பொது --- 1085. கொடியன பிணிகொடு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கொடியன பிணி (பொது)


முருகா! 

திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.


தனதன தனதன தத்தத் தத்தத்

     தாந்தாந் ...... தனதான


கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்

     கூன்போந் ...... தசடாகுங்


குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்

     கோண்பூண் ...... டமையாதே


பொடிவன பரசம யத்துத் தப்பிப்

     போந்தேன் ...... தலைமேலே


பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்

     பூண்டாண் ...... டருள்வாயே


துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்

     சூழ்ந்தாங் ...... குடனாடத்


தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்

     தோந்தாந் ...... தரிதாளம்


படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்

     பாழ்ங்கான் ...... தனிலாடும்


பழயவர் குமரகு றத்தத் தைக்குப்

     பாங்காம் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்



கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்

     கூன்போந்து, ...... அசடு ஆகும்


குடில்உற வரும்ஒரு மிக்கச் சித்ரக்

     கோண் பூண்டு ...... அமையாதே,


பொடிவன பரசமயத்துத் தப்பிப்

     போந்தேன் ...... தலைமேலே,


பொருள்அது பெற,அடி நட்புச் சற்றுப்

     பூண்டுஆண்டு ...... அருள்வாயே.


துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்

     சூழ்ந்து ஆங்கு ...... உடன் ஆட,


தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்

     தோம்தாம் ...... தரிதாளம்


படிதரு பதிவ்ரதை ஒத்த, சுத்தப்

     பாழ்ங்கான் ...... தனில் ஆடும்


பழயவர் குமர! குறத் தத்தைக்குப்

     பாங்கு ஆம் ...... பெருமாளே.

பதவுரை

துடிபட அலகைகள் கைக் கொட்டிட்டுச் சூழ்ந்து ஆங்கு உடன் ஆட --- உடுக்கை ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, 

தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி தாளம் படிதரு பதிவ்ரதை ஒத்த --- தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தை பதிவிரதை ஆகிய உமையம்மையார் போட, அதற்குத் தகுந்தபடி, 

சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர --- தூய சுடுகாட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!

குறத் தத்தைக்குப் பாங்கு ஆம் பெருமாளே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

கொடியன பிணி கொடு --- கொடிதான நோய்களை அடைந்து,

விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும் --- விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்று, 

குடில் உற வரும் ஒரு மிக்கச் சித்ரக் கோண் பூண்டு அமையாதே --- உடலில் பொருந்தி வரும் ஒரு பெரும் விநோதமான நிலையை அடையாதபடி, 

பொடிவன பரசமயத்துத் தப்பிப் போந்தேன் தலைமேலே --- நிலைத்து நிற்காது அழிவுறுகின்ற பரசமயங்களில் இருந்து பிழைத்து வந்துள்ள அடியவனது தலையின்மேல்,

பொருள் அது பெற அடி நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு அருள்வாயே --- மெய்ப்பொருளை உணருமாறு,  திருவடியில் அன்பு வைக்க ஆண்டு அருள்வாயாக.

பொழிப்புரை

உடுக்கை ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தை பதிவிரதை ஆகிய உமையம்மையார் போட, அதற்குத் தகுந்தபடி, தூய சுடுகாட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!

குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

கொடிதான நோய்களை அடைந்து, விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்று, உடலில் பொருந்தி வரும் ஒரு பெரும் விநோதமான நிலையை அடையாதபடி, நிலைத்து நிற்காது அழிவுறுகின்ற பரசமயங்களில் இருந்து பிழைத்து வந்துள்ள அடியவனது தலையின்மேல், மெய்ப்பொருளை உணருமாறு,  திருவடியில் அன்பு வைக்க ஆண்டு அருள்வாயாக.

விரிவுரை

கொடியன பிணி கொடு, விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும் குடில் ---

குடில் - குடிசை.

"கால்கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து

தோல்மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்

ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,

மால்கொடுத்து, ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே."    --- அப்பர் தேவாரம்.

இதன் பொருள் ---

மாமறைக்காடு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபிரான், கால்களைக் கொடுத்து, கைகளை ஏற்றி, எலும்புக் கழிகளை நிரைத்து, மேலே புலாலை வேய்ந்து, குருதி நீரைக் கலந்து, தோலை தட்டிச் சுவரை வைத்து, இரண்டு வாயில்களையும், ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி, அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.

