திரு ஏகம்ப மாலை - 26


"எல்லாம் அறிந்து படித்தே இருந்து எமக்கு உள்ளபடி

வல்லான் அறிந்து உளன் என்று உணராது, மதிமயங்கிச்

சொல்லால் மலைந்து, உறு சூழ் விதியின்படி, திக்கித்து, பின்

எல்லாம் சிவன்செயலே என்பர் காண், கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! எல்லாச் செயல்களையும் காட்சிப் பிரமாணமாகக் கண்டு இருந்தும், ஒலிப் பிரமாணமாகப் படித்து இருந்தும், எமக்கு உள்ள தன்மையை, எல்லாம் வல்லவனாகிய இறைவன் தெரிந்து வைத்தே விதித்து இருக்கின்றான் என்று உணர்ந்து கொள்ளாமல், அறிவு கலங்கிப் பிறர் சொல்லும் சொற்களால் மாறுபாடு கொண்டு, தம்மை வந்து சூழ்ந்து கொண்ட ஊழ்வினையின் படி வருத்தம் அடைந்து, கடைசியில் எல்லாம் சிவன் செயலே என்று ஒருவாறு மனம் தெளிவார்கள்.

விளக்கம் ---  நமது கண்முன்னே நடப்பதையும் கண்டுள்ளோம், நூல்களில் சொல்லி இருப்பதைப் படித்தும் உள்ளோம். சாத்திரங்கள் கூறும் உண்மை, உயிர்கள் அவ்வவற்றின் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப, பிறப்பை எடுக்கும். அந்த வினைகளை ஊட்டுபவன் எல்லாம் வல்ல பரம்பொருளாகிய இறைவனே. அவன் விதித்தது தான் ஊழ்.  "வகுத்தான் வகுத்த வகை" என்று திருவள்ளுவ நாயனார் காட்டியதும் இதுதான். இவைகளை உணராது, ஆணவத்தின் வயப்பட்டு, பிறர் கூறும் பொய்ம்மொழிகளைக் கேட்டு அறிவு மயங்கி அவற்றையே மெய்ம்மொழியாகக் கொண்டு மயங்கிடுவார் எனக் காட்ட,  "எல்லாம் அறிந்து படித்தே இருந்து எமக்கு உள்ளபடி வல்லான் அறிந்து உளன் என்று உணராது, மதிமயங்கிச் சொல்லால் மலைந்து" என்றார். பலகாலும் துன்பப்பட்டு உழன்ற பிறகு, எப்போதாவது நல்வினைப் பயனாய் அறிவு விளங்குகின்ற காலத்தில், இந்தத் துன்பமானது தம்மைச் சூழ்ந்து கொண்டு ஊழ்வினைப்படி நிகழ்ந்தது எனவும், எல்லாம் சிவன் செயல் என்று தெளிவு பெறும் நிலை வாய்ப்பதால், "உறு சூழ் விதியின்படி, திக்கித்து, பின், எல்லாம் சிவன்செயலே என்பர்" எனவும் கூறினார்.

எல்லாம் படித்து உணர்ந்தவர்கள் கூட, தமக்கு ஒரு துன்பம் வந்தபோது, இது தாம் முன் செய்த தீவினையின் பயன், இறைவனால் ஊட்டப்பட்டது என்று உணராது மதிமயங்கி, வருந்தி, பிறகு எல்லாம்  பிறகு, இறைவன் செயல் என்று தெளிவது உயிரின் இயல்பு.  அறிவித்தாலும், உணர்ந்து கொள்ளும் பக்குவம் வாய்க்கும் போதுதான், அறிந்து கொள்ளும் இயல்பு உடையது உயிர்.


திரு ஏகம்ப மாலை - 25

 



"விருந்தாக வந்தவர் தங்களுக்கு அன்னம் மிகக் கொடுக்கப்

பொருந்தார், வளம்பெற வாழ்வார், நின் நாமத்தைப் போற்றி, நித்தம்

அருந்தா முலைபங்கர் என்னார், அப் பாதகர் அம்புவியில்

இருந்து ஆவது ஏது கண்டாய், இறைவா கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! விருந்தினராக வந்தவருக்கு வேண்டிய அளவு உணவு இட மனம் கொள்ளமாட்டார். செல்வ வளத்திலே திளைப்பார். உனது திருநாமத்தைத் துதித்து வழிபாடு ஆற்றி, உண்ணாமுலை அம்மையை ஒரு பாகத்தில் உயைடவரே என்று போற்ற மாட்டார். இந்தப் பாவிகள், அழகிய இந்த நிலவுலகத்தில் வாழ்வதால் என்ன பயன் விளையும்?


விளக்கம் ---  "இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு" என்றார் திருவள்ளுவ நாயனார். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். முற்பிறவிகளில் செய்த நல்வினைப் பயனால், செல்வ வளம் மிக்க வாழ்வினைப் பெற்று இருப்பர். "செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே, தப்புந பலவே" என்பதால், இருக்கின்ற செல்வத்தைக் கொண்டு இல்லாதவர்களுக்கு, வயிற்றுக்குச் சோறு இட்டு உண்டு வாழ்தல் சிறந்தது.  அதைச் செய்யாமல் செல்வக் களிப்பிலே மிதந்து கொண்டு இருப்பதால், இந்த உடம்பால் பெறவேண்டிய நன்மையைப் பெற முடியாமல் போகும்.


"பொருபிடியும் களிறும் விளையாடும் புனச் சிறுமான்

தருபிடி காவல, சண்முகவா எனச் சாற்றி நித்தம்

இரு, பிடி சோறு கொண்டு இட்டு உண்டு, இருவினையோம் இறந்தால்

ஒரு பிடி சாம்பரும் காணாத மாய உடம்பு இதுவே."


என்றார் கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதப் பெருமான்.


உயிரை முடியுள்ள ஆணவ இருள் அகலவேண்டுமானால், அகவிளக்கை ஏற்றவேண்டும். "நல் அக விளக்கு அது நமச்சிவாயவே" என்றார் அப்பர் பெருமான். சிவ நாமத்தைச் சொல்லாதவர்கள், தீவினையாளர் என்பதால், "சிவசிவ என்கிலர் தீவினையாளர்", என்றார் திருமூல நாயனார். "வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே" என்பதால், சிவ நாமத்தைப் போற்ற வேண்டும்.  


அருந்தா முலை - உண்ணாமுலை.  அருந்துதல் - உண்ணுதல்.


"உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,

பெண்ஆகிய பெருமான் மலை திருமாமணி திகழ,

மண்ஆர்ந்தன அருவித் திரள் மழலைம் முழுவு அதிரும்,

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே"


என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.


ஆக, தன்னை நோக்கியும் நோக்காதும் வந்த விருந்தினரின் பசிப்பிணியைப் போக்காது, செல்வ வளத்திலே திளைத்திருப்பவர் பாவியர். இறைவன் திருநாமத்தைப் போற்றாதவர் பாவியர்.  இவர்களால், தனக்கும் பயனில்லை. பிறருக்கும் பயனில்லை.  ஆதலால், இவர்கள் உலகத்தில் இருந்து ஆகவேண்டியது என்ன உண்டு என்பார், "பாதகர் அம்புவியில் இருந்து ஆவது ஏது கண்டாய்" என்றார்.


திரு ஏகம்ப மாலை - 24

"சொக்கிட்டு அரண்மனைப் புக்கு உள்திருடிய துட்டர் வந்து

திக்குற்ற மன்னரைக் கேட்பது போல், சிவ நிந்தை செய்து,

மிக்குக் குருலிங்க சங்கமம் நிந்தித்து, வீடு இச்சிக்கும்

எக்குப் பெருத்தவர்க்கு என்சொல்லுவேன், கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  பிறரை மயக்குகின்ற மாயப் பொடி தூவி, அரண்மனையில் உள்ளே புகுந்து களவு செய்த துட்டர்கள், காவலர்களால் பிடித்துக் கொண்டு வரப்பட்டு, திக்குகள் தோறும் புகழ் பெற்ற மன்னர் முன்னே நிறுத்தும் போது, தண்டனைக்குப் பயந்து, தம்மை தண்டிக்காது விடும்படி கேட்டுக் கொள்வது போல, சிவநிந்தையைச் செய்து, குரு, இலிங்கம், சங்கமம் ஆகிய வழிபாட்டு நெறிகளை இழித்துக் கூறி, முத்தி அடைய விரும்புகின்ற கொடியவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன்.


திரு ஏகம்ப மாலை - 23

 



"சடக் கடத்துக்கு இரை தேடிப் பலஉயிர் தம்மைக் கொன்று,

விடக் கடித்துக் கொண்டு இறுமாந்து இருந்து, மிகமெலிந்து

படக் கடித்தின்று உழல்வார்கள், தம்மைக் கரம் பற்றி நமன்

இடக் கடிக்கும் பொழுது ஏது செய்வார், கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! சட வடிவாகிய இந்த உடலைப் பாதுகாத்தல் பொருட்டு, அதற்கு இரையைத் தேடி, பல. உயிர்களைக் கொன்று, அவற்றின் புலாலைத் தின்று, அதனால் உடம்பு கொழுத்து, செருக்கு அடைந்து இருந்து, மிகவும் மெலிவு அடைந்து வருந்துகின்ற காலத்திலும் வருந்திக் கடித்துத் தின்று உழலுபவர்களை, எமன் தனது கையினால் பிடித்து வருத்துகின்ற காலத்தில், அவர்கள் என்ன செய்வார்களோ?

விளக்கம் --  "கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல், செல்லாது உயிர் உண்ணும் கூற்று" என்னும் திருக்குறள் கருத்தின்படிக்கு, கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது.  செல்லாது ஆகவே, காலம் நீட்டிக்கும்.  நீட்டித்தால், ஞானம் பிறந்து, உயிர் வீடு பெறும். இதை உணராது, எப்படி இருந்தாலும், தோன்றி, நின்று அழியக் கூடிய இந்த உடம்பையே பெரிதாக மதித்து, அதனை ஓம்புதல் பொருட்டு, பல உயிர்களைக் கொன்று, அவற்றின் மாமிசத்தைப் புசித்து இறுமாந்து இருப்பர் என்பார், "சடக் கடத்துக்கு இரை தேடிப் பல உயிர் தம்மைக் கொன்று, விடக் கடித்துக் கொண்டு இறுமாந்து இருந்து" என்றார். விடக்கு - மாமிசம். மாமிசத்தைக் கடித்துத் தின்று என்பார் "விடக்கடித்தின்று" என்றார். அந்த உயிர்களைப் பிறர் கொன்று, விலைக்கு மாமிசத்தைக் கொண்டு தின்பார் அன்றியும், தாமே கொன்று வருந்திக் கொன்று தின்பார் என்பார், "மிகமெலிந்து பட, கடித்தின்று" என்றார்.  

