அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இராவின் இருள் போலும்
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
மாதர் ஆசை
எனைப் பற்றாமல், திருவடி ஞானத்தை
அருள்.
தனாதனன
தானம் தனாதனன தானம்
தனாதனன தானம் ...... தனதான
இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
இராமசர மாகும் ...... விழியாலும்
இராகமொழி
யாலும் பொறாதமுலை யாலும்
இராதஇடை யாலும் ...... இளைசோர்நெஞ்
சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
தடாதவிலை கூறும் ...... மடவாரன்
படாமலடி
யேனுஞ் சுவாமியடி தேடும்
அநாதிமொழி ஞானந் ...... தருவாயே
குராவினிழல்
மேவுங் குமாரனென நாளுங்
குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வே
குணாலமிடு
சூரன் பணாமுடிக டோறுங்
குடாவியிட வேலங் ...... கெறிவோனே
துராலுமிகு
தீமுன் பிராதவகை போலுந்
தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ்
சுபானமுறு
ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இராவின்
இருள் போலும் பராவு குழலாலும்,
இராம சரம் ஆகும் ...... விழியாலும்,
இராக மொழியாலும், பொறாத முலையாலும்,
இராத இடையாலும், ...... இளைஞோர் நெஞ்சு
அராவி,
இருபோதும் பராவி விழவே வந்து,
அடாத விலை கூறும் ...... மடவார்அன்பு
அடாமல்,
அடியேனும் சுவாமி அடி தேடும்
அநாதிமொழி ஞானம் ...... தருவாயே.
குராவின்
நிழல் மேவும் குமாரன் என நாளும்
குலாவி இனிது ஓது அன் ...... பினர் வாழ்வே!
குணாலம்
இடு சூரன் பணாமுடிகள் தோறும்
குடாவிஇட வேல்அங்கு ...... எறிவோனே!
துராலும்
மிகு தீ முன்பு இராத வகை போலும்
தொடாமல், வினை ஓடும் ......
படி நூறும்
சுபானம்உறு
ஞானம் தபோதனர்கள் சேரும்
சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
பதவுரை
குராவின் நிழல் மேவும் --- குராமரத்தின்
நிழலில் எழுந்தருளியிருக்கும்
குமாரன் என --- குமாரக் கடவுளே என்று
நாளும் குலாவி --- நாள்தோறும் குலவி,
இனிது ஓது அன்பினர் வாழ்வே --- இன்புற்று
துதி செய்கின்ற அன்பர்களின் வாழ்வே!
குணாலம் இடு சூரன் --- பகைமையால்
கொக்கரித்தச் சூரனுடைய
பணா முடிகள் தோறும் --- பருத்த முடிகள்
எல்லாம்
குடாவி இட வேல் அங்கு எறிவோனே --- தொளைபட்டு
வளையுமாறு வேலை அவ்விடத்தில் செலுத்தியவரே!
துராலும் மிகு தீ முன்பு இராத வகை
போலும் --- செத்தையானது மிகுந்து எரியும் தீயின் முன்பு இல்லாது எரிந்து போவதுபோல்,
தொடாமல் வினை ஓடும்படி நூறும் --- தம்மை அணுகாது
ஓடிப்போம்படி வினைகளைப் பொடிபடச் செய்யும்,
சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் --- நன்மையை
உட்கொள்ளும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள
சுவாமிமலை வாழும் பெருமாளே --- சுவாமிமலையில்
வாழ்கின்ற பெருமையில் மிகுந்தவரே!
இராவின் இருள் போலும் பராவு குழலாலும் ---
இரவின் இருள் போன்றது என்று புகழ்கின்ற கூந்தலினாலும்,
இராம சரம் ஆகும் விழியாலும் --- இராமபிரனுடைய
அம்பைப் போன்ற கண்களாலும்,
இராக மொழியாலும் --- இசை நிரம்பிய
பேச்சினாலும்,
பொறாத முலையாலும் --- சுமை தாங்க முடியாத
கொங்கைகளாலும்,
இராத இடையாலும் --- இல்லை என்று கூறுமாறு
மிகு நுட்பமான இடையினாலும்,
இளையோர் நெஞ்சு அராவி --- இளைஞர்களுடைய
உள்ளத்தை அரம் அறுப்பதுபோல் அறுத்து,
இருபோதும் பராவி விழவே --- காலை மாலை என்ற
இரு வேளைகளிலும், தம்மைத் துதி செய்து தளரும்படி,
வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு அடாமல் ---
எதிரில் வந்து நியாயத்துக்கு மேற்பட்ட விலையைக் கூறுகின்ற பொதுமாதர்களின் ஆசை
என்னைப் பிடியாமல்,
அடியேனும் சுவாமி அடிதேடும் - அடியேனுக்கும்
கடவுளாகிய உமது திருவடியைத் தேடும்,
அநாதிமொழி ஞானந் தருவாயே - ஆதியில்லாத
மொழியான ஞானத்தைத் தந்தருளுவீர்.
