வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

 



வயிற்றுப் பசிக்கு உணவு

அறிவுப் பசிக்கு கேள்வி

----

உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றார் திருமூல நாயனார். எனவே, உடம்பை வளர்ப்பது, உயிர் உணர்வு வளர்வதன் பொருட்டே என்பதை அறிதல் வேண்டும். உயிர் உணர்வு வளர்தல் என்பது, உயிருக்கு இயல்பாகவே அமைந்துள்ள அஞ்ஞான உணர்வு நீங்கி மெய்யுணர்வு பெறுதல்.

உடம்பிலே உயிர் நிலைபெற்றுள்ளது என்பதை உணர்ந்து, உயிரை வளர்ப்பதற்கு, உடம்பை வளர்க்கவேண்டும். அதற்கு உடம்பும் உயிரும் ஒருங்கே செழித்து வளர்வதற்கு உரிய உணவைக் கொள்ளவேண்டும். உடம்பு பொய், நிலையற்றது. உயிர் மெய், நிலையானது. நிலையற்ற உடம்பைக் கொண்டு, நிலையான உயிரானது, நிலையான ஞானத்தைப் பெற்று, நிலையற்ற உடம்பால் உண்டாகும் பிறவியை ஒழித்து, நிலையான பரம்பொருளோடு கூடவேண்டும்.

தேகாத்மவாதி கொள்கைப்படி, உடம்பே உயிர் என்று கருதி, உடம்பைப் பேணுவதையே பெரிதாக மதித்து இருத்தல் உலக மக்கள் இயல்பு. அஞ்ஞானம் மிகுந்து இருப்பதால், உடம்பை ஏன் பேணவேண்டும், எப்படிப் பேணவேண்டும் என்னும் அறிவு இல்லாமல், நாக்கு ருசி ஒன்றையே கருதி, விரும்புகின்ற உணவை எல்லாம் மிகுதியாக உண்டு, உடம்பைப் பெருக்குவதோடு, நோயையும், காம உணர்வையும் பெருக்கி, உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ளாமல் இருப்பதும் மனித இயல்பு. அறிவின்மையால் இந்தக் கேட்டினைத் தேடிகொள்வதைத் தவிர்த்து, அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்பதால், அறிவைப் பெருக்கிக் கொள்ளத் தக்க நூல்களைப் படிக்கவேண்டும். நூல்களைப் படிப்பதாலேயே அறிவு விளங்கிவிடாது. கற்று, அதன் வழி நின்றவரிடத்தல் கேட்டு அறிதல் வேண்டும்.

கல்லைமையால் உண்டாகும் கேடு பற்றி, "கல்லாமை" என்னும் அதிராகத்தில் உணர்த்திய நாயனார், "கேள்வி" என்னும் அகிதாரத்தில், கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்பதை  வலியுறுத்துகின்றார். 

இந்தக் கேள்வியானது, கேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின், அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவனாக இருந்தால், அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

எனவே, கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல், கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால், "செவிச் செல்வம்" என்பது பெரும் செல்வம் ஆயிற்று. பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

திருக்குறளில் கேள்வி என்னும் அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது, வயிற்றினுக்கும் சிறிது உணவு இடப்படும்" என்கின்றார் நாயனார்.

வயிற்றுக்கு உணவு பெரிதெனத் தோன்றும்போது, உணவைத் தேடுதல் துன்பம். உணவிற்காகப் பொருள்களைத் தேடுதல் துன்பம். உணவின் மிகுதியால் உண்டாகும் உடல் பருமனால் துன்பம். உணவின் செறிவினால் உண்டாகும் காம உணர்வினால் துன்பம். 

கேள்வியால் மிகுந்த சுவை உண்டாவதையும், பின்னே மிகுந்த பயன் விளைவதையும் கருதி உணவு வெறுக்கப்படும். காதால் ஒருவன் கேட்டுக் கொண்டே இருப்பின், ஏனைய புலன் இன்பங்கள் மறக்கப்படும். அது இல்லாதபோது, உடலின் நலம் கருதி சிறிது உணவு கொடுத்தால் போதும். உணவு மிகுந்தால், மனமானது கேள்வியில் பொருந்தாது. காமத்திலேயே பொருந்தும்.