இதனால், ஊன் உண்பவர் எமனிடத்தில் அகப்பட்டு வருந்துவது நிச்சயம் என்பது நிறுவப்பட்டது.

"கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே" என்றார் வள்ளல்பெருமான். "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க, எல்லார்க்கும் சொல்லவது என் இச்சை பராபரமே" என்றார் தாயுமானார்.


திரு ஏகம்ப மாலை - 22


"நல்லாய், எனக்கு மனு ஒன்று தந்துஅருள், ஞானம்இலாப்

பொல்லா எனைக் கொன்று போடும்பொழுது, இயல் பூசை,செபம்

சொல்ஆர் நல்கோயில் நியமம், பலவகைத் தோத்திரமும்

எல்லாம் முடிந்தபின் கொல்லுகண்டாய், கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  நன்மையை உடையவனே! அடியேனுக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது. அதனை ஏற்று அருளல் வேண்டும்.  ஞானம் இல்லாதவனாகிய பொல்லாத என்னைக் கொல்லும் போது, என்னால் செய்யக் கூடிய பூசையும், திருவைந்தெழுத்து செபமும், புகழ் நிறைந்த நல்ல சிவாலயங்களின் வழிபாடு முதலிய நியமங்களும், பல வகையான பாடல்களைச் சொல்லித் துதிப்பதும் ஆகிய எல்லாம் முடிவுற்ற பின்னர், கொல்லுவாயாக.


விளக்கம் -- "வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி. மதித்திடுமின், .... தில்லைக் கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம் தம் கூழைமேயே" என்றார் அப்பர் பெருமான். மனிதப் பிறவி எடுத்தபின், சரியை, கிரியை, யோகம், ஞானங்களைக் குறைவற முடித்து, இறைவனது திருவடியை அடைய வேண்டும் என்பதால், அவை எல்லாம் முடிந்தபின், கொல்லும் படியாக ஒரு விண்ணப்பம் வைத்தார்.  அறிவில்லாதவனாகிய நான், மரண வேதனை உறுகின்ற காலத்தில், மெய்யறிவு கலங்கி, உன் திருவடியை மறப்பது திண்ணம்.  எனவே, அவ்வாறு நிகழ்வதற்கு முன்னரே, பூசை, செபம், கோயில் நியமம், பாடி வழிபடுதல் ஆகியவைகளை முடித்த பின்னர் ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டினார்.


திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த

பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல்

அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீங்குகள் ஆயவும், மற்று

எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய், கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! பேசுகின்ற  சொற்களால் உண்டாகும் பிழையும், நினைப்பினால் உண்டாகும் குற்றமும், செய்த கொடிய தீச் செயல்களும், பார்த்த பார்வையினால் உண்டாகும் பாவங்களும், புண்ணிய சாத்திரங்கள் அல்லாதனவற்றை எனது காதுகளால் கேட்டதனால் வந்த தீமைகளும், மற்று எல்லாத் தவறுகளையும் பொறுத்து அருளல் வேண்டும்.


விளக்கம்:- அறத்தினை அறிந்தவரின் வாய்ச் சொற்கள் அன்போடு கலந்து வஞ்சனையும், சூதும் அற்று நன்மை பயப்பதாக இருக்கும்.  அவ்வாறு அல்லாமல், வாய்க்கு வந்ததை எல்லாம், நன்மை தீமையைப் பகுத்து அறிந்து நன்மை தருவனவற்றையே பேசாது இருப்பதால் பெரும் குற்றம் உண்டாகும் என்பார், "சொல்லால் வரும் குற்றம்" என்றார்.


மனத்தின் குற்றமாகிய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் அற்றவரின் சிந்தனையில் எப்போதும் நன்மைதான் விளையும். "தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நல்நாடு" என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.  தீயவைகளைக் கனவிலும் நினைக்கவில்லை என்றால் சிந்தனை தூய்மையாக உள்ளது என்று பொருள். அவ்வாறு இல்லாததால் குற்றம் உயிர்க்கு உண்டாகும் என்பார், "சிந்தனையால் வரும் தோஷம்" என்றார். மனம் அடியாக வரும் குற்றம், சொல்லிலும், செயலிலும் முடியும் என்பதால் இவ்வாறு காட்டினார்.


ஒருவன் ஒரு பிறவியில் ஒரு காலத்தில் செய்த தீவினையானது,  வேறு ஒரு காலத்திலும், வேறு ஓர் இடத்திலும், வேறு ஒர் உடம்பிலும் வந்து சுடும். ஆதலால், அவ்வாறு சுடக்கூடிய கொடிய தீவினைக்கு அஞ்சாது, அதனைச் செய்து பழகி வந்தது என்பார், "செய்த பொல்லாத தீவினை" என்றார்.


புறப்பகைகளை எளிதில் அடக்கிவிடலாம். ஆனால், உட்பகை என்றும் அகப்பகை என்றும் சொல்லப்படும் காமம் முதலாகிய குற்றங்களை வெல்லுதல் யார்க்கும் அரிது. காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறுபகைகளை, அரிஷ்ட வர்க்கம் என்பர் வடநூலார். அவை ஒருவனுக்குத் துன்பத்தையே தருவன.  பொருளைக் கண்ணால் கண்ட உடனே ஒருவனுக்கு ஆசை பற்றும்.  அதனால், "பார்வையில் பாவங்கள்" என்றார்.


"கேட்பினும் கேளாத் தகையவே, கேள்வியால் தோட்கப் படாத செவி" என்பார் திருவள்ளுவ நாயனார். "எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்" என்றும் காட்டினார்.  புண்ணிய நூல்களைக் கேளாத செவி பயனற்றது, அதனால் தீய உணர்வுகளே மிகும் என்பதால், "புண்ணிய நூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீங்குகள்" என்றார்.


பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

உறவின்முறை யோர்க்கும் (பொது)


முருகா! 

தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய்.


தனதனன தாத்த தனதனன தாத்த

     தனதனன தாத்த ...... தனதான


உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து

     உளமுருகு தீர்த்தி ...... வுடலூடே


உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டில்

     உயர்கனலை மூட்டி ...... விடஆவி


மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி

     வலிவினொடு தாக்கி ...... வளையாமுன்


மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள்

     மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய்


பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு

     வரையில்மற வோர்க்கு ...... மகவாகப்


பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த

     பிடியினடி போற்று ...... மணவாளா


அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த

     அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய்


அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து

     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து

     உளம் உருகு தீர்த்து, ...... இவ் உடலூடே,


உடலை முடிவு ஆக்கு, நெடியது ஒரு காட்டில்

     உயர் கனலை மூட்டி ...... விட, ஆவி


மறலி மறம் ஆர்த்த கயிறு தனை வீக்கி,

     வலிவினொடு தாக்கி, ...... வளையாமுன்,


மனமும் உனி, வேட்கை மிகவும், உன தாட்கள்

     மகிழ்வு இயல் கொடு ஏத்த ...... மதி தாராய்.


பிறைநுதலி, சேல்கண் அமை அரிவை, வேட்பு

     வரையில் மறவோர்க்கு ...... மகவு ஆக,


பிறிது உருவில் வாய்த்து, நிறை தினைகள் காத்த

     பிடியின் அடி போற்று ...... மணவாளா!


அறுகு, பிறை, அத்தி, அலை சலமும் ஆர்த்த,

     அடர் சடையினார்க்கும் ......அறிவு ஈவாய்!


அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து,

     அமரர் சிறை மீட்ட ...... பெருமாளே.


பதவுரை


பிறைநுதலி --- பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியை உடையவளும், 


  சேல் கண் அமை அரிவை --- சேல்மீனைப் போன்ற கண்களை உடையவளும் ஆகிய பெண்ணும்,


வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக, பிறிது உருவில் வாய்த்து --- விருப்பத்துடன் வள்ளிமலையில் வாழ்ந்திருந்த வேடர்களுக்கு மானின் வயிற்றில் பிறந்த குழந்தையாக வந்து, 


நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா --- நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த பெண்யானை ஆகிய வள்ளிநாயகியின் பாதங்களைப் போற்றும் கணவரே!


அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் --- அறுகம்புல்,  பிறைச்சந்திரன், ஆத்திமாலை, அலை வீசும் நீர் கொண்ட கங்கை ஆகிவைகளைச் சூடிய, அடர்த்தியான திருச்சடையை உடைய சிவபரம்பொருளுக்கு உபதேசப் பொருளை ஓதி அருளியவரே! 


அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே --- போரிட வந்த போர்க்களத்தில் அசுரர்களின் சுற்றத்தை மாய்த்து ஒழித்து தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமையில் மிக்கவரே!


உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து உளம் உருகு தீர்த்து இவ்வுடல் ஊடே --- உறவுமுறையினர் ஆன சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை விளைவித்த  அவரது உள்ளக் கவலையைத் தீர்த்து எடுத்து வந்த இந்த உடலோடு,


உடலை முடிவாக்கும் நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட --- பிறவியை முடிவாக்குகின்ற இந்த உடலில் பெரியதொரு சுடுகாட்டில் மிக்கெழுகின்ற நெருப்பை மூட்டிவிட, 


ஆவி --- எனது உயிரை,


மறலி மறம் ஆர்த்த கயிறு தனை வீக்கி வலிவினொடு தாக்கி வளையா முன் --- இயமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், 


மனமும் உ(ன்)னி --- மனத்தால் தியானித்து, 


வேட்கை மிகவும் --- விருப்பும் மிகவும்,


உன தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய் --- தேவரீரது திருவடிகளை மகிழ்ச்சியுடன் வழிபடுவதற்கு அறிவு தந்து அருளுவீராக. 


பொழிப்புரை


பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியை உடையவளும்,  சேல்மீனைப் போன்ற கண்களை உடையவளும் ஆகிய பெண்ணும், விருப்பத்துடன் வள்ளிமலையில் வாழ்ந்திருந்த வேடர்களுக்கு மானின் வயிற்றில் பிறந்த குழந்தையாக வந்து,  நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த பெண்யானையும் ஆகிய வள்ளிநாயகியின் பாதங்களைப் போற்றும் கணவரே!


அறுகம்புல்,  பிறைச்சந்திரன், ஆத்திமாலை, அலை வீசும் நீர் கொண்ட கங்கை ஆகிவைகளைச் சூடிய, அடர்த்தியான திருச்சடையை உடைய சிவபரம்பொருளுக்கு உபதேசப் பொருளை ஓதி அருளியவரே! 


