திரு நீடூர்





திரு நீடூர்

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை - நீடூர் பேருந்து வசதி உள்ளது.

     வைத்தீசுரன் கோயிலில் இருந்து வருவோர், திருப்பனந்தாள் சாலையில், பட்டவர்த்தி என்னும் ஊரை வந்து, இடப்புறமாகத் திரும்பி, மயிலாடுதுறை சாலையில் சென்று நீடூரை அடையலாம்.


இறைவர்         : அருட்சோமநாதேசுவரர், நிருத்தகானப்பிரியர், கானநிர்த்தனசங்கரர்,                              பத்ரகாளீசுவரர், கற்கடேசுவரர்.

இறைவியார்      : ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகிஆலாலசுந்தரநாயகி,                                                                                        வேயுறுதோளியம்மை.

தல மரம்          : மகிழ மரம்.

தீர்த்தம்           : செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம்.                           
தேவாரப் பாடல்கள்    : 1. அப்பர்   - பிறவாதே தோன்றிய
                                                2. சுந்தரர்  -  ஊர்வ தோர்விடை


          ஊழிக் காலத்தும் இத்தலம் அழியாது நீடித்திருக்குமாதலின் இஃது 'நீடூர் ' என்று பெயர் பெற்றதென்பர்.

          தலமரம் மகிழமாதலின் மகிழவனம், மகிழாரண்யம், வகுளாரண்யம் எனவும் இத்தலத்திற்கு பெயர்களுண்டு.

          கிருதயுகத்தில் இந்திரனும், திரேதாயுகத்தில் சூரியனும், துவாபரயுகத்தில் பத்திரகாளியும், கலியுகத்தில் நண்டும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

          இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்துப் பூசித்த லிங்கம் - இதுவே இறுகி வெள்ளையாக மாறியது. பின்னால் நண்டு பூசித்ததும்; அதன் கால் சுவடு இலிங்கத்தில் பதிந்துள்ளது. வழிபட்ட இந்திரனுக்கு அம்பாள் அருள் புரிந்ததாகத் தலவரலாறு சொல்லப்படுகிறது.

          இந்திரன் காவிரி மணலால் இலிங்கத் திருமேனி எடுத்து மந்திர விதிமுறைகளோடு வழிபடவும் மார்கழித் திருவாதிரை நாளில் இறைவனார் பாடியாடும் பரமனாக வெளிப்பட்டு இந்திரன் முதலான தேவர்களுக்கு அருள் பாலிக்கவே கோடித் தேவர்கள் கும்பிடும் நீடூர் என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.

          சிவலிங்கத் திருமேனி சுயம்பு மூர்த்தியாகும்.

          இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு ஆகியோர் வழிபட்டத் தலம்.

          திருநாவுக்கரசரால் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியுடன் இணைத்துப் போற்றிப் பரவப்பட்டது. மேலும் பொதுத் திருத்தாண்டகத்திலும், திருப்புறம்பயம், திருப்பள்ளியின்முக்கூடல் திருத்தாண்டகங்களிலும் போற்றப்பட்ட பெருமைக்குறியது.

          திருஞானசம்பந்தர் திருநின்றியூரிலிருந்து திருப்புன்கூர் செல்லும் வழியில் "நாடு சீர் நீடூர் வணங்கி"ச் சென்ற வரலாறு சேக்கிழார் பெருந்தகையரால் குறிக்கப்பட்டுள்ளது.

          தன் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஈசன் அடியார்கட்கு உதவியும் பல்சுவை விருந்தளித்தும் மன்னும் அன்பின் நெறிபிறழா வழித்தொண்டாற்றிய முனையடுவார் நாயனாரின் அவதாரத் தலம்; அவர் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம்.

          அவதாரத் தலம்   : திருநீடூர்.
          வழிபாடு          : சங்கம வழிபாடு.
          முத்தித் தலம்     : திருநீடூர்.
          குருபூசை நாள்    : பங்குனி - பூசம்.

