"காளையர்கள் ஈளையர்கள் ஆகி, கருமயிரும்
பூளைஎனப் பொங்கிப் பொலிவு அழிந்து, --சூளையர்கள்
ஓகாளம் செய்யாமுன், நெஞ்சமே! உஞ்சேனை
மாகாளம் கைதொழுது வாழ்த்து."
இதன் பொருள் ---
காளையர்கள் ஈளையர்கள் ஆகி - காளைப் பருவம் உடையவர்கள், முதுமையில் ஈளை நோய் உடையவர்களாகி, கருமயிரும் கூளை எனப் பொங்கிப் பொலிவு அழிந்து - கரிய மயிரும் பூளைப் பூவினைப் போல வெண்மயிராக மாறி, நல்ல தோற்றம் அழிந்து; சூளையர்கள் ஓகாளம் செய்யா முன் - தோழியர்கள் பெருமூச்சு விட்டு அழாத முன்னே; உஞ்சேனை மாகாளம் கைதொழுது வாழ்த்து - உஞ்சேனை மாகாளத்தில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை நீ கைதொழுது வாழ்த்துவாயாக.
குறிப்புரை --- ஈளை – கோழை, இளைப்பு, காசநோய். முதுமையில் கபம் மேலிட்டு இருமல் வருவதால் உண்டாகும் இளைப்பு நோய். பூளைப் பூ – வெண்ணிறம் உடையதொரு மலர். முந்திய பாடலையும் காண்க. பொங்குதல் என்பது, நரைத்த தலைமுடியானது படியாது விரிந்து கிடத்தலைக் குறிக்கும்.
சூளையர்கள் – பரத்தையர், விலைமாதர். விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை. "துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.
உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சாரப் பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடுவர். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும். துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர். இளமைக் காலத்தில், இன்பத்தைத் தந்து பொருளைப் பெற்றுச் சென்ற விலைமாதர் முதுமைக் காலத்தில் வெறுப்புக் கொள்வர். ஓகாளம் – அருவருப்புக் கொள்ளுதல். முன் உண்டதைக் கக்குதல்.
“வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச் செவ்வாய், கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!
ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே.” --- திருவாசகம்.
“பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!” --பட்டினத்தார்.
“சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,
பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!” -- பட்டினத்தார்.
“பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்
கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?” -- கந்தர் அலங்காரம்.
மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.” -- பட்டினத்தார்.
“மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.” --திருப்போரூர்ச் சந்நிதி முறை.
விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். அகலிகையின் அழகில் மயங்கி இந்திரன் தனது நிலையில் இழிவினை அடைந்தான். தனது பாகன் ஆகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கிப் புணர்ந்தான் சூரியன். சந்திரன் தனது குருவின் பத்தினியாகிய தரையைக் கண்டு மயங்கினான். பராசரர் மச்சகந்தியைக் கண்டு மயங்கினார். திருநீலகண்ட நாயனார், “இளமை மீதூர, இன்பத் துறையில் எளியர் ஆனார்” என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டி உள்ளதை அறிக.
சூளையர்கள் என்பதற்கு, நோய்வாய்ப்பட்ட காலத்தில் சூழ்ந்து இருந்து உதவிபுரிவோர் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படிப்பட்டவர்களும் அருவருப்புக் கொள்ளுகின்ற நிலை முதுமையில் உண்டாகும்.
உஞ்சேனை மாகாளம் என்பது வடநாட்டில் உள்ளதோர் சிவத்தலம். காளி பூசித்த தலமாதலால், மாகாளம் எனப்பட்டது. இது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. “நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்” என்று இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தப் பெருமானும், “மதில் உஞ்சை மாகாளம்” என்றும், “உஞ்சேனை மாகாளம்” என்று ஆறாம் திருமுறையில் இரண்டு இடங்களில் அப்பர் பெருமானும், வைத்துப் போற்றி உள்ளனர். இக்காலத்தில் உச்சயினி என்று வழங்கப்படும் சோதிர்லிங்கத் தலம். உச்சியினி என்பது தலம். மாகாளம் என்பது திருக்கோயில்.
No comments:
Post a Comment