திரு அன்னியூர்





திரு அன்னியூர்
(தற்போது பொன்னூர் என்று பெயர்)

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து வடமேற்கே சுமார் 8 கி.மி. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.

     மயிலாடுதுறையில் இருந்து நமச்சிவாயபுரம் செல்லும் பேருந்தில் பொன்னூர் நிறுத்தம் இறங்கி இக்கோயிலை அடையலாம்.

     மயிலாடுதுறையில் இருந்து பொன்னூர் மார்க்கமாகப் பாண்டூர் செல்லும் பேருந்திலும் இவ்வூரை அடையலாம்.

     அனைத்து வசதிகளும் மாயவரம் மற்றும் நீடுரில் உள்ளன. இவ்வூரில் தங்கும் விடுதி உள்ளதால் இங்கு தங்கியும் தரிசனம் செய்யலாம்.

     இத்தலத்திற்கு அருகில் 5 கி.மீ. தொலைவில் நீடூர் என்ற மற்றொரு திருத்தலம் உள்ளது.


இறைவர்         : ஆபத்சகாயேசுவரர், லிகுசாரண்யேசுவரர்,
                                      அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர்.

இறைவியார்      : பிருகந்நாயகி, பெரியநாயகி.

தல மரம்           : எழுமிச்சை

தீர்த்தம்           : வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம் (இரண்டும் ஒன்றே)

                                                                
தேவாரப் பாடல்கள்    :          1. சம்பந்தர் -     மன்னி யூரிறை
                                               2. அப்பர் - பாற லைத்த படுவெண்


         திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர் இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது.

         ஆரவாரமற்ற அமைதியான இந்த பொன்னூர் கிராமத்தின் வடகோடியில் எழிலுற அமைந்திருக்கிறது இச்சிவாலயம். கிழக்கு முகம் கொண்ட இச்சிவாலயம் சிறிய ஆலயமாக சிறப்புறத் திகழ்கிறது. இவ்வாலயத்திற்கு கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் (அக்னி தீர்த்தம் என்றும் இதற்குப் பெயர் உண்டு) உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபமும் அதையடுத்து இறைவன கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவு வாயிலும் உள்ளன. இந்த இரண்டாவது நுழைவு வாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் பிருகந்நாயகி சந்நிதி உள்ளது. அம்பாளைத் தொழுது வரும்போது பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் - அக்கினிக்குக் காட்சி தந்த மூர்த்தி உள்ளார்.

     கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் தரிசனம் தருகிறார். கருவறையில் ஆபத்சகாயேசுவரர் லிங்க உருவில் சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தல நாதனான ஆபத்சாகயேசுவரர் பெறும் ஆபத்துகளையும் நீக்க வல்லவர். ஒரே மகாமண்டபத்தைக் கொண்டு சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது.கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், துர்க்கை உள்ளனர். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி - தெய்வயானையுடன் முருகர், சந்திரசேகரர், நடராஜர், சிவகாமி, ஆடிப்பூர அம்மன், துர்க்கை, அஸ்திரதேவர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.

         சூரியன் சாபவிமோசனம் பெற்ற தலம்: ஆதியில் திருக்குறுக்கை திருத்தலத்திலே மன்மதனை எரித்தார் சிவபெருமான். கணவனை இழந்து வாடியிருந்த ரதியின் மீது இச்சை கொண்டான் சூரியன். பதிவிரதையான ரதியோ சூரியனின் வலக்கரம் பின்னமாக சாபமிடுகிறாள். மனம் வருந்திய சூரியனோ, சாபவிமோசனம் பெற அன்னியூரை அடைந்து வழிபடுகின்றான். ஈசனது பேரருளால் சூரியன் தனது இழந்த கையை மீண்டும் பெற்று விமோசனம் பெற்றான்.
   
         ரதிதேவி தனது கணவன் மன்மதனை மீட்க இத்தலத்தில் விளங்கும் ஆபத்சகாயரை பிரார்த்திக்கின்றாள். அவளுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்து ஈசன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார்.
   
         தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட அக்னிதேவன் தனது சாபம் தீர ஈசனை பல தலங்களில் வழிபட்டான். அதில் திரு அன்னியூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தன் பெயரில் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை இங்கு வழிபட்டுள்ளான். இத்தீர்த்தமே அக்னி தீர்த்தம் என்ற் பெயரில் ஆலயத்திற்கு வெளியே நுழைவாயிலுக்கு எதிரே உள்ளது.
   
         தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற அரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி, இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து, ஆபத்சகாயரை வணங்கி, வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார்.
   
         இத்தலத்தில் வருணன் மற்றும் பாண்டவர்கள் ஐவரும் பூஜித்து, பெரும் பேறு பெற்றுள்ளனர்.
   