முனையடுவார் நாயனார் வரலாறு

         முனையடுவார் நாயனார் நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். "அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

         சிவபெருமான் திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மை உடையவர். போரில் பகைவர்களுக்குத் தோற்றவர்கள் தம்மிடம் வந்து துணை வேண்டினால் நடுவு நிலையில் நின்று அவர்களோடு ஆள்வினையால் கூலி பேசிக்கொண்டு அவர்களுக்காகப் போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் சொன்னபடியே நிறையக் கொடுத்து அவர்களை அறுசுவைக்கறிகளுடன் திருவமுது செய்வித்துக் கொண்டிருந்தார். முனையடுவார் நாயனார் நெடுங்காலம் ஈசனடியார்களுக்கான திருப்பணி புரிந்து இருந்து உமையொருபாகர் திருவருளால் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.

          முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது.

          சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநின்றியூர் இறைவரை வணங்கி புகழ் நீடூர் பணியாது திருப்புன்கூர் இறைவரை பணிந்திறைஞ்ச செல்லும்போது, மெய்யுணர்வு ஓங்கவே, நீடூர் இறைவரை வந்துப் பாடிப் பணிந்து தங்கிப் பின் திருப்புன்கூர் சென்ற வரலாற்றை சேக்கிழார் பதிவு செய்துள்ள வண்ணம் எண்ணி மகிழத்தக்கது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "உருப் பொலிந்தே ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திரு நீடூர் இலங்கு நிழல் தருவே" என்று போற்றி உள்ளார்.


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெ. பு. பாடல் எண் : 189
ஆண்டஅரசு எழுந்தருளக் கோலக் காவை
         அவரோடும் சென்றுஇறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டுஅருளி னார்அவரும் விடைகொண் டிப்பால்
         வேதநா யகர்விரும்பும் பதிகள் ஆன
நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடூர்
         நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூரும்
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
         கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய பெருமைமிக்க திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்செல்பவராய்.

         குறிப்புரை : திருக்கோலக்காவில் அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

         அடுத்து இருக்கும் திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.

         திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன. 1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை; 2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை. இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன. திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம். திருநனிபள்ளியில் அருளிய பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.


6. 011    திருப்புன்கூரும் திருநீடூரும்  திருத்தாண்டகம்
                                 திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை,
         பேணாதார் அவர்தம்மைப் பேணா தானை,
துறவாதே கட்டுஅறுத்த சோதி யானை,
         தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் தன்னை,
திறம்ஆய எத்திசையும் தானே ஆகித்
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நிறமாம் ஒளியானை நீடூ ரானை
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :பிற பொருள்களின் கூட்டத்தால் பிறவாது எம் பெருமான் தானே தன் விருப்பத்தால் வடிவங்கொள்பவன். தன்னை விரும்பாதவர்களைத் தானும் விரும்பி உதவாதவன். இயல்பாகவே பந்தங்களின் தொடர்பு இல்லாத ஞான வடிவினன். தூய நன்னெறியில் ஒழுகுவதற்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகுக்கப்பட்ட எத்திசைக் கண்ணும் தானே பரவியிருப்பவன். திருப்புன்கூரை உகந்தருளியிருக்கும் அச்சிவலோகநாதனே நீடூரிலும் உகந்திருப்பவன். அத்தகைய செந்நிறச் சோதி உருவினைக் கீழ் மகனாகிய அடியேன் விருப்புற்று நினையாமல் இந்நாள் காறும் வாளா இருந்த செயல் இரங்கத்தக்கது.


பாடல் எண் : 2
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னை,
         பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை,
நன்றுஆங்கு அறிந்தவர்க்குந் தானே ஆகி.
         நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னை,
சென்றுஓங்கி விண்அளவும் தீ ஆனானை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நின்றுஆய நீடூர் நிலாவி னானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :எதிர்காலமும் இறந்தகாலமும் ஆகியவன். தன்னிடம் பெருவிருப்புடைய அடியார்பக்கல், தானும் பெருவிருப் புடையவன். நல்வினையும் தீவினையும் செய்தவர்களுக்கு அவரவர் வினைகளுக்கு ஏற்பப்பயன்களை வழங்குபவன். வானளாவிய தீப்பிழம்பு வடிவானவன். திருப்புன்கூரை உகந்தருளிய அப் பெருமான் நீடூரிலும் நிலையாக உறைந்திருக்கின்றான். அப்பெருமானை நீசனேன் நினையாவாறு என்னே!