போரிட வந்த போர்க்களத்தில் அசுரர்களின் சுற்றத்தை மாய்த்து ஒழித்து தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமையில் மிக்கவரே!


உறவுமுறையினர் ஆன சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை விளைவித்த  அவரது உள்ளக் கவலையைத் தீர்த்து எடுத்து வந்த இந்த உடலோடு, பிறவியை முடிவாக்குகின்ற இந்த உடலில் பெரியதொரு சுடுகாட்டில் மிக்கெழுகின்ற நெருப்பை மூட்டிவிட,  எனது உயிரை, இயமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், மனத்தால் தியானித்து,  விருப்பும் மிகவும், தேவரீரது திருவடிகளை மகிழ்ச்சியுடன் வழிபடுவதற்கு அறிவு தந்து அருளுவீராக. 


விரிவுரை


உடலை முடிவாக்கும் நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட --- 


உடல் - பிறவி.  உடலை முடிவாக்கும் உடல் - பிறவியை முடிவுக்குக் கொண்டு வருகின்ற உடல்.


மனமும் உ(ன்)னி --- 


'உன்னி' என்னும் சொல் 'உனி' என வந்தது.

உன்னுதல் - தியானித்தல்.


அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் --- 


திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப் பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே, இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.


இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு, "தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.


முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால், எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால், இப்போது என் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய்; எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று  கூறுவாயாகில், உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும், நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் அந் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகு, படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம் மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர்.  பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.


சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கி, நான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறி, விடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள்.  சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு இயற்றுதல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.


முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குரு நாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.


தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை "பிரணவ அருத்த நகர் "என்னும் பெயரையும் பெற்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.


அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து, அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து, அவனைப் பற்றித்

திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.


காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால் தழுவியே, "அயனும் தேற்றா

ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில், அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.


"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள், உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத்தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ, மறையினால் இசைப்பது அல்லால்".


என்றலும், நகைத்து, "மைந்த எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க, சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன், உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப ஞான நாயகனாம் அண்ணல்.


எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.


"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.      --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 


மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா.... --- (விறல்மாரன்) திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு, வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.


அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.   --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.


"சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள், மாணவ பாவத்தை உணர்த்தி, உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.


தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.    ---  தணிகைப் புராணம்.


மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!


என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.


அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.


திருக்கோவையாரிலும்,


தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.


என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.


வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.


கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு, எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.


பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.  --- அபிராமி அந்தாதி.

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.


சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.   --- சிவஞான சித்தியார்.


கருத்துரை

முருகா! தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய்.


திரு ஏகம்ப மாலை - 20

 


"ஊற்றைச் சரீரத்தை, ஆபாசக் கொட்டிலை, ஊன்பொதிந்த

பீற்றல் துருத்தியை, சோறுஇடும் தோல்பையை, பேசஅரிய

காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே

ஏற்றுத் திரிந்துவிட்டேன், இறைவா, கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! அழுக்கு உடம்பை, நிந்தனைகள் ஆகிய சரக்குகளைச் சேர்த்து வைத்திருக்கும் ஒதுக்கிடத்தை, தசை பொருந்திய ஒன்பது தொளைகளை உடைய துருத்தியை, சோற்றை இட்டு நிரப்புகின்ற தோலால் செய்யப்பட்ட பையை, சொல்லுதற்கு அருமையான காற்றைச் சேர்த்து வைத்த நிலையற்றதாகிய மண் பாண்டத்தை, விருப்பம் கொண்டு, அதைத் தாங்கித் திரிந்து விட்டேன்.


விளக்கம்:- ஊற்றைச் சரீரம் - அழுக்குகள் நிறந்த உடம்பு. ஆபாசக் கொட்டில் - வெறுக்கப்படக் கூடிய சரக்குகளை வைத்துள்ள இடம்.


"புற்புதக் குரம்பை, துச்சில் ஒதுக்கிடம்

என்ன நின்று இயங்கும் இருவினைக் கூட்டைக்

கல்லினும் வலிதாக் கருதினை,  இதன்உள்

பீளையும் நீரும் புறப்படும் ஒரு பொறி,

மீளும் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி,

சளியும் நீரும் தவழும் ஒரு பொறி,

உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒரு பொறி,

வளியும் மலமும் வழங்கும் ஒரு வழி,

சலமும் சீயும் சரியும் ஒரு வழி,

உள்உறத் தொடங்கி, வெளிப்பட நாறும்

சட்டகம், முடிவில் சுட்டு எலும்பு ஆகும்..."


என்று கோயில் திருஅகவலில் பட்டினத்தடிகள் பாடியருளியதை எண்ணுக.


இந்த உடம்பு அன்னமயத்தால் ஆனது என்பதால், வயிற்றை அன்னத்தை இட்டு நிரப்புகின்ற தோலால் ஆன பை என்றார்.


பிராணவாயு முதலிய பத்து வாயுக்களால் பொதிந்தும் நிலையற்றதாயும் இருத்தலின், காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டம் என்றார்.


உடம்பு கொழுப்பது நல்லதல்ல என்பதை, வள்ளல்பெருமான் பின்வரும் பாடல்களால் காட்டினார்....


"வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய்

வேளை நமனும் வருவானேல்,

தம்பி, தமையர் துணையாமோ,

தனயர் மனைவி வருவாரோ,

உம்பர் பரவும் திருத்தணிகை

உயர் மாமலை மேல் இருப்பவர்க்குத்

தும்பைக் குடலை எடுக்காமல்,

துக்க உடலை எடுத்தேனே."


"தொல்லைக் குடும்பத் துயர் அதனில்

தொலைத்தேன், அந்தோ, காலம் எல்லாம்,

அல்லல் அகற்றிப் பெரியோரை

அடுத்தும் அறியேன் அரும்பாவி,

செல்வத் தணிகைத் திருமலைவாழ்

தேவா, உன்தன் சந்நிதிக்கு

வில்வக் குடலை எடுக்காமல்,

வீணுக்கு உடலை எடுத்தேனே."


"அவல வயிற்றை வளர்ப்பதற்கே

அல்லும் பகலும் அதில் நினைவாய்க்

கவலைப்படுவது அன்றி, சிவக்

கனியைச் சேரக் கருதுகிலேன்,

திவலை ஒழிக்கும் திருத்தணிகைத்

திருமால் மருகன் திருத்தாட்குக்

குவளைக் குடலை எடுக்காமல்

கொழுத்த உடலை எடுத்தேனே."


திரு ஏகம்ப மாலை - 19

"வான்அமுதத்தின் சுவை அறியாதவர், வண்கனியின்

தான்அமுதத்தின் சுவைஎண்ணல் போல, தனித்தனியே

தேன்அமுதத்தின் தெளிவுஆய ஞானம் சிறிதும் இல்லார்க்கு

ஈனஅமுதச் சுவை நன்றுஅல்லவோ, கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, தேவலோகத்தில் உள்ள அமுதத்தின் சுவையை அறியாதவர், வளப்பம் பொருந்திய பழங்களின் சாற்றின் சுவையை விரும்புதல் போல, தனித்தனியாகவே தேனும் அமுதமும் ஆகிய இவற்றின் தெளிவை ஒத்த, ஞானத்தைச் சிறிதும் இல்லாதவர்க்கு, குற்றமாகிய விடய அமுதத்தின் சுவையானது நன்மையல்லவோ.


விளக்கம்: கண்ணுக்கு இனிமையும் உண்ணும்தோறும் புதிது புதிதாக உள்ல சுவையினையும் உடைய தேவாமிர்தத்தின் சுவையை அறியாதவர்கள்,  அழியும் தன்மை உடைய கனிகளை விரும்புதல், அவரது இயற்கை என்பார், "வான் அமுதத்தின் சுவை அறியாதவர், வண்கனியின் தான் அமுதத்தின் சுவை எண்ணல் போல" என்றார்.  ஞானயோகங்களின் முதிர்ச்சி இல்லாதவர்களுக்கு, உலக விடய ஞானங்களின் சுவையே நன்று என்பார், "தேன்அமுதத்தின் தெளிவு ஆய ஞானம் சிறிதும் இல்லார்க்கு, ஈனஅமுதச் சுவை நன்று அல்லவோ" என்றார்.


தேவலோகத்தில் உள்ள அமுதத்தின் சுவையை அறியாதவர்கள், பழத்தின் சுவையைப் பெரிதும் மதித்தல் போல, ஞானமாகிய அமுதத்தின் சுவை சிறிதும் அறியாதவர், விஷயமாகிய அமுதத்தின் சுவையை நன்மை தருவதாகக் கருதுவர் என்பது கருத்து.


பண்டங்களோடு பழகி வருவது பாசஞானம். அது தீர்ந்தால் வருவது பசுஞானம். அதுவும் திருவருளால் தீர்ந்து வருவது பதிஞானம். பசுஞானம் இல்லாதவர் பாசஞானத்தைப் பெரிதும் மதிப்பர். பதிஞானம் வாய்க்கப் பெறாதவர், பசுஞானத்தைப் பெரிதும் மதிப்பர்.


வான் அமுதம் - தேவாமிர்தம்.  வண்கனி - மா, பலா, வாழை முதலியன.  தெளிவு - வடித்தல்.


நல்லவனாக வாழ்வது எளிதா?

நல்லவனாக வாழ்வது எளிதா?

---

நல்லவனாக வாழ்வது எளிதா? நல்லவர்களிடையே வாழ்வது எளிதா? இந்த ஒரு வினாவை எழுப்பிச் சிந்திப்போமானால், நல்லவனாக ஒருவன் வாழ்வதுதான் சிறப்பு என்பதும், நல்லவர்களிடையே ஒருவன் நல்லவனாக வாழ்வது அப்படி ஒன்றும் பெரிதல்ல என்பதும் தெளிவாகும். ஆனால், நீங்கள் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் நல்லவர்களுக்கே உரித்தான ஒரு சிறப்பான ஆற்றலும் உங்களிடத்தில் இருக்கும். அதுதான் தீமையைக் கண்டு வெகுண்டு எழுகின்ற ஆற்றல். நல்லவர் என்று யாரைக் குறிப்பிடலாம்? நல்லவராக வாழ்வது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பது மகாபாரதக் கதைக்குள் பயணித்தால் தெளிவாகும். 

