நீதியால் தொழுதல்

நீதியால் தொழுதல்

----


மனிதன் தனது தேவைக்கேற்ப வருவாய் வந்து கொண்டிருக்கும் வரையில் நேர்மை உடையவனாக, ஒழுக்க நெறியில், அறத்தின் வழிச் செல்பவனாக வாழ்கிறான். தேவைகள் மிகுதிப்படுகின்ற சூழல் நேர்ந்து, தனது வருவாயைக் கொண்டு அவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது, அதுவரையில் அவன் வாழ்ந்து வந்த திசைமாறுகிறது. அவனது சிந்தனை முழுதும் தேவைகளை நிறைவு செய்து கொள்வதைப் பற்றியே இருக்கிறது. அக்கம்பக்கத்தில் உள்ளோரைச் சற்றே எண்ணிப் பார்க்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் வாழ்க்கை தடுமாற்றம் அடைந்து தடம் மாறத் தொடங்குகிறது. முன்னாலே அவனுக்குத் தோன்றிய நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணிக்கத் தொடங்குகிறான். 


"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,

பசுஏது, பாசம்ஏது,

பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,

பாவபுண் ணியங்கள் ஏது,

வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,

மனம்விரும்பு உணவு உண்டு, நல்

வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு

மலர்சூடி, விளையாடி,மேல்

கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு

கலந்து மகிழ்கின்ற சுகமே

கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்

கயவரைக் கூடாது அருள்,

தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே"

என்று வள்ளல்பெருமான் பாடியபடி பலர் இக்காலத்திலும், ‘தேகமே ஆத்மா, போகமே மோட்சம்’ என்று உலகாயதம் மேலிட்டு வாழ்ந்துகொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்குப் பெயர் ‘பகுத்தறிவு’ என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

    கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள் உலகாயதர்கள் எனப்படுவர். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்பதில்லை. நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் தொடர்பினால் ஆகியதே உடம்பு என்பர்.  அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்பதுன்பங்கள் என்பதும் பொய்.  இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால்,  இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை.

    இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடு விடம்" என்றார் மணிவாசகப் பெருமான். ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர். 

இந்தத் தடுமாற்றத்தைத் தடுக்கவே சமயநெறி மனிதனுக்குத் தேவைப்படுகிறது. "ஒழுக்கம் விழுப்பம் தரலால், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். வாழ்க்கையில் சின்னச் சின்னத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது ஒழுக்கநெறி சிதைகின்றது. இப்படி மனிதனது மனத்திலே தோன்றும் தீய எண்ணங்களுக்கும், தடுமாற்றமான, தெளிவில்லாத சிந்தனைகளுக்கும் சமயநெறியிலே இடம் இல்லை. சமயச் சார்பு இல்லாத ஒழுக்கநெறி, காது இல்லாத ஊசியைப் போன்றது. மணல்பரப்பின் மீது கட்டப்பட்ட கட்டிடம் போன்றது.

மனிதனை மனிதன் வஞ்சித்து ஏமாற்றி வாழ்கின்ற சிந்தனை முதலில் தோன்றுகிறது. சிந்தனை செயலாக வந்த பின்னர், செயலைத் திருத்த முற்படுகிறது சட்டம். குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது சட்டம். குற்றத்திற்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையை முதலிலேயே மாற்றி, நல்வழிப் படுத்த உதவுகிறது சமயம். மனித வாழ்க்கை எப்பொழுதுமே குறைவு உடையதுதான்.  எல்லாருக்கும், எவ்வகையிலாவது குறைவு இருந்துகொண்டேதான் இருக்கும். குறைவிலா நிறைவாக உள்ளவன் யார் என்பதைக் துருவித் துருவி ஆராய்கின்ற பொழுது, ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன் ஒருவன்தான் என்ற முடிவு ஏற்படும். எனவேதான், “குறைவு இலா நிறைவே, குணக்குன்றே” என்றும், குறைவிலா நிறைவே, கோதிலா அமுதே” என்றும் இறைவனைப் பாடினார்கள். இறைவன் குறைவு அற்றவனாக, அன்பே உருவாக, இன்பமே வடிவினனாக இருக்கின்றான். இத்தகு பொருளை மனிதன் சார்ந்திருந்தால், அவனும் குறைவு இல்லா நிறைவு உடையவனாக ஆகிவிடுகின்றான். இறைவனைச் சார்வதற்குச் சமயநெறியும், வழிபாடும் உறுதுணை ஆக நிற்கின்றன.

    இருட்டு அறையில் உள்ள குருட்டுக் குழந்தையைப் போல் உயிரானது அறியாமை என்னும் அஞ்ஞான இருளில் அவதிப்படுகின்றது. “காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்போல் கட்டுண்டிருந்த எமை” என்பார் தாயுமான அடிகளார். ஊனத் திரளில் நாம் ஒன்றுபட்டு இருக்கின்றோம். ஞானத்திரளாக நிற்கும் இறைவனைத் தொழுவதன் மூலம், அறியாமையாகிய ஊனத்திரள் நீங்கப் பெறும். “ஞானத் திரளாய் நின்ற பெருமான், நல்ல அடியார்மேல் ஊனத் திரளை நீக்கும், அதுவும் உண்மைப் பொருள் போலும்” என்று பாடுகிறார் திருஞானசம்பந்தப் பெருமான். துன்பத் தொடக்கில் தொல்லையுறும் உயிர், அதிலிருந்து விடுதலை பெற்று, இன்பத்தில் திளைத்து மகிழ்கிறது. அது சாதாரண இன்பம் அல்ல. சிறிது நேரமே நிலைத்து இருக்கக் கூடிய இன்பம் அல்ல. மறவா, நினையா, அளவு இல்லா, மாளா இன்பம் அது. 

    இறைவனைத் தொழுதல் இறைவனுக்காக அல்ல. அவன் பெறக்கூடியது ஒன்றுமில்லை. இறைவனைத் தொழுதல் உயிரின் நன்மைக்கும் வளர்ச்சிக்குமே ஆகும். இறைவனைத் தொழுதல் என்றால் உடனடியாகச் சடங்குகளே நினைவுக்கு வரும். சடங்குகள் சமயம் ஆகமாட்டா. அவையே இறைவனைத் தொழுதலும் ஆகா. ஆனால் அவையின்றியும் சமய வாழ்வு அமையாது. கடவுளைத் தொழுதலும் ஆகாது. சடங்குகள் சமயவாழ்க்கைப் பயிற்சிக்குத் தொடக்க நிலையில் துணை செய்வன. வழிபாட்டுணர்வில் நிலைத்து நிற்கக் காப்பாக அமைவன. இறைவனைச் சடங்குகளால் தொழும் அளவிலேயே தொழுகை முற்றுப்பெறாது. சடங்குகள் தொடக்க நிலையின. சமய வாழ்க்கையானது சீலத்தால், நோன்பால், செறிவால், அறிவால் என்று முழுமை பெறுகிறதோ அன்றே இறைவனைத் தொழுதல் முழுமை எய்துகிறது.

    இறைவனைச் சடங்குகளால்தான் தொழுதல் வேண்டும் என்பது நாடகத்தால் அடியார்போல் நடிப்பதாகவே முடியும். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் அழுக்காறு அடங்கவில்லை.  ஆசைகளால் அலைப்புண்டு வாழ்கின்றனர். வெகுளியால் வெந்து அழிகின்றனர். கடுமொழி பேசுகின்றனர். ஆங்காரம் மேலிட்டு, பகைமை உணர்வால் பலருக்கும் துன்பம் செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மனிதரில் “பொக்கு” போன்றவர். “பொக்கு” என்றால் உள்ளீடில்லாத பதர், “பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன்” என்பது அப்பர் பெருமான் வாக்கு. இத்தகையோர் சமய வேடங்கள் பூணலாம். ஆரவாரமான சமய சடங்குகளைச் செய்யலாம். அது இறைவனைத் தொழுதலாகாது. “சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி, தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று, விழுந்து கிடப்பேனை” என்று மணிவாசகப் பெருமான் அருளியது காண்க.

    திருஞானசம்பந்தர் இறைவனைத் தொழும் நெறி இன்னது என்று காட்டுகிறார். நூறாயிரம் சடங்கை விட, புலன்களால் நின்றொழுகும் பண்பு இருந்தால் மட்டுமே  பயன் உண்டு. இறைவன் வேண்டுதல் வேண்டாமையிலாதவன், நீதியின் வடிவம் ஆனவன். அவனை கல்விச் செருக்காலும், செல்வச் செருக்காலும் அடைய முடியாது உண்மை அன்பு ஒன்றினால் மட்டுமே அடைதல் கூடும். “பங்கயத்து அயனும் மால் அறியா நீதியே” என்று மணிவாசகப் பெருமான் அருளியது காண்க. “நீதியும் நீயே” நக்கீரதேவர் அருளிய பெருந்தேவபாணி.

    உயிர்க்குலம் அனைத்துக்கும் ஊறு செய்யாத தத்துவமே நீதி. “தயா மூல தன்மம் எனும் தத்துவத்தின் வழி நின்று, சார்ந்தோர்க்கு எல்லாம் நலம் கொடுக்கும் நம்பி” என்று இறைவனைப் போற்றுவார் அப்பர் பெருமான். அந்த வழியையே இறைவன் தனக்கு நல்கியதாகவும், “தயாமூல தன்மவழி எனக்கு நல்கி மனம் திருத்தும் மழபாடி வயிரத் தூணே” என்றும் இறைவனைப் பாடி உள்ளார். பிறரை வாழ்விப்பதில் வாழ்வதுதான் நீதி. இத்தகைய நிறைந்த நீதியாய் வாழ்கின்ற வாழ்க்கை முறையால் இறைவனைத் தொழுதால், வினைச் சார்பு வராது என்கிறார் திருஞானசம்பந்தர். வினையே ஆடவர்க்கு உயிரே” என்றாற்போல, செயல் புரிவது உயிரின் இயற்கை. செயல் மாண்டு அடங்குதல் மனித வாழ்வின் மேம்பட்ட நிலை. செயல்வழித் தவம் செய்தல் வேண்டும். அதாவது வினை செய்தலில், தவம் செய்தலே சிறந்தது. வினை செய்தால் அவ்வழி பற்றும் பாசமும், இன்பமும் துன்பமும் வரும். அதனால் உயிரரானது மன அலைவுகளுக்கு ஆளாகும். ஆனால், நீதியால் நின்று வினை செய்யும்பொழுது, அந்த வினை செயலைப் பெருக்குவதைவிட செயல் மாண்டு அடங்கத் துணை செய்கிறது. 

அதுவே, இறைவனைத் தொழும் முறை என்பது திருஞானசம்பந்தர் காட்டுகிறார்.


“போதியார் பிண்டியார் என்று இவர் பொய்ந்நூலை

வாதியா வம்மின், அம் மாஎனும் கச்சியுள்

ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்

நீதியால் தொழுமின், நும் மேல்வினை நில்லாவே.”

    போதிமர நிழலில் அமர்ந்த புத்தனை வணங்குவோரும், அசோகமர நிழலில் அமர்ந்த அருகனை வணங்குவோரும் ஆகிய புத்தசமண மதத்தினரின் பொய்ந்நூல்களை ஆராய்வதை விடுத்து, வாருங்கள். அழகிய மாமர நீழலில் விளங்கும் தலைவனாகிய சிவபிரான் ஆடும் கச்சியுள் விளங்கும் திருஏகம்பத்தை விதிப்படி வழிபடுங்கள். உங்கள் மேல் வரும் வினைகள் நில்லா.

    உமது வினைகள் முற்றிலும் அழிந்து ஒழியவேண்டுமானால், நாளும் வழிபடவேண்டிய முறையால் வழிபடவேண்டும் என்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.


“நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்,

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்

தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்

காள கண்டன் உறையும் தண்கழுக் குன்றமே.”

     நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து, முழுதும் ஒழிதற்பொருட்டு, தோள்கள் எட்டினையும் உடைய, சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை உடையவனாகிய, நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை, நாள்தோறும், முறைப்படி, நெடிது நின்று வழிபடுமின்கள்.


    நீதியால் தொழுதல் குறித்துத் திருஞானசம்பந்தப் பெருமான் மேலும் தெளிவாக ஒரு பாடலில் காட்டுகின்றார்.


“ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய 

சொல்லை ஆறி, தூய்மை செய்து, காமவினை அகற்றி, 

நல்ல ஆறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்த, 

வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!” 


    திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானே! உள்ளத்தில் பரபரப்பு (வேகம்) அடங்கப் பெற்று, மனதை ஒருமுகப்படுத்தி, கள்ளத்தனம், கபடம், வஞ்சகம் நீங்கி, கடுமையான சொற்களைத் தவிர்த்து, மனதைத் தூய்மைப்படுத்தி, காம உணர்வுகளை நீக்கி, நல்லமுறையில் உமது திருநாமம் ஆகிய திருவைந்தெழுத்தை நாவாரச் சொல்லி வழிபடுகிறேன். அடியேனுக்குத் தகுதிக்கு ஏற்ப வந்து அருள் புரியவேண்டும்.

    வேகம் அடங்கினால் விவேகம் பிறக்கும் என்பதால், “ஒல்லை ஆறி” என்றார். “வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்” என்றார் மணிவாசகப் பெருமான். பரபரப்பு கூடாது. பரபரத்தல் என்னும் சொல்லுக்கு, தீவிரப்படல், மிகவிரைதல், தன்வசம் அழிதல் என்று பொருள். வாழ்க்கையில் ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி பெற்று அமைதியும் இன்பமும் சூழ வாழ விரும்பினால் பரபரப்பு உணர்ச்சி கூடாது. 

    முதலில் பரபரப்பு அடங்கவேண்டும், இரண்டாவதாக உள்ளம் ஒருமைப்பட வேண்டும். மூன்றாவதாக, கள்ளத்தனம் கூடாது. நான்காவதாக, வெய்ய சொல் கூடாது, ஐந்தாவதாக மனம் தூய்மை ஆக வேண்டும். ஆறாவதாக காம உணர்வுகள் கூடாது. இந்த நிலையில் இறைவனைத் தொழுவதே “நீதியால் தொழுதல்” ஆகும்.


17. நயமான சொல்லால் நன்மையே

“நாவின் நுனியில் நயம்இருக்கின், பூமாதும்

நாவினிய நல்லோரும் நுண்ணுவார்; - நாவின்நுனி

ஆங்கடினம் ஆகில், அத்திருவும் சேராள்,முன்

ஆங்கே வரும்மரணம் ஆம்.” — நீதிவெண்பா


நாக்கின் நுனியில் இனியசொல் இருக்குமானால் மலர்மகளும், இனிய சொல்லை உடைய நல்லோரும் நெருங்கி இருப்பர்.  அல்லாமல், நாக்கு நுனியானது வன்சொற்கள் பேசி வலிதாகுமானால், மலர்மகளும் சேரமாட்டாள்.  அதனால் இறப்பும் வரும். (நயம் - இனிய சொல்.  பூமாது - மலர்மகள், இலக்குமி.)


77. சோறு என்ன செய்யும்?


“சோறென்ன செய்யும்? எல்லாம் படைத்திடவே

     செய்யும்! அருள் சுரந்து காக்கும்!

சோறென்ன செய்யும்? எல்லாம் அழித்திடவே

     செய்யும்! அதன் சொரூபம் ஆக்கும்?

சோறென்ன, எளிதேயோ? தண்டலையார்

     தம்பூசை துலங்கச் செய்யும்

சோறென்ன செய்யுமெனில், சொன்னவண்ணம்

     செயும்! பழமை தோற்றுந் தானே.”


இதன் பொருள் ---


        சோறு  என்ன செய்யும் - உணவு  என்னத்தைச் செய்யும்?, எல்லாம் படைத்திடவே செய்யும் - எப்பொருளையும் ஆக்குமாறு புரியும், அருள் சுரந்து காக்கும் - அருள் மிகுந்து காப்பாற்றும், சோறு என்ன செய்யும் - உணவு  என்னத்தைச் செய்யும்?  எல்லாம் அழித்திடவே செய்யும் - எப்பொருளையும் அழிக்குமாறு புரியும், அதன் சொரூபம் ஆக்கும் - உணவின் வடிவம் ஆக்கும், சோறு என்ன எளிதேயோ - உணவு அவ்வளவு அற்பமா? தண்டலையார் தம் பூசை துலங்கச் செய்யும் - தண்டலையாரின் வழிபாடு விளக்கமுறப் புரியும், சோறு என்ன செயும் எனில் - உணவு  என்னத்தைச் செய்யும்? என்றால், சொன்னவண்ணம் செயும் - நாம்  கூறியவாறு முடித்துத் தரும், பழமை தோற்றும் - பழமையை உண்டாக்கும்.