பாடல் எண் : 3
இல்லானை, எவ்விடத்தும் உள்ளான் தன்னை,
         இனிய நினையாதார்க்கு இன்னா தானை,
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்,
         மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டா தானை,
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நெல்லால் விளைகழனி நீடூ ரானை
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன். நல்லனவே நினையாதவர்களுக்குத் தான் இனியன் அல்லன். தன்னை விரைந்து சரண்புக்கவர்களுக்குத் தான் அருளுவதில் வல்லவன். ஓரிடம் விட்டு மற்றோரிடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான், தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்தருளியிருப்பவன். அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 4
கலைஞானம் கல்லாமே கற்பித் தானை,
         கடுநரகம் சாராமே காப்பான் தன்னை,
பலஆய வேடங்கள் தானே ஆகி,
         பணிவார்கட்கு அங்குஅங்கே பற்று ஆனானை,
சிலையாற் புரம்எரித்த தீயாடியை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நிலையார் மணிமாட நீடு ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :கலைஞானத்தை முயன்று கற்றல் வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவன். கொடிய நரகத்தை அடையாதபடி காப்பவன். பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி ஆங்காங்கே உறைபவன். வில்லால் திரிபுரங்களை எரித்தவன். தீயின்கண் கூத்து நிகழ்த்துபவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந்தருளியவன். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 5
நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை,
         நுணுகாதே யாதுஒன்றும் நுணுகி னானை,
ஆக்காதே யாதுஒன்றும் ஆக்கி னானை,
         அணுகாதார் அவர்தம்மை அணுகா தானை,
தேக்காதே தெண்கடல்நஞ்சு உண்டான் தன்னை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நீக்காத பேரொளிசேர் நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :கருவிகளால் அன்றித் தன் நினைவினாலேயே எல்லாப் பொருள்களையும் படைத்துக் காத்து அழிப்பவன். நுண்ணிய பொருள்களிலும் நுண்ணியனாக இயல்பாகவே கலந்திருப்பவன். கருவிகள் கொண்டு படைக்காமல் எல்லாப் பொருள்களையும் தன் நினைவினாலேயே தோற்றுவிப்பவன். தன்னை நெருங்காதவர்களுக்கு அருள் செய்தற்கண் ஈடுபடாதவன். தடுக்காமல் கடல் விடத்தை உண்டவன். அத்தகைய திருப்புன்கூர் மேவிய சிவலோகன் நீக்குதற்கரிய மிக்க பொலிவை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 6
பூண்அலாப் பூணானை, பூசாச் சாந்தம்
         உடையானை, முடைநாறும் புன்க லத்தில்
ஊண்அலா ஊணானை, ஒருவர் காணா
         உத்தமனை, ஒளிதிகழும் மேனி யானை,
சேண்உலாம் செழும்பவளக் குன்றுஒப் பானை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நீண்உலா மலர்க்கழனி நீடு ரானை
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :மற்றவர் அணியக் கருதாத பாம்புகளை அணிகளாகப் பூணுபவன். மற்றவர்கள் பூசிக்கொள்ள விரும்பாத சாம்பலைச் சந்தனம் போலப் பூசிக்கொள்பவன். புலால் நாறும் மண்டையோடாகிய இழிந்த உண்கலத்தில் உண்ணலாகாத பிச்சை எடுத்த ஊணினை உண்பவன். இவையாவும் தன்பொருட்டன்றிப் பிறர் பொருட்டேயாக, இவற்றின் காரணத்தை மற்றவர் காணமாட்டாத வகையில் செயற்படும் மேம்பட்டவன். இச்செயல்களால் ஒளிமிக்குத் தோன்றும் திருமேனியை உடையவன். மிக உயர்ந்த மேம்பட்ட பவள மலையை ஒப்பவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் மிகுதியாகக் காணப்படுகின்ற மலர்களை உடைய வயல்கள் பொருந்திய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 7
உரைஆர் பொருளுக்கு உலப்ப இலானை,
         ஒழியாமே எவ்வுருவும் ஆனான் தன்னை,
புரையாய்க் கனமாய்ஆழ்ந்து ஆழா தானை,
         புதியனவு மாய்மிகவும் பழையான் தன்னை,
திரைஆர் புனல்சேர் மகுடத் தானை,
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நிரைஆர் மணிமாட நீடூ ரானை
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :சொற்பொருளுக்கு அப்பாற்பட்டவன். எல்லா உருவங்களிலும் நீங்காது உடன் உறைபவன். நீரில் ஆழாத உட்டுளை உடைய நொய்ய பொருள்களாகவும் நீரில் ஆழும் கனமான பொருள்களாகவும் உள்ளவன். மிகவும் பழைமையாகிய தான் புதியவனாகவும் இருப்பவன். அலைகள் நிறைந்த கங்கையைத் தலையில் சூடியவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் வரிசையான அழகிய மாடிவீடுகளை உடைய நீடூரானும் ஆவான். நீசனேன் அவனை நினையாதவாறு என்னே!