பதினெட்டு நாள்கள் நீடித்த பாரதப் போரின், பதினான்காவது நாள். பாண்டவர்கள், பாஞ்சாலி ஆகியோருடன் கண்ணன் பேசிக் கொண்டு இருக்கிறார். இன்று அதிக எண்ணிக்கையிலான கௌரவ சேனையைக் கொன்று குவித்தாக வேண்டும் என்பது அன்றைய சிந்தனை. பாண்டவர்கள் அவரவது தேரில் புறப்பட்டனர். கண்ணன் அருச்சுனனது தேரில் ஏறினார். பாஞ்சாலி கண்ணனைப் பார்த்து, "கண்ணா இன்றைய போரில் யாரால் யார் மடியப் போகிறார்கள்?" என்று கேட்கிறாள். கண்ணன் பாஞ்சாலியைப் பார்த்து, "பாஞ்சாலி, எல்லாவற்றையும் முன் கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உனக்கு அதிகம்தான். இன்றைய போரில் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான். இருதரப்பிலும் இருப்பவர்களிலேயே மிகவும் நல்லவனாகிய அவன் இறக்க இருப்பதை எண்ணி என் மனம் சஞ்சலப்படுகின்றது" என்றார். பாண்டவர்கள்தான் நல்லவர்கள். கௌரவர்கள் அனைவரும் தீயவர்கள். இரு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் போரில் மிகமிக நல்லவன் ஒருவன் மடிவான் என்றால், அது தருமபுத்திரனாக இருக்குமோ? என்ற ஐயம் பாஞ்சாலியைத் தொற்றிக் கொண்டது. அவளுக்கு அச்சம் மேலிட்டது. எல்லோரும் தருமபுத்திரரைக் கவலையோடு பார்த்தார்கள். காரணம், இப்போது இருப்பவர்களில் தருமனை விட நல்லவர்கள் யாரும் இல்லை என்ற எண்ணம்தான். ஆனால், எதைப் பற்றியும் கவலை கொள்ளமால், கண்ணன் தேரைச் செலுத்தலானார். இன்று மாலை பாண்வடர்கள் அனைவரும் வெற்றியோடு திரும்பவேண்டும் என்று மனதாரக் கண்ணனிடம் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தாள் பாஞ்சாலி. கண்ணன் சொன்னதை எண்ணி அத்தனை கவலை குடிகொண்டு இருந்தது அவளிடத்தில். பாண்டவர்களை விடவும் மிக நல்லவன் ஒருவன் இருந்தான். அதுவும் தீயவர்கள் மத்தியில் வாழ்ந்து இருந்தான் என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டியது.

அன்றைய போரில் எப்படியும் துரியோதனனைக் கொன்றாக வேண்டும் என்ற வெறியோடு பீமசேனன் இருந்தான். துரியாதனனது தம்பியரில் பலர் அன்று பீமனால் அழிந்தனர். வீராவேசத்துடன் சென்ற பீமனை எதிர்கொண்டான் விகர்ணன். "எனது தம்பியே! நான் சொன்ன சபதம் தவறுவதானாலும், உன்னோடு போர் செய்யமாட்டேன். நீ விலகிச் செல்" என்கிறான் பீமன். பீமன் அவ்வாறு சொன்னதற்கு ஒரு காரணம் உண்டு. வில்லிப்புத்தூரார் அதை விவரிக்கிறார். பாடல்களைப் பொருளோடு காண்போம்.

"சுடு உரைக் கனல் அன்ன துச்சாதனன்

வடு உரைக்கவும், மன் உறை மன்றிடை,

நடு உரைக்கும் நல் நா உடையாய்! உனைக்

கொடு உரைக் கணை ஏவினும், கொல்லுமோ?" --- வில்லிபாரதம்.

நெருப்பை ஒத்த கொடும் சொற்களை உடைய துச்சாதனன் அன்று அரசர்கள் தங்கிய சபையின் நடுவிலே, நிந்தையான வார்த்தைகளைக் கூறவும், அங்கு நடுவு நிலைமையாகப் பேசிய சிறந்த நாக்கை உடையவனே! கொடிய சாபச் சொல் போலத் தவறாமல் அழிக்கவல்ல அம்புகளை நான் உன்மேல் விடுத்தாலும், அவை உன்னைக் கொல்லுமோ?

"பார் அறிந்த பழிக்கு உட்படாத நின்

நேர் அறிந்தும், பொர நெஞ்சு இயையுமோ?

போர் அறிந்து பொருக!' என்றான், நெடுஞ்

சீர் அறிந்தவர் செய்ந்நன்றி கொல்வரோ?"  --- வில்லிபாரதம்.

நல்லொழுக்க நெறியிலே நின்றவர் யாரும், பிறர் தனக்குச் செய்த நன்மையை மறந்து, அவர்க்குத் தீங்கு செய்ய இசைவார்களா? உலகத்தார் அறிந்த குற்றத்துக்கு, உடன்படாத உனது நீதிநெறியை, நான் தெரிந்திருந்தும், எனது மனம் உன்னோடு போர் செய்யச் சம்மதிக்குமோ? ஆதலால் அறிந்து, வேறு யாருடனாயினும் ஆராய்ந்து போர் செய்வாயாக என்று விகர்ணனை நோக்கி வீமன் கூறினான்.

அரசவையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மனம் வெதும்பிய இருவர் கௌரவர் பக்கம் இருந்தனர். ஒருவர் விதுரர். அவர் எடுத்துக் கூறிய நீதிகளை பொருட்படுத்தாது, தனது சிற்றப்பன் என்றும் கொள்ளாது, துரியோதனன் அவரை அவமானப்படுத்தினான். போரில் தான் ஈடுபடப் போவது இல்லை என்று அவர் ஒதுங்கிக் கொண்டார். இராமாயணத்தில் விபீடணனும் தனது அண்ணன் செயலுக்கு மனம் ஒவ்வாது போரில் இருந்து விலகிக் கொண்டான். ஆனால், எல்லாவிதமான சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு இருந்துவிட்டு, ஆபத்து வந்த வேளையில் துணை நில்லாமல், விட்டுச் செல்வது ஒரு விதத்தில் நல்லவருக்கு அழகு அல்ல. இதை உணர்ந்த விகரணன், தனது அண்ணனுக்குத் துணை நிற்கப் பாரதப் போரில் ஈடுபட்டான்.

போர் என்று வந்துவிட்ட பிறகு நல்லவன் - தீயவன், வேண்டியவன் - வேண்டாதவன் என்று பார்ப்பது கூடாது. போருக்கு முன்னர் இவற்றை எல்லாம் ஆராயவேண்டும். ஆனால், போர் முனைக்கு வந்தபின், எதிரி ஒருவனைக் கொல்லக் கூடாது என்று எண்ணம் ஒருவனுக்கு உண்டாகுமானால், அவன் எவ்வளவு நல்லவனாக இருக்கவேண்டும்? விகர்ணனைப் பற்றிப் போர்முனையில் இவ்வாறு கருத இடம் தந்த நிகழ்வு எது? வில்லிப்புத்தூரார் வாய்மொழியாக இதனைக் காண்போம்.

அரசவையில் அபலையாக இருந்து கொண்டு, துயருடன் அலறும் பாஞ்சாலியை நோக்கி, துச்சாதனன் சுடுமொழிகளைக் கணையாகத் தொடுக்கின்றான்.

"வாரும் கண்ணீர் வளர் கொங்கை 

வரைமேல் அருவி என வீழ,

தாரும் குழலும் மின்னுடனே  

தலம் சேர் கொண்டல் என வீழ,

கூரும் துயரினுடன் வீழ்ந்து,  

'கோகோ!' என்று கோச் சபையில்,

சோரும் கொடியை முகம்நோக்கி, 

துச்சாதனன் மெய் சுடச் சொன்னான்."  --- வில்லிபாரதம்.

வழிகிற கண்ணீரானது, மேன்மேல் வளர்கின்ற கொங்கைகள் ஆகிய மலையின் மீது, நீர் அருவி போலப் பெருகவும், சூடிய மலர் மாலையும் கூந்தலும், மின்னலோடு தரையில் படிகின்ற மேகம் போலக் கீழே விழவும், அரச சபையில், மிகுந்த துன்பத்துடனே பூமியில் விழுந்து புரண்டு, 'கோ' என்று கதறி அழுது வருந்துகிற பூங்கொடி போன்றவளான பாஞ்சாலியினது முகத்தைப் பார்த்து, அவளது உடம்பு கொதிக்குமாறு மிக்க கொடுமையாக துச்சாதனன் (பின்வருமாறு) கூறுகின்றான்.

'மன் வந்து இருந்த சங்கத்து, 

உன் மாமன் இருந்தான்; ஐவரும் உன்

முன் வந்திருந்தார், முன் கொண்ட 

முறையால் முயங்கும் முடிவேந்தர்;

மின் வந்தனைய நுண் இடையாய்! 

விழி நீர் சொரிந்து, மெலிய, உனக்கு

என் வந்ததுகொல்? பொதுமகளிர்க்கு 

அரிதோ, விழிநீர்? எளிது!' என்றான்.   --- வில்லிபாரதம்.

(துச்சாதனன் திரௌபதியை நோக்கி), "மின்னல் வந்து பொருந்தினாற் போன்ற  நுண்ணிய இடையை உடையவளே! பல அரசர்கள் வந்து கூடியுள்ள இச் சபையில் உனது மாமனாராகிய திருதராட்டிரன் இருக்கின்றான். அன்றியும் முன்னே உன்னைத் திருமணம் புரிந்து கொண்ட முறைப்படியே உன்னைத் தழுவுகிற கிரீடாதிபதிகளான பாண்டவர் ஐவரும் உன் எதிரில் வந்து இருக்கின்றார்கள். இவ்வாறு உன்னைத் சேர்ந்தவர்கள் அருகில் இருக்கையில் கண்ணீர் சொரிந்து அழும்படி உனக்கு இப்பொழுது என்ன கதியின்மை நேரிட்டது.  ஒன்றும் நேரவில்லை. ஆதலால் நீ அழக் காரணமில்லை. பல ஆடவரும் இன்பம் நுகருமாறு பொதுவாய் இருக்கின்ற வேசையர்க்கு, நினைத்தபோதே கண்ணீர் பெருக்குதல் அருமையானதோ?  எளிமையானதே"  என்றான். 

     இங்கு உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் உன்னை அவ்வாபத்தினின்றும் பாதுகாப்பதற்கு உனது மாமனாரும் உனது கணவர்களும் இருக்கையில், நீ புலம்பி வீணே பாசாங்கு செய்ய வேண்டாம் எனத் துச்சாதனன் கடுமையாகக் கூறினான். 

துச்சாதனன் இவ்வாறு சுடுமொழி சொல்ல, பாஞ்சாலி பீஷ்மரைப் பார்த்து முறையிடுகின்றாள். அவளுக்கு பீஷ்மர் மறுமொழி கூறுகின்றார்.

