அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இருவினை புனைந்து
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
அடியேன் சிவயோகி
ஆகி, உம்முடன் இரண்டறக்
கலந்து,
மயில்
மீது உல்லாசமாக வரவேணும்.
தனதன
தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த தான ...... தனதான
இருவினை
புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போக ...... மலமூட
விருளற
விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு ...... மழகான
பரிமள
சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப்
பரிவுகொ
டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும்
அரியய
னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு ...... நடராஜன்
அழலுறு
மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே
மருவலர்
கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலை ...... யுடையோனே
வளைகுல
மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இருவினை
புனைந்து, ஞான விழிமுனை
திறந்து, நோயின்
இருவினை இடைந்து போக, ...... மலம் மூடு,அவ்
இருள்அற
விளங்கி, ஆறுமுகமொடு கலந்து, பேதம்
இலை என, இரண்டு பேரும் ...... அழகான
பரிமள
சுகந்த வீத மயம்என மகிழ்ந்து, தேவர்
பணிய, விண்மடந்தை பாத ...... மலர்தூவ,
பரிவுகொடு
அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயிலுடன் குலாவி ...... வரவேணும்.
அரிஅயன்
அறிந்திடாத அடிஇணை சிவந்த பாதம்
அடி என விளங்கி ஆடு ...... நடராஜன்,
அழல்உறும்
இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண்ஆகம்
அயல்அணி சிவன் புராரி ...... அருள்சேயே!
மருவலர்கள்
திண் பணஆர முடி,உடல் நடுங்க, ஆவி
மறலி உண வென்ற வேலை ...... உடையோனே!
வளைகுலம்
அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமி-
மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே.
பதவுரை
அரி அயன் அறிந்திடாத அடியிணை ---
நாராயணரும் நான்முகரும் தேடித் தேடிக் காண முடியாமல் போன திருவடிகளை உடையவரும்,
சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடும் நடராஜன் ---
செந்நிறம் பொருந்திய தமது தூக்கிய திருவடியே உலகங்களுக்கு எல்லாம் முதன்மையானது என்று
விளக்கி, பேரருட்பெருஞ்சோதி
வடிவாக விளங்கி ஆநந்தத் தாண்டவம் புரிந்தருளும் அம்பலக் கூத்தரும்,
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் ---
நெருப்பில் இடப்பட்டுச் சிவந்தொளிரும் இரும்பைப்போன்ற தமது பொன்மேனியைக் கண்டு உள்ளம்
உவக்கின்ற,
மரகதம் பெண் ஆகம் அயல் அணி - மரகதம் போன்ற
பச்சை மேனியையுடைய உமையம்மையாருடைய திருமேனியை பக்கத்தில் இருத்திக் கொண்டவரும்,
சிவன் - மங்கலத்தை அருள்பவரும்,
புராரி - திரிபுரத்தை எரித்தவரும் ஆகிய
பரமேசுவரர்,
அருள் சேயே --- பேரருட்பெருக்கால் பெற்றருளிய
திருக்குமாரரே!
மருவலர்கள் --- பகைவர்களாகிய
அசுரர்களுடைய,
திண் பண ஆர முடி உடல் நடுங்க --- வலி பெற்று
அலங்காரமாக உடைய நவரத்தின மாலைகளுடன் கூடிய தலைகளும் உடல்களும் பயத்தினால்
நடுநடுங்கவும்,
ஆவி மறலி உண வென்ற --- அவர்களுடைய உயிரைக்
கூற்றுவன் குடிக்கவும் வெற்றி பெற்ற
வேலை உடையோனே --- வேற்படையைத் திருக் கரத்திலே
தாங்கியிருப்பவரே!
வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் ----
சங்குகளின் கூட்டம் ஒளி வீசுகின்ற காவிரியாற்றின் வடதிசையில் விளங்குகின்ற,
சுவாமி மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே ---
சுவாமிமலை என்கின்ற திருவேரகத்தில் அடியார் பொருட்டு எழுந்தருளியுள்ள தேவர்களுக்கெல்லாம்
தலைவராகிய பெருமிதம் உடையவரே!