பாடல் எண் : 8
கூர்அரவத்து அணையானும், குளிர்தண் பொய்கை
         மலரவனும் கூடிச்சென்று அறிய மாட்டார்,
ஆர்ஒருவர் அவர்தன்மை அறிவார் தேவர்,
         அறிவோம்என் பார்க்குஎல்லாம் அறிய லாகாச்
சீர்அரவக் கழலானை, நிழலார் சோலைத்
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நீர்அரவத் தண்கழனி நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :மேம்பட்ட ஆதிசேடனைப் படுக்கையாக உடைய திருமாலும், குளிர்ந்த பொய்கையில் தோன்றும் தாமரையை இருப்பிடமாக உடைய பிரமனும் ஆகிய இருவரும் காண முயன்றும் அறியமாட்டாத அப்பெருமான் இயல்பினை யாவர் உள்ளவாறு அறிய இயலும்? அவனை அறிவோம் என்று நினைக்கும் தேவர்களுக்கும் உண்மையில் அறிய முடியாதவனாய் ஒலிக்கும் அழகிய வீரக்கழலை அணிந்த அப்பெருமான் நிழல் தரும் சோலைகள் உடைய திருப்புன் கூரை மேவியவன். அவனே நீர் பாயும் ஓசையை உடைய குளிர்ந்த வயல்களை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் பண்டு நினையாதவாறு என்னே!

  
பாடல் எண் : 9
கைஎலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
         கால்நிமிர்த்து நின்றுஉண்ணும் கையர் சொன்ன
பொய்எலாம் மெய்என்று கருதிப் புக்குப்
         புள்ளுவரால் அகப்படாது, உய்யப் போந்தேன்,
செய்எலாம் செழுங்கமலப் பழன வேலித்
         திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை,
நெய்தல்வாய்ப் புனல்படப்பை நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :கைகளிலிருந்து நெய் கீழே சொட்டுதலால் அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாதே கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமல் இருப்பதற்குக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்ணும் கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய் உரைகளாகக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத்தீங்கில் நின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்த அடியேன், வயல்களில் செழிப்பான தாமரைகள் களைகளாகத் தோன்றும் நன்செய் நிலங்களை எல்லையாக உடைய திருப்புன்கூர் சிவலோகநாதன் என்ற பெயரில் உகந்தருளியிருப்பவனாய், கடற்கரைப் பகுதியில் நீர்வளம் உடைய மனைக்கொல்லைகளை உடைய நீடூரிலும் உகந்து தங்கியிருக்கும் அப்பெருமானை, நினையாத கீழ்மகனாய் அடியேன் இருந்தவாறு இரங்கத்தக்கது.


பாடல் எண் : 10
இகழுமாறு எங்ஙனே ஏழை நெஞ்சே,
         இகழாது பரந்துஒன்றாய் நின்றான் தன்னை,
நகழமால் வரைக்கீழ்இட்டு அரக்கர் கோனை
         நலன்அழித்து நன்குஅருளிச் செய்தான் தன்னை,
திகழுமா மதகரியின் உரிபோர்த் தானை,
         திருப்புன்கூர் மேவிய சிவ லோகனை,
நிகழுமா வல்லானை, நீடூ ரானை,
         நீதனேன் என்னேநான் நினையா வாறே.