பொழிப்புரை
குராமரத்தின் குளிர்ந்த நிழலில்
எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே என்று தினந்தோறும் குலாவி இனிமையாகத் துதி
செய்கின்ற அன்பர்களுக்கு வாழ்வாகத் திகழ்பவரே!
வீரவுணர்ச்சியால் கொக்கரிக்கின்ற
சூரனுடைய பருத்த முடிகள் யாவும் துளைபட்டு வளையுமாறு வேலை அவ்விடத்தில்
விடுத்தவரே!
பெருந்தீயின் முன் செத்தை எரிந்து
இல்லாமல் போவது போல், வினை தம்மைத் தொடாது
ஓடிப் போகுமாறு பொடி செய்யவும்,
நன்மையை
உட்கொள்ளவும் ஞான தவ சீலர்கள் சேர்ந்து வாழ்கின்ற சுவாமிமலையில் வாழ்கின்ற
பெருமிதம் உடையவரே!
இரவில் இருள் போன்றது என்று புகழ்கின்ற
குழலினாலும், இராமபாணம் போன்ற
கண்களாலும், இசை மயமான
மொழிகளாலும் (இடை) தாங்கமாட்டாத கனமுள்ள தனங்களாலும், இல்லையென்று கூறும்படி அத்துணை
நுண்ணியதான இடையாலும், இளைஞர்களுடைய
உள்ளத்தை அரம் அறுப்பதுபோல் அறுத்து, காலை
மாலைகளில் அந்த இளைஞர்கள் புகழ்ந்து தளருமாறு, அவர் முன் வந்து நியாயமின்றி மிகுந்த
விலைகூறும் பொதுமகளிரின் ஆசை என்னைத் தொடராமல், அடியேனுக்கு உமது திருவடியைத் தேடும்
அநாதி மொழியான ஞானத்தைத் தந்தருளுவீர்.
விரிவுரை
இராவின்
இருள் போலும் பராவு குழலாலும் ---
மாதர்களின்
அவயவ நலன்களை முடி முதல் அடிவரை கூறுவது மரபு. பாதாதி கேச வர்ணணை என்பர். கூந்தல்
மிகுந்த கரிய நிறத்துடன் இருப்பதனால் இருள் போன்றது என்று வியந்து கூறுவர்.
“கொந்துத் தருகுழல்
இருளோ சுருளோ?” என்று வேறு ஒரு
திருப்புகழிலும் கூறுகின்றனர்.
ஆடவருடைய
மனம் இருள்வதற்கு அந்தக் கூந்தலின் இருள் ஏதுவாகின்றது என்ற குறிப்பையும்
நுனித்துணர்க. கூந்தலின் அழகு இளைஞரை மயங்கச் செய்யும்.
“..............................செங்கழுநீர் மாலை
சூடிய
கொண்டையில் ஆதார சோபையில் மருளாதே” --- (கொம்பனையார்) திருப்புகழ்
இராம
சரமாகும் விழியாலும் ---
அடுத்து
அம் மகளிரது கண்கள் மயக்கத்தைத்தரும். அக் கண்கள் கூரியவை. கணை போன்றவை, கணை உயிரை மாய்க்குந் தன்மையது.
கணைகளில் சிறந்தது இராமருடைய கணை. இராமசரம் குறி தவறாது; மாறுபட்டோரை மாய்க்க வல்லது.
அந்த
இராம சரம் போல் இளைஞரின் உள்ளத்தை மாய்க்க வல்லது அம் மாதர்களின் கண்கள் என்று
குறிப்பிடுகின்றார்.
இராக
மொழியாலும்
---
இராகம்-பண்.
பெண்கள் மொழி இசைபோன்ற இனிமையுடையது.
இளையோர்
நெஞ்சு அராவி
---
இரும்பு
அரம் இரும்பை அராவித் தேய்த்துவிடும். அதுபோல் இளைஞர்களுடைய உள்ளத்தை மகளிர் மயல்
அராவி அழித்துவிடும்.
இரும்பு
போன்ற உறுதியான உள்ளமும் அழியும் என்பது குறிப்பு.
இருபோதும்
பராவி
---
இருபோதும்-காலை
மாலை. காலையும் மாலையும் கடவுளை வணங்குவது ஆன்றோர் மரபு. இறைவன் தந்த உடம்பாலும்
உரையாலும் உள்ளத்தாலும் இறைவனை வணங்குவதும் வாழ்த்துவதும் சிந்திப்பதும்
கடமையாகும். இதனைக் காலைக் கடன்,
மாலைக்
கடன் என்பர். காலைக் கடன் என்பதை இப்போது மலசலம் கழிப்பது என்ற பொருளில்
பேசுகின்றார்கள். என்ன அறியாமை?
கடவுளை
வழிபடுவது காலைக்கடனாகும். இளைஞர் இதனை மறந்து காலையும் மாலையும் மகளிரைப்
புகழ்ந்து மதிகெட்டு மயங்கித் தியங்கித் திரிவர்.
அடாத
விலை கூறும் மடவார் ---
தம்மை
விரும்புவோரிடம் மிகப் பெரும் அளவில் பொன்னை விரும்பிக் கேட்டுப் பெறுவர் பொது
மகளிர். கோடீச்சுரன் கோவணாண்டியாக நொந்து வாடுவான்.