இருவினை புனைந்து --- பெரிய செயலாகிய
சிவயோகத்தை மேற்கொண்டு,
ஞானவிழி முனை திறந்து --- அறிவுக் கண்ணாகும்
நெற்றியிலுள்ள நந்திச் சுழி திறக்கப் பெற்று,
நோயின் இருவினை இடைந்து போக --- (அவ்வறிவுக்
கண் திறக்கப்பெற்றதனால்) பிறவிப் பிணிக்குக் காரணமாயுள்ள நல்வினை தீவினையென்ற
இருவினைகளும் என்னை விட்டுப் பின்வாங்கி ஓடிப்போகவும்,
மலம் மூடு அவ் இருள் அற விளங்கி ---
அறியாமைக்குக் காரணமாயுள்ள ஆணவ மலமாகிய இருள் மலம் தேய்ந்து போகவும் அதனால்
மெஞ்ஞான ஒளி வீச விளக்கமுற்று,
ஆறு முகமொடு கலந்து இரண்டு பேரும் பேதம் இலை
என --- தேவரீருடைய ஆறு திருமுகங்களின் திருவருட் பெருக்கில் கலப்புற்று, பரமான்மாவாகிய
தேவரீரும், ஜீவான்மாவாகிய
அடியேனும் இரண்டெனுந் தன்மை நீங்கிக் கலந்து அத்துவிதமாகி,
அழகு ஆன பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து ---
அழகிய, நல்ல வாசனையுடைய
மலரும் அதில் வீசும் மணமும் போல் ஒன்றி பேரின்பமுற்று,
தேவர் பணிய - தேவர்கள் வணங்கவும்,
விண் மடந்தை பாதம் மலர் தூவ --- ஆகாய வாணி, திருவடிகளின்மேல் கற்பக மலரைச்
சொரியவும்,
பரிவுகொடு அநந்த கோடி முனிவர்கள் புகழ்ந்து
பாட --- மிக்க அன்பு கொண்டு, எண்ணிறந்த பல் கோடி
முனி புங்கவர்கள் புகழ்ந்து பாடவும்,
பருமயில் உடன் குலாவி வர வேணும் --- பெரிய
மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து உல்லாசமாக உலாவி வரவேணும்.
பொழிப்புரை
திருமாலும் திசைமுகனும் தேடித்தேடி யறிதற்கரிதான
இரண்டு திருவடிகளை உடையவரும், தமது தூக்கிய
செம்மலர் நோன்றாட் கமலமே உலகங்களுக்கெல்லாம் முதன்மையானது என்று விளக்கி
அருட்பெருஞ் ஜோதியாக ஆநந்தத் தாண்டவம் புரிந்தருளும் நடராஜப் பெருமானும், நெருப்பிலிட்டு மிக மிக ஒளிரும்
இரும்பைப் போன்ற செம்மேனியைக் கண்டு மகிழ்கின்ற, மரகத மேனியையுடைய மலைமகளை அருகில்
இருத்திக் கொண்டிருப்பவரும் மங்கலத்தை யருள்பவரும், திரிபுரதகனரும் ஆகிய சிவபெருமான்
உலகங்கள் உய்யும் பொருட்டுப் பெற்றருளிய திருப்புதல்வரே!
பகைவர்களாகிய அசுரர்களுடைய வலி பெற்று
அலங்காரமாகவுடைய மணிமாலைகளுடன் கூடிய தலை உடல் இவைகள் அச்சத்தினால் நடுங்கவும், அவர்களுடைய உயிரை இயமன் உண்ணவும் வெற்றி
பெற வேலாயுதத்தைப் படைக்கலமாக உடையவரே!
சங்குகளின் கூட்டம் உருண்டு ஒளி
செய்கின்ற காவிரி நதியின் வடபுறத்தில் விளங்குகின்ற சுவாமி மலையென்னுந் திருவேரகத்
திருப்பதியில் எழுந்தருளியுள்ள தேவர் தலைவரே!
