரிசனத்தின் மீது சென்றது. சென்ற அன்று இரவு முழுவதும் உறங்கினாரில்லை.  பொழுது புலர்ந்தது. சிதம்பரப் பித்து அவரை விட்டு அகலவில்லை. அவர் தில்லையை நினைந்து நினைந்து, "அந்தோ, தில்லைக்குச் சென்றாலும், திருக்கோயிலுள் புகுந்து திருக்கூத்தைக் காணும் பேறு இந்த இழிகுலத்துக்கு இல்லையே" என்று வருந்துவார். மேலும் மேலும் காதல் எழுதலால், "நாளைப் போவேன், நாளைப் போவேன்" என்று சொல்வார்.  இவ்வாறு நாள் பல கழிந்தன. ஒரு நாள், திருநாளைப் போவார் உறுதி கொண்டு தில்லை நோக்கிச் சென்று திரு எல்லையை அடைந்தார்.

         அங்கே அவர், அந்தணர்கள் யாகசாலைகளையும், வேதம் ஓதும் இடங்களையும், மடங்களையும் பிறவற்றையும் கண்டார்.  அஞ்சினார். அஞ்சித் திரு எல்லையை மட்டும் இரவு பகல் வலம் வருவார் ஆயினார். செய்து, ஒருநாள், "உள் நுழைவிற்கு இப்பிறவி தடையாக நிற்கிறதே, எந்த வழியில் திருக்கூத்தைக் கண்டு தொழுவது" என்று நினைந்து, நினைந்து, மனம் நொந்து நொந்து உறங்கிவிட்டார். அன்பர் உள்ளம் கோயில் கொண்டு தில்லையம்பல வாணன், நந்தனார் கனவில் தோன்றிப் புன்முறுவல் செய்து, "இப் பிறவி ஒழிய நீ நெருப்பில் மூழ்கி வேதியர்களுடன் நம் முன் அணைவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினான். மேலும் தொடர்ந்து, தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றித் திருநாளைப் போவார் நிலையை அவர்களுக்கு உணர்த்தி, எரி அமைக்குமாறு பணித்து அருளினான்.

         அந்தணர் பெருமக்கள் விழித்து எழுந்து, அச்சத்துடன் ஆலயத்திலே ஒருங்கு சேர்ந்து, ஆண்டவன் கட்டளையை நிறைவேற்ற உறுதிகொண்டு, திருநாளைப் போவாரிடம் சேர்ந்தார்கள்.  சென்று, "ஐயரே ஆண்டவன் ஆணைப்படி இங்கே வந்தோம், உம்பொருட்டு எரி அமைக்கப் போகிறோம்" என்றார்கள்.  திருநாளைப் போவார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று ஆண்டவன் திருவருளைப் போற்றினார்.

         அந்தணர்கள் தென்மதில் புறத்துத் திருவாயிலின் முன் தீ வளர்த்து, அதைத் திருநாளைப் போவார்க்குத் தெரிவித்தார்கள்.  திருநாளைப் போவார் தீக்குழியை அடைந்து, இறைவன் திருவடியை மனம் கொண்டு, அதை வலம் வந்து நெருப்பில் மூழ்கினார். முழுகியதும், அவர்தம் மாயப் பொய் உடல் ஒழிந்தது. அவர் புண்ணியப் பொன்மேனி திகழும் முனிவராய்ப் பூணூலும், சடைமுடியும் பொலிய எழுந்தார். அதுகண்டு அமரர்கள் மலர்மாரி சொரிந்தார்கள். அந்தணர்கள் கைகூப்பித் தொழுதார்கள். அடியவர்கள் மகிழ்வெய்தினார்கள்.

         திருநாளைப் போவார், தில்லைவாழ் அந்தணர் முதலியவருடன் சென்று திருக்கோபுரத்தைக் கண்டு தொழுது பொன்னம்பலம் புகுந்தார். புகுந்ததும் அவர்தம் திருவுருவம் மறையவர்கட்கும் மற்றவர்கட்கும் புலப்படவில்லை.  எல்லாரும் அதிசயித்தனர்.  தில்லையம்பல வாணப் பெருமான் திருநாளைப் போவார்க்குத் திருவடிப் பேறு அருளினார்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் வரலாறு

         சோழநாட்டில் திருப்புன்கூர் என்னும் திருத்தலத்திற்கு அருகில் திருப்பெருமங்கலம் என்று ஒரு ஊர். அவ் ஊரில் வேளாண் மரபில் ஏயர்குடியில் தோன்றியவர் கலிக்காமர்.

         சோழ மன்னனிடத்தில் சேனைத் தலைவராய் அமர்ந்திருந்தார். அது அவருடைய பரம்பரைத் தொழிலாகும்.  திருப்புன்கூர் என்னும் தலத்திற்கும், கலிக்காமருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அத் திருப்பதியில் அவரால் பல திருப்பணிகள் செய்யப்பட்டன.

         சுந்தரமூர்த்தி சுவாமிகள் தியாகேசப் பெருமானைப் பரவையார்பால் தூது விட்ட செய்தி கலிக்காமருக்கு எட்டியது.  எட்டவே, அவர் வெம்பி வெம்பி வீழ்ந்தார். துன்பத்தில் ஆழ்ந்தார். "ஆண்டவனை அடியான் தூது விடுவதா? நல்லது, நல்லது" என்பார். "இச் செயலுக்குத் துணிந்தவனும் ஒரு தொண்டனா? இக் கொடுமை கேட்டும் என் ஆவி சோரவில்லையே" என்பார். "ஒரு பெண்ணின் பொருட்டா ஆண்டவனைத் தூது விடுவது? ஆண்டவன் இசைந்தாலும், அவனைத் தூதுக்கு ஏவலாமோ? ஓர் இரவு முழுவதும் ஐயன் தூதனாக உழன்றானாம், என்ன கொடுமை?" என்பார். "இக் கொடுமைக்கு மனம் கம்பியாத ஒருவனைக் காணும் நாள் எந்நாளோ? அவனைக் காண நேர்ந்தால் என்ன விளையுமோ?" என்பார்.  இவ்வாறு கலிக்காமர் மனம் நொந்து கிடந்தார்.

         கலிக்காமர் நிலை வன்தொண்டருக்குத் தெரிய வந்தது. இதனை வன்தொண்டர் ஆண்டவனிடம் முறையிட்டுக் கொண்டு இருந்தார். சிவபெருமான் இருவரையும் ஒருமைப்படுத்தத் திருவுள்ளம் கொண்டார். கலிக்காமர்பால் சூலை நோயை ஏவினார். அந்நோய் நாயனாரைப் பற்றி, முடுக்கிக் குடைந்தது.  நாயனார், சிவபெருமானை நினைந்து, நினைந்து, உருகினார். போற்றினார்.  சிவபெருமானம் கலிக்காமர் முன்னே தோன்றி, "அன்பனே! இந் நோய் எவராலும் தீராது.  இதைத் தீர்க்க வல்லான் ஒருவனே. அவன் வன்தொண்டன்" என்றார்.  என்றதும், நாயனார், சிவபெருமானைப் பார்த்து "எம்பிரானே! அடிகளுக்கு வழிவழித் தொண்டு செய்யும் மரபில் தோன்றியவன் நான்.  வன்தொண்டனோ புதிதாக அடிமைப்பட்டவன். அவனா என் நோயைத் தீர்க்க வல்லான்?  நோயால் வருந்துவதே எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

         உடனே சிவபெருமான் வன்தொண்டர்பால் ஏகி, "தோழனே! கலிக்காமர் சூலை நோயால் பீடிக்கப்பட்டு வருந்துகிறார். அது நமது ஏலவால் நேர்ந்தது. நீ அவனிடம் சென்று அவன் நோயைத் தீர்ப்பாயாக" என்று அருளினார். வன்தொண்டருக்கு மகிழ்ச்சி பொங்கித் ததும்பி வழிந்தது. அவர், தாம் சூலை நோயைத் தீர்க்க வருவதைக் கலிக்காமருக்குத் தெரிவித்துப் புறப்பட்டார்.

         கலிக்காமர், "பெண் பொருட்டு ஆண்டவனைத் தூது விட்ட ஒருவனா இங்கு வருகிறான்? அவன் வந்து நோயைத் தீர்த்தற்கு முன்னர், என் வயிற்றைக் கிழித்துக் கொள்வேன்" என்று உடைவாளை எடுத்தார். எண்ணியவாறே செய்து கொண்டார். 