வயிற்றைப் பேணுதல் உயிர் பொருட்டே அன்றி, உடம்பின் பொருட்டு அல்ல என்பது தோன்ற "வயிற்றுக்கும்" என்றார்.

"இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்" என்றும், "கழிபேர் இரையான்கண் நோய்" என்றும் நாயனார் காட்டி உள்ளதும் அறிக.

"செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்."

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி உள்ள பாடல்...

"பொருள்துறைஉன் பாட்டேநல் பூசைஎன்றார் ஊரர்க்கு

அருள்துறையார் அன்புசெய்வார் ஆனார்; --- மருள்தேர்

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்."

இதன் பொருள் ---

சுந்தரமூர்த்தி சுவாமிகளை அடிமை ஓலை காட்டி ஆட்கொண்டு திருவெண்ணெய்நல்லூரிலே திருவருட்டுறையிலே சென்று அற்புதக் காட்சி அளித்தருளினார் சிவபிரான். "நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்தொண்டன் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலே ஆகும். ஆதலால், நம் மேலே தமிழ்ப் பாட்டுக்களைப் பாடு" என்று மேலும் அருளிச் செய்தார். சுந்தரர் வணங்கி, "அருட்பெருங் கடவுளே! தேவரீருடைய அனந்த குணங்களில் சிறியேன் எதை அறிவேன்? என்ன சொல்லிப் பாடுவேன்?" என்றார். அதற்குக் கடவுள், "நீ முன்னே என்னைப் பித்தன் என்று சொன்னாய். ஆகையால் என் பெயர் பித்தன் என்றே பாடு" என்று சொல்லி அருளினார். உடனே சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்னும் சொற்றொடரை முதலாகக் கொண்ட திருப்பதிகத்தைப் பாடி அருளினார். சிவபிரான் மகிழ்ந்து, "தொண்டனே!  நீ இன்னும் நம்முடைய புகழைக் குறித்துப் பலவகையாகப் பாடு" என்று அருளினார். அக் கட்டளையின்படியே சுந்தரர் பல திருத்தலங்கட்கும் சென்று திருப்பதிகம் அருளிச் செய்தார். பற்பல அற்புதங்களையும் நிகழ்த்தினார். இறைவனே மிகவும் விரும்புவது அவன் திருச்செவியில் சாத்தப்படும் பாமாலைகளே. பூமாலைகள் வாடிவிடும். பாமாலை என்றும் வாடாது. பாமாலையானது இறைவனது உள்ளத்தைக் குளிரவைக்கும். கேட்போர் உள்ளத்தையும் குளிரவைக்கும். அன்போடு இறைவனைப் பாடி வழிபடவேண்டும். இறைவன் பெரிதும் விரும்புவது நிவேதனப் பொருள்களை அல்ல என்பதை இதன் வாயிலாக அறிதல் வேண்டும். 

செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்றருளினார் திருவள்ளுவ நாயனார்.

பொருள் என்றது அகப்பொருள் புறப்பொருள்களை. அருட்டுறை என்பது திருவெண்ணெய்நல்லூர்ச் சிவாலயத்தின் பெயர். மருள்தேர் --- மயக்கத்தினின்றும் தெளிந்த. "அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மை சொல்தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்" என்பது பெரியபுராணத் திருப்பாடல் பகுதி.

"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்று திருவள்ளுவ நாயனார் பாடியதற்கு ஏற்ப, பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளதை அறிக.

"மற உரையும், காமத்து உரையும், மயங்கிய

பிறவுரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை

கேட்கும் திருவுடையாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

பாவத்தினை வளர்க்கும் சொற்களும், ஆசையினை வளர்க்கும் வார்த்தைகளும், சோம்பல் முதலியனவற்றை வளர்க்கும் சொற்களும் நிறைந்து காணும் இந்த உலகத்தில், அறத்தினை வளர்க்கும் சொற்களைக் கேட்டுத் தெளியும் நற்பேறு உடையவர்களே, பிறவியினை நீக்குவதற்கு உரிய வீட்டுலகினை உடையவர் ஆவார்.

