சுவாமிமலை - 0206. எந்தத் திகையினும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எந்தத் திகையினும் (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
பிறவி அலையில் யான் புகுதாமல்,  
உம்மை வழிபட்டு உய்ய, இச் சபையில் வந்து அருள்.

தந்தத் தனதன தனதன தனதன
     தந்தத் தனதன தனதன தனதன
          தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான


எந்தத் திகையினு மலையினு முவரியி
     னெந்தப் படியினு முகடினு முளபல
          எந்தச் சடலமு முயிரியை பிறவியி ...... னுழலாதே

இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
     னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
          என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ..முறையோடே

சந்தித் தரஹர சிவசிவ சரணென
     கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
          தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் ...... குதிபாயச்

சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
     னந்தத் திருநட மிடுசர ணழகுற
          சந்தச் சபைதனி லெனதுள முருகவும் ...... வருவாயே

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
     தந்தத் தனதன டுடுடுடு டமடம
          துங்கத் திசைமலை யுவரியு மறுகச ...... லரிபேரி

துன்றச் சிலைமணி கலகல கலினென
     சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
          துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு .....மயில்வேலா

கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
     யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
          கந்தப் பரிமள தனகிரி யுமையரு ...... ளிளையோனே

கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
     அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
          கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...பெருமாளே.


பதம் பிரித்தல்


எந்தத் திகையினும், மலையினும், உவரியின்
     எந்தப் படியினும், முகடினும் உள, பல
          எந்தச் சடலமும் உயிர்இயை பிறவியின் .....உழலாதே

இந்தச் சடமுடன் உயிர் நிலைபெற, நளி-
     னம் பொன்கழல் இணைகளில் மருமலர் கொடு
          என் சித்தமும் மனம் உருகி, நல் சுருதியின் ..... முறையோடே

சந்தித்து, அரஹர சிவசிவ சரண் என
     கும்பிட்டு, ணைஅடி அவை என தலைமிசை
          தங்க, புளகிதம் எழ, இருவிழி புனல் ...... குதிபாய,

சம்பைக் கொடிஇடை விபுதையின் அழகுமுன்
     அந்தத் திருநடம் இடு சரண் அழகு உற
          சந்தச் சபைதனில் எனது உளம் உருகவும் ....வருவாயே

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
     தந்தத் தனதன டுடுடுடு டமடம
          துங்கத் திசைமலை உவரியும் மறுக,ச ...... லரிபேரி

துன்ற, சிலைமணி கலகல கலின்என
     சிந்த, சுரர் மலர் அயன் மறை புகழ்தர
          துன்புற்று அவுணர்கள் நமன்உலகு உறவிடும் ..... அயில்வேலா

கந்தச் சடைமுடி கனல்வடிவு அடல்அணி
     எந்தைக்கு உயிர்எனும் மலைமகள் மரகத
          கந்தப் பரிமள தனகிரி உமைஅருள் ...... இளையோனே!

கஞ்சப் பதம்இவர் திருமகள் குலமகள்
     அம்பொன் கொடிஇடை புணர்அரி மருக! நல்
          கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...பெருமாளே.


பதவுரை

      சலரி பேரி --- சல்லரி என்ற வாத்யமும், பேரிகைகளும்,

     தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம --- தொந்தத்திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம (என்ற ஒலிக்குறிப்புடன்),

     துங்க திசை மலை --- தூய்மையான எட்டுத் திசைகளிலுமுள்ள குல மலைகளும்,

     உவரியும் மறுக துன்ற --- கடலும்,  பேரிரைச்சலினால் துன்புறுமாறு, நெருங்கி ஒலிக்கவும்,

     சிலைமணி கலகல கலின் என --- வில்களில் கட்டியுள்ள மணிகள் கலகல என்று ஒலிக்கவும்,

     சுரர் மலர் சிந்த --- தேவர்கள் (கற்பக) மலர்களைப் பொழியவும்,

     அயன் மறை புகழ் தர --- பிரமதேவரும் வேதங்களும் வியந்து புகழ்ந்து துதி செய்யவும்,

     அவுணர்கள் துன்புற்று --- இராக்கதர்கள் மிகவும் துன்பத்தை அடைந்து,

     நமன் உலகு உற விடும் --- இயமனுடைய நரகலோகத்தை அடையவும் விட்டருளிய,

     அயில் வேலா --- கூர்மை பொருந்திய வேற்படையை உடையவரே!

