திரு ஏகம்ப மாலை - 12

 


"பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள்

துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர் தமக்கு

வருத்தி அமுதுஇட மாட்டார், அவரை இம் மாநிலத்தில்

இருத்திக் கொண்டு என் இருந்தாய், இறைவா கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  பருத்தி மூட்டையைப் போல வயிறு பருக்கும்படி, தங்கள் தோல் பையாகிய வயற்றினுக்கு, அறுசுவையோடு கூடிய உணவு வகைகளை நிரப்புகின்றார்கள். துறவினரை வரவழைத்து அவருக்கு உணவு அளிக்கமாட்டார்கள். அப்படிப் பட்டவர்களை இப் பெரிய பூமியில் இருக்கும்படி செய்துகொண்டு, என்ன காரணத்தால் இருந்தாய் இறைவா!


விளக்கம்: ஆன்மா உடம்போடு கூடிய வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்நாள் வரையறுக்கப்பட்டு உள்ளது. "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் கழிந்தால் தினைப் போது அளவும் நில்லாது கண்டாய்" என்று அடிகள் பிறிதொரு பாடலில் காட்டியுள்ளார்.  இருள்சேர் இருவினைகளைக் கழித்துக் கொண்டு ஆன்மா, வினைகளில் இருந்து விடுபட்டுத் தூய்மை பெற்று, இறைவன் திருவடியை அடையவேண்டி, இந்த உடம்பு வந்தது. இந்த உடம்பு மாயா காரியத்தால் ஆனது. ஆணவம் நமது அறிவை மறைப்பதால், இந்த உடம்பை நான் என்று மயங்குகின்றோம். வினைகளை ஆற்றுகின்றோம்.  "இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமுமில்லை" என்றார் தாயுமான சுவாமிகள். "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார்.  


"உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்றும் நாயனார் காட்டினார். நிலையாமையை நிலையாக உடையது இந்த உலகம். ஒவ்வொரு நாளும் உறக்கம் எப்போது வரும், எப்படி வரும், எப்போது உறங்கி, எப்போது, எப்படி விழிப்போம் என்பது நமக்குத் தெரியாது. அதுபோல இறப்பு எப்படி, எப்போது வரும், பிறப்பு என்பது எப்படி எப்போது வரும் என்பது தெரியாது.


இந்த உடம்பால் பெறவேண்டிய பயனைப் பெறுவதை விட்டு, உடம்பை நான் என்று மயங்கி,


"அவல வயிற்றை வளர்ப்பதற்கே

அல்லும் பகலும் அதில் நினைவாய்க்

கவலைப்படுவதன்றி, சிவக்

கனியைச் சேரக் கருதுகிலேன்,

திவலை ஒழிக்கும் திருத்தணிகைத்

திருமால் மருகன் திருத்தாட்குக்

குவளைக் குடலை எடுக்காமல்

கொழுத்த உடலை எடுத்தேனே."


என்று வள்ளல் பெருமான் பாடியதற்கு எடுத்துக் காட்டாக வாழ்வதுதான் வாடிக்கை.


உடல் கொழுக்க உண்ணுகின்றோம்.இந்த வயிறு என்னும் தூராக்குழி எந்த நாளும் நிறைந்ததில்லை. பருத்திப் பொதியைப் போல வயிறு வீங்குகிறது.   "பகுத்து உண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்பார் திருவள்ளுவ நாயனார். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். பசி, தாகம் என்பது எல்லா உயிர்க்கும் பொதுவானது. பசி, தாகம் தீரவில்லையானால், உயிர் அடம்பில் நிலைக்காது.  அதனால், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" எனப்பட்டது.  


பின்வரும் திருமந்திரப் பாடல்கள் ஒரு மேலான உண்மையை நமக்குத் தெளிவாக்கும்....


"அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில்என்

சிகரம் ஆயிரம் செய்தே முடிக்கில் என்

பகரும் ஞானி பகல்உண் பலத்துக்கு

நிகர்இலை என்பது நிச்சயம் தானே."


பொழிப்புரை : அந்தணர் வாழும் வீதிகள் பலவற்றை அவர்கட்குத் தானம் செய்தலும், அவ்வீதிகளில் அவர்கட்கு உயர்ந்த மாடமாளிகைகள் பல கட்டித் தருதலும் ஆகிய இவற்றால் விளையும் பயன்கள் யாவும் மாகேசுரன் ஒருவனை வழிபட அவன் உண்டதனால் விளையும் பயனளவிற்கு ஒவ்வாது குறைவனவே என்பது உறுதி.


அடியார்களை, துறந்தவர்களை, ஞானிகள் என்று சொல்வோம். அவர்கள் மாகேசுரர்கள் எனப்படுவர்.  அவர்களுக்கு உணவளித்தல், மகேசுர பூசை எனப்படும்.


"ஆறிடு வேள்வி அருமறை சாலவர்

கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்

நீறுஇடும் தொண்டர் நினைவின் பயன்நிலை

பேறுஎனில் ஓர்பிடி பேறுஅது ஆகுமே".


பொழிப்புரை : ஆறு அங்கங்களால் தெளிய உணர்த்தப்படும் வேள்விகளைச் செய்கின்றவரும், வேதமாகிய நூலை ஓதுகின்றவரும், முப்புரிநூல் அணிபவரும் ஆகிய அந்தணர்கள் கோடிபேர் உண்டு மகிழ்வதனால் உண்டாகின்ற பயனோடு, திருநீற்றை அணிகின்ற சிவனடியார் சிலர் உண்டு மகிழும் மகிழ்ச்சியால் விளைந்து நிலைக்கின்ற பயனை வைத்து எண்ணிப் பார்க்குமிடத்து, முன்னர்க் கூறிய பயன் பின்னர்க் கூறிய உணவில் ஒரு பிடியினால் விளையும் பயனளவேயாகும்.

எனவே, முன்செய்த நல்வினைப் பயனால், கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மாதவர்க்கு அமுது செய்வித்துப் பெறுதற்கரிய பேற்றைப் பெற முயலுதல் வேண்டும். அங்ஙனம் செய்யாது, உடம்பை வளர்ப்பதற்கும், கள்ளுக்கும், சூதுக்கும் பொருளைச் செலவிட்டு, வாழ்நாளை வீணாகக் கழித்து, யாதொரு பயனையும் அடையாது, இந்த நிலவுலகத்திற்குப் பாரமாய் இருப்பதே அன்றி, வேறு ஒரு பயனும் இல்லாமல் வாழ்பவர்கள், பிறப்பை எடுத்தது வீண் என்பார், "துறந்தோர் தமக்கு, வருந்தி அமுது இட மாட்டார். அவரை இம்மாநிலத்தில் இருத்திக் கொண்டு என் இருந்தாய்" என்று இறைவனிடம் விண்ணப்பித்தார்.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...