         சூரிய பரிகாரத்திற்கு உகந்த இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25 ஆம் தேதி முதல் 29 தேதி வரை 5 நாட்கள் காலையில் சூரியக் கதிர்கள் சுவாமி மீது விழும் சூரிய பூஜை வெகு சிறப்பாக இங்கு நடக்கிறது.

         வைகாசி விசாகத்தில் இத்தலத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, தயிர் சாதம் நிவேதித்து, வழிபடுவோரது பெரும் ஆபத்துகள் நீங்கும் என்பது இத்தலத்தின் பிரார்த்தனையாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயிலும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பீடு கொண்டு மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட வன்னியூர் மேவும் அதிபதியே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 289
திருக்குறுக் கைப்பதி மன்னித்
         திருவீரட் டானத்து அமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப்
         போந்து,அன்னி யூர்சென்று போற்றி,
பருக்கை வரைஉரித் தார்தம்
         பந்தணை நல்லூர் பணிந்து,
விருப்புடன் பாடல் இசைத்தார்
         வேதம் தமிழால் விரித்தார்.

         பொழிப்புரை : திருக்குறுக்கைப் பதியை அடைந்து, அங்குள்ள திருவீரட்டானக் கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக்கும், மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவரைப் போற்றி, அங்கிருந்தும் புறப்பட்டுச் சென்று, `திரு அன்னியூர்\' என்ற பதியை வழிபட்டு, பெரிய கையையுடைய மலை போன்ற யானையை உரித்த சிவபெருமானின் `திருப்பந்தணைநல்லூரைப்\' பணிந்து, மறைகளைத் தமிழால் விரித்துப் பாடினார்.

         குறிப்புரை : அன்னியூரில் பாடிய பதிகம் `மன்னியூரிறை\' (தி.1 ப.96) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருப்பந்தணைநல்லூரில் அருளிய பதிகம் முன்னர் 250ஆம் பாடலில் குறித்தாயிற்று. இப்போது அருளிய பதிகம் காணக் கிடைத்திலது.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.096    திருஅன்னியூர்                        பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மன்னி யூர்இறை சென்னி யார்பிறை
அன்னி யூர்அமர் மன்னு சோதியே.

         பொழிப்புரை :திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன், பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து, ஆங்காங்குள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன்.


பாடல் எண் : 2
பழகும் தொண்டர்வம் அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி தொழுது வாழ்மினே.

         பொழிப்புரை :இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.


பாடல் எண் : 3
நீதி பேணுவீர் ஆதி யன்னியூர்ச்
சோதி நாமமே ஓதி உய்ம்மினே.

         பொழிப்புரை :நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே, அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதிஉய்வீர்களாக.


பாடல் எண் : 4
பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள் தொழ முத்தர் ஆவரே.

         பொழிப்புரை :இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே, தலைமை யாளனாய் அன்னியூரில் விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளிலிருந்து விடுபட்டவராவீர்.


பாடல் எண் : 5
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற்கு உறவு செய்ம்மினே.

         பொழிப்புரை :மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே, அற வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக.


பாடல் எண் : 6
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர்
நன்பொன் என்னுமின் உம்பர்ஆகவே.

         பொழிப்புரை :உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே, அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின், தேவர்களாகலாம்.


பாடல் எண் : 7
அந்த ணாளர்தம் தந்தை அன்னியூர்
எந்தை யேஎனப் பந்தம் நீங்குமே.

         பொழிப்புரை :அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மல மாயைகள் நீங்கும்.


பாடல் எண் : 8
தூர்த்த னைச்செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாஅடைந்து ஏத்தி வாழ்மினே.

         பொழிப்புரை :காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனித னாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.


பாடல் எண் : 9
இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவு வார்விண்ணுக்கு ஒருவர் ஆவரே.

         பொழிப்புரை :திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரராவர்.
  

பாடல் எண் : 10
குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த்
தொண்டு உளார்வினை விண்டு போகுமே.

         பொழிப்புரை :சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.


பாடல் எண் : 11
பூந்த ராய்ப்பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்மினே.

பொழிப்புரை :பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக.

                                                     திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------

  
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு
   
பெரிய புராணப் பாடல் எண் : 190
மேவுபுனல் பொன்னிஇரு கரையும் சார்ந்து
         விடைஉயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்
காஉயரும் மயிலாடு துறைநீள் பொன்னிக்
         கரைத்துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி
பாவுறு செந்தமிழ்மாலை பாடிப் போற்றிப்
         பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே
ஆவுறும்அஞ்சு ஆடுவார் கோடி காவில்
         அணைந்துபணிந்து ஆவடுதண் துறையைச் சார்ந்தார்.