      ‘சோற்றுக்கு இல்லாச் சுப்பன் சொன்ன எல்லாம் கேட்பான்' என்பது பழமொழி. ‘உணவின் பிண்டம்' ஆகையால், அதன் சொரூபம் ஆக்கும் என்றார். தாம் அளிக்கும் உணவுக்காகத் தம்மைப் பழைமையான உறவினர் என்று கூறி வருவோரை நோக்கிப் ‘பழமை தோற்றும்' என்றார். சோறு என்னும் சொல்லுக்கு மெய்யுணர்வு அல்லது ஞானம் என்று ஒரு பொருள் உண்டு. “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்பது அப்பர் தேவாரம். தில்லையைத் தரிசிக்க முத்தி என்பர். தில்லையம்பலத்தைத் தரிசித்தோர்க்கு முத்தி கிடைக்கும் என்பதே இதன் பொருள். 


“தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்

சாதியும் வேதியன் தாதைதனை தாளிரண்டுஞ்

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்

பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.” -- திருவாசகம்.


16. எதனையும் ஆராய்ந்து செய்க


“செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச்

செய்யின், மனத்தாபம் சேருமே; - செய்யஒரு

நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப்

பொற்கொடியைச் சேர்துயரம் போல்.” — நீதிவெண்பா


செய்கின்ற செயலை நன்றாக ஆராய்ந்து செம்மையாகச் செய்தல் வேண்டும். வேறு விதமாகச் செய்தால் வருத்தம்தான் சேரும். முன் ஒரு காலத்து நல்ல குழந்தை ஒன்றைச் செம்மையாகப் பாதுகாத்துக் கொண்டு இருந்த கீரிப்பிள்ளையை ஆராயமல் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்குச் சேர்ந்த துன்பம் போன்றதாகும் அது. (மனத் தாபம் - வருத்தம், துன்பம். நற்குடி - நல்ல குடும்பத்தில் பிறந்த குழந்தை. நகுலன் - கீரிப்பிள்ளை.)


பொற்கொடி நகுலனை ஆராயாமல் கொன்ற கதை.


முன்ஒரு காலத்தில் ஒரு பார்ப்பனப் பெண் தனக்குக் குழந்தை இல்லாமையால், ஒரு கீரிப் பிள்ளையைக் குழந்தைபோல் பாவித்து அன்போடு வளர்த்து வந்தாள். சில ஆண்டுகள் கழித்து அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது.  குழந்தை பிறந்தாலும் கீரிப்பிள்ளையிடம் அன்பு குறையாமல் அதையும் வளர்த்து வந்தாள். ஒரு நாள் தன் குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தூங்கவைத்து, அதற்குக் காவலாகக் கீரிப்பிள்ளையைப் பக்கத்தில் விட்டுவிட்டு, நீர் கொண்டு வரக் குடத்தை எடுத்துக் கொண்டு குளத்திற்குச் சென்றாள்.  அச்சமயத்தில் குழந்து உறங்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பாம்பு ஊர்ந்து வந்தது. அதனைக் கண்ட கீரிப்பிள்ளை அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் கொன்றது.  கீரிப்பிள்ளையின் வாயில் இரத்தம் ஒழுகியது. அந்த நிலையில் தன் எசமானியிடம் தன் மகிழ்ச்சியைக் காட்ட எண்ணி வெளியில் வந்தது. நீர்க்குடத்தோடு வந்த பார்ப்பனி, கீரிப்பிள்ளையின் வாயில் இரத்தம் ஒழுகுவதைக் கண்டு, குழந்தையைத் தான் கீரிப்பிள்ளை கொன்று விட்டது என்று எண்ணி, நீர்க்குடத்தை அதன்மேல் போட்டு உடைத்தாள்.  கீரிப்பிள்ளை இறந்து விட்டது. உள்ளே சென்று பார்த்தாள்.  குழந்தை உயிரோடு இருந்ததையும், பாம்பு இறந்து கிடந்ததையும் பார்த்தாள்.  தன் குழந்தையைக் காப்பாற்றவே, கீரிப்பிள்ளை பாம்பைக் கடித்துக் கொன்றது என உணர்ந்து, ஆராயாமல் கீரிப்பிள்ளையைக் கொன்றதை நினைந்து வருந்தி உயிர் துறந்தாள்.


76. சுகம் படுக்கை அறியாது

தானவனா கியஞானச் செயலுடையார்

     மாதர்முலை தழுவி னாலும்

ஆனதொழில் வகைவகையாச் செய்தாலும்

     அனுபோகம் அவர்பால் உண்டோ?

கானுறையுந் தண்டலையார் அடிபோற்றும்

     சுந்தரனார் காமி போலாய்

மேனவிலும் சுகம்படுக்கை மெத்தையறி

     யாதெனவே விளம்பி னாரே.


இதன் பொருள் ---

    கான் உறையும் தண்டலையார் அடிபோற்றும் சுந்தரனார் - மணம் தங்கிய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் திருவடியை வணங்கும் சுந்தரமூர்த்தி நாயனார், காமி போலாய் - காமுகனைப் போல் நடந்துகொண்டு, மேல் நவிலும் படுக்கைச் சுகம் மெத்தை அறியாது எனவே விளம்பினார் - உயர்த்திக் கூறப்படும் படுக்கை இன்பத்தைப் பஞ்சணை அறியாது (மெத்தை போலவே தாம் இருப்பதாக) என்று கூறினார்; (ஆகையால்) தான் அவன் ஆகிய ஞானச் செயல் உடையார் - தாமும் இறைவனும் ஒன்றெனும் உணர்வு வந்த அறிவுச் செயல் உடையோர், மாதர்முலை தழுவினாலும் - பெண்களைக் கூடினாலும், ஆனதொழில் வகை வகையாச் செய்தாலும் - கலவிக்குரிய தொழில்களை வகைவகையாகப் புரிந்தாலும், அவர்பால் அனுபோகம் உண்டோ - அவர்களிடம் அந்த இன்பப் பற்று இராது.

      துறவிகள் உலகத்தோடு கலந்திருந்தாலும் பற்று அற்றவராகவே இருப்பார்கள் என்பது கருத்து. கான் என்னும் சொல்லுக்கு மணம் என்று பொருள் உண்டு.

        தவவேடம் பூண்டு, தவநெறியில் நின்று ஒழுகி, எப்போதும் இறைவனையே தியானம் செய்து வாழ்கின்ற துறவிகளுக்குப் பல படைக்கலங்கள் துணையாக இருக்கின்றன. அவர்களுக்குத் தாடி ஒரு படை. உடம்பில் பூசியிருக்கும் திருநீறு ஒரு படை, கழுத்தில் அணிந்துள்ள உருத்திராட்சம் ஒரு படை. பகைவர்கள் இவற்றைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள்.  புறத்திலே துறவுக்கு உரிய கோலத்தைப் புனைந்து கொள்வது அகத்திலே கொண்ட திண்மைக்கு அடையாளம். மனத்திற்குள் துறவுத் தன்மை இன்றி, வெறும் புறக்கோலம் மாத்திரம் இருந்தால் அவர்கள் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள். வெற்று வேடத்தால் பயன் இல்லை. "வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என்ன பயன்?"என்கின்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.

 "மனத்தகத்து அழுக்கு அறாத மவுனஞான யோகிகள்,

வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார்,

மனத்தகத்து அழுக்கு அறுத்த மவுனயோக ஞானிகள் 

முலைத்தடத்து இருப்பினும் பிறப்பு அறுத்து இருப்பரே”  

என்று பேசுகிறார் சிவவாக்கியர். 

      மனசிலே மாசு இல்லாத உண்மை ஞானிகள் மகளிருக்கு அருகில் இருந்தாலும், அவர்களுடைய மார்பிலே பழகினாலும் மனத்திலே அழுக்கு உறாமல் இருப்பார்கள். 'அது எப்படி?' என்று கேட்கலாம். குழந்தைகள் இருப்பது இல்லையா? பெண்களின் மார்பிலே தவழ்ந்து கிடக்கிற குழந்தைகளுக்குக் காம உணர்ச்சி உண்டாவதில்லை. அந்த நிலையில் இருப்பவர்கள் உண்மை ஞானிகள். அவர்கள் எல்லாவற்றையும் துறந்தவர்கள்,  புலன்களை எல்லாம் வென்றவர்கள். முனிவர்கள் பொறிகளை அடக்கியவர்கள். புலன் இன்பங்களை வேண்டாம் என்று உதறியவர்கள். அவர்கள் உள்ளத்தில் வீரம் மிக்கவர்கள். 


15. கற்றோர் பெருமை

“கற்றோர் கனம்அறிவர் கற்றோரே, கற்றறியா

மற்றோர் அறியார், வருத்தமுறப் - பெற்றறியா

வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்

நொந்துஅறிகு வாளோ நுவல்.” — நீதிவெண்பா


துன்பப்பட்டுப் பிள்ளையைப் பெறும் துயரத்தை, பிள்ளை பெறாத மலடி பரிவோடு தெரிந்து கொள்வாளோ? அவள் பிள்ளை பெறும் துன்பத்தை அறிய மாட்டாள். அதுபோல, கற்றறிந்த பெரியவர்களின் பெருமையை, கற்றறிந்த பெரியோரே அறிவர். கற்றறியாத மற்றவரால் அறிந்து கொள்ள முடியாது.

(கனம் - பெருமை.  வந்தி - மலடி.   பரிவு - இரக்கம்.)


75. ஊரில் ஒருவன் தோழன்

“சீரிலகும் தண்டலையார் வளநாட்டில்

     ஒருதோழன் தீமை தீர

வாரமிகும் பிள்ளைதனை அரிந்துண்டான்

     ஒருவேந்தன் மணந்து கொண்ட

ஆர்வமிகு மனைக்கிழத்தி ஆண்டிச்சி

     வடிவுகொண்டாள்! ஆகை யாலே

ஊரிலொரு வன்தோழன்! ஆரும்அற்ற

     தேதாரம்! உண்மை தானே?”


இதன் பொருள் ---


        சீர் இலகும் தண்டலையார் வளநாட்டில் - அழகுமிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் வளமிக்க நாட்டிலே, ஒரு தோழன் தீமை தீர வாரம் மிகும் பிள்ளைதனை அரிந்து உண்டான் - ஒரு நண்பனுடைய பொல்லாங்கு நீங்க அன்பு மிகும் குழந்தையை அரிந்து உண்டான், ஒரு வேந்தன் மணந்துகொண்ட ஆர்வமிகும் மனைக்கிழத்தி ஆண்டிச்சி வடிவு கொண்டாள் – ஓர் அரசன் மணம் புரிந்துகொண்ட அன்பு மிக்க இல்லக்கிழத்தி ஆண்டிச்சியின் கோலங் கொண்டாள். ஆகையாலே, ஊரில் ஒருவன் தோழன் - ஆகையால் ஊரில் ஒருவனே நண்பனாகத் தக்கவன், (பலர் இருக்க இயலாது), ஆரும் அற்றதே தாரம் - எவரும் ஆதரவாக இல்லாதவளே மனைவியாகத் தக்கவள்; உண்மைதானே - இது வாய்மையானதே ஆகும்.


      ‘ஊரில் ஒருவனே தோழன்; ஆரும் அற்றதே தாரம்' என்பது பழமொழி. இப்பாடலில் குறித்த இரு கதைகளும் இன்னது என்று அறியக் கூடவில்லை. அறிந்தார்பால் கேட்டு அறியவும். 


சிறுகாலையே அறம் செய்க

சிறுகாலையே செய்க

---


    'அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. அறிவு ஒன்றே மனிதனை மனிதனாக வாழவைப்பது. அறிவு ஒன்றே நல்ல சமுதாய வாழ்வை அளிப்பது. நாயனார் இத்தகைய மேலான அறிவுடைமையைக் கல்வி, கேள்விகளுக்கு அடுத்து அரசியலில் அமைத்துள்ளார். அற்ப அறிவு உடையவர்கள் உலகத்தில் அரசியலில் வாழ்கின்றார்கள். அவர்களை எங்கே சேர்ப்பது என்ற வினா தொடர்ந்து எழுவதும் நியாயமானதுதான்.  பின்னால் நட்பியலில் இதற்கு விடை பகருகிறார் நாயனார். புல்லறிவாளன் அவன் வாழும் வரையில் அவனுக்கும் அவன் சார்ந்து உள்ள சமுதாயத்துக்கும் ஒரு நோயாக இருப்பதோடு,  பேயாக எண்ணி ஒதுக்கவும் செய்யப்படுவான் என்கிறார். 


“ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்வுயிர்

போஒம் அளவும் ஓர் நோய்.” -- திருக்குறள்.


(பெரியோர் சொல்லி இயக்கினாலும் செய்யமாட்டாதவனாய், தானாகவும் தெளிந்து செய்யாதவனாய் மதிக்கத் தக்கதாகிய, ஓர் உயிர் என்று மட்டுமே கொள்ளுதற்கு உரிய அப் பேதையின் மூச்சு, உடலில் இருந்து நீங்கும் வரையிலும் பொறுக்க முடியாத பெரும் துன்பம்)


“உலகத்தார் உண்டு என்பது, இல் என்பான், வையத்து

அலகையா வைக்கப் படும்.” -- திருக்குறள்.


(உயர்ந்தோர் உண்டு எனச் சொல்வதை, இல்லை என்று கூறுகின்ற அறிவிலியானவன், உலகத்தில் ஒரு பேயாக எண்ணி விலக்கப்படுவான்.)


    அறிவே இல்லாதவன் எத்தனையோ வகையில் மேம்பட்டவன். ஆனால் இந்தப் புல்லறிவாளனோ தானும் வாழ்வில் ஏமாந்து உலகையும் ஏமாற்றுவான். அதனால்தான், திருவள்ளுவ நாயனாரோடு,  நாலடியாரும் புல்லறிவாண்மையைச் சுட்டிக் காட்டி உலகைத் திருத்த நினைக்கின்றனர்.  வருமுன் காக்கும் திறமே சிறந்தது. எல்லோராலும் போற்றப் பெறுவதும் அதுவே. பெறுதற்கரிய மக்கட்பிறவியைப் பெற்று, உயிர் வளர்ச்சியில் உச்சத்தில் நிற்கும் மனிதன், சமுதாயத்துக்கும் தனக்கும் ஆற்ற வேண்டியவற்றை எண்ண வேண்டும். உலகவாழ்வு செம்மையாக வழிகாட்டுவது அறிவுடையோர் செயல் ஆகும். அதற்குத் தனி மனிதவாழ்வு செம்மையுற வேண்டும். அந்தச் செம்மை நலம் நாடி, வாய்ப்பு உள்ளபோதே நல்ல செயல்களைச் செய்தல் அறிவுடைமை ஆகும். 

    உயிரின் பயணம் நீண்ட நெடிய ஒன்று. அப்பயண வழியில் உணவு விடுதிகள் இல்லை. தொலையா வழிக்குப் போகின்றவன், முன் எச்சரிக்கையாக, அந்த நீண்ட நெடும் பயணத்துக்குத் தேவையான உணவைச் சேகரித்துத் தோளில் சுமந்து செல்ல வேண்டும். இதைப் பொதி சோறு என்பர். வருங்காலத்துக்குப் பொதிந்து வைப்பது இந்த ஏற்பாடு. உரிய காலத்தில், இளமையிலேயே வருங்கால வாழ்வுக்குரிய பொதியினைக் கட்டிவைக்கும் நன்முயற்சியை ஒருவன் மேற்கொள்ளாவிட்டால், அதன் விளைவு பெருத்த வேதனையில் முடியும். மறுமையில் நம்பிக்கை உடையவர்க்கே இது பொருந்தும்.

    இந்த உண்மைகளை உணராத புல்லறிவினார் வாடிவருந்தி நிற்கும் நிலையினை நாலடியார் கூறுகிறது. புல்லறிவினார் வாழ்வின் கடைசி காலத்தில் தமது செயலுக்கு வருந்தி,  சோறு பொதிய நினைத்தாலும் அது நிறைவேறாத நிலையினையும் அது சுட்டிக் காட்டுகிறது. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த அந்தக் கேடுகெட்ட மதியினர், தம் இறுதி நாளில் அதை அனுபவிக்க நினைத்தாலும் முடியாது அலறுவர். அந்தப் பணமும் அவருக்குப் பயனற்றுப் போகிறது. 