         இக் காட்சியைக் கண்ட நாயனார் மனைவியார், தாமும் உயிர் துறக்கத் துணிந்தார். அவ் வேளையில் சிலர் வந்து, "வன்தொண்டர் வருகிறார்" என்று சொன்னார்கள். அம்மையார் திடுக்கிட்டார். அங்கே அழுது கொண்டிருந்தவர்களைப் பார்த்து, "அழாதேயுங்கள்" என்று கட்டளை இட்டார். சுவாமிகளை எதிர்கொள்ளுமாறு அங்கிருந்தவர்களை ஏவினார். அவர்கள் அவ்வாறே சென்று சுவாமிகளை எதிர்கொண்டனர்.  சுவாமிகள் கலிக்காமர் இல்லம் போந்தார். அங்கே இடப்பட்டு இருந்த பீடத்தில் அமர்ந்தார். அவருக்கு அருச்சனை முதலியவைகள் செய்யப்பட்டன. அவர்களைத் தம்பிரான் தோழர் ஏற்று, "கலிக்காமர் ஏங்கே? அவருக்கு உற்ற நோயைத் தீர்த்து, அவரோடு நான் இருத்தல் வேண்டும்" என்று கேட்டார்.

         அம்மையார் ஏவலாளர்களை அழைத்து, "நாயனார்க்குக் கெடுதி ஒன்றும் இல்லை. அவர் உள்ளே உறங்குகிறார் என்று வன்தொண்டருக்குச் சொல்லுங்கள்" என்றார். ஏவலாளர்கள், அவ்வாறே வன்தொண்டருக்கு அறிவித்தனர். அதற்கு வன்தொண்டப் பெருமான், "நாயனாருக்குத் தீங்கு இல்லையாயினும், என் மனத்திற்குத் தெளிவு ஏற்படல் வேண்டும்" என்றார். மேலும் மேலும் பெருமான் தம் கருத்தை வலியுறுத்தினார். ஏவலாளர்களுக்கு ஒன்றும் தோன்றவில்லை.  அவர்கள் வன்தொண்டருக்குக் கலிக்காமரைக் காட்டினார்கள்.

         வன்தொண்டப் பெருமான் நாயனாரைப் பார்த்தார். அவர் தம் நிலையை உணர்ந்தார். உணர்ந்ததும், "நானும் உயிர் துறப்பேன்" என்று உடை வாளை எடுத்தார்.  அப்பொழுதே, ஆண்டவன் அருளால் கலிக்காமர் உயிர்பெற்று எழுந்தார். எழுந்ததும், "அந்தோ! கெட்டேன்" என்று விரைந்து போய்ச் சுவாமிகள் கையில் இருந்த வாளைப் பற்றினார். வன்தொண்டப் பெருமான் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். நாயனாரும் சுவாமிகளை வணங்கினார். அன்று தொட்டு இருவரும் கெழுதகை நண்பர்  ஆயினர்.

         இருவரும் திருப்புன்கூருக்குப் போய்த் திருவாரூரை அடைந்து, ஆண்டவனை வழிபட்டுக் கொண்டு இருந்தனர்.  சிலநாள் கழிந்த பின்னர், கலிக்காம நாயனார் விடைபெற்றுக் கொண்டு தமது பதியைச் சேர்ந்தார்.  நாயனார் அங்கே திருத்தொண்டுகள் பல செய்து ஆண்டவன் திருவடி நீழலை அடைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 287
நீடு திருநின்றி யூரின் நிமலர்தம் நீள்கழல் ஏத்தி,
கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு, வண்தமிழ் கூறி,
நாடுசீர் நீடூர் வணங்கி, நம்பர்திருப் புன்கூர் நண்ணி,
ஆடிய பாதம் இறைஞ்சி, அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.

         பொழிப்புரை : திரு என்றும் நிலைபெற்றிருக்கும் திருநின்றியூரில் இறைவரின் பெருமைமிக்க திருவடிகளைப் போற்றி மிக்க பத்திமையுடன் வணங்கிக் கும்பிட்டு, வளமையான திருப்பதிகத்தைப் பாடி அருளி, நாளும் சிறப்புடைய திருநீடூரை வணங்கி, இறைவரின் திருப்புன்கூரை அடைந்து, அருட்கூத்து இயற்றும் திருவடிகளை வணங்கி, அருந்தமிழ்ப் பதிகம் பாடி ஆங்கே விருப்பத்துடன் வதிந்தருளினார்.

         குறிப்புரை : திருநின்றியூரில் பாடிய பதிகம், `சூலம்படை' (தி.1 ப.18) என்று தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருநீடூரில் சுந்தரர் பதிகம் ஒன்றே உள்ளது.

         திருப்புன்கூரில் அருளிய பதிகம், `முந்தி நின்ற' (தி.1 ப.27) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


1. 027   திருப்புன்கூர்                     பண் – தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
முந்தி நின்ற வினைகள் அவைபோகச்
சிந்தி நெஞ்சே, சிவனார் திருப்புன்கூர்,
அந்தம் இல்லா அடிகள் அவர்போலும்,
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.

         பொழிப்புரை :நெஞ்சே! பல பிறவிகளிலும் செய்தனவாய சஞ்சித, ஆகாமிய வினைகளுள் பக்குவப்பட்டுப் பிராரத்த வினையாய்ப் புசிப்பிற்கு முற்பட்டு நின்ற வினைகள் பலவும் நீங்க, திருப்புன்கூரில் ஆதி அந்தம் இல்லாத தலைவராய், மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி உடையவராய் எழுந்தருளிய சிவ பிரானாரைச் சிந்தனை செய்வாயாக.


பாடல் எண் : 2
மூவர் ஆய முதல்வர், முறையாலே
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர்,
ஆவர் என்னும் அடிகள் அவர்போலும்,
ஏவின் அல்லார் எயில்மூன்று எரித்தாரே.

         பொழிப்புரை :பகைமை பூண்டவராய அசுரர்களின் மூன்று அரண்களைக் கணையொன்றால் எரித்தழித்த இறைவர், பிரமன் மால் உருத்திரன் ஆகிய மூவராயும், அவர்களுக்கு முதல்வராயும், தேவர்கள் எல்லோரும் முறையாக வந்து வணங்குபவராயும் விளங்கும் திருப்புன்கூரில் எழுந்தருளிய அடிகள் ஆவர்.


பாடல் எண் : 3
பங்க யம்கண் மலரும் பழனத்துச்
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்,
கங்கை தங்கு சடையார் அவர்போலும்,
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

         பொழிப்புரை :எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும் இறைவர், தாமரை மலர்கள் மலரும் வயல்களில் சிவந்த கயல் மீன்கள் திளைத்து மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள கங்கை தங்கிய சடை முடியினராகிய சிவபெருமானாராவர்.


பாடல் எண் : 4
கரைஉ லாவு கதிர்மா மணிமுத்தம்
திரைஉ லாவு வயல்சூழ் திருப்புன்கூர்,
உரையின் நல்ல பெருமான் அவர்போலும்,
விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே.

         பொழிப்புரை :மணத்தால் மேம்பட்ட தாமரைமலர் போலும் சிவந்த திருவடிகளை உடைய இறைவர், ஒளி பொருந்திய சிறந்த மாணிக்கங்கள் கரைகளில் திகழ்வதும், முத்துக்கள் நீர்த்திரைகளில் உலாவுவதும் ஆகிய வளம்மிக்க வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளிய புகழ்மிக்க நல்ல பெருமானாராவார்.


பாடல் எண் : 5
பவள வண்ணப் பரிசுஆர் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்,
அழகர் என்னும் அடிகள் அவர்போலும்,
புகழ நின்ற புரிபுன் சடையாரே.

         பொழிப்புரை :உலகோர் புகழ நிலை பெற்ற, முறுக்கிய சிவந்த சடை முடியை உடைய இறைவர், பவளம் போலும் தமது திருமேனியின் செவ்வண்ணம் திகழுமாறு திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகளாவார்.

  
பாடல் எண் : 6
தெரிந்து இலங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்,
பொருந்தி நின்ற அடிகள் அவர்போலும்
விரிந்து இலங்கு சடைவெண் பிறையாரே.

         பொழிப்புரை :விரிந்து விளங்கும் சடைமுடியில் வெண்பிறை அணிந்த இறைவர், கண்களுக்குப் புலனாய் அழகோடு திகழும் செங்கழுநீர் மலர்ந்த வயல்களாலும், செந்நெற் கதிர்கள் அழகோடு நிறைந்து நிற்கும் வயல்களாலும் சூழப்பெற்ற திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள அடிகள் ஆவார்.


பாடல் எண் : 7
பாரும் விண்ணும் பரவித் தொழுதுஏத்தும்
தேர்கொள் வீதி விழவுஆர் திருப்புன்கூர்,
ஆர நின்ற அடிகள் அவர்போலும்,
கூர நின்ற எயில்மூன்று எரித்தாரே.

         பொழிப்புரை :கொடியனவாய்த் தோன்றி இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்தழித்த இறைவர், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் பரவித் தொழுதேத்துமாறு தேரோடும் திருவீதிகளை உடையதும், எந்நாளும் திருவிழாக்களால் சிறந்து திகழ்வதுமான திருப்புன்கூரில் பொருந்தி நின்ற அடிகளாவார்.