         பொழிப்புரை :யாதொரு பொருளையும் புறக்கணிக்காது அவற்றிலெல்லாம் உடனாய் இருப்பவன் எம்பெருமான். அவன் இராவணனைக் கயிலை மலையின் அடியில் இட்டு வருந்தச் செய்து அவன் வலிமையைக் குலைத்துப் பின் அவனுக்கு நல்லனவாகிய வாளும் நாளும் வழங்கியவன். மதத்தால் விளங்கிய யானையின் தோலைப் போர்த்தியவன். அவனே திருப்புன்கூர் மேவிய சிவலோக நாதன். தன் விருப்பப்படியே செயற்படவல்ல அப்பெருமான் நீடூரிலும் உகந்தருளியுள்ளான். `அறிவில்லாத மனமே! அப்பெருமானைக் கீழ்மகனாகிய யான் நினையாத செயலே இரங்கத்தக்கது. அவ்வாறாக நீயும் இகழும் செயல் எவ்வாறு ஏற்பட்டது?`
                                             திருச்சிற்றம்பலம்



சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுவாமிகள், திருச்செம்பொன்பள்ளி, திருநின்றியூர் முதலான தலங்களை வணங்கிக்கொண்டு திருநீடூரைப் பணியாது, திருப்புன்கூர் செல்லும் பொழுது மெய்யுணர்வினால் நினைந்து, மீண்டு அதனை வணங்கச் செல்லுங்கால் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 151)
 
பெரிய புராணப் பாடல் எண் : 151
அப்பதியில் அன்பருடன் அமர்ந்துஅகல்வார் அகல்இடத்தில்
செப்பரிய புகழ்நீடூர் பணியாது செல்பொழுதில்
ஒப்பரிய உணர்வினால் நினைந்துஅருளித் தொழல்உறுவார்
மெய்ப்பொருள்வண் தமிழ்மாலை விளம்பியே மீண்டுஅணைந்தார்.

         பொழிப்புரை : அப்பதியில் அன்பர்களுடன் தங்கி அப்பால் செல்பவர், அகன்ற இந்நிலவுலகில் சொலற்கரிய புகழுடைய திருநீடூர் என்னும் திருப்பதியைப் பணியாது செல்கின்ற அமையத்தில், தம்மிடத்துள்ள ஒப்பரிய அருள்வயப்பட்ட உணர்வினால் அத்திருப்பதியை நினைந்தருளித் தொழுகின்றவர், உண்மைப் பொருள் நிறைந்த வண்மையான தமிழ்மாலைத் திருப்பதிகம் பாடி மேலும் செல்லாது, மீண்டும் திருநீடூர் வருவாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 152
மடல்ஆரும் புனல்நீடூர் மருவினர்தாள் வணங்காது
விடலாமே எனுங்காதல் விருப்புறும்அத் திருப்பதிகம்
அடல்ஆர்சூ லப்படையார் தமைப்பாடி அடிவணங்கி
உடல்ஆரும் மயிர்ப்புளகம் மிக, பணிந்துஅங்கு உறைகின்றார்.

         பொழிப்புரை : `மலர்கள் நிறைந்த நீர்ப் பெருக்குடைய திருநீடூரில் இருந்தருளும் பெருமானின் திருவடிகளைப் பணியாது விடலாமே' என்னும் கருத்துடைய `ஊர்வதோர் விடை' எனத் தொடங்கும் அத் திருப்பதிகத்தைப் போர் விளங்கிய சூலப்படையை உடைய பெருமான் மீது பாடியருளித் திருவடி பணிந்து, பணியும்தொறும் மெய்நிறைந்து சிலிர்க்கும் மயிர்க்கூச்சம் மேன்மேல் எழுந்திடப் பணிந்து அங்குத் தங்கியிருந்தருளுவார்,

         குறிப்புரை : `ஊர்வதோர் விடை' எனத் தொடங்கும் பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.56).

7. 056     திருநீடூர்                        பண் - தக்கேசி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஊர்வது ஓர்விடை ஒன்றுஉடை யானை,
         ஒண்நூதல் தனிக் கண்ணுத லானை,
கார் அதுஆர்கறை மாமிடற் றானை,
         கருத லார்புரம் மூன்றுஎரித் தானை,
நீரில் வாளைவ ரால்குதி கொள்ளும்
         நிறைபு னல்கழ னிச்செல்வ நீடூர்ப்
பார் உளார்பர வித்தொழ நின்ற
         பரம னைப்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : எருது ஒன்றினை ஓர் ஊர்தியாக உடையவனும் , ஒளியையுடைய நெற்றியையுடைய ஒப்பற்ற சிவபெருமானும் , கருமை பொருந்திய நஞ்சினையுடைய கண்டத்தை யுடையவனும் , பகைவரது ஊர்கள் மூன்றை எரித்தவனும் ஆகிய , நீரில் வாழ்வனவாகிய வாளை மீனும் , வரால் மீனும் குதிகொள்ளுகின்ற நிறைந்த நீரையுடைய கழனிகளை யுடைய செல்வம் பொருந்திய திருநீடூரின்கண் , நில வுலகில் உள்ளார் யாவரும் துதித்து வணங்குமாறு எழுந்தருளியிருக் கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .


பாடல் எண் : 2
துன்னு வார்சடைத் தூமதி யானை,
         துயக்கு உறாவகை தோன்றுவிப் பானை,
பன்னு நான்மறை பாடவல் லானை,
         பார்த்த னுக்குஅருள் செய்தபி ரானை,
என்னை இன்அருள் எய்துவிப் பானை,
         ஏதி லார்தமக்கு ஏதிலன் தன்னை,
புன்னை மாதவி போதுஅலர் நீடூர்ப்
         புனித னைப்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : நெருங்கிய நீண்ட சடையின்கண் தூய்தாகிய பிறையைச் சூடினவனும் , மயக்கம் வாராதவாறு உய்யும் நெறியைக் காட்டுகின்றவனும் , உயர்ந்தோர் ஓதும் நான்கு வேதங்களைச் செய்ய வல்லவனும் , அருச்சுனனுக்கு அருள் புரிந்த தலைவனும் , அவ்வினிய அருளை என்னை எய்துவிப்பவனும் , அயலாய் நிற்பார்க்கு அயலாய் நிற்பவனும் ஆகிய , புன்னையும் குருக்கத்தியும் அரும்புகள் மலர்கின்ற திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.


பாடல் எண் : 3
கொல்லு மூஇலை வேல்உடை யானை,
         கொடிய காலனை யும்குமைத் தானை,
நல்ல வாநெறி காட்டுவிப் பானை,
         நாளும் நாம்உகக் கின்றபி ரானை,
அல்லில் அரு ளேபுரி வானை,
         ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்
கொல்லை வெள்எருது ஏறவல் லானை
         கூறி நாம்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : கொல்லுதற் கருவியாகிய சூலத்தை உடையவனும் , கொடிய இயமனையும் அழித்தவனும், நல்லனவாகிய நெறிகளையே காட்டுவிக்கின்றவனும், எந்நாளும் நாம் விரும்புகின்ற தலைவனும், துன்பம் இல்லாத திருவருளைச் செய்பவனும் ஆகிய, முழுகுதற்குரிய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக் கின்ற சிவபெருமானை நாம் வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால் அங்குச் சென்று அவனை வணங்குவோம்.


பாடல் எண் : 4
தோடு காதுஇடு தூநெறி யானை,
         தோற்றமும் துறப்பு ஆயவன் தன்னை,
பாடு மாமறை பாடவல் லானை,
         பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமொடு ஆட
         அலைபு னல்கழ னித்திரு நீடூர்
வேடன் ஆயபி ரான்அவன் தன்னை
         விரும்பி நாம்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : தோட்டைக் காதிலே இட்ட , தூய நெறியாய் உள்ளவனும், உயிர்கட்குப் பிறப்பும் இறப்புமாய் நிற்பவனும், இசையொடு பாடுதற்குரிய சிறந்த வேதத்தைச் செய்ய வல்லவனும் ஆகிய, பசிய சோலைகளில் குயில்கள் கூவ, அவ்விடத்தே, ஆடுந் தன்மையுடைய சிறந்த மயில் அன்னத்துடன் நின்று ஆட அலைகின்ற நீரையுடைய வயல்களையுடைய திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, நாம் விரும்பி வணங்காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம்.


