பிள்ளைதான்



பிள்ளைதான் வயதில் மூத்தால்,
     பிதாவின் சொல் புத்தி கேளான்;
கள்ளின் நல் குழலாள் மூத்தால்,
     கணவனைக் கருதிப் பாராள்;
தெள்ளுற வித்தை கற்றால்,
     சீடனும் குருவைத் தேடான்;
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால்
     உலகர் பண்டிதரைத் தேடார்.  3.

     மகன் வயதில் மூத்தவனாகி விட்டால், தந்தை கூறும் அறிவுரைகளைக் கேட்க மாட்டான்.

     சூடிய மலரில் இருந்து தேன் ஒழுகும் கூந்தலை உடைய வயதில் முதிர்ந்தவளாக இருந்தால், தன்னுடைய கணவனை உயர்வாக எண்ணி, அவனுக்கு உற்ற பணிவிடைகளைச் செய்ய நாடமாட்டாள்.

     தெளிவு பொருந்த கல்விகளைக் கற்றுக் கொண்டால், மாணாக்கனும் ஆசிரியரைத் தேடி வணங்கமாட்டான்.

     தனக்கு உள்ள நோயினால் வரும் துன்பங்களும், அந்த நோயும் தீர்ந்து விட்டால், உலகில் உள்ள மனிதர்கள், நோய் தீர்த்த மருத்துவரைத் தேடமாட்டார்.

     உலகியல் நிகழ்வினை இந்த ஆசிரியர் காட்டி உள்ளார். நான்காவதாகக் காட்டி இருக்கும் நிகழ்வு இதனை உறுதிப் படுத்துகின்றது. நோய் தீர்த்த மருத்துவரை, திரும்பவும் நோய் வந்த பிறகே பார்க்கின்றோம்.

     அறிவில் சிறந்தவனாக இருந்தால், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப ஒருவன் நடந்து கொள்வான்.

     அறிவில் சிறந்தவராக ஒரு அம்மையார் இருந்தால், "கொண்டானில் துன்னிய கேளிர் பிறர் இல்லை" என்பதையும், "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" என்பதையும், "தற்காத்து, தற்கொண்டான் பேணி, தகைசான்ற சொல் காத்து, சோர்வு இலாள்" பெண் என்பதையும் உணர்ந்து நடந்து கொள்வார்.

     நல்ல அறிவு உள்ள மாணவனாக இருந்தால், குருர் பிரம்மா, குருர் விஷ்ணோ, குருர் தேவோ மஹேஸ்வர: குருஸ் சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: என்னும் ஆப்த வாக்கியத்தினை உணர்ந்து குரு பக்தியுடன் இருப்பான்.

     மாதா பிதா குரு தெய்வம் என்போம். இதை, அன்னை, தந்தை, குரு, தெய்வம் என்று நான்கு வகையாகக் கொள்ளுதல் பொருந்தாது. தெய்வம் என்பது, உருவமற்றது. அதற்கு என்று ஒரு பெயர் இல்லை. ஒரு நாமம், ஓர் உருவம் இல்லாதவன் இறைவன். அந்த தெய்வம் உயிர்களுக்குக் கருணை புரிந்து  தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் உருவம் தாங்கி வந்தது என்று தெளிந்து கொள்வதே சாலச் சிறந்தது. மாதா, பிதா, குரு இவர்கள் தான் தெய்வம். இப்படித் தெளிந்து விட்டால், எந்த மாணவனும் தன் குருவை மதிக்காமல் இருக்கமாட்டான்.

மேலும்,

அறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

என்னும் திருக்குறள் கருத்துக்களையும் இங்கு வைத்து எண்ணலாம்.

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...