இந்த உடம்பு எப்படிப் பார்த்தாலும் புழுக்கள் நெளிகின்றதும் நோய்கள் மலிந்து உள்ளதும் ஆகும்.

"எல்லாப் படியாலும் எண்ணினால், இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்

அறிந்து இருப்பார், ஆதலினால், ஆங்கமல நீர்போல்

பிறிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு." --- ஔவையார்.

இதன் பொருள் ---

எல்லா வகையாலும் எண்ணிப் பார்க்கும்போது இந்த உடம்பு பொல்லாத புழுக்கள், அவற்றால் மிகும் நோய் அகியவற்றைக் கொண்ட அற்பமான ஒரு கூடு. (உயிர்க் குருவி போய்விட்டால் அதனால் என்ன பயன்) இந்த உண்மையை நல்லவர்கள் அறிந்திருக்கின்றனர். அதனால் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல உடல் இன்பத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பர்.

"பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க்கூரை" என்பார் மணிவாசகப் பெருமான்.

இந்த உடம்பானது மாயையால் ஆனது. பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை என்னும் புண்ணியம், தீவினை என்னும் பாவம் ஆகிய இருவினைகளின் பயனாக இந்த உடம்பானது இறைவனால் படைத்தளிக்கப்படுகின்றது. இருவினைகளை அனுபவித்துக் கழித்து, மேலும் வினைகள் சாராமல் வாழ்ந்து, இறைவன் திருவடியைச் சார்வதற்காக வந்த இந்த அருமையான உடம்பு நிலையில்லாதது. மாற்றத்திற்கு உரியது. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. 

    "ஐந்து வகை ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம், புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன்" என்றார் தாயுமானார்.

இந்த உடம்பே நன்மை தீமைகளை அறியத் துணை நிற்பது. உய்யும் நெறியில் நின்று, வினைகள் சாவியாகிப் போகுமாறு வாழ்ந்து ஈடேற வேண்டும். ஆவி சாவியாகிப் போக விடுதல் திருவருட்கு உடம்பாடானது அல்ல. உடம்பை உண்மை என்று கருதுகின்ற அறியாமை நீங்கவேண்டும். குரங்கின் கையில் அகப்பட்ட மாலை போல இந்த உடலின் அருமை அறியாது, இதனை வீணாக்கக் கூடாது.


"பஞ்சுஇட்ட அணைமிசை

கொஞ்சி, பலபல விஞ்சைச் சரசமொடு

          அணைத்து, மலர் இதழ் கடித்து, இருகரம்

          அடர்த்த குவிமுலை அழுத்தி, உரம் மிடர்

சங்குத் தொனியொடு பொங்க, குழல்மலர்

     சிந்த, கொடிஇடை தங்கிச் சுழல்இட,

          சரத் தொடிகள் வெயில் ஏறிப்ப, மதிநுதல்

          வியர்ப்ப, பரிபுரம் ஒலிப்ப, எழுமத

சம்பத்து இது செயல் இன்பத்து இருள்கொடு,

     வம்பில் பொருள்கள் வழங்கிற்று, இது பினை

          சலித்து, வெகு துயர் இளைப்பொடு உடல்பிணி

          பிடித்திட, அனைவரும் நகைப்ப, கருமயிர் ......நரைமேவி, 


தன் கைத் தடிகொடு, குந்தி கவி என,

உந்திக்கு அசனமும் மறந்திட்டு, உளமிக

          சலித்து, உடல் சலம் மிகுத்து, மதிசெவி

          விழிப்பு மறைபட, கிடத்தி, மனையவள்

சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,

     சண்டக் கரு நமன் அண்டி, கொளு கயிறு

          எடுத்து, விசைகொடு பிடித்து, உயிர்தனை

          பதைப்ப, தனிவழி அடித்து கொடு செல,

சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது,

இரங்க, பிணம் எடும் என்றிட்டு, அறை பறை

          தடிப்ப, சுடலையில் இறக்கி, விறகொடு

          கொளுத்தி, ஒருபிடி பொடிக்கும் இலை எனும்.....உடல் ஆமோ?"