பாடல் எண் : 5
குற்றம் ஒன்றுஅடி யார்இலர் ஆனால்
         கூடு மாறுத னைக்கொடுப் பானை,
கற்ற கல்வியி லும்இனி யானை,
         காணப் பேணும் அவர்க்குஎளி யானை,
முற்ற அஞ்சும் துறந்துஇருப் பானை,
         மூவ ரின்முதல் ஆயவன் தன்னை,
சுற்று நீர்வயல் சூழ்திரு நீடூர்த்
         தோன்ற லைப்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : அடியவர் குற்றம் சிறிதும் இலராயினாரெனின், அவர்கள் அடையுமாறு தன்னையே கொடுப்பவனும், வருந்திக் கற்ற கல்வியினும் மேலாக இனிமையைச் செய்கின்றவனும், ஐம்புலன்களை யும் முற்றத்துறந்து பற்றின்றி இருப்பவனும், காரணக் கடவுளர் மூவருள் முதல்வனாயினவனும் ஆகிய, சுற்றிலும் நீரையுடைய வயல் கள் சூழ்ந்த திருநீடூரின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் அங்குச் சென்று அவனைவணங்குவோம்.


பாடல் எண் : 6
காடில் ஆடிய கண்ணுத லானை,
         கால னைக்கடிந் திட்டபி ரானை,
பாடி ஆடும்பரி சேபுரிந் தானை,
         பற்றி னோடுசுற் றம்ஒழிப் பானை,
தேடி மால்அயன் காண்பரி யானை,
         சித்த முந்தெளி வார்க்குஎளி யானை,
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க்
         கூத்த னைப்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : காட்டில் ஆடுகின்ற, கண்ணை உடைய நெற்றியை உடையவனும், கூற்றுவனை அழித்த தலைவனும், அன்பினால் பாடி ஆடுகின்ற செயலையே விரும்புபவனும், பொருட்சார்புகளையும் உயிர்ச்சார்புகளையும் நீக்குபவனும், மாலும் அயனும் தேடிக் காணுதற்கு அரியவனும், சொல்லாலன்றி, உள்ளத்தாலும் தன்னைத் தெளிந்தவர்க்கு எளியவனும் ஆகிய, அளவற்ற தேவர்கள் தொழுகின்ற, திருநீடூரின்கண் எழுந்தருளியுள்ள இறைவனை நாம் வணங் காது விடுதலாகுமோ! ஆகாதன்றே; அதனால், அங்குச் சென்று அவனை வணங்குவோம் .


பாடல் எண் : 7
விட்டு இலங்குஎரி ஆர்கையி னானை,
         வீடு இலாத வியன்புக ழானை,
கட்டு வாங்கந் தரித்தபி ரானை,
         காதில் ஆர்கன கக்குழை யானை,
விட்டு இலங்குபுரி நூல்உடை யானை,
         வீந்த வர்தலை ஓடுகை யானை,
கட்டி இன்கரும்பு ஓங்கிய நீடூர்க்
         கண்டு நாம்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : கவைவிட்டு விளங்குகின்ற தீப்பொருந்திய கையை யுடையவனும் , அழியாத , பரந்த புகழையுடையவனும், மழுவை ஏந்திய தலைவனும் , காதின்கண் பொருந்திய பொற்குழையை யுடைய வனும் , மார்பின்கண் எடுத்து விடப்பட்டு விளங்குன்ற முப்புரி நூலை உடையவனும் , இறந்தவரது தலையோட்டைக் கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை . நாம் , கட்டியைத் தரும் கரும்புகள் வளர்ந்துள்ள திருநீடுரின்கண் கண்டு வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , நாம் அங்குச் சென்று அவனை வணங்குவோம் .


பாடல் எண் : 8
மாயம் ஆய மனம்கெடுப் பானை,
         மனத்து உளேமதி யாய்இருப் பானை,
காய மாயமும் ஆக்குவிப் பானை,
         காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானை,
ஓயு மாறுஉறு நோய்புணர்ப் பானை,
         ஒல்லை வல்வினை கள்கெடுப் பானை,
வேய்கொள் தோள்உமை பாகனை நீடூர்
         வேந்த னைப்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : நிலையில்லாத பொருள்கள் மேற்செல்லுகின்ற மனத்தோடு ஒற்றித்து நின்று அதன்வழியே செல்லும் அறிவாய் இருப்பவனும் , பின்னர் அம்மனத்தின் செயலைக்கெடுத்து அறிவை ஒரு நெறிப்படுத்துபவனும் , காற்றும் தீயும் முதலிய கருவிகளாய் நின்று உடம்பாகிய காரியத்தைப் பண்ணுவிப்பவனும், பின்னர் அதனை அழிப்பவனும் உயிர்கள் வருந்துமாறு, அவற்றை அடையற் பாலனவாகிய வினைப்பயன்களைக் கூட்டுவிக்கின்றவனும், பின்னர் விரைவில் அவ்வினைகளை அழிப்பவனும், இவை எல்லாவற்றையும் செய்தற்கு மூங்கில் போலும் தோள்களையுடைய உமையைத் துணையாகக்கொள்பவனும் ஆகிய , திருநீடூரின்கண் எழுந்தருளி யுள்ள முதல்வனை நாம் வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .


பாடல் எண் : 9
கண்ட மும்கறுத் திட்டபி ரானை,
         காணப் பேணும் அவர்க்குஎளியானை,
தொண்ட ரைப்பெரி தும்உகப் பானை,
         துன்ப மும்துறந்து இன்புஇனி யானை,
பண்டை வல்வினை கள்கெடுப் பானை,
         பாக மாமதி ஆனவன் றன்னைக்
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க்
         கேண்மை யால்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : கண்டத்தைக் கறுப்பாகவும் செய்து கொண்ட தலைவனும், தன்னைக் காண விரும்பும் அடியார்களுக்கு எளியவனும், தனக்குத் தொண்டு பூண்டவரைப் பெரிதும் விரும்புபவனும், துன்பம் இல்லாத இன்பத்தைத் தரும் இனியவனும், பழைய வலிய வினை களையெல்லாம் அழிப்பவனும், பகுதிப்பட்ட சந்திரனுக்குக் களைகண் ஆயினவனும் ஆகிய இறைவனை, நாம், கெண்டை மீன்களும், வாளைமீன்களும் துள்ளுகின்ற நீரையுடைய திருநீடூரின்கண், கேண்மையோடு வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .


பாடல் எண் : 10
அல்லல் உள்ளன தீர்த்திடு வானை,
         அடைந்த வர்க்குஅமுது ஆயிடு வானை,
கொல்லை வல்அர வம்அசைத் தானை,
         கோலம் ஆர்கரி யின்உரி யானை,
நல்ல வர்க்குஅணி ஆனவன் தன்னை,
         நானும் காதல்செய் கின்றபி ரானை,
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
         ஏத்தி நாம்பணி யாவிட லாமே

         பொழிப்புரை : ` துன்பம் ` எனப்படுவனவற்றைப் போக்கு கின்றவனும் , தன்னை அடைந்தவர்கட்கு அமுதம் போன்று பயன் தருப வனும் , கொல்லுதலையுடைய வலிய பாம்பைக் கட்டியிருப்ப வனும் , அழகு பொருந்திய யானையின் தோலையுடையவனும் , நன்னெறியில் நிற்பவர்கட்கு அணிகலமாய்த் திகழ்பவனும் , அடி யேனும் விரும்புகின்ற தலைவனும் ஆகிய இறைவனை , நாம் , இரவில் மல்லிகை மலர்கள் மிகவும் மணம் வீசுகின்ற திருநீடூரின் கண் துதித்து வணங்காது விடுதலாகுமோ ! ஆகாதன்றே ; அதனால் , அங்குச் சென்று அவனை வணங்குவோம் .

  
பாடல் எண் : 11
பேர்ஓர் ஆயிர மும்உடை யானை,
         பேசி னால்பெரி தும்இனி யானை,
நீர்ஊர் வார்சடை நின்மலன் தன்னை,
         நீடூர் நின்றுஉகந் திட்டபி ரானை,
ஆரூ ரன்அடி காண்பதற்கு அன்பாய்
         ஆத ரித்துஅழைத் திட்டஇம் மாலை
பார்ஊ ரும்பர வித்தொழ வல்லார்
         பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே

         பொழிப்புரை :எல்லாப் பெயர்களையும் உடையவனும் , வாயாற் பேசும்வழி பெரிதும் இனிப்பவனும் , நீர் ததும்புகின்ற நீண்ட சடை யினையுடைய தூயவனும் ஆகிய, திருநீடூரை விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை , அவன் திருவடியைக்கண்டு வணங்குதற்கு அன்போடு விரும்பி , நம்பியாரூரன் அனைவரையும் அழைத்துப் பாடிய இத்தமிழ்மாலையால் , நிலவுலகத்து உள்ள எவ்வூரின்கண்ணும் இறைவனைப் பாடி வணங்க வல்லவர் , அவனுக்கு அடியவராகி , முத்தியைப் பெறுவார்கள் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...