பாடல் எண் : 8
மலைஅ தனார் உடைய மதில்மூன்றும்
சிலை அதனால் எரித்தார், திருப்புன்கூர்த்
தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை
மலைஅ தனால் அடர்த்து மகிழ்ந்தாரே.

         பொழிப்புரை :வலிமை பொருந்திய இராவணன் செருக்கைப் போக்க, அவனைக் கயிலை மலையாலே அடர்த்துப்பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் வழங்கிய இறைவர், தேவர்களோடு சண்டையிட்டு அவர்களை அழிக்கும் குணம் உடையவராய அசுரர்களின் முப்புரங்களை வில்லால் எரித்தழித்தவராகிய திருப்புன்கூர்த் தலைவர் ஆவார்.


பாடல் எண் : 9
நாட வல்ல மலரான் மாலுமாய்த்
தேட நின்றார், உறையும் திருப்புன்கூர்,
ஆட வல்ல அடிகள் அவர்போலும்,
பாடல் ஆடல் பயிலும் பரமரே.

         பொழிப்புரை :பாடல் ஆடல் ஆகிய இரண்டிலும் வல்லவராய் அவற்றைப் பழகும் மேலான இறைவர், எதனையும் ஆராய்ந்தறிதலில் வல்ல நான்முகனும், திருமாலும் தேடி அறிய இயலாதவராய் ஓங்கி நின்றவர். அப்பெருமான் திருப்புன்கூரில் உறையும் ஆடல்வல்ல அடிகள் ஆவார்.


பாடல் எண் : 10
குண்டு முற்றி, கூறை இன்றியே
பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல்கொளேல்,
வண்டு பாட மலர்ஆர் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின், கபாலி வேடமே.

         பொழிப்புரை :கீழாந்தன்மை மிகுந்து ஆடையின்றி வீதிகளில் வந்து பிச்சை கேட்டுப் பெற்று, அவ்வுணவை விழுங்கி வாழும் மயக்க அறிவினராகிய சமணர்கள் கூறும் சொற்களைக் கேளாதீர். தேனுண்ண வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள் நிறைந்து விளங்கும் திருப்புன்கூர் சென்று அங்கு விளங்கும் கபாலியாகிய சிவபிரானின் வடிவத்தைக் கண்டு தொழுவீர்களாக.


பாடல் எண் : 11
மாட மல்கு மதில்சூழ் காழிமன்,
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்,
நாட வல்ல ஞான சம்பந்தன்,
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.

         பொழிப்புரை :மாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன், பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக.

                                             திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 189
ஆண்டஅரசு எழுந்தருள, கோலக் காவை
         அவரோடும் சென்றுஇறைஞ்சி, அன்பு கொண்டு
மீண்டுஅருளி னார்அவரும், விடைகொண் டிப்பால்
         வேதநா யகர்விரும்பும் பதிகள் ஆன
நீண்டகருப் பறியலூர், புன்கூர், நீடூர்,
         நீடுதிருக் குறுக்கை,திரு நின்றி யூரும்,
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணி,
         கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய பெருமைமிக்க திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்செல்பவராய்.

         குறிப்புரை : திருக்கோலக்காவில் அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.    
        
         அடுத்து இருக்கும் திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.

         திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன.
1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை;
2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை.

இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன.

         திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம்.

         திருநனிபள்ளியில் அருளிய பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.

         இனி, இப்பாடற்கண் நனிபள்ளி முதலா நண்ணி என வருதலின் வேறு பிற பதிகளும் தொழுது சென்றமை விளங்குகின்றது. அப்பதிகளும் பாடியருளிய பதிகங்களும்:

1.    திருக்குரக்குக்கா: `மரக்கொக்காம்` (தி.5 ப.75) – திருக்குறுந்தொகை.
2.     புள்ளிருக்கு வேளூர்: (அ). `வெள்ளெருக்கு` (தி.5 ப.79) - திருக்குறுந்தொகை; (ஆ). `ஆண்டானை` (தி.6 ப.54) - திருத்தாண்டகம்.
3.    திருவெண்காடு: (அ). `பண்காட்டி` (தி.5 ப.49) - திருக்குறுந்தொகை (ஆ). `தூண்டுசுடர்` (தி.6 ப.35) - திருத்தாண்டகம்.
4.    திருச்சாய்க்காடு: (அ) `தோடுலாமலர்` (தி.4 ப.65) - திருநேரிசை. (ஆ). `வானத்து இளமதியும்` (தி.6 ப.82) - திருத்தாண்டகம்.
5.     திருவலம்புரம்: (அ). `தெண்டிரை` (தி.4 ப.55) - திருநேரிசை (ஆ). `மண்ணளந்த` (தி.6 ப.58) - திருத்தாண்டகம்.



                           6. 011    திருப்புன்கூரும் திருநீடூரும்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
         பேணாதார் அவர்தம்மைப் பேணா தானை,
துறவாதே கட்டுஅறுத்த சோதி யானை,
         தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் தன்னை,
திறம்ஆய எத்திசையும் தானே ஆகி,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நிறமாம் ஒளியானை, நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :பிற பொருள்களின் கூட்டத்தால் பிறவாது எம் பெருமான் தானே தன் விருப்பத்தால் வடிவங்கொள்பவன். தன்னை விரும்பாதவர்களைத் தானும் விரும்பி உதவாதவன். இயல்பாகவே பந்தங்களின் தொடர்பு இல்லாத ஞான வடிவினன். தூய நன்னெறியில் ஒழுகுவதற்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகுக்கப்பட்ட எத்திசைக் கண்ணும் தானே பரவியிருப்பவன். திருப்புன்கூரை உகந்தருளியிருக்கும் அச்சிவலோகநாதனே நீடூரிலும் உகந்திருப்பவன். அத்தகைய செந்நிறச் சோதி உருவினைக் கீழ் மகனாகிய அடியேன் விருப்புற்று நினையாமல் இந்நாள் காறும் வாளா இருந்த செயல் இரங்கத்தக்கது.

பாடல் எண் : 2
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னை,
         பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை,
நன்றாங்கு அறிந்தவர்க்குந் தானே ஆகி
         நல்வினையுந் தீவினையும் ஆனான் தன்னை,
சென்றுஓங்கி விண்ணளவுந் தீ ஆனானை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நின்றாய நீடூர் நிலாவி னானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :எதிர்காலமும் இறந்தகாலமும் ஆகியவன். தன்னிடம் பெருவிருப்புடைய அடியார்பக்கல், தானும் பெருவிருப் புடையவன். நல்வினையும் தீவினையும் செய்தவர்களுக்கு அவரவர் வினைகளுக்கு ஏற்பப்பயன்களை வழங்குபவன். வானளாவிய தீப்பிழம்பு வடிவானவன். திருப்புன்கூரை உகந்தருளிய அப் பெருமான் நீடூரிலும் நிலையாக உறைந்திருக்கின்றான். அப்பெருமானை நீசனேன் நினையாவாறு என்னே!


பாடல் எண் : 3
இல்லானை, எவ்விடத்தும் உள்ளான் தன்னை,
         இனிய நினையாதார்க்கு இன்னா தானை,
வல்லானை வல்லடைந்தார்க்கு அருளும் வண்ணம்,
         மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டா தானை,
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நெல்லால் விளைகழனி நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.
         பொழிப்புரை :எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன். நல்லனவே நினையாதவர்களுக்குத் தான் இனியன் அல்லன். தன்னை விரைந்து சரண்புக்கவர்களுக்குத் தான் அருளுவதில் வல்லவன். ஓரிடம் விட்டு மற்றோரிடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான், தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்தருளியிருப்பவன். அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 4
கலைஞானங் கல்லாமே கற்பித் தானை,
         கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னை,
பலவாய வேடங்கள் தானே யாகி,
         பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை,
சிலையால் புரம்எரித்த தீயாடியை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நிலையார் மணிமாட நீடு ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