         பொழிப்புரை : நீர் இடையறாது பொருந்திய காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் சேர்ந்து, ஆனேற்றுக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருச்செம்பொன்பள்ளியினைப் பாடிச் சோலைகள் உயர்ந்து சூழ்ந்த திருமயிலாடுதுறையையும், காவிரியின் இரு கரைகளிலும் உள்ள திருத்துருத்தி - திருவேள்விக்குடியையும், திருஎதிர்கொள்பாடியையும் தொழுது செந்தமிழ்ப் பதிகங்களான பாமாலைகளால் போற்றி, இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று, ஆன் ஐந்தையும் ஆடும் சிவபெருமானின் திருக்கோடிக்காவை அடைந்து, வணங்கிச் சென்று, திருவாவடுதுறையைச் சேர்ந்தார்.

         குறிப்புரை : இங்கு முதற்கண் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஐந்தாம். இவ்விடங்களில் பாடப்பெற்ற திருப்பதிகங்கள்:

1.    திருச்செம்பொன் பள்ளி: இது இக்காலத்துச் செம்பொனார்கோயில் என வழங்கப் பெறுகிறது.
     (அ). `ஊனினுள் உயிரை` (தி.4 ப.29) - திருநேரிசை.
     (ஆ) `கானறாத` (தி.5 ப.36) - திருக்குறுந்தொகை.

2.    திருமயிலாடுதுறை: `கொள்ளும் காதல்` (தி.5 ப.39) - திருக்குறுந்தொகை.

3.    3+4. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்: இறைவன் பகலில் திருத்துருத்தியிலும் இரவில் வேள்விக்குடியிலும் எழுந்தருளியிருப்பர். இதனால் இவ்விரு திருப்பதிகளையும் இணைத்தே ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ளனர். நாவரசர் திருத்துருத்தி ஒன்றற்கே பதிகம் பாடியுள்ளார். `பொருத்திய` (தி.4 ப.42) - திருநேரிசை.

4.    திருஎதிர்கொள்பாடிக்கு உரிய பதிகம் கிடைத்திலது.

5.    இனி, இப்பதிகளோடு `பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே` என ஆசிரியர் அருளுவதால், இதுபொழுது பாடிய பதிகள் வேறு பிறவும் உளவாம் எனத் தெரிகிறது. அவையாவன:
    1. திருஅன்னியூர் : `பாறலைத்த` (தி.5 ப.8) - திருக்குறுந்தொகை.

2. திருமணஞ்சேரி: `பட்டநெற்றியர்` (தி.5 ப.87) -                                                         திருக்குறுந்தொகை.

இப்பாடலில் ஆசிரியர் நிறைவாக இருபதிகளைக் குறிக்கின்றார். அவை:

         1. திருக்கோடிக்கா:
                  (அ). `நெற்றிமேல்` (தி.4 ப.51) - திருநேரிசை.
                  (ஆ). `சங்குலாம்` (தி.5 ப.78) - திருக்குறுந்தொகை.
                  (இ). கண்டலஞ்சேர் (தி.6 ப.81) - திருத்தாண்டகம்.

திருநாவுக்கரசர் திருப்பதிகம்


5.  008    திருஅன்னியூர்          திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பாறு அலைத்த படுவெண் தலையினன்
நீறு அலைத்தசெம் மேனியன் நேரிழை
கூறு அலைத்தமெய் கோளரவு ஆட்டிய
ஆறு அலைத்த சடையஅன்னி யூரனே.

         பொழிப்புரை :பருந்துகள் அலைக்கும் வெள்ளிய மண்டை ஓட்டைக் கையிற் கொண்டவனும் , திருநீறு பூசிய சிவந்த மேனியனும் , உமையம்மை ஒரு கூறுகொண்ட மெய்யனும் , அரவு ஆட்டி ஆறலைக் குஞ்சடையனும் அன்னியூர்த்தலத்து இறைவனே .


பாடல் எண் : 2
பண்தொத் தமொழி யாளையொர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்,இருள் சேர்ந்ததுஓர்
கண்டத் தன்,கரி யின்உரி போர்த்தவன்
அண்டத்து அப்புறத் தான்அன்னி யூரனே.

         பொழிப்புரை : பண் பொருந்திய இனியமொழியுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனும் , இண்டையணிந்த சடையனும் , இருளார்கண்டனும் , யானைத்தோல் உரித்துப் போர்த்தவனும் , அண்டங்களுக்கு அப்புறத்தில் உள்ளவனும் அன்னியூர்த் தலத்து இறைவனே .


பாடல் எண் : 3
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறுங் குழல்உமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போல்அன்னி யூரரே.