அடியேன் பெரிய செயலாகிய சிவயோகத்தை
மேற்கொண்டு அறிவுக் கண்ணாகும் புருவ மத்தியிலுள்ள நந்திச் சுழி திறக்கப் பெற்று, அதனால் பிறவிப் பிணிக்குக் காரணமாயுள்ள
நல்வினை தீவினையென்னும் இரு வினைகளும் பயந்து பின் வாங்கியோடிப் போகவும், அறியாமைக்குக் காரணமாயுள்ள ஆணவமென்னும்
இருள் மலம் தேய்ந்தழியவும், அதனால் ஞானவொளி
வீசப்பெற்று விளக்கமுற்று, தேவரீருடைய
ஆறுதிருமுகங்களின் கருணைப் பிரவாகத்தில் கலந்து, பரமான்மாவாகிய தேவரீரும், ஜீவான்மாவாகிய அடியேனும், நல்ல மணம் வீசும் மலரும் அதன்
மணமும்போல் இரண்டற்று அத்துவிதமாகக் கலந்து, தேவர்கள் வந்து வணங்கவும். விண்மாது
திருவடிமேல் கற்பக மலர்மாரி பொழியவும், எண்ணிறந்த
பலகோடி முனிவர் குழாங்கள் மிக்க அன்பு கொண்டு புகழ்ந்து பாடவும், பெரிய மயிற்பரியின் மீது ஆரோகணித்து
உல்லாசமாக உலாவி வரவேணும்.
விரிவுரை
இருவினை ---
இரு-பெரிய; வினை-செயல்; பெரிய செயலாவது சிவயோகம்,
செனித்த
காரிய உபாதி ஒழித்து, ஞான ஆசார
சிரத்தை
ஆகி, யான்வேறு,என் உடல்வேறு,
செகத்து
யாவும் வேறாக நிகழ்ச்சியா, மன அதீத
சிவச்சொ
ரூப மாயோகி என ஆள்வாய்” --- (அனித்தமான)
திருப்புகழ்
இது
பல பிறவிகளில் சரியை கிரியைகளைச் செய்து அதன் முதிர்ச்சியினால் வருவது; ஆதலினால் பெரிய செயல் என்றனர்.
ஞான
விழிமுனை திறந்து ---
நமக்கு
மூடப் பெற்றிருக்கின்ற ஞானவிழி சிவயோகிகட்குத் திறந்திருக்கும். எல்லாவற்றையும், எல்லாக் காலத்தையும், எல்லாப் பொருள்களையும் அறிகின்ற தடைபடாத
ஞானம் உண்டாகும்.
இருவினை
இடைந்து போக
---
பிறவிக்குக்
காரணமாயுள்ளது நல்வினை தீவினையாகிய இரண்டேயாம். அது சமமுற்றபோது இறைவன் திருவருட்
காட்சியுண்டாகும்.
“உணக்கி லாததோர்
வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கில்லாத்
திருக்கோலம் நீவந்து
காட்டினாய் கழுக்குன்றிலே. --- மணிவாசகர்
“இருவினை இன்பத் துன்பத்து
இவ்வுயிர் பிறந்திருந்து
வருவது போவதாகும்” ---சிவஞானசித்தியார்
மலமூட
இருள்
---
ஆணவ
இருள் பூத இருளினும் மிக்க வலியுடைத்து, எல்லாப்
பொருளையும் மறைக்கும் பூத இருள்,
தன்னைக்
காட்டி நிற்கும். ஆணவ இருள், தன்னையுங் காட்டாது
தான் மறைந்த ஆன்மாவையுங் காட்டாது. பிறபொருளையுங் காட்டாது.
“ஒரு பொருளும் காட்டாத
இருள், உருவம்
காட்டும், இருபொருளும் காட்டாது இது” --- திருவருட்பயன்
ஆறுமுகமொடு
கலந்து பேதம் இலையென ---
சீவன்
இருவினையொப்பு கைவரப் பெற்று மலநிவர்த்தி யானவுடன் சக்தி பதிந்து சிவத்துடன்
இரண்டறக் கலந்து பூரண இன்பத்தைத் துய்க்கின்றது.