"பொல்லா வசையே, புகழ் பூணாப் 

புல்லன் புகல, இதற்கு ஒன்றும

சொல்லாது இருந்த பேர் அவையைத் 

தொழுதாள், அழுதாள், சோர்வுற்றாள்;

'மல்ஆர்  திண்தோள் மாமாவோ! 

மந்தாகினியாள் மதலாயோ!

எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு, 

இதுவோ மண்ணில் இயல்பு?' என்றாள்."  --- வில்லிபாரதம்.

மிகக் கொடிய பழிப்பையே தனக்குப் புகழும் ஆபரணமுமாகக் கொண்டு,  அற்பனான துச்சாதனன்  இவ்வாறு கடுமையாகச் சொல்ல, இந்தத் துச்சாதனனது வசை மொழியைக் குறித்து ஒன்றும் பேசாதிருந்த பெருஞ் சபையோரை நோக்கி,  பாஞ்சாலி புலம்பி ஏக்கமுற்றவளாய் நின்று, கைகூப்பி வணங்கிக்கொண்டு, "மற்போர்க்கு இயைந்த வலிய தோள்களையுடைய மாமனே! கங்கா தேவியின் புத்திரனே! நீதிநெறிகள் எல்லாவற்றையுங் கற்றுத் தேர்ந்தவர்களாகிய உங்களுக்கு, இது இந் நிலவுலகத்தில் இயற்கையான நற்குணமாகுமோ?' என்று கூறினாள்.

தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பின்பு பந்தயமாக வைத்ததனால் முறைமையாக வெல்லப்படாத என்னை, தீண்டக் கூடாத காலத்தில் பலர் கூடிய சபையிலே துச்சாதனன் வசைமொழி கூறி இழுத்துக் கொண்டு  வருகையிலும் ஒன்றும் பேசாது மௌனமாய் இருத்தலைக் குறித்துப் பாஞ்சாலி இவ்வாறு கூறினாள். 

"இன்னல் படு சொல் பாஞ்சாலி 

இரக்கம்தனைக் கண்டு, இரக்கம் உறா,

'மன்னற்கு இளையோய்! தவறுஉரைத்தல் 

வழக்கோ, வடமீன் அனையாளை?'

என்னக் கழறி, 'நீ உரைத்த 

எல்லாம் அரசற்கு இயம்பு' என்றான்-

முன்னர்ப் புகலும் குருகுலத்தோர் 

முதல் ஆம் வாய்மை மொழியோனே."   --- வில்லிபாரதம்.

சிறப்பாகப் பேசப்படுகிற  குருகுலத்தோருள் பெரியவரும், சத்தியமான பேச்சை உடையவருமாகிய பீஷ்மர், துன்பத்தைத் தாங்கமாட்டாமல் அழுது புலம்புகின்ற பாஞ்சாலியைப் பார்த்து, இரக்கங்கொண்டு, துச்சாதனனை நோக்கி, "அரசனாகிய துரியோதனனுக்குத் தம்பியே! அருந்ததியை ஒத்த பதிவிரதையாகிய பாஞ்சாலியைக் குறித்து, 'பொதுமகள்' என்று இழிவாகச் சொல்வது நீதி முறைமையாகுமோ" என்று சொல்லி,  பாஞ்சாலியை நோக்கி, "நீ முன்னே கூறிய செய்திகளை எல்லாம், இப்பொழுது இந்த அவையிலே கொலு வீற்று இருக்கும் திருதராஷ்டிர மகாராஜன் முன்னிலையில் சொல்வாய"  என்றார்.

பாஞ்சாலி அவையினரை நோக்கி அழுது முறையிட்டாள். அனைவரும் ஓவியம் போல அசைவற்று இருந்தனர்.

"மன் தோற்றனன் வெஞ் சூது ஆகில், 

வழக்கால் கொண்மின்; மன் அவையில்

முன் தோற்றனனோ, என்னையும்? தான் 

முன்னே இசைந்து தனைத் தோற்ற

பின் தோற்றனனோ? கரியாகப் 

பெரியோர் உண்மை பேசுக!"  என,

மின் தோற்றனைய நுண் இடையாள், 

விழிநீர்  வெள்ளமிசை வீழ்ந்தாள். --- வில்லிபாரதம்.

மின்னலும்  தோற்றுவிட்டாற் போன்று இருக்கிற சிறந்த நுண்ணிய  இடையை உடையவளான பாஞ்சாலி, தருமராசன் கொடிய சூதாட்டத்தில் என்னை முறைமைப் படியே பந்தயம் வைத்துத் தோல்வி அடைந்திருந்தால், உமது விருப்பத்தின்படியே என்னையும் அடிமை கொள்ளுங்கள். அரச சபையிலே அந்தத் தருமபுத்திரன், மற்றைப் பொருள்களோடு என்னையும் தன்னைத்  தோற்பதற்கு முன்னமே தோற்று விட்டானோ? அன்றி, முதலில் தன்னைப் பந்தயமாகக் குறிப்பிட்டுத் தோற்ற பின்பு, என்னைத் தோற்றுவிட்டானோ? இங்கு உள்ள பெரியோர்கள் இவ்விஷயத்தில் சாட்சியாக உண்மை சொல்லுங்கள்"  என்றுகூறி,  தனது கண்ணீர்ப் பெருக்கின்மேல் விழுந்து வருந்தினாள்.

     சபையோரை நோக்கி, 'பெரியோர்களே! தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பின்பு என்னைத் தோற்றானோ? என்னைத் தோற்ற பின்பு தன்னைத் தோற்றானோ? இவ்விஷயத்தைப் பற்றி நீங்கள் உண்மை கூறுங்கள்.  தருமபுத்திரன் தன்னைத் தோற்பதற்கு முன்னமே என்னைத் தோற்றிருப்பின் என்னை அடிமையாகக் கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை. தருமபுத்திரன் தன்னைத் தோற்ற பிறகு ஐவர்க்கும் பொதுவாகிய என்னைத் தோற்றிருப்பின், அடிமையாகிய தான் என்னைப் பந்தயம் வைத்து இழப்பதற்கு  அவருக்கு உரிமை இல்லை. அப்போது என்னை அடிமையாக்கச் சிறிதும் முறைமையில்லை எனத் தன் கருத்தை வெளியிட்டாள் பாஞ்சாலி.

இந்தக் கொடுமையைப் பாட்டாக வரிக்கும் வில்லிபுத்தூராருடைய கனத்த இதயத்தில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. அதைப் பின்வரும் பாடலாக வரித்துக் காட்டுகின்றார்.

"மையோடு அரிக் கண் மழை பொழிய, 

வாடும் கொடியின் மொழிக்கு ஆகார்;

வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார்; 

விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு,

பொய்யோ  அன்று,  மெய்யாக,  

புனை ஓவியம்போல் இருந்தாரை,

ஐயோ! அந்தக் கொடுமையை யாம் 

உரைக்கும் பொழுதைக்கு அதிபாவம்!"  --- வில்லிபாரதம்.

அந்தச் சபையிலுள்ள பராக்கிரமம் உள்ளவர்களும்,  வேலாயுதத்தை எந்திய அரசர்களும், துரியோதனனிடத்து அச்சம் கொண்டிருப்பதனால், மையையும் செவ்வரியையும் உடைய கண்களிலிருந்து மழைபோல நீர் பெருக  வாடுகின்றவளாகிய பூங்கொடி போன்ற  பாஞ்சாலியினது வினைவிற்குச்  சரியானபடி விடைகூறத் திறம் அற்றவர்களாயும், நடந்த உண்மை வேறுவகையாக இருப்பதனால், கொடியோனாகிய  துரியோதனனது எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவர்களாயும், உண்மையாகவே அழகாக எழுதிய சித்திரப்பாவை போல(ச் சிறிது அசைதலும் இன்றி இருந்தார்கள்.  ஐயோ! அந்தக் கொடுமையைக் குறித்து, நாம் எடுத்துச் சொன்னாலும் நமக்குப் பெரும்பாவம் உண்டாகும்.

சபையிலிருந்த அரசர்கள் எல்லாரும் துரியோதனனிடத்து அச்சத்தால் முறைப்படி பாஞ்சாலிக்குச் சார்பாகப் பேசுவதற்கு அஞ்சியும், மனச்சாட்சிக்கு மாறாய் இருத்தலால் துரியோதனனுக்குச் சார்பாகப் பேசுவதற்குப் பின்வாங்கியும், ஒருவழியிலும் துணியாமல், எழுதப்பட்ட சித்திரம்போலத் திகைப்புற்று இருந்தார்கள்.  ஒரு பெண் துணையின்றித் தனியே நின்று பலர் கூடிய அரச சபையில் நீதிகூறுமாறு குறையிரந்து வேண்டி அழுது புலம்புகையிலும், துரியோதனனுக்கு அஞ்சி,  நடுவுநிலைமை குன்றி நீதியெடுத்துக் கூறாது மௌனமாய் இருந்தது பெரும்பாதகம் என்பதால், அதை நாம் சொன்னாலும் பெரும்பாவம் ஆகிவிடும் என்றார் வில்லிப்புத்தூரார். 

இந்த நேரத்தில் துரியோதனன் தம்பிருள் ஒருவனாகிய விகர்ணன் துணிந்து எழுந்து, சபையோரை நோக்கிப் பின்வருமாறு கூறுகிறான்...

"அல் ஆர் கூந்தல் விரித்த மயில் 

அனையாள் அரற்ற, அதற்கு ஒன்றும்

சொல்லாது, ஊமர் கணம் போலத் 

தொல் போர் வேந்தர் சூழ்ந்திருப்ப,

மல் ஆர் தடந் தோள் விகருணன் ஆம் 

வாய்மைக் கடவுள்,  'வாள் வேந்தீர்!

பொல்லா நெறியில் அனைவீரும் 

போகாவண்ணம் புகல்வீரே!"    --- வில்லிபாரதம்.

இருளை ஒத்த கருநிறமான கூந்தலை விரித்துக் கொண்டுள்ளவளும் மயில் போன்ற சாயலை உடையவளுமான பாஞ்சாலி இவ்வாறு முறையிட்டுக் கதறிப்  புலம்புதலைக் கண்டும்,  தக்கது என்றாவது, தகாதது என்றாவது ஒன்றும் மறுமொழி கூறாமல், ஊமைகளின் கூட்டம் போல, பழமையான குலத்தில் தோன்றிய போர் செய்தற்கு உரிய அரசர்கள்  சூழ்ந்திருக்க, மற்போர் செய்தற்கு உரிய பெரிய தோள்களை உடையவனும் சத்தியத்தையே பேசும் தெய்வத்தன்மை உடையவனுமான விகர்ணன் என்பவன், அச்சபையோரை நோக்கி, வாட்படையை உடைய அரசர்களே!  நீங்கள் எல்லோரும், பொல்லாத நரகநெறியில் செல்லாது இருக்கும் பொருட்டு நீதியையே கூறுங்கள்" என்றான்.

