நோய்களால் நலியாமல் காப்பாய் முருகா!
-----
முருகன் பவரோக வைத்தியநாதப் பெருமான். அவருடைய சீடர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்கட்கு நோய் வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.
"முருகா என உனை ஓதும் தவத்தினர், மூதுஉலகில்
அருகாத செல்வம் அடைவர், வியாதி அடைந்து நையார்,
ஒருகாலமும் துன்பம் எய்தார், பரகதி உற்றிடுவார்,
பொருகாலன் நாடுபுகார், சமராபுரிப் புண்ணியனே". --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை
இது திருப்போரூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் மீது, திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடி அருளிய பாடல்களுள் ஒன்று. நோயால் துன்பப் படாமல் காத்து அருள் புரியுமாறு முருகப் பெருருமானே வேண்டி சுவாமிகள் பாடிய பின்வரும் பாடலும் நித்திய பாராயணத்திற்கு உரியது.
"நோயுற்று அடராமல் நொந்து மனம் வாடாமல்
பாயில் கிடவாமல் பாவியேன் - காயத்தை
ஓர் நொடிக்குள் நீக்கி எனை ஒண்போரூர் ஐயா! நின்
சீரடிக் கீழ் வைப்பாய் தெரிந்து." --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை
நோய்களால் வருந்தாமல், மனம் நொந்து வாடாமல், நோய் காரணமாப் படுக்கையில் கிடக்காமல் காத்து, வாழ்நாள் முடிவில் தன்னைத் திருவடி நிழலிலே இறைப்பாறும்படியாகத் திருவருள் புரிய வேண்டும் என்று திருப்போரூர் முருகனை வேண்டிப் பாடிய பாடல் இது.
உலகிலே உள்ள எல்லா உயிர்களுக்கும் எக்காலும் நீங்காது தொல்லைப் படுத்தும் நோய்கள் மூன்று உள்ளன. அவைகளால் அல்லற்பட்டு உயிர்கள் உழல்கின்றன. இந்த மூன்று நோய்களினின்றும் தப்பி உய்ந்தவர் மிகச் சிலரே. எல்லா உயிர்கட்கும் என்றும் துன்பத்தைத் தரும் அந்த நோய்கள் பசிநோய், காமநோய், பிறவிநோய் என்பன ஆகும். பசி உடம்பைப் பற்றியது. காமம் உள்ளத்தைப் பற்றியது. பிறவி உயிரைப் பற்றியது. இவற்றைப் பற்றிச் சிந்திப்போம்.
பசிநோய் செய்யும் கொடுமைகள் ஏழுத ஏட்டில் அடங்கா. சொல்லப் புகுந்தாலும் சொல்லில் அடங்கா. பசி நோயினால் பீடிக்கப்படாத உயிர்கள் உலகில் இல்லை. விரத நாளிலும் கூட அப் பசிநோயைத் தாங்காமல் உணவை பலவேறு உருவில் உட்செலுத்துகின்றனர். பசி நோய் வந்தபோது, நடந்து கூட போகாமல் பத்தும் பறந்து போகுமாம். மானம், குலம், கல்வி, வண்மை, பொருளுடைமை, தானம், தவம், உயர்ச்சி, முயற்சி, வேட்கை என்ற பத்துக்கும் ஆபத்து வருகின்றது பசிப்பிணியால்.
"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்". --- நல்வழி.
பசி என்னும் நோயைத் தணித்துக் கொள்ள உயிர்கள் ஓயாது உழைக்கின்றன. பசி நோய் மிகுந்தபோது கண்ணொளி மங்குகின்றது. கைகால்கள் தடுமாறுகின்றன. ஏனைய கருவி கரணங்கள் தத்தம் செயல்களை இழக்கின்றன. நாக்கு புலர்கின்றது. கோபம் மலர்கின்றது. கொடிய செயல்களில் மனிதன் ஈடுபடுகின்றான். பெற்ற தாய் பசியின் கொடுமையால் குழந்தையை விற்றுவிடுகின்றாள். சிலர் உயிரைத் துறக்கின்றனர். சிலர் செயலை மறக்கின்றனர். சிலர் கடலுக்கு அப்பாலும் பறக்கின்றனர். சிலர் கடமைகளை மறக்கின்றனர்.
பசி நோயை அவ்வப்போது உணவு என்ற மருந்தைக் கொடுத்துத் தற்கால சாந்தியாகத் தடுக்கின்றனர். பசிப்பிணியைப் போக்கும் அன்னதானமே எல்லா தானத்திலும் உயர்ந்தது எனக் கருதினார் சிறுத்தொண்டர். அதனை மேற்கொண்டார் இராமலிங்க அடிகள். அவர் திருவுள்ளம் பசி என்ற உடனே நடுங்குமாம்.