ஊனங்கள்
உயிர்கள் மோக நான்என்பது அறிவிலாமல்
ஓம்அங்கி உருவ மாகி இருவோரும்
ஓர்அந்த
மருவி ஞான மாவிஞ்சை முதுகினேறி
லோகங்கள்
வலம தாட அருள்தாராய்” --- (ஞானங்கொள்) திருப்புகழ்
அங்ஙனம்
அத்துவிதமுற்று தேவர் பணியவும் விண்மடந்தை தண்மலர் தூவவும், முனிவர்கள் புகழ்ந்து பாடவும், மயில் வாகனத்தின் மீது இன்பமாக
லோகமெல்லாம் உலாவி வரவேண்டும் என்று வேண்டுகிறார்.
“நீவேறு எனாது இருக்க
நான்வேறு எனாது இருக்க
நேராக வாழ் வதற்கு உன்அருள்கூர” --- (நாவேறு) திருப்புகழ்
“இருவினைமு மலமும்அற, இறவியொடு
பிறவிஅற,
ஏகபோகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை, பரமசுகம் அதனை அருள்” --- (அறுகுநுனி)திருப்புகழ்
அரியயன்
அறிந்திடாத அடியிணை ---
சிவபெருமானுடைய
திருவடியைத் திருமாலே தேடினாராயின்,
முடியைத்
தேடிக்காணாது அயர்ந்த பிரமதேவராலும் காணமுடியாதது அத்திருவடி என்பது தேற்றமாம்.
யாம்
காண்போம் என்று அகந்தை உற்றார் யாவரேயாயினும், அவனது திருவடித் தாமரையைக் காணுதற்கு
முடியாது. அன்பு நெறி ஒன்றினாலேயே அவனை எளிதில் உணரலாம். அப் பரமபதி விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருப்பான். "கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்தடியார்
சிந்தனையுள் தேனூறி" நிற்பன். திருமால் தேடித்தேடி இளைத்து நின்றதை மணிவாசகர்
கூறும் அழகினைக் காண்க.
நான்முகன்
முதலா வானவர் தொழுதெழ
ஈரடியாலே
மூவுல களந்து
நாற்றிசை
முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய்
கதிர்முடித் திருநெடு மால்அன்று
அடிமுடி
அறியும் ஆதரவு அதனில்
கடுமுரண்
ஏனமாகி முன் கலந்து
ஏழ்தலம்
உருவ இடந்துபின் எய்த்து
ஊழி
முதல்வ சயசய என்று
வழுத்தியும்
காணா மலரடி இணைகள்........
சுவாமிமலை:-
சுவாமிமலை
என்பது நான்காம் படைவீடு ஆகும். அது அநாகத க்ஷேத்திரம். திருவேரகம் என்பதும்
அதுவே. சுவாமி என்ற திருநாமம் முருகவேளுக்கே உரியது. ஏனைய தேவர்களைச் சுவாமி
என்பது உபசாரமேயாம். ஸ்வாமி என்ற வடமொழிப் பதத்தில் ஸ்வம் என்பதற்கு உடைமை
(சொத்து) என்பது பொருள். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது உலகங்களையும் உயிர்களையும்
உடைமையாக உடையவன் எவனோ அவன் ஸ்வாமி எனப்படுவான்.
குகமூர்த்தி ஒருவரே மூவர்தேவாதிகட்கும் எல்லா
உலகங்கட்கும் தனிப்பெருந் தலைவன். ஆதலால் எல்லாவற்றையும், எல்லாவுயிர்களையும் உடைமையாகவுடைய
முருகக்கடவுள் ஒருவரே ஸ்வாமி எனப்படுவார். ஆதலால் அவர் எழுந்தருளியுள்ள மலை
ஸ்வாமிமலை எனப்படுகின்றது.
கருத்துரை
சிவபுதல்வரே!
வேலாயுதரே! சுவாமி மலையில் உறைபவரே! இருவினையொப்பு, மல பரிபாகமுற்று ஞான விழி திறக்கப்
பெற்று, சிவயோகியாகி
தேவரீருடன் அத்துவிதமுற்று மயில் மேலூர்ந்து இனிது உலவி வரவேணும்.
No comments:
Post a Comment