      கந்த சடை முடி --- பரிமள மிக்க சடாமகுடத்தை யுடையவரும்,

     கனல் வடிவு --- நெருப்பனைய திருமேனியை யுடையவரும்,

     அடல் அணி --- பேராற்றலும் பேரழகும் உடையவரும்,

     எந்தை --- அடியேனுடைய தந்தையாருமாகிய சிவபெருமானுக்கு,

     உயிர் எனும் --- ஆவியைப் போன்றவரும்,

     மலைமகள் --- மலையரசன் திருமகளாரும்,

     மரகத --- மரகத வண்ணரும்,

     கந்த பரிமள தனகிரி --- மிகுந்த வாசனை தங்கிய மலை போன்ற பயோதரங்களையுடையவரும் ஆகிய,

     உமை அருள் இளையோனே --- உமாதேவியார் பெற்றருளிய இளம் பூரணரே!

      கஞ்ச பதம் இவர் திருமகள் --- தாமரையாகிய திருமாளிகையில் வீற்றிருக்கின்ற இலக்குமி தேவியையும்,

     குலமகள் --- பூதேவியையும்,

     அம் பொன் கொடி இடை --- அழகிய பொற்கொடி போன்ற மெல்லிடை யுடைய நீளா தேவியையும்,

     புணர் அரி மருக --- மருவுகின்ற திருமாலின் மருகரே!

      நல் கந்த பொழில் திகழ் --- நல்ல வாசனை கமழும் மலர்ச் சோலைகள் சூழ விளங்குகின்ற

     குருமலை மருவிய பெருமாளே --- சுவாமிமலை என்னும் திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

      எந்தத் திகையினும் --- திசைகள் எல்லாவற்றிலும்,  

     மலையினும் --- மலைகளிலும்,

     உவரியின் --- கடலிலும்,

     எந்தச் சடலமும் - பற்பல விதமான யோனி பேதங்களாலாகிய எல்லா உடல்களையும் எடுத்து,

     உயிர் இயை பிறவியின் உழலாதே --- உயிருடன் கூடிய பிறவிக் கடலிற் புகுந்து சுழற்சியை அடையா வண்ணம்,

     இந்த சடமுடன் உயிர்நிலை பெற --- இப்போது எடுத்துள்ள இந்த உடம்புடனேயே, மீண்டும் பிறவாமல் அடியேனுடைய ஆன்மாவானது (தேவரீருடன் அத்துவிதமாகக் கலந்து) நிலைபேறு அடையவும்,

     நளினம் பொன்கழல் இணைகளில் - தாமரை மலர் போன்ற பொற்பிரகாசம் பெற்ற தேவரீருடைய இரண்டு திருவடிகளிலும்,

     மருமலர் கொடு - வாசனை தங்கிய பூக்களைக் கொண்டு,

     என் சித்தமும் மனம் உருகி --- அடியேனுடைய சித்தமும்,  மனமும், நீராயுருகி,

     நல் சுருதியின் முறையோடு (ஏ-அசை) சந்தித்து --- வேத நூல்களில் கூறிய விதிப்படி தேவரீரைக் கலந்து,

     அரஹர சிவ சிவ சரண் என கும்பிட்டு --- அரஹர சிவ சிவ நினக்கே அபயம் ஏற்று துதித்து, தொழுது,

     இணை அடி அவை என தலை மிசை தங்க --- தேவரீருடைய இரண்டு திருவடிகளும், அடியேனுடைய சென்னி மேல் தங்கவும்,

     புளகிதம் எழ --- உடம்பு பூரிக்கவும்,

     இருவிழி புனல் குதிபாய --- இரண்டு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் (மலையருவி போல்) குதித்துப் பெருகவும்,

     சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் --- சம்பைக் கொடி போன்ற மெல்லிய இடையுடைய, உமாதேவியாருடைய அழகிய திருமுன்,

     அந்தத் திருநடம் இடுசரண் அழகு உற --- அழகிய தெய்வீகத் தாண்டவஞ் செய்யும் சரணாரவிந்தம் அழகு செய்ய,

     எனது உளம் உருகவும் --- அடியேனுடைய உள்ளம் உமது பேரருட்பெருக்கையுன்னி உருகுமாறும்,

     சந்த சபை தனில் வருவாயே --- அழகிய இச் சபையின்கண் தேவரீர் வந்தருள் புரிவீர்.

