சும்மா இருப்பாய் மனமே
-----
"வேதாகம சித்ர வேலாயுதன், வெட்சி பூத்த தண்டைப்
பாதார விந்தம் அரணாக, அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கேஒளித்து, சும்மா இருக்கப்
போதாய், இனி மனமே! தெரியாது ஒரு பூதர்க்குமே".
என்று நெஞ்சுக்கு அறிவுறுத்தலாக அருணகிரிநாதர் பாடிய கந்தர் அலங்காரப் பாடல் இது.
இதன் பொருள் ---
மனமே! வேதங்களும் ஆகமங்களும் துதிக்கின்ற அழகிய வேற்படையை உடைய முருகப் பெருமானின் வெட்சி மலரை அணிந்துள்ளதும், தண்டையினை அணிந்துள்ளதும் ஆகிய திருவடித் தாமரையையே அரணாகக் கொண்டு மறப்பும் நினைப்பும் அற்ற வஞ்சகம் அற்ற பரவெளியில், உலக பசு பாச தொந்தங்களில் அகப்படாமல் மறைந்து,உரை அற்ற நிலையாகிய பேசா அனுபூதியில் நிலைத்து இருக்கும் பொருட்டு,சென்ற நாள் ஒழியினும், இனியாவது வருவாயாக. இந்த செந்நெறியானது ஒருவருக்கும் தெரியாத ஒன்று ஆகும்.
நம்முடைய மனம் நல்ல வழியைக் காட்டினாலும் காட்டும். அல்லாதவழியைக் காட்டினாலும் காட்டும். அது குரங்கு போன்றது. குரங்கு குருவிகள் கட்டுகிற கூட்டைப் பிரித்து எறியும். மாலைகளைப் பிய்த்து எறியும். கட்டியதைப் பிரித்து எறியும் இயல்புடைய குரங்குகளை ஆட்கொண்டான் இராமன். அந்தக் குரங்குகள், குரங்கரசனாகிய சுக்கிரீவனது தலைமையில், ஆங்காங்கே சிதறிக் கிடந்த கற்களை எல்லாம் ஒன்று சேர்த்துக் கொண்டு வந்து இலங்கைக்கு அணை கட்டின. கட்டியதைப் பிரிக்கும் இயல்புடைய குரங்குகள், இராமனோடு சேர்ந்தமையால் பிரிந்தவற்றை ஒன்று சேர்த்துக் கட்ட உதவின. அவ்வாறே மனம் என்னும் குரங்கு தன் விருப்பப்படி திரிந்தால் நாம் நல்ல எண்ணங்களைக் கட்டக் கட்ட அவற்றைக் குலைத்து, செய்கின்ற முயற்சியை எல்லாம் சின்ன பின்னம் ஆக்குகிறது. துன்பத்தை உண்டாக்குகிறது. அதே குரங்கை இராமன் ஆண்டது போல நாமும் அடக்கி விடுமோனால் அதுவே நமக்கு உதவியாக இருக்கும்.
மதம் பிடித்த யானையினிடம் யாராவது போனால் தன் துதிக்கையினால் அவர்களைப் பற்றி இழுத்து மிதித்து அழித்து விடுகிறது. அதைக் கண்டால் எல்லோரும் ஒடுகிறார்கள். அந்த யானையை அடக்கிய பிறகு தன்னைக் குத்தி நோவ அடிக்கும் மாவுத்தனுக்குப் பணிந்து, கீழே கிடக்கும் அங்குசத்தை எடுத்துக் கொடுக்கிறது. தன்னைக் கட்டுவதற்குரிய இரும்புச் சங்கிலியைத் தன் துதிக்கையினாலேயே அவனிடம் எடுத்துக் கொடுக்கிறது. காலையும் தூக்கிக் காட்டுகிறது. மதம் அடங்கின யானையாக நமது மனம் ஆகிவிட்டால், தன்னைக் கட்டுகிற வழியை அதுவே காட்டும். இல்லாவிட்டால் மதம் பிடித்த யானை சுற்றியுள்ளவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, தன்னை அடக்க வருகின்ற மாவுத்தனையும் கொன்று வீழ்த்துவது போலத் துன்பம் கொடுத்து, நம்மையே வீழ்த்திக் கொன்று விடும்.