    எவ்வுயிரையும் தம் உயிராய் ஒத்து நோக்கி அறம் ஆற்றாத புல்லறிவாளன் இறக்கும் காலத்தில், புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்துவிட்ட காலத்தில், தான் செய்யாது. விட்டவற்றை எண்ணித் திருத்தவோ அல்லது மூடிவைத்த பொன்னைக் குறிக்கவோ கையைக் குவித்துச் சைகை செய்கிறான்- வாய்பேச முடியாத் நிலை, பாவம். ஆனால், பக்கத்தில் உள்ளவர் அவன் புளிவிளங்காய் கேட்கிறான் என்று கருதி,  போகும் உயிருக்குரது விரும்பிக் கேட்டதைக் கொடுக்க நினைப்பர். ஆனாலும், புளித்த விளாம்பழத்துக்கு அதுகாலம் இல்லையே எனக் கையை விரிப்பர். 

    “பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றபடி, புல்லறிவாளர் பொருட்செல்வத்தை நிரம்பப் பெற்று வாழ்ந்த காலத்தில், அறச் செயல்களைச் செய்து வாழாது, சாகும் காலத்தில், கழிந்த நாளுக்கு இரங்கிச் செயலாற்ற நினைத்தாலும், அது முடியாத அவல நிலையை நாலடியார் பின்வருமாறு உணர்த்துகிறது.


சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி

இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்

பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்

பொன்னும் புளிவிளங்காய் ஆம்.”


உடம்பு நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்பவற்றை உணர்ந்து, நீண்ட நெடும் பயணத்தை உயிரானது மேற்கொள்ள உள்ளது என்பதையும் உணர்ந்து, அந்தத் தொலையா வழிக்கு உதவக் கூடிய உணவாகிய தானதருமங்கள் என்னும் கட்டுச் சோற்றை உழிருள்ள போதே கட்டி வைத்துக் கொள்ள எண்ணாமல், தருமம் செய்வதைப் பற்றி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று, பொன்னையும் பொருளையும் புல்லறிவாளர்கள் பூட்டி வைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மரணப் படுக்கையில் வாய் பேச முடியாமல் இருந்துகொண்டு, கையால் சைகை செய்து தமது உறவினர்களிடம் தான துரமங்களைச் செய்யுமாறு காட்டுவார்கள். அவர்களோ இவரது சைகையைப் புரிந்து கொள்ளாமல், கடைசி காலத்தில் விளங்காய் தின்ன ஆசைப்படுக்றார் என்று நினைத்துக் கொள்வர். அந்த நிலையிலும் புல்லறிவாளருடைய பொருள் தானத்துக்கு உதவுவது இல்லை.


    புல்லறிவாளர்கள் எதனையும் காலத்தில் செய்து கொள்ளாது ஏமாந்து, பின் வருந்துவார்கள். நற்செயல்களைப் பிறர் சொன்னாலும் செய்யமாட்டார்கள். தாமாகவும் உணர்ந்து செய்யமாட்டார்கள்.நற்செயல்களைச் செயல்களில் காலத் தாழ்வு கூடாது. இப்போது நாம் இளைஞராய்த் தானே இருக்கிறோம். பிறகு பொறுமையாக அறச் செயல்கள் புரியலாம் எனச் சோம்பியிருத்தலும் கூடாது, “அன்றறிவாம் என்னாது அறம் செய்க” என்கிறார் திருவள்ளுவ நாயனார். கையில் பொருள் உள்ள போதே மறைக்காமல் அறம் செய்யவேண்டும். இளமையை நம்பக் கூடாது. சூறைக் காற்று வீசும்போது, முற்றி முதிர்ந்த கனி வீழாமல் மரத்திலேயே இருக்க, பச்சிளங்காய் விழுந்து விடுவதும் உண்டு என்று நாலடியார் நவில்கிறது.


“மற்று அறிவாம் நல்வினை, யாம் இளையம் என்னாது,

கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்;

முற்றி இருந்த கனி ஒழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு” 


    இதையே, முன்றுறை அரையனார் இயற்றிய "பழமொழி நானுாறு" என்னும் நூலில் ஒரு பாடல் வேறொரு வகையால் விளக்குகின்றது. ஓடத்தில் ஏறும் முன்பே ஏறுபவரிடம் ஓடக்காரர் கட்டணம் வாங்கி விடவேண்டும். அவரை அக்கரை சேர்ந்தபின் அவருக்குக் கட்டணம் கொடுப்பதில் அக்கறை இல்லாமலும் போகக்கூடும். அதாவது, அவரிடம் கட்டணம் வாங்குவது அரிதாகவும் போய் விடலாம். சுங்கப் பணம் வாங்குவதும் இது போன்றதே. எனவே, எதையும் இளமை உள்ள போதே கல்வி கற்கவேண்டும். முதுமையில் கற்க முடியாமல் போகலாம் என்று இந்நூல் அறிவுறுத்துகிறது.


“ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண்

போற்றும் எனவும் புணருமோ-ஆற்றச்

சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை

மரம்போக்கிக் கூலிகொண்டார்” 


  "சிறுகாலை" என்பதற்கு, "இளவயது" என்பதே சிறப்பான பொருள்.

 

"ஊன்அமர் ஆக்கை உடம்புதன்னை

     உணரில் பொருள்அன்று,

தேன்அமர் கொன்றையினான் அடிக்கே

     சிறுகாலை ஏத்துமினோ"

 

என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடி உள்ளார்.







14. தாழ்வினை அடைபவர்கள்

 


“பெற்றுஅமையும் என்னாப் பெரியோரும், பெற்றபொருள்

மற்றுஅமையும் என்றே மகிழ்வேந்தும், - முற்றியநன்

மானம்இலா இல்லாளும், மானம்உறு வேசியரும்

ஈனம் உறுவார் இவர்.”


பெற்றிருக்கும் பொருளே போதும் என்று மனம் அமையாத பெரியவர்களும், பெற்றுள்ள பொருளே போதும் என்று அமைந்து மனம் மகிழ்கின்ற வேந்தனும், மிகுந்த நாணம் இல்லாத மனைவியும், நாணம் கொண்ட வேசியும் ஆகிய நால்வரும் தாழ்வினை அடைவார்கள்.


(வேந்து - அரசன். மானம் - நாணம்.  ஈனம் - தாழ்வு.)


74. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது

புனங்காட்டும் மண்ணும்விண்ணும் அஞ்சவரும்

     காலனையும் போடா என்றே

இனங்காட்டும் மார்க்கண்டன் கடிந்துபதி

     னாறுவய தென்றும் பெற்றான்

அனங்காட்டும் தண்டலையார் அடியாரெல்

     லாம்ஒருவர்க் கஞ்சு வாரோ!

பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்

     கொருநாளும் பயப்ப டாதே.


இதன் பொருள் ---


    பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்கு ஒருநாளும் பயப்படாது - பனங்காட்டு நரி எப்போதும் சலசல என்ற ஒலிக்கு அஞ்சிடாது; (அதுபோல), அனம் காட்டும் தண்டலையார் அடியாரெல்லாம் ஒருவருக்கு அஞ்சுவாரோ - அன்னங்களைக் காண்பிக்கும் (பொய்கைகளையுடைய) திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் அடியவர் எல்லாரும் ஒருவருக்கும் அஞ்சமாட்டார்; புனம் காட்டும் மண்ணும் விண்ணும் அஞ்சவரும் காலனையும் - காடுகளைக் காட்டும் மண்ணுலகும் வானுலகும் அஞ்சுமாறு வந்த எமனையும், இனம் காட்டும் மார்க்கண்டன் போடா என்று கடிந்து - அடியார்களின் உறவைக் காட்டும் மார்க்கண்டன் போடா என்று விலக்கி, என்றும் பதினாறு வயது பெற்றான் - எப்போதும் பதினாறு வயதினைச் (சிவபெருமானிடம்) பெற்றான்.

  ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது' என்பது பழமொழி.


மார்க்கண்டேயர் வரலாறு


    அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து, தவத்தையே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்து வாழ்ந்து வந்தார். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசித் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தார். வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி ஆகிய சிவபரம்பொருள் விண்ணிடைத் தோன்றி, “மாதவரே! நீர் வேண்டும் வரம் யாது?” என்றார். முனிவர் பெருமான் புரமூன்று எரித்த பூதநாயகனைப் போற்றி செய்து புத்திர வரம் வேண்டினார்.

    அதுகேட்ட ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து, “தீய குணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும், கோல மெய்வனப்பு உடையவனும், குறைவிலா வடிவு உடையவனும், நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும், பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய சற்புத்திரன் வேண்டுமா? சொல்வாயாக" என்றார்.

"தீங்கு உறு குணமே மிக்கு,  சிறிது மெய் உணர்வு இலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகி,  முடமும் ஆய், விழியும் இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும்   உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",    

    

"கோலமெய் வனப்பு மிக்கு,  குறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றி,  எமக்கும் அன்பு உடையோன் ஆகி,

காலம் எண் இரண்டே பெற்று,  கலைபல பயின்று வல்ல

பாலனைத் தருதுமோ? நின்  எண்ணம் என் பகர்தி" என்றான். --- கந்த புரைணம்.


    முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றார். அரவாபரணர் அவ்வரத்தை அருளினார்.


மாண் தகு தவத்தின் மேலாம்  மறைமுனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும்  அறிவுளன் ஆகி, யாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றி,  எம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே  வேண்டினன், புரிக" என்றான்.     --- கந்த புராணம். 

        

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தருமபத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவ முனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றார். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தன; விண்ணவர் மலர்மழைச் சிந்தினர்; முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினார்.  ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது உனக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேரும் என எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர்.

    மார்க்கண்டேயர், தாய்தந்தையரை நோக்கி, “நீங்கள் வருந்த வேண்டாம்; உமக்கு வரம் அளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்று கூறி விடைபெற்று, காசித் திருத்தலத்தில் மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து வந்தார். அன்பின் மயமாய்த் தவம் இயற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, உனக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,


“ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய

மெய்யனே! பரமனே! விமலனே! அழல்

கையனே! கையனேன் காலன் கைஉறாது

உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’      --- கந்தபுராணம்.


“சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

    மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி, அவரை நெருங்கவும் கூடாதவனாய் திரும்பி, தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, அவன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராகி சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் “ ஐயனே! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை; மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால், அவர் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை; திருக் கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தமது மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்று கட்டளை இட்டான். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும், இடையறா அன்பின் தகைமையையும் கண்ணுற்று, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியோரே! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துள்ளான், உமக்கு இந்திர பதவியைத் தருவான், வருவீர்” என்றான். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார். நீ போ” என்றார்.


“நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,

 ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,

 வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்

 போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.” --- கந்தபுராணம்.

                                    

    அது கேட்ட காலன் தனது தலைவனிடத்து அணுகி நிகழ்ந்தவை கூறினான். அது கேட்ட  இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி, ஊழிகாலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பாசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினான். அவனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். இயமன் “மைந்தா! நீ என்ன நினைத்தாய்? என்ன செய்கிறாய்? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யார்? ஈசனார் உமது தந்தைக்கு அளித்த வரத்தை மறந்தாயோ? நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது, நான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும், வானத்து மீன்களை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு, கமலாசனுக்கும் உண்டு; எனக்கும் உண்டு; பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும்,  மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லது மீண்டு போகேன். விரைவில் வருவாய்” என்றான். மார்க்கண்டேயர் “அந்தகா! சிவன் அடியார் பெருமையை நீ அறியாய். அவர்களுக்கு முடிவில்லை; முடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி எமபுரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.”


“தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க

ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,

பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,

போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான்.    --- கந்தபுராணம்    

 

    “இவ்விடம் விட்டு விரைவில் போ, போ” என்ற வார்த்தைகளைக் கேட்ட இயமன் மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றாய்.  என் வலிமையைக் காண்பாய்” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசினான், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் இருந்தார். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு “குழந்தாய்! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் உனது உயிரை வாங்க எண்ணினான்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தார். மார்க்கண்டேயர் தந்தை தாயை அணுகி நிகழ்ந்தவற்றைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். 


மதத்தான் மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்

பதைத்தான் என்னா உன்னி, வெகுண்டான், பதி மூன்றும்

சிதைத்தான், வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி

உதைத்தான், கூற்றன் விண் முகில் போல் மண் உறவீழ்ந்தான்.    --- கந்தபுராணம்


பின்வரும் தேவாரப் பாடல்கள் மார்க்கண்டேயர் வரலாற்றை எடுத்துக் கூறும்.


“நலமலி தருமறை மொழியொடு

         நதிஉறு புனல், புகை, ஒளிமுதல்,

மலர்அவை கொடுவழி படுதிறல்

         மறையவன் உயிர் அது கொளவரு

சலமலி தரு மறலி தன்உயிர்

         கெட உதை செய்தவன் உறைபதி

திலகம் இது என உலகுகள் புகழ்

         தருபொழில் அணிதிரு மிழலையே.”  ---  திருஞானசம்பந்தர்.


“நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு

ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்

கன்றிவரு காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்

கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம் பெருமானே.” ---  திருஞானசம்பந்தர்.


“நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து

ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,

சாற்றுநாள் அற்றது என்று, தருமராசற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.”   --- அப்பர்.


“மருள்துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்

இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து, உங்ஙனே

உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.”         --- அப்பர்.

  

“அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத

         அவனைக் காப்பது காரணமாக

வந்தகாலன் தன்ஆருயிர் அதனை

         வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,அடியேன்

எந்தை!நீ எனை நமன் தமர் நலியில்

         இவன்  மற்றுஎன் அடியான் என விலக்கும்

சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்

         செழும்பொழில் திருப்புன் கூர்உளானே.” --- சுந்தரர்.


இறையடியார்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதை அறிவுறுத்தி,


“சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,

வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,

அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,

திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.”


எனவும்,


“நாமார்க்குங் குடியல்லோம், நமனை அஞ்சோம்,

நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,

ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம்,

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை,

தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்கவெண் குழைஓர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.”


எனவும்,


“கற்றுக் கொள்வன வாயுள நாவுள;

இட்டுக் கொள்வன பூவுள நீருள;

கற்றைச் செஞ்சடையான் உளன் நாமுளோம்;

எற்றுக்கோ நமனால்முனிவு உண்பதே.” 


எனவும் வரும் அப்பர் தேவாரப் பாடல்களை இங்கு வைத்துச் சிந்திக்கவும்.


எந்நாளும் இன்பமே



இன்பமே எந்நாளும்

-----


    இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை. இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல, துன்பத்தைப் பலரும் ஏற்றுக் கொள்வதில்லை. துன்பத்தைக் கண்டு அஞ்சுவார்கள். சிலர் அதைப் பொறுமையோடு பொறுத்துக் கொள்வர். எப்படி வாழவேண்டும் என்று “ஆசாரக்கோவை” கூறுகிறது.


“துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள்

இன்ப வகையான் ஒழுகலும், - அன்பில்

செறப்பட்டார் இல்லம் புகாமையும், மூன்றும்

திறப்பட்டார் கண்ணே உள.”


இதன் பொருள் ---


    துன்பம் வந்த காலத்தில்,  அத்துன்பத்தில் அமைவுற்று வாழ்தலும், இன்பம் வந்த காலத்தில், பிறர்க்கும் இன்பம் செய்யும் வகையால் இன்புற்று நடத்தலும், அன்பினின்றும், வேறுபட்டவருடைய வீட்டில் நுழையாமையும் ஆகிய இம் மூன்றும் ஒருவழிப்பட்ட பெரியோரிடத்தே உண்டு.


    ஒருவர் ஒரு நல்ல செயலை முயற்சியுடன் செய்கின்ற பொழுது அதில் அவர்க்குப் பல துன்பங்கள் உண்டாகலாம். ஆனாலும் அவர் அத்துன்பங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். துன்பங்களைக் கண்டு அஞ்சி, செயலைக் கைவிடுதல் கூடாது. அத்தகையவர்க்கு முடிவில் அச்செயல் கைகூடி இன்பம் உண்டாகும். எனவே ஒரு செயலைக் செய்து முடிப்பதில் உண்டாகக் கூடிய துன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்கின்றவர்கட்கு இன்பம் மிகவும் எளிமை உடையது ஆகும்இன்பமயமான அனுபவத்தின் ஊடே, துன்பக் கலப்பு இல்லாமல் இல்லை. தோற்றம் உண்டேல் மரணம் உண்டு, துயரம் மனைவாழ்க்கை” என்பதும், “இன்பம் உண்டேல் துன்பம் உண்டு, ஏழை மனைவாழ்க்கை” என்பதும் சுந்தரர் தேவாரம். 

    எனவே, பிறப்பும் – இறப்பும், இன்பமும் – துன்பமும் ஒருவருடைய வாழ்வில் இரவும் பகலும் போல மாறிமாறி வருபவை என்பதை,


‘‘இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

நன்பகல் அமையமும் இரவும் போல

வேறு வேறு இயலஆகி மாறு எதிர்ந்து

உளஎன உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்

இன்னா வெஞ்சுரம் நல்நசை துரப்ப

துன்னலும் தகுமோ? துணிவுஇல் நெஞ்சே’’ 


என்று அகநானூறு கூறும்.