பொழிப்புரை

         சல்லரி பேரிகை முதலிய வாத்தியங்கள், தொந்தத் திகுகுடதகுகுடடிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம என்ற ஒலியுடன், தூய எட்டுக் குலாசலங்களும் கடல்களும் அப்பேரிரைச்சலினால் துன்பமுறுமாறு நெருங்கி ஒலிக்கவும், விற்களிற் கட்டிய மணிகள் கலகலகல என்று ஒலி செய்யவும். தேவர்கள் கற்பக மலர்மாரி பெய்யவும், பிரமதேவரும் வேதங்களும் வியந்து துதி செய்யவும், அசுரர்கள் துன்புற்று இயமனுடைய நரகவுலகம் சேரவும், விடுத்தருளிய கூரிய வேலாயுதக் கடவுளே!

         பரிமள மிக்க சடை முடியை உடையவரும் செந்தீ வண்ணரும், பேராற்றலும் பேரழகுமுடையவரும் அடியேனுடைய பிதாவும் ஆகிய சிவபெருமானுக்கு உயிர் போன்றவரும், மலைமன்னன் திருமகளாரும் மரகத மேனியையுடையவரும், மிகுந்த வாசனை தங்கிய மலையனைய திருமுலைகளை யுடையவருமாகிய உமையம்மையார் பெற்றருளிய திருப்புதல்வரே!

         தாமரை வீட்டில் வீற்றிருக்கின்ற சீதேவியையும் பூதேவியையும் அழகிய பொற்கொடிபோல் துவளுகின்ற மெல்லிய இடையையுடைய நீளாதேவியையும் மருவுகின்ற நாராயண மூர்த்தியின் திருமருகரே!

         நல்ல பரிமள மிக்க மலர்ச் சோலைகள் சூழ்ந்துள்ள சுவாமிமலையின்மீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         எல்லாத் திசைகளிலும், வான முகட்டிலுள்ள அண்டங்களிலும் இருந்து வாழ்கின்ற நானா வகையான யோனி பேதங்கள் எல்லாவற்றிலும் அந்தந்த உடம்புகளை எடுத்துப் பிறந்து பிறந்து உழலாவண்ணம், எடுத்த இப்பிறப்புடன் முடிவடைந்து மீட்டிங்கு பிறவாமல் தேவரீருடன் அத்துவிதம் உற்று உயிர் நிலைபேறு அடையவும் தேவரீருடைய தாமரை மலர் போன்ற இரண்டு பொன்னடிகளிலும் வாசனை தங்கிய மலர்களைக் கொண்டு, அடியேனுடைய சித்தமும் மனமும் நீராயுருகவும், நல்ல வேதங்களிற் கூறிய முறைப்படி தேவரீரைச் சந்தித்து, ஹரஹர சிவசிவ உமக்கே சரணம் என்று கூறி வணங்கவும், தேவரீருடைய இரண்டு சரணாரவிந்தங்கள் அடியேனுடைய சென்னிமேல் தங்கவும், உடல் புளகிக்கவும், இரண்டு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் மலையருவிபோல் குதித்தோடவும், சம்பைக் கொடிபோன்ற மெல்லிய இடையையுடைய உமையம்மையாரது அழகிய திருமுன்னர், அழகிய திருநடம் புரியும் திருவடி அழகு செய்யவும், (எளியேன் முன்வரும் உமது திருவருளின் பெருக்கை யெண்ணி) அடியேனுடைய உள்ளம் உருகவும் அழகிய இச்சபையில் வந்து அருள் புரிவீர்.
 