அத்தகைய மனத்தைப் பார்த்து அருணகிரிநாதர் உருப்படுவதற்கான வழியைக் காட்டுகிறார். முன்பு மதம் பிடித்த யானை போலத் தன் இச்சைப்படி எங்கெங்கோ ஒடித் திரிந்து கொண்டிருந்தது. தன் வழியில் குறுக்கிடுபவர்களின் மேல் சினம் கொண்டு சீறி விழுந்தது. உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் தானே பற்றிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையால் அலைந்து ஓடிக் கொண்டு இருந்தது. அழுக்கு மூட்டையைச் சுமந்து செல்லும் கழுதை போல அது இருந்தது. இப்பொழுது அந்த மனம் மடைமாறிச் சென்றது. நல்ல மனம் ஆகிவிட்டது. வெகுளி அடங்கி இருக்கிறது. தன்னிடமுள்ள பொருள்களை எல்லாம் தானமாகப் பிறருக்குக் கொடுத்துப் பற்று நீங்கி இருக்கிறது. முன்பு சிறிது கண்ணை மூடினாலும் என்ன என்ன என்னமோ வரும்.யார் யார் முகமோ தோன்றும். இப்பொழுது கண்ணை மூடும் பொழுது முருகப் பெருமானின் திருவுருவந்தான் வருகின்றது. அவன் திருவடி சம்பந்தமான நினைவுகள்தான் வருகின்றன.
ஞானம் என்ற பெரும் பொன்னைப் பெற்ற ஆன்மா பயப்படுகிறது. இதை மனமாகியசிறுவன் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமேஎன அஞ்சுகிறது. மாயை பலப்பலவிதமாக வந்து வேறு வேறு விளையாடல்களைச் செய்யும். அவற்றினின்றும் பிழைத்து, ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்று பெரியோர்கள்அஞ்சுவார்கள்.
நமக்குக் கிடைத்த பொன்னை வீட்டில் வைத்திருந்தால் திருடர் பயம். பொன்னைக் கொண்டு போய் வங்கியில் பாதுகாப்பாக வைத்து விடுகிறோம். அவ்வாறே பணத்தையும் வீட்டில் வைத்து இருந்தால் பயம். பாதுகாப்பாக வங்கியில் கொண்டு வைத்து விடுகிறோம்.நிலையில்லாமல் அழிந்து போகும் பொன்னுக்கும் பொருளுக்குமே இவ்வளவு பாதுகாப்பு என்றால், பலகாலம் செய்த தவப் பயனாகப்பெற்ற அருட்செல்வத்தைப் பாதுகாக்க எவ்வளவு விழிப்புணர்வு இருக்க வேண்டும்! எனவே, இறைவன் திருவருளால் பெற்ற ஞானச் செல்வத்தைப் பாதுகாத்து வைக்க வேண்டுமே என்று அறிவு பயப்படுகிறது.
இரவு நேரத்தில் தாமத குணத்தினால் சோர்வு வருகிறது. பகல் பொழுதிலோ சத்துருக்கள் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். போதாக் குறைக்கு என்று இதசத்துருக்களும் (இதம் செய்வது போலத் தோன்றுகின்ற சத்துருக்கள்) கூடவே இருக்கின்றார்கள். ஆகவே, ஒப்பற்ற பொருளாகிய அருட்செல்வத்தைக் காப்பாற்றப் பகலும் கூடாது, இரவும் கூடாது. பகல் என்பது நினைப்பு. இரவு என்பது மறப்பு. உலகத்தோடு ஒட்டிவாழ்ந்து கொண்டே போகிற நிலை பகல். செயலை மறந்து தூக்கத்திற்குள்அடங்கிக் கிடக்கிற நிலை இரவு. இந்த இரண்டு நிலையும் நமக்கு உறுதியான பயன் ஒன்றையும்அளிக்கவில்லை. பகலும் இரவும் நாம் ஓயாமல் ஒழியாமல் வேலை செய்கிறோம். இரவில்படுத்துத் தூங்குவதும் ஒரு வேலைதானே? அவை உயிருக்கு நலம் செய்யும் பயனைஅளிப்பதில்லை.