"எட்டரும் பொருளே! திருச்சிற்றம்பலத்தே
இலகிய இறைவனே! உலகில்
பட்டினி உற்றார்,பசித்தனர்,களையால்
பரதவிக்கின்றனர் என்றே,
ஒட்டிய பிறரால் கேட்டபோது எல்லாம்
உளம் பகீர்என நடுக்குற்றேன்;
இட்ட உவ்வுலகில் பசிஎனில்,எந்தாய்!
என்உளம் நடுங்குவது இயல்பே." --- திருவருட்பா.
பசி நோயை மாற்றுவதற்கு மணிமேகலை அரும்பாடு பட்டாள். பசி எல்லாவற்றையும் அழிப்பதனால் தான் திருவள்ளுவர் அதனை "அழிபசி" என்றார்.
"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புஉழி". --- திருக்குறள்.
பசியைப் பொறுத்துக் கொள்ளுவதே பெரிய ஆற்றல் ஆகும். ஆயினும் அந்த ஆற்றலினும் பெரியது அப் பசியை மாற்றுவார் ஆற்றல் ஆகும்.
"ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல், அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்".
என்று அழகாகக் கூறுகின்றனர் பொதுமறை ஆசிரியர்.
இத்தகைய பொல்லாத பசிநோயை முருகப் பெருமானுடைய திருநாமங்களை உள்ளம் குழைந்து உருகி ஒதி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றார் அருணகிரிநாதர்...
"குகனெ குருபர னேயென நெஞ்சில்
புகழ,அருள்கொடு நாவினில் இன்பக்
குமுளி சிவஅமுது ஊறுக உந்திப் ... பசிஆறி"....--- திருப்புகழ்.
காமநோயினால் கலங்காத மனிதர்களோ தேவர்களோ இல்லை. எறும்பு முதல் யானை ஈறாக உள்ள எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்களும் இந் நோயினால் இடர்ப்படுகின்றன. அயிராவதம் என்னும் வெள்ளையானை மேல் பவனிவரும் இந்திரன், காமநோயினால் பூனையாகிப் பதுங்கி ஓடினான். சந்திரன் உடல் தேய்ந்தான். இராவணன் மாய்ந்தான். தவத்தினின்றும் விசுவாமித்திரன் ஓய்ந்தான். சச்சதந்தன் சாய்ந்தான். கீசகன் தீய்ந்தான். இதன் வலிமைதான் என்னே? தளர்ந்த வயதிலும் இந் நோயினால் இடர்ப்படுகின்றனர். பலர் பழியையும் பாவத்தையும் பாராது பரதவிக்கின்றனர். இந்த நோய்க்குத் தற்கால சாந்தியாக உள்ள நல் மருந்து தருமபத்தினி. அந்த நன்மருந்தை நாடாது, புன்மருந்தை நாடி இரவு பகலாக ஏக்குற்று, பார்த்தவர் பரிகசிக்க, பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்து, சன்மார்க்கத்தில் கிள்ளிக் கொடுக்காமல் மீளா நரகத்திற்கு ஆறாகின்றனர்.
"உடம்பினால் ஆயபயன் எல்லாம், உடம்பினில் வாழும்
உத்தமனைக் காணும் பொருட்டு".
என்பதனை அறியாமல், உடம்பையும் பாழ்படுத்துகின்றனர். காமநோயினால் நகுஷன் விண்ணிழந்தான். அசமஞ்சன் மண்ணிழந்தான். காகாசுரன் கண்ணிழந்தான்.
இந் நோயை அறவே அகற்றினாரும் உள்ளனர். குமரகுருபரரும், சிவப்பிரகாசரும், அப்பர் பெருமானும் எடுத்துக் காட்டாக உள்ளனர். அருணகிரிநாதர் இக் காமநோயைக் கடிந்தார். அவருடைய திருப்பாடல் சான்று பகர்கின்றது. முருகனுடைய திருவடித் தியானமே காமநோய்க்கு நன்மருந்து என்கிறார் அருணகிரிநாதர்.
"கடத்தில் குறத்தி பிரான் அருளால்,கலங்காத சித்தத்
திடத்தில் புணைஎன யான் கடந்தேன், சித்ர மாதர்அல்குல்
படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித்
தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே." --- கந்தர் அலங்காரம்.
அடுத்து உள்ளது பிறவிநோய். இந்த நோய்தான் மிகக் கொடியது. இறைவன் என்றோ அன்றே நாம் உண்டு. அன்று தொட்டு இன்று வரை பிறவிநோய் தொடர்ந்து நம்மை வாட்டுகின்றது. பிறவி நோயை மாற்றும் பொருட்டு நம் நாட்டில் அறிஞர்கள் எத்துணையோ முயற்சிகள் செய்தனர். கானகம் சென்றனர். கனலில் நின்றனர். புனலில் மூழ்கினர். புல்லைத் தின்றனர். புலன்களை வென்றனர். தனத்தை வெறுத்தனர். மனத்தை ஒறுத்தனர். உடம்பை வறுத்தனர்.