                  பொழிப்புரை :கலைஞானத்தை முயன்று கற்றல் வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவன். கொடிய நரகத்தை அடையாதபடி காப்பவன். பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி ஆங்காங்கே உறைபவன். வில்லால் திரிபுரங்களை எரித்தவன். தீயின்கண் கூத்து நிகழ்த்துபவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்தருளியவன். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 5
நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை,
         நுணுகாதே யாதுஒன்றும் நுணுகி னானை,
ஆக்காதே யாதுஒன்றும் ஆக்கி னானை,
         அணுகாதார் அவர்தம்மை அணுகா தானை,
தேக்காதே தெண்கடல்நஞ்சு உண்டான் தன்னை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நீக்காத பேரொளிசேர் நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :கருவிகளால் அன்றித் தன் நினைவினாலேயே எல்லாப் பொருள்களையும் படைத்துக் காத்து அழிப்பவன். நுண்ணிய பொருள்களிலும் நுண்ணியனாக இயல்பாகவே கலந்திருப்பவன். கருவிகள் கொண்டு படைக்காமல் எல்லாப் பொருள்களையும் தன் நினைவினாலேயே தோற்றுவிப்பவன். தன்னை நெருங்காதவர்களுக்கு அருள் செய்தற்கண் ஈடுபடாதவன். தடுக்காமல் கடல் விடத்தை உண்டவன். அத்தகைய திருப்புன்கூர் மேவிய சிவலோகன் நீக்குதற்கரிய மிக்க பொலிவை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 6
பூண்அலாப் பூணானை, பூசாச் சாந்தம்
         உடையானை, முடைநாறும் புன்க லத்தில்
ஊண்அலா ஊணானை, ஒருவர் காணா
         உத்தமனை, ஒளிதிகழும் மேனி யானை,
சேண்உலாம் செழும்பவளக் குன்றுஒப் பானை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நீணுலா மலர்க்கழனி நீடு ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :மற்றவர் அணியக் கருதாத பாம்புகளை அணிகளாகப் பூணுபவன். மற்றவர்கள் பூசிக்கொள்ள விரும்பாத சாம்பலைச் சந்தனம் போலப் பூசிக்கொள்பவன். புலால் நாறும் மண்டையோடாகிய இழிந்த உண்கலத்தில் உண்ணலாகாத பிச்சை எடுத்த ஊணினை உண்பவன். இவையாவும் தன்பொருட்டன்றிப் பிறர் பொருட்டேயாக, இவற்றின் காரணத்தை மற்றவர் காணமாட்டாத வகையில் செயற்படும் மேம்பட்டவன். இச்செயல்களால் ஒளிமிக்குத் தோன்றும் திருமேனியை உடையவன். மிக உயர்ந்த மேம்பட்ட பவள மலையை ஒப்பவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் மிகுதியாகக் காணப்படுகின்ற மலர்களை உடைய வயல்கள் பொருந்திய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 7
உரைஆர் பொருளுக்கு உலப்பு இலானை,
         ஒழியாமே எவ்வுருவும் ஆனான் தன்னை,
புரையாய்க் கனமாய் ஆழ்ந்து ஆழா தானை,
         புதியனவு மாய்மிகவும் பழையான் தன்னை,
திரையார் புனல்சேர் மகுடத் தானை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நிரையார் மணிமாட நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :சொற்பொருளுக்கு அப்பாற்பட்டவன். எல்லா உருவங்களிலும் நீங்காது உடன் உறைபவன். நீரில் ஆழாத உட்டுளை உடைய நொய்ய பொருள்களாகவும் நீரில் ஆழும் கனமான பொருள்களாகவும் உள்ளவன். மிகவும் பழைமையாகிய தான் புதியவனாகவும் இருப்பவன். அலைகள் நிறைந்த கங்கையைத் தலையில் சூடியவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் வரிசையான அழகிய மாடிவீடுகளை உடைய நீடூரானும் ஆவான். நீசனேன் அவனை நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 8
கூர்அரவத்து அணையானும் குளிர்தண் பொய்கை
         மலரவனும் கூடிச்சென்று அறிய மாட்டார்,
ஆர்ஒருவரு அவர்தன்மை அறிவார் தேவர்,
         அறிவோம் என் பார்க்குஎல்லாம் அறிய லாகாச்
சீர்அரவக் கழலானை, நிழல்ஆர் சோலைத்
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நீர்அரவத் தண்கழனி நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :மேம்பட்ட ஆதிசேடனைப் படுக்கையாக உடைய திருமாலும், குளிர்ந்த பொய்கையில் தோன்றும் தாமரையை இருப்பிடமாக உடைய பிரமனும் ஆகிய இருவரும் காண முயன்றும் அறியமாட்டாத அப்பெருமான் இயல்பினை யாவர் உள்ளவாறு அறிய இயலும்? அவனை அறிவோம் என்று நினைக்கும் தேவர்களுக்கும் உண்மையில் அறிய முடியாதவனாய் ஒலிக்கும் அழகிய வீரக்கழலை அணிந்த அப்பெருமான் நிழல் தரும் சோலைகள் உடைய திருப்புன் கூரை மேவியவன். அவனே நீர் பாயும் ஓசையை உடைய குளிர்ந்த வயல்களை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் பண்டு நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 9
கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
         கால்நிமிர்த்து நின்றுஉண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்கு,
         புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன்,
செய்யெலாம் செழுங்கமலப் பழன வேலித்
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நெய்தல்வாய்ப் புனல்படப்பை நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :கைகளிலிருந்து நெய் கீழே சொட்டுதலால் அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாதே கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமல் இருப்பதற்குக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்ணும் கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய் உரைகளாகக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத்தீங்கில் நின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்த அடியேன், வயல்களில் செழிப்பான தாமரைகள் களைகளாகத் தோன்றும் நன்செய் நிலங்களை எல்லையாக உடைய திருப்புன்கூர் சிவலோகநாதன் என்ற பெயரில் உகந்தருளியிருப்பவனாய், கடற்கரைப் பகுதியில் நீர்வளம் உடைய மனைக்கொல்லைகளை உடைய நீடூரிலும் உகந்து தங்கியிருக்கும் அப்பெருமானை, நினையாத கீழ்மகனாய் அடியேன் இருந்தவாறு இரங்கத்தக்கது.


பாடல் எண் : 10
இகழுமாறு எங்ஙனே, ஏழை நெஞ்சே,
         இகழாது பரந்துஒன்றாய் நின்றான் தன்னை,
நகழமால் வரைக்கீழ்இட்டு அரக்கர் கோனை
         நலன்அழித்து நன்குஅருளிச் செய்தான் தன்னை,
திகழுமா மதகரியின் உரிபோர்த் தானை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நிகழுமா வல்லானை, நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :யாதொரு பொருளையும் புறக்கணிக்காது அவற்றிலெல்லாம் உடனாய் இருப்பவன் எம்பெருமான். அவன் இராவணனைக் கயிலை மலையின் அடியில் இட்டு வருந்தச் செய்து அவன் வலிமையைக் குலைத்துப் பின் அவனுக்கு நல்லனவாகிய வாளும் நாளும் வழங்கியவன். மதத்தால் விளங்கிய யானையின் தோலைப் போர்த்தியவன். அவனே திருப்புன்கூர் மேவிய சிவலோக நாதன். தன் விருப்பப்படியே செயற்படவல்ல அப்பெருமான் நீடூரிலும் உகந்தருளியுள்ளான். `அறிவில்லாத மனமே! அப்பெருமானைக் கீழ்மகனாகிய யான் நினையாத செயலே இரங்கத்தக்கது. அவ்வாறாக நீயும் இகழும் செயல் எவ்வாறு ஏற்பட்டது?`

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         திருவாரூரில் சுவாமிகள், புற்றிடங்கொண்டாரைப் பரவையாரிடம் தூதாக அனுப்பிய செய்தி கேட்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார், அவர்பால் சினம் கொண்டிருந்தார். சுவாமிகள் அதை அறிந்து, தம் பிழையை உடன்பட்டுப் பெருமானிடம் நாள்தோறும் விண்ணப்பித்து வந்தார். பெருமானும் இருவரையும் மனம் ஒன்றச் செய்பவராய், ஏயர்கோன் கலிக்காமருக்குச் சூலை நோயருளி, அவரிடம் "உன்னை வருத்தும் சூலை வன்தொண்டன் தீர்க்கில் அன்றித் தீராது" என்று அருளினார். கலிக்காமரும், "வழிவழியாகத் திருவடிபற்றி நின்று வாழ்கின்ற என்னை வருத்தும் சூலை வன்தொண்டன் தீர்ப்பதினும், தீராமலே என்னை வருத்துதலே நன்றாகும்" என்றார். பெருமான் வன்தொண்டர்பால் சென்று, "நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாயாக" என்றருளினார். நம்பி ஆரூரர் தாமும் விரைந்து செல்பவராய், கலிக்காமருக்கு வருதிறம் செப்பிவிட்டார்.
         கலிக்காமரும், ஆரூரரின் வரவு கேட்டு, 'அவர் வருவதன்முன், நீங்காச் சூலையை உற்ற இவ்வயிற்றோடு கிழிப்பன்' என்று கூறி, உடை வாளால் செற்றிட உயிரோடு சூலையும் தீர்ந்தது. கலிக்காமர் தேவியாரும் கணவரோடு போவது புரியுங்காலை, 'ஆரூரர் வந்தார்' என்று முன் வந்தவர் கூறினர். அதுகேட்டு, கணவர் தம் செய்கையை மறைத்து, எதிர்கொண்டழைத்து பூசனைகள் புரிந்தார். பின்னர், நம்பியாரூரர் ஆவிபொன்றிடக் கிடந்த கலிக்காமரைக் கண்டு, 'புகுந்தவாறு நன்று' என மொழிந்து, 'நானும் இவர் முன்பு நண்ணுவேன்' என்று வாளைப்பற்ற, பெருமான் அருளால் அவரும் உய்ந்து, , "கேளிரேயாகிக் கெட்டேன்" என விரைந்து எழுந்து வாளினைப் பிடித்துக்கொள்ள, வன்தொண்டர் வணங்கினார். ஏயர்கோனும் வணங்கி, நம்பியாரூரரின் குரைகழல் பணிந்தார். பின்னர் இருவரும் எழுந்து புல்லி மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர்பாதம் தொழுதபொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. )

பெரிய புராணப் பாடல் எண் : 382
ஆரணக் கமலக் கோயில் மேவிப்புற் றிடங்கொண்டு ஆண்ட
நீர்அணி வேணி யாரை நிரந்தரம் பணிந்து போற்றிப்
பாரணி விளக்கும் செஞ்சொல் பதிக மாலைகளும் சாத்தித்
தார்அணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில்.