நனவுநிலை சகலாவத்தை எனப்படும். சகல அவத்தைகளும் பகலில், விழிப்பு நிலையில் உண்டு. தூக்கமாகிய நிலை கேவல அவத்தை எனப்படும். சகலத்தில் பயனற்ற வீண் வேடிக்கைக் காரியங்களைச் செய்கிறோம். கேவலத்தில் அந்த முயற்சியும் இல்லாமல் தூங்குகிறோம். பகலில் தூங்கினாலும், ஆன்மா கேவல அவத்தையில் உள்ளதாகவே கொள்ளவேண்டும். ஆகவே, பகலும் இரவும் நமக்கு இன்பத்தைத் தருவதில்லை. அனுபவிக்கின்ற இன்பம் அனைத்தும் துன்ப சொரூமானவையே. இன்பம் போலத் தோன்றுகின்ற துன்பத்தையே அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆன்மாவுக்கு இன்பத்தைத் தருவதற்குப் பகல்இரவு அற்ற இடம் வேண்டும்.
ஒர் அருமையான பொருள் கிடைத்துவிட்டால், யாருடைய கண்ணிலும் படாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது போலவே, கிடைத்தற்கரிய பேறான ஞானத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அருணகிரிநாதர் மனத்தைப் பார்த்துச் சொல்கிறார். ஒரு பூதர்க்கும் தெரியாத ஓர் இடம் உண்டு. நமக்கு இரவும் கூடாது. பகலும் கூடாது. இரவு, பகல் அற்றஅந்த வெளிக்குப் போய் விடலாம் வாஎன்று அழைக்கிறார். ஒரு பூதர்க்கும் தெரியாத இடம் மட்டுமல்ல. ஒரு பூதர்க்கும் அறிய ஒண்ணாத இடமும் அதுதான்.
போகிற வரைக்கும்துணை வேண்டும். போன பிறகும் துணை வேண்டும். கள்ளர் நம்மைக் கண்டு அஞ்சி நெருங்காமல் போக வேண்டும் என்றால் ஆயுதம் கையில் உடைய ஒருவன் துணையாக வர வேண்டும். பெரிய பெரிய அசுரர்களைச் சங்காரம் செய்து வாகை சூடிக்கொண்டிருக்கும் தேவசேனாபதியாகிய முருகப் பெருமான் திருக்கையில் வேலாயுதம் உள்ளது. அவனுடைய பாதாரவிந்தங்களையே சரணாகப்பற்றிக் கொண்டு ஈடேறலாம்என்கிறார். பாதம் = திருவடி. அரவிந்தம் = தாமரை. திருவடித் தாமரையைப் பாதாரவிந்தம் என்கிறார்.
முருகன் திருக்கையில் உள்ள வேல் ஞானசத்தி ஆகும். தாமத குணத்தைப்போக்கி, அறியாமையை நீக்கி, அறிவைக் கொடுப்பது அந்த ஞானவேல். ஞானத்திற்கு உருவம் இல்லை 'அவன் மிக்க அறிவாளி' என்றால், அவனிடமுள்ளஅறிவைக் காண இயலாது. அதற்கு உருவம் இல்லை. அவன் அறிவுக்கு ஒர் உருவம் கொடுக்க வேண்டுமென்றால் நாம், 'அவன் பெரிய அறிவாளி. பட்டதாரி' என்று கூறுகிறோம். அறிவுக்கு உருவம் இல்லையானாலும் பட்டதாரி என்பதன் மூலம் அதற்கு ஒரு வகையாக அடையாளம் கூறுகிறோம். அதையே உருவம் என்று சொல்லலாம். இறைவனோடு தொடர்வுடைய அறிவு எதுவோ, அது மெய்ஞ்ஞானம். ஞானம் இருவகைப்படும். கல்வி, கேள்வியினாலே வருவது அபரஞானம். உணர்வினாலே, அனுபவத்தினாலே பெறுவது பரஞானம்.