     நீதியை யெடுத்துக் கூறாது ஒழிவீராயின் உங்களுக்கு நரகம் நேர்வது திண்ணம் என்று துணிந்து கூறுகின்றான் விகர்ணன் என்பதை நினைக்க, அவன் எந்த அளவுக்கு நீதிநெறியை உணர்ந்தவன் என்பது புலனாகும். தமக்குத் துன்பம் நேர்வதானாலும் இப்படித்தான் இருப்பார்கள். இராவணன் தம்பியருள் விபீஷணன் போல, துரியோதனன் தம்பிமாருள் விகர்ணன் நீதிகளை நன்கு உணர்ந்து நடுவுநிலையோடு பேசுகின்ற நற்குணம் உடையவன்.  இவனது  சத்திய குணத்தை நன்கு மதித்து "விகருணனாம் வாய்மைக் கடவுள்" என்று போற்றுகின்றார் வில்லிப்புத்தூரார்.

"முறையோ! என்று என்று, அவனிதலம் 

முழுதும் உடையான் முடித் தேவி

நிறையோடு அழிந்து, வினவவும், நீர், 

நினைவுற்று இருந்தீர்; நினைவு அற்றோ?

இறையோன் முனியும் என நினைந்தோ? 

இருந்தால், உறுதி எடுத்து இயம்பல்

குறையோ? கண் கண்டது நாளும் 

குலத்துப் பிறந்தோர் கூறாரோ?"   --- வில்லிபாரதம்.

இந்நிலவுலகம்  முழுவதற்கும் உரியவனான தருமபுத்திரனது, பட்டத்து அரசியான பாஞ்சாலி,  'என்னை அடிமை எனக்கொண்டு இவ்வாறு சபையில் இழுத்து வருவது முறைமை ஆகுமோ?' என்று பலதரம் சொல்லி, தன்மனத்தை நல்வழியில் நிறுத்தின கற்பு நிலைமையோடு மனம் வருந்தி நியாயம் விசாரிக்கிறாள். நீங்கள் விடை கூறுவதற்குத் தயங்குகின்றீர்களே. இவ்வாறு நீதிகூறாமல் இருப்பதற்குக் காரணம் உங்களின் நினைவு மறதியா? அல்லது, நியாயம் பாஞ்சாலிக்கே சாதகமாய் இருத்தல்பற்றி அவளுக்குச் சாதகமாய்க் கூறினால் துரியோதனன்  கோபம் கொள்வன் என்று அஞ்சித்தானோ?  நியாயமிருந்தால் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறுதல் குற்றமாகுமோ? நல்ல குலத்தில் பிறந்தவர்கள் தாம் கண்கூடாய்க் கண்டதை எப்பொழுதும் கூறாது விடுவார்களோ? 

"தன் நேர் இல்லா நெறித் தருமன் 

தன என்று உரைக்கத்தக்க எலாம்

முன்னே தோற்று, தங்களையும் 

முறையே தோற்று, முடிவுற்றான்;

சொல் நேர் உரைக்கு, 'தான் பிறர்க்குத்

     தொண்டாய்விட்டு, சுரிகுழலைப்

பின்னே தோற்க உரிமையினால் 

பெறுமோ?' என்று பேசீரோ?"  --- வில்லிபாரதம்.

தனக்கு ஒப்பாக  ஒருவரையும் பெறாதவனும் நல்லொழுக்கத்தை உடையவனுமான தருமபுத்திரன், தன்னுடையன என்று சொல்லத்தக்க எல்லாப் பொருள்களையும் முதலில் தோற்று இழந்து, தங்களை் ஐவரையும் முறையே பந்தயமாக  வைத்துத் தோற்றுத் தனது நல்லுணர்வு) ஒழியப் பெற்றான்.  தான் இவ்வாறு எல்லாவற்றையும் தோற்றுப் பிறர்க்கு அடிமையாய் விட்ட பிறகு,  எதிரில் நின்று சகுனி கூறிய வார்த்தைக்கு இசைந்து, நுனி சுருண்ட கூந்தலை உடைய பாஞ்சாலியைப் பந்தயமாக வைத்துத் தோற்பதற்கு  நீதிப்படி உரிமையை உள்ளவனா என்று நீங்கள் நியாயத்தை எடுத்துக்  கூறமாட்டீர்களோ?"

ஆக, நல்லவனாக ஒருவன் நல்லவர்கள் மத்தியில் வாழ்வது ஒன்றும் விந்தை அல்ல. தன்னை நல்லவர்கள் இகழ்வார்களோ என்று எண்ணி, தகாத செயல்களைப் பிறர் அறியாமல் செய்துகொண்டே, நல்லவனாக நடிப்பவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால், முற்றிலும் தீயகுணமே படைத்தவர்களோடு வாழ்நாள் முழுதும் இருந்துகொண்டே, ஒருவன் நல்லவனாக வாழமுடியும் என்பதைக் காட்டுவதுதான் மேற்குறித்த நிகழ்வு. நல்லவன்போல் வாழ்வது எளிது. நல்லவனாக வாழ்வதுதான் அருமை.


எமனுக்கு எச்சரிக்கை

 


எமனுக்கு எச்சரிக்கை

----


வருமுன் காப்பது, வந்தபின் காப்பது, வரும்போது காப்பது என்பது உலகில் வருகிற நோய்களுக்கும், துன்பத்திற்கும், வறுமைக்கும், மரணத்திற்கும் பொருந்தும். 


நாளைக்கு வேண்டும் என்று இன்றே உணவுப் பொருள்களைத் தேடிக் கொள்ளுகின்றவன் ஒருவன். பசி வந்த பிறகு உணவைத் தேடுகிறவன் ஒருவன். உண்ணும் நேரம் தாண்டிய பிறகு பசி மிகுதியாகித் துன்புற்று உணவைத் தேடிப் போகிறவன் ஒருவன். இந்த மூன்று பேர்களிலும், பசித் துன்பமானது நிச்சயமாக வரும் என்று முன் கூட்டியே உணர்ந்து அந்தத் துன்பத்திலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளத் தக்க முயற்சி செய்கிறவனே அறிவாளி. 


நாளைக்கு உணவு வேண்டுமே என்று தேடி வைத்துக் கொள்ளும் அறிவு விலங்குகளுக்கு இல்லை. இன்பத்தை அளிப்பது எது, துன்பத்தை அளிப்பது எது என்று நமக்குத் தெரிகிறது. வரக் கூடிய இன்பம் எத்தகையது, துன்பம் எத்தகையது என்று எண்ணிப் பார்க்கின்ற அறிவு நமக்கு இருக்கிறது. பசித் துன்பம் வருமே என்று முன்னதாகவே உணவு ஆக்கிக் கொள்ளத் தெரிகிறது. அரிசி குத்தி வைத்துக் கொள்கிறோம். நெல்லைக் குதிரில் போட்டு வைத்துக் கொள்கிறோம். இத்தகைய அறிவுடைய நாம், நமக்கு வருகிற துன்பங்களுக்கு எல்லாம் தலையாய துன்பம் எது என்று ஆராய்ந்து அந்தத் துன்பத்தினின்றும் விடுதலை பெறுவதற்குரிய வழியைத் தேடிக் கொள்வதுதான் அறிவுடைமை.


ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதல் அதற்காகச் சேமிக்கத் தொடங்குகிறான். காரணம், அந்தக் குழுந்தைக்கு, தக்க வயதில் திருமணம் பண்ண வேண்டும் என்பதை அவன் உணர்ந்துகொண்டு இருக்கிறான். இப்படிச் செய்கிறவர்கள் வருமுன் காப்பவர்கள், பிழைக்கத் தெரிந்தவர்கள், வாழத் தெரிந்தவர்கள். கோயிலுக்குப் போய் இறைவனைத் தரிசித்து வரலாம் என்று ஒருவன் சொன்னால், பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்கிற ஒருவன் அவனை மூட நம்பிக்கைக்காரன் என்கிறான். பிறந்த பெண் குழந்தையின் திருமணத்திற்காக, முன் கூட்டியே சேமநிதியில் பணம் கட்டுவது அறிவானால், ஏதாவது விபத்து வந்து நேரும் என்று பாதுகாப்பாக, காப்பீடு செய்து வைத்துக் கொள்வது அறிவானால், உயிருக்கு வருகிற துன்பத்தைப் போக்கிக் கொள்ளப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதும் அறிவுதான். 


செத்துப் போன பிறகும், இந்த உலகில் அழியாது நிற்கும் உடம்பு ஒன்று உண்டு. பஞ்சபூதங்களினாலான உடம்பு அழிந்து விடலாம். ஆனால் அந்த உடம்பு அழியாது. அதனைப் "புகழ் உடம்பு" என்று சொல்வார்கள். 


"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது 

ஏந்திய கைகொடு இரந்தவர், எந்தாய்! 

வீந்தவர் என்பவர்  வீந்தவ ரேனும் 

ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே"


என்பது கவிச்சக்கரவர்த்தியின் இராமாயணப் பாடல். இந்த உடம்பு செத்துப் போகலாம். புகழ் உடம்பு இறவாது. புகழ் இன்றி வெறும் உடம்பைச் சுமந்துகொண்டு ஒருவன் வாழலாம். அவன் நடைப் பிணம். பெரியவர்கள் பூத உடம்பு அழிந்தாலும் புகழ் உடம்பை நிலை நாட்டிக் கொள்வார்கள். அவர்கள் இந்த உலகில் புகழ் உடம்பை வைத்துவிட்டு, மறுமையில் இன்பத்தை அடைகிறார்கள். பாவி என்னும் பேர் படைத்து, இந்த உலகில் பலகாலம் வாழ்ந்தால் உலகம் அவனைப் பழிக்கும். மறுமையில் அவன் நரகத்தை அடைவான். இங்கே பழியைத் தேடிக் கொண்டவனுக்கு அங்கே இன்பம் இல்லை. 


இறந்த பிறகும், உலகம் பழி சொல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகப் பணம் சேர்த்து வைத்து நலம் பண்ணுகிறவனை அறிவாளி என்கிறோம். இளைத்த பின்பும் உதவியாக ஓய்வூதியம் பெறும் அரசு வேலை இருந்தால் நல்லது என்று நாடுகிறோம். உடம்புக்கு இளைப்பு வருவது போல், உயிருக்கும் இளைப்பு வரும். உயிருக்குத் தளர்ச்சி ஏற்படுகிற காலத்தில் அதற்கு உதவி செய்யவேண்டிய பொருளை வாழும் காலத்திலேயே தேடிவைத்துக் கொள்ளவேண்டும். அதை எப்படித் தேடிக் கொள்வது என்பதைப் பெரியாழ்வார் காட்டுகின்றார்.


"துப்பு உடையாரை அடைவது எல்லாம் 

சோர்விடத்துத் துணையாவர் என்றே,

ஒப்பிலேன் ஆகிலும் நுன் அடைந்தேன், 

ஆனைக்கு நீ அருள் செய்தமையால்,

எய்ப்புஎன்னை வந்து நலியும்போது 

அங்குஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்,

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் 

அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!"


பணியில் எய்ப்பு என்பது ஒரு கால வரையறைக்குள் வருவது. உண்மையான எய்ப்பு என்பது உடம்பை விடுவது. அது எப்போது வரும் என்பதே நமக்குத் தெரியாது. அந்த எய்ப்பு எப்போதும் வரலாம். அந்த எய்ப்பில், பெரிய இன்பத்தைத் தருவதற்குரிய வைப்பு அருளாகிய செல்வம்தான். எனவே, அருணகிரிநாதர், "மாகத்தை முட்டிவரும் நெடுங் கூற்றன் வந்தால் என் முன்னே தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்" என்று வேண்டினார்.


அடியார்கள் வேண்டுவதை வேண்டியபடியே அருள் புரிகின்றவன் இறைவன். "யார்க்கும் இல்லை என்னாது அருள்வார்" என்பது தேவாரம். இறைவனைப் பிரார்த்தனை பண்ணினவுடன். நிச்சயமாகத் திருவருள் நமக்குக் கிடைக்கும் என்ற உறுதி அருணகிரிநாதர் உள்ளத்தில் எழுந்தது. இனி அவர் அச்சப்பட வேண்டியதில்லை. ஒரு குழந்தை ஒரு பெரிய பையனிடம் பயந்து கொண்டு அப்பாவிடம் ஓடுகிறான். அப்பா துணைக்கு வரும்போது அந்தக் குழந்தை அந்தப் பெரியவனிடம், "இப்போது என்ன செய்வாய்" என்று தைரியமாகச் சொல்லும்.


அதுபோல்,  இறைவன் திருவருளைத் துணையாகப் பெற்ற அருணகிரிநாதர், எமனை விளித்து, "எனக்குத் துணையாக முருகப் பெருமானைக் கொண்டு உள்ளேன். இனி அச்சம் இல்லை.  வேண்டுமானால் என் பக்கத்தில் வந்து பார். உன் உயிரையே வாங்கி விடுகிறேன்" என்று கூறுகிறார்.  


உலகத்திலுள்ள மக்களுக்கு அச்சத்தைத் தருகிறவன் எமன். அவன் கரிய பெரிய எருமை மீது வருகின்றவன். இருள்நிற மேனி உடையவன். அவனை ஒளியுடைய திருமேனி படைத்த முருகன் அழித்து ஒழிப்பான் என்ற கருத்தில், எமன் நேரே வந்ததாகப் பாவித்துப் பாடி நம்மை நல்வழிப் படுத்துகிறார் அருணகிரிநாதர். நம்மை அச்சுறுத்துவற்குக் காரணமாக இருப்பவன் எமன். பாதுகாப்புத் தேடிக் கொண்டால், அவனிடம் அகப்படாமல் இருக்கலாம்.


உயிரும் உடம்பும் ஒட்டி இருப்பதனாலேயே ஒரு மனிதன் வாழ்கிறான் என்று சொல்ல முடியாது. செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாவிட்டால் கைகளைப் படைத்த பயனில்லை. அது பிணத்தின் கை போன்றதே. "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே, வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பனை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்கு" என்றார் மணிவாசகப் பெருமான். "உழுத சால் வழியே உழுவான் பொருட்டு, இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே" என்றார் அப்பர் பெருமான். இத்தகைய நெஞ்சம் வாழ்வாங்கு வாழ்வதற்குப் பயன்படாது என்பதால், "வாழாத நெஞ்சமே" என்றும், தீமை செய்வதற்கு முற்படுவது குறித்து, "வாழ்கின்றாய்" என்றும் கூறினார் மணிவாசகர்.


நம் உள்ளத்திற்குள் ஒரு நோய் உண்டு. ஒரு செயலைச் செய் என்று உள்ளே இருந்து ஒன்று சொல்கிறது. அதைச் செய்யாதே என்று மற்றொன்றும் உள்ளே இருந்தே தடுக்கிறது. செய்ய வேண்டிய செயலைச் செய்யவிடாமல் செய்கிற இந்த நோய்தான் மனிதனை வாழவிடாமல் செய்கிறது. நமது மனமே நமக்குப் பகையாக இருக்கிறது. 


"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்

தானே தனக்குக் கரி". --- அறநெறிச்சாரம்.


இதன் பொருள் ---


தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்.  பிறர் அல்ல. தனக்கு மறுபிறவியில் உண்டாகக் கூடிய இன்பத்தையும், இந்தப் பிறவியில் அனுபவிக்கும் இன்பத்தையும் செய்து கொள்பவனும் அவனேதான். தான் செய்த வினைகளின் பயனாக, இன்ப துன்பங்களைத் தானே அனுபவிக்கின்றான். எனவே,  தான் செய்த வினைகளுக்குச் சான்றாக உள்ளவனும் அவனே தான்.


ஒருவருக்கு உண்டாகும் மேன்மையும், சிறுமையும், அவரவர் செய்யும் செயல்களால் உண்டாகும்.அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே, பெரியவர். அவரே பெருமை உடையவர்.


"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

நிலைகலக்கிக் கீழ் இடுவானும், நிலையினும்

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்

தலையாகச் செய்வானும் தான்".    --- நாலடியார்.



இதன் பொருள் ---


எல்லோரும் போற்றும்படியாக சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவனும், தனது முன் நிலையையும் குலையச் செய்து, தன்னைக் கீழ்நிலையில் தாழ்த்திக் கொள்பவனும், தான் முன் இருந்த சிறந்த நிலையில் இருந்து, மேன்மேலும் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்தி நிலைசெய்து கொள்பவனும், தன்னை அனைவரினும் தலைமை உடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான்.


உலகியல் நிலை மட்டும் அல்லாது, அருளியல் நிலையும் அவ்வாறே என்பதை,


"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே".


என்று நிறுவுகிறார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.


தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பு உடையவனும் தானே ஆவான்.  பிறர் காரணம் அல்ல. தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்துகொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவிப்பவனும் அவனே. அதனால், தனக்குத் தானே தலைவனாக இருந்து தன்னை நல்ல நெறியில் செலுத்திக் கொள்பவனும்,  தீய நெறியில் செலுத்திக் கொள்பவனும் அவனே தான். உயிர்களின் பக்குவத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அமையும்.


நமக்குப் பகையாக உள்ள மனதை அடக்கினால் இறைவன் திருவருளைப் பெறலாம். மனதை அடக்கவேண்டுமானால் இறைவனுடைய திருவுருவத்தைத் தியானம் செய்ய வேண்டும். 


முருகப் பெருமான் குழந்தையாக உலகத்தில் அவதாரம் செய்தார். சரவணப்பூம் பொய்கையில் தாராகணங்கள் ஆகிய கிருத்திகைப் பெண்கள் அறுவர் தந்த முலைப்பாலை உண்டார். அது போதாமல், உமாதேவியார் கொடுத்த ஞானப்பாலைக் குடித்தவர் அவர். தாராகணம் - நட்சத்திரங்களின் கூட்டம். ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டத்தைக் கிருத்திகை நட்சத்திரம் என்று சொல்வார்கள். அந்த ஆறு நட்சத்திரங்களும் ஆறுமாதர்கள்.  இவர்கள் குழந்தைவேலனுக்குப் பாலூட்டி வளர்க்க வேண்டும் என்று தவம் புரிந்தவர்கள் அவர்கள். அந்த ஆறு பேரும் சரவணப் பூம்பொய்கையில் ஆறு குழந்தைகளின் உருவத்தில் இருந்த முருகப் பெருமானுக்குப் பால் ஊட்டினார்கள். கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தமையால் எம்பெருமானுக்கு கார்த்திகேயன் என்னும் திருநாமம் வழங்கப்படுவதாயிற்று.


"அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி

நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்

கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,

அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு

கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து

மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, -  செய்ய

முகத்தில் அணைத்து,  உச்சி மோந்து, முலைப்பால்

அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து

உள்ளம் உவப்ப உயர்ந்தோனே!"


என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர அடிகளார் பாடி உள்ளார்.


இதன் பொருள் ---


சரவணப் பொய்கையில் சிவபரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறும், ஆறு குழந்தைகளின் திருவுருவங்களாய் மாற, முதற்கண் கார்த்திகைப் பெண்கள் அறுவர் முலைப்பாலைப் பருகி, அழுது விளையாடிக் கொண்டு இருந்தார் முருகப் பெருமான், மணமிக்க கங்கை நீரைச் சடைமுடியில் தரித்த சிவபெருமான்,  புன்சிரிப்பை உடைய உமாதேவியாரொடு சரவணப் பொய்கையினை அடைந்து, தனது திருமகனுடைய திருவுருவங்களை அத்தேவிக்குக் காண்பித்தலும்,  உமாதேவியார் கண்டு, அந்த ஆறு திருவுருவங்களையும், தன்னுடைய இரண்டு திருக்கரங்களாலும் ஒரு சேர எடுத்து, ஆறு திருவுருவங்களையும் ஒரு திருவுரு ஆக்கிச் சேர்த்துத் தழுவி,  "கந்தன்" என்று திருநாமம் சூட்டி, தனது செவ்விய திருமுகத்தில் சேர்த்து அணைத்து, உச்சியை முகந்து, திருவுளத்தில் மகிழ்ச்சி உற்று, தனது திருமுலைப் பாலை அளித்து, உலகத்தைத் தனது ஈரடியால் அளந்த திருமாலாகிய வெள்ளை இடபத்தின் மீது எழுந்தருளி இருக்கும் சிவபெருமானது திருக்கரத்தில் கொடுத்து இருக்க,  அம்மையப்பர் திருவுளம் மகிழ்ச்சி கூர உயர்வு உற்று இருந்த பெருமானே!