  “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்று அப்பர் பெருமான் பாடி உள்ளார். எந்நாளும் துன்பம் இல்லாமல் எப்படி வாழமுடியும்? முடியும்.

    வாழப் பிறந்த மனிதன் என்றும் வாடாத வகையில் இன்பத்தினையே நாடுவது இயற்கை. அந்த இன்பத்தினைப் பெறப் பலரும் பல்வேறு வகையில் முயல்கின்றனர். ஒரு சிலர் தம் முயற்சியில் வெற்றி பெறுகின்றனர். பலர் வீழ்ச்சி உறுகின்றனர். சிலர் வழியல்லா வழிகளில் சென்று இன்பம் துய்க்க முயல்கின்றனர். சிறுபொழுதே இருந்து பின்பு துன்பமாக மாறுகின்ற இன்பத்தைக் காணவே உலகில் பலரும் ஓடி உழல்கின்றனர். எண்ணிய இன்பத்தைப் பெற்று மகிழும் காலத்தினைக் காட்டிலும், நீண்டகாலம் துன்பத்தில் சுழலும் நிலையில் ஒரு சிலர் வாழ்வு அவலமாகவும் கழிகின்றது.

    “இன்பமும் துன்பமும் தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே’’ என்பார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். பொருள்களில் இன்பமோ துன்பமோ பொருந்தி இருப்பது இல்லை. அது உள்ளத்திலே உள்ளது. இது வேண்டும் அது வேண்டும், இருப்பது போதாது, இன்னமும் வேண்டும் என்று எப்போதும் மனமானது அலைந்து கொண்டே இருப்பதால், எவ்வளவு காலம் முயன்றாலும் துன்பமே விஞ்சி நிற்கும். ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசை அறுதலே இன்பத்திற்கு ஊற்று. “இன்பம் இடையறாது ஈண்டும், அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்” என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. “ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” என்பது நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலர் திருவாக்கு.

    இந்த அடிப்படை உண்மையினை உணர்ந்து கொள்ள வேண்டும். நாலடியார் அந்த உண்மையினை நமக்கு மேலும் உணர்த்துகின்றது, 

“அறிவது அறிந்து அடங்கி, அஞ்சுவது அஞ்சி, 

உறுவது உலகு உவப்பச் செய்து - பெறுவதனால் 

இன்புற்று வாழும் இயல்பினார், எஞ்ஞான்றும் 

துன்புற்று வாழ்தல் அரிது’ -- நாலடியார். 

இதன் பொருள் ---

யாவராலும் அறிதற்கு அரிதாகி, அறிய வேண்டியதாக உள்ளவற்றை, நல்லவற்றை உள்ளபடி அறிந்து, அறிந்தபடி காம, வெகுளி, மயக்கங்களின் வழியே செல்லாது, மனம் அடங்கி நடந்து, அஞ்ச வேண்டிய பழிபாவங்களுக்கு அஞ்சி, உயர்ந்தோர் விரும்பி மகிழத்தக்க நல்ல செயல்களையே செய்து வாழ்வதனால் உண்டாகும் பயன் குறைவு என்றாலும், அதனைக் கொண்டு இன்புற்ற வாழும் மனப்பாங்கு உள்ளவர்கள் எப்போதும் வாழ்வில் துன்பத்தை அடையமாட்டார்கள்.

    அரிய உண்மைகளை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. முதலாவதாக அறிவதை அறியவேண்டும். பலவற்றைக் கற்று வைத்து இருந்தாலும், உலகில் உள்ள உயர்ந்தோர் கூறிய அறவுரைகளை அறிந்து ஒருவன் ஒழுகவில்லையானால், பறவற்றைக் கற்று வைத்து இருந்தாலும் ஒருவன் அறிவு இல்லாதவனாகவே கருதப்படுவான் என்கிறார் திருவள்ளுவ நாயனார். “உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும் கல்லார் அறிவு இலாதார்” என்பது திருக்குறள். அந்த அறிவுதான் மாட்சிமைப்பட்ட அறிவு என்கிறது “பழமொழி நானூறு” என்னும் நூல்.

“அறிவினால் மாட்சி ஒன்(று) இல்லா ஒருவன்

பிறிதினால் மாண்ட(து) எவனாம்? - பொறியின்

மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன

அணி எல்லாம் ஆடையின் பின்.

இதன் பொருள் ---

சாணையால் பட்டை தீட்டப்பட்ட இரத்தினங்களால் ஆன அணிகலனும், பொன்னால் ஆன அணிகலனும், சந்தனக் கலவையும், மாலையும் ஆகிய இவை போன்ற அணிகள் யாவையும், ஆடை உடுத்த பின்னர் அணிந்து கொண்டால்தான், அழகு மிளிரும். அதுபோலவே, அறிவினால் வந்த பெருமைகளே ஒருவனுக்குப் பெருமை ஆகும். அறிவு இல்லாத ஒருவன் பிற செல்வங்களினால் பெருமை அடைவது இல்லை.

    செல்வத்தை உடையோரினும் அறிவுடையாரே சிறந்தோர் ஆவர் என்பது கருத்து. எனவே அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்வது அவசியம். “கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, அறிய வேண்டியதை அறிந்து, அதன்படி ஒழுகினால், மனமானது காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களில் இருந்து விடுபடும். அப்படிப்பட்ட மனம் அஞ்ச வேண்டியற்கு அஞ்சும். “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” என்றார் நாயனார். “பிறர் அஞ்சவது அஞ்சி” என்பது புறநானூறு.

    அறிவும் அடக்கமும் அஞ்சுவது அஞ்சும் நல்லுணர்வும் மனிதனிடத்தில் அமைந்தால் நாட்டிலும் உலகிலும் இன்று காணப்படும் பல கொடுமைகள் இல்லாமல் போகும் என்பது உண்மை. இந்த அறிவும் அடக்கமும் நல்லுணர்வும் அமைந்த நல்ல உள்ளம் உடையோர் உலகம் விரும்பிய நல்ல காரியங்களைச் செய்வதோடு, உள்ளதைக் கொண்டு மகிழ்ந்து, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற நெறியில் நிற்பர். 

    அறிய வேண்டியவற்றை அறிந்து ஒழுகினால், தலையாய அறிவு நம்மிடத்தே தலைப்படும். அதுவே அறிவின் பயனும் ஆகும். “அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய செறுவார்க்கும் செய்யா விடல்” என்கிறார் திருவள்ளுவ நாயனார். தமக்குத் துன்பம் உண்டாக்குபவர்களுக்கும் தீவினைகளைச் செய்யாமல் விடுதல் என்பதை அறிவுகள் எல்லாவற்றிற்கும் தலையாய அறிவு என்று நல்லோர் சொல்லுவர் என்கிறார். எனவே, நாம் முதலில் தீய செறுவார்க்கும் செய்யா அறிவுடையராக வேண்டும். அந்தத் தலையாய அறிவின் வழி அடக்கம் அமையும். அஞ்சுவது அஞ்சும் பண்பும் உருவாகும். நாம் எல்லாரும் இன்பம் பெறுவோம் என்பது உறுதி. 

    “இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை” என்னும் அருளாளர் வாக்கு மெய்ம்மை ஆகும்.


பொது --- 1115. வடிவ வேல்தனை

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

வடிவவேல் தனை (பொது)


முருகா! உனது திருவடியைத் தொழ அருள்வாய்


தனதனா தனதனந் தனதனா தனதனந்

     தனதனா தனதனந் ...... தனதான


வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்

     தமர்செய்வாள் விழியர்நெஞ் ...... சினில்மாயம்


வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்

     தணுகுமா நிதிகவர்ந் ...... திடுமாதர்


துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந்

     தமளிதோய் பவர்வசஞ் ...... சுழலாதே


தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந்

     துனதுதாள் தொழமனந் ...... தருவாயே


படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்

     கயனுநான் மறையுமும் ...... பரும்வாழப்


பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்

     டலகையோ டெரிபயின் ...... றெருதேறிக்


கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங்

     குவளைசேர் சடையர்தந் ...... திருமேனி


குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்

     குமரனே யமரர்தம் ...... பெருமாளே.


                           பதம் பிரித்தல்


வடிவவேல் தனை வெகுண்டு, இளைஞர் ஆவியை வளைந்து,

     அமர்செய் வாள்விழியர், நெஞ் ...... சினில் மாயம்


வளர, மால் தனை மிகுந்தவர்கள் போல அளவி வந்து,

     அணுகு மாநிதி கவர்ந் ...... திடு மாதர்,


துடியை நேர் இடை தனம் துவளவே, துயில் பொருந்து,

     அமளி தோய்பவர் வசம் ...... சுழலாதே,


தொலைவு இலா இயல் தெரிந்து, அவலம் ஆனது கடந்து,

     உனது தாள் தொழ மனம் ...... தருவாயே.


படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவு பங்-

     கயனும், நான்மறையும், உம் ...... பரும் வாழ,


பரவை ஊடு எழு விடம் பருகி, நீள் பவுரி கொண்டு

     அலகையோடு எரி பயின்று, ...... எருது ஏறி,


கொடிய வாள் அரவு, இளம் பிறையினோடு, அலை சலம்

     குவளை சேர் சடையர் தம் ...... திருமேனி


குழைய, ஆதரவுடன் தழுவு நாயகி தரும்

     குமரனே! அமரர் தம் ...... பெருமாளே.



பதவுரை



படி எ(ல்)லா(ம்) முடிய நின்று அருளு(ம்) மால் உதவு பங்கயனும் --- உலகம் முழுமையும் காத்து அருள் புரிகின்ற திருமாலும், அவன் பெற்று அருளியவனும்,தாமரையில் வாழுகின்றவனும் ஆகிய பிரமதேவனும்.



நான் மறையும் உம்பரும் வாழ --- நான்கு வேதங்களும், தேவர்களும வாழும்பொருட்டு,


பரவை ஊடு எழு விடம் பருகி --- திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அமுது செய்து,


நீள் பவுரி கொண்டு --- அழகிய பவுரிக் கூத்தை இயற்றி,


அலகையோடு --- பேய்களோடு ஆடி,


எரி பயின்று --- நெருப்பைத் திருக்கையில் ஏந்தி,


எருது ஏறி --- இபடத்தின் மீது இவர்ந்து,


கொடிய வாள் அரவு --- கொடிய ஒளி பொருந்திய பாம்புகளை,


இளம் பிறையினோடு --- இளம் பிறைச்சந்திரனோடு,


அலை சலம் –-- அலகளை வீசும் கங்கை நதியும்,


குவளை சேர் சடையர் தம் திருமேனி குழைய –-- குவளை மலர்களும் சூடியுள்ள திருச்சடையினை உடைய சிவபரம்பொருளினது திருமேனி குழையுமாறு,


ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே --- அன்போடு தழுவிய உமாதேவியார் அருளிய குமாரக் கடவுளே!


அமரர் தம் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!


வடிவ வேல் தனை வெகுண்டு --- அழகும் கூர்மையும் பொருந்திய வேலைக் கோபித்தது போல எழுந்து,



இளைஞர் ஆவியை வளைந்து அமர் செய் வாள் விழியர் ... இளைஞர்களின் உள்ளத்தை வளைத்துப் போர் புரியும் ஒளி பொருந்திய கண்களை உடையவர்களும்,


நெஞ்சினில் மாயம் வளர --- உள்ளத்தில் வஞ்சகம் மிகுந்து நிற்க,


மால் தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர் --- அன்பு மிக்கவர் போல நடித்து, அளவளாவி அணுகிப் பெரும் செல்வத்தைக் கவருகின்ற பொதுமாதர்கள்,


துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே --- உடுக்கை போன்ற இடையானது, மார்பகங்களின் கனத்தினால் துவளுமாறு படுக்கையில் கலவியில் ஈடுபடுபவர்களின் வசமாகி மனக் கலக்கம் அடையாமல்,


தொலைவு இலா இயல் தெரிந்து --- அழிதல் இல்லாத ஒழுக்க நெறியை அறிந்து ஒழுகி,


அவலமானது கடந்து --- அதனால் பயனற்ற செயல்களில் ஈடுபடுவதைக் கடந்து,


உனது தாள் தொழ மனம் தருவாயே --- தேவரீரது திருவடிகளை வணங்குகின்ற உள்ளத்தை அடியேனுக்குத் தந்து அருளுவீராக.



13. பெரும்பாவம்

“ஆன்,அந் தணர்,மகளிர், அன்பாம் குழந்தைவதை;

மானம் தெறும்பிசி வார்த்தை,இவை - மேல்நிரையே

கூறவரு பாவம் குறையாது,ஓவ் வொன்றுக்கும்

நூறுஅதிகம் என்றே நுவல்.” — நீதிவெண்பா


பசுவதை, அறவோர் கொலை, பெண் கொலை, அன்பு காட்ட வேண்டிய குழந்தை கொலை, இழிவைத் தரும் பொய்யுரை ஆகிய இவ் ஐந்து தீமைகளையும் மேல் வரிசையாகச் சொல்ல, அவற்றால் வரும் பாவம் ஒன்றுக்கொன்று குறையாமல் நூறு பங்கு அதிகம் என்றே சொல்லவேண்டும்.


(அந்தணர் - அந்தணர் என்போர் அறவோர். வதை - கொலை.  மானம் - மதிப்புக் குறைவு.  பிசி - பொய்)


73. பணம் பந்தியிலே - குணம் குப்பையிலே

"பணம்தானே அறிவாகும்! பணம்தானே

     வித்தையும்ஆம்! பரிந்து தேடும்

பணம்தானே குணமாகும்! பணம் இல்லா-

     தவர் பிணமாம் பான்மை சேர்வர்!

பணம் தானே பேசுவிக்கும்! தண்டலைநீள்

    நெறியாரே! பார் மீதில் தான்

பணம் தானே பந்தியிலே! குலம் தானே

    குப்பையிலே படுக்கும் தானே."

இதன் பொருள்  ---

    தண்டலைநீள் நெறியாரே – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவரே!

    பணந்தானே அறிவு ஆகும் - பணமே அறிவாக மாறும், பணந்தானே வித்தையும் ஆம் - பணமே கல்வியைத் தரும், பரிந்து தேடும் பணந்தானே குணம் ஆகும் - விரும்பிச் சேர்க்கும் பணமே குணம் எனக் காட்சிதரும், பணம் இல்லாதவர் பிணம் ஆம் பான்மை சேர்வர் - பணம் இல்லாதோர் பிணம் என்னுந் தன்மையர் ஆவர், பணந்தானே பேசுவிக்கும் - பணமே (பேசாதவரையும்) பேசுமாறு செய்யும், பார்மீதில் பணந்தானே பந்தியிலே குலந்தானே குப்பையிலே படுக்கும் - உலகிலே பணம் பந்தியிலும் குலம் குப்பையிலும் சேரும்.

    ‘பணமில்லாதவன் பிணம்' ‘பணம் பந்தியிலே குலம் குப்பையிலே' ‘பணம் பத்தும் செய்யும்' என்பன பழமொழிகள்.


12. துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்

ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை

தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்

தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா


ஆசைக்கு அடிமைப் பட்டவன் உலகம் முழுமைக்கும் (உலகத்தில் உள்ள யாவர்க்கும்) குற்றம் அற்ற  நல்ல அடிமை ஆவான். ஆசையைத் தனக்கு அடிமையாகக் கொண்டவனே,  எல்லா உலகத்தையும் தவறாமல் தனக்கு அடிமை ஆக்கிக் கொண்டவன்.

    (லோகம் - உலகம்.  வடசொல்.  ஆசு - குற்றம்.)


72. ஆடம்பரத்துக்கு மதிப்பு அதிகம்


சகமிக்க தண்டலையார் அடிபோற்றும்

     மகராசர் சபையில் வந்தால்,

சுகமிக்க வேசையர்க்குப் பொன்நூறு

     கொடுப்பர்! தமிழ் சொன்ன பேர்க்கோ

அகமிக்க சோறிடுவார்! அந்தணருக்

     கெனின்நாழி அரிசி ஈவார்!

பகடிக்கோ பணம்பத்துத் திருப்பாட்டுக்

     கொருகாசு பாலிப் பாரே.