"பிறப்பு என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு".
என்பது பொய்யாமொழி.
செய்யாமொழியிலும் இத்துணைத் தெளிவாகக் கூறவில்லை. செம்பொருள் என்பது முருகனுடைய திருவடி. அது சிறந்த வடிவு உடையது. ஏனைய தேவர்களது பாதமும் சிவப்பாக இருந்தாலும், அத்தேவர்கள் செத்துப் பிறக்கின்றவர்கள். "பெம்மான் முருகன் பிறவான் இறவான்”. "கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்”."செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள" என்ற அருள் வாக்குகளைச் சிந்தித்துத் தெளிக.
"பலகாலும் உனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்து உடன் வாழ ...... அருள்வேளே,
பதியான திருத்தணி மேவு சிவலோகம் எனப் பரிவு ஏறு
பவரோக வயித்திய நாத ...... பெருமாளே". --- (நிலையாத) திருப்புகழ்.
எனவே, முருகவேளின் திருநாமத் துதியினால் உடல்நோயாகிய பசியையும், திருவடித் தியானத்தினால் உள்ளநோயாகிய காமத்தையும், பிறவி நோயையும் மாற்றுதல் வேண்டும்.
திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் பாடி அருளிய மேற்குறித்த பாடல்களுக்குக் கருத்தாக அமைந்த அருணகிரிநாதப் பெருமான் பாடி அருளிய, நித்திய பாராயணத்திற்கு உரியதிருப்புகழ்ப் பாடலைக் காண்போம்.
"இருமல்,உரோக முயலகன்,வாதம்,
எரிகுண,நாசி ...... விடமே, நீர்
இழிவு, விடாத தலைவலி,சோகை,
எழுகள மாலை,...... இவையோடே,
பெருவயிறு, ஈளை,எரிகுலை,சூலை,
பெருவலி,வேறும் ...... உளநோய்கள்,
பிறவிகள் தோறும் எனை நலியாத-
படி, உன தாள்கள் ...... அருள்வாயே.
வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய,அநேக ...... இசைபாடி
வரும், ஒரு கால வயிரவர் ஆட,
வடிசுடர் வேலை ...... விடுவோனே
தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி
தரு திரு மாதின் ...... மணவாளா!
சலம் இடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு ...... பெருமாளே.
இதன் பதவுரை ---
வரும் ஒரு கோடி அசுரர் பதாதி மடிய --- போருக்கு வந்த ஒரு கோடி அசுர சேனைகள் மாளும்படியும், அநேக இசைபாடி வரும் --- பலப்பல வகையான இசைப்பாடல்களைப் பாடி வந்து, ஒரு கால வயிரவர் ஆட --- ஒப்பற்ற காலபைரவர் நடம் ஆடவும், வடிசுடர் வேலை விடுவோனே --- கூர்மையும் ஒளியும் உடைய வேலாயுதத்தை விடுத்தவரே!
தரு நிழல் மீதில் உறை --- கற்பகமரத்தின் நிழலில் வாழ்கின்ற, முகில் ஊர்தி தரு --- மேக வாகனனாம் இந்திரன் தந்த, திரு மாதின் மணவாளா --- தெய்வயானையம்மையின் கணவரே!
சலம் இடை பூவின் நடுவினில் வீறு --- கடலுக்கு நடுவில் விளங்கும் பூதலத்தில் நடுவிடத்தில் பெருமை பெற்று விளங்கும், தணி மலை மேவு பெருமாளே --- திருத்தணிமலை மீது எழுந்தருளியுள்ள பெருமை மிகுந்தவரே!
இருமல் --- இருமல் நோயும், உரோக முயலகன் --- முயலகன் என்ற நோயும், வாதம் --- வாத நோய்களும், எரிகுண --- வெப்பு நோயும், நாசி விடமே --- மூக்கும் பீனசமும், நீரிழிவு --- நீரிழிவு என்ற நோயும், விடாத தலைவலி --- நீங்காத தலைவலியும், சோகை --- சோகை நோயும், எழு களமாலை --- கழுத்தைச் சுற்றி எழுகின்ற கண்ட மாலையும், இவையோடே --- ஆகிய இவைகளுடன், பெருவயிறு --- பெருவயிறு என்னும் மகோதரமும், ஈளை --- சுவாச காசமும், எரிகுலை --- குலை எரிச்சலும், சூலை --- சூலை நோயும், பெருவலி --- பெரிய நோயும், வேறும் உள நோய்கள் --- இவை அன்றி மற்றும் உள்ள நோய்களும், பிறவிகள் தோறும் --- ஒவ்வொரு பிறவியிலும், எனை நலியாதபடி --- அடியேனைப் பற்றி துன்புறுத்தாத வண்ணம், உன தாள்கள் அருள்வாயே --- தேவரீருடைய திருவடிகளைத் தந்தருளுவீர்.
