திருவிளக்கு இட்டார் தம்மையே தெய்வம் அளித்திடும்
-----
வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில்
உட்புகுந்து வலமாய் வந்தே
ஒருவிளக்கா யினும்பசுவின் நெய்யுடன்தா
மரைநூலின் ஒளிர வைத்தால்
கருவிளக்கும் பிறப்பும் இல்லை! இறப்பும் இல்லை!
கைலாசம் காணி ஆகும்!
திருவிளக்கிட் டார்தமையே தெய்வம் அளித்
திடும்! வினையும் தீருந் தானே!
பொருள் ---
வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில் உட்புகுந்து வலமாய் வந்து - நலம் அருளும் தண்டலை யிறைவரின் திருக்கோயிலின் உள்ளே சென்று, வலம் வந்து (வணங்கி), ஒரு விளக்காயினும் பசுவின் நெய்யுடன் தாமரை நூலின் ஒளிர வைத்தால் - ஒரு விளக்கேனும் ஆவின் நெய்வார்த்துத் தாமரை நூலிலே ஒளிதரும்படி வைத்தால் கரு விளக்கும் பிறப்பும் இல்லை - (மறுமுறையும்) கருவிலே துலங்கும் பிறவித் துன்பம் இல்லை, இறப்பும் இல்லை - இறுதியும் வாராது, கைலாசம் காணி ஆகும் - (இறைவன் எழுந்தருளி யிருக்கும்) திருக்கயிலை உரிமையாகும், திருவிளக்கு இட்டார் தமையே தெய்வம் அளித்திடும் - திருவிளக்கு வைத்தவர்களையே தெய்வம் காப்பாற்றும், வினையும் தீரும் - பழவினையும் நீங்கும்.
(வி-ரை.) இட்டார் தமையே: தம்: சாரியை. ஏ : பிரிநிலையிடைச்சொல். திரு : உரிச்சொல். ஒரு விளக்காயினும் : உம் : இழிவு சிறப்புப் பொருளில் வந்த இடைச்சொல். தெய்வம் : இருதிணைக்கும் பொதுவான பெயர். கரு விளக்கும் - கருவைக் காட்டுகின்ற ; கருவில் சேர்க்கின்ற.காணி - உரிமை இடம். அறிந்திடும்- விரும்பும். “விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்“ என்பது அப்பர் தேவாரம்.
(கருத்து) திருக்கோயில்களுக்குத் திருவிளக்கிடுவது நல்லது.
No comments:
Post a Comment