என்கின்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில் அடிகளார்.


தாயுமான அடிகளார் புலம்புவது காண்க.

ஐம்பூதத்தாலே அலக்கு அழிந்த தோடம் அற

    எம்பூத நாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ? 

சத்த முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும்

    பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ?

 நாளும் பொறிவழியை நாடாத வண்ணம் எமை

    ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ?

வாக்கு ஆதி ஆன கன்ம மாயை தம்பால் வீண்காலம்

    போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ?

மனம் ஆன வானரக் கைம் மாலை ஆக்காமல்

    எனை ஆள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ?

வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணம், மனக்

    காட்டைத் திருத்திக் கரை காண்பமது எந்நாளோ?

உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது, எந்தை அருள்

    வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ?

புத்தி எனும் துத்திப் பொறி அரவின் வாய்த்தேரை

    ஒத்துவிடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ?

ஆங்காரம் என்னும் மத யானை வாயிமல் கரும்பாய்

    ஏங்காமல், எந்தை அருள் எய்தும்நாள் எந்நாளோ?

சித்தம் எனும் பௌவத் திரைக்கடலில் வாழ் துரும்பாய்

    நித்தம் அலையாது அருளில் நிற்கும்நாள் எந்நாளோ?

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓடச்

    சுத்தபர போகத்தைத் துய்க்கும் நாள் எந்நாளோ?

 சுத்தவித்தையே முதலாத் தோன்றும் ஓர் ஐந்துவகைத்

    தத்துவத்தை நீங்கி, அருள் சாரும் நாள் எந்நாளோ?

பொல்லாத காமப் புலைத்தொழிலில் என் அறிவு

    செல்லாமல், நன்னெறியில் சேரும் நாள் எந்நாளோ?

அடிகள் அடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணம்

    குடிகெடுக்கும் பாழ் மடிமைக் கூறு ஒழிவது எந்நாளோ?

ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்று உளவும்

    போன வழியும் கூடப் புல் முளைப்பது எந்நாளோ?

அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறு, அறிவில்

    வந்தஇருள் வேலை வடியும் நாள் எந்நாளோ?

புன்மலத்தைச் சேர்ந்து, மலபோதம் பொருந்துதல் போய்,

    நின்மலத்தைச் சேர்ந்து, மலம் நீங்கும் நாள் எந்நாளோ?

கண்டுகண்டும் தேறாக் கலக்கம் எல்லாந் தீர்வண்ணம்

    பண்டைவினை வேரைப் பறிக்கும் நாள் எந்நாளோ?

பைங்கூழ் வினைதான் படுசாவியாக, எமக்கு

    எம் கோன் கிரண வெயில் எய்தும்நாள் எந்நாளோ?

குறித்தவிதம் ஆதியால் கூடும்வினை எல்லாம்

    வறுத்த வித்து ஆம் வண்ணம்அருள் வந்திடும்நாள் எந்நாளோ?

சஞ்சிதமே ஆதி சரக்கு ஆன முச்சேறும்

    வெந்த பொரியாக அருள் மேவும் நாள் எந்நாளோ?

தேகம் முதல் நான்காத் திரண்டு ஒன்றாய் நின்று இலகும்

    மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ?

சத்த முதலாத் தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும்

    சுத்தமா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ?

எம்மை வினையை இறையை எம்பால் காட்டாத

    அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ?

நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம்

    சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ?

சன்னல் பின்னல் ஆன சகலம் எனும் குப்பை இடை

    முன்னவன் ஞானக்கனலை மூட்டும் நாள் எந்நாளோ?

மாயா விகார மலம் ஒழி சுத்த அவத்தை

    தோயா அருளைத் தொடரும் நாள் எந்நாளோ?

உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீரத்

    திடம்பெறவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

செம்மை அறிவால் அறிந்து தேக ஆதிக்கு உள் இசைந்த

    எம்மைப் புலப்படவே யாம் அறிவது எந்நாளோ?

தத்துவமாம் பாழ்த்த சட உருவைத் தான் சுமந்த

    சித்து உருவாம் எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

பஞ்சப் பொறியை, உயிர் என்னும் அந்தப் பஞ்சம் அறச்

    செஞ்செவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

அந்தக் கரணம் உயிராம் என்ற அந்தரங்க

    சிந்தைக் கணத்தில் எம்மைத் தேர்ந்து அறிவது எந்நாளோ?