அநாதிமொழி
ஞானம் தருவாயே
---
ஆதியில்லாதது
அநாதி. அநாதியென்று மொழிகின்ற மெய்ஞானப் பொருளைத் தருமாறு சுவாமிகள் இப்பாடலில்
முருகனிடம் வேண்டுகின்றார்.
குராவின்
நிழல் மேவும் குமாரன் ---
திருவிடைக்கழி
என்று ஒரு திருத்தலம் திருக்கடவூருக்கு அருகில் இருக்கிறது. அருமையான முருகருடைய
தலம். அத்தலத்தில் முருகப் பெருமான் திருக்குரா மரத்தின் கீழ் நின்று அடியவர்க்கு
அருள் புரிகின்றார்.
“கொந்துவார்
குரவு அடியினும், அடியவர்
சிந்தை வாரிச நடுவினும், நெறிபல
கொண்ட வேத நன் முடிவிலும், உறைதரு குருநாதா” --- திருப்புகழ்
“குரவம் உற்றபொன் திருவிடைக்கழிப்
பெருமாளே” --- (பகருமுத்தமிழ்) திருப்புகழ்
மால்உலா
மனம் தந்து என்கையில் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை,
மோல்உலாந்
தேவர் குலமுழுது ஆளுங்
குமரவேள், வள்ளிதன் மணாளன்,
சேல்உலாங்
கழனித் திருவிடைக்கழியில்
திருக்குரா நீறழ்கீழ் நின்ற
வேல்உலாந்
தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும் என் மெல்லியல் இவளே --- திருவிசைப்பா
குணாலம் ---
குணாலை-வீராவேசத்தால்
கொக்கரிப்பது.
துரால் ---
துரால்
- துரும்பு. நெருப்பில் துரும்பு எரிந்தொழிவது போல், ஞானிகள் தவாக்கினியால் வினைகளை
எரித்துத் துகளாக்குவர்.
பவ்வம்
ஆர்கடல் இலங்கையர் கோன்தனைப்
பருவரைக் கீழ்ஊன்றி
எவ்வம்
தீரஅன்று இமையவர்க்கு அருள்செய்த
இறையவன் உறைகோயில்
மவ்வம்
தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கவ்வை
யால் தொழும் அடியவர் மேல்வினை
கனல்இடைச் செதிள்அன்றே. --- திருஞானசம்பந்தர்.
இதன் பொருள் --- கடல் சூழ்ந்த
இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து , இமையவர்க்குத் துன்பங்கள் தீர அருள்
செய்தவர் . அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம் . அத்தலத்தைத் தோத்திர
ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின் வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும்.
மாயனை
மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய
பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர்
குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக்
குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய்
வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால்
பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய
பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில்
தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். ---
ஆண்டாள்நாச்சியார்.
இதன்
பொருள் ---
உணர்வதற்கரிய அதிசய குணங்களை உடையவனும், அதிசயமான
காரியங்களை நிகழ்த்துபவனும், வட மதுரா தேசத்து மாந்தர்க்கு
அரசனும், இரட்சகனும், பரிசுத்தமான மகாநதியான யமுனைத் துறையில்
வசிப்பவனும், இடையவர் குலத்தில் அணையாப்
புண்ணியச் சுடர் போல் அவதரித்தவனும், தனது
அன்னையின் கருப்பையை ஒளி மிக்கதாக்கி, அவளது
திருவயிற்றை விளங்கச் செய்து அவளுக்குக் குன்றாப் புகழ் சேர்த்தவனும் ஆன தாமோதரன் என்ற
கண்ணபிரானை தூய்மையான
உடல் உள்ளத்துடன் வந்து, அவன் திருவடிகளில் தூய
மலர்களைத் தூவி வணங்கி, வாயினால் அவனது கல்யாண
குணங்களைப் போற்றிப் பாடி, சிந்தையில் அவனை மட்டுமே
நிறுத்தி நாம் தியானித்தோமானால்,
நாம்
அறிந்து முன் செய்த பாவங்களும்,
அறியாமல்
செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பில் இட்ட தூசு
போல தடயமின்றி அழிந்து போய் விடும்! ஆகவே அம்மாயப்பிரானின் திருநாமங்களை விடாமல் சொல்லி, பாவை நோன்பிருப்போம், வாருங்கள்!
சுபானம் ---
சு-நன்மை, பானம்-உட்கொள்ளுதல். நன்மையை
உட்கொள்ளுதல்.
தபோதனர்கள்
சேரும் சுவாமிமலை ---
நன்மையைக்
கொள்ளும் பரம தவசீலர்கள் வாழ்கின்ற புனிதமான திருத்தலம் சுவாமிமலை. திருவேரகத்தில்
முருகனை வழிபடுகின்ற ஆன்றோரைப் பற்றி நக்கீரர் கூறியிருப்பதையும் ஈண்டு சிந்திக்க.
கருத்துரை
சுவாமிமலை
மேவும் முருகா! திருஞானத்தைத் தந்தருள்.
No comments:
Post a Comment