விதிப்படியே எல்லாம் ஆகும்





19. எண்ணம் எல்லாம் பொய் ஆகும்

மண்ணுலகு ஆளவும் நினைப்பார், பிறர் பொருள்மேல்
     ஆசை வைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம் என்பதைச் செய்யார், கடைமுறையில்
     அலக்கழிந்து புரண்டே போவார்;
பண்உலவு மொழிபாகர் தண்டலையார்
     வகுத்த விதிப்படி அல்லாமல்
எண்ணம் எல்லாம் பொய் ஆகும்! மௌனமே
     மெய் ஆகும் இயற்கை தானே!

               இதன் பொருள் ---

     பண் உலவும் மொழி பாகர் தண்டலையார் வகுத்த விதிப்படி அல்லாமல் ---- பண் என இனிக்கும் மொழியை  உடைய உமையம்மையாரைத் தமது இடப்பாகத்தில்
கொண்டவராகிய திருத்தண்டலை நீள்நெறிநாதர் திருவருளாணையின் வண்ணமே நடக்கும் அல்லாமல்,

     எண்ணம் எல்லாம் பொய் ஆகும் --- நாம் எண்ணியவை யாவும் ஈடேறாமல் போகும்,

     மௌனமே மெய் ஆகும் இயற்கை --- சிவபெருமானின் திருவருளையே சிந்தித்துப் பேசாது இருப்பதே பெரு நலம் தரும் இயல்பினை உடையது,

     (அவ்வாறு அல்லாமல் பலரும்),  

     மண் உலகு ஆளவும் நினைப்பார் --- இந்த நில உலகத்தை ஆளவேண்டும் என்று நினைப்பார்கள்.

     பிறர் பொருள்மேல் ஆசை வைப்பார் - தமக்கு உரிமை இல்லாத, மற்றவர் பொருளுக்கு ஆசைப் படுவார்கள்.

      வலிமை செய்வார் --- தங்கள் ஆற்றலால் பிறரைத் துன்புறுத்துவார்கள்.

     புண்ணியம் என்பதைச் செய்யார் --- புண்ணியச் செயல்களைச் செய்ய மாட்டார்.

     (இப்படிப்பட்டவர்கள் எல்லாரும்),

     கடைமுறையில் அலக்கழிந்து புரண்டே போவார் --- இறுதியில் கலக்கம் அடைந்து, கெட்டு அழிந்து போவார்கள்.

     விளக்கம் --- அவரவர் செய்யும் நல்வினை, தீவினைக்கு ஏற்பப் பயன்களைத் தரும் பிறவியில் இறைவர் உயிர்களைப் புகுத்துவார். நாம் நினைத்தவாறே எதுவும் முடிவதில்லை. ‘எண்ணமெல்லாம் பொய்! எழுத்தின்படி மெய்'  என்பது  பழமொழி. பேராசை கொண்டு பிறர்க்குக் கேடு செய்யலாகாது.

ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
     உயர் செல்வம் எல்லாம்
அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்
     நல் அறமும் நட்பும்
நன்று என்று இரு; நடு நீங்காமலே
     நமக்கு இட்ட படி
என்று என்று இரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

என்னும் பட்டித்தடிகளின் பாடல் கருத்தை மனத்தில் கொள்ளவேண்டும்.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி-தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

         ஆழமாகிய கடலின் நீரை அழுந்தும்படியாக அமிழ்த்தி மொண்டாலும் ஒரு படியானது, நான்கு படி நீரை மொள்ளாது; அதுபோல, தோழியே, மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும், அவரவருக்கு விதிக்கப்பட்ட விதியின் அளவாகிய பயனே அனுபவிக்கப்படும் பயனாகும்.

எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
 கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
 முற்பவத்தில் செய்த வினை.

         வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, நல்ல பயனைப் பெறலாம் என்று நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு, அது எட்டிக்காயைக் கொடுத்ததாயின், அதற்குக் காரணம் அவர் முற்பிறப்பில் செய்த தீவினையாகும்; செய்கின்ற செயல்கள் எல்லாம் நீ நினைத்தபடியே ஆகுமோ?  கடவுள் விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக.

என வரும் ஔவைப் பிராட்டியின் மூதுரைப் பாடல்களின் கருத்தை உள்ளத்தில் இருத்துக.

புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈது ஒழிய வேறு இல்லை, எச்சமயத்தோர் சொல்லும்
தீது ஒழிய நன்மை செயல்.

ஒருவன் செய்யத்தக்கது அறச்செயல்களையே. செய்யாமல் ஒழியத்தகுவது பாவச் செயல்களையே. முற்பிறவியில் செய்த அந்த அறமும், பாவமுமே இந் உலகில் பிறந்தவர்களுக்கு இன்ப துன்பங்களை அனுபவிக்கும்படி சேர்த்து வைத்த பொருக்ளகள் ஆகும். எண்ணிப் பார்க்கும்பொழுது, எல்லாச் சமயத்தவர்களும் சொல்வது இதைத் தவிர வேறு இல்லை. எனவே, பாவத்தைச் செய்யாது, அறத்தையே செய்க.

என வரும் ஔவைப் பிராட்டியின் நல்வழிப் பாடல் கருத்தையும் எண்ணுக.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...