"செந்தமிழ் நாடு என்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்றார் அமரகவி. காதுகளில் இன்பத் தேன் வந்து பாயும்போது, வாயானது உணவை விரும்பாது. செவிச் சுவையால் உயிரானது பேரின்பத்தை அடையும்.

இராமன் முடிசூடப் போகின்றான் என்பதைக் கேட்ட மக்கள் யாவரும், தெய்வத் தன்மை பொருந்திய தேனைத் தமது காதுகளால் நுகர்ந்தார்கள், மற்ற புலன் இன்பங்களை மறந்தார்கள் என்கின்றார் கம்பநாட்டாழ்வார்.

"அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள

புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி

கவிக்கும்’என்று உரைக்கவே, களித்ததால், அது

செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்?" --- கம்பராமாயணம், ஆறுசெல் படலம்.

இதன் பொருள் ---

ஐம்புலன்களை அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம், இராமன் பொன்மயமான மகுடம் சூடப் போகிறான் என்று சத்துருக்கனன் அறிவித்த முரசொலி மூலம் கேட்டுப்  பெருமகிழ்ச்சி அடைந்தன.  இராமன் மூடி சூடப் போகின்றான் என்னும் அந்தச் சொல், செவி என்னும் பொறியால், கேள்வி என்னும் அறிவைப் பெற்று அனுபவிக்கும்படியான ஒப்பற்ற தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ?

     உயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிய சொல்லைச் செவிநுகர் தேனாகக் கற்பனை செய்தார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

எனவே, வயிற்றுப் பசிக்கு நல்ல உணவை அளவாக உண்டால் உடல் வளம் பெறும். உயிர் அறிவும் வளம் பெறும். உடம்பையே பொருட்டாக மதித்து, சுவையான உணவை மிகுதியாக உண்டால், உடல் பருப்பதோடு, நோய்தான் பெருகும். எனவே, 

"செவியின் சுவை உணரா வாய்உணர்வின் மாக்கள்,

அவியினும் வாழினும் என்?"

என்றார் திருவள்ளுவ நாயனார். "காதுகளால் அனுபவிக்கப்படும் கேள்விச் சுவையை உணராமல், வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை அறியும் அறிவினை உடைய மனிதர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த உலகிற்கு வருவது என்ன?" என்கின்றார் நாயனார். மேன்மக்கள் போல், காதுகளால் அனுபவிக்கும் சுவையை அறியாது, வாயினால் உண்ணப்படும் உணவுகளின் சுவையையே அறிகின்ற கீழ்நிலை மாக்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன நன்மை? இறந்தால் என்ன தீமை? இரண்டும் ஒன்றே ஆகும்.

"மாக்கள்" என்றது மன உணர்ச்சி இல்லாதாரை. "மாவும் மாக்களும் ஐயறிவினவே, மக்கள் தாமே ஆறறிவுயிரே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின்படிக்கு இதனை உணராலம். விலங்குகள் தனது வயிற்றுப்பாட்டுக்கே உழலும். மனித வடிவில் இருந்தாலும் விலங்கு உணர்வோடு இருப்பவரை "மாக்கள்" என்றார்.

காதுகளால் அனுபவிக்கப்படும் சுவைகள், சொல்சுவை, பொருள்சுவை என இருவகைப்படும். சொற்சுவை என்பது குணம், அலங்காரம் என இருவகைப்படும். 

குணம் என்பது பலவடிவுகளிலாவது, பல சீர்களிலாவது எழுத்துக்கள் ஒன்றி வருவது. அது செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி எனப் பத்து வகைப்படும். கைகால் முதலிய உறுப்புக்கள் இருந்தும் உயிர் இன்மையால் மனிதன் எனக் கொள்ளப்படாதது போல, இந்தக் குணங்கள் இல்லாதவை செய்யுள் எனப்படமாட்டா.

அலங்காரம் எனப்படுவது, சொல்லையும் பொருளையும் பற்றி நின்று அழகு செய்வது. இது சொல் அலங்காரம், பொருள் அலங்காரம் என இருவகைப்படும். 