வெறும் அறிவினால் உலகத்திற்குப் பயன் இல்லை. அறிவு மாத்திரம் தனித்திருந்தால் இன்பம் உண்டாகாது. அருளும், அறிவும் கலந்தால் உண்மையான இன்பம் உண்டாகும். அறிவினால் மாத்திரம் பார்த்தால் உலகத்தில் பேதம் தெரியும். அறிவை மறந்து அருளினால் பார்த்தால் அபேதம் தோன்றும். 


"அருளால் எவையும் பார் என்றான், - அத்தை 

அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்; 

இருளான பொருள்கண்டது அல்லால் - கண்ட 

என்னையும் கண்டினலன்; என்னடி தோழி'!"


என்று தாயுமானவர் பாடுவார். 


ஞானமயமாக நிலவிய முருகன் உலகத்திற்கு அருள் செய்ய வேண்டுமென்ற பெருங்கருணையினால் அறப்பெருஞ் செல்வியாகிய உமையம்மை, தனது அருளைக் கலந்து குழைத்த பாலை முருகப் பெருமானுக்கு ஊட்டினாள். சிவமும் சத்தியும் கூடினால்தான் உலகம் இயங்கும். முருகப் பெருமான் இறைவனுடைய அம்சமாகத் தோன்றியவர். அந்தப் பெருமானுக்குப் பராசத்தியினுடைய அம்சம் கலந்தால்தான் அருள் வெள்ளம் பெருக்கெடுக்கும். அதன் பொருட்டே உமாதேவியாருக்குச் சிவபரம்பொருள் சரவணப் பொய்கையில் தவழ்ந்து கொண்டு இருந்த குழந்தையைக் காட்டினார். உமாதேவியார் உள்ளம் மகிழ்ந்து அருட்பாலை ஊட்டினார். இதை வைத்தே,  "தாராகணம் என்னும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் ஆராது, உமைமுலைப்பால் உண்ட பாலன்" என்று அருணகிரிநாதர் பாடுகிறார். 


அந்தக் குழந்தையின் துணை தனக்கு இருக்கிறது' என்கிறார் அருணகிரிநாதர். எமனைப் பார்த்து,  "வாராது அகல் அந்தகா!" என்று மிடுக்காகப் பேசுகிறார். அந்தகன் என்றால் எமன் என்றும், குருடன் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. 'நான் முருகப் பெருமானுடைய அருளைப் பெற்றிருக்கிறேன் என்பதை நீ கண்டு கொள்ளாமல் குருடனாக இருக்கிறாயே' என்பது குறிப்பு.


எமன் வருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். உயிரைப் போக்குகின்ற ஒரு சக்திக்கு எமன் என்று உருக் கொடுத்துப் பருப்பொருளாக இப்படிச் சொல்லி இருக்கிறார்கள். குதிரையின் மேல் வரும் மனிதனைப் போலக் கண்ணுக்கு நன்றாகத் தெரியும்படி எருமைக் கடாவின் மேல் அவன் வருவது இல்லை. எமன் என்பது கற்பனை.  அவன் நம்மைப் பாசம் போட்டு இழுத்துச் செல்வான் என்பது பாவனை. அந்தப் பாவனைக்கு மாற்று மற்றொரு பாவனைதான். எமன் வருவதாகப் பாவனை செய்வதை மாற்ற, முருகன் வருவதாகப் பாவனை செய்யவேண்டும்.


பாசம், கதை முதலியனவற்றை எடுத்துக் கொண்டு வருவதாக எமனைப் பற்றிய நினைப்பு வரும்போது, அதனை மாற்றுவதற்குரிய சிறந்த வீரராக உள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் நினைக்கிறார். இறைவன் திருக்கரங்களிலுள்ள படைக்கலங்களை நினைக்கிறார். 


நான் எப்போதும் முருகப் பெருமானுடைய திருவுருவத்தைத் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன் அவனுடைய ஒவ்வோர் அங்கமும் என் உள்ளத்தில் நிற்கிறது அவன் கையில் உள்ள ஆயுதங்களும் என் அகக் கண்ணில் நிற்கின்றன. அவன் தன் இடையில் உடைவாளைச் செருகி இருக்கிறான். அது எனக்குப் பலமாக இருக்கிறது. அவன் கையில் சிறிய வாளை வைத்திருக்கிறான். அதுவும் எனக்குத் துணையாக வரும். இந்த இரண்டுமே போதும். இந்த இரண்டிலும் தீராத பெரும் பகை இருந்தாலும், ஆதனையும் அழித்து ஒழிக்கின்ற பெரும்படையாகிய வேலாயுதம் பெருமானிடம் இருக்கிறது. பெரிய பெரிய அசுரர்களை அடியோடு அழித்து வென்ற வீரவேல் அது. சீராவும், சிறுவாளும், வேலும் எனக்குத் துணையாக என் நெஞ்சில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்போது, நீ எந்தப் படையோடு என்னிடத்தில் வந்தாலும் உய்யமாட்டாய். நீ பிழைத்திருக்க வேண்டுமானால் என் பக்கத்தில் வராமல் அகன்று செல்வாயாக  என்கிறார் அருணகிரிநாதர். 


காலனுக்குக் காலனாகிய இறைவன் தன்னுடைய திருவடியினால் காலனை உதைத்து அழித்துக் கொன்றான் என்று புராணம் கூறுகிறது. மார்க்கண்டேயர் சிவபெருமானைச் சரணடைந்தார். அப்போது அந்தப் பெருமான் காலனுக்குக் காலனாக நின்று, தன் காலால் உதைத்து, தனது அடியவருக்குத் திருவருள் புரிந்தார். ஆனால்,  மார்க்கண்டேயர் பட்ட பாட்டை அருணகிரிநாதர் படவில்லை. அவருக்கு மிக எளிதில் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. 


முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள படைக்கலங்கள் உலகத்தில் உள்ள அழிப்புக் கருவிகளாகிய படைக்கலங்களைப் போன்றவை அல்ல. அவை ஞானத்தின் சொரூபம். ஞானசக்தியே வடிவேலாக இருக்கிறது. அதன் அம்சங்களாகவே மற்ற ஆயுதங்களும் இருக்கின்றன. அஞ்ஞானம், மறதி, மரணம், இருள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஒரு வடிவம் கொடுத்து எமன் என்று சொல்கிறோம். இவற்றையெல்லாம் அடியோடு அழிப்பதற்கு முருகப் பெருமானுடைய படைக்கலங்கள் இருக்கின்றன. அவை அஞ்ஞான இருளை, துன்பத்தை ஒட்டும் வல்லமை வாய்ந்தவை. 


மிகவும் வலிமை உள்ள எமனை ஒட்டுவதற்கு நம்மிடத்தில் படைக்கலம் இல்லாவிட்டாலும், இறைவனைத் தியானம் செய்து, அவன் திருக்கரத்தில் உள்ள படைகளைச் சிந்தனையில் கொண்டால் அந்த அச்சம் ஓடி விடும். காலனால் துன்பம் வருமே என்ற அச்சமே நமது துன்பத்துக்கு அடிப்படை. எங்கே அச்சம் இல்லையோ அங்கே காலனுக்கு வேலை இல்லை. அந்த அச்சத்தைப் போக்குவதற்கு, அச்சம் தோன்றும் இடமாகிய உள்ளத்தில் தைரியம் தோன்றச் செய்கின்ற தியானத்தை உறுதிப் படுத்தவேண்டும்.


முருகப் பெருமான் ஞானாம்பிகை ஆகிய உமாதேவியாரின் திருமுலைப் பாலாகிய சிவஞானத் திருவமுதை உண்டு "ஞானபண்டிதன்" என்று நின்று, தன்னை நம்பினோர் அனைவருக்கும் ஞானத்தை அருளிச்செய்து, அஞ்ஞான இருளாகிய துன்பத்தை இல்லாமல் பண்ணுகின்றார். அதனால், "ஞானாகரன்" என்று அருணகிரிநாதரால் போற்றப்பட்டார். அறுமுகச் சிவனார் அம்மை திருமுலைப்பாலை விரும்பிச் செய்த அருட்செயலை அடியில் கண்ட அரும்பாடலில் கண்டு மகிழ்க.


"எள் அத்தனை வருந்து உறுபசிக்கும்

இரங்கி, பரந்து சிறுபண்டி

எக்கிக் குழைந்து, மணித் துவர்வாய்

          இதழைக் குவித்து, விரித்து எழுந்து

துள்ளித் துடித்து, புடைபெயர்ந்து,

          தொட்டில் உதைத்து, பெருவிரலைச்

     சுவைத்து, கடைவாய் நீர்ஒழுக,

          தோளின் மகரக் குழை தவழ,

மெள்ளத் தவழ்ந்து, குறுமூரல்

           விளைத்து, மடியின் மீதுஇருந்து,

விம்மிப் பொருமி முகம்பார்த்து,

           வேண்டும் உமையாள் களபமுலை

வள்ளத்து அமுதுஉண்டு அகமகிழ்ந்த

           மழலைச் சிறுவா! வருகவே!

     வளரும் களபக் குரும்பைமுலை

           வள்ளி கணவா! வருகவே!"                   --- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.


உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டவர்கள் இருவரே. ஒருவர் இளைய பிள்ளையாராகிய திருமுருகன். ஞானாகரன், ஞானபண்டிதன் என்னும் திருப்பெயர் அவருக்கு அமைந்தது. மற்றொருவர் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர். உமையம்மை அருளிய ஞானப்பாலை உண்டதனால் அவர் சிவஞானசம்பந்தர் ஆயினார்.


அருணகிரிநாதர், முருகப் பெருமான் திருவருளைப் பெற்ற இறுமாப்பில், எமனைப் பார்த்துக் கூறும் பாடல் இது.


"தாரா கணம்எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் 

ஆராது, உமை முலைப்பால் உண்ட பாலன் அரையில்கட்டும் 

சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே; 

வாராது அகல் அந்தகா! வந்த போது உயிர் வாங்குவனே".


இதன் பொருள் ---


இயமனே! நட்சத்திரக் கூட்டம் என்கின்ற அன்னையர்கள் ஆறு பேர்களும் தந்த முலைப்பாலை உண்டு, அத்துடன் அமையாமல், உமையம்மையாரின் திருமுலைப்பாலையும் உண்டு அருளிய திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் தனது திருவரையில் (இடுப்பில்) கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தி உள்ள சிறுவாளும், வேலாயுதமும் அடியேனுடைய சிந்தையில் குடிகொண்டு இருக்கின்றன. ஆதலினால், என்னிடம் வராது நீங்கிப் போவாயாக. மீறி வந்தால் உனது உயிரை வாங்கிவிடுவேன்.


கொக்கு எனவே நினைத்தனையோ?

  6. கொக்கெனவே நினைத்தனையோ? முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்      கையர்மகிமை மொழியப் போமோ! ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி! வில்வே      ட...