இதன் பொருள் ---


    சகம் மிக்க  தண்டலையார்  அடி போற்றும்  மகராசர் சபையில் வந்தால் - உலகில் சிறப்புற்று விளங்கும் திருத் தண்டலை இறைவரின்  திருவடியை வணங்கும் பெருமன்னர்களின் அவைக்குப் போனால், சுகம் மிக்க வேசையர்க்கு நூறு பொன் கொடுப்பர் - இன்ப மிகத் தரும் கணிகையர்க்கு நூறு பொன் கொடுப்பார்கள், தமிழ் சொன்ன பேர்க்கோ அகம் மிக்க சோறு இடுவர் - தமிழ்க் கவி கூறியவர்க்கு வீட்டில் மிகுந்துள்ள சோற்றைப் போடுவர். அந்தணருக்கு எனின் நாழி அரிசி ஈவர் – அந்தணர்களுக்கு ஆயின் படியரிசி கொடுப்பர். பகடிக்கோ பணம் பத்து திருப்பாட்டுக்கு ஒருகாசு பாலிப்பார்! – பகடிக்கு எனில் பத்துப் பணமும், அழகிய பாவினுக்கு ஒரு காசும் அளிப்பார்கள்.

    பகடி - ஏமாற்றுகிறவன் (வெளிவேடக்காரன்), ஆடம்பரக்காரன்.   பகட்டு – ஆடம்பரம், தற்பெருமை, கவர்ச்சி, ஏமாற்று, அதட்டு, பகட்டுதல் – வெளிமினுக்குதல், வேடங்காட்டுதல், ஆடம்பரம் காட்டுதல், வெருட்டுதல், தற்புகழ்ச்சி செய்தல்.

    பகட்டுக் காட்டுவது செயற்கையானது. தொடக்கத்தில் பெருமை தருவது போல் இருந்து, நாளடைவில் எல்லாச் சிறுமைகளையும் ஒருசேரக் கொண்டு வந்து சேர்க்கும். இது ஆடம்பரம் செய்வோருக்கு மட்டுமல்லாது, ஆடம்பரத்தில் மயங்குவோருக்கும் பொருந்தும். புறத்தே பொலிவிழக்கச் செய்யும் நோய்களைப் போல் அல்லாது, உள்ளத்தில் அழுக்காறு, பேராசை முதலிய குற்றங்களை மிகுத்து, மனிதனை இழிநிலையில் தள்ளிவிடும். ஆடம்பரத்தால் அரசுகள் அழிந்து ஒழிந்ததை வரலாறு கூறும். உழைக்காமல், ஆடம்பரமாக வாழ எண்ணும் அற்பபுத்தி உள்ளவர்கள் பகட்டுக் காட்டுவார்கள்.

    இவர்கள் மிகக் கொடியவர்கள் என்பதைக் காட்ட, “நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்” என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

“ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!

ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்

தேடியும் காணீர்  சிவனவன் தாள்களே.”

என்னும் திருமந்திரப் பாடலில் ஆடம்பரம் காட்டுவோரை, ‘அறிவிலிகள்’ என்கிறார் திருமூல நாயனார்.

இதன் பொருள் ---

    முயற்சி ஏதும் இல்லாமல், வயிறு வளர்த்தலையே  பயனாகக் கருதி,  தவம் செய்வோரைப் போல பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி, உலகத்தாரை அஞ்சுவித்துத்  திரிகின்ற அறிவிலிகாள்! உலகத்தாரின் வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீங்கள், வேடத்திற்குப் பொருந்துமாறு உண்மை அன்பை உள்ளத்தில் வைத்து, ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நின்று, சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள் ; அது பயனுடையது.


“இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த

அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப்

பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்

கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.”. – திருமந்திரம்

இதன் பொருள் ---

    தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்களில் சிலர், ஒழுக்கத்தால் உயர்வு அடைய நினை யாமல், எளிதில் மேன்மையைப் பெறுதற் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் சிலரும் அக்குலத்திற்கு  ஏற்ற ஒழுக்கத்தை உடையவராய் நிற்கமாட்டாமையின்,  தமது குலத்தன்மை அழிநுமாறு, அந்நிலையில் நீங்கி, உலகம் தம்மைக் கடவுளராக  மதித்துப் போற்றப்படும் மிக உயர்ந்த நிலையைப் பெறுதற்பொருட்டு,  தவ வேடத்தைப் புனைந்து கொள்வர்.  இவ் இருசாராரும், தொன்று தொட்டே பழிபாவங்களைச் செயது பாழ்பட்டுவரும் கொடியவர்கள் ஆவர். 

    பகட்டுக் காட்டி வயிறு வளர்ப்போர் எய்தும் நிலை குறித்துத் திருமூல நாயனார் பின்வருமாறு பாடி உள்ளார்.

“பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்து,

பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகாரேல்,

பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்

சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.”

இதன் பொருள் ---

    உள்ளத்தில் தவ உணர்வு இல்லாமல், புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு  நடித்தவர் புண்ணியர் ஆகமாட்டார். அவர் பாவிகளே ஆவர். அவர்  மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. அவரது நடிப்பின் பயனாக இம்மையில் சிறிது இன்பத்தை நுகர்ந்தாலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைவர். 

    பொய்வேடத்தால், ஆடம்பரத்தால் மயக்குதலும், மயங்குதலும் உலக இயற்கை என்பது அறிவுறுத்தப்பட்டது. உலக நடப்பை அறிந்து, செம்மைப்பட வேண்டும்.


11. இல்வாழ்தல்

 



“உற்றபெருஞ் சுற்றம் உற,நன் மனைவியுடன்

பற்றிமிக வாழ்க; பசுவின்வால் - பற்றி

நதிகடத்தல் அன்றியே, நாயின்வால் பற்றி

நதிகடத்தல் உண்டோ நவில்.”

பசுமாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்று வெள்ளத்தைக் கடக்கலாம்.  நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு வெள்ளத்தைக் கடத்தல் இயலாது.  பொருந்திய உறவினர் சூழ, ஒருவன் தனக்கு வாய்த்த நல்ல இல்லறத் துணையோடு பெருநெறியாகிய இல்லறத்தை செம்மையாக நடத்திடலாம்.  அதனால் பிறவியாகிய வெள்ளத்தைக் கடக்கலாம் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

ஆற்று வெள்ளம் பிறவியைக் குறிக்கும். பசுவின் வாலைப் பற்றி ஆற்று வெள்ளத்தைக் கடத்தல், நல்ல மனைவியோடு இல்லறத்தை நடத்தலைக் குறிக்கும். நாயின் வாலைப் பற்றிக் கடத்தல் தீக்குணம் பொருந்திய மனைவியோடு வாழ்தலைக் குறிக்கும்.


71. ஒழியாதவை

“உபசாரம் செய்பவரை விலக்கிடினும்

     அவர்செய்கை ஒழிந்து போகாது;

அபசாரம் செய்வாரை அடித்தாலும்

     வைதாலும் அதுநில் லாது;

சுபசாரத் தண்டலையார் வளநாட்டில்

     திருடருக்குத் தொழில்நில் லாது;

விபசாரம் செய்வாரை மேனியெல்லாம்

     சுட்டாலும் விட்டி டாரே.”


இதன் பொருள் –


    சுபசாரத் தண்டலையார் வளநாட்டில் - நலம் நிறைந்த திருத்தண்டலை இறைவரின் வளம் நிறைந்த நாட்டினில், உபசாரம் செய்பவரை விலக்கிடினும் அவர் செய்கை ஒழிந்து போகாது - நலம் புரிவாரைத் தடுத்தாலும் அவர் செயல் நீங்கிவிடாது, அபசாரம் செய்வோரை அடித்தாலும் வைதாலும் அது நில்லாது - தீங்கு புரிவோரைத் தண்டித்தாலும் பழித்தாலும் அவர் செயல் ஒழியாது, திருடருக்குத் தொழில் நில்லாது - திருடரை (என்ன செய்தாலும்) திருட்டுத் தொழில் விடாது, விபசாரம் செய்வாரை மேனியெல்லாம் சுட்டாலும் விட்டிடார் - விபசாரத் தொழிலில் ஈடுபட்டவரை உடம்பெல்லாம் சூடு போட்டாலும் விடமாட்டார்.


10. ஞானியர்க்கு அனந்தம் விழி

“கண்ணிரண்டே யாவர்க்கும், கற்றோர்க்கு மூன்றுவிழி,

எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு, - நண்ணும்

அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு

அநந்தம் விழியென்று அறி.” — நீதிவெண்பா


மக்கள் எல்லார்க்கும் இரு கண்களே உள்ளன. நன்கு கற்றவர்களுக்கு ஊனக் கண் இரண்டோடு அறிவுக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள். இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுப்பவர்களுக்கு அவர்களுடைய நகக் கண்கள் ஐந்தோடு சேர்த்து,  கண்கள் ஏழாகும். பொருந்துகின்ற நல் தவத்தால் அருள்ஞானம் பெற்றவர்க்கு அளவில்லாத கண்கள் உண்டு.

(அநந்தம் தவம் -  அழியாத தவம். அநந்தம் விழி - அளவில்லாத கண்கள். மூன்று விழி - ஊனக்கண் இரண்டும் அறிவுக்கண் ஒன்றும்.  விழி ஏழாவன – ஊனக்கண் இரண்டும், கொடுக்கும் கையில் உள்ள நகக் கண் ஐந்தும்.)


70. அஞ்சாதவர்

போரஞ்சார் அதிவீரர்! பொருள் அஞ்சார்

     விதரணம்சேர் புருடர்! தோயும்

நீரஞ்சார் மறைமுனிவர்! நெருப்பஞ்சார்

     கற்புடைய நிறைசேர் மின்னார்!

வாரஞ்சா முலையிடஞ்சேர் தண்டலையா

     ரே! சொன்னேன் மதமா என்னும்

காரஞ்சா திளஞ்சிங்கம் கனத்தவலி

     யாம்தூதன் கால்அஞ் சானே.


இதன் பொருள் ---

    வார் அஞ்சா முலையிடம் சேர் தண்டலையாரே - கச்சுக்கு அடங்காத முலைகளை உடைய உமையம்மையாரைத் தமது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டருளி, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவரே!

    அதிவீரர் போர் அஞ்சார் - பெரிய வீரர்கள் போர்செய்ய அஞ்சமாட்டார்கள், விதரணம் சேர் புருடர் பொருள் அஞ்சார் - கொடைப்பண்பு உடைய ஆடவர் பொருளுக்கு அஞ்சமாட்டார், மறைமுனிவர்கள் தோயும் நீர் அஞ்சார் – வேதம் உணர்ந்த முனிவர் முழுகும் நீரைக் கண்டு (முழுக) அஞ்சிடார், கற்பு உடைய நிறைசேர் மின்னார் நெருப்பு அஞ்சார் - கற்பினை உடைய ஒழுக்கம் மிகுந்த பெண்டிர் நெருப்பைக் கண்டு அஞ்ச மாட்டார், இளஞ்சிங்கம் மதம் மா என்னும் கார் அஞ்சாது - இளைய சிங்கம் மதமுடைய யானையாகிய மேகத்திற்கு அஞ்சிடாது, கனத்த வலி ஆம் தூதன் கால் அஞ்சான் - திண்ணிய வலிமையுடைய தூதுவன் நடைக்கு அஞ்சிடான்.

      மறைமுனிவர் நீரின் முழுக அஞ்சாமை போலக் கற்புடைய மாதர் நெருப்பில் முழுக அஞ்சார் என்றது சிறப்புடையது.


மந்திரம் என்றால் என்ன

மந்திரம் என்றால் என்ன

----


    “மந்திரமும் தந்திரமும்” என்று சொல்லுவார்கள். மந்திரம் என்பது குருவால் உபதேசிக்கப்பட்டது. தந்திரம் என்பது நூல்களை ஓதுவதால் உண்டாகும் அறிவு. சமூக வலைத்தளங்களில் சக்தி வாய்ந்த மந்திரம் என்றும், ஆற்றல் வாய்ந்த மந்திரங்கள் என்றும் பதிவுகள் உலா வருகின்றன. அவரவர் எதைப் படிக்கின்றார்களோ, அதை அப்படியே நம்பி, மேலனுப்பவும் செய்கின்றனர்.

    எந்த மந்திரமும் சொல் அளவிலோ, எழுத்து அளவிலோ, ஆற்றல் வாய்ந்த மந்திரம் ஆகாது. சற்குருவின் முகமாக அது உபதேசிக்கப்பட வேண்டும். ‘சற்குரு’ என்னும் சொல் பொருள் ஆழம் மிக்கது. வேட மாத்திரத்தால் குருவாக உள்ளவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். அவர்கள் நாம் நம்பும்படியாக எதையும் மிக அழகாகப் பேசுவார்கள். எல்லாம் பொருள் கருதியே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குருவைத் தேடி நாம் அலைதல் வேண்டாம். அதற்காக மனம் ஏங்கி, இறைவனை வேண்டி இருந்தால் போதும். பலகாலம் ஏங்கி இருத்தலைக் கண்டு, பரம்பொருளே குருநாதனாக வந்து நம்மை அகப்படுத்துவார். இது யானையைக் காட்டி யானையைப் பிடிப்பது போல. ஆட்டினைக் காட்டி, வேங்கையைப் பிடிப்பது போல.


“ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்,

மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ?

கோடு காட்டி யானையைக் கொன்று உரித்த கொற்றவா

வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே.”

என்பது சிவவாக்கியர் பாடல்.

இதன் பொருள் -- ஒரு வரம்பை ஏற்படுத்தி, அவ்வரம்பினைக் கடந்து வருகின்றவர்களைக் கொல்லுவதற்காகச் சொல்லி உள்ள உனது ஆஞ்ஞாபனையைக் கடந்து வந்த கயாசுரனைக் கொன்று, அந்தத் தோலைப் போர்வையாக இட்டுக் கொண்ட ஞானாசிரியனாகிய சிவபெருமானே! (கயாசுரன் என்பது உயிர்களிடத்துப் பொருந்தி உள்ள ஆணவத்தைக் குறிககும்.) ஒரு புலியைப் பழக்க விரும்பிய வேடுவன், ஒர் ஆட்டினை, அதைப் பிடிக்க நியமித்த ஓரிடத்தில் கட்டுவிக்க, புதருக்குள் மறைந்திருந்த புலியானது வெளிப்பட்டு வந்து, தனக்கு நல்ல இரை கிடைத்தது என்று ஆட்டின் மீது பாயும்போது, புலியை வசமாகப் பிடிப்பது போல, எனக்கு இவ்வுலகத்தில் யாவரும் கண்டு விருப்பும் கொள்ளுகின்ற, பொன்னைக் காட்டி, அதனிடத்தில் ஆசையை உண்டாக்கி, அதன் வழியே வருகின்ற உலக வாழ்க்கையில் அகப்படுத்தி, எனது அறிவை மயக்குவது திருவருளுக்கு அழகு ஆகுமோ? இனியாவது உமது திருவருட் சத்தியைக் கொண்டு எனக்கு மோட்ச வீட்டை உணர்வித்து, உனது திருவடியை அடைந்து குடியிருக்கின்ற பெரியோர்களிடத்தில், உங்களைப் போல் இவனும் நமக்கு ஒரு அன்பன் ஆவான் என்று சொல்லி, எனது ஞானானுபவ குணத்தை அவர்களிடத்திலும் வெளிப்படுத்துபம்படி வேண்டிக் கொள்ளுகின்றேன். 

    “பிறியாக் கருணைத் திருவுருவாய், காசினிக்கே தோன்றி குருபரன் என்று ஓர் திருப்பேர் கொண்டு” என்பது, குமரகுருபர அடிகள் அருளிய திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா.  “அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமை” என்பது திருவாசகம். எனவே, இறைவன் மானிடச் சட்டை தாங்கித்தான் குருவாக வருவான். அப்படித் தானாக நம்மைத் தேடி வருபவர்தான் ஞானகுரு அல்லது சற்குரு. “மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே” என்று முருகப் பெருமானைப் போற்றுவார் அருணகிரிநாதர். “தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே” என்பது திருவாசகம். அப்படி வந்த சற்குரு பெருங்கருணை வைத்து, மந்திர உபதேசம் புரிவார். அது மந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. பாடலாகவும் இருக்கலாம். அல்லது ஒரு வார்த்தையாகவும் இருக்கலாம். குருநாதன் உபதேசிப்பது எதுவோ, அதுவே மந்திரம் ஆகும். “நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்று தொல்காப்பியம் விளக்குகிறது. “சொன்னது மந்திரமா, இட்டது பச்சிலையா” என்பது திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பட்டினத்து அடிகளார் பாடியது. இறைவனைக் கருதி, எது சொல்லப்பட்டதோ அதுவே மந்திரம் ஆகும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    நான் பிறந்த ஊரில் இருந்த சிவானந்த மவுனகுரு சுவாமிகள் குறித்து அறியாதார் யாரும் இல்லை. கோணிப்பட்டை சாமி என்று அவரைக் குறிப்பிடுவார்கள். அவர் கோணிப்பட்டையைத் தான் கோவணமாக அணிந்து இருந்தார். அது ஏன் என்பது நான் அறிந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு. கதை அல்ல. திருநீறும் வில்வ இலையும் கொடுத்தே தன்னிடத்து வந்தவர்களின் தீராப் பிணியைத் தீர்த்து அருளியவர். பல்லாயிரக் கணக்கானவர்களை சைவர் ஆக்கிய புனிதர். எனது இளமைப் பருவத்தில் ஆறு ஆண்டுகள் தினமும் அவரைத் தரிசித்துப் பணி செய்யும் பாக்கியத்தைப் பெற்றேன். அவர் உபதேசம் பெற்ற கதையை அவரே சைகையால் சொன்னார். குடியாத்தம் நகருக்கு அருகில் உள்ள மகாதேவ மலையில் அப்போது இருந்த ஒரு பெரியவரிடத்தில் உபதேசம் பெறச் சென்றார். குருவின் சந்நிதானத்தில் நின்றார். மகைதேவ மலையில் இருந்த குரு தெலுங்கு மொழியில் “ஏன் வந்தாய்” என்று கேட்டாராம். “உபதேசம் பெற வந்தேன்” என்று சொன்னாராம். “கழுதைக்கு என்ன உபதேசம்? போய், செய்கிற வேலையை ஒழுங்காகச் செய்” என்றாராம். குருவின் ஆணைப்படி, திரும்பி வந்து, அவர் சொன்னதையே உபதேசமாகக் கொண்டு, தான் செய்து வந்த திருக்கோயில் திருப்பணியை இறைச் சிந்தனையோடு செய்த அருளாளர்தான் எமது சிவானந்த மவுனகுரு சுவாமிகள்.