மக்களுக்கு அலங்காரம் செய்வனவாகிய அணிகலன்களைப் போல், காப்பியத்திற்கு அலங்காரம் செய்வன இவை இரண்டும்.

பொருட்சுவை என்பது, காமம் என்னும் ஒரு பொருளின்மீது உண்டாகும் விருப்பு. ஒரு பொருளின் மீது விருப்புத் தோன்றுவதால் உண்டாகும் களிப்பு. உயிர்களின் மீது உண்டாகும் கருணை. எல்லா உயிர்களின் மீதும் செல்கின்ற ஆசையும், வீரமும். தம்மோடு பொருந்தாத பகைவரை அழிக்கின்ற உருத்திரம். தெய்வம், விலங்கு, கள்வர் முதலானவர்களால் உண்டாகும் அச்சம். மூப்பு, பிணி, வருத்தம் முதலியவற்றால் உண்டாகும் இளிவரல், அருவருப்பு.  புதியவற்றையும், பெரியவனவற்றையும் அறிதலால் உண்டாகும் வியப்பு. பற்று அற்று இருக்கும் சமநிலை என்னும் சாந்தம் என்று சொல்லப்படும்.

வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையானது, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, இனிப்பு என்னும் ஆறுவகையான சுவைகளைக் குறிக்கும். நன்று, தீது என்பவற்றை அறிந்து ஒழுகும் மன உணர்ச்சி இல்லாது, இந்த சுவைகளையே பெரிதும் விரும்பி வாழ்கின்ற மனிதர்களை "மாக்கள்" என்றார். இவர்கள் இருப்பதால் உலகத்துக்கு யாதொரு பயனும் இல்லை. இறப்பதால் யாதொரு இழப்பும் இல்லை என்றார்.

வயிற்றுக்கு ஈயப்படும் உணவால் விளைந்த வாயுணர்வும், உயிர் நிலைக்க, உடல் வளம்பெற்றுத் திகழ்ந்து, நூற்பொருள்களைக் கேட்டுத் தெளிந்த அறிவினைப் பெறுவதற்கே. எனவே, அப்பயனை இழந்த மாக்கள் மடிந்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்றார் நாயனார்.

வயிற்றுப் பசிக்கே உணவு அவசியம். சுவைக்கு அல்ல. அறிவுப் பசிக்கு நல்ல கேள்வி அவசியம். அறிவு நலம் தரும் கேள்விகளையே எப்போதும் கற்றும் கேட்டும் வருதல் வேண்டும். நூல்கள் இரு வகைப்படும். அவை உலகநூல்கள், மெய்ந்நூல்கள் என்பன. உலகியல் பற்றி எழுந்தவை உலகநூல்கள். வீட்டு நெறியை உணர்த்துவன மெய்ந்நூல்கள். உலகநூல்களை யாரும் கற்கலாம். பல துறைகளைச் சார்ந்த உலகநூல்களை அவ்வத் துறையில் வல்ல ஆசிரியரை அடுத்துக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம். 

ஆனால், மெய்ந்நூல்கள் அத்தகையன அல்ல. அவற்றைக் கற்பதற்குப் பக்குவம் வேண்டும். பக்குவமில்லார் அவற்றைக் கற்க விரும்பார்.  கற்க முன்வரமாட்டார். ஒருவேளை முன்வந்த போதிலும் அவற்றின் பொருளை உள்ளவாறு விளங்கிக் கொள்ளமாட்டார். ஏனெனில் ஆசை, வெகுளி முதலிய மாசுகள் மனத்தில் இருக்கின்ற வரையில், அம் மனத்தில் ஞானநூற் பொருள்கள் சென்று பதியா. மனம் மொழி மெய்களினால் இறைவனை உண்மையாக வழிபட்டு வருவோர்க்கு மனமாசுகள் அகலும்; உள்ளத்தூய்மை உண்டாகும். அவரே பக்குவம் உடையவர். அவரே மெய்ந்நூலறிவைப் பெறுதற்கு உரியவர்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...