         பொழிப்புரை : மறைகளாய பூங்கோயிலுள் பொருந்திப் புற்றிடங் கொண்டு ஆண்டருளிய கங்கைநீர் அணிந்த சடையையுடைய பெருமானாரை நாளும் பணிந்து போற்றி, இந்நிலவுலகைக் திருவருள் நீழலாம் அழகில் விளங்கிடச் செய்யும் செஞ்சொல் பாமாலைகளைப் பாடிச் சாத்தி, மாலையணிந்த அழகிய முந்நூல் மார்பராய சுந்தரர் திருவாரூரில் மகிழ்ந்திருந்த நாள்களில்,

         குறிப்புரை : இதுபோது அருளிய பதிகங்கள் இன்னதெனத் தெரியவில்லை.


பெ. பு. பாடல் எண் : 383
"நம்பியா ரூரர் நெஞ்சில் நடுக்கம் ஒன்று இன்றி நின்று
தம்பிரா னாரைத் தூது தையல்பால் விட்டார்" என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோ னார்தாம் கேட்டு
வெம்பினார், அதிச யித்தார் , வெருவினார், விளம்பல் உற்றார்.

         பொழிப்புரை : சுந்தரர், தமது நெஞ்சில் கொஞ்சமும் நடுக்கம் ஒன்றும் இல்லாது, எம்பெருமானை ஒரு பெண்ணிடம் தூதாக விட்டார் என்ற, இவ்வுலகில் மிகுமேம்பாட்டுடன் பேசப்படும் வார்த்தையை, ஏயர்கோன் கலிக்காமர் கேட்டு வெம்பினார்; அதிசயம் கொண்டார்; அச்சமுற்றார்; இதனைச் சொல்லலுமானார்.


பெ. பு. பாடல் எண் : 384
"நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று, சால
ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டனாம், என்னே பாவம்,
பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பது
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி" என்பார்.

         பொழிப்புரை : `யாவர்க்கும் மேலாய தலைவனை ஒரு அடியனாய சுந்தரன் ஏவிய செயல் நன்றாயிருக்கிறது! மிகவும் இது பொருந்தும் என இச்செயலைச் செய்தான் ஒரு தொண்டனாம்! இது என்ன செயல்! பெரும் பாவமே! பொறுக்க முடியாத இப்பிழையினைப் பேயனேனான என் செவியால் கேட்க நேர்ந்தும், நீங்காதிருந்தது என் உயிர்! என்று சொல்லுவார்,

பெ. பு. பாடல் எண் : 385
"காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவ,
பார்இடை நடந்து, செய்ய பாத தாமரைகள் நோவ,
தேர்அணி வீதியூடு செல்வது வருவது ஆகி,
ஓர்இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர்"என்று.

         பொழிப்புரை : ஒரு பெண்ணிடத்துச் செல்லும் காதலால் ஒருவன் ஏவ, இவ்வுலகிடை நடந்து, செம்மையாய திருவடித் தாமரைகள் நோ வுறத் தேர் ஓடும் அழகிய வீதியில் செல்வதும் வருவதுமாக ஓர் இரவு முழுவதும் தூதிற்கு உழன்று திரிவாராம் எம்பெருமானார் என மொழிந்து, பின்னும்,


பெ. பு. பாடல் எண் : 386
"நம்பர்தாம் அடியார் ஆற்றார் ஆகியே நண்ணி னாரேல்,
உம்பரார் கோனும் மாலும் அயனும்நேர் உணர ஒண்ணா
எம்பிரான் இசைந்தார் ஏவப் பெறுவதே, இதனுக்கு உள்ளம்
கம்பியா தவனை யான்முன் காணுநாள் எந்நாள்" என்று.

         பொழிப்புரை : எம்பெருமான் தமது அடியவரின் துயரம் தாங்கொணாது முன் வந்தார் என்றாலும், அத்துடன் தேவர்களின் அரசனாய இந்திரனும், அயனும், திருமாலும் அறிய ஒண்ணாத எம்பிரான் தூது போதற்கு இசைந்தார் என்றாலும் அவரை அவ்வாறு தூது செல்ல விடுத்திடவுமாமோ? இக்கொடுஞ் செயற்குச் சிறிதும் உள்ளம் நடுக்க முறாதவனை, யான் காணும் நாளும் எந்நாளோ? என எண்ணியவராய்,


பெ. பு. பாடல் எண் : 387
"அரிவை காரணத்தி னாலே ஆள்உடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக ஏவி, அங்கு இருந்தான் தன்னை
வர எதிர் காண்பேன் ஆகில், வருவது என் ஆம்கொல்" என்று
விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி.

         பொழிப்புரை : பெண் ஒருத்தியின் காரணத்தினால் ஆளுடைய பெருமானார் தம்மை இரவிலே தூது போம்படி விடுத்து, அங்கு இருந்தவனை, என் எதிரே வரக் காணின் என்ன விளைவு நேருமோ? என்று பெருகிய சினம் வெடிப்பது போன்ற உள்ளத்தராகி,


பெ. பு. பாடல் எண் : 388
ஈறிலாப் புகழின் ஓங்கும் ஏயர்கோ னார்தாம் எண்ணப்
பேறு, இது பெற்றார் கேட்டு, பிழை உடன்படுவார் ஆகி,
வேறு இனி இதற்குத் தீர்வு வேண்டுவார், விரிபூங் கொன்றை
ஆறுஇடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து.

         பொழிப்புரை : ஈறில்லாத புகழோடு ஓங்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மேற்கூறியவாறு எண்ணும் பேற்றைப் பெற்ற சுந்தரர் கேட்டுத் தாம் செய்தது தவறு என்று உடன்பட்டவராய், இப்பிழைக்குத் தீர்வினை வேண்டிக் கொள்வாராகிய அவர், விரிந்த பூங்கொன்றையுடன் கங்கையும் விளங்கி நிற்கும் சடையராய சிவபெருமானாரிடம் அதனை விண்ணப்பம் செய்து,

         குறிப்புரை : தாம் செய்தது தவறு என்பதை முழுமையாக உணர்ந்தமையும், அத்தவறு காரணமாக ஏயர்கோன் நாயனார் தம்மைச் சினந்தது ஏற்றுக் கொள்ளுதற்குரியதே என்பதையும் திருவுளம் கொண்டார். ஆதலின், அவர்தம் எண்ணமே தமக்குப் பேறாகும் என்று கருதினார் சுந்தரர். அவர்கொண்ட சினம், தாம் தம் தவற்றினின்றும் நீங்கக் காரணமாயினமையின், அதுவே அவர் பெற்ற பேறுமாயிற்று.


பெ. பு. பாடல் எண் : 389
நாள்தொறும் பணிந்து போற்ற, நாதரும் அதனை நோக்கி,
நீடிய தொண்டர் தம்முள் இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார், ஏயர் குரிசிலார் தம்பால் மேனி
வாடுஉறு சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால்.

         பொழிப்புரை : நாள்தோறும் தமது தவற்றை நினைந்து போற்றிட, இறைவர், நீளநினைந்து வழிபட்டுவரும் இருபெருந் தொண்டர்களும் கூடி மகிழவேண்டும் எனும் திருவுளம் கொண்டவராய், ஏயர்கோன் கலிக்காமரிடத்து வாடுறும் சூலை நோயினைச் சேருமாறு அருள் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 390
ஏதம்இல் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை, அனல்செய் வேல் குடைவது என்ன
வேதனை மேன்மேல் செய்ய, மிக அதற்கு உடைந்து வீழ்ந்து,
பூத நாயகர் தம் பொற்றாள் பற்றியே போற்று கின்றார்.