இத்திருப்புகழை, அன்பர்கள் நாள்தோறும், ஒருமைப் பட்ட உள்ளத்துடன்,உருகிய சிந்தையுடன் ஓதினால், நோய்கள் தீண்டப் பெறமாட்டார்கள். தீண்டிய நோய்கள் விலகப் பெறுவார்கள். நோயின்றி வாழ்ந்தும் வளம் பெறுதற்பொருட்டு அடிகளார் இத்திருப்புகழை இனிது பாடிக் கொடுத்தருளினார்.
மனிதனை உயிருடன் வைத்து வதைக்கின்ற நோய் இருமல். இதில் ஆஸ்துமா, க்ஷயம், புகை இருமல், தூறு இருமல் என்று பலவகை உண்டு. இருமல் என்னும் நோயானாது இரவுக் காலத்தில் அதிகமாக வருத்தும். எலும்பு குலுங்கிவிடுவது போலத் துன்புறுத்தும். இதனை, "உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடும் இருமல்" என்று பிறிதொரு திருப்புகழில் பாடினார் அடிகளார். எனவே, மேற்குறித்த திருப்புகழ்ப் பாடலில், இருமலை முதலில் வைத்துப் பாடினார்.
முயலகன் என்பது ஒரு நோய். கை கால் இழுத்துக் கொண்டு துடிக்கச் செய்யும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருத்தலத்தை அடைந்தபோது, அவ்வூர்த் தலைவர் கொல்லி மழவன் என்பவர், தம் குழந்தைக்கு வந்த முயலகன் என்ற நோய் தீரும் படி கோயிலிலே குழந்தையை வைத்து வருந்தினார்.அப்போது ஆலய வழிபாட்டிற்கு வந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடியருளினார். அதனால் கொல்லிமழவன் புதல்வியின் முயலகன் என்ற நோய் நீங்கியது. அன்றியும் அக்கோயில் நடேசப் பெருமான் திருவடியின் கீழ் இருந்த முயலகனும் மறைந்தனன். அண்டவாதம், பட்சவாதம், பாரிசவாதம் முதலிய வாத நோய்கள் இறைவனைப் பிடிவாதமாக வணங்காத பாவிகட்கு வரும். எரிகுணம் என்பது வெப்புநோய். கைகால் கண் காது முதலிய இடங்களில் ஒரே எரிச்சலுடன் வரும். நாசியில் வரும் பீனசம் முதலிய நோய்கள். நீரில் சர்க்கரை வரும் பொல்லாத நோய். இது பலரைப் பிடித்து வாட்டி வருத்தும். தீராத தலைவலி, கழுத்தைச் சுற்றி புற்று போல் எழுகின்ற கண்டமாலை.பானை போல் வயிறு பெருத்தல் (மகா + உதரம் = மகோதரம்) ஆகிய நோய்களும் மனிதனுக்கு வேதனையைத் தரும். சுவாசகாசம்; கோழை, சளி இவைகள் மிகுந்து வருத்தும்.குலை எரிச்சல் என்னும் நோய் வருத்தும். ஆலகால விடம் உள் புகுந்தது போல் குடலைப் புரட்டிப் புரட்டித் துன்புறுத்தும்.
பெருநோய், தொழுநோய் என்கின்ற கொடிய நோய். இது தான் எல்லா நோய்கட்கும் அரசன் அதனால் இதைக் கண்டால் மற்ற நோய்கள் யாவும் தொழும். அதனால் தொழு நோய் எனப்பட்டது.
மேற்குறித்த நோய்கள் மட்டும் அல்லாது, இன்னும் என்னென்ன நோய்கள் உள்ளனவோ, அவை யாவும் எல்லாம் இந்தப் பிறவியில் மட்டும் அல்ல. இனி எடுக்கப் போகும் பிறவிகள் தோறும் பற்றி வருத்தா வண்ணம் அருள்புரிவாய் என்று முருகப் பெருமானை அடிகளார் வேண்டினார். நமக்கும் பொருத்தமான வேண்டுதல் இதுவே ஆகும்.
முருகன் பவரோக வைத்தியநாதப் பெருமான். அவருடைய சீடர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனம், மொழி, மெய் என்னும் திரிகரணங்களால் வழிபடும் அடியார்கட்குப் பிணியே வராது. வந்தாலும் முருகன் காப்பாற்றி அருள் புரிவான். நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.
No comments:
Post a Comment