அபர ஞானத்தைத் தர உதவியாக இருப்பவை நூல்கள். எல்லா நூல்களிலும் சிறந்தது வேதம். வேதம் இறைவன் அருளியது என்பர். அது எல்லோருக்கும் பொதுவானது. வேதத்தோடு சேர்த்துச் சொல்லப்படுபவை ஆகமங்கள். அந்த அந்தச் சமயத்தவர்களுக்கு ஏற்றபடி தனித்தனியே ஆகமங்கள் இருக்கின்றன. பொதுவான வேதத்தையும், சிறப்பான ஆகமங்களையும் சேர்த்து வேதாகமம் என்று சொல்வது வழக்கம். வேதத்தில் மந்திரம் மிகவும் முக்கியம். ஆகமத்தில் தந்திரம் மிகவும் முக்கியம். எனவே, வேதத்தை மந்திரம் என்றும் ஆகமத்தைத் தந்திரம் என்றும் சொல்வர். வேதம் இறைவனைப் பற்றியும், அறங்களைப் பற்றியும் சொல்கிறது. ஆகமங்கள் இறைவனை அடைவதற்குரிய வழிபாட்டு முறைகளைச் சொல்கின்றன. வேதம் அறத்தை எடுத்துச் சொல்வதன் மூலம் வாழ்வியலைக் கூறும். ஆகமம் வழிபாட்டு நிலைகளைக் கூறும்.
ஞானம் எப்படி வருகிறது? வேதமாக வருகிறது. ஆகமமாக வருகிறது. "ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்" என்பார் மணிவாசகர். பிற நூல்களாக வருகிறது. முருகப் பெருமான் திருக்கரத்திலுள்ள வேலை "ஞானவேல்" என்று சொல்வார்கள் அருணகிரிநாதர் அந்த ஞானத்திற்கு உருவம் கொடுத்து ஞானம் தரும் நூலாகிய வேதத்தையும், ஆகமத்தையும் நினைத்து, வேதாகமவேல் என்று சொல்கிறார்.இ றைவனோடு சம்பந்தப்பட்டட எல்லாவற்றையுமே வேதம் என்பது வழக்கம். சிவபிரான் ஏறிச் செல்லும் இடபம் வேதம். அவன் அணிகின்ற ஆடை வேதம். அவன்பாதுகை வேதம். அவன் சிலம்பு வேதம் என்பர்.
"மறையே நமது பீடிகையாம்;மறையே நமது பாதுகையாம்;
மறையே நமது வாகனமாம்;மறையே நமது நூபுரமாம்;
மறையே நமது கோவணமாம்;மறையே நமது விழியாகும்;
மறையே நமது மொழியாகும்;மறையே நமது வடிவாகும்"
என்பது திருவிளையாடல் புராணம்.
"மன்னுகலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ"
என்பது திருவாசகம்.
அருணகிரிநாதப் பெருமான் இந்த முறையை நினைத்து, முருகன் வேதாகமத்தையே வேலாக வைத்திருக்கிறன் என்கிறார். அந்த வேல், சித்திரவேல். எனவே, "வேதாகமச் சித்ர வேலாயுதன்" என்றார். கிடைப்பதற்கரிய பொருள் ஒன்று கிடைத்தால்,அதை அறிவுடைய மனிதனால்தான் காப்பாற்ற முடியும். உயர்ந்த ஞானச் செல்வத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதற்குப் பாதுகாவலாக இருப்பது ஞானவேல்.
அந்த ஞானவேல் உலகத்தைத் தனக்குள் அடக்கி ஆண்ட சூரபதுமனது உடலைத் துளைத்து, அவனுக்குக் கவசம் போல் இருந்த கிரெளஞ்ச மலையையும் பொடிப் பொடியாக்கியது. வேல் நமக்குத் துணையாக வேண்டுமென்றால் அந்த வேலை உடைய வேலாயுதன் திருவடியை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். அவன் காலைப் பற்றினால் வேலை விடுத்து நம்மைக் காப்பாற்றுவான்.
அநாதி காலம் தொட்டு அடியவர்கள் எப்போதும் அருச்சனை செய்து வரும் முருகனது திருவடியில் அடியவர்கள் தூவிய மலர்கள் இருக்கின்றன. வெம்மையுடைய மனிதன் கையில் பட்டால் மலர் வாடிவிடும். செடியில் இருப்பது போலவே, அதையும் விட மிக்க மலர்ச்சியோடு, முருகன் திருவடிகளில் வெட்சி மலர் கிடக்கிறது. அவ்வளவு தண்மை உடையது அவன் திருவடி. மலரை அணிந்ததோடு தண்டையையும் அணிந்த திருவடி அது.