    இன்னொரு நிகழ்வை இங்கே சிந்திப்பது பயன் தரும். இராமானுஜர் அருளுபதேசம் பெறுவதற்கு வேண்டி, திருவரங்கத்தில் இருந்து, திருக்கோட்டியூர் நம்பிகளிடத்தில், அவர் வாழ்ந்திருந்த இல்லத்தின் முன் சென்று நின்றாராம். “யார்” என்று உள்ளே இருந்து திருக்கோட்டியூர் நம்பிகளின் குரல் வந்தது. “நான் இராமானுஜன் வந்திருக்கிறேன்” என்று சொன்னாராம். “போய் வா” என்று விடை வந்தது. கதவு திறக்கவில்லை. இப்படி, பதினேழுமுறை சென்றும் குருதரிசனம் கிடைக்கவில்லை. படினெட்டு முறை சென்றும் உபதேசம் குருதரிசனம் கிடைக்கப் பெறாமல் திரும்பினார் இராமானுசர். அடுத்து முறை திருக்கோட்டியூர் சென்று, நம்பிகளின் திருமாளிகை அடைந்து, திருக்கதவின் முன் நின்று, “அடியேன் இராமானுஜன் வந்துள்ளேன்” என்றாராம். திருக்கதவம் திறக்கப்பட்டது. நம்பிகளின் அருளுபதேசம் கிடைக்கப் பெற்றது. பதினேழு முறை ‘நான்” என்று சொன்னபோது கிடைக்காத அருளுபதேசம், “அடியேன்” என்று சொன்னதும் கிடைத்தது. ‘நான்’ என்னும் எண்ணம் உள்ளவரையில், குருதரிசனம் கிடைக்காது. 

    நாம் ஒருவரைக் காண வேண்டி, அவரது முகவரியைக் வைத்துக் கொண்டு, அவர் வாழுகின்ற ஊருக்குச் செல்கிறோம். அந்த முகவரிக்குச் செல்லும் வழியைக் காட்டவே நல்லவர் ஒருவரின் துணை வேண்டும். தவறாக வழி காட்டுவோர் இல்லாமல் இல்லை. சரியான வழியைக் காட்டுபவரும், தவறான வழியைக் காட்டுவோரும் மனித வடிவில்தான் இருப்பர். (சற்குருவும், அசற்குருவும் மனித வடிவில்தான் இருப்பர்) ஒருவழியாக, நாம் காண விரும்பியவர் வாழுகின்ற வீட்டினைக் கண்டு, கதவைத் தட்டுகிறோம். காண விரும்பியவர் கதவைத் திறந்தால் மட்டம் போதாது. அவர் இதற்கு முன்னர் நாம் அறிந்தவராகவும் இருக்கலாம். முன்னர் பார்த்து அறியாதவராகவும் இருக்கலாம். நம்மை இன்னார் என்று அறிந்து, அவர் நம்மை வரவேற்கவில்லையானால், நாம் எடுத்த அத்தனை முயற்சியும் வீணே. அவராக வந்து கதவைத் திறந்து, நம்மைப் பார்த்து, விரும்பி வரவேற்றால் நமது எண்ணமும், முயற்சியும் நிறைவேறும். வீட்டிற்குள் அழைத்துச் சென்று இனிய சொற்களைப் பேசி, நம்மைத் தக்கபடி உபசரிக்கவில்லையானால், பலன் இல்லை. அதுபோலத்தான் குருதரிசனமும். நமக்கு நல்வினைப் பயன் இருந்தால்தான் குருதரிசனம் கிடைக்கும். 

    அப்பர் பெருமானது பெருமைகளைக் கேள்வியுற்ற அப்பூதி அடிகள், அவரைத் தமது குலகுருவாகக் கொண்டு இருந்தார். அப்பர் பெயரால் பல அறங்களைச் செய்து வந்தார். அப்பர் பெருமானை நேரில் பார்த்தது இல்லை. அப்பர் மீது தாம் கொண்டிருந்த அன்பின் அறிகுறியாகத் தாம் அமைத்த தண்ணீர்ப் பந்தர் முதலியவற்றுக்கும் “திருநாவுக்கரசு” என்னும் பெயரையே சூட்டினார். திருத்தல யாத்திரையின் போது, திங்களூர் வழியே சென்ற அப்பர், அங்கே ஒரு தண்ணீர்ப் பந்தரையும், அதில் தமது பெயர் வரைந்து இருப்பதையும் கண்டார். அதை அமைத்தவர் யார் என்று அங்கிருந்தவர்களைக் கேட்டு, அவர்கள் மூலமாகவே அப்பூதி அடிகள் இல்லம் இருக்கும் இடத்தையும் அறிந்து கொண்டார். அப்பூதி அடிகளின் வீட்டின் தலைக்கடை வாயிலில் வந்து நின்றார். அதை அறிந்த அப்பூதி அடிகள் விரைந்து வந்து அப்பரை வணங்கினார். அப்பரும் வணங்கினார். அப்போதும் அப்பர் எப்படி இருப்பார் என்பது அப்பூதி அடிகளுக்குத் தெரியாது. அப்பர் பெருமானே தம்மை இன்னார் என்று அறிவித்தபின்னரே, வந்தவர் அப்பர் என்பதை அறிந்து கொண்டார் அப்பூதி அடிகள். இப்படித்தான் குருதரிசனம் கிடைக்கும்.

    “இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்” என்று திருவாசகம் கூறும். மணிவாசகப் பெருமானை இறைவன் ஆட்கொண்ட விதமும் இவ்வாறுதான். மணிவாசகர் இறைவனைத் தேடிப் போகவில்லை. இறைவன்தான் மணிவாசகரைத் தேடி வந்து ஆட்கொண்டார். “தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே” என்றுதான் மணிவாசகர் பாடி உள்ளார்.

    அப்படி நம்மை அகப்படுத்தி ஆட்கொண்ட குருநாதர் உபதேசிப்பதே மந்திரம். மந்திர உபதேசம் பெற்றால் மட்டுமே போதாது. மந்திரத்தை உரு ஏற்ற வேண்டும். “உரு ஏறத் திரு ஏறும்” என்பார்கள். உரு ஏற ஏற, மந்திர ஆற்றல் பெருகும். மற்றபடி, சக்தி வாய்ந்த மந்திரம் என்று எதையாவது சொல்வது எல்லாம் அறியாமையே ஆகும். ஒரு மந்திரத்தைக் கோடி முறை உருவேற்றினால் ஆற்றல் பெருகும் என்று சொல்வார்கள். அப்படி உருவேற்றித் திரு ஏறிய அம்மையார் ஒருவரை நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் அறிவேன்.

“பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான்

நாவில் நூறு-நூறாயிரம் நண்ணினார்,

பாவம் ஆயின பாறிப் பறையவே,

தேவர் கோவினும் செல்வர்கள் ஆவரே.”

என்பது அப்பர் தேவாரம். நூறு ஆயிரம் என்பது ஒரு இலட்சம். நூறு நூறு ஆயிரம் என்பது ஒரு கோடி. பூவனூர்ப் புனிதன் என்பது திருப்பூவனூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு இருக்கும் சிவனைக் குறிக்கும். அவனுடைய நாமம் என்பது திருவைந்தெழுத்து. “நந்தி நாமம் நமச்சிவாயவே” என்பது திருஞானசம்பந்தர் அருள்வாக்கு. திருவைந்தெழுத்து மந்திரத்தை ஒரு கோடி முறை உருவேற்றியவர்கள், தமது பாவங்கள் (சஞ்சித கர்மங்கள்) எல்லாம் அழிய, இந்திர பதவியை விடவும் மேலான அருட்செல்வத்தை அடைவார்கள் என்கிறார் அப்பர் பெருமான்.

நாள் ஒன்றுக்கு 108 என்று வைத்துக் கொண்டால், மாதம் ஒன்றுக்கு 3240 ஆகிறது. ஒரு வருடத்துக்கு 38,880 ஆகிறது. இப்படி, 257 ஆண்டுகள் கழிந்தால்தான் ஒரு கோடி ஆகும். அவ்வளவுக்கு மனிதனின் வாழ்நாள் அமைவது இல்லை. ஒருநாளைக்கு 108 முறை சொன்னாலே போதும் என்று அமைந்து விடுபவர்கள் உண்டு. அது சிரத்தை ஆகாது. இருக்கின்ற வாழ்நாளில், எவ்வளவுக்கு சிரத்தையுடன் மந்திரத்தை உருவேற்றுகின்றோமோ, அவ்வளவுக்கு ஆற்றல் பெருகும் என்பதுதான் உண்மை.

அது போலத்தான், நூல்கள் ஓதுவதும். ஒரு நூலைப் படித்தாலும் உணர்வோடு படிக்கவேண்டும். உணர்ந்து ஓதவேண்டும். சொல்லை மட்டும் உணர்ந்தால் போதாது. சொல்லின் பொருளையும், சொல்லானது உணர்த்திநின்ற பொருளையும் உணர்ந்து ஓதவேண்டும். "சொல்லும் பொருளும் இறந்த சுடர்" என்றார் மணிவாசகப் பெருமான். "சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்" என்றார் அப்பர் பெருமான். “சொல் தெரியப் பொருள் மறையக் குறையாத தமிழ்க் கோவை” என்பது பெரியபுராணம். சொல் நன்றாகத் தெரியும். ஆனால், அதன் பொருள் மறைந்து கிடக்கும். பொருளை உணர்தல்தான் அறிவு. புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். 

படித்தல் --- எழுத்தை மேலெழுந்தவாரியாக வாசித்தல்.

கற்றல் --- கருத்து ஊன்றித் திருத்தம் உறக் கவனித்தல்.

அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.

உணர்தல் --- சொல்லின் உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.

உய்தல் --- தெளிந்தபடி சீலமாய் ஒழுகி உயர்தல்.

     அறிதல், தெரிதல், கற்றல், என்ற சொற்களை எல்லாம் விட்டுவிட்டு, "உணர்தல்" என்னும் அருமையான சொல்லைக் கையாண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான். சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில், அழுதுகொண்டு இருந்த திருஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் பணிக்க, எண்ணரிய சிவஞானத்து இன்னமுதைக் குழைத்து உமையம்மையார் கொடுத்த பாலைக் குடித்தவுடன்,

“சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்,

தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்"

என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.

    "சம்பந்தர் அறிந்தார்" என்று சொல்லவில்லை. "உணர்ந்தார்" என்றுதான் சொன்னார். "தாம் உணர்ந்தார்" என்றார். உணர்த்த வேண்டிய ஒருவர் உணர்த்த, தாம் உணர்தலை இது குறிக்கும். உணர்த்தியது சிவபரம்பொருள். உணர்ந்தவர், அவரது திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். இதைத் தான், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று அருளினார் மணிவாசகப் பெருமான். 

      மணல்கேணியைத் தோண்டுவது போல, முயற்சியோடு நூல்களைக் கற்கவேண்டும். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல. எந்த வயதிலும் கற்கலாம். நூலறிவு நுண்ணறிவாக மாறியது என்றால், கற்றதன் பலன் விளைந்தது என்று பொருள். நுண்ணறிவு சிறக்க, கற்கின்ற நூல்களின் பொருளை உணர்ந்து ஓதவேண்டும். நூல்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று உலக நூல். இன்னொன்று அறிவு நூல். உலக நூல் வயிற்றுப் பாட்டுக்கு உதவும். அறிவு நூல் ஆன்ம வளர்ச்சிக்கு உதவும். வாழ்வில் உண்டாகும் தடுமாற்றத்தைத் தவிர்க்கும். அட்டைப் பகட்டோடு வருகின்ற நூல்கள் எல்லாம், அறிவு வளர்ச்சிக்கு உதவுவது இல்லை.

     ஆக, கற்றல் என்பது மிக எளிதானதே. அதில் மனம் வைக்கவேண்டும். முயற்சி இருக்கவேண்டும். முயற்சியில் தான் எல்லாமே உள்ளது. முயற்சி என்பது தோண்டுவதைக் குறிக்கும். எவ்வளவு தோண்டுகின்றோமோ அவ்வளவுக்கு தண்ணீர் ஊறும். எவ்வளவு முயல்கின்றோமோ, அவ்வளவுக்கு அறிவு ஊறும். ‘கலை அறிவு’ என்பது நூல்களைப் படிப்பதால் உண்டாகும் அறிவு. ‘அருள் அறிவு’ என்பது திருவருளை முன்னிட்டுப் படிப்பதால் உண்டாகும் மெய்யறிவு.

     "பத்து ஆள் சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல் வண்டிப் பாரம். சூல் வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதி தீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்தசிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்." என்கின்றார் வள்ளல்பெருமான். திருக்குறளைப் பதிப்பித்து, திருக்குறள் வகுப்பு நடத்தியவர் வள்ளல்பெருமான். “தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு” என்னும் திருக்குறளுக்கு விளக்கமாகவே இவ்வாறு அருளி உள்ளார்.

     நாம் நமது கைகளைத் தொட்டு, மணல் குழியில் எவ்வளவு ஆழம் தோண்டுகின்றோமோ, அந்த ஆழத்திற்குத் தகுந்தவாறு நீர் கிடைக்கும். அதுபோல நாம் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறோமோ அந்த அளவிற்கு அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு. புத்தகத்தைப் படிப்பதின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவை, ‘கலை அறிவு’ என்கிறோம். 

     ஒருவன் ஒரு பிறவியில் எத்தனை புத்தகங்களைப் படித்துவிட முடியும்? நாம் நமது வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால், நாம் வாழும் நாளில் சுமார் ஆயிரம் நூல்களைப் படிக்க முடியும். நம்மில் பெரும்பாலானோர் ஒரு சில நூல்களையே முயன்றுதான் படிக்க முடிகின்றது. படிக்கப் படிக்க, மறந்துகொண்டே வருகின்றது. படிப்பதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதுவே மிகவும் முயற்சி செய்தால்தான் முடியும். இந்த நூலறிவைக் கொண்டே அவரவர்க்கு விருப்பமான அல்லது வாய்க்கின்ற துறைகளில் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடிகின்றது.  அப்படிப் பயணிப்பவர்கள், தாம் எடுத்த இந்தப் பிறவியில் ஆயிரம் நூல்களைப் படிப்பதோடு நில்லாமல், கற்று அறிந்தால் அவர்களது அறிவு மேலும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் நூல்கள் என்பது எடை அளவிலா, அல்லது பக்க அளிவிலா? என்றால் வள்ளல்பெருமான் ஒரு கணக்கைப் போட்டுக் காட்டுகின்றார்.

     ஒரு ஆள் சுமை என்பது சராசரியாக 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். பத்து ஆள் சுமை என்பது 500 கிலோ ஆகும். அது ஒரு வண்டிப் பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரம், அதவாது 2,00,000 கிலோ ஆகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது என்றால், 20,00,00,000 கிலோ ஆகும். ஆக, 20 கோடி கிலோ எடையுள்ள (2,00,000 டன்) புத்தகத்தை, ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில், அதிதீவிர முயற்சியை மேற்கொண்டால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளல் பெருமானாரின் கணக்கு.       