         பொழிப்புரை : குற்றம் ஏதும் இல்லாத பெருமையின் செய்கையுடைய ஏயர்கோன் கலிக்காம நாயனாரிடத்து, இறைவர் அருளிய சூலைநோய், நெருப்பாலாகிய வேல் வயிற்றைக் குடைவது போன்ற வேதனையை மேன்மேல் செய்திட, அதனைப் பொறுக்கலாற்றாது அவர் மிக வருந்திச் சோர்வுற்று வீழ்ந்து, உயிர்கட்கெல்லாம் தலைவர் ஆன சிவபெருமானின் திருவடிகளைப் பற்றியவாறு போற்றுவாராய்,


பெ. பு. பாடல் எண் : 391
சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்தடி போற்றி செய்ய
எந்தமை ஆளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர்,
"வந்து உனை வருத்தும் சூலை வன்தொண்டன் தீர்க்கில் அன்றி
முந்து உற ஒழியாது" என்று மொழிந்துஅருள் செய்யக் கேட்டு.

         பொழிப்புரை : மனத்தாலும் மொழியாலும் பெருமானாருடைய திருந்திய திருவடிகளைப் போற்றி வரும் எம்மையாளும் ஏயர்கோன் கலிக்காமனார் பாடல் இறைவர் தோன்றி, `உன்னை வருத்திடும் சூலைநோய் சுந்தரன் தீர்த்தார் அன்றி, வேறு எவ்வாற்றானும் நீங்காது' என்று மொழிந்து அருள் செய்திட, அதுகேட்டு,


பெ. பு. பாடல் எண் : 392
"எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம்
தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை, என்னை நின்று ஈரும் சூலை
வம்பு என ஆண்டு கொண்டான் ஒருவனோ தீர்ப்பான் வந்து".

         பொழிப்புரை : `எம்பெருமானே! எம் தந்தை, அவர் தந்தை, இவர் முதலாய கூட்டமெல்லம் நம் தலைவர் நீரேயென்று வழிவழிச் சார்ந்து வாழும் இந்த உலகில், மிக மேலான வாழ்க்கை உடைய என்னை நின்று அறுத்திடும் இச் சூலைநோயை, வல்வழக்கு இட்டு ஆட்கொள்ளப் பெற்றான் ஒருவனோ வந்து தீர்ப்பான்?'

         குறிப்புரை : எம்பிரான் நீரே என்றவிடத்து வந்த ஏகாரம் தேற்றப் பொருளது. `உற்றவரும் உறுதுணையும் நீயே' என்புழிப் போல. இனிப் பிரிநிலையுமாம். `உன்னையல்லால் பிறதெய்வம் உள்கேன்' என்புழிப்போல. வம்பு - புதுமை; மையல் - மானுடமாய் மயங்கும் வழி. ஐயனே தடுத்தாட் கொண்டு அருள் செய்ய வேண்டும் என விண்ணப்பித்துக்கொண்ட விண்ணப்பத்தைத் தானே மறந்தவிடத்தும், பெருமான் தம் கருணையால் ஓலைகொண்டு வந்தருளி உணர்த்தியும் உணராது, அவரைப் பித்தன் என மொழிந்தும், திருக்கரத்திலிருந்த ஆவணத்தைக் கிழித்தெறிந்தும் செய்த துரிசுகளையெல்லாம் இறைவன் பொறுத்தருளி ஆட்கொள்ளப்பெற்ற நிலை சுந்தரருக்குக் கிடைத்தது. இவ்வாறு வலிய வந்து ஆட்கொள்ளப் பெற்றமையாலேயே `வன்தொண்டன்' எனப் பெயர் பெற்றமையும் கருதுக. தாம் முன்பின் நினையாத நிலையில் இறைவன் குருந்த மரத்தடியில் குருமூர்த்தியாக வந்து ஆட்கொண்டருளினமையின் `வம்பெனப் பழுத்து' என்றார் வாதவூர் அடிகள்; இறைவன் வம்பென (புதுமையாக) வந்தும், தாம் `புவனியிற் சேவடி தீண்டினன் காண்க, அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க, சிவன் என யானும் தேறினன் காண்க' என அருளுகின்றார். இத்தகைய குழைந்த மனப் பக்குவத்தால் அவர் `வம்பெனப் பழுத்து' என்றார். சுந்தரர்பால் அமைந்த சூழ்நிலை வேறாதலின் `வம்பென ஆண்டு கொண்டான்' என்றார் சேக்கிழார்.


பெ. பு. பாடல் எண் : 393
"மற்றுஅவன் தீர்க்கில் தீராது ஒழிந்து, எனை வருத்தல் நன்றால்,
பெற்றம்மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே,
உற்ற வன்தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர" என்னக்
கற்றைவார் சடையார் தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே.

         பொழிப்புரை : `விடைக்கொடியை உடைய பெருமானே! மற்று அந்தச் சுந்தரன் தீர்ப்பதினும் இச்சூலைநோய் தீராதொழிந்து எனைவருத்துதல் நன்றாம்; நீர் செய்திடும் பெருமைகளை உயர்ந்தவர் யாவரே? உம்பால் உற்ற சுந்தரனுக்கே மேன்மையான உறுதியும் செய் தீர்!' என்னலும், அவ்வளவில் தொகுதியாக நீண்ட சடையையுடைய பெருமானும் அவர் முன்பு நின்று மறைந்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 394
வன்தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச் செய்வார்
"இன்று நம் ஏவலாலே, ஏயர்கோன் உற்ற சூலை
சென்று நீ தீர்ப்பாயாக" என்று அருள்செய, சிந்தை யோடு
நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர்.

         பொழிப்புரை : சுந்தரரிடத்துச் சென்று, இறைவர் அருளிச் செய்வாராய், சுந்தரனே! இன்று நமது ஏவலால் ஏயர்கோன் கலிக்காமனாரிடத்துப் பொருந்திய சூலை நோயை நீ சென்று தீர்ப்பாயாக என்று அருள் புரிந்திட, மனமும் உடலும் ஒருங்கு மகிழ்ந்து போற்றி வணங்கினார் திருநாவலூரர்.


பெ. பு. பாடல் எண் : 395
அண்ணலார் அருளிச் செய்து நீங்க, ஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பி ரானார் ஏவலால் விரைந்து செல்வார்,
கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்கா மர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க வரும் திறம் செப்பி விட்டார்.

         பொழிப்புரை : இவ்வாறு பெருமான் அருள்புரிந்து மறைந்திடச் சுந்தரரும் தேவர்க்கெல்லாம் தேவனாய பெருமானின் அருளாணை யின் வண்ணம் விரைந்து சென்று ஏயர்கோனார்பால் கொண்ட காதலால் அவருக்கு உற்ற கொடுமை பயந்திடும் சூலைநோயைத் தாம் தீர்த்திட வரும் தன்மையை முன்சென்று அறிவித்திடத் தூதுவரை அனுப்பினார்.


பெ. பு. பாடல் எண் : 396
நாதர்தம் அருளால் நண்ணும் சூலையும், அவர்பால் கேட்ட
கேதமும் வருத்த, மீண்டும் வன்தொண்டர் வரவு கேட்டுத்
"தூதனாய் எம்பி ரானை ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதம்இங்கு எய்த எய்தில் யான்செய்வது என்ஆம்" என்பார்.

         பொழிப்புரை : பெருமானது அருளால் வந்திடும் சூலையும் அவர் பால் கேட்ட துன்புறு சொல்லும் தம்மை வருத்திட, அதன்மேலும், சுந்தரர் சூலைநோயைத் தீர்த்திட வருகின்றார் என்ற வார்த்தையும் கேட்டு தூதனாக எம்பெருமானைச் செலுத்திய சுந்தரன் எனக்குற்ற சூலைநோயைத் தீர்த்திட வரும் துன்பமும் நேர்ந்தால் யான் என் செய்வது? எனக் கருதியவராய்,



பெ. பு. பாடல் எண் : 397
"மற்றுஅவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன், நான் மாயப்
பற்றி நின்று என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை
உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன்" என்று, உடைவாள் தன்னால்
செற்றிட, உயிரி னோடும் சூலையும் தீர்ந்தது அன்றே.

         பொழிப்புரை : மற்று அந்தச் சுந்தரன் வந்து இச்சூலை நோயைத் தீர்ப்பதன்முன், நான் மாய்ந்திடும் அளவு என்னைப் பற்றி நின்று வருத்தும் இச்சூலை நோயை அஃது அடைந்த இவ் வயிற்றோடும் கிழிப்பேன் என்று கூறி, உடை வாளினால் வயிற்றில் கீறிட, அவரது உயிருடன் சூலை நோயும் தீர்ந்தது.


பெ. பு. பாடல் எண் : 398
கருத அரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவி யாரும்
பொருஅரும் கணவ ரோடு போவது புரியுங் காலை,
"மருவிஇங்கு அணைந்தார் நம்பி" என்று முன் வந்தார் கூற,
"ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக" என்று உரைத்துப் பின்னும்.