முக்குணத்தைச் சீவன்ரென்னும் மூடத்தை விட்டு, அருளால்

    அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ?

காலைஉயிர் என்னும் கலாதிகள் சொற் கேளாமல்

    சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வது எந்நாளோ?

  வான்கெடுத்துத் தேடும் மதிகேடர் போல, எமை

    நான்கெடுத்துத் தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ?

மாயையால் ஆன இந்த உடம்பு இறையருளால் நமக்கு வாய்த்தது. அதிலும் உயர்ந்த இந்த மனிதப் பெறிவி வாய்த்தது. இதன் அருமையை எண்ணி, இந்த உடம்பைப் போற்றிப் பாதுகாத்து, நல்வழியில் வாழ்ந்து, நற்கதியை அடைதல் வேண்டும். பிறவி அற்ற பெருநிலையை அடையவதற்கு உபாயமாகவே இந்த உடம்பு நமக்கு அருளப் பெற்று உள்ளது. இன்னொரு பிறவி எடுப்பதற்கு ஏதுவாக கருவழியில் புகுதல் கூடாது. பெருவழியில் புகுதல் வேண்டும்.

முருகன் பவரோக வைத்தியநாதன். அவருடைய அடியவர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்க்குப் பிணியே வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.

"முருகா எனவுனை ஓதும் தவத்தினர், மூதுஉலகில்

அருகாத செல்வம் அடைவர், வியாதி அடைந்து நையார்,

ஒருகாலமும் துன்பம் எய்தார், பரகதி உற்றிடுவார்,

பொருகாலன் நாடுபுகார், சமராபுரிப் புண்ணியனே"      --- திருப்போரூர்ச்சந்நிதிமுறை


பொடிவன பரசமயத்துத் தப்பிப் போந்தேன் ---

பொடிதல் - நிலைத்து நிற்காது அழிதல். 

பர சமயம் - அயல் சமயம். 

"பரசமய கலை ஆரவாரம் அற" என்பார் சீர்பாத வகுப்பில் அடிகளார். தத்தமது சமயமே உயர்ந்தது என்று ஆரவாரிப்பது பரசமயங்களின் ஆரவாரங்களில் இருந்து தப்பிப் பிழைத்தல் வேண்டும். "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகப் பெருமான்.


"வம்பு அறாச் சில கன்னம் இடும், சம-

     யத்துக் கத்துத் ...... திரையாளர்,

வன் கலாத்திரள் தன்னை அகன்று,

     மனத்தில் பற்றுஅற்று, ...... அருளாலே,


தம் பராக்கு அற, நின்னை உணர்ந்து, உரு-

     கிப் பொன் பத்மக் ...... கழல்சேர்வார்,

தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு

     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ?"              --- கச்சித் திருப்புகழ்.


"கலகல கலெனக் கண்ட பேரொடு

சிலுகிடு சமயப் பங்க வாதிகள்

கதறிய வெகுசொல் பங்கம் ஆகிய ...... பொங்களாவுங்


கலைகளும் ஒழியப் பஞ்ச பூதமும்

ஒழியுற மொழியில் துஞ்சு றாதன

கரணமும் ஒழியத் தந்த ஞானம் ...... இருந்தவாறென்."       ---  (அலகில்) திருப்புகழ்.


 "நிகரில் பஞ்ச பூதமும் நினையும் நெஞ்சும் ஆவியும்

   நெகிழ வந்து நேர்படும்                   அவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர

   நிருப அங்கு மாரவெள்                   எனவேதம்

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்

   சமய பஞ்ச பாதகர்                       அறியாத

தனிமை கண்டது ஆனகிண் கிணிய தண்டை சூழ்வன

   சரண புண்ட ரீகம்அது                   அருள்வாயே. "    ---  திருப்புகழ்.

இத்தகைய வன்மைக் குணமுடைய சமய வாதிகளான கலைக் கூட்டத்தினின்று விலகிவிட வேண்டும். அவ்வாறு விலகியவர்கள் உத்தம அடியார்கள்.


கருத்துரை

முருகா! திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...