51. திரும்பாதவை
-----
ஆடரவின் வாயினில் அகப்பட்ட தவளையும்
ஆனைவா யிற்கரும்பும்
அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில்
அகப்பட்டு மெலிகாக்கையும்
நாடறிய வேதாரை வார்த்துக் கொடுத்ததும்
நமன் கைக்குள் ஆனஉயிரும்
நலமாக வேஅணை கடந்திட்ட வெள்ளமும்
நாய்வேட்டை பட்டமுயலும்
தேடியுண் பார்கைக்குள் ஆனபல உடைமையும்
தீவாதை யானமனையும்
திரள்கொடுங் கோலரசர் கைக்கேறு பொருளும்
திரும்பிவா ராஎன்பர்காண்
மாடமிசை அன்னக் கொடித்திரள்கொள் சோணாடு
வாழவந் திடுமுதல்வனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
பொருள் ---
மாடமிசை அன்னக் கொடி திரள்கொள் சோணாடு வாழ வந்திடும் முதல்வனே! - மாடிகளின் மீது அன்னக்கொடிகள் மிகுந்து காணப்படும் சோழநாடு வாழ வந்த தலைவனே!
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
ஆடு அரவின் வாயில் அகப்பட்ட தவளையும் - ஆடுகின்ற பாம்பின் வாயிலே சிக்கிய தவளையும், ஆனை வாயில் கரும்பும் - யானையின் வாயிற்பட்ட கரும்பும், அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில் அகப்பட்டு, மெலி காக்கையும் - அரிய கப்பலிலே பாய்மரத்தின் காற்றிலே சிக்குண்டு வருந்தும் காக்கையும், நாடு அறிய தாரை வார்த்துக் கொடுத்ததும் - உலகம் அறிய நீர் வார்த்துக் கொடுத்துவிட்ட பொருளும், நமன் கைக்குள் ஆன உயிரும் - எமன் கையிலே அகப்பட்ட உயிரும், நலமாக அணை கடந்திட்ட வெள்ளமும் - அழகாக அணையைக் கடந்து போய்விட்ட நீர்ப்பெருக்கும், நாய் வேட்டை பட்ட முயலும் - நாயின் வேட்டையிலே அதனிடம் அகப்பட்ட முயலும், தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் - உழைத்துச் சாப்பிடுவார் கையில் அகப்பட்ட பல பொருள்களும், தீ வாதையான மனையும் - நெருப்பினாலே பற்றப்பட்ட வீடும், திரள் கொடுங்கோல் அரசர் கைக்கு ஏறு பொருளும் - மிகக் கொடிய ஆட்சியுடைய அரசர்களின் கையில் சென்ற பொருளும், திரும்பி வாரா என்பர் - திரும்பி வராதவை என்று கூறுவார்கள்.
கடல் நடுவிலே பாய்மரத்திலே அமர்ந்து விட்ட காக்கை எங்கே அலைந்தாலும் திரும்பவும் அங்கேயே திரும்பிச்சென்று தங்க நேரிடும். கரை காணாத அது வேறே எங்கும் செல்லமுடியாது. தேடி உண்பார் - வறியவர்கள். அவர்கள் கைப்பட்ட பொருள்கள் உழைக்க முடியாதபோது விலையாகி விடும். தேடி உண்பாரைத் திருடர் என்று கூறுவதும் உண்டு. மாடிவீடு - மாடம். சோழநாடு சோணாடு எனத் திரிந்தது. இவ்வாறு திரிவது மரூஉ எனப்படும்.
No comments:
Post a Comment