விரிவுரை

எந்தத் திகையினு.......உழலாதே ---

எண்ணிலாத நெடுங்காலமாக எண்ணிலாத பிறவி எடுத்து எடுத்து வருவதால், நாம் பிறவாத இடமில்லை பிறவாத ஜாதியில்லை; பேசாத மொழியில்லை.

முந்து பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா நிலனும் இல்லை.                                       ---  பட்டினத்தடிகள்.

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்,
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்,
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்,
அருந்தின மலம் ஆம், புனைந்தன அழுக்கு ஆம்,
உவப்பன வெறுப்பு ஆம், வெறுப்பன உவப்பு ஆம்,
என்று இவை அனைத்தும் உணர்ந்தனை, அன்றியும்,
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்தும் நினைக் கொன்றன,
தின்றனை அனைத்தும், அனைத்தும் நினைத் தின்றன,
பெற்றனை அனைத்தும், அனைத்தும் நினைப் பெற்றன,
ஓம்பினை அனைத்தும், அனைத்தும் நினை ஓம்பின,
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை,
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை,
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை..                ---  பட்டினத்தடிகள்.


புல்லாய்ப் பூடாகிப் புழுவாய் மரமாகிப்
   பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
   கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
   வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
   செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
   எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்”      --- திருவாசகம்

இந்தச் சடமுடன் உயிர் நிலைபெற ---

முருகப் பெருமானை வழிபடுவோர் மீண்டும் பிறவாத நிலை பெறுவர்; ஆன்மா நிலை பேறடையும்.

சந்தச் சபைதனில் ---

பிரபுட தேவனிடம், சம்பந்தாண்டான் வாதம் நிகழ்ந்துழி தாம் கொடுத்த வாக்குறுதியின்படி, அருணகிரிநாதர் அரசன் முதலியோர் குழுமியுள்ள மாப்பேரவையில் முருகவேளை வரவழைக்கும் பொருட்டுப் பாடியருளியது இப்பாடல்.

எனது உளம் உருகவும் ---

மாலயனாதி வானவர்கட்கு அரிய பரம்பொருளாகிய முருகவேள் வலிதில் மயில்மிசை வந்து காட்சி வழங்கும் பேரருட்டிறத்தை நினைந்து உள்ளம் உருகுவது.

அயில்வேலா இளையோனே ---

அயில் வேலா! இளையோனே! என்றதனால் பகைவரையழிக்கும் ஞானசக்தி வேலுடன், குழவிப் பருவத்துடன் வந்து காட்சி தரவேண்டு மென்பது குறிப்பு.

அரி மருக ---

`காத்தற் றொழிலை யுடைய திருமால் மருக‘ என்றதனால், காக்கும் பொருட்டு இங்கு வந்தருளல் வேண்டும் என்பதும் நினைதற் பாலது.

குருமலை ---

சிவபெருமானுக்குக் குகப் பெருமான் குருவாக எழுந்தருளி பிரணவோ பதேசஞ் செய்த இடமாதலால், சுவாமி மலைக்குக் குருமலை எனப் பெயர் போந்தது.

இப்பாடலில் “குதிபாய” என்ற பிரயோகம் இதுகாறும் எந்த நூலிலும் யாராலும் கையாளப் படாத ஓர் அற்புதப் பதம் “கண்ணீர் பாயேன்”, “கண்ணீர் மல்க”, “கண்மாரி பெய்து” என்றெல்லாம் பிரயோகங்கள் உள. இவைகளுடன் “விழி புனல் குதி பாய” என்பதைப் பொருத்திப் பார்த்து அதன் பொருளாழத்தை உன்னி மகிழ்க. இப்பாடல் தினந்தோறும் பாராயணம் செய்வதற்குரியது. முதல் நான்கு அடிகளும் முக்கியமானவை.
 

கருத்துரை

அசுர சம்மாரம் செய்த வேலாயுதரே! உமாசுதரே! மால்மருகரே! சுவாமிமலைக் குமரரே! பிறவியலை ஆற்றில் புக்கு அலையா வண்ணம் தேவரீரை வழிபட்டு உய்யும் பொருட்டு இந்தச்சபையில் வந்தருள் புரிவீர்.


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...