     நமக்குத் தெரிந்த, பிடித்தமான, பரிச்சயமான ஒரு நூல் என்பது சுமார் 10 கிலோ எடை இருப்பதாகக் கொண்டால், அது போன்று எடையுள்ள 2 கோடியே 20 லட்சம் நூல்களை நாம் இந்தப் பிறவியில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம். அதாவது, நாம் விரும்புகின்ற ஒரு நூலை, 2,20,00,000 முறை முழுதும் படிப்பதற்குச் சமம். நம்மில் பலருக்கும் அதிதீவிர முயற்சி என்பது அறிவைப் பெறுவதில் இல்லை என்பது மட்டும் அல்லாமல், சுத்தசிவ நோக்கம் (திருவருள்) இல்லை என்பதுதான் நிதரிசனம். இன்னொரு காரணம், நமது வாழ்நாள் குறுகியது. போராட்டங்கள் நிறைந்தது. வாழ்நாள் குறுகியது என்றால், முயற்சியை நீட்டிக்கவேண்டும். வாழ்நாளை நீட்டிக்க முடியாது.

"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்,

பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினை யாண்டு

பேதை பாலகனது ஆகும், பிணிபசி மூப்புத் துன்பம்,

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே."

என்கின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

     நூறு ஆண்டுகள் என்பது சௌரமான ஆண்டைக் குறிக்கும். சந்திரமான ஆண்டு என்பது 120 ஆகும். ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகவே வேதநூலின்படி கொண்டாலும், அதில் பாதி, 50 ஆண்டுகள் உறக்கத்திலேயே கழிந்துவிடும். எஞ்சி உள்ளது, 50 ஆண்டுகளே. அதில், 15 ஆண்டுகள் பேதை, பாலகன் என்ற நிலையில் கழியும். எஞ்சி உள்ளது 35 ஆண்டுகள். இதிலும் தாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப் பலகாலம் போய்விடும். (நூறு வயது என்று சொல்லப்பட்டு, அதிலே பலகாலம் இப்படிக் கழிந்தால், மீதி உள்ளதை வைத்துக் கொண்டு உருப்படியாக என்ன செய்வது?) ஆதலால், எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் சலிப்போடு முறையிடுகின்றார் ஆழ்வார்.

     தொண்டரடிப்பொடி ஆழ்வார் போட்ட கணக்கு ஒருபுறம். இன்னொரு புறம், சேரமான் பெருமாள் நாயனார் போட்ட கணக்கு ஒன்றையும், பதினோராம் திருமுறையில் வரும் "பொன்வண்ணத்து அந்தாதி" என்னும் பகுதியில் காண்போம்.


“விதித்தன வாழ்நாள் பெரும்பிணி  விச்சைகள் கொண்டுபண்டே

கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை, குங்குமக் குன்று அனைய

பதித்தனம் கண்டனம், குன்றம்வெண் சந்தனம் பட்டனைய

மதித்தனம் கண்டனம், நெஞ்சு இனி என்செய்யும் வஞ்சனையே.”

இதன் பொருள் ---

     நன்மை தீமைகளை அறிகின்ற பலவகையான அறிவுகளைக் கொண்டு, பிரமன் எமக்கு வகுத்த வாழ்நாள்களிலே பெரிய நோய்கள் வந்து வெதுப்புவதில் சிறிதும் குறைவில்லை. மகளிரது குங்கும மலைபோலும், மார்பில் அழுந்துதலை உடைய தனங்களை முன்னே கண்டோம், பின்பு அத் தனங்கள், மலைகளில் வெள்ளிய சந்தனம் பூசப்பட்டன போல் ஆயினமையை உணர்ந்து பார்த்தோம், (இவ்வளவும் செய்து விட்டமையால்) எமது மனம் இனிச் செய்வதற்கு என்ன வஞ்சனை உள்ளது?

     விதித்த வாழ்நாளில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று எண்ணினால், பெரிய நோய்கள் வந்து வெதுப்புகின்றன. காமநோயும் வந்து வெதுப்புகின்றது. இதில் என்னத்தைச் சாதிப்பது?

“வேண்டிய நாள்களில் பாதியும் கங்குல், மிக அவற்றுள்

ஈண்டிய வெந்நோய், முதலது  பிள்ளைமை, மேலது மூப்பு

ஆண்டின அச்சம் வெகுளி அவா அழுக்காறு, இங்ஙனே

மாண்டன, சேர்தும் வளர்புன்  சடைமுக்கண் மாயனையே.” 

இதன் பொருள் ---

     படைப்போன் ஆகிய நான்முகக் கடவுள், மக்களைப் படைக்கும் பொழுது `ஒவ்வொருவரும் இந்த உடம்போடு கூடி இத்துணை ஆண்டுகள் வாழ்க` என வரையறுக்கிறான். அவ் ஆண்டுகள் அனைத்தும் மக்களுக்கு வாழும் நாளாக அமைவதில்லை. ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழுதாகி விடுகின்றன. மற்றொரு பாதி ஆண்டுகளே பகலாய் மிஞ்ச, அவைகளிலும் பலவகையாய்த் திரள்கின்ற கொடிய நோய்கள் உண்டாகின்றன. வரையறுக்கப்பட்ட ஆண்டுகளிலும் தொடக்கப் பகுதி குழந்தைப் பருவமாய்க் கழிகின்றது. முடிவுப் பகுதி முதுமைப் பருவமாய்க் கழிகின்றது. அவைகளிலும் அச்சம், வெகுளி, அவா, அழுக்காறு என இப்படி ஆண்டுகள் கழிந்தோடிப் போகின்றன. இடையில் எஞ்சும் ஒருசில ஆண்டுகளில் என்ன செய்ய இயலும்? ஆகையால், நாம் மிக இளம் பருவத்திலேயே வேறு எதனையும் பொருட்படுத்தாமல், நீண்ட, புல்லிய சடையையும், மூன்று கண்களையும் உடைய கள்வனைக் கண்டறிந்து, அவன் திருவடிகளையே புகலிடமாக அடைவோம்.

    இப்படி, சின்னாள், பல்பிணி கொண்ட வாழ்நாளில், வயிற்றுப் பாட்டுக்குப் படிப்பதற்கே (கலை அறிவு பெறுவதற்கே) போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது. இதில், அருளறிவுக்கு முயல்வது எப்படி? இதுதான், பிரச்சினையா? என்றால், அதுதான் இல்லை. நம்முடைய முயற்சி இன்மைதான் பிரச்சினை. முயற்று இன்மை, இன்மை புகுத்தி விட்டது.

     கற்பது என்பது, மணல்கேணியைத் தோண்டுவது போல என்று மிகவும் எளிதான வழியைத் தான் நம் மீது கருணை வைத்து திருவள்ளுவ நாயனார் காட்டினார் என்பதை உணர்தல் வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் தோண்டித் தானே ஆகவேண்டும். அருளறிவு வேண்டும் என்றால் முயன்றுதானே ஆகவேண்டும். முயன்று பாருங்கள். உங்களது முயற்சிக்குத் திருவருள் துணை நிற்கும்.

     நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடி வாழ்நாள் முழுக்க உழைக்கின்றோம். கேடு இல்லாத மேன்மையானது கல்விச் செல்வம் என்பதால், அதையும் வாழ்நாள் முழுதும் தேடவேண்டும். தேடிய செல்வம் போதும் என்று யாரும் இருப்பது இல்லை. ஆனால், கற்ற கல்வி போதும் என்று அமைந்துவிட்டு, கற்றதை வைத்துச் செருக்குக் கொண்டு இருப்போரை மட்டும் காணலாம்.

     "முற்றும் உணர்ந்தவர் இல்லை; முழுவதும் கற்றனம் என்று களியற்க" என்கின்றார் குமரகுருபர அடிகள். "கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலைமகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஏதோ கொஞ்சும் படித்துவிட்டு, ‘நான் நிரம்பக் கற்றவன், நீ கற்றவனா’ என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரமே இருக்கும்" என்கின்றார் ஔவைப் பிராட்டியார். எனவே, தோண்ட வேண்டியது மணலைத் தான். கடினமான பாறையை அல்ல. எளிதான கற்றலைத் தான் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

“மந்திரம் என்றால் என்ன” என்ற தலைப்பில் அருளாளர் அ. ச. ஞானசம்பந்தனார் ஒரு அரிய நூலைத் தந்து உள்ளார். வாய்ப்பு நேருமாயின் படித்துப் பயன் பெறலாம்.



69. ஏழையர்க்குத் தெய்வமே துணை

“அந்தணர்க்குத் துணைவேதம், அரசருக்குத்

     துணை வயவாள், அவனி மீது

மைந்தர்க்குத் துணை தாயார், தூதருக்குத்

     துணை மதுர வார்த்தை அன்றோ?

நந்தமக்குத் துணையான தண்டலைநீள்

     நெறியாரே! நண்ப ரான

சுந்தரர்க்குத் துணைநாளும் ஏழையர்க்குத்

     தெய்வமே துணையென் பாரே.


இதன் பொருள் ---


அந்தணர்க்கு வேதம் துணை – வேதியர்க்கு வேதமே ஆதரவு - அரசருக்கு வயவாள் துணை - மன்னர்க்கு வெற்றிமிகும் வாளே ஆதரவு, அவனி மீது மைந்தர்க்குத் தாயார் துணை - உலகிலே குழந்தைகட்கு அன்னையே ஆதரவு, தூதருக்கு மதுர வார்தையன்றோ துணை - தூதர்களுக்கு இனியமொழி அன்றோ ஆதரவு?, நந்தமக்குத் துணையான தண்டலைநீள் நெறியாரே நண்பரான சுந்தரர்க்குத் துணை - நமக்குத் துணையாக இருக்கும் திருத்தண்டலை நீள்நெறி இறைவரே அவருக்குத் தோழரான சுந்தரர்க்குத் துணை ஆனார். நாளும் ஏழையர்க்குத் தெய்வமே துணை என்பார் - எப்போதும் ஏழைகட்குத் தெய்வமே ஆதரவு என்று அறிந்தோர் கூறுவர்.


     திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை' என்பது பழமொழி.


9. நலமுடன் வாழ

“ஓருபோது யோகியே, ஓண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே என்ப, - திரிபோது

ரோகியே, நான்குபோது உண்பான் உடல்விட்டுப்

போகியே என்று புகல்."


ஒளி உள்ள இளம் தளர்போலும் கைகளை உடைய பெண்ணே!  யோகி என்பவன் ஒரு நாளைக்கு ஒருபோது மட்டும் உண்பான்.  உலக இன்பங்களில் உழல்பவன் ஒரு நாளைக்கு இருவேளை உண்பான்.  நோயாளி ஒரு நாளில் மூன்று வேளை உண்பான். நான்கு வேளைகள் உண்பவன், உடலை விட்டு விரைவில் இறந்துபோகக் கூடியவனாகத்தான் இருப்பான் என்று சொல்வாயாக.


(யோகி - தவம் செய்பவன்.  போகி - சிற்றின்பப் பிரியன்.  திரிபோது - மூன்று வேளை.  ரோகி - நோயாளி.)


8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்

நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு

பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக

அஞ்சுமவன் கேட்பது அறிந்து.”


சொல்லுங்கால், பிச்சை எடுப்பவன் நொய்தான ஒரு துரும்பை விடவும் நொய்தான பஞ்சைக் காட்டிலும் மிகவும் எளியவன் ஆவான்.  அவ்வாறு மிகவும் நொய்தானவனை, வீசும் காற்றானது அடித்துச் செல்லாதோ என்றால், அக்காற்றும் கூடப் பிச்சை எடுப்பவனைத் தெரிந்துகொண்டு, வீடு வீடாக இரக்கும் அவன், தன்னிடம் ஏதேனும் இரப்பானோ என அஞ்சி அவனிடம் நெருங்க அஞ்சும்.



68. வெண்ணெய் இருக்க, நெய் தேடி அலைதல்

தண்ணமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள்

     நெறியே! நின்தன்னைப் பாடில்

எண்ணமிக இம்மையினும் மறுமையினும்

     வேண்டியதுண் டிதையோ ராமல்,

மண்ணின்மிசை நரத்துதிகள் பண்ணியலைந்

     தேதிரிபா வாணர் எல்லாம்

வெண்ணெய்தம திடத்திருக்க நெய்தேடிக்

     கொண்டலையும் வீணர் தாமே.


இதன் பொருள் ---


    தண் அமரும் மலர்ச்சோலைத் தண்டலைநீள் நெறியே - குளிர்ச்சி பொருந்திய மலர்ச் சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! நின் தன்னைப் பாடில் – உம்மை வாயாரப் பாடித் துதித்தால், எண்ணம் மிக இம்மையிலும் மறுமையிலும் வேண்டியது உண்டு - மனநிறைவு பெற இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டியது கிடைக்கும்; இதை ஓராமல் - இதனைச் சிந்தியாமல், மண்ணின்மிசை நரத் துதிகள் பண்ணி அலைந்தே திரி பாவாணர் எல்லாம் - இப் புவியில் மக்களைப் புகழ்ந்து பாடி அலைந்து திரியும் புலவர்கள் யாவரும், வெண்ணெய் தமது இடத்து இருக்க நெய் தேடிக்கொண்டு அலையும் வீணர் தாமே - தமது கையில் வெண்ணெய் இருக்கும்போது (அதை உருக்கிப் பயன் கொள்ளாமல்) நெய் எங்கே உள்ளது என்று தேடித் திரியும் அறிவிலாரே ஆவார்.


     ‘'வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான் ஏன்?' என்பது பழமொழி. மக்களைப் புகழ்தலாவது அவர்கள் செய்யாததைச் செய்தார்களென்றும் அவர்களிடம் இல்லாத பண்பை இருப்பதாகவும் கூறிப் பாடுதல். 

“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;

     காடுஉறையும் ஒருவனை நாடுஆள்வாய் என்றேன்;

பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;

     போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;

மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை;

     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;

இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்

     யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.”      --- இராமச்சந்திர கவிராயர்.


    வேண்டுவார் வேண்டுவதை வரையாது வழங்கும் வள்ளலாகப் பரம்பொருள் இருக்க, அதனை உணர்கின்ற அறிவும், அதற்கேற்ற நல்வினைப் பயனும், முயற்சியும் இல்லாத ஏழைகள் (அறிவிலிகள்), தாம் கற்ற கல்வியின் பயன், இறைவனுடைய திருவடியைத் தொழுவதே என்பதை உணராதவர்கள், பொருள் உள்ளோர் இடம் தேடிச் சென்று, இல்லாததை எல்லாம் சொல்லி, வாழ்த்திப் பாடுவார்கள். பண்புகளே அமையாதவனை, அவை உள்ளதாகவும், 

    உடல் வளமே இல்லாதவனை, அவை நிறைந்து உள்ளதாகவும்,  கற்பனையாகப் பாடுவார். எல்லாம் கற்பனையாகவே முடியும். பாடுவதும் கற்பனையே. பொருள் கிடைப்பதும் கற்பனையே.


இதனை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருமையாகப் பாடியுள்ளார்....


தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்

     சார்வினும் தொண்டர் தருகிலாப்

பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

இம்மையே தரும், சோறும் கூறையும்;

     ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

                                                          

மிடுக்கு இலாதானை, “வீமனே; விறல்

     விசயனே, வில்லுக்கு இவன்;” என்று,

கொடுக்கிலாதானை, “பாரியே!” என்று,

     கூறினும் கொடுப்பார் இலை;

பொடிக் கொள் மேனி எம் புண்ணியன்

     புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!

அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.


“காணியேல் பெரிது உடையனே!

     கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,

பேணியே விருந்து ஓம்புமே!” என்று

     பேசினும் கொடுப்பார் இலை;

பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண்

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.


நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து

     உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை,

“வரைகள் போல்-திரள் தோளனே!” என்று

     வாழ்த்தினும் கொடுப்பார் இலை;

புரை வெள் ஏறு உடைப் புண்ணியன்

     புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!

அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

          

வஞ்ச நெஞ்சனை, மா சழக்கனை,

     பாவியை, வழக்கு இ(ல்)லியை,

பஞ்சதுட்டனை, “சாதுவே!” என்று

     பாடினும் கொடுப்பார் இலை;

பொன் செய் செஞ்சடைப் புண்ணியன்

     புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!

நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

            

நலம் இலாதானை, “நல்லனே!” என்று,

     நரைத்த மாந்தரை, “இளையனே!”,

குலம் இலாதானை, “குலவனே!” என்று,

     கூறினும் கொடுப்பார் இலை;

புலம் எலாம் வெறி கமழும் பூம்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

அலமரது அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

            

நோயனை, “தடந்தோளனே!” என்று,

     நொய்ய மாந்தரை, “விழுமிய

தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்!” என்று,

     சாற்றினும் கொடுப்பார் இலை;

போய் உழன்று கண் குழியாதே, எந்தை

     புகலூர் பாடுமின், புலவீர்காள்!

ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

         

எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும்,

      ஈக்கும் ஈகிலன் ஆகிலும்,

“வள்ளலே! எங்கள் மைந்தனே!” என்று

     வாழ்த்தினும் கொடுப்பார் இலை;

புள் எலாம் சென்று சேரும் பூம்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

         

கற்றிலாதானை, “கற்று நல்லனே!”,

     “காமதேவனை ஒக்குமே”,

முற்றிலாதானை, “முற்றனே!”, என்று

     மொழியினும் கொடுப்பார் இலை;

பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

         

“தையலாருக்கு ஒர் காமனே!” என்றும்,

      “சால நல அழகு உடை ஐயனே!”

“கை உலாவிய வேலனே!” என்று,

     கழறினும் கொடுப்பார் இலை;

பொய்கை ஆவியில் மேதி பாய்புக

     லூரைப் பாடுமின், புலவீர்காள்!

ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு

     யாதும் ஐயுறவு இல்லையே.

                                     

அருட்புலவர்கள் மிகச் சிலரே உண்டு. “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்பதை உணர்ந்து, அதனை உடைய இறைவனையே பாடுவார்கள். மிக உயர்ந்த அருட்செல்வத்தை வழங்கும் வள்ளல், பொருட்செல்வத்தையும் வழங்குவார்.  "இம்மையே தரும் சோறும் கூறையும்" என்ற அருள் வாசகத்தை உன்னுக.


    பொருட்செல்வத்தைக் கருதுகின்றவர்க்கு, பொருள் இன்மை வறுமை. அதனால் அவருக்கு நேருகின்ற துன்பம். அருட்செல்வத்தைக் கருதுகின்றவர்க்கு, அருள் இன்மை வறுமை. அதனால் அவர் படுகின்ற துன்பம். அருள் நூலாசிரியர் யாரும் பொருளைக் குறித்துப் பாடுவது இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு அருள் நூல்களை ஓதினால் இந்த உண்மை தெற்றென விளங்கும்.


“இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்

சிலர், பலர் நோலா தவர்.”


என்று திருவள்ளுவ நாயனார் பாடியள்ளதும், அதற்குப் பரிமேலழகர் வகுத்துள்ள உரையும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.  குறிப்பாக, இத் திருக்குறள், "தவம்" என்னும் அதிகாரத்தில் வருவதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல்" என்பது பரிமேலழர் கண்ட வளமிக்க உரை. இதில் பரிமேலழகர் காட்டும் தெளிவு ---  "செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன",  என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார் ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக் காரணம் கூறினமையான், காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.


ஈதல், இசைபட வாழ்தல்

ஈதல், இசைபட வாழ்தல்

-----


     சமுதாயம் சிறந்து வாழ ஈகை என்னும் அறத்தினை வற்புறுத்திய திருவள்ளுவ நாயனார், அறவழியில் நின்று ஒழுக மறுப்பவரை நோக்கி, ‘உனக்குப் புகழ் உண்டாகவாவது, நீ மறைந்த பின்னரும் உன்னைப் பிறர் போற்றவேண்டும் என்பதற்காகவாவது பிறருக்குக் கொடுத்து உதவு’ என்னும் குறிப்புத் தோன்ற ‘புகழ்’ என்னும் அதிகாரத்தினை அமைத்துள்ளார். 


     “ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்று முதலிலேயே கொடுத்தலையும், அதன் வழியே புகழ் பெறுதலையும் சுட்டிக் காட்டி, புகழாகிய ஊதியம் பெறுதலே உயிர்க்கு உயர்ந்தது என்கிறார் திருவள்ளுவ நாயனார். உலகில் அனைவரும் தாம் செய்த பணிக்கு ஊதியம் எதிர்பார்க்கின்ற நிலை ஒருபுறம் இருக்க, எந்தப் பணியும் செய்யாமலேயே மிகுந்த ஊதியத்தை விரும்புகின்ற போக்கு நிறைந்த மக்களிடையில் வாழும் நமக்கு, நாயனார் காட்டும் ‘புகழ்’ என்னும் ஊதியம், புதிய ஒன்றுதான். தான் சேர்த்து வைப்பதையே வாழ்வின் ஊதியமாக எண்ணும் நிலையில், உள்ளதை மற்றவர்களுக்கும் கொடுத்து அதனால் பெறும் புகழே ஊதியம் என்கிறார் நாயனார். உண்மையும் அதுதான்.


     உழைக்காமலே செல்வம் சேர்ப்பவர்கள் பற்றி ஏதும் கவலை கொள்ள வேண்டியது இல்லை. அப்படி ஈட்டிய செல்வத்தைக் கூட, பிறருக்குத் தந்து உதவவேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்களின் செல்வமானது, “ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்” என்னும் நிலையில் நிச்சயம் ஒருநாள் இல்லாது போகும். தேனீக்கள் சுற்றிச் சுற்றி உழன்று, தேன் உள்ள மலர்களைத் தேடிச் சென்று, சிறுச்சிறிதாகத் தேனைக் கொண்டுவந்து, பெரிய பெரிய தேனடைகளை வைக்கும். அந்தத் தேனடைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தேனீக்கள் தேனை இழப்பதோடு தம் உயிரையே இழந்துவிடுகின்றன. உலோபத்தனம் மிகுந்தவரின் செல்வம் இப்படித் தான் கரையும். உலோபியரின் இயல்பு குறித்து, "குமரேச சதகம்" என்னும் நூல் பின்வருமாறு கூறுகிறது.


"திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல்பணம்

     தேடிப் புதைத்து வைப்பார்,

சீலை நலமாகவும் கட்டார்கள், நல்அமுது

     செய்து உணார், அறமும் செயார்,


புரவலர்செய் தண்டம் தனக்கும், வலுவாகப்

     புகும் திருடருக்கும் ஈவார்,

புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்,

     புராணிகர்க்கு ஒன்றும் உதவார்,


விரகு அறிந்தே பிள்ளை சோறுகறி தினும் அளவில்

     வெகுபணம் செலவாகலால்

விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என

     மிகுசெட்டி சொன்னகதைபோல்,


வரவுபார்க் கின்றதே அல்லாது லோபியர்கள்

     மற்றொருவருக்கு ஈவரோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


     பொருளைக் காக்கும் ஒருவகைப் பூதங்களைப் போலப் பணத்தைச் சேர்த்துப் புதைத்து வைப்பார்.  நல்ல ஆடையாகவும் உடுத்தமாட்டார்.  நல்ல உணவு சமைத்து உண்ணமாட்டார். எந்த நல்ல அறவழியிலும் பொருளைச் செலவு செய்யமாட்டார். அரசர்கள் விதிக்கும் தண்டத்திற்கும் வற்புறுத்தி நுழையும் திருடருக்கும் கொடுப்பார். புலவர்களைப் பார்த்தவுடன் ஓடி மறைவார். புராணங்களை எடுத்துக் கூறுவோர்க்குச் சிறிதும் கொடுக்கமாட்டார்.  குழந்தை அறிவு பெற்றுச் சோறும் கறியும் தின்னும் நிலையில்,  மிக்க பொருள் செலவழிவதனாலே, கிழவனாகிய குழந்தையே விளையாடுவதற்கு உரிய குழந்தை என்று மிகுந்த சிக்கனத்தோடு வாழும் உலோபி கூறிய கதையைப் போல,  உலோபியர்கள் பொருள் வருவாயை நோக்குவதை அல்லாமல் பிறருக்கு கொடுப்பாரோ?


“பெற்றார், பிறந்தார், பெருநட்டார், பேர்உலகில்

உற்றார், உகந்தார் எனவேண்டார் --- மற்றோர்

இரணம் கொடுத்தால் இடுவர், இடாரே

சரணம் கொடுத்தாலும் தாம்.” -- நல்வழி. 


     பெரிய இந்த உலகத்தில், இவர் எம்மைப் பெற்றவர், இவர் எமக்குப் பிறந்த மக்கள், இவர் எம்முடைய நாட்டவர், இவர் எம்முடைய உறவினர், இவர் எம்மை விரும்பி நேசித்தவர் என்று யாரையும் விரும்பாதவர்கள் உலோபிகள். அவர்கள் வந்து தம்மைச் சரண் புகுந்தாலும் அவருக்கு ஒன்றும் கொடுக்க மாட்டார். பிறர் தமது உடம்பில் அடித்துப் புண்ணை உண்டாக்கினால் அவருக்கு எல்லாம் கொடுப்பார்.


     நாம் தேடுகின்ற பொருளாகிய ஊதியம், நம்மை விட்டுச் ‘செல்வோம் செல்வோம்’ என்று சென்று கொண்டே இருக்க, புகழாகிய ஊதியமோ நாம் மறைந்த பின்பும் என்றும் நிலைத்து நம்மை வாழ வைக்கின்றது என்ற உண்மையை உய்த்து உணரவேண்டும். பிற அனைத்தும் உலகில் நில்லாது மறைய, புகழ் ஒன்றே மனிதனை எல்லோர் உள்ளத்திலும் என்றும் வாழவைப்பதாகும். இதைத்தான் திருவள்ளுவ நாயனார், “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல்” என ஒரு திருக்குறள் வழியே காட்டுகிறார். ‘ஒன்றா’ என்னும் சொல்லுக்கு, ஒப்பில்லாத என்று பொருள்.


     இந்த நிலையில்லாத உலகத்தில் என்றும் நிலைத்திருப்பது, தனக்கு ஒப்பு இல்லாத புகழ் ஒன்றே என்பதை விளக்கி, எப்படியும் வாழ நினைக்கும் மனிதன், நல்லன செய்து, அல்லன கடிந்து, புகழ் ஓங்க வாழவேண்டுமே என்ற ஏக்கத்தின் விளைவே இந்தப் ‘புகழ்’ என்னும் அதிகாரம். எனவே, நிலைபெற்ற புகழைப் பெற, நிலையற்ற மனிதன், நிலையற்ற வாழ்வில் தன் நிலையற்ற பொருள் முதலியவற்றால் சிறக்க, ‘ஈகை’ என்னும் அறத்தினைப் புரிந்து வாழ வேண்டும். ‘உயர்ந்த புகழ்', ‘நீள் புகழ்’  ‘இசை என்னும் எச்சம்’ என்று புகழ் விளக்கப் பெறுகின்றது. ஈகையைச் செய்தவர் இறந்து போவது நிச்சயம். ஆனால், அவரது பருவுடம்பு மறைந்த பின்னரும், அவரது ‘புகழுடம்பு” இறவாது நிலைத்து இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளல்கள் செய்த அறச் செயல்களை இன்றும் இந்த உலகமானது போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே, முன்னோர் ஈட்டிய புகழை நாமும் பெறவேண்டும் என்று ஆற்றுப்படுத்துகின்றார் திருவள்ளுவ நாயனார். 


     உலகில் பிறக்கின்றோம் நாம். வளர்கின்றோம்; வாழ்கின்றோம். வாழ்நாள் கழிகின்றது. இறுதியில் இறக்கின்றோம். இது மனிதனுக்கு மட்டுமன்றி, எல்லா உயிரினங்களுக்கும் பொதுவான நியதி. “பெருங்காரியம் போல் வரும் கேடு உடம்பால் பிரியம் கூர வந்து கருவூறிப் பிறந்தார், கிடந்தார், இருந்தார், தவழ்ந்தார், நடந்தார், தளர்ந்து பிணம் ஆனார்” என்று அருணகிரிநாதர் பாடியளவிலேயே மனித வாழ்க்கை கழிதல் கூடாது. ஒரறிவுடைய மரம் தொடங்கி எல்லா உயிர்களும் பிறந்து, இருந்து, வாழ்ந்து மறைகின்றன. ஆனால், ஆறு அறிவுடைய மனிதன் பிறவற்றினும் மேம்பட்ட காரணத்தினால், தான் என்றும் நிலைக்க வழி காணவேண்டும். உலகில் பிறந்தவர் யாவரும் எப்படியும் மறையப் போகின்றனர். மறைந்த பின்னும் நினைத்துப் பார்க்கும்படியாக, ‘ஈகை’ என்னும் அறத்தினைச் செய்யவில்லையானால், அப்படிப்பட்டவன் பிறவாது இருந்தாலே நலமாக இருந்திருக்கும். புகழோடு வாழ்ந்து மடியாதவர், பிறத்தலை விடப் பிறவாமல் இருப்பதே நல்லது என்பது திருவள்ளுவர் அருள்வாக்கு. 


“தோன்றிற் புகழொடு தோன்றுக, அஃதிலார் 

தோன்றலின் தோன்றாமை நன்று”    --- திருக்குறள்.


     மக்களாகப் பிறந்து, ஈகை’ என்னும் அறித்தைப் புரியாது, பயனின்றி வாழ்ந்தால் கூடப் பரவாயில்லை. மாறாகப் பல கொடுமைகளைச் செய்து இகழ்ச்சி அடைகின்றார்கள் பலர். தாமும் கெட்டு, தாம் வாழும் சமுதாயத்தையும் சீர்குலைக்கும் கொடுமையை எண்ணிய நாயனாரின் அருள் உள்ளம் வருந்தி, “தோன்றாமை நன்று” என்று கூற வைத்தது. இத்தகைய கொடுமனம் படைத்தவர்கள் பலர் தோன்றாது இருந்தால் - நல்லவை செய்து ‘நீள்புகழ்’ பெறுவோர் பலர் பிறந்திருந்தால், இன்று உலகில் காணப்படும் கொடுமைகள் இல்லாது இருக்கும். மக்களின் வாழ்வு மெத்த மகிழ்ச்சியாகவே அமையும்.  நல்லனவற்றைச் செய்து ‘நீள்புகழ்’ பெறாத மக்களைத் தாங்குகின்ற நிலத்தை எண்ணுகிறார் திருவள்ளுவ நாயனார். நிலத்துக்கு ‘நல்லாள்’ என்னும் அற்புதமான பெயரைச் சூட்டி மகிந்த திருவள்ளுவ நாயனார், அந்த நல்லாள் இசை ஒழிய வாழவேண்டி வந்ததே, அதனால், நிலமானது வளம் குன்றிப் போகுமே என்றும் வருந்துகிறார். 


வசைஇலா வண்பயன் குன்றும், இசையிலா 

யாக்கை பொறுத்த நிலம்” -- திருக்குறள். 


     புகழுடம்பினைப் பெறாத, வெற்றுடம்பினரை இந்த ‘நிலம் என்னும் நல்லாள்’ தாங்க வேண்டாம் என்பது அவர் கருத்து. நல்லன செய்யாது, அல்லனவே செய்பவர் வாழ்கின்ற நாடு, ‘நாடா வளத்தன’ என்ற நிலையிலிருந்து மாறி, தன் வண்பயனாகிய வளமெல்லாம் அழிய, மக்கள் பசியும் பிணியும் பகையும் பற்றி வாடுவார்கள் என்பதை, “வசை இல்லா வண்பயன்” என்னும் சொல்லால் திருவள்ளுவ நாயனார் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றார். இன்று நாம் கண்முன் காணுகின்ற காட்சிதான் இது. திருவள்ளுவர் அருள்வாக்குப் பொய்யாகிப் போகுமா? நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தும், அவற்றை மக்கள் எல்லோரும் நிறைவாக அனுபவிக்கின்ற நிலை இல்லையே. உயிர் உணர்வற்ற மாக்களால் தானே இந்த அவலம் எல்லாம் நிகழ்கின்றது. உலகம் வாழ வேண்டுமாயின், இத்தகைய கொடுமையாளர்கள் இல்லாது ஒழியவேண்டும். இவர்களை ‘நிலம் என்னும் நல்லாள்’ தாங்கக் கூடாது என்பதைப், புகழ் என்னும் அதிகாரத்தால் காட்டிய நாயனார், தனிமனிதன் புகழோடு வாழ்வதால் தரணியே சிறக்கும் என்று காட்டினார். தான் வாழ்வதோடு, சமுதாயமும் சிறக்க வாழவேண்டும் என்று அறத்தை ஆற்றிப் புகழ் பெறாத வசையாளர் வழியே வையமும் சமுதாயமும் எப்படி மாறும் என்பதையும் காட்டினார்.  என்றென்றும் புகழொடு வாழ விரும்பும் மக்களினம், திருவள்ளுவ நாயனார் காட்டிய கடமை உணர்வைக் கருத்தில் இருத்துதல் வேண்டும்.




நீதியால் தொழுதல்

நீதியால் தொழுதல் ---- மனிதன் தனது தேவைக்கேற்ப வருவாய் வந்து கொண்டிருக்கும் வரையில் நேர்மை உடையவனாக, ஒழுக்க நெறியில், அறத்தின் வழிச் செல்பவ...