'அந்தத் திருவடித் தாமரைகளை நமக்கு அரணாகப் பற்றிக் கொண்டு போவோம் வா, மனமே!' என்கிறார் அருணகிரிநாதர். நாம் பற்றிக் கொள்வது கால். நமக்கு அஞ்சல் என்று சொல்வது கை. நாம் தண்ணீர் விடுகிற இடம் வேர். நமக்குக் காய் தருகிற இடம் செடியின் மேற்பகுதி. அவனது திருவடியைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டு, 'நீயே சரணம்' என்று கதறினால் அவன் கை, 'அஞ்சல்' என்று சொல்லும். அவனது வெட்சி பூத்த, தண்டை அணிந்த பாததாமரையைப் பற்றிக் கொண்டால், அவன் கையிலுள்ள வேல் நம்மைப் பாதுகாக்கும். நாம் பாதுகாப்பான இடத்தை அடையலாம்.
இப்போதே "இனி இங்கே ஒரு கணமும் இருக்கக் கூடாது. இந்தக் கணமே வேறு இடத்திற்குப் போய் விடுவோம்' என்கிறார் அருணகிரிநாதர் தமது நெஞ்சை நோக்கி. அது பகலும் இரவும் அற்ற இடம். நினைப்பும் மறப்பும் அற்ற இடம். இன்பதுன்பம் அற்ற இடம். நமக்கு கிடைத்துள்ள அருள்ஞானச் செல்வத்தைக் கள்வர்கள் பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று அச்சப்பட அவசியம் இல்லாத இடம்.
இப்படித்தான் அருளாளர்கள் இறைவனது திருவருளால் ஞானத்தைப் பெற்ற மாத்திரத்தில் அவனுடைய திருவடியில் சேர்ந்து எல்லை இல்லா இன்ப நலங்களைத் துய்க்க ஒடுகிறார்கள். அவர்களது உடல் நம்மிடையே இருந்தாலும், மனத்தால் அவர்கள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்று விடுகிறார்கள். அப்படி ஒடிவிட வேண்டுமென்ற உள்ளம் படைத்த மக்களுக்குச் சொல்வதைப் போல தமது நெஞ்சத்துக்குச் சொல்கிறார் அருணகிரிநாதர். இங்கே இரவு பகல் இருக்கிறது. ஞானத்தைக் குலைக்கும் அஞ்ஞானமாகிய சூது இருக்கிறது. "அல்லும் பகலும் இல்லாச் சூதானது அற்ற வெளிக்கே ஒளித்து, சும்மா இருக்கப்போதாய்" என்கிறார்.
சூதானது அற்ற வெளி என்றால் இரவுபகல் இல்லாத இடம். இரவு அற்ற இடம் என்றால், அங்கே பகல் உண்டு என்று தோன்றும். பகல் அற்றது என்றால் இரவு உண்டு என்று ஆகும். இரண்டும் ஒன்றுக்கொன்று இனமானவை. வெண்தாமரை என்ற சொல்,செந்தாமரை என்ற இனத்தை நினைப்பூட்டுகிறது. அதைப் போல இரவு என்று சொன்னால் பகல் இருப்பது நினைவுக்கு வருகிறது. அருணகிரிநாதர் காட்டுகின்ற வெளியோ பகலும் இரவும் இல்லாத இடம். மறதி, நினைப்பு ஆகிய இரண்டும் அங்கே இல்லை. இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. எங்கும் ஓரே ஆனந்தம். ஆனந்த வெள்ளம் எங்கும் பாய்கிறது. சூது அற்ற இடம் அது. வெறும் வெட்ட வெளியான இடம் அது.
வெளி என்பது ஆகாயம். ஆகாயம் ஐந்து பூதங்களுக்குள் ஒன்று. மற்றப் பூதங்களை எல்லாம் தன்னுள் அடக்கி வைத்திருப்பது. அது பூத ஆகாயம். அந்த வெளி சூது உடைய வெளி. அதற்குமேல் ஓர் ஆகாயம் உண்டு. அதற்குச் சிதாகாசம் என்று பெயர். அது எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பது. பூத ஆகாசத்திற்குத் தோற்றம் உண்டு; முடிவு உண்டு. சிதாகாசத்திற்குத் தோற்றக் கேடு இல்லை. கால எல்லைக்குள், பூத எல்லைக்குள், மூச்சுக் காற்றுக்குள் அடங்கி வாழ்கின்ற நாம் காலனுக்குப் பயப்பட்டே வாழ வேண்டும். இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்ட இடத்தில், இரவும் பகலும் அற்ற வெளியில் சிதாகாசத்தில் இருக்கின்ற இறைவனோடு நாம் போய்ச் சேர்ந்து விட்டால், அங்கே காலபயம் இல்லை.