         பொழிப்புரை : நாள்தோறும் வாழ்த்தி வணங்குவோரது வல் வினைகளைத் துரக்கும்படி நீக்குபவரும் , தம்மிடப்பாகத்தில் குரவு நறு மணம் வீசும் குழல் உமையைக் கூறாகவுடையவரும், அரவம் ஆட்டுபவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே .


பாடல் எண் : 4
வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்குஅணி
நாதர் நீதியி னால்அடி யார்தமக்கு
ஆதி ஆகிநின் றார்அன்னி யூரரே.

         பொழிப்புரை : வேதங்களை இசையோடு ஓதுவோரும் , விண்ணோர்க்கும் உயர்ந்தவரும் , ஒளிவெண்பிறை பொருந்திய சடையுடைய தலைவரும் , நீதியினால் தம் அடியார்களுக்கெல்லாம் ஆதியாகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே .


பாடல் எண் : 5
எம்பி ரான்இமை யோர்கள் தமக்குஎலாம்
இன்பர் ஆகி இருந்தஎம் ஈசனார்
துன்ப வல்வினை போகத் தொழும்அவர்க்கு
அன்பர் ஆகிநின் றார்அன்னி யூரரே.

         பொழிப்புரை : தேவர்களுக்கெல்லாம் இன்பம் செய்வோராகிய எம் ஈசனாரும் , எம் தலைவரும் , துன்பஞ்செய்யும் வல்வினை போதற்காகத் தொழும் அன்பர்களுக்கு அன்பராகி நின்றவரும் அன்னி யூர்த்தலத்து இறைவரே .


பாடல் எண் : 6
வெந்த நீறுமெய் பூசுநல் மேனியர்,
கந்த மாமலர் சூடும் கருத்தினர்,
சிந்தை யார்சிவ னார்,செய்ய தீவண்ணர்,
அந்த ணாளர்,கண் டீர்அன்னி யூரரே.

         பொழிப்புரை : வெந்த திருநீறு மெய்யின்கண் பூசிய நலம் வாய்ந்த வரும் , நறுமலர் சூடும் கருத்தினராகிய அன்பர் சிந்தைகளில் நிறைந்த சிவனாரும் , சிவந்த தீயின் வண்ணம் உடையவரும் , அழகிய தண்ணளி உடையவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே , காண்பீராக .


பாடல் எண் : 7
ஊனை ஆர்தலை யில்பலி கொண்டுஉழல்-
வானை, வானவர் தாங்கள் வணங்கவே,
தேனை ஆர்குழ லாளையொர் பாகமா,
ஆனை ஈர்உரி யார்அன்னி யூரரே.

         பொழிப்புரை : தசை பொருந்தியிருந்த வெண்டலையிற் பலி கொண்டு திரியும் பெருமான் வானவர் வணங்குமாறு , உமாதேவி யாரை ஒரு பாகமாகக்கொண்டு ஆனைத்தோல் போர்த்தவர் அன்னி யூர்த்தலத்து இறைவரே .


பாடல் எண் : 8
காலை போய்ப்பலி தேர்வர்,கண் ஆர்நெற்றி,
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடுஅரங் காகவே
ஆலின் கீழ்அறத் தார்,அன்னி யூரரே.

         பொழிப்புரை : நெற்றிக்கண் உடையவரும் , காலையே போய்ப் பலி ஏற்பவரும் , வானவர்களும் விரும்புகின்ற சோலை சூழ் புறங்காட்டினை அரங்காகக் கொண்டவரும் , ஆலின்கீழ் அறத்தை நான்கு முனிவர்களுக்கு உரைத்தவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே .


பாடல் எண் : 9
எரிகொள் மேனியர் என்புஅணிந்து இன்பராய்த்
திரியும் மூஎயில் தீஎழச் செற்றவர்,
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு
அரியர் ஆகிநின் றார்,அன்னி யூரரே.

         பொழிப்புரை : தீவண்ண மேனியரும் , எலும்பணிந்து இன்புறு வாரும் , திரிந்துவந்து தொல்லைகள் புரிந்த மூவெயில்களைத் தீயெழச் சினந்தவரும் , மாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே .


பாடல் எண் : 10
வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும்
அஞ்சும் அஞ்சும்ஓர் ஆறும்நான் கும்இறப்
பஞ்சின் மெல்விர லால்அடர்த்து, ஆயிழை
அஞ்சல் அஞ்சல்என் றார்,அன்னி யூரரே.

         பொழிப்புரை : வஞ்சனை பொருந்திய இராவணனின் இருபது கைகளும் தலைகளொடு இறும்படியாகப் பஞ்சின் மெல் விரலால் அடர்த்தபோது உமையம்மை அஞ்ச , ` ஆயிழையே ! அஞ்சல் ! அஞ்சல் !` என்று அருளியவர் அன்னியூர்த்தலத்து இறைவரே .

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...