         பொழிப்புரை : நினைத்தற்கரிய பெருமையும் பண்பும் மிக்க கலிக்காம நாயனார் மனைவியாரும், அதுகண்டு, தமது ஒப்பற்ற கணவரோடு தம் உயிரை நீக்கி, அவருடன் போவது துணிந்து, அதற்கென ஆயத்தம் செய்திடும் வேளை, நம்பிகள் விரைவில் அங்கு வரவிருக்கும் செய்தியை, அவர் முன்னாக வந்த சிலர்கூற, அதுகேட்ட அம்மனைவியாரும் ஒருவரும் இங்கு அழுதல் செய்யாது இருத்தல் வேண்டும் என்று கூறிப் பின்னரும்,


பெ. பு. பாடல் எண் : 399
கணவர்தம் செய்கை தன்னைக் கரந்து, காவலரை, "நம்பி
அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர்போம்" என்னப்
புணர்நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத்
துணர்மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார்.

         பொழிப்புரை : கணவனார்தம் செயலை மறைத்துச் சுந்தரர் தம் மாளிகைக்கு வர அணையும்பொழுது, அதனை நன்கு அணிசெய்து வரவேற்றிடுவோம் என்று ஏவலரிடம் கூறிட, அவர்களும் அவர் விரும்பியவாறே, அழகு சிறந்த அம்மாளிகை வாயிலில் நல்விளக்கும் நிறை குடமும் வைத்துப் பசிய மகரந்தப் பொடி பரக்கும் மலர்மாலை களைத் தொங்கவிட்டு வணங்கி எதிர்கொண்டிட முன்சென்றார்கள்.


பெ. பு. பாடல் எண் : 400
செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று, எதிர் கொண்டு போற்ற,
நம்மை ஆள் உடைய நம்பி நகைமுகம் அவர்க்கு நல்கி,
மெய்ம்மையாம் விருப்பினோடும் மேவிஉள் புகுந்து மிக்க
மொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது.

         பொழிப்புரை : செம்மை சேர்ந்த சிந்தை உடைய அப்பணியாளர்களும் பிறரும் சென்று சுந்தரரை எதிர்கொண்டு போற்றிட, அவரும் புன்முறுவல் செய்து மகிழ்வித்து, உண்மையாம் விருப்பினோடும் சென்று மாளிகை உள்ளே புகுந்து, மலர்பரப்பிய இருக்கையில் முக மலர்ச்சியுடன் இருந்தபொழுது,


பெ. பு. பாடல் எண் : 401
பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை, ஏய்ந்த
நான்மறை தொடர்ந்த வாய்மை நம்பியாரூரர் கொண்டு, இங்கு
"யான்மிக வருந்துகின்றேன், ஏயர் கோனார் தாம் உற்ற
ஊன வெம் சூலை நீக்கி உடன் இருப்பதனுக்கு" என்றார்.

         பொழிப்புரை : முறையாகவும் பண்பு மேம்பாட்டுடனும் வழிபா டாற்றிப் போற்றிடப் பொருந்திய நான்மறைகளின் பிழிவாகத் தொடர்ந்து தமிழ்ப் பதிகங்களை அருளிவரும் சுந்தரர் அதனை ஏற்றுக் கொண்டு, ஏயர்கோனாருக்கு உற்ற மிகக் கொடுமையாய சூலை நோயை நீக்கி அவருடன் இருந்திடலன்றி, இங்கு இனித் தனித்திருக்க வருந்துகிறேன் என்றருளினார்.


பெ. பு. பாடல் எண் : 402
மாதர் தம் ஏவ லாலே மனைத்தொழில் மாக்கள், "மற்று இங்கு
ஏதம் ஒன்று இல்லை, உள்ளே பள்ளி கொள்கின்றார்" என்ன,
"தீது அணைவு இல்லையேனும் என் மனம் தெருளாது இன்னம்,
ஆதலால் அவரைக் காண வேண்டும்" என்று அருளிச் செய்தார்.

         பொழிப்புரை : ஏயர்கோனார்தம் மனைவியாரின் ஏவலால், மனையில் பணிபுரிந்திடும் மக்கள், `மற்று இங்கு ஏதும் குறை ஒன்றும் இல்லை; அவர் உள்ளே பள்ளி கொள்கின்றார், என்றிடலும், நம்பிகள் அவருக்குத் தீங்கு ஒன்றும் இல்லையெனினும், மனம் தெளிவுறவில்லை, ஆதலால் நான் அவரை உடன் காணவேண்டும் என்று அருளிச் செய்தார்.


பெ. பு. பாடல் எண் : 403
வன்தொண்டர் பின்னும் கூற, மற்றுஅவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத் தொடர்குடர் சொரிந்து உள் ஆவி
பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் "புகுந்த வாறு
நன்று"என மொழிந்து, "நானும் நண்ணுவேன் இவர் முன்பு" என்பார்.

         பொழிப்புரை : சுந்தரர் பெருமான் பின்னரும் அவரைக் காண வேண்டுமென மொழிந்திட, அப்பணியாளர்கள், அவரை அழைத்துச் சென்று காட்டிட, வடிந்திட்ட குருதி சோர்ந்திடத் தொடர்ந்த குடல், அறுபட்டு வெளிப்போந்திட, உயிர்நீங்கிக் கிடக்கும் ஏயர்கோனாரைக் கண்ட அளவில், `இங்கு நேர்ந்தவாறு நன்று\' என்று மொழிந்து, நானும் இவர்முன் செல்வேன் என்பார்,


பெ. பு. பாடல் எண் : 404
கோள்உறு மனத்தர் ஆகிக் குற்று உடைவாளைப் பற்ற,
ஆள் உடைத் தம்பிரானார் அருளினால், அவரும் உய்ந்து,
"கேளிரே ஆகிக் கெட்டேன்" என விரைந்து எழுந்து, கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள, வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.

         பொழிப்புரை : தாம் மனம் கொண்ட குறிக்கோளின்றும் பிழையாதவராய், உயிரை நீக்குதற்கென உடைவாளைப் பற்றிட, அவ்வளவில் உயிர்களையெல்லாம் அடிமையாகக் கொண்டருளும் பெருமானார் அருளினால் உயிர்பெற்ற ஏயர்கோனார், சுந்தரரைக் கண்ட அளவில் `என் நட்புடையவரேயாகவும் நான் கெட்டேன்\' என்று விரைந்து எழுந்து, அவர் திருக்கையில் கொண்ட வாளினைப் பிடித்திட, அவரும் ஏயர்கோன் பெருமானாரை வணங்கி அவர்முன்பு வீழ்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 405
மற்றவர் வணங்கி வீழ, வாளினை மாற்றி, ஏயர்
கொற்றவ னாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்,
அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு, வானோர்
பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற.

         பொழிப்புரை : சுந்தரர் பெருமான் வணங்க, ஏயர்கோன் பெருமா னாரும் தாம் பற்றிய வாளினை அகற்றிச் சுந்தரர் பெருமானின் மெல்லென இசைத்திடும் சிலம்பணிந்த திருவடி மலர்களில் பணிந்து வீழ்ந்தார். அன்றைய நாளில் நடந்த இவ்வியத்தகு செயலைக் கண்ட தேவர்கள், இவ்வுலகம் போற்றிடக் கற்பக மலர்களை மழையெனப் பொழிந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 406
இருவரும் எழுந்து புல்லி, இடைவிடா நண்பி னாலே,
பொருவரு மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று, வன்தொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே "அந்தணாளன்"என்று எடுத்துப் பாடி.

         பொழிப்புரை : இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு, இடைவிடாத நட்பினால் ஒப்பற்ற மகிழ்ச்சி பொங்கிடத் திருப்புன்கூர்க் கோயிலைச் சேர்ந்து, அங்கு வீற்றிருந்தருளும் பெருமானாரின் திருவடிகளைப் போற்றி நின்றனர். வன்தொண்டராம் சுந்தரர் பெருமான், சிவபெருமானாரது திருவருளினை நினைந்து `அந்தணாளன்' என எடுத்துப் பாடியருளி,

         குறிப்புரை : `அந்தணாளன்' எனத்தொடக்கமுடைய திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.55). இப்பதிகத்தில் மார்க்கண்டேயர், இயக்கர், கின்னரர், வருணன், அருச்சுனன், பகீரதன், முப்புரத்தவரில் மூவர், இராவணன் முதலானோருக்கு அருள் புரிந்ததைக் குறிப்பித்தருளுவதோடு, ஏயர்கோன்கலிக்காம நாயனாருக்கு அருள் புரிந்தமையையும் கூறி, அவ்வருட் கருணை தமக்குமாக வேண்டுகின்றார். நான்காவது பாடலில், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நாளைப் போவார், சிலந்தி, சூதர், சாக்கியர், கண்ணப்பர், கணம்புல்லர் ஆகியோர் குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு பெருமானை அடைந்ததாக அருளுகின்றார். அக்குறிப்புத் தாம் செய்த குற்றத்தையும் குணமாகக் கொண்டருளும் பெருமானாரின் திறத்தை ஏயர்கோன்கலிக்காம நாயனாரும் திருவுள்ளம் பற்றுமாறு அமைந்துள்ளது.


7. 055    திருப்புன்கூர்                பண் - தக்கேசி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அந்த ணாளன் உன் அடைக்கலம் புகுத,
         அவனைக் காப்பது காரண மாக,
வந்த காலன்தன் ஆருயிர் அதனை
         வவ்வி னாய்க்கு, உன்தன் வன்மைகண்டு அடியேன்,
எந்தை நீஎனை நமன்தமர் நலியில்,
         இவன்மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து,உன் திருவடி அடைந்தேன்,
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே

         பொழிப்புரை : வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , முனிவன் ஒருவன் உன்னை அடைக் கலமாக அடைய , அவனைக் காத்தல் நிமித்தமாக , அவன் மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான் , உனது அவ்வாற்றலையறிந்து , என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின் , என்தந்தையாகிய நீ , ` இவன் என் அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர் ` என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .


பாடல் எண் : 2
வையகம் முற்றும் மாமழை மறந்து,
         வயலில் நீர்இலை, மாநிலம் தருகோம்,
உய்யக் கொள்க மற்று எங்களை என்ன,
         ஒளிகொள் வெண்முகி லாய்ப் பரந்து, எங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்து,
         பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டு அருளும்
செய்கை கண்டு,நின் திருவடி அடைந்தேன்,
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே

         பொழிப்புரை : வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , இவ்வூரிலுள்ளவர் , ` உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று ; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம் ; எங்களை உய்யக்கொள்க ` என்று வேண்ட , ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை, அந் நிலைமாறி , எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி , அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .


பாடல் எண் : 3
ஏத நன்னிலம் ஈர்அறு வேலி
         ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்து,
கோத னங்களின் பால்கறந்து ஆட்ட,
         கோல வெண்மணல் சிவன்தன்மேல் சென்ற
தாதை தாள்அற எறிந்த சண்டிக்கு, உன்
         சடைமி சைமலர் அருள்செயக் கண்டு,
பூத ஆளி,நின் பொன்அடி அடைந்தேன்,
         பூம்பொ ழில்திருப் புன்கூர்  உளானே

         பொழிப்புரை : பூதகணங்கட்குத் தலைவனே , அழகிய சோலை களையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நீ , நல்ல நிலங்கள் பன்னிருவேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த , துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்ததனையும் , முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து ஆட்ட அதனைப் பொறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலாலாகிய பெருமான்மேற் சென்ற தந்தையது பாதங்கள் துணி பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேற் சூடியுள்ள கொன்றைமாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து , அடியேன் , உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .


பாடல் எண் : 4
நல்த மிழ்வல்ல ஞானசம் பந்தன்,
         நாவினுக்கு அரையன், நாளைப்போ வானும்,
கற்ற சூதன்,நல் சாக்கியன், சிலந்தி,
         கண்ணப் பன்,கணம் புல்லன்,என்று இவர்கள்
குற்றம் செய்யினும், குணம் எனக் கருதும்
         கொள்கை கண்டு,நின் குரைகழல் அடைந்தேன்,
பொன்தி ரள்மணிக் கமலங்கள் மலரும்
         பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே

         பொழிப்புரை : பொன்போலும் , திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளி யிருப்பவனே , ` நல்ல தமிழைப் பாட வல்ல ஞானசம்பந்தனும் , நாவுக் கரையனும் , நாளைப்போவானும் , சூதாடுதலை நன்கு கற்ற மூர்க் கனும் , நல்ல சாக்கியனும் , சிலந்தியும் , கண்ணப்பனும் , கணம் புல்லனும் ` என்ற இவர்கள் குற்றமான செயல்களைச் செய்யவும் , அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து , வந்து , அடியேன் , உனது ஒலிக்கின்ற கழலை யணிந்த திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .


பாடல் எண் : 5
கோல மால்வரை மத்து என நாட்டி,
         கோள் அரவு சுற் றிக்கடைந்து எழுந்த
ஆல நஞ்சு கண்ட வர்மிக இரிய,
         அமரர் கட்கு அருள் புரிவது கருதி,
நீலம் ஆர்கடல் விடம்தனை உண்டு
         கண்டத் தேவைத்த பித்த,நீ செய்த
சீலம் கண்டு,நின் திருவடி அடைந்தேன்,
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே

         பொழிப்புரை : வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , தேவர்கள் , அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி , கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து , அதில் அமுதந் தோன்றாது பெருவிடந் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஓடிவந்து அடைய அவர்கட்கு உதவுதல் கருதி , கருமை நிறைந்த , அக் கடல் விடத்தை உண்டு , அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தே வைத்த பேரருளாளனே , நீ செய்த இந் நல்ல செய்கையையறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .


பாடல் எண் : 6
இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்
         இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
         வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பு ஒன்று இன்றிநின் திருவடி அதனை
         அர்ச்சித் தார்பெறும் ஆர்அருள் கண்டு,
திகைப்பு ஒன்று இன்றி,நின் திருவடி அடைந்தேன்,
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே

         பொழிப்புரை : வளவிய சோலையையுடைய திருப்புன்கூரில் எழுந் தருளியிருப்பவனே , இயக்கரும் , கின்னரரும் , இயமனும் , வருணனும் . அக்கினியும் , இயங்குகின்ற வாயுவும் , சூரியனும் , சந்திரனும் , வசுக்களும் , ஏனைய தேவர்களும் , அசுரர்களும் , மற்றும் அறியாமை நீங்கின புலி , குரங்கு , பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி வழிபட்டுப் பெற்ற அரிய திருவருளை யறிந்து அடியேனும் , தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .


பாடல் எண் : 7
போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப்
         பொழில்கொள்ஆல் நிழல் கீழ்அறம் புரிந்து,
பார்த்த னுக்கு அன்று பாசுப தம்கொடுத்து
         அருளி னாய்,பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை
         நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த
தீர்த்த னே, நின்தன் திருவடி அடைந்தேன்,
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே

         பொழிப்புரை : தூயவனே , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளையுடைய முனிவர்களுக்கு , அன்று சோலைகளைச் சூழக்கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும் , அருச்சுனனுக்கு அன்று பாசுபதத்தைக் கொடுத்தும் பகீரதன் வேண்டிக்கொள்ள அவன்பொருட்டு , ஆரவாரித்து வீழ்ந்த நீர்வடிவாகிய கங்கையாளை முன்பு உனது சடையில் , அடக்கியும் அருள்செய்தாய் ; அவற்றை யெல்லாம் அறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .


பாடல் எண் : 8
மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்,
         இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவ லாளர்என்று ஏவிய பின்னை,
         ஒருவன் நீகரி காடு அரங் காக
மானை நோக்கிஓர் மாநடம் மகிழ
         மணிமு ழாமுழக்க அருள் செய்த
தேவ தேவ, நின் திருவடி அடைந்தேன்,
         செழும்பொ ழில்திருப் புன்கூர்  உளானே

         பொழிப்புரை : தேவதேவனே , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நீ , முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக் கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு , மற்றொருவனை , நீ , கரிந்த காடே அரங்கமாக , உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும்படி அருள்செய்ததை யறிந்து வந்து . அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .


பாடல் எண் : 9
அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத்து
         அவ்வவர்க்கு அங்கே, ஆர்அருள் புரிந்து,
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
         துலங்க மால்வரைக் கீழ் அடர்த்து இட்டு,
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
         கோல வாளொடு நாள்அது கொடுத்த
செறிவு கண்டு, நின் திருவடி அடைந்தேன்
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே

         பொழிப்புரை : வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நூலறிவினால் மிக்க ஆறுவகைப்பட்ட சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்திற்றானே , அரிய திருவருளைச் செய்தும் , அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை , அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து , பின்பு அவன் பாடிய , உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு , அழகிய வாளோடு , மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .


பாடல் எண் : 10
கம்ப மால்களிற்றின் உரியானை,
         காமற் காய்ந்ததுஓர் கண் உடையானை,
செம்பொனே ஒக்கும் திருவுரு வானை,
         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானை,
உம்பர் ஆளியை, உமையவள் கோனை,
         ஊரன், வன்தொண்டன், உள்ளத் தால் உகந்து
அன்பி னால் சொன்ன அருந்தமிழ், ஐந்தோடு
         ஐந்தும் வல்லவர், அருவினை இலரே.

         பொழிப்புரை : அசைதலையுடைய பெரிய யானையினது தோலை உடையவனும் , காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும் , செம்பொன்னே போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும் , தேவர்களை ஆள்பவனும் , உமையவளுக்குத் தலைவனும் ஆகிய , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , வன்தொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பி , அங்ஙனம் விரும்பிய அவ்வன்பானே சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர் , நீங்குதற்கரிய வினைகளை இல்லாதவராவர் ; இது திண்ணம் .
திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...