"பிணி மேய்ந்து இருந்த இருகால் குரம்பை இது நான் உடையது. இது பிரிந்தால் தருவாய் எனக்கு உன் திருவடிக் கீழ் ஓர் தலைமறைவே" என்றார் அப்பர் பெருமான். அப்படித் தலைமறைவாக இருக்கின்ற இடத்தை வேறு யாரும் அறிந்துகொள்ள முடியாது. அங்கே போவதற்கும் இறைவன் துணையாக இருப்பான். அங்கே போன பிறகும் துணையாக எப்பொழுதும் இருப்பான். இங்கே, இந்தப் பூவுகில்இருந்தால் ஒரு கணம்கூடச் சும்மா இருக்க முடிவதில்லை. ஒரு கணம்கூடத் தூக்கம் வருவதில்லை. எப்போதும் வேலை. பகலும் வேலை; இரவும் வேலை. பகலும், இரவும் இல்லா இடத்தில் வேலையே இருக்காது. எனவே, "சும்மா இருக்கப் போதாய்" என்கிறார்.
சும்மா இருப்பது என்பது, செயல் அடங்கி, பேச்சு அடங்கி, மனம் அடங்கி இருப்பதைக் குறிக்கும். மோன நிலை அது. இந்த மூன்றையும் "காஷ்டமெளனம்", "வாக்குமெளனம்", "மனோமெளனம்" என்றுசொல்வர். மனோமௌனம் என்பதுதான் பூரணமௌனம். இறைவனுடைய அருளைத் அடைந்த மாத்திரத்தில் அடியவர்கள் சொல் அடங்கி, செயல் அடங்கி, மனம் அடங்கிச் சிதாகாசப் பொருளோடு ஒன்றுபட்டுச் சும்மா இருக்கிறார்கள். அனுபவத்தில் ஈடுபடு ம்போது எல்லாம் அடங்கிவிடும். ஆராய்ச்சிக்கும் பேச்சுக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து செல்வதால் பயன் இல்லை. "ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா" என்று திருஞானசம்பந்தர் சொல்கிறார். இறைவனைப் பற்றியும், உயிரைப் பற்றியும், அவனருளைப் பெறுவது பற்றியும் ஆராய்ச்சி பண்ணத்தான் வேண்டும். உண்பதற்கு உணவு கிடைத்தால் அது உண்ணத் தகுந்த உணவுதானா என ஆராய்ச்சி செய்யலாம். அது உணவுதான் என்று அறிந்த பிறகு அதை உண்டு மகிழாமல், 'இது எந்த அரிசியால் ஆனது?அது எங்கே விளைந்தது? அது பழையதா, புதியதா? எந்தக் கடையில் வாங்கியது?" என்றெல்லாம் துருவித் துருவி ஆராய்ச்சி செய்வதால் ஒரு பயனும் இல்லை. பயனற்ற ஆராய்ச்சியால் இன்பமும் இல்லை. ஆன்மாவுக்கு உண்மையான ஆனந்தத்தைத் தருபவன் இறைவன் எனத் தெரிந்து கொண்டுவிட்டால், அவன் அருளைப் பெறுவதற்கு அந்தக் கணமே முயலவேண்டும். ஞானமாகிய செல்வம் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு இறைவனோடு ஒன்றுபட்டு இயைந்து ஏகாந்தமாக இன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலைதான் சும்மா இருக்கும் நிலை. சும்மா இருப்பதுதான் அனுபவம். அருணகிரியார் உபதேச முறையில் “மனமே! வா, சும்மா இருக்கலாம்" என்று சொல்கிறார்.
அப்படிச் சும்மா இருக்கின்ற நிலை ஒருவராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத நிலை ஆகும். மனத்தை வசப்படுத்துதல் அவ்வளவு எளிது அல்ல. "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது" என்ற தாயுமான அடிகளார் வேறு எந்த எந்தக் காரியங்கள் எளிதானவை என்று பட்டியல் இட்டுக் காட்டுகிறார்.‘சும்மா இரு’ என்று எளிதில் சொல்லி விடலாம். அதுதான் கடினம் என்றார் தாயுமானவர். அதற்கு அருள் செய்யச்சொல்லி இறைவனை வேண்டுகிறார்.
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்,
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம், ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாம்,
கட்செவி எடுத்து ஆட்டலாம்,
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்,
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்,
விண்ணவரை ஏவல்கொளலாம்,
சந்ததமும் இளமையோடு இருக்கலாம், மற்றொரு
சரீரத்தினும் புகுதலாம்,
சலமேல் நடக்கலாம், கனல்மேல் இருக்கலாம்,
தன்னிகரில் சித்திபெறலாம்,
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம்அரிது, சத்தாகிஎன்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.
இதன் பொருள் ---
என் சிந்தனையில் மெய்ப்பொருளாகத் திகழ்கின்ற அறிவு வடிவான தெய்வமே! ஒளிமயமான ஆனந்தமே! மதயானையை வசமாக்கி விடலாம், கரடி, புலியின் வாயைக் கட்டலாம், சிங்கத்தின் மீது ஏறலாம், பாம்பைக் கையில் பிடிக்கலாம், மற்ற உலோகங்களைப் பொன்னாக்கலாம், இன்னொருவருக்குத் தெரியாமல் நடமாடலாம், தேவர்களை அடிமையாக்கலாம், எப்போதும் இளமையோடு இருக்கலாம், இன்னோர் உடலில் புகலாம், நீர்மேல் நடக்கலாம், நெருப்பின்மேல் நடக்கலாம், இணையில்லாத சித்திகளையும் பெறலாம். ஆனால், இத்தனையையும் செய்தாலும், சிந்தனையை அடக்கிச் ‘சும்மா’ இருப்பது சிரமம். அந்தத் திறன் எளிதில் வந்துவிடாது, அதை எனக்கு அருள்வாய்!
சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கின்ற அரிய நிலையைப் பெறுவதற்கு இறைவன் திருவருள் புரியவேண்டும். அந்த நிலையை ஒருவராலும் உணர்ந்து கொள்ள முடியாது. அந்த நிலை இறைவன் திருவடியையே தஞ்சமாக அடைந்தவர்க்கே வாய்க்கும். நினைப்பு மறப்பு, இன்பதுன்பம் ஏதும் அறியாத இடம் இரவுபகல் அற்ற பரவெளி. அந்தப் பரவெளியில் ஒளித்துச் சும்மா இருப்பதற்கு இனியாவது வருவாயாக என்று நெஞ்சுக்கு நீதி புகல்கின்றார் அருணகிரிநாதர்.
சும்மா இருப்பதுதான் சுகம். அந்த சுகம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார் வள்ளல்பெருமான்.
"இன்று வருமோ, நாளைக்கே வருமோ, அல்லது மற்று
என்று வருமோ அறியேன்,எம்கோவே! - துன்றுமல
வெம்மாயை அற்று, வெளிக்குக் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்."
சொல் அற்ற நிலையில் சும்மா இரு என்று பரமகுருநாதன் ஆகிய முருகப் பெருமான் உபதேசித்த அனுபவத்தை, "சும்மா இரு சொல் அற என்றலுமே, அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே" என்றர் கந்தர் அனுபூதியில். அந்த நிலையைத் தனக்குக் காட்டுமாறு அறுமுகப் பரம்பொருளை வேண்டி நின்றார் சிதம்பர சுவாமிகள்.
"சும்மா இரு என நீ சொல், அப் பொருள் ஒன்றும்
அம்மா! அறிந்திலம் என்று உரைத்த - எம்மான்
அருணகிரிநாதர் அனுபவம் நாயேற்குக்
கருணைபுரி போரூரா காட்டு"
சும்மா இருக்கும் சுகத்தை விரைந்து பெற பரமகுருநாதன் திருவடிகளைச் சரணடைந்து, அவனது பரமகருணைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதனைப் பெறுவதற்கான தாகமும் வேகமும் நமது